1
இலங்கைப் போரின் பின்னணியில், தமிழ்க் கிராமங்கள் காணாமல் போயின. சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பெயர்களை மாற்றின. தமிழருக்குச் சொந்தமான நிலங்கள் அபிவிருத்தி என்னும் பெயரில் பறிபோயின. நிலத்தை விட்டு விரட்டுவது என்பது ஒரு இனக்குழுவின் கலாசாரத் தளங்களை அழித்தல் ஆகும். இழைக்கப்பட்ட அட்டூழியங்களை சரியான முறையில் அடையாளப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களிடமும் தப்பிப் பிழைத்தவர்களிடமும் மன்னிப்புக் கேட்காமல், கடந்த காலத் தவறுகளின் கள நிலையை உணராமல் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகிய முன்னெடுப்புகளைச் செய்தல் கசப்பான கடந்த காலத்தின் தொடர்ச்சி எனவே கருதப்படும்.
இன அழிப்பு என்பது தேசிய குழுக்களின் அத்தியாவசிய அடித்தளங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு செயல்களின் ஒருங்கிணைந்த திட்டம் எனலாம். அத்தகைய திட்டம் அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள், கலாசாரம், மொழி, தேசிய உணர்வுகள், மதம் மற்றும் தேசிய குழுக்களின் பொருளாதார இருப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, சுதந்திரம், சுகாதாரம், கண்ணியம் போன்றவற்றை அழிக்கக் கூடியது. இனப் படுகொலையானது ஒரு தேசியக் குழுவிற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதிராக ஒரு அமைப்பாக இயக்கப்படுகிறது. தேசிய குழுக்களின் பொருளாதார இருப்பு என்பது அது வாழும் நிலத்தில் தங்கியுள்ளது. நிலம் ஒரு தீர்மானக் காரணி. நிலம் மீதான கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. நிலம் இழந்தோர் தேசம் இல்லாதவர்கள் ஆவர். நிலத்தையும் நிலம் மீதான உரிமையையும் அகற்றுவதன் மூலம் ஒரு தேசத்தின் சிதைவை உருவாக்கலாம்.
2
திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பு, வளங்களைச் சுரண்டுதல், மாவட்டத்தின் பெரும்பான்மைச் சமூகத்தின் இனப் பரம்பலை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலமும் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலமும் ‘பௌத்தமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் போர்வையில் இது நடைபெறுகிறது. இதனால் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் நிலங்கள் பலவந்தமாக அரசால் அபகரிக்கப்படுகின்றன. திணைக்களங்கள் மற்றும் பௌத்த மத அமைப்புகள் அரச பாதுகாப்புப் படைகளின் முழுப் பாதுகாப்போடு, ஒரு கூட்டு முயற்சியாக அபிவிருத்தி என்னும் பெயரில் இதனை நிகழ்த்துகின்றன.
இதற்கு எதிராக இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் கிளர்ந்ததன் காரணமாக, 1957 இல் செய்து கொள்ளப்பட்ட பண்டா – செல்வா உடன்படிக்கையில் வலிந்து ஏற்படுத்தும் குடியேற்றங்களை நிறுத்துதல் என்னும் அம்சம் குறிப்பிடப்பட்டிருந்தது. அல்லை – கந்தளாய்க் குடியேற்றங்களை இனிமேல் மேற்கொள்வதில்லை என அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும் வகையில் அவ் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டது. அதில் குறிப்பிட்ட தமிழ் பேசும் மக்களினால் முன்வைக்கப்பட்ட விருப்பங்களைப் புறக்கணித்து அரசு தனது விஸ்தரிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்தியது. 1965 இல் மேற்கொள்ளப்பட்ட டட்லி – செல்வா ஒப்பந்தத்திலும் கூட, குடியேற்றம் பற்றிய தமிழ் பேசும் மக்களின் விருப்பம் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. நடைமுறைப்படுத்தப்படாத இந்த ஒப்பந்தமும் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு 30 ஆண்டுகளின் பின்னால் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையின் போதும் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்த்தனர். இவ்வகையான நில அபகரிப்புகளில் இருந்து பாதுகாப்புக் கிட்டுமென்றே தமிழ் பேசும் மக்கள் நம்பினர். அதனாலேயே பல குறைபாடுகள் இருந்த போதும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வரவேற்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான நிலையிலும் கூட, நில அபகரிப்பை மையப்படுத்தி, தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு எதிராக வெலி ஓயாத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயலில் அரசு இறங்கியது. முன்னைய ஒப்பந்தங்களுக்கு ஏற்பட்ட அதே நிலையே இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கும் ஏற்பட்டது.
