தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல்
Arts
23 நிமிட வாசிப்பு

தேசபக்தன் : தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரல்

August 18, 2024 | Ezhuna

மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தை முக்கியமான நிலைமாறுகட்ட காலமெனலாம். அக்காலத்திலேயே இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின்போது ஒரு நியமன உறுப்பினர் இந்தியர் சார்பாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 1924 ஆம் ஆண்டு சீர்திருத்தத்தின் போது இந்தியர் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். அத்தேர்தலின் போது நடைமுறைக்கு வந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை இலங்கைவாழ் இந்தியருக்கும் வழங்கப்பட்டது. இவை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் எவ்வித அரசியல் உரிமைகளும் அற்றிருந்த இந்தியவம்சாவளி மக்களுக்கு நாட்டின் தேசிய அரசியலில் நேரடியாகப் பங்குபற்றுவதற்கான வாயிலைத் திறந்துவிட்டன. அம்மக்களின் அரசியல் எழுச்சி, சமூக அபிவிருத்தி, தொழிற்சங்க உருவாக்கம் முதலானவற்றுக்கான அடித்தளமும் அதிலிருந்து கிளைத்த மலையகத் தேசியம் என்பதற்கான வித்தும் அக்காலத்திலேயே இடப்பட்டன.

தோட்டத் தொழிலாளரை மீளாக் கடனில் மூழ்கடித்துவந்த துண்டுமுறை 1921 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக இல்லாதொழிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளருக்குக் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் முதலாவது சட்டம் 1927 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்திலேயே அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. இச்சட்ட ஆக்கங்கள் இந்தியா ஏற்படுத்திய அழுத்தங்களின் தாக்கங்களால் விளைந்தவையாகும். திலகர் (1919), சரோஜினி நாயுடு (1922), மௌலானா சௌகத் அலி (1924), மகாத்மா காந்தி (1927) முதலான இந்தியத் தலைவர்களின் இலங்கை வருகை இந்தியத் தேசிய எழுச்சியையும் காலனிய விடுதலை உணர்வையும் மக்களிடையே ஆழமாக விதைத்தன. இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுவந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர் நலனை முன்னிலைப்படுத்தி நேரடி அரசியலில் ஈடுபட்ட நடேசய்யர், தேசபக்தன் பத்திரிகையைத் தோட்டத் தொழிலாளரின் அரசியற் குரலாக ஒலிக்கச் செய்துள்ளார்.

தேசபக்தன் 03.09.1924 அன்று முதன்முதல் மலர்ந்துள்ளது. வாரத்துக்கு மூன்று இதழ்கள் எனத் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வெளிவந்த தேசபக்தன் 1929 இல் நாளேடாகித் தன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது. ஏறக்குறைய ஏழாண்டு காலமாக நீடித்த அப்பயணம், 1931ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துள்ளது. அது வெளிவந்துள்ள காலம் முழுதும் எவ்வித சமரசமுமின்றி தோட்டத் தொழிலாளருக்கான அரசியலை வீச்சாக முன்னெடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதற்கான தேவையும் சூழலும் அக்காலத்தில் கனிந்திருந்துள்ளன.

இந்தியருக்கெனத் தனியான அரசியல் பிரதிநிதித்துவம், தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் அழுத்தம், அந்த அழுத்தத்தினால் இலங்கை அரசு முன்னெடுத்த செயற்பாடுகள், இலங்கையில் வாழ்ந்த மேட்டுக்குடி இந்தியரின் தோட்டத் தொழிலாளருக்கு விரோதமான அரசியல் நகர்வுகள் முதலான பல காரணங்களால் 1920 களின் அரசியல் அரங்கில் தோட்டத் தொழிலாளர் பற்றிய உரையாடல்கள் முன்னிலை பெற்றன. ஆனால், அவர்களுக்கெனக் குரல் எழுப்பும் வலுவான அமைப்போ சாதனமோ இருக்கவில்லை. இந்நிலையில் ஆற்றல்மிக்க இதழியலாளனாக விளங்கிய நடேசய்யர் தோட்டத் தொழிலாளரின் குரலை முதன்மைப்படுத்தித் தேசபக்தன் என்ற பத்திரிகையை ஆரம்பித்துள்ளதுடன் தானே அம்மக்களுக்கான ஓர் அமைப்பாக இயங்கியுள்ளார். நேரடி அரசியலில் ஈடுபட முனைந்த நடேசய்யருக்கு வாய்ப்பான களத்தை இவை ஏற்படுத்தின. அதன்மூலம் சட்டநிரூபண சபைக்குத் தெரிவான நடேசய்யர் தன் காலம் முழுதும் சட்டசபையில் தோட்டத் தொழிலாளரின் குரலாய் ஒலித்துள்ளார். அதன் பிரதிபலிப்பு தேசபக்தனில் எதிரொலித்துள்ளது.

காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையின் சுதேசிய ஆட்சியாளர்கள், இந்திய மேட்டுக்குடி அரசியல் பிரதிநிதிகள், தோட்டத்துரைகள், கங்காணிமார்கள் எனப் பலரும் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்துள்ளதால் அவர்கள் யாவருக்கும் எதிரான குரலை ஏக காலத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவை தேசபக்தனுக்கு இருந்துள்ளது. அதனால் தேசபக்தனுக்கான எதிர்ப்புகளும் வலுவாக இருந்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொண்டுள்ள தேசபக்தன் குரலற்ற தோட்டத் தொழிலாளரின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளது. அது ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகார சக்திகளின் இருப்பினை ஆட்டங்காண வைத்துள்ளன.

தேசபக்தனை ஆரம்பிப்பதற்குத் தொழிலாளர்களுடைய பொருளுதவி முதன்மையானதாக விளங்கியுள்ளமையை முதலாவது இதழிலேயே பதிவுசெய்துள்ள நடேசய்யர், தேசபக்தனுக்கெனத் தனியான அச்சகம் உருவாக்கப்பட்டபோது அதற்குத் ‘தொழிலாளர் அச்சுக்கூடம்’ எனப் பெயரிட்டுள்ளார். இவை தேசபக்தனுக்கும் தோட்டத் தொழிலாளருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. தேசபக்தனின் முதலாமாண்டு நிறைவில் தொழிலாளர்பால் அது கொண்டிருந்த அக்கறையை, “இலங்கைவாழ் இந்தியரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பெருக்குவதிலும் பக்தன் ஆர்வமுள்ளவன். தோட்டக்காடுகளில் கால்வயிற்றுக்குங்கூடக் கஞ்சியின்றிக் கலங்கியுழலும் ஏழைத்தொழிலாள சகோதரரிடம் பக்தனுக்குள்ள அன்பு அளக்கற்பாலதன்று. அவர்களுடைய நிலைமையும் அவரது சுகவாழ்விற்கியற்ற வேண்டிய மாறுதல்களையும் பரிவோடு ஆராய்ந்து பக்தன் வெளியிட்ட கட்டுரைகள் பலவாகும்” என அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது.

தேசபக்தன் பத்திரிகை வெளிவந்து மூன்று மாதங்களுக்குள் அப்பத்திரிகை மீதான முறைப்பாடொன்றை 24.12.1924 அன்று தோட்டத்துரைமார் சங்கத்தினர் காலனிய அரசின் செயலாளருக்கு வழங்கியுள்ளனர். இது தோட்டத் தொழிலாளர் விடயத்தில் தேசபக்தன் காட்டிய அக்கறையினால் விழைந்துள்ளது. அவ்வாறே தேசபக்தன் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள்ளேயே அதற்கு எதிரான செயற்பாடுகளை மேட்டுக்குடி இந்திய அரசியல் பிரதிநிதிகளும் அவர்களைச் சார்ந்த குழுவினரும் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தேசபக்தன், “நமது பத்திரிகை தோன்றி இது மூன்றாம் நாள். இதற்குள் இந்திய வாக்காளர்களுக்கு சில உண்மைகளை வெளியிட்டு அவர்களது கண்களைத் திறந்துவிட்டது. இப்பத்திரிகை வெளிவருவது சில அபேக்ஷகர்களுக்கு உபத்திரவமாக விருக்கிறது. இதை யுத்தேசித்து சில சூழ்ச்சிகள் கிளம்பிவிட்டன. நமது பத்திரிகையை எப்படியும் கெடுத்திவிட வேண்டும் என இரகசிய வேலைகள் செய்துகொண்டு வரத் தலைப்பட்டுவிட்டார்கள்” (தேசபக்தன் – 08.09.1924) எனப் பதிவு செய்துள்ளது. காலனிய அதிகாரிகள், தோட்டத்துரைகள் என்போருக்கு அப்பால் சக இந்தியரும் – மேட்டுக்குடி இந்தியர் – தோட்டத் தொழிலாளரின் எழுச்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்கியுள்ளமையையும், தேசபக்தன் அத்தகையோருக்கு எதிராகவும் தொழிற்பட வேண்டியிருந்துள்ளமையையும் இப்பதிவு சுட்டிநிற்கிறது.

