Arts
18 நிமிட வாசிப்பு

‘சி- நோர்’ : நோர்வே யாழில் நிறுவிய மீன்பிடி நிறுவனம் 

June 23, 2024 | Ezhuna

‘Cey-Nor’ நிறுவனம் அந்தோணி ராஜேந்திரம் அவர்களால் கனவு கண்டு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு; 1960 களில் முளைத்து படிப்படியாக வார்க்கப்பட்டது. நோர்வேக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவின் நிமித்தமாக நோர்வே மக்களால் நிதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 1960 களில், ஒரு நீடித்து நிலைக்கக்கூடிய மீன்பிடித்துறைசார் அபிவிருத்திக் கட்டமைப்புக்கு, எமது முன்னோர்கள் முயன்றார்கள் என்பதுக்கு Cey-Nor ஒரு எடுத்துக்காட்டு. 1983 களில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாகப் பிடிக்கப்பட்ட மீனின் அளவு 50,000 மெற்றிக் தொன்கள். 1961 இலிருந்து 1983 வரையான மீன்பிடியின் உச்ச அடைவுக்கு Cey-Nor இன் கணிசமான பங்களிப்பு உண்டு. ஆரம்பத்தில் இதனை ஒரு வர்த்தகப் பொது மக்கள் நிறுவனமாக (Public Enterprise) உருவாக்கவேண்டும் என்று நிருவாக உறுப்பினர்கள் கருதிச் செயற்பட்டாலும், அக்கால அரசியல் தலையீடு, அதன் நோக்கத்தைத் திசை திருப்பியது. 1977 களில் தோன்றிய திறந்த பொருளாதாரம் ‘சி-நோர்’ இன் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்தது. அதன் கைவிடப்பட்ட சொத்துகளை அபகரிக்க யுத்தம் உதவியது. 

‘சி-நோர்’ இன் ஆரம்பக்கட்டத்தில், இரண்டு முரண்பட்ட ஆளுமைச் சிந்தனைகள் ஆதிக்கம் செலுத்தின. ஒன்று, வர்த்தக மையம் கொண்ட ஒரு நிறுவனத்தை கட்டமைத்தல்; இரண்டாவது, அரச சார்பற்ற நிறுவனமாக நிருவகிப்பது. அந்தோணி அவர்களின் ஆரம்பகாலச் சிந்தனைகள் தமிழ்த் தேசியம் பால் நிலை கொண்டமை நன்கு புலப்படுகிறது. உள்ளூர் மீனவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொண்டுவர அவர் ஒரு சுதந்திரமான நிறுவன கட்டமைப்பை உருவாக்க விழைந்தார். 1977 களின் பின் ‘Cey-Nor’ போட்டித்தன்மைக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறி வீழ்ச்சிக்குச் சென்றது. வடக்கில் முளைத்த ‘Cey-Nor’ வடக்கில் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். அதன் சிந்தனைப் போக்கு மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்கு வித்திடக் கூடியது.

ஆரம்பத்தில் பல போராட்டங்களுக்கு முகம் கொடுத்த இந்த அமைப்பு மக்களின் கூட்டு முயற்சியால் உருவானது. ஒரு இலாப நோக்கற்ற அரச சார்பற்ற அமைப்பாக, Cey-Nor நிறுவனம், உள்ளூர் மீனவச் சமூகங்களின் கல்வி மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு உன்னத நோக்கத்துடன் உயிர்கொண்டது. காலப்போக்கில், பொது நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை பொது நிறுவனங்களாக மாற்றும் சட்டத்தின்கீழ், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாறியது. இது 1987 ஆம் ஆண்டில் ‘Cey-Nor Foundation Ltd ‘ஆக உருவானது.