3
இலங்கையின் இன முரண்பாடுகளில் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் பங்கு வலுவானது. மகாவலி அபிவிருத்தித் திட்டமும் (MDP) அவ்வாறாக அமைந்த மிகப்பெரிய பல்நோக்குத் தேசிய அபிவிருத்தித் திட்டமாகும். 1960 களில் தொடங்கப்பட்ட இது உலர் வலயங்களை விவசாயத் தொழில் மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம் சர்வதேச ஆதரவுடன் பாரிய மூலதன உட்செலுத்தலைப் பெற்றது. இது உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு திட்டமாக இருந்த போதிலும், நாட்டின் சொந்தக் குடி மக்களையே உள்நாட்டில் இடம்பெயரச் செய்தது; பல நாடுகளில் அகதிகளாகவும் மாற்றியது. 2009 இல் முடிவடைந்த முப்பது வருட உள்நாட்டுப் போரைத் தூண்டியதில் மகாவலியின் பங்கு அளப்பரியது.
இன்று மகாவலித் திட்டத்தின் கீழ் வரும் வெலி ஓயாத் திட்டம் வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் நோக்கோடு மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு முறை உடன்பாடு எட்டப்படும் போதும், குடியேற்றங்களை நிறுத்துவதற்கு இணங்கிய அரசு பின் தன்னிச்சையாக அவற்றை உருவாக்கி வந்தமை கண்கூடு. சுமார் 13,500 தமிழ் பேசும் குடும்பங்களை நிர்ப்பந்தமாக இடம்பெயர வைத்த வெலி ஓயாத் திட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் வாக்களிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாட்டினை இல்லாதொழிக்கும் வகையில், இன்றும் முனைப்புடன் அமுலில் உள்ளது.
மகாவலித் திட்டம் வடக்கு – கிழக்கின் நில இணைப்பை முறித்து, ஒரு தேசிய இனக் குழுவுக்குரிய பாரம்பரிய வாழ்விட நில உரிமையை படிப்படியாக நீர்க்கச்செய்து, வாழ்விடத்துக்குரிய மக்களை சிதறப் பண்ணி, உள்ளூர்ப் பொருளாதார மையங்களை தனதாக்கி, வெற்றிகரமாகத் தனது நோக்கத்தை அடைந்துள்ளது எனக் கூறலாம். தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை விளிம்புநிலைக்குக் கொண்டுவந்து, தேசிய உரிமையை இல்லாமல் செய்ததில் மகாவலி திட்டம் முக்கிய பங்காற்றியது என்னும் கருத்தை ஆணித்தரமாக முன்வைக்க முடியும். ஒரு இனவாத அரசு உலக நாடுகளின் நிதியுடன் எவ்வாறு அபிவிருத்தித் திட்டம் மூலம் ஒரு தேசிய இனக்குழுவின் பாரம்பரிய வாழ்விட உரிமையை நீர்க்கச் செய்ய முடியும் என்பதற்கு மகாவலித் திட்டம் சிறந்த உதாரணமாகும்.
4
போரின் பின்பு, திருகோணமலையில் தொடரும் நில அபகரிப்பு உச்ச நிலையில் நடைபெறுகிறது. தற்போது, மாவட்டத்தில் 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ளனர். தமிழ் பேசும் மக்கள் உச்ச விளிம்பு நிலைக்குச் செல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.
‘The Oakland Institute’ இம்மாதம் வெளியிட்ட அறிக்கை (Trincomalee Under Siege Land Grabs) தரும் புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி தருபவை:
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புவியியல் ரீதியாக இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, கடந்த 10 வருடங்களில் மிக மோசமான நில அபகரிப்பைச் சந்தித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் பேணுகை (Conservation) ஆகிய திட்டங்களின் கீழும், பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதற்காகவும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் 50 சதவீதத்திற்கும் மேலதிகமான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. 26 விகாரைகள் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. பாரியளவில் வளம் நிறைந்த விவசாய மற்றும் கடற்கரை நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். தமது நிலங்களை மீளப் பெற்றுக்கொள்ளும் மக்களின் முயற்சிகள் இந்தப் பிரதேசத்தின் உச்ச இராணுவப் பிரசன்னம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.”
