“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
-திருக்குறள் (664)-
மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம். சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
ஈழத்தில் நாமும் எங்களின் மூதாதையர்களும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். இந்த வறண்ட பூமியையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டு மிகச் சந்தோசமாக வாழ்ந்த நாட்கள் எனது நினைவில் உண்டு. எமது வாழ்க்கையானது ஒவ்வொரு கிராமத்திலும் சிறு சிறு சமூகங்களாக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களைச் சுற்றி இருந்தது. அந்தச் சமுதாயங்களில் பொதுவான வாசிகசாலைகள், கிணறுகள், சிறு விளையாட்டு மைதானங்கள் என்று உடல், உள நலங்களை ஊக்குவிக்கும் பொதுவான வளங்களும் காணப்பட்டன.
எளிமைக்குத் திரும்புதல் என்பது எளிமையான, அலங்காரமற்ற மற்றும் சிக்கலற்ற விஷயங்களில் அழகைக் காணுவதாகும்; குறைந்தபட்ச (Minimalism) நேர்த்தியைத் கொண்டு, தூய்மையான மற்றும் ஆடம்பரமற்றவற்றில் மகிழ்ச்சியைக் கண்டறிவது. இவ்வாறான முறை, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் பயன்படக்கூடியது. அப்படியான எளிமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தொழிற்துறைகளில் வெற்றி காணமுடியும். அதிலும் ஆரம்பத் தொழில் நிறுவனம் ஒன்றைப் பெருக்கி வெற்றிகரமாக உருவாக்க இந்த எளிமை மிகவும் தேவையானது. இதற்கு கூகிள் (Google) நிறுவனத்தை, ஓர் உதாரணமாகக் கூறலாம். அதனைத் தொடங்கியவர்களின் முதலாவது குறிக்கோள் “உலகிலுள்ள தகவல்களை இலகுவாக எப்படி ஒழுங்குபடுத்துவது” என்பது. அதை அவர்கள் அடைய அணுகியமுறை சுவாரசியமானது. ஏனைய நிறுவனங்கள் செய்வது போல் செய்தால் தகவல்களை ஒழுங்குபடுத்த பல கோடி பணம் தேவைப்படும். ஆனால் அவர்கள், சாதாரணக் கணினிகளையும், விலை குறைந்த மின் கருவிகளையும் பயன்படுத்தி தங்களது மென்பொருளின் (Software) திறனை அதிகரித்து அவர்களது குறிக்கோளை அடைந்தார்கள்.
ஓர் நிறுவனத்தையோ, பொருளைளோ உருவாக்குவதற்கு, ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலமே சிறந்த வெற்றியை அடைய முடியும். அதைப் பற்றி சில விடயங்களை இங்கே கூறலாமென்று இருக்கிறேன்.
வியாபாரத்தை விரிவாக்குதல் (Scalability): வியாபாரம் செய்வதென்பது ஒரே வேலையை அல்லது ஒரே பொருளை அதிகளவில் விற்பதன் மூலம், வேலைகளின் பல்வேறு தன்மையைக் குறைத்து, சில விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வியாபாரத்தின் இலாபத்தைக் கூட்டுவதாகும். ஒரு பொருளை உருவாக்குவது இலகு. ஆனால் அதனை ஆயிரக்கணக்காக உருவாக்கும் போது, தவறுகள் நேரும் சந்தர்ப்பம் அதிகம். பொருட்களை உருவாக்கும் போதே அதன் சிக்கல் தன்மையைக் குறைப்பதன் மூலம் அந்தத் தவறுகளை தவிர்க்க முடியும்.

