விபுலானந்தர் ஆய்வுத்தடத்தில் தமிழிசையின் மீட்டுருவாக்கம்
Arts
13 நிமிட வாசிப்பு

விபுலானந்தர் ஆய்வுத்தடத்தில் தமிழிசையின் மீட்டுருவாக்கம்

March 20, 2024 | Ezhuna

தமிழிசையின் செல்நெறி, சுகமான ஒரு பயணம் அல்ல. மக்களின் வாழ்வியலுக்குள் இலக்கியச் செழுமைக்குள் புதைந்திருந்த தமிழிசையின் தனித்துவமான அடையாளங்கள், காலவெளியில் கண்டுவந்த மாற்றங்களும் படிமலர்ச்சியும், பண்பாட்டு அரசியல் மேலாண்மைகளுக்குள் எதிர் கொண்ட சவால்கள், தன்னைத் தகவமைத்துக் கொள்ள எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் என்பன தமிழர் வாழ்வியல் வரலாறாகும்; தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுமாகும். இந்த வகையில் தமிழிசையின் மீட்டுருவாக்கதில் உயிர் விசைகளாக விளங்கிய முன்னோடிகளின் உருவாக்கம், பங்களிப்பு பற்றிய தெளிவான புரிதல் இன்றியமையாதது. தமிழிசையின் அடையாளங்களைத் தேடி வெளிப்படுத்திய விபுலானந்தர் ஆய்வுத்தடம் பற்றிய இனமரபு இசையியல் பகுப்பாய்வாக இக்கட்டுரை அமைகின்றது. இசையை அதன் சமூக, பண்பாட்டுச் சூழமைவில் கற்கும் தனித்துவமான துறையாக இனமரபு இசையியலானது முகிழ்த்துள்ளது. குறித்த புவியியல் புலத்து மக்களின் வாழ்வில் இசையின் வகிபங்கினை அறிதல் இனமரபு இசையியலின் குவிமையமாகவுள்ளது. 

பொதுமனிதர் பார்வையில் மட்டுமன்றி இசைத்துறையினர், இசைபற்றி பேசும் அறிவுஜீவிகளிடத்தும்கூட இசை பற்றிய முழுதளாவிய பார்வை இல்லையெனலாம்; அதன் வழியேதான் தமிழிசை பற்றிய தரிசனங்களும். இசையின் யாதேனும் ஒரு பிரிவை அழுத்துவதாகவே இவர்களின் பேச்சும் எழுத்தும் அமைவது அனுபவமாகும். பெரும்பாலும் சாஸ்திரிய சங்கீதமே சங்கீதம்; ஏனையவை எளிமையானவை அல்லது எளியவை என்ற எண்ணக்கருவாக்கமே ஆதிக்கம் செலுத்தக் காணலாம். இந்தப் பின்னணியில் தமிழிசையின் வரையறையும் வளர்ச்சியும் அதன் வரலாற்று அரசியலுக்குள் அமிழ்ந்து போயுள்ளன. தமிழிசை மரபினை, இத்தகைய பண்பாட்டுச் சூழமைவில், அறிவார்ந்த புரிதலுக்கான துறையாக முகிழ்த்த இனமரபு இசையியலின் பல்-துறை இணை நோக்கில் (Interdisciplinary approach) வெளிப்படுத்திய விபுலானந்த ஆளுமையின் செல்நெறியினை இனங்காட்டுவதும் இவ்வாய்வுத் தேடலின் இலக்காகும்.

வாழ்வியலோடு இசைந்த தமிழ்ப் பண்பாட்டின் இசை–இலக்கியக் கூறுகளின் காலவெளியில் மறைந்தும் மறக்கப்பட்டும் போன பண்டைத் தமிழிசையின் நிலம் சார்ந்த பண்களை வெளிக்கொணர்ந்தும், பழந் தமிழிசைக் கருவியான யாழின் படிமலர்ச்சியை ஆய்ந்து அதனை மீளக் கட்டமைத்தும் விபுலானத்த அடிகளார் ஆற்றிய பணி முதன்மையானது. தமிழ் ஆய்வுப் பண்பாட்டில் அதற்கென அறிவாராய்ச்சியியல் மரபொன்றினை மீள் உருவாக்கும் காலக் கடமையில் தமிழிசை ஆய்வுக்கான முழுதளாவிய முறையியல் பற்றிய புரிதலுக்கு வழிகாட்டும் அவரின் ஆய்வுப் பண்பாடானது, தமிழிசையின் மீள் உயிர்ப்புக்கான நிகழ்கால ஆக்க விசையுமாகும்.