Cey-Nor நிறுவனத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களில் ஒன்று, பாரம்பரிய படகு உற்பத்திக்கு அப்பால் பல்வேறு துறைகளிலும் அது தன்னை விரிவாக்கம் செய்தமை ஆகும். பாலி-டன்னல்கள் (poly-tunnels) மற்றும் லொட்டரி ஹட்ஸ் (Lottery Huts) திட்டங்கள் போன்ற புதுமையான தெரிவுகளை அது விரும்பியது. மேலும், காரைநகர் படகுத் தளத்தை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடனான கூட்டாண்மை, உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் திட்ட முன்முயற்சிகளை இந் நிறுவனம் முன்னெடுத்தது.

சி-நோர் அமைப்பை உருவாக்கிய ஆரம்ப கர்த்தாக்களுக்கு பல கனவுகள் இருந்தன. எதிர்காலத்தில் ஒரு வலுவான அமைப்பை மீன்பிடித் துறையை வளர்க்க அமைப்பதும், அதனை முதலில் வடக்கில் உருவாக்குவதும் அவற்றுள் ஒன்று. அதை ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக மக்கள் பங்களிப்புடன் பரந்த அளவில் மேம்படுத்த நினைத்தனர். அத்துடன் பொருளாதாரத் தன்னிறைவு மூலம் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கையில் பாய்மரங்களை மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கமும் அதற்கு இருந்தது. ‘புதுமையான இரட்டை ஆற்றல் கொண்ட மீன்பிடிப் படகுகளை உருவாக்கி அத்துமீறி மீன்பிடிப்பதால் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல், பெரிய அளவில் படகுகள் கட்டுதல், பாய்மரம் தயாரித்தல், மினி-மெரினா உருவாக்கம், பட்டயச் சேவைகள், தொழில் முனைவோர் மற்றும் வடக்கு – கிழக்கு மற்றும் தெற்கு ஒத்துழைப்பு மூலம் படகுத் தொழிலைத் தொடங்குவது என பல திட்டங்களை அது கொண்டிருந்தது. ஆனால், 1980 களின் இறுதியில் மூண்ட போர்ச் சூழல் அதன் ஆரம்ப அடித்தளத்தைக் கூட விடவில்லை. 

‘சி-நோர்’ இன் ஆரம்ப காலங்கள்

நவீன மீன்பிடித் துறை பற்றி மேற்படிப்பு, அனுபவம் பெறவேண்டும் என்று அந்தோணி இராஜேந்திரம் அவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. 1950 களில், இலங்கையின் நிலை அதற்குச் சாதகமாக இல்லை. ஆனால், யாழ்ப்பாண மீனவர்களின் வாழ்க்கை நிலைக்கும், நிலையான வருமானத்துக்கும், நீடித்து நிலைக்கக்கூடிய வாழ்வாதாரத்துக்கும் ஏதாவது செய்யவேண்டும் என அந்தோணி இராஜேந்திரம் நினைத்தார். ஐ.நா அமைப்பு, அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகளைச் செய்ய நோர்வே அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்தது. 

அந்தோணியின் நண்பர்கள் அவரது கனவை அடைய அவருக்கு உதவ முன்வந்தனர். நோர்வே – ஆக்ரா தீவில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சிக் கல்லூரியான வார்டோவில் உள்ள மீன்வளப் பயிற்சி ‘ஹோம்ஸ்டெட் (Homestead)’ இல் தீவிரமான, நீண்ட கால வேலைப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், அவர் சால்டாலில் உள்ள படகு கட்டுபவர்களின் பள்ளியிலும், நோர்வேயின் ஸ்டாவஞ்சரில் உள்ள கேனிங் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயில்கிறார். 

1960 களில் யாழ். குடாநாட்டில் மீனவரின் வளர்ச்சிக்கான தனது யோசனையை முன்வைத்து இலங்கையின் மீன்பிடி அமைச்சகத்தில் ஒரு வாய்ப்பைப் பெற அந்தோணி மீண்டும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் உள்ளூர் நிலைமைகள், முக்கியமாக வளர்ச்சி சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவுத் தளம் தயாராக இருக்க வேண்டும். அவரது யோசனைகள் வலுவடையவில்லை. முயற்சி கைகூடவில்லை.

