ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்தமாதம் சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் இணையவெளி பாதுகாப்புச் சட்ட மூலமுமே அவையாகும். இரு சட்டமூலங்களுமே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலத்தை மாத்திரம் கடந்த வாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தற்காலிகமான ஏற்பாடு என்று கூறப்பட்டு, ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு, கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நடைமுறையில் இருந்துவரும் கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை, பதிலீடு செய்வதற்காக கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசாங்கம் தவிர்த்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதை அடுத்து அதை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் சட்டமூலம், அரசாங்கம் கூறிய அந்த மீளாய்வுக்கு பின்னரான வடிவமேயாகும். அதை ஆய்வுசெய்த சட்டத்துறையினரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும், புதிய வரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கக்கூடியதாக நிறைவேற்று அதிகாரத்தை மேலும் விரிவாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இது இருக்கிறது என்று கூறிவருகிறார்கள்.
மார்ச் சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லாத மிகவும் விசாலமான வியாக்கியானத்தை அரசாங்கம் கொடுத்திருந்தது. மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கக்கூடிய ஜனநாயக போராட்டங்களையும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கப் போராட்டங்களையும் கூட பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற வீச்செல்லைக்குள் கொண்டுவரக்கூடியதாக அந்த வரைவிலக்கணம் அமைந்திருந்தது. அதில் பெரிதாக எந்த மாற்றமும் தற்போதைய வரைவில் செய்யப்படவில்லை.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மார்ச் மாதத்தில் தங்களால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை அரசாங்கம் கருத்தில் எடுத்து புதிய சட்டமூலத்தை வரைந்ததாக தெரியவில்லை என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குற்றச்சாட்டாக இருக்கிறது. மீண்டும் கடுமையான விமர்சனங்கள் வெளிக்கிளம்பியதை அடுத்தே புதிய சட்டமூலத்தை கடந்தவாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தவிர்த்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் அது மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா என்பது முக்கியமான கேள்வி. அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின்போதே அதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைப் போன்றே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் பொதுவெளியில் பெரும் விவாதத்தை மூளவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக்கொண்டே இந்த சட்டமூலத்தைக் கொண்டுவந்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அது இணையத்தை அரசியற் தொடர்பாடல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பாரதூரமான ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்று எதிரணி அரசியல் கட்சிகளும் மனிதஉரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் எச்சரிக்கை செய்கின்றன.
இந்தச் சட்டமூலம் ஊடக சுதந்திரத்தை பெரும் ஆபத்துக்குள்ளாக்கும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகத்துறை அமைப்புகள் பலவும் கவலை வெளியிட்டிருக்கின்றன. சட்டமூலத்தை கணிசமான அளவுக்கு மாற்றியமைக்க வேண்டும் அல்லது முற்றாக கைவிட வேண்டும் என்ற வலுவான கோரிக்கைகளுக்கு மத்தியில் அரசாங்கம் அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது.
இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலத்தின் அரசியலமைப்புப் பொருத்தப்பாடு குறித்து கேள்வியெழுப்பி அரசியல் கட்சிகளும் ஊடகவியலாளர்களும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.
இணையத்தள உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் பணிக்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமிப்பதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டை இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கிறது.
எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் இணையவழிப் பிரசுரங்களையும் தடைசெய்வதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்கும் இவ் ஆணைக்குழு, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையக் குற்றச்செயல்களுக்கு சிறைத்தண்டனையையும் கூட சிபாரிசு செய்யமுடியும்.
அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை சிபாரிசு செய்வதற்கு வகைசெய்யும் ஏற்பாட்டுக்கு புறம்பாக, இணையவெளி பாதுகாப்பு விவகாரத்தில் ஆணைக்குழுவின் முழு உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது. இதனால் உத்தேச ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து பலமான சந்தேகம் கிளம்புகிறது.
ஆணைக்குழுவின் தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிக்கும் ஏற்பாட்டைச் சுட்டிக்காட்டும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் நியமிக்கும் ஒரு குழுவினரின் ஊடாக சமூக ஊடகங்களில் மக்கள் வெளியிடும் கருத்துக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டுகிறார்.
இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்பதுடன் இலங்கையில் ஏற்கனவே சுருங்கிக் கொண்டிருக்கும் சிவில் பரப்பு மேலும் குறுகிவிடும் என்று சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு கூறியிருக்கிறது. தகவலைப் பெறுவதற்கும் கருத்தை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதை இச் சட்டமூலம் கடுமையாக மலினப்படுத்தும் என்றும் ஜூரர்கள் ஆணைக்குழு கூறியிருக்கிறது.
இரு சட்டமூலங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகமும் கடந்த வாரம் கடுமையான விசனம் தெரிவித்திருக்கிறது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பொறுத்தவரை, மரணதண்டனை நீக்கம் உட்பட சில நேர்மறையான மாற்றங்கள் வரைவில் செய்யப்பட்டிருக்கின்ற. அதேவேளை இன்னமும் கூட பல ஏற்பாடுகளின் வீச்செல்லை மற்றும் பாரபட்சமான தாக்கங்கள் குறித்து பெரும் கவலை இருக்கிறது என்று கூறியிருக்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக பேச்சாளர் ரவீனா ஷம்டசானி, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் அவசியமான நிபந்தனைகளுக்கு இசைவானவையாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
” பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மீளாய்வுக்கு பின்னரும் கூட பயங்கரவாதத்துக்கு மிகவும் விசாலமான வியாக்கியானத்தை கொடுப்பதாகவே இருக்கிறது என்பதுடன் போதுமான நீதித்துறை மேற்பார்வையின்றி பொலிசாரும் இராணுவத்தினரும் ஆட்களை தடுத்துநிறுத்தி விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கும் அவர்களுக்கு பரந்தளவில் அதிகாரங்களை கொடுக்கிறது.”