சட்டநிரூபண சபைத் தேர்தல் காலத்தில் வெளிவரத் தொடங்கிய தேசபக்தன், தொடக்க காலத்தில் தேர்தலுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. நடேசய்யரும் அத்தேர்தலில் போட்டியிட்டதால் தனக்கான பிரசாரக் கருவியாகத் தேசபக்தனை நன்கு பயன்படுத்தியுள்ளார். வாக்காளரின் கடமை, தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் கடமை என்பவற்றை விரிவாக விளக்கியுள்ளதுடன் தன்னுடைய கொள்கை, கடந்த காலத்தில் தான் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பு, இலங்கையில் இந்தியரின் நன்மைக்கு ஆற்றவேண்டிய காரியங்கள் முதலானவற்றையும் எடுத்துரைத்துள்ளார்.

சட்டநிரூபண சபைத் தேர்தலில் இந்தியப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுபவர்கள் தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் காலங்களிலும் மேற்கொண்ட சூழ்ச்சிகளையும் பரந்துபட்ட மக்கள் நலனுக்கு மாறாக அவர்கள் சுயநலத்துடன் செயற்படுவதையும் தேசபக்தன் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வந்துள்ளது. அப்பதிவுகள் இலங்கைவாழ் இந்தியரின் வரலாற்று அசைவுகளைப் புரிந்துகொள்ள மிகுந்த பயனுடையவையாக விளங்குகின்றன.

இந்தியப் பிரதிநிதிகளாகப் போட்டியிடுபவர்கள் ஒட்டுமொத்த இந்தியரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இல்லை என்பது தேசபக்தனின் பிரதான குற்றச்சாட்டாக விளங்கியுள்ளது. அப்பிரதிநிதிகள் நகரங்களில் வாழும் மேட்டுக்குடி இந்தியரின் பிரதிநிதிகளாக இயங்குவதும், அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர் நலனைக் கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாதிருப்பதும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1924 ஆம் ஆண்டுக்கான சட்டநிரூபண சபைக்கு இந்தியப் பிரதிநிதிகளின் தேர்வு தேர்தல் மூலம் இடம்பெறும் எனத் தீர்மானிக்கும் முன்னரே இந்தியருள் சிலர், பல்வேறு சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் மூலம் அப்பிரதிநிதித்துவத்தைக் கைப்பற்றிக்கொள்ள முயன்றமையையும் தேர்தலில் இல்லாமல் நியமன அடிப்படையில் தெரிவு செய்வதை வலியுறுத்தி, நீண்ட இடைவெளிக்குப்பின் கிடைத்த மிக முக்கிய அரசியல் உரிமையான வாக்குரிமையை மறுதலித்தமையையும் தேசபக்தன் அம்பலப்படுத்தியுள்ளது. சுயநல அரசியலுக்காக ஜனநாயகத்தின் உன்னத வாயிலை, மேட்டுக்குடி இந்தியர் முடக்க முனைந்துள்ளமையை அவர்களின் பிற்போக்கு நிலைப்பாட்டின் குறியீடாகக் கொள்ளலாம்.

நியமன அடிப்படையிலான தெரிவு மறுதலிக்கப்பட்டுத் தேர்தல் என்ற முடிவுக்கு வந்ததன் பின்னர், மேற்படி சூழ்ச்சிக்காரர்கள் வேறு பல தந்திரோபாயங்களை மேற்கொண்டுள்ளனர். அவற்றுள் பிரதானமானவையாக இரண்டினைக் குறிப்பிடலாம். முதலாவது, இந்தியர் யார் என்ற வரையறை. இரண்டாவது, வாக்காளர்களைப் பதிவு செய்யும்போது திட்டமிட்டுப் பலருக்கு வாக்குரிமையை இல்லாமற் செய்தது.