பின்னர், உதவி அமைப்பின் மூலம் மீனவச் சமூகங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தோணி அமெரிக்க உதவி அமைப்பில் (American Ald) சேர்ந்தார். அவ் அமைப்பு இலங்கையில் உள்ள மீனவச் சமூகங்களுக்கான திட்டங்களைக் கொண்டிராததை விரைவில் உணர்ந்தார்.  

அந்தோணி, தனது சொந்த வளங்களை நம்பியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, மீன் பதப்படுத்துதல் மற்றும் கண்ணாடியிழைப் படகுக் கட்டுமானம் ஆகியவற்றில் பயிற்சி பெற நோர்வே திரும்பினார். படகு கட்டுதல், பதப்படுத்தல் தொழில்நுட்பம், குளிர்பதனக் கிடங்கு போன்ற பிற துறைகளிலும் அவரது ஆர்வம் விரிவடைந்தது. அவரது வழிகாட்டியாகப் பணியாற்றிய ‘Sivert Rundhaug’ அவர்களது உரையாடல்கள் இலங்கையின் உள்ளூர் நிலைமைகளுக்கான யோசனையை வடிவமைக்க உதவியது. படகுகளின் உற்பத்தி மற்றும் விற்பனை, உபரிக் காலத்தில் மீன்களை உறைய வைத்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் ஒரு முழுமையான நிறுவனமாக உள்ளூரில் விரிவடைய வேண்டும் என அந்தோணி கனவு கண்டார். சந்தை விலை குறைவாக இருக்கும் போது மீன்களைக் கொள்வனவு செய்து பதப்படுத்தி, விலை உயரும் போது, மீண்டும் சந்தையில் விற்று இலாபம் பெற, மீனவக் கூட்டுறவுச் சங்கங்கள் அபிவிருத்தி அடைய வேண்டும் என 1960 களிலேயே அவர் சிந்தித்தார். இறுதியாக அவரது யோசனைகள் அடுத்த கட்டத்துக்கு வழிவகுத்தன.

திட்ட நிதி பெறும் பொருட்டு, சிவர்ட் மற்றும் அந்தோணி ஆகியோர் நோர்வேஜிய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான ஏஜென்சியுடன் (NORAD) தொடர்பு கொண்டனர். “உங்களது திட்ட வரைவு சிறப்பாக உள்ளது. ஆனால், ஏற்கனவே ஒரு நோர்வே பங்காளியிடம் இருந்து ஓரளவு நிதி பெறுபவர்களுக்கு மட்டுமே அரசாங்க உதவி வழங்க முடியும். உங்கள் திட்டத்தில் ஆர்வமுள்ள ஒரு கூட்டாளரைத் தேடுங்கள்” என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

1962 ஆம் ஆண்டில், அந்தோணி கேனிங் தொழில் கல்லூரியில் படிக்கும் போது, அவர் ஸ்டாவஞ்சரில் ஒரு நோர்வேஜியப் பெண்ணான சிக்ரூனைச் சந்தித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் நோர்வேயில் திருமணம் செய்து கொண்டார்கள்.