” ஊரடங்கை பிறப்பித்தல், தடை வலயங்களை பிரகடனம் செய்தல் போன்ற வேறு பல விடயங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. அத்துமீறல்களை தடுப்பதற்கு போதுமான கண்காணிப்பு ஏற்பாடுகள் இன்றி நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களின் வீச்செல்லையும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.”
” இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் பொதுமக்களினால் செய்யப்படும் பதிவுகள் உட்பட இணையவழி தொடர்பாடல்களை கடுமையாக கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். அதிகாரிகள் தங்களுக்கு இணக்கமில்லாத கருத்து வெளிப்பாடுகளை ‘பொய்யான அல்லது தவறான வாசகம்’ (False Statements ) என்று வகைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு சட்டமூலம் அவர்களுக்கு தங்குதடையின்றிய தற்துணிபு அதிகாரத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.”
” சட்டமூலத்தின் பல பிரிவுகள் இணையவெளி குற்றங்கள் தொடர்பில் தெளிவற்றமுறையில் வரையறுக்கப்பட்ட பதங்களையும் வரைவிலக்கணத்தையும் கொண்டவையாக இருப்பதால் அநியாயமான முறையிலும் விருப்பு வெறுப்புகள் சார்ந்தும் வியாக்கியானம் செய்வதற்கு கணிசமான வாய்ப்பைக் கொடுக்கின்றன. அதனால் ஏறத்தாழ நியாயபூர்வமான கருத்து வெளிப்பாடுகள் சகலதும் குற்றங்களாக கருதப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மீது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கும்.”
” இந்த இரு சட்டமூலங்களும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு இருக்கும் சர்வதேச கடப்பாட்டுக்கு இசைவான முறையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கு கணிசமான மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் சமூகத்துடனும் ஐக்கிய நாடுகள் சுயாதீன நிபுணர்களுடனும் பயனுறுதியுடைய கலந்தாலோசனைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுத்திக் கேட்டுக்கொள்கிறது.” என்று ஷம்டசானி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தையும் கைவிடவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்துறை சமூகம் உட்பட இந்த விவகாரங்களில் பங்கும் ஈடுபாடும் கொண்ட தரப்புகளுடன் கலந்தாலோசனைகளை நடத்தாமல் சட்டமூலங்களை அரசாங்கம் கொண்டு வந்திருப்பதை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இணையவெளி பாதுகாப்பு சட்டமூலத்தினால் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு வரக்கூடிய ஆபத்தை சுட்டிக்காட்டியிருப்பதுடன் அரசாங்கத்தின் பரிசீலனைக்கு ஏழு திருத்தங்களையும் முன்வைத்திரு்கிறது.
பல்வேறு விமர்சனங்களில் இருந்தும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பாதுகாப்பதே இணையவெளி சட்டமூலத்தின் நோக்கம் என்று கூறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதுதான் அரசாங்கத்தின் உண்மையான நோக்கமாக இருந்தால் அதற்கு புதிய சட்டங்கள் தேவையில்லை. இணையவெளிக் குற்றச் செயல்களைக் கையாளுவதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க, முன்னர் பிரதமராக இருந்த காலகட்டங்களில் குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதுடன் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தையும் கொண்டுவந்தார். ஆனால் இப்போது ஜனாதிபதியாக வந்ததும் அதே தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டத்தின் மூலமாக இதுவரையில் பெறக்கூடியதாக இருந்த பயன்களை பயனற்றவையாக்கி விடக்கூடிய சட்டங்களைக் கொண்டுவருவதில் தீவிர முனைப்பைக் காட்டுகிறார். குற்றவியல் அவதூறுச் சட்டத்தை பின்கதவு வழியாகக் கொண்டுவரும் ஒரு முயற்சியே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் என்று சண்டே ரைம்ஸ், அதன் ஆசிரியத் தலையங்கத்தில் ஜனாதிபதியைச் சாடியிருந்தது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை கொண்டுவரும் விவகாரத்தில் நடந்துகொண்டதைப் போன்றே இணையவெளி பாதுகாப்புச் சட்டமூல விவகாரத்திலும் பொதுவெளியில் விவாதத்துக்கு அல்லது பரந்தளவிலான கலந்தாலோசனைக்கு வாய்ப்பைத் தரவில்லை என்பது அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டாக இருக்கிறது. சட்டங்களை கொண்டுவரும் போது பரந்தளவிலான கருத்தாடலுக்கு வாய்ப்புக்களை இலங்கை அரசாங்கங்கள் வழமையில் கொடுப்பதில்லை.
நான்கு வருடகால பொதுவிவாதத்துக்கு பின்னர் இரு வாரங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இணையவெளி பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியதை அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையின் இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலம் சிங்கப்பூரின் சமூக ஊடகப் பாதுகாப்புச் சட்டத்தை பின்பற்றி வரையப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை அரசாங்கம் கருத்தூன்றிய கவனத்தில் எடுத்து சட்டமூலத்தில் மாற்றங்களைச் செய்ய முன்வருமா?
மீண்டும் மக்கள் கிளர்ச்சி மூளாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு நாடும் மக்களும் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு பயனுறுதியுடைய தீர்வுகளை காண்பதில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் ஒடுக்குமுறை மூலமாக மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு ஜனநாயக விரோதமான சட்டங்களைக் கொண்டுவருவதில் கவனத்தை செலுத்துகிறது.