“கடந்த 10 வருடங்களில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவு மோசமான நில அபகரிப்பைச் சந்தித்துள்ளது. நீர்ப்பாசனத் திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், வலு உற்பத்தி மற்றும் உல்லாசப் பயண மேம்படுத்தல் போன்ற ‘அபிவிருத்திப்’ போர்வையில் ‘சிங்களமயமாக்கல்’ நடைபெற்று வருகின்றது. தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி அதிகாரசபை மற்றும் உல்லாச அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய பல்வேறு அரச நிறுவனங்கள் இந்தச் சிங்களமயமாக்கல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளன.”
5
குச்சவெளிப் பிரதேசத்தில் நான்கு விகாரைகளை அமைக்க ஒரு வர்த்தமானி வெளிவந்தது. வர்த்தமானி அறிவிப்பில் (February – 2024) குறிப்பிட்ட ‘தொல்பொருள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களின்’ பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. புல்மோட்டையில், சாந்தி விகாரை – யான் ஓயா ரஜமஹா விகாரை – ஸ்ரீ சதர்ம யுக்திகா வன செனசுன (மடங்கள்); புடவைக்கட்டில், சாகர புர சமுத்திரகிரி வன செனசுன விகாரை ஆகியனவே அவையாகும். இராணுவப் படைகள் சூழ இருக்கும் போது இந்த விகாரைகளை புனிதத் தலங்களாகப் பிரகடனப்படுத்துவதும், பௌத்தமயமாக்கலை தீவிரமாக விரிவுபடுத்துவதும் உள்ளூர்ச் சமூகத்தை அச்சம் கொள்ள வைத்தது.
தமது நிலங்களை மீளப் பெற்றுக்கொள்ளும் மக்களின் முயற்சிகள் இந்தப் பிரதேசத்தின் உச்ச இராணுவப் பிரசன்னம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்து வருகின்றது. வடக்கு – கிழக்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை அழிப்பதை இந்த நில அபகரிப்பு முன்னெடுப்புகள் இலக்காகக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது குடித்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வழி ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ ஆதிக்கத்தை (ethnocratic dominance) நிலைநாட்டுவதற்காக இலங்கை அரசு அதன் இராணுவ மையங்களை அரசியல் மூலோபாயம் கருதிப் பயன்படுத்துவது கண்கூடு.
பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் துறைப் பேராசிரியர், சி.எம். மத்துமபண்டார அவர்கள், இலங்கையின் மாகாணங்களை மறுவரையறை செய்வதோடு, நமது காலத்தின் தேசிய தேவை, பிராந்திய அபிவிருத்தி மற்றும் தேசிய ஸ்திரத்தன்மைக்கான மாற்று அணுகுமுறை ஒன்றையும் முன்வைத்துள்ளார் (கீழுள்ள படம்). அவரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை பொருளாதார அடிப்படையில் அவசியமானதாக இருக்கலாம். ஆனால் ஒரு பல்லினக் கலாசார நாட்டின் இனப் பரம்பலைப் பாதிக்கக் கூடியது என்பதே சரியானது.
6
திருகோணமலை முதலீட்டு வலயமும் ‘திருகோணமலை – கொழும்பு’ விரைவுப் பாதையும்
“இலங்கையின் ஏற்றுமதியானது ஆடைகள், தேயிலை, இறப்பர் போன்றவற்றை நம்பியிருக்கிறது. குறைந்த மதிப்புள்ள பொருட்களின் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது கட்டமைப்பு வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. இறப்பரை ஒரு போட்டிப் பொருளாக நிலைநிறுத்த முடியும். தேயிலை மற்றும் ஆடைகள் குறைந்த ஊதிய நாடுகளிடமிருந்து சர்வதேச போட்டியை எதிர்கொள்கின்றன. எனவே, நாடு தனது வலுவான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க, அதன் பொருளாதாரத்தை உற்பத்தியைப் பல்வகைப்படுத்துதலில் முதலீடு செய்ய வேண்டும். திறந்த பொருளாதாரத்திற்கு மாறுவது உற்பத்தி மற்றும் தொழிற்துறை தேவையின் வளர்ச்சியை எளிதாக்கும். உற்பத்தி, தொழிற்துறைகளின் மதிப்புக் கூட்டப்பட்ட நடவடிக்கைகளின் வளர்ச்சி, மூலப்பொருட்களின் இறக்குமதி மற்றும் இறுதிப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்”.