சங்ககாலம், பரிபாடற்காலம், சிலப்பதிகாரகாலம், தேவாரகாலம், பெரியபுராணகாலம் எனும் பருநிலைகளும், தமிழிசையின் தாயெனப் போற்றப்படும் காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு பதிகம் என நுண் நிலையில் ஆற்றிய ஆய்வுகளும், இலக்கியங்களுக்கு அப்பால் தமிழிசையின் கால ஆராய்ச்சிக்கென குடுமியா மலைக் கல்வெட்டில் தீட்டப்பட்ட இசை நூல்களும், பல்துறை இணை நோக்கிலான இன்றைய இனக்குழும இசையியல் ஆய்வு வழிப்பட்டன எனலாம். அவ்வாறே தமிழிசையின் செல்நெறியில் – வரலாற்றில் நிகழ்ந்த திரிபுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அவரது ஆய்வு முடிவுகள் தமிழிசையின் எதிர்காலத்துக்கான திசைகாட்டிகள் எனலாம். தமிழிசையின் செல்நெறியை மீளக்கட்டமைக்கும் இசையியல் ஆய்வின் தரவுப் பெட்டகமான, சங்க இலக்கியங்கள் என்ற சொல்லாட்சியுடன் வழங்கப்படுகின்ற பாட்டும் தொகையுமாய் அமைந்த வீரயுக பாணர் பாடல்களையும் புலவர் பாடல்களையும், யாழ் நூல் தந்த விபுலானந்த அடிகளார் அழகாகவும் ஆதங்கத்துடனும் வெளிப்படுத்துவார் (விபுலானந்தர், 1936:2003).

vipulanandar

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1917), விபுலானந்த அடிகளார் மற்றும் இவர் வழி தமிழிசை ஆய்வுகளினை மேற்கொண்டவர்களின் பயனாக, தமிழிசையின் வேர் பற்றிய நிறைய விடயங்கள் இன்று கிடைக்கப் பெறுகின்றன; அவைதான் எமது மூலதனம். சங்க இலக்கியங்களில் இசைக் கருவிகள், இசை வாணர்கள் பற்றிய பல தரவுகள் உள்ளன. திணை வாழ்வு கண்ட குறிஞ்சிப்பண், செவ்வழிப்பண், முல்லைப்பண், மருதப்பண், பாலைப் பண், காஞ்சிப்பண், விளரிப்பண், காமரம், நைவளம், ஆம்பல் பண் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் நிறையவே உள்ளன.