ரோகாலாந்தில் உள்ள நோர்வே ஸ்டேட் பிராட்காஸ்டிங் (NRK) மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் ‘ஆர்னே ஃப்ஜோர்டோஃப்ட்’ அந்தோணியைத் தொடர்பு கொண்டார். ‘Stavanger Aften-blad’ என்ற உள்ளூர்ப் பத்திரிகை அவரைப் பற்றிய ஒரு கதையை வெளியிட்டது. ஆர்னே ஃப்ஜோர்டோஃப்ட் ஒரு கடலோடி; அவரது குடும்ப வணிகம், அச்சிடுவது; ஒரு பத்திரிகையாளராகவும் பணிபுரிந்து KRK அலுவலகத்தின் நிருபராக இருந்தார். அவர் ‘NGU (The Norwegian Good Templars Youth Federation)’ என்ற அமைப்பில் இணைந்திருந்தார். அத்தோடு, லிபரல் கட்சியிலிருந்து நகர கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் இருந்தார். ஃப்ஜோர்டோஃப்ட் அந்தோனியைப் பேட்டி கண்டார். அதன் தலைப்பு : ‘இலங்கையிலிருந்து ஒரு மீனவர்’. அக்காலத்தில் நோர்வேயில் இளைஞர்களிடையே நிலவிய மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுதாபத்தைத் திரட்டும் சகாப்தத்தின் மனநிலையுடன் இது நன்றாகப் பொருந்தியது. இலங்கையின் 450 ஆண்டு கால காலனித்துவத்திற்குப் பின்னர், தொழில்மயமான நாடுகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நோர்வே மக்கள் உணர்ந்ததால், இளம் நாடான இலங்கை மீது அதிக கவனம் பிறந்தது; நிதி உதவிக்குப் பக்கபலமாக இருந்தனர்.

சிக்குன் ராஜேந்திரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறும் போது “வானொலி நேர்காணல் நாளின் போது அந்தோணி எவ்வளவு உற்சாகமாக இருந்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆர்னேவும் அந்தோணியும் மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆர்னே, திட்டத்திற்கு பல நல்ல யோசனைகளைக் கொண்டிருந்தார். பின்னர், ஆர்னே நெருங்கிய நண்பரானார். திட்டக் குழுக்களில் ஒன்றில் சேர்ந்தார். ஆர்னே எங்களுடன் இரவுகளில் விழித்திருந்து, சட்டங்கள், அமைப்பு மாதிரிகள், படகு வீடுகள், ஸ்லிப்வேக்கள் மற்றும் இயந்திரப் பட்டறைகளின் வரைபடங்களைப் பற்றி விவாதித்தார்.” என்கிறார்.

‘மாலு மீன் எண்டர்பிரைஸ்’ என்ற பெயர் முதலில் திட்டமிடல் கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டது. ‘மாலு’ என்றால் சிங்களத்தில் மீன். ‘மீன்’ என்பது தமிழ்ச் சொல். இலங்கையின் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினருக்கு இடையிலான சகோதரத்துவத்தை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் வேண்டுமென்றே அப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள், இனப் பகைமையைக் குறைத்து தமிழர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் என அந்தோனி நம்பினார். நிறுவனம் வளர்ந்த பிறகு வடக்கிலிருந்து தெற்குக்கு விரிவாக்கலாம் எனவும் திட்டமிடப்பட்டது.

1965 இல் ‘NORAD’, அந்தோணி ராஜேந்திரத்திற்கு கேரளத் திட்டத்தை பார்வையிட மூன்று மாத ஆய்வு வருகைக்கான மானியத்தை வழங்கியது. திரும்பும் பயணத்தில், யாழ்ப்பாணப் பகுதியில் சில வாரங்கள் ஆய்வு செய்தார். திட்ட ஆரம்பத்துக்கு காரைநகர் தீவில், தோப்புக்காடு கிராமத்தில், மீன்பிடிப் பிரதேசத்தின் மத்தியில் ஒரு நிலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆழ்கடல் படகுகள் யாழ்ப்பாணக் குடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லக்கூடிய அளவுக்குக் கரையோரப் பகுதியின் நீர் ஆழமாக இருந்ததால், இந்த இடம் சரியானதாக இருந்தது. பிரதான நிலப்பரப்பில் உள்ள நகரத்துடன், தீவு ஒரு ‘பிரேக்வாட்டர்’ இணைப்பைக் கொண்டிருப்பதால், கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நிலம் விற்பனைக்கு இருந்தது. என்.ஜி.யு, தன் பங்கிற்கு நிதி சேகரித்தது. தொடக்க மூலதனம் பாதுகாக்கப்பட்டது. 