இந்தியருக்கெனப் பிரதிநிதித்துவமும் அப்பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்குரிமையும் வழங்கியதும் ‘இலங்கையில் இந்தியர் என்போர் யார்’ என்ற வரையறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்போது, இந்தியாவில் பிறந்து, இலங்கையில் வாழும் இந்தியர்களையே இந்தியர் என்று வரையறுத்துள்ளார்கள். இந்நிலையால் இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியர், இந்தியர் என்ற வகைப்பாட்டினுள் உள்ளடக்கப்படவில்லை. 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் எவ்வாறு பெருந்தொகையான இந்தியர் நாடற்றவர்களாக்கப்பட்டார்களோ அதற்கு ஒப்பான வகையில் இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியர், இலங்கையராகவோ இந்தியராகவோ உள்வாங்கப்படாது நிர்க்கதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஐரோப்பியர் யார் என்பதற்குப் பின்பற்றப்படும் நெறிமுறைக்கு மாறாக ஒரு தொகுதி இந்தியரை, இந்தியர் அல்ல என வெளியொதுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இவ்வரையறையைக் கண்டித்துள்ள நடேசய்யர், “இலங்கைத் தமிழரின் அனுதாபம் இவர்களுக்கில்லை. சிங்களவர்களுக்கும் அனுதாபம் இல்லை. பிற இந்தியர்களுடன் ஊடாடிக் கலந்துகொண்டு அரசியல் சுதந்திரம் பெறவும் வழியில்லாமல் கவர்ன்மெண்டார் செய்துவிட்டார்கள்” (தேசபக்தன் – 08.09.1924) என அம்மக்களின் அரசியல் இருப்பற்ற நிலையைத் தேசபக்தனில் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அத்துடன் மேற்படி உரிமை மறுப்பானது, இலங்கையில் வாழ்ந்த சுயநலங்கொண்ட இந்தியர் சிலராலேயே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்ற கருத்தையும் அவர் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்தியன் என்ற பெயருக்கு விபரீத வியாக்கியானத்திற்குக் காரண பூதர் யார் எனக் கூற வேண்டும். இலங்கை கவர்ன்மெண்டார் அதற்குக் காரணம் என்று சொல்ல மாட்டோம். இந்தியர்களில் சிலர் வேறுசில இந்தியர்களை, சட்டசபைக்கு வருவதினின்றும் விலக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சில காலத்திற்கு முன்னர் ஓர் தீர்மானத்தைக் கொழும்பிலிருந்தும், வதுளையினின்றும் செய்து அனுப்பினார்கள். அந்தத் தீர்மானந்தான் இவ் விபரீத நிலைமைக்குக் காரணம் என்போம்” (தேசபக்தன் – 05.09.1924) என்ற குறிப்பு அதனை மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவைவிட கணிசமாகக் குறைந்துள்ளமைத் தேசபக்தனில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான காரணங்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சட்டசபையில் தம் அதிகாரம் இருக்கவேண்டுமென விரும்பிய சிலர், அவர்களின் கட்டளைக்கு இணங்கக் கூடியவர்களையே வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்குத் திட்டமிட்டதாகவும் அதனையொட்டி தத்தம் சாதியினரையும் மதத்தினரையும் வாக்காளர்களாகப் பதிவு செய்ததாகவும் தேசபக்தன் குற்றம்சாட்டியுள்ளது. “சுமார் 30, 000 வாக்காளர்கள் இருக்க வேண்டிய இனத்தவர்களுள் 12, 000 வாக்காளர்கள் தான் இருக்கிறார்கள்” (தேசபக்தன் – 03.09.1924) என்ற அதிர்ச்சியான செய்தியை அது பிரசுரித்துள்ளது. இந்நிலையால் வாக்குரிமை பெற்றோர் இலங்கைவாழ் ஒட்டுமொத்த இந்தியரையும் (61/2 இலட்சம்) கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளைத் தேசபக்தன் அழுத்தமாக முன்வைத்துள்ளது. அத்துடன் வாக்காளர் பதிவில் இடம்பெற்ற சூழ்ச்சியினால் இரு இந்திய உறுப்பினர்களுக்கு அப்பால் மாகாண வாரியான தெரிவில் இந்தியப் பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு இல்லாமலாக்கப்பட்டமையையும் அது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

மலையகத் தமிழரின் மேல்நோக்கிய எழுச்சி மிக மந்தகதியில் இடம்பெற்றமைக்கான சில காரணிகளை மேற்படி கருத்துகளிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம். இந்தச் சுயலாப அரசியலிலிருந்து மலையக அரசியல் கலாசாரம் இன்னும் வெகுவாக மாற்றமடையவில்லை. அத்துடன் தோட்டத் தொழிலாளருக்கான அரசியல் பிரதிநிதித்துவமும் இன்னும் முழுமைபெறவில்லை. இவற்றை நிகழ்கால வரலாற்று யதார்த்தம் ஏந்தி நிற்கின்றன.