மேற்குறித்த கருத்தின் அடிப்படையில், இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த, திருகோணமலைத் துறைமுகத்தை மையமாகக் கொண்ட முதலீட்டு வலயம் மற்றும் அதன் நீட்சியான கொழும்பு – திருகோணமலை விரைவுப் பாதை ஆகிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆழமான நீரைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட இயற்கைத் துறைமுகம் அதற்கான பொருத்தமான இடமாக அமைகிறது. வங்காள விரிகுடாவை மையமாகக் கொண்டு எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்ந்த இடமாகவும் இது இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு – திருகோணமலை விரைவுப் பாதையானது ஆலோசகர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தாகும். அவர்களது திட்ட அறிக்கை தான் அமுலாக்கப்படவுள்ளது. நெடுஞ்சாலை விரைவுப் பாதையின் முக்கிய முதுகெலும்புடன் ‘FTZ / EPZ’ வலையமைப்பை எளிதாக்குவதன் மூலம், திருகோணமலைத் துறைமுகம் உட்பட்ட கிழக்குக் கடற்கரையுடன், கொழும்பு துறைமுகம் உட்பட பிராந்தியங்கள் உள்வாங்கப்படவுள்ளன. பொருளாதார வளர்ச்சியை எளிதாக்க இத்திட்டம் முன்மொழியப்படுகிறது. கொழும்பு – திருகோணமலை விரைவுப் பாதை (CTEC) 9 மாவட்டங்களில் பரவியுள்ளது; 14.2 மில்லியன் மக்கள் தொகையை உள்ளடக்குகிறது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதத்தினையும், நாட்டின் மொத்த தொழிற்துறை உற்பத்தியில் 91 சதவீதத்தினையும் இது உள்ளடக்குகிறது. இந்தப் விரைவுப் பாதை சுமார் 275 கி.மீ நீளம் உடையது. சராசரியாக 45 கி.மீ/மணி வேகத்தில், சுமார் 6 மணிநேரப் பயணத்தில் கொழும்பையும் திருகோணமலையையும் இணைக்கக் கூடியது.
7
திருகோணமலை – சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் தளவாடங்களுக்கான மையம்
சிங்கப்பூரின் நகர திட்டமிடல் நிறுவனமான ‘Surbana Jurong Consultants PVT Ltd’ இனால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், திருகோணமலையை இலங்கையின் ‘கிழக்கு நுழைவாயில்’ ஆகவும், சுற்றுலா – ஏற்றுமதி மற்றும் தளவாடங்களுக்கான மையமாகவும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலையின் தனித்துவத்தை தக்கவைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், பிராந்தியத்தின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கும், அதன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், முதன்மைத் திட்டமிடல் கட்டமைப்பை வடிவமைக்கும் நான்கு தெளிவான இலக்குகளை முன்வைத்து இவ் அபிவிருத்தி நகர்வுகள் நடைபெறுகின்றன. நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான மூன்று முக்கிய அம்சங்களான நிலப் பயன்பாடு, போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை தடையின்றி ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான திட்டமாக திருகோணமலை – சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் தளவாடங்களுக்கான மையம் விளங்கவுள்ளது.
இத் திட்ட அறிக்கை சுற்றுச்சூழல் உணர்திறன், திட்டமிடப்பட்ட பொருளாதார – குடியிருப்பு வசதிகள், பொழுதுபோக்குத் தேவைகள் ஆகிய விடயங்களுக்கான நிலப் பயன்பாடு குறித்த விபரங்களை உள்ளடக்கியுள்ளது. திட்டத்தின் படி, ஒரு சுத்தமான தொழிற்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் திருகோணமலை ‘கிழக்கின் ஏற்றுமதி மையமாக’ மாறவிருக்கின்றது. கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களின் விவசாயம், மீன்வளர்ப்பு மற்றும் கனிம வளங்களின் மதிப்பை அதிகரித்து ஏற்றுமதி செய்ய திருகோணமலை – சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் தளவாடங்களுக்கான மையம் விளங்கவுள்ளது.