1967 கோடையில், ஆர்னே மீண்டும் ‘NGU’ இன் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றினார். இந்தமுறை, இலங்கையில் நீண்ட கால ஈடுபாட்டை ஆதரிப்பதற்காக இன்னும் விரிவான நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு, பேரவை அனுமதி வழங்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1967 மற்றும் 1968 இல் இரண்டு நிதி திரட்டும் பிரச்சாரங்கள் மூலம் பெரும் பணம் திரட்டப்பட்டது. NGU இன் சிலோன் குழு, ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. ‘பஞ்சத்திற்கு எதிரான இளைஞர்கள் நடவடிக்கை’ அமைப்பு, மற்றவர்களுடன் ஒத்துழைப்பதற்கான அமைப்பாக ஆகினர். நோர்வே முழுவதும் பணம் திரட்டும் பணியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.

காரைநகரில் உள்ள தோப்புக்காடு கிராமத்தில் படகு கட்டுபவர்களின் முற்றம் நிர்மாணிக்கப்பட்டு களவேலைகள் உயிர் கொண்டன. நிதிச் சேகரிப்பு மற்றும் ‘NOROD’ மானியம் மூலம் ஆரம்ப வேலைகளுக்கு நிதியளிக்கப்பட்டது. ‘மாலு மீன் எண்டர்பிரைஸ்’ ஆரம்பத்தில் வணிக – வரையறுக்கப்பட்ட நிறுவனமாக நிர்வகிக்கப்பட்டது. எவ்வாறாயினும், NGU இத்திட்டத்தை ஒரு சமூக அபிவிருத்தித் திட்டமாகச் செயற்படுத்த விரும்பியது. எனவே, நிர்வாகமானது விரைவில் உள்ளுர் அறக்கட்டளையான ‘ஸ்ரீலங்கா – பட்டினியிலிருந்து சுதந்திரத்திற்கு’ என்ற அமைப்புக்கு மாற்றப்பட்டது. ‘யூத் ஆக்ஷன் அகென்ஸ்ட் ஃபேம் (யு.எம்.எஸ்)’ என்பது அதன் நோர்வே துணைப் பகுதியாகும்; நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதற்கான ஒரு குடை அமைப்பாகும். சிலோன் கமிட்டி மற்றும் UMS இல் உள்ள பணி, முதன்மையாக தன்னார்வ முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் பல தனிநபர்கள் இந்த முன்னோடி ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மற்றும் தன்னலமற்ற பங்களிப்புகளை வழங்கினர். இத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வந்தாலும், கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இரு தரப்பிலும் அதிருப்தி நிலவியது.வ்உள்ளூர் அணுகுமுறையும், NGU இன் சிலோன் குழுவும் தனித்தனி திசையில் சென்றன. ஆர்னேயின் கூற்றுப்படி ‘மாலு மீன்’ ஒரு வணிக – பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக நிறுவப்பட்டதுதான் முக்கிய பிரச்சனை. இதனைச் சரி செய்ய அவர் 1968 ஜனவரி தொடக்கத்தில், இலங்கைக்குப் பயணம் செய்தார். 1969 இன் நடுப்பகுதியில், அந்தோணி, திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். 1972 ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் நோர்வேக்குச் செல்வதற்கு முன்னர், அவர் தனது குடும்பத்துடன் இலங்கையில் சில வருடங்கள் பணிபுரிந்தார். அந்தோணி ராஜேந்திரம் 1990 இல் இறந்தார். ‘சி-நோர்’ உடனான ஆர்னேயின் ஈடுபாடு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

