பதுளை பொதுநூலகத்தின் முன்பக்கம் ஒரு உயரமான தூண் நடப்பட்டுள்ளது. இது நான்கு பக்கங்களும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். இதன் மேல்பகுதியில் சிறிய கூரை போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தூண் கல்வெட்டு ’சொரபொர வெவ’ எனும் குளக்கட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டு, பதுளை கச்சேரிக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது பதுளை பொதுநூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையின் வடக்குப் பக்கமாக 4 கி. மீ தூரத்தில் சொரபொர வெவ எனும் குளம் அமைந்துள்ளது. இது பொ. ஆ. மு. 140 ஆம் ஆண்டளவில் துட்டகைமுனு மன்னனின் ஆட்சிக்காலத்தில் அவனது தம்பியான சத்தாதீசனால் கட்டப்பட்டதாக குறிப்புகள் கூறுகின்றன. மேலும் துட்டகைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனான புலத்தா என்பவனால் இந்தக்குளம் கட்டப்பட்டதாகவும் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது.
பதுளைப் பிரதேசத்தின் உப -கவர்னராக பணிபுரிந்த ஜோன் பெல்லி என்பவர் 1857 ஆம் ஆண்டு சொரபொர வெவ குளத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட இந்தத் தூணைக் கண்டார். 11 அடி 8 அங்குல உயரமும், 9 x 10.5 அங்குல சதுர வடிவமும் கொண்ட இந்தத்தூணில் 8 அடி 5 அங்குலம் உயரம் வரை நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் சொரபொர வெவ குளத்தை புனரமைப்பு செய்தபோது இந்தக்கல்வெட்டு பதுளைக் கச்சேரிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 50 வருடங்களுக்கு மேலாக இந்தக்கல்வெட்டு பற்றிய விபரங்கள் எதுவும் அறியப்படவில்லை. 1920 ஆம் ஆண்டு எச். டபிள்யூ. கொட்ரிங்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி பதுளைப் பிரதேசத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றியபோது இந்தக்கல்வெட்டு படியெடுக்கப்பட்டு அதன் விபரங்கள் வாசிக்கப்பட்டன. இந்தத்தூணில் மொத்தமாக 203 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. முதலாம் பக்கத்தில் 47 வரிகளிலும், 2 ஆம் மற்றும் 3 ஆம் பக்கங்களில் தலா 49 வரிகளிலும், 4 ஆவது பக்கம் 58 வரிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
பொ. ஆ. 946-954 வரையான காலப்பகுதியில் 4 ஆம் உதயன் எனும் மன்னன் காலத்தில் இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தமன்னன் மகியங்கனை விகாரைக்கு வந்திருந்த சமயம் சொரபொர பிரதேசத்தில் உள்ள ஹோப்பிட்டிகம எனும் ஊர் மக்கள் அரசனிடம் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தனர். அவ்வூரை நிர்வகிக்கும் அரச பிரதிநிதிகள் தங்களிடம் அதிகமான வரியை வசூலிப்பதாகவும், கைது மற்றும் கொலை போன்றவைகள் நடப்பதாகவும் முறைப்பாடு செய்ததையிட்டு, அரசன் அதை சரிசெய்ய இட்ட கட்டளை இந்தக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தக்கல்வெட்டில் நான்காவது பக்கத்தில் (Side D) 13, 14, 15, 16 ஆம் வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
“நவா தனு இசா தெமழன் .. தன் தரு அவா நொதெனு..”
இதற்கு, மாவட்டத் தலைமைப் பொறுப்பு தமிழர்களுக்கு வழங்கப்படக் கூடாது எனவும், தமிழர்களுக்கு தங்கள் புதல்விகளை மணம் முடித்துக் கொடுக்கக் கூடாது எனவும் பொருள் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் மூலம் சில விடயங்களைப் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அதாவது இந்தக்காலகட்டத்தில் (10ஆம் நூற்றாண்டு) தமிழர்கள் இலங்கையின் பல மாவட்டங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் படைகள் பற்றி குறிப்பிடும் ஜேதவனாராம கல்வெட்டு
பொ. ஆ. 1026-1042 காலப்பகுதியில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த 5 ஆம் மகிந்தன் காலத்தில் இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள ஜெதவனாராம விகாரை வளாகத்தில் காணப்பட்ட ஒரு கற்பலகையில் இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது முதன்முதலாக 1890 ஆம் ஆண்டு தொல்லியல் ஆணையாளர் எச். சி. பி. பெல் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. 6 அடி 3 அங்குல நீளமும், 3 அடி 11 அங்குல அகலமும் கொண்ட கற்பலகையில் கோடிடப்பட்ட 55 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. கல்வெட்டின் 5 ஆவது வரியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“லக் அம்புரென் தெமழ் ருபு அந்துர் லோ எக் ஹெலி கர.. ..”
இதற்கு “உதய சூரியன் வானத்தில் இருந்து இருளை அகற்றுவது போல இலங்கையில் இருந்து மன்னன் தமிழர் படைகளை (திராவிட எதிரிகளை) விரட்டியடித்தான்….” எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னான 4ஆம் மகிந்தன் இந்தக் காலப்பகுதியில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மன்னனாக விளங்கினான். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும், மலாயாவிலும் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீ விஜய பேரரசுடன் நட்புறவு கொண்டிருந்தான். இந்நட்பின் காரணமாக அந்த இராச்சியத்தின் இளவரசியை மணம் புரிந்தான்.
இக்காலகட்டத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டு படையெடுப்புகளை முறியடித்தான். ஒன்று இராஷ்டிரகூட படையெடுப்பு. அடுத்தது சோழர் படையெடுப்பு. இந்த இரண்டு படைகளையும் ஸ்ரீ விஜய படைகளின் துணைகொண்டு விரட்டியடித்தான்.
இந்த சம்பவத்தின் பின்னரே இந்தக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சோழரை வெற்றி கொண்ட நிகழ்வையே தமிழர்களை வெற்றி கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நீர்ப்பாசனம் பற்றிக் கூறும் மிகிந்தலைக் கல்வெட்டு
அனுராதபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் 12 கி.மீ தொலைவில் மிகிந்தலை மலைப்பகுதி அமைந்துள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 1000 அடி வரை உயரமான மலைப்பாறைத் தொகுதியில் கற்குகைகளும், தூபிகள் மற்றும் வழிபாட்டிடங்களின் சிதைவுகளும் பரந்த அளவில் இங்கு காணப்படுகின்றன. பெளத்தம் மற்றும் இந்து சமயத்தின் மிகத் தொன்மையான தொல்பொருள் சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன. இலங்கையில் மிகவும் தொன்மையான பிள்ளையார் புடைப்புச் சிற்பம் ஒன்று மிகிந்தலையில் உள்ள கந்தக்க தூபியின் வாகல்கடவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகிந்தலை மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்லும் போது இடையில் அன்னதான மண்டபத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. இவற்றின் அருகில் உள்ள இடிபாடுகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கற்பலகைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இந்தக்கல்வெட்டுக்கள் இரண்டும் பொ. ஆ. 956-972 காலப்பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் மகிந்தனால் எழுதப்பட்டுள்ளது. இரண்டு கல்வெட்டுகளிலும் தலா 58 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரியிலும் 3 அடி 7 அங்குல நீளத்தில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்தக்கல்வெட்டுக்கள் ஆரம்பத்தில் எட்வர்ட் முல்லர் மற்றும் குணசேகர முதலியார் ஆகியோரால் பிரதி செய்யப்பட்டