முகப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வுகள் (2023) இலங்கையின் ‘சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்’ பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது. மதிப்புச் சங்கிலிகளுடன் (Value Chain) மீண்டும் அக்கறையுடன் ஈடுபடுவதன் மூலம், உற்பத்தி மற்றும் வணிகங்களை புத்துயிர் பெறச் செய்ய முடியும். இலங்கையில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 75% இற்கும் அதிகமான நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளன. இவை 20% இற்கும் அதிகமான ஏற்றுமதிகள், 45% வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52% ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் உலகளாவிய பெறுமதிச் சங்கிலியுடன் இலங்கையை இணைக்க நடவடிக்கைள் உடனடியாகத் தேவை. இந்தச் செயற்பாட்டில் வரும் வெற்றிகள் அதிக உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் நிலையான வெளிநாட்டு நாணய வரவையும் உருவாக்கும். முக்கியமாக இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க பங்களிப்பு நல்கும்.
போர் இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்த மூல வேராக இருந்து வந்துள்ளது. முக்கியமாக வடக்கு – கிழக்கின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயற்பாட்டை அது அழித்தது. அல்லது இயங்க விடாமற் செய்தது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழரின் பங்களிப்பும் அவசியமானதாகும். மீண்டும் தமிழரைப் புறக்கணிக்கும் நிலை தொடர்ந்தால் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை விரைவில் உணர நேரலாம். ஆகவே கடந்த காலத்தின் பொருளாதார நிலையை மாற்ற வேண்டியுள்ளது. அதற்கு வடக்கு – கிழக்கில் இயங்கி வந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மீள் எழுச்சி அவசியமானதாகிறது. ‘மில்க்வைற்’ நிறுவனம் அவ்வாறாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த முக்கியமான ஓர் உள்ளூர் நிறுவனம் ஆகும். அந் நிறுவனத்தைப் பற்றி அறிவது, ஒரு வகையில் வடக்கு – கிழக்கின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான நல் அம்சங்களை அறிவதும் ஆகும்.
‘மில்க்வைற்’ இன் கதை
யாழ்ப்பாணத்தின் உள்நாட்டு உற்பத்திகளை ஒரு வகையில் இடம்சார் பெருமை தரும் உள்ளூர் உற்பத்தி வகைகள் எனக் குறிப்பிடலாம். உதாரணமாக பருத்தித்துறை வடை, வியாபாரிமூலை எள்ளுருண்டை, கொழும்புத்துறை நண்டு, பளை தேங்காய், நீர்வேலி வாழைப்பழம், நெடுந்தீவு ஒடியல், மட்டுவில் கத்தரிக்காய் போன்றவற்றைச் சொல்லலாம். தொழில்சார் திறன், நீண்ட குடும்பப் பாரம்பரியம், திரண்ட தொழில் நுணுக்கம், மண்ணின் தரம், காலநிலைசார் இட அமைவு என்பன இடம்சார் உள்ளூர் உற்பத்தி வகைகளின் செயற்பாட்டிற்கு காரணங்களாக அமைகின்றன.
யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போடு இருந்த நேரம், உள்ளூர்த் தேவைகளுக்கு உள்ளூர் உற்பத்திகள் மிக அவசியம் என்ற விழிப்புணர்வு சமூக மட்டத்தில் இருந்தது. இக் காலத்தில் ‘மில்க்வைற் தொழிலகம்’ தம் பங்கிற்கு சவர்க்கார உற்பத்தியில் கவனிப்பை ஏற்படுத்தியிருந்தது. பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து, நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து ‘நீம் சோப்’ என்றும், வேப்பெண்ணெய் என்றும், ‘நீமியா’ உரம் என்றும் மில்க்வைற் தொழிலகம் தன் உற்பத்திகளை அறிமுகப்படுத்தியது.
‘மில்க்வைற்’ என்பது சவர்க்காரத்தின் பெயர் மட்டும் அல்ல; அது உள்ளூர் உற்பத்திக்கான ஒரு குறியீடும் கூட. ‘மில்க்வைற்’ ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும் காணக்கிடைக்கும் ஒரு பெயராக இருந்தது. ஒரு தொழில் நிறுவனம் எவ்வளவு தூரம் தன் சமூகம்சார் அக்கறையுடன் செயற்பட முடியும் என்பதற்கு ‘மில்க்வைற்’ ஒரு சிறந்த உதாரணம். காலப்போக்கில் உற்பத்தி மற்றும் செயற்பாடுகளில் மங்கிப்போனாலும் ‘மில்க்வைற்’ ஒரு சந்ததியின் பெருமைக்குரிய நினைவாக உள்ளது. தற்போதைய காலத் தேவையின் புத்தாக்கங்களுக்கு இசைந்து, மீண்டும் துளிர்விடக் கூடிய ஒரு சுதேச உற்பத்திக்கான பல அம்சங்கள் ‘மில்க்வைற்’ இல் உண்டு.
‘மில்க்வைற்’ இன் உரிமையாளர் கே. கனகராஜா அவர்களின் முன்னோடி முயற்சிகள் பற்றி அமெரிக்க எழுத்தாளரும் அறிஞருமான டொக்டர் ஹோம்ஸ் ‘யாழ்ப்பாணம் 1981’ என்னும் நூலில் எழுதியிருக்கிறார். கந்தையா கனகராஜா நவம்பர் 2, 1927 இல் கந்தையா வீரகத்தி மற்றும் மீனாட்சி முருகேசு ஆகியோரின் மகனாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். ஐந்து பிள்ளைகளில் ஒருவரான கனகராஜா, சிறுவயதிலேயே படிப்பைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஏனெனில் அவரது குடும்பத்தால் அவருக்கு கல்வியை வழங்க முடியவில்லை. 12 வயதாகும் போது, கண்டிக்கு அருகிலுள்ள கம்பளையில் புகையிலை வியாபாரியான உறவினருடன் வேலை செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் தனது சகோதரருடன் நுவரெலியாவிற்கு அருகிலுள்ள கினிகத்தேனையில் உள்ள இறப்பர் தோட்டத்தில் இறப்பர் உற்பத்தியாளராகப் பணியாற்றினார். கனகராஜாவின் தந்தை சவர்க்காரம் தயாரிப்பதை குடிசைத் தொழிலாக அமைத்தபோது, மகன் தனது வேலையை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்கு திரும்பினார். சவர்க்கார உற்பத்தி மற்றும் விநியோகம் இரண்டையும் கற்றுக்கொண்டார். தந்தை மற்றும் மகனின் விடாமுயற்சியால், மில்க்வைற் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளுடன் கூட போட்டியிட முடிந்தது. நீலச் சவர்க்காரம், ‘பார்’ சவர்க்காரம், மருந்துச் சவர்க்காரம், சலவைத் தூள் ஆகியன மில்க்வைற் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உற்பத்திகளின் தொகுப்பாக இருந்தன. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் கரிம உரங்களும் மில்க்வைற் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன. “உயர் தரம், குறைந்த விலை, நல்ல விநியோகம் மற்றும் திருப்தியான பணியாளர்கள் என்பன தயாரிப்பின் வெற்றிக்குப் பங்களித்தன” என்று கனகராஜா அவர்கள் கூறியுள்ளார்.
கனகராஜாவின் ஆர்வங்களில் சமூக சேவையும் ஒரு பகுதியாக இருந்தது. மில்க்வைற் மூலம் வன்னிப் பிரதேசத்தில் குடியேற்றவாசிகளுக்கு உதவுவதற்காக கிணறுகள் தோண்டப்பட்டன; தொட்டிகள் தோண்டப்பட்டன. மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நடவு செய்வதற்காக தென்னை மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன. மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் என மில்க்வைற் தொழிற்சாலையின் இலாபத்தில் சமூகம் பயனடைந்தது.
“உள்நாட்டு உற்பத்திகளுக்கான உள்ளூர்த் தேவையும், உள்ளூர்த் தயாரிப்புகளில் நமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் எங்களை முன்னோக்கிச் செல்ல உதவியது” என ஒரு செவ்வியில் கனகராஜா கூறுகிறார். “ஆனால் காலம் மாறிவிட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பலர் வெளிநாட்டு விழுமியங்களால் தூண்டப்படுகிறார்கள். இது எங்கள் வீழ்ச்சிக்குப் பங்களித்துள்ளது.” மில்க்வைற் சவர்க்காரம் மட்டும் கனகராஜாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தரவில்லை. தயாரிப்பை பொதி செய்யும் அவரது புதிய முறை டாக்டர் ஹோம்ஸ் உட்பட பல அபிமானிகளைக் கவர்ந்தது. “புதிய விடயங்களை முதலில் உள்வாங்குவது எனது ஆழ் உணர்விலிருந்து வெளிப்படுகிறது” எனக் கூறுகிறார் திரு. கனகராஜா.
கல்வித்துறையில், குறிப்பாக அறநெறித்துறையில், அரிவரியில் ‘ஆனா ஆவன்னா’ எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து, ஆத்திசூடி – நீதி நூல் வாசகங்கள் கொண்ட சிறு வெளியீடுகள் அச்சிட்டு விநியோகிப்பது வரை அவரது சமூக சேவை விரிந்த தளத்தில் பயணித்தது.
மில்க்வைற் சவர்க்காரத்தின் வெளிப்புற விளம்பரங்களுக்குச் செலவு செய்வதற்குப் பதிலாக உள்ளூர்த் தயாரிப்புகள் பரிசுகளாக விநியோகிக்கப்பட்டன. இதனால் மில்க்வைற் மட்டுமல்ல, ஏனைய உள்ளூர்த் தயாரிப்புகளும் பயனடைந்தன. “உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” என்று கோஷம் பூண்டார் திரு. கனகராஜா. களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், சங்கானையில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களிடமிருந்து கவிஞர் பாரதியின் சிலைகள், கைத்தறி மற்றும் பிற பொருட்கள் என்பன வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மில்க்வைற் சவர்க்காரத்திற்கான உறைகளுக்குப் பணம் செலவழிப்பதை விட, திருவள்ளுவர் ஸ்டிக்கர்கள், அவரது பட நகல், திருக்குறள் என்பன தயாரிப்புடன் வழங்கப்பட்டன. ‘மில்க்வைற் செய்தி’ பத்திரிகை 1970 களில் தொடங்கப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பல்துறை இதழ். மில்க்வைற் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட இந்த இதழின் ஆசிரியர் க.சி குலரத்தினம் ஆவார். இலக்கியம், கலை, சமயம், வியாபாரம் என பல்துறை சார்ந்த விடயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது. மக்களுக்கு அறிவைப் போதிக்க வேண்டும் என்ற நோக்குடன் இது வெளியானது. இது, அடிமட்ட மக்களின் விழிப்புணர்வில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியது. இன்றும் இவை எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன (https://noolaham.org).
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் போது, சவர்க்காரம் தயாரிக்கும் நடவடிக்கையை தென்மராட்சிக்கு மாற்றி, சிறிய அளவில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. சவர்க்காரங்களின் கடுமையான பற்றாக்குறையால் ஒரு தொற்றுநோய் வெடிக்கும் சாத்தியம் இருந்தது. “தமிழ் மக்களுக்குத் தேவையான நேரத்தில் அவர்களுக்கு உதவ முடிந்ததால் நான் மிகுந்த திருப்தி அடைந்தேன்” என இது குறித்து கனகராஜா கூறும் வார்த்தைகள் மிகப் பெறுமதியானவை. ஒரு அசுர நெருக்கடியில் பலரின் தேவைக்கு மில்க்வைற் உதவியது. ஒரு நெருக்கடி நிலையின் போது, உள்ளூர்ப் பொருளாதாரம் தரும் உள்நாட்டு உற்பத்திகள் தான் மக்களுடன் நெருங்கி இருக்கும் என்பதற்கு மில்க்வைற் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. “சகிப்புத்தன்மை, தன்னடக்கம், ஒற்றுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு போன்ற விழுமியங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். திருக்குறளின் விதிகளின்படி அனைவரும் வாழ வேண்டும். அதுவே எனது விருப்பம்” எனக் கூறும் கனகராஜாவில் ஆன்மீகத்தின் பாதிப்பு அதிகம் இருந்தது.
இந் நெருக்கடிக் காலங்களில் கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சவர்க்காரத்தின் இருப்புத் தீர்ந்து போனது. சவர்க்காரத்தை சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது; துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் நாளடைவில் அரங்கேறின. கையிருப்பில் இருந்த பகட்டான சவர்க்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லோரும் ‘மில்க்வைற்’ இனை நோக்கி ஓடினர். மில்க்வைற் தன்னால் முடிந்தளவு கைகொடுத்தது. இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது பொருளாதார முடக்கம் மேலும் அதிகரித்தது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் பெற்றோல், டீசல் உட்பட பல பொருட்கள் பட்டியலிட்டுத் தடை செய்யப்பட்டன. மில்க்வைற் சவர்க்காரம் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும், தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கு தென்னிலங்கையையே நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால், மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போனது. மில்க்வைற் சவர்க்காரமும் இல்லாத ஒரு காலமும் எமக்கு இருந்தது.