இலங்கையில் இந்தியருக்கான அரசியல் பிரதிநிதித்துவ உருவாக்கத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமை அடிப்படையானதாக விளங்கியுள்ளது. அவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு மேற்கொண்ட அழுத்தங்கள் அப்பிரதிநிதித்துவ தோற்றத்துக்குப் பங்களித்துள்ளன. இருந்தபோதிலும் தொடக்க காலத்தில் இந்தியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் எவரும் தோட்டத் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. அவர்கள் நகரங்களில் வாழ்ந்த மேட்டுக்குடி இந்தியரின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டுள்ளதுடன் அரசியல் உரிமை – அரசியல் பங்குபற்றுதல் தோட்டத் தொழிலாளராக விளங்கிய இந்தியரைச் சென்றடையா வண்ணம் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவற்றினை வன்மையாகக் கண்டித்துள்ள தேசபக்தன், இந்தியப் பிரதிநிதித்துவம் என்பது தோட்டத் தொழிலாளர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இந்தியரையும் கருத்தில்கொண்டதாக அமைய வேண்டிய தேவையை வலியுறுத்தி வந்துள்ளது. இதன் நீட்சியாக இந்தியப் பிரதிநிதிகள் தோட்டத் தொழிலாளர் நலனுக்கு எதிரான வகையில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ள தேசபக்தன், அத்தகைய பிரதிநிதிகளின் போலிமையை – சுயநலத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இந்தியப் பிரதிநிதிகளாகச் சட்டநிரூபண சபையில் அங்கம் வகித்த ஐ.எக்ஸ். பெரேரா, சுல்தான் ஆகியோரின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளைச் சிறப்பித்துள்ள அதேவேளை, அவர்களின் தோட்டத் தொழிலாளர் விரோதமான செயற்பாடுகளுக்குத் தேசபக்தன் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வந்துள்ளது. சான்றாக, தேசாதிபதி மனிங் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பிரிவு உபசார நிகழ்வில் இந்தியப் பிரதிநிதி ஐ.எக்ஸ். பெரேரா கலந்துகொண்டு இந்தியப் பிரதிநிதிகள் சார்பில் வாசித்தளித்த பிரிவு உபசார அறிக்கை பற்றிய தேசபக்தன் விமர்சனங்களையும் அவை குறித்த ஐ.எக்ஸ். பெரேராவின் மறுப்புகளுக்கான எதிர்வினைகளையும் சுட்டிக்காட்டலாம்.

மனிங் அவர்களுக்கான பிரிவு உபசாரத்தின்போது ஐ.எக்ஸ். பெரேரா, இந்தியர் சார்பாக வாசித்தளித்த பத்திரத்தில் “கவர்னர் துரையவர்களே! தங்களுடைய ஆக்ஷியில், தங்களது பெருமுயற்சியால் இந்தியத் தொழிலாளரின் நிலைமை எவ்வளவோ செம்மைப்பட்டிருக்கிறது. முன்பு அவர்கட்கிருந்த கஷ்டங்களெல்லாம் அகற்றப்பட்டுப் போயின. அளவில்லாத கஷ்டங்களைத் தொழிலாளிகளனுபவித்த காலம் போய், இப்போது இலங்கைக்கு வரும் கூலிகள் சந்தோஷமாயும் திருப்தியுடனும் ஊக்கத்துடனும் வசிக்குங் காலமாயிருக்கிறது. இது தங்களுடைய மேன்மையான தயாள குணத்தின் பலன்” (தேசபக்தன் – 06.04.11925) என இடம்பெற்றுள்ளமையைத் தொழிலாளர் தளத்தில் நின்று விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ள தேசபக்தன், அதனைக்கொண்டு ஐ.எக்ஸ். பெரேராவின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது. அது தொடர்பில் “எவ்வகையில் தொழிலாளரின் நிலைமை செம்மைப்பட்டுவிட்டது? கால் வயிற்றுக்கும் கஞ்சியின்றி, பனியிலும் மழையிலும் நனைந்து, வெயிலிலுலர்ந்து, காஞ்சக் கருவாடு போல், 10 மணி நேரம் வரை கால்களுங் கைகளுஞ் சோர்ந்து விழும்படி, உழைத்து, 40 சதம் சராசரி ஊதியம் பெற்றுக் காப்பாற்ற ஒருவருமின்றிக் கலங்கியுழலும் நமது இந்தியச் சகோதரத் தொழிலாளரின் மேல் இந்தியத் தலைவர்கள் காட்டும் கருணையிதுவோ? தேசத் தொண்டாற்றும் முறையிதுதானோ? தொழிலாளிகளுக்குக் கொடுக்கப்படும் சம்பளவிகிதம் சிறிதும் காணாதெனக் கிளர்ச்சி செய்ததின் பலனாக அதிகாரவர்க்கத்தாரும்கூடச் சிறிது முயற்சி செய்து, ஊதியத்தைச் சொற்ப அளவு உயர்த்த நினைத்திருக்கும் காலத்தில், இப்போலித் தேசத் தலைவர், ‘தொழிலாளர் திருப்தியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்கின்றனர்’ என மனங்கூசாது எழுதுவித்திருப்பதைக்காண நம் மனம் பதைபதைக்கின்றது” எனத் தேசபக்தன் முன்நிறுத்தியுள்ள வாதங்கள், இந்திய மேட்டுக்குடி அரசியலை அப்பட்டமாகப் போட்டுடைத்துள்ளன.