நான் உருவாக்கிய இரண்டாவது நிறுவனத்தில் வடிவமைத்த பொருட்களை பல சிறிய பாகங்களாகப் பிரிக்கக் கூடியதாகச் செய்திருந்தோம். அவற்றைப் பாவிக்கும் போது பழுதடைந்தால், திருத்துவதற்காக அப்படியான ஒரு ஏற்பாட்டைச் செய்தோம். ஒவ்வொரு பாகங்களையும் இணைக்க பல இணைப்பிகள் (connectors) இருந்தன. பல இணைப்பிகள் இருந்ததால் அவற்றில் சிலது பழுதாகும் சந்தர்ப்பம் (Probability) அதிகமாக இருந்தது. அதனை வடிவமைக்கும் போதே, அந்தப் பாகத்தை விற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தினர் எமக்கு இது தொடர்பில் எச்சரித்திருந்தனர். அதனைக் கவனத்தில் கொள்ளாது, அதிக இணைப்பிகளுடன் பொருட்களைச் செய்தமை எமது பொருட்கள் பழுதாகும் வீதத்தை அதிகரித்து, வாடிக்கையாளர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இது எமக்கு ஓர் பாடத்தைப் புகட்டியது. அதற்கு அடுத்த உற்பத்திகளை இணைப்பிகள் குறைத்து எளிமையாகச் செய்ததன் மூலம், பல கோடி ரூபா வருமானம் ஈட்ட முடிந்தது. எப்போதும் குறைவான பாகங்களைக் கொண்டு பொருட்களை உருவாக்குவதன் மூலம், பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்வது இலகு என்பதை இதிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
கணித்துச் செய்தல் (Predictable) : பொருட்களை உருவாக்கும் போது அதனை வெற்றிகரமாகச் சந்தைக்குக் கொண்டுவந்து பெரியளவில் விற்பதன் மூலம் நிறுவனங்கள் வெற்றி பெற முடியும். வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையைப் பெறுவது அதற்கு முக்கியமானது. அப்படியான நம்பிக்கையைப் பெறுவதற்கு அவர்களுக்குக் கொடுத்த உறுதியின்படி, பொருட்களை உருவாக்கி அதனை உரிய நேரத்திற்கு வழங்க வேண்டும். அதற்கும் எளிமை மிக உதவியாக இருக்கும்.

ஓர் பொருளைத் திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி உருவாக்கி, அதை உரிய நேரத்திற்குச் செய்வதற்கு, பொருளின் வரைபை எளிமையாக்குவது முக்கிய விடயமாகும். உதாரணமாக, மென்பொருள் (Software) உருவாக்கும் போது குறைந்த எண்ணிக்கையான ‘code’ வரிகளில் தேவையான வேலையை முடித்தல் அவசியம். வன்பொருள் (Hardware) உருவாக்கும் போது மிகக் குறைந்த கூறுகளைப் பயன்படுத்தி ஓர் பொருளை உருவாக்குவது முக்கியம். அதை “The code easiest to maintain is the code that was never written” (என்றும் எழுதப்படாத குறியீடு தான் பராமரிக்க இலகுவான குறியீடு) என்று கூறுவார்கள். எனது நண்பர் அமேசன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர்கள் குறியீட்டு மதிப்பாய்வு (Code Review) செய்யும் போது, இந்தக் குறியீடு தேவைதானா என்பதையே முதலில் பரிசோதிக்கிறார்கள். அதன் மூலம் பல எதிர்காலப் புற விளைவுகளைத் தவிர்க்கலாம்.
அடிப்படைக்கட்டுமானத் தொகுதிகள் (Basic Building Blocks) : அடிப்படை உறுதியாக இருந்தால் எப்படியான சிக்கலான பொருட்களையும் உருவாக்குவது சுலபமாக இருக்கும். அடிப்படையான விடயங்களைச் சிக்கலாகத் தொடங்கினால் அவைகளுக்கு மேலே கட்டும் கோபுரங்கள் உறுதியாக இருக்காது. அவை சிறிய காற்றுக்கே ஆடத் தொடங்கிவிடும்.