இலங்கையில் உருவாக்கப்பட்ட திட்டம் படகு கட்டுதல், மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன்பிடி வலைகள் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டின் அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதிக் கொள்கையை கடைப்பிடிக்கும் வரை, Cey-Nor திட்டத்தின் விஷயங்கள் நன்றாகவே நடந்தன. இருப்பினும், 1977 இல் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் சிக்கல்கள் எழுந்தன. ‘Cey-Nor’ இன் கொள்கையானது வேலைகளைத் தீவிரமாகச் செயற்படுத்தி வேலை உருவாக்கத்தை ஊக்குவித்து, விலைப் போட்டியைச் சமாளித்தது. இறக்குமதி செய்யப்பட்ட வலைகள் நிலைமையை கடினமாகிவிட்டன. படகு உற்பத்தியானது, பெரும்பாலும் கண்ணாடியிழையில் தயாரிக்கப்பட்ட 17 அடிப் படகுகளைக் கொண்டிருந்தது. படகுகள், மீனவர்கள் மேலும் கடலுக்குச் செல்ல உதவியது, மற்றும் பிடிக்கும் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவியது. 1977 இற்குப் பிறகு, படகு உற்பத்தியில் சிரமம் ஏற்பட்டது. சிறிது காலத்திற்கு, அவர்கள் ஃபெரோ சிமெண்டிலிருந்து படகுகளை உருவாக்க முயன்றனர். ஆனால் இந்த முறையில் சிரமங்களை எதிர்கொண்டனர்; படகு உற்பத்தி வெற்றிபெறவில்லை. ‘சி-நோர்’ வீழ்ச்சியடைந்து சென்றது.

இலங்கையில் ‘சி-நோர்’ ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ள போதிலும், ‘Cey-Nor’ இன்றும் ‘உயிருடன் உள்ளது’. அது முற்றிலும் அழிக்கப்பட முடியாத ஒரு கட்டமைப்பாக விளங்குகிறது. உள்நாட்டுப் போருக்குப் பின்னர், ‘உயர் பாதுகாப்பு வலய’ முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டு பாழடைந்தாலும், யாழ்ப்பாணத்தில் குருநகரில் உள்ள மீன்பிடி வலைத் தொழிற்சாலை இன்னும் நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதே இயந்திரங்களைக் கொண்டு இயங்குகிறது. தொழிற்சாலை இரண்டு முறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது. சேதமடைந்த இயந்திரங்கள் மற்ற இயந்திரங்களின் பாகங்களைக் கொண்டு சரி செய்யப்பட்டு இயங்கிய காலமும் உண்டு. இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கில் இரண்டு மீன்பிடி வலைத் தொழிற்சாலைகளும், மட்டக்குளியில் ஒரு பெரிய படகு கட்டும் முற்றமும் இயங்கி வருகின்றன. நோர்வேஜிய ஆதரவுடனான தொப்புள்க் கொடி இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னரும், பல செயற்பாடுகள் தன்னிச்சையாகவே நிர்வகிக்கப்பட்டன. சுனாமிக்குப் பிறகு, தோப்புக்காடு கிராமத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில், ஒரு சிறிய படகு கட்டுபவர்களின் முற்றம் உயிர்த்தெழுந்தது. இங்கே ‘Cey-Nor’ இன் முன்னாள் ஊழியர்கள் பழைய அச்சுகளில் ஒன்றைக் கண்டுபிடித்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்கினர். அறிவுப் பரிமாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. சுற்றியிருந்த பொருட்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படகு கட்டும் அறிவு பிழைத்திருந்தது. ‘தொழில் முனைப்பு, நம்பிக்கை, ஆர்வம்’ என்பன சி-நோர் இன் முதுசங்கள் ஆகும். “40 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதை, இன்னும் வளரும் வலிமையைக் கொண்டுள்ளது” என்று நவம்பர் 2005 இல் தோப்புக்காடு சென்று அப்போதைய நிலைமையைப் பர்வையிட்ட பிறகு ஆர்னே கூறினார்.