ஐ.எக்ஸ். பெரேராவை முன்நிறுத்தி இந்திய மேட்டுக்குடி அரசியல் நிலைப்பாடுகள்மீது அறம்சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ள தேசபக்தன், அவருக்கான ஆலோசனையை “ஐயா, ஏழைத் தொழிலாளருக்குப் பரிந்து பேசுகிறோமெனப் பறையடித்துச் சுயநல துரந்தர்களாய்ப் பட்டமும் பணமும் சேகரித்த பெரியோரின் கெதி உமக்கு இன்னும் தெரியாமலா போய்விட்டது? ஈட்டிய பணமும் கட்டிய (ஸர்) பட்டமும் அன்னாருடன் கூடச்சென்றனவோ? அவர்கட்குக் கிடைத்த இலாபமென்ன? ஏழைகட்கு வஞ்சகஞ் செய்த வசையே யன்றோ” எனச் சாதாரண மக்கள் மீதான வாஞ்சையை ஏற்படுத்தும் வகையிலான அறவுரையாக முன்வைத்துள்ளது. அந்த உணர்ச்சிக் கொதிப்பில் அடங்கியுள்ள தொழிலாளர் மீதான பரிவு, தேசபக்தன் முழுதும் வியாபித்திருப்பதைக் காணலாம்.  

தேசபக்தனின் தொழிலாளருக்கான அரசியற் குரல் இலங்கையுடன் மட்டுப்பட்டதாக அமையவில்லை. அதன் அதிர்வுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலித்துள்ளன. தேசபக்தன் கட்டுரைகள் சில தமிழ்நாட்டின் சுதேசமித்திரனில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறே தோட்டத் தொழிலாளர் தொடர்பான சுதேசமித்திரன் கட்டுரைகளைத் தேசபக்தன் மறுபிரசுரம் செய்துள்ளது. மனிங் அவர்களின் பிரிவு உபசார நிகழ்வு தொடர்பில் தேசபக்தனில் வெளிந்த ‘வேஷக்காரரை நம்பாதே’ என்ற குறிப்பு சுதேசமித்திரனில் வெளிவந்ததும் அதற்கான மறுப்பினை ஐ.எக்ஸ். பெரேரா சுதேசமித்திரனுக்கு வழங்கியுள்ளதுடன் இந்து பத்திரிகையிலும் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சுதேசமித்திரனில் வெளிவந்த ஐ.எக்ஸ். பெரேராவின் பதிவைத் தேசபக்தனில் பிரசுரித்துள்ள நடேசய்யர் அதற்கான எதிர்வினையை, ‘சூரிய ஒளியை மறைப்பாருண்டோ’ என்ற தலைப்பில் நிகழ்த்தியுள்ளதுடன் இந்து பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஐ.எக்ஸ். பெரேராவின் கருத்துகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார். இவை இலங்கைத் தோட்டத் தொழிலாளர் தொடர்பில் தேசபக்தன் எழுப்பிய குரல் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் வியாபகம் பெற்றுள்ளமைக்குச் சான்றாகும். தொழிலாளரின் நல்வாழ்வுக்கான இந்தியாவின் அழுத்தங்களை மிகுவிப்பதற்கு அவை உந்துதலை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேசபக்தன் தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு குறித்து மிகுந்த அக்கறை காட்டியுள்ளதை அவதானிக்க முடிகிறது. தோட்டத் தொழிலாளரின் பொருளாதார நிலைமை சான்றுகளுடன் விரிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன் தொழிலாளரின் வேதனம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுக்களுடைய அறிக்கைகள் விமர்சனபூர்வமாக ஆராயப்பட்டு அவற்றின் போதாமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜோன்ஸ் பேட்மென், டர்னர் குழு அறிக்கை, ரெங்கநாதன் அறிக்கை முதலானவற்றைத் தொழிலாளரின் யதார்த்த வாழ்வுடன் இணைத்து மதிப்பிடப்பட்ட பதிவுகள் தேசபக்தனில் இடம்பெற்றுள்ளன.