1970 களின் பிற்பகுதியில் இருந்து இந்தியா திருகோணமலைத் துறைமுகத்தை உற்று நோக்கி வருகிறது. சீனாவின் நிதியுதவியுடன் கூடிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் இலங்கையில் முதலீடுகள் அதிகரிப்பது போன்ற புவிசார் அரசியல் கவலைகளுக்கு மத்தியில், பல இந்தியத் திட்டங்கள் மெதுவான வேகத்தில் நகர்கின்றன. இந்தியாவின் தற்போதைய திட்டமிட்ட அணுகுமுறைகள் திருகோணமலைத் துறைமுகத்தை தனது மூலோபாயத் துறைமுகமாக மாற்றுவதில் பெரு வெற்றிபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு, திருகோணமலை மாவட்டத்தில் எரிசக்தி மையத்தை உருவாக்குவது குறித்து இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடினர். முதலீடுகளை ஈர்க்கும் குறிக்கோளுடன் கனரக கைத்தொழில்களை மையமாகக் கொண்ட ஒரு பெரிய தளவாட மையத்தை உருவாக்கும் திட்டங்களை இலங்கை முன்னெடுத்து வருகிறது. பல சர்வதேச நிறுவனங்கள் இதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன. வெளிவந்த அறிக்கைகளின் படி திருகோணமலையின் கப்பல் துறையில் 600 ஏக்கர் முதலீட்டு வலயம் வரவுள்ளது. கடல், வான் மற்றும் புகையிரதப் பயணப் பாதைகளை இணைக்கும் கேந்திர நிலையமாக இது மாறவுள்ளது. சீனாவால் கட்டப்பட்ட துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அடுத்து இது முக்கியத்துவம் பெறவிருக்கிறது. 1.5 பில்லியன் டொலர்கள் வரையிலான முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், கனரக கைத்தொழில்களை இலக்காகக் கொண்டு மிகவும் கவர்ச்சிகரமான தளவாட மையத்தை நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.
“கப்பல்துறை முதலீட்டு வலயத்துடன் துறைமுகத்தை இணைக்கும் வகையில் 600 ஏக்கரில் இது புதிய வலயமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு தளவாட மையமாக (Trincomalee Logistic Hub) அமைந்து கனரகத் தொழில்களுக்கு வழிசமைக்கும் இது தொழிற் பூங்காவாக உருவாக்கப்படும். திருகோணமலையிலிருந்து கடல், வான் மற்றும் புகையிரதப் போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான வலயமாக இது விளங்கும்.”
இலங்கையின் கனிம வளம் மிகுந்த மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று. திருகோணமலையின் வடக்குப் பகுதியில் பெறுமதி வாய்ந்த கனிம மணற் படிவு உள்ளது. இக் கனிம வைப்புத் தொகையில் இல்மனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile) ஆகிய கனிமங்கள் உள்ளன. சிர்கோன் (Zircon), மோனாசைட் (Monazite), கார்னெட் (Garnet), சில்லிமனைட் (Sillimanite) உட்பட மேலும் சில கனரகக் கனிமங்கள் இங்கே உள்ளதாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது அரச திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலைத் துறைமுகத்தின் நுழைவாயில் இரண்டு தலைப் பகுதிகளால் பாதுகாக்கப்படுகிறது. அதன் வடக்கு மற்றும் கிழக்கு விளிம்புகளில் ஒரு பரந்த நிலப்பரப்பு உள்ளது. இப் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) அல்லது எரிசக்தி மையத்தை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. இதற்கன ஏற்கனவே சர்வதேச முதலீட்டாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 1964 வரை அவர்களால் கட்டுப்படுத்தப்பட்ட துறைமுகப் பகுதியில் காணப்படும் எண்ணெய்க் குதங்களின் உரிமையைப் பகிர்ந்து கொள்ள இந்தியன் ஒயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) இலங்கையுடன் ஒப்பந்தம் செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
8
இன முரண்பாடு போர்களை விதைத்தது. போர் முழு நாட்டின் பொருளாதாரத்தையும் நசுக்கிவிட்டது. இலங்கையில் ஒரு வலுவான, நிரந்தரமான பொருளாதாரக் கலாசாரத்தை முன்னெடுக்க வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது அவசியம். ஆனால் அது வடக்கு – கிழக்கு மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை முன்வைத்து உருவாக்கப்பட வேண்டும். தேசிய நீரோட்டத்தில் வடக்கு – கிழக்கின் மக்களின் பங்களிப்பு கௌரவத்துடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம். எந்த முன்னெடுப்பும் தமிழர் பாரம்பரியப் பிரதேசங்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்து, வலுவான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க உதவவேண்டும். அபிவிருத்தி திட்டங்களில் அரசியல் மற்றும் கலாசார உணர்திறன்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தை உற்பத்தி மற்றும் பல்வகைப்படுத்துதலில் முதலீடு செய்வது, திறந்த பொருளாதாரத்திற்கு மாறுவது, உற்பத்தி மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சியைத் திட்டமிடுவது என்பன உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் அச்சங்களைப் போக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். முதலீட்டு வலயங்கள் மற்றும் பொருளாதாரப் பாதைகள் வடக்கு – கிழக்கின் சமூக, பொருளாதார, கலாச்சார ஒன்றிணைவுக்கு ஊக்கம் தருவதாக அமைய வேண்டும். குறிப்பாக, திருகோணமலை மக்களின் முழுப் பங்களிப்புடன் இது நடைபெற வேண்டும். தவறும் பட்சத்தில், இவை இன அழிப்பின் வலுவான கருவியாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.