தற்போது கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள ‘Cey-Nor Foundation Limited’ நிறுவனம் இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும், அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக நிறுவனமாகும். படகுக் கட்டுமானத்திலும், அதனை அதிநவீன வசதிகளுடன் அமைப்பதிலும், உயர்தர ஃபைபர் (Fiber) கப்பல்களை உருவாக்குவதிலும் ‘Cey-Nor’ கவனம் செலுத்துகிறது.

சஷிமி (Sashimi) மீன்பிடிப் படகின் தொழில்மயமாக்கப்பட்ட பாய்மரம் மற்றும் என்ஜின்களுடன் இயங்கும் 13.8 மீ திரிமாறன் (Trimaran) ஆகிய கடற்சாதனங்கள் கடந்த ஏப்ரல் 2012 இல் இலங்கைக் கடற்பரப்பில் சி-நோர் இனால் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இலங்கையில் ஒரு காலகட்ட சோதனைக்குப் பிறகு, திரிமாறன் கொழும்பில் இருந்து சோமாலியா – பன்ட்லேண்டிற்குச் செல்லும். உள்ளூர் மீனவ மக்களின் நலனுக்காக, பன்ட்லேண்டில் ஒரு நிலையான மீன்பிடித் தொழிலை நிறுவுவதற்கு தொழில்மயமாக்கப்பட்ட பாய்மரம் மற்றும் என்ஜின்களுடன் இயங்கும் திரிமாறன் படகுகள் சோமாலியாவுக்கு நன்கு உதவும். சஷிமியின் தொழில்மயமாக்கப்பட்ட பதிப்பு, இலங்கையிலுள்ள சி-நோர் படகுத் தளத்தில் கட்டப்பட்டது. 

அதன் அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், ‘Cey-Nor’ நிறுவனமானது அபிவிருத்திக்கான இலட்சிய இலக்குகளைக் கொள்கையாகக் கொண்டு இயங்குவதைக் காணலாம். நவீன மீன்பிடிக் கப்பல்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட குறுகிய கால நடவடிக்கைகளுடன், கடல்வள அறுவடைக்குப் பிந்தைய இழப்பு மற்றும் எரிபொருட் செலவு போன்ற அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்கும் பயனுள்ள கருவிகளை உருவாக்குவதில் அது கவனம் கொள்கிறது. அதே நேரத்தில், ஒரு புதிய படகுத் தளத்தை நிறுவுதல் மற்றும் தயாரிப்பு வழங்கல்களைப் பல்வகைப்படுத்துதல் போன்ற நீண்ட கால முயற்சிகளுடன், வளர்ந்து வரும் தொழில்துறை கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான முன்னோக்கு, சிந்தனை அணுகுமுறையை நடைமுறையில் கொண்டுவருதல் போன்றனவற்றிற்கும் தற்போதைய நிருவாகம் முயன்று வருகிறது.

உசாத்துணை

1.FAO 2003. Fisheries Sector Study of the North-East Province. FAO, Colombo. Goodhand, J. 2000. Aid, Conflict and Peacebuilding in Sri Lank. Dfid, London.

2.From Norway to Jaffna: A 5-decade journey of love for a man, his land and his dream project Cey-Nor, Thursday, 26 March 2020. 3.Hersoug, B. & Munkejord, S. 2003. Assessment of Potential Areas for Development Cooperation between Norway and Sri Lanka

within the Fisheries Sector – A Project Programme Outline. Norwegian College of Fishery Science, Tromso.

4. Normann, A.K., Angelsen, K. & Sivalingam, S. 2003. Restoration of Fisheries Activities in Jaffna District. Norad, Oslo.

5. Shanmugaratnam, N. 2003. Jaffna Fishing Communities: Persistent Crisis and Possible Solutions. Polity 1:5, 24-26. 6. Sivasubramaniam, K. 1995. Sri Lanka Fisheries Resources Development and Management in the Past. Asian Development Bank, Colombo.


ஒலிவடிவில் கேட்க

3237 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)