சம்பள நிர்ணயக் குழுக்களில் தோட்டத் தொழிலாளர் சார்பாக எவரும் இடம்பெறவில்லை, அக்குழுவினர் தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாக அமைகின்ற விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை, தொழிலாளரின் உண்மை நிலைக்கு மாறான செய்திகள் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன முதலானவற்றைச் சுட்டிக்காட்டி அவ்வறிக்கைகள் பிற்போக்கானவை என்பதைத் தேசபக்தன் வலுவாக முன்நிறுத்தியுள்ளது. அதேவேளை, அந்த அறிக்கைகளை நியாயப்படுத்தக்கூடிய வகையில் செயற்பட்ட இந்திய முகவரின் தோட்டவுடைமையாளர் சார்பையும் அது அம்பலப்படுத்தியுள்ளது.

தேசபக்தன் வெளிவந்த காலம் முழுதும் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான எல்லா நகர்வுகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி வந்துள்ளது. தோட்டத் தொழிலாளருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அச்சமின்றிக் கண்டித்துள்ளதுடன் அத்தகையோர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொழிலாளர்களை எவ்விதம் பாதிக்கின்றன என்பதையும் அது விரிவாக எடுத்துரைத்துள்ளது; பத்திரிகை செய்திகள், சிறப்புக் குழுக்களின் அறிக்கைகள், தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் முதலானவற்றில் தோட்டத் தொழிலாளர் தொடர்பில் இடம்பெறும் செய்திகளை விரிவாக மதிப்பிட்டு, அவற்றின் பிற்போக்கு அம்சங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, மார்க்கஸ் பெர்ணாண்டோ தன்னுடைய உரையொன்றில் தோட்டத் தொழிலாளரின் வரவு – செலவுகளைக் குறிப்பிட்டு, தோட்டத் தொழிலாளி ஒருவர் வருடமொன்றுக்கு 24 ரூபாய் சேமித்துவிடலாம் எனக் கணித்துள்ளமையை ‘இவர் அறிவரோ’ என்ற தேசபக்தன் ஆசிரியத் தலையங்கம் விரிவாக விவாதித்துள்ளது. அக்குறிப்பு மார்க்கஸ் பெர்ணாண்டோவின் உரை ஆய்வியல் அடிப்படைகளுக்கு மாறாக எடுகோள்களை முன்நிறுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது என அவ்வுரையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர் தொடர்பான சட்ட ஆக்கங்கள், சட்ட மன்ற வாதங்கள் முதலானவற்றைத் தொழிலாளர்மயப்படுத்தலையும் அவற்றின் போதாமைகளைக் கேள்விக்குட்படுத்தலையும் தேசபக்தன் அக்கறையுடன் முன்னெடுத்து வந்துள்ளது. சான்றாக, துண்டுமுறை நீக்கப்பட்ட சட்டம் பற்றிய பதிவுகளைக் குறிப்பிடலாம். துண்டு முறையினால் தொழிலாளர் அடைந்த துயர், துண்டுமுறை நீக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணி, துண்டுமுறை நீக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களின் கடன் நிலைமை, துண்டுமுறை நீக்கத்தால் கங்காணிகள் அடைந்த இழப்பு முதலான பல விடயங்களில் தேசபக்தன் அக்கறை செலுத்தியுள்ளது.