போர் கனகராஜாவின் வியாபாரத்தைச் சுருங்கியது; போக்குவரத்து கடினமாகிவிட்டது; பாதுகாப்பின்மை அதிகரித்தது; மூலதனம் குறைந்தது; காப்பீட்டுத் தொகை, வங்கி வசதி, மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் எதுவும் இல்லை. யாழ்ப்பாண மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வு மற்றும் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை ஆகியவை உற்பத்தியாளரின் துயரங்களை அதிகரித்தன. உற்பத்திக்கான உள்ளீடுகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள் அதிகரித்தன. குறைந்து வரும் சந்தை தவிர்க்க முடியாமல் மூலதனப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. கடன்களை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இது புதிய மூலதனத்தை திரட்டுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியது. ‘மில்க்வைற்’ நாளடைவில் கரைந்து போனது.
மில்க்வைற் உற்பத்திக்கும் அதன் உற்பத்தியாளர் கனகராஜாவுக்கும் இடையே ஒரு சோகமான ஒற்றுமை உள்ளது. அவர்கள் இருவரும் இப்போது செயலில், சேவையில் இல்லை. எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் செழித்தோங்கிய உள்ளூர்த் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் ‘மில்க்வைற்’ இற்கு ஒரு அளப்பரிய பங்களிப்பு உண்டு. அதன் கடந்த காலப் பங்களிப்பும் அர்ப்பணிப்பான தொழில்சார் அக்கறையும் எமது சமூகத்தின் முதுசங்கள்.
போரின் பின்பு 15 வருடங்கள் கடந்த பிறகும் ‘மில்க்வைற்’ இன் தகுதி அறியாது அதனைத் தூங்கவிடுவது ஒரு புகழ் பூத்த சுதேச உற்பத்தியின் நிரந்தர மறைவுக்கு வழிகோலுவதாகிவிடும். சுதேச உற்பத்தியின் வளர்ச்சி தான் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஆதாரம். அதன் அடையாளங்கள் மீட்கப்படாவிட்டால் நாம் எல்லோரும் மிகப் பெரியதொரு பொருளாதாரச் சிக்கலைச் சந்திக்க வேண்டிய ஒரு நிலை வரும். ‘மில்க்வைற்’ இன் மீள்-எழுச்சிக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை.
உசாத்துணை
- Five Ways to Connect Sri Lanka’s Small Businesses to Global Value Chains, https://blogs.adb.org/index.php/blog/five-ways-connect-sri-lanka-s-small-businesses-global-value-chains Accessed on 15 October 2024
- Impact of multiple crises on Sri Lanka’s micro, small and medium-sized enterprises, First published 2023, International Labour Organization; https://www.ilo.org/sites/default/files/wcmsp5/groups/public/@asia/@ro-bangkok/@ilo-colombo/documents/publication/wcms_901205.pdf.
- Lakhtakia,Shruti; Atapattu Mudiyanselage,Udahiruni Shashadari Atapat; Walker,Richard Ancrum. Sri Lanka Development Update – Opening up to the Future (English). Washington, D.C. : World Bank Group. http://documents.worldbank.org/curated/en/099654510092428580/IDU1d5aa8c921ec43144c81b75b17ddf3456747e
- Milk white reflects the ailing industry in Jaffna, https://www.tamilnet.com/art.html?catid=13&artid=1020
- https://prabook.com/web/kandiah.kanagarajah/1038857
- Northern Entrepreneur P.Nadaraja, owner of ‘Anna Coffee’ fame, no more, https://tamildiplomat.com/black-tigers-day-commemorated-within-the-jaffna-campus-2/
- https://www.facebook.com/photo.php?fbid=1450379701812973&id=633899963460955&set=a.633903053460646
- மில்க்வைற் அதிபர் க. கனகராசா, பதிப்பகம் மகாஜனா விடுதி மாணவர் மன்றம், 1978, பக்கங்கள்-14, https://noolaham.org.
- மில்க் வைற் யாழின் சுதேச நிறுவனம் | Milk white soap factory Jaffna | How to make soap https://www.youtube.com/watch?app=desktop&v=SOsTDhxX6AM, Brand Podiyal.
- யாழ் குடாநாடும் நீர்வளமும், திரு.க. கனகராசா ஜே.பி. noolaham.net https://noolaham.net › project
- அமரர் பூபாலசிங்கம் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் இக்கட்டுரை அவரது வாழ்வும் பணியும் பற்றிய பதிவுகளை இரை மீட்கின்றது. அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம்: சில நினைவுகள். https://noolthettamns.blogspot.com/2012/
- யாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும். https://eelamlife.blogspot.com/2012/09/blog-post_19.html