நான் முதலாவது நிறுவனம் நடாத்தும் போது, பெரிய இலக்கங்கள் கொண்ட எண்களை கணினியில் (Multiplication using Computer Arithmetic) திறமையாகவும் துரிதமாகவும் பெருக்கல் செய்வதென்பது ஒரு அடிப்படைத் தொழில்நுட்பமாகக் காணப்பட்டது. அதை, சிக்கலான நுணுக்கங்களைக் கொண்டு ஏராளமான பாகங்களைப் பாவித்துச் செய்வது ஒரு வழி. மற்றையது, இலகுவான பாகங்களைக் கொண்டு சமாந்தர நிலைகளைப் பயன்படுத்தி சிறிது எளிமையாகச் செய்வது. நான் சமாந்தர வழியைப் பாவித்ததன் மூலம் சிக்கல் இல்லாது வேலையை முடிக்கக் கூடியதாக இருந்தது. அடிப்படைக் கட்டுமானத் தொகுதிகளை அறிந்து திறமையாகப் பயன்படுத்தி அதனைச் செய்ததன் மூலம் பொருட்களை உரிய நேரத்திற்கு பிழைகளின்றி உருவாக்க முடிந்தது.
அடிப்படை அறிவு (Foundational Knowledge) : அடிப்படை அறிவு உறுதியாக இருந்தால், அதைக் கொண்டு பொருட்களைச் செய்வதும், செய்யும் பொருட்களில் பிழைகள் வரும் போது துரிதமாக மூல காரணங்களைக் கண்டுபிடித்துச் சரி செய்வதும் இலகுவானதாக அமையும். சிக்கலான மின் பொருட்களை உருவாக்குவதற்கு மின்னியல் படித்திருக்க வேண்டும்; வெப்பம் (Heat), இயந்திரவியல் (Mechanics), ஒலியியல் (Acoustic/Sound) போன்று பல விடயங்களையும் அறிந்திருக்க வேண்டும். இவற்றை அறிவதன் மூலம் ஓர் பிரச்சினைக்கு பல கோணங்களிலும் தீர்வு கண்டுபிடிக்க முடியும். அது மட்டுமன்றி வாடிக்கையாளர் அப் பொருட்களைப் பயன்படுத்தும் சூழ்நிலைகளால் வரும் பிரச்சினைகளை அவர்களோடு சேர்ந்து தீர்க்கவும் முடியும்.
எமது இரண்டாவது நிறுவனத்தை நடாத்தும்போது, ஐக்கிய அமெரிக்காவின் ஓர் பெரிய நிறுவனமான EMC என்ற நிறுவனத்தோடு சேர்ந்து, ஓர் நுணுக்கமான தகவல் சேமிப்புப் பொருள் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அது மிகப் பெரிய நிறுவனமென்றாலும், நாங்கள் காட்டிய அடிப்படை அறிவைக் கண்டு பாராட்டிய அவர்களது மூத்த விஞ்ஞானி, எங்களுடன் சேர்ந்து பொருளை வரையறுத்து, அவர்களது தேவைக்கேற்ப உருவாக்க உதவினார்; எந்த எந்த அம்சங்கள் முக்கியமானவையென்று கூறி, செய்யும் பொருளுக்குத் தேவையில்லாதவற்றையும், சிக்கலானவற்றையும் நீக்கி, பொருளை எளிமையாக உருவாக்க அறிவுரை செய்தார்.
எளிமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பின்வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். எளிமையான முறையில் பொருட்களையோ நிறுவனங்களையோ உருவாக்குவதன் மூலம் கடினமும் சிக்கலும் இல்லாத பாதையைத் தேர்ந்தெடுத்து எமது இலக்கை அடையலாம். பெரிய அளவில் பொருட்களை உருவாக்கும் போது அதற்கான வழிமுறைகளை எமது அணியினருக்கு வரைந்து கொடுப்பதையும் அது இலகுவாக்கும். அதன் விளைவாக பலரும் துரிதமாகச் செயற்படுவதற்குப் பங்களிக்க முடியும். எமது மூதாதையினர் எளிமையாக வாழ்ந்து எமது சமூகத்தை தற்போதைய நிலமைக்கு கொண்டு சென்றது போல், நாமும் எளிமையைப் பயன்படுத்தி, எதிர்காலச் சந்ததிகளை முன்னேற்றுவோமாக!
தொடரும்.