தொழிலாளர் நலனுடன் தொடர்புடைய சட்டங்களை மக்கள் மயப்படுத்துவதிலும் தேசபக்தன் பொறுப்புணர்வுடன் செயலாற்றியுள்ளது. ஆங்கில மொழியில் உருவாக்கப்படுகின்ற சட்டங்களும் அவை பற்றிய வியாக்கியானங்களும் சாதாரண தொழிலாளர்களுக்கு அந்நியப்பட்டவைகளாக விளங்கியுள்ளன. அந்த இடைவெளியை நீக்க முனைந்த தேசபக்தன் தொழிலாளருடன் தொடர்புடைய சட்டங்களை எளிய மொழியில் மக்களிடம் கொண்டுசேர்க்க முனைந்துள்ளது. அத்தோடு சர்வதேச ரீதியாக நிகழ்ந்தேறி வருகின்ற தொழிலாளர் எழுச்சியைத் தேசபக்தன் இலங்கைத் தோட்டங்களுக்குள் அறிமுகப்படுத்தி வைத்துள்ளதுடன் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் அமைப்பாக வேண்டிய தேவையையும் எடுத்துரைத்துள்ளது. அது தொடர்பில் தேசபக்தன் கொண்டிருந்த தொடர் இயக்கமே பின்னர் 1931 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளருக்கான முதலாவது தொழிற்சங்கமொன்று உதயமாவதற்கான அடிப்படைகளை இட்டன எனலாம்.

தோட்டத் தொழிலாளருக்கான அரசியற் குரலாக ஒலித்தது மட்டுமன்றி அம்மக்களை அரசியல் மயப்படுத்தும் செயற்பாட்டையும் அவர்களிடையே சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பும் முயற்சியையும் தேசபக்தன் மேற்கொண்டுள்ளது. அவை யாவற்றின் தாக்கங்களாலே நடேசய்யர் என்ற பத்திரிகையாளர் இந்தியர் சார்பான பிரதிநிதியாகச் சட்டநிரூபண சபைக்குத் தெரிவாக முடிந்துள்ளது. அவரின் சட்டமன்ற பிரவேசத்துடனேயே தோட்டத் தொழிலாளரின் உண்மையான அரசியல் பிரதிநிதித்துவம் ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் தோட்டத் தொழிலாளர்சார் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெற்றிகரமாகச் சாத்தியமாக்கியதில் தேசபக்தனின் பங்கும் பணியும் முதன்மையானவையாக விளங்கியுள்ளன.

தேசபக்தன் பத்திரிகைக்கு முன் இலங்கைவாழ் இந்தியரை மையப்படுத்தி ஜனமித்திரன், ஆதிதிராவிடன், தேசநேசன் முதலான பல தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துள்ள போதிலும் அப்பத்திரிகைகள் எவையும் தோட்டத் தொழிலாளரை முதன்மைப்படுத்தியவையாக, அவர்களின் உரிமைகளுக்கான குரலை அழுத்தமாக முன்வைப்பவையாக அமையவில்லை. நடேசய்யர் முதலில் பணியாற்றிய தேசநேசன் பத்திரிகையே தோட்டத் தொழிலாளருக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. கங்காணிமாருக்கு எதிராகத் தொழிலாளரால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களைத் தேசநேசனில் பிரசுரித்தமையையே அதன் உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை என நடேசய்யர் பதிவு செய்துள்ளார். இந்தப் பின்னணியில் பார்க்கின்றபோது தோட்டத் தொழிலாளருக்கு முன்னுரிமை கொடுத்த முதல் பத்திரிகையாகத் தேசபக்தனே விளங்குகிறது. அப்பத்திரிகையே அம்மக்களுக்கான முதல் அரசியற் குரலாகவும் ஒலித்துள்ளது.

தேசபக்தன் வெளிவந்து நூறு ஆண்டுகளாகின்ற இக்காலம் வரை அரசியற் தளத்தில் தொழிலாளரின் குரலாய்த் தேசபக்தன் சாதித்த அளவுக்கு வேறு எந்தப் பத்திரிகைகளும் வீரியமான அறுவடையைப் பெறவில்லை; அதன் உச்சத்தை அடையவில்லை. அதேபோல நடேசய்யருக்கு இணையான வகையில் தொழிலாளர் குரலாக ஒலித்த ஆற்றல்மிக்க பத்திரிகையாளர் என வேறு எவரையும் அடையாளப்படுத்தவும் முடியவில்லை.


ஒலிவடிவில் கேட்க


About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்