இனமரபு இசையியல் சார்ந்து விபுலானந்தருக்கு விழிப்புணர்வும் அதனடியான தமிழிசை ஆர்வமும் ஆய்வும் வசப்பட்டமைக்கு அவருக்கு வாய்த்த இளமைக்கால சமூகமயமாக்கம் அடிப்படையானது என அறிய முடிகின்றது. பிள்ளைப் பருவத்திலேயே அவரது சமூகமயமாக்க சூழலான காரை தீவு கண்ணகையம்மன் சடங்குகளில் பாடப்பட்ட கண்ணகி வழக்குரைப் பாடல்கள், உடுக்குச்சிந்து, காவியம் என்பன சிலப்பதிகாரத்தின் மீது ஏற்படுத்திய ஈர்ப்பிலிருந்தே அவரது தமிழிசை ஆய்வுத் தேடல் தொடங்கியதெனலாம். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை முடித்தபின் கொழும்பிலே பொறியியல் கற்கும் போது யாழ்ப்பாணத் தமிழறிஞர் கைலாய பிள்ளையவர்களிடம் சிலப்பதிகாரத்தினை முறைப்படி பயின்றார். இந்தக் காலத்திலேயே சிலப்பதிகாரத்திலே விரிவாகப் பேசப்படும் தமிழிசையை ஆராயும் எண்ணம் முகிழ்த்த தென்பார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராக விளங்கிய காலத்தில் இசைத் துறையினை மேற்பார்வை செய்யும் பணியிடை அவரது இசை பற்றிய அறிவுத் தேடல் அதிகரித்த தெனலாம். இசை ஆசிரியரான பொன்னையா பிள்ளையுடனான ஊடாட்டம், அந்நாள் கரந்தைத் தமிழ்ச்சங்க தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை தந்த ஊக்கம் என்பன அரணாக, அர்ப்பணிப்பான அவரது தமிழிசைத் தவம் நடந்தது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையின் யாழாசிரியனமைதி கூறும் அடிகளோடு இசைந்த ஏனைய இலக்கிய-தொல்லியல் கல்வெட்டு ஆதாரங்களின் வழி பல்துறை இணை ஆய்வனுபவமாக யாழின் மீளுயிர்ப்பு வசமானது. இந்த வகையில் சங்ககாலம், பரிபாடற் காலம், சிலப்பதிகாரகாலம், தேவாரகாலம், பெரிய புராணகாலம் என்பவற்றை பருநிலையிலும் தமிழிசையின் தாயெனப் போற்றப்படும் காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டுப் பதிகம் என்பவற்றினை நுண்நிலையிலும், ஆழ ஆய்ந்த விபுலானந்தர், இலக்கியங்களுக்கு அப்பால் தமிழிசையின் கால ஆராய்ச்சிக்கென குடுமியாமலைக் கல்வெட்டில் தீட்டப்பெற்ற இசை நூல்களைத் தேடியவண்ணம் அவரது ஆய்வு முறையியலின் முழுதளாவிய தனித்துவத்தினை வெளிப்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தவமாகவே யாழ் நூல் ஆய்வு அமைந்தமை இன்றைய தலைமுறை ஆய்வாளருக்கான விபுலானந்த ஆய்வாளுமையின் மிக முக்கிய பாடமெனலாம். விபுலானந்தரின் ஆய்வுச் செல்நெறியானது தமிழிசையை இலக்கியங்களுக்குள் தேடும் குறுகிய பயிற்சியாக மட்டுப்படாமல் இன்றைய இனவரைவியல், இலக்கிய மானிடவியல் புலங்கள் அவாவி நிற்கும் வாழ்வியல் வழிப்பட்டது என்பதும் ஈண்டு கவனத்திற்குரியது.

yaaz nool

இவை அனைத்துக்கும் அப்பால் சமூக மேலாண்மைகளினடியாக மொழி அந்நியப்படுத்தலுக்கு (Language Alienation) உட்பட்டு, இசையில் தமிழ் மறுப்பு உச்சமானபோது, தமிழிசைப் பாடல்களுக்கான இடமாக, எடுத்துரைப்புக்கான அமைப்பாக தமிழிசை இயக்கம் உருவாகியவேளை வெறுமனே தமிழில் பாடுவது மட்டும் தமிழிசையல்ல என்ற தெளிவோடு அழகிய அர்த்தமுள்ள தமிழ்ப் பாடல்களை ஆக்கியும் தமிழின் கொடுமுடியாக இன்று நாம் ஆராதிக்கும் பாரதியின் தமிழ்ப்பாட்டை அன்றைய எதிர்ப்புகளின் மத்தியில் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தும் பாடசாலையின் இசைக் கலைத்திட்டங்களின் வழிநிலை நாட்டியும் அவராற்றிய பணி, தமிழிசையின் நிலைபேற்றுக்கான வரலாற்றுப் பங்களிப்பாகும்.

இவ்வாறே தமிழிசையின் செல்நெறியில் – வரலாற்றில் நிகழ்ந்த திரிபுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அவரது ஆய்வு முடிவுகள் தமிழிசையின் எதிர்காலத்துக்கான திசைகாட்டிகள் எனலாம். எடுத்துக்காட்டாக மொழி மேலாண்மைக்குள் தன் பெயர் அடையாளத்தினை இழந்த ’நைவளம்’ என்ற பண்ணின் கதையை அடிகளார் வெளிப்படுத்திய விதம் சுவாரஸ்யமானது; சுயவிழிப்புக்கானது.