உசாத்துணை
- ADB initiates for Colombo-Trincomalee Economic Corridors, https://www.news.lk/economy/item/20077-adb-initiates-for-colombo-trincomalee-economic-corridors
- Discrimination, Genocide, and Politicide, Gary Uzonyi and Victor Asal Political Research Quarterly Vol. 73, No. 2 (JUNE 2020), pp. 352-365 (14 pages) , Published By: Sage Publications, Inc.
- Genocide against the Tamil People State Aided Sinhala Colonization, https://www.ptsrilanka.org/wp-content/uploads/2017/04/state_aided_sinhala_colonisation_en.pdf.
- Lemkin, R. (2005). Axis Rule in Occupied Europe: Laws of Occupation, Analysis of Government, Proposals for Redress. (p. 79). New Jersey: The Lawbook Exchange, Ltd.
- LESSONS LEARNED FROM COMMUNITIES DISPLACED BY THE MAHAWELI MULTIPURPOSE DEVELOPMENT PROJECT SRI LANKA, WERELLAGAMA D.R.I.B. Department of Civil Engineering, University of Peradeniya, Sri Lanka JEYAVIJITHAN V.2 MANATUNGA. J.3 and NAKAYAMA, M4 2Department of Civil Engineering, University of Peradeniya, Sri Lanka 3 Saitama University, Japan, 4Tokyo University of Agriculture & Technology,Japanhttps://v1.cepa.lk/content_images/publications/documents/752-S-Werellagama-Lessons%20Learned%20From%20Communities%20Displaced%20By%20the%20Mahaweli%20Multipurpose%20Dev.pdf
- National Port Master Plan: National Port Directions, Volume 1 Technical Assistance Consultant’s Report Consultants’ Reports | February 2020- https://www.adb.org/projects/documents/sri-50184-001-tacr.
- State Sponsored Sinhalese Colonization Of Tamils’ Traditional Homeland, Kumarathasan Rasingam, 07/06/2022, https://countercurrents.org/2022/06/state-sponsored-sinhalese-colonization-of-tamils-traditional-homeland/
- Structural Genocide Continues in Sri Lanka, The Ilankai Tamil Sangam, USA, https://sangam.org/structural-genocide-continues-in-sri-lanka/
- Sri Lanka to establish Trincomalee logistic hub; aims up to $1.5 bn investment,https://economynext.com/sri-lanka-to-establish-trincomalee-logistic-hub-aims-up-to-1-5-bn-investment-177663/
- Tamils denounce ‘Sinhalisation’ of ‘Mahaweli L Zone’ in Mullaitivu, Tamil Guardian,https://www.tamilguardian.com/content/tamils-denounce-sinhalisation-mahaweli-l-zone-mullaitivu
- The Marginalised in Genocide Narratives, Giorgia Donà, ISBN 9780367728489 188 Pages Published December 18, 2020 by Routledge, https://www.routledge.com/The-Marginalised-in-Genocide
- Trincomalee Under Siege: Land Grabs Target the Tamil Homeland in Sri Lanka, September 12, 2024, https://www.oaklandinstitute.org/trincomalee-under-siege-land-grabs-target-tamil-homeland-sri-lanka Accessed on 13 September 2024
- Weli Oya Outrage, EROS publications. 1987.