தமிழர் வழங்கிய ‘நைவளம்’ என்னும் பண்ணினை
வடநாட்டார் கைப்பற்றி வேசரஷாடவத்திற்கு
பாஷாங்கராகமாக்கி ‘நாட்யா’ எனப் பெயர் புனைந்தார்கள்.
வேற்று மொழியிலிருந்து எடுத்து வடமொழி வழக்கிற்
சேர்க்கப்பட்டதெனக் குறிப்பாக இது ‘நாட்டியபாஷா’
எனவும் வழங்கப்பட்டது. தமிழர் தாம் இழந்த
பொருளினை கண்டறிய மாட்டாதாராய், தமிழ் என்பதைக்
குறித்து நின்ற பாஷா என்னும் சொல்லைப் ‘பாடை’ யாக்கி,
‘நட்டபாடை’ப் பெயர் வழங்கி இடர்ப்படுவராயினர். இனி
இப் பண்ணினை நைவளம் என வழங்குவதே முறையாகும்.

(விபுலானந்தர்,1947:286)

நிறைவாக விபுலானந்த ஆளுமை பற்றிய மேற்கண்ட பெருமிதங்களுக்கு அப்பால் எங்கள் பண்பாட்டு உணர் திறனும் தமிழிசைசார் ஆக்கப் பணிகளும் எந்நிலையில் உள்ளன என்ற சுய விசாரணையும் இங்கு அவசியமானது. அரிதின் முயன்று அன்று விபுலானந்த அடிகளார் கண்டுணர்த்திய கணக்கின் வழியாக அமையப் பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சங்கீதபூஷணம் க.பொ. சிவானந்தம்பிள்ளையினால் இசைத்து அரங்கேற்றம் செய்யப்பட்ட யாழ் கருவிகள் தொடர்பாக பின்னாளில் நம் இசையுலகம் மேற்கொண்ட செயற்பாடுகள் எவை?

vipulanandar in temple

அடிகளாரின் யாழ் நூலை பல்துறை இணை அறிவுடன் விளங்கவும் விளக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் எவை? அடிகளார் மறைந்து ஏழு தசாப்தங்கள் கடந்தும் மேலே அடிக்கோடிட்ட ‘இனி இப் பண்ணினை நைவளம் என வழங்குவதே பொருத்தமானது’ என்ற ஆய்வு முடிவுக்கு நாம் தந்த மதிப்பென்ன? இன்னமும் எங்கள் பாட நூல்களில் (கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2018). ‘நட்டபாடை யென்றே பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தமிழிசை மேம்பாட்டில் இசையுலக மதிப்பீடுகளுக்கு – கலையியல் பெறுமானங்களுக்கு அப்பால் அடுக்கமைவு சார்ந்து கட்டமைக்கப்பட்ட சமூக உளவியலின் மேலாண்மை இன்னமும் தொடர்கின்றமை பற்றிய பகுப்பாய்வின் பின்புலத்திலே மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளைக் காண்பது அவசியமாகும்.

உசாத்துணைகள்

  1. ஆபிரகாம்பண்டிதர்(1917)-கர்ணாமிர்தசாரம்,தஞ்சாவூர்கல்விவெளியீட்டுத்திணைக்களம்(2018)-சைவநெறி : தரம் 10, பத்தரமுல்ல, இசுருபாய
  2. விபுலானந்தர் (2003)- பண்டைத் தமிழிசை ஆராய்ச்சி, (மீள்பதிப்பு) விபுலம், கனடா சுவாமி விபுலானந்தர் மன்றம்
  3. விபுலானந்தர், (1947 ) யாழ்நூல், கரந்தை தமிழ்ச்சங்கம், தஞ்சை : யாதுமாகிஅச்சகம்
  4. Stock, Jonathan P.J -(2007)- Alexander J. Elliss and his place in the History of Ethnomusicology, Ethnomusicology, Vol:51:No.2, University of Illinois: Society for Ethnomusicology

ஒலிவடிவில் கேட்க

10244 பார்வைகள்

About the Author

நாகலிங்கம் சண்முகலிங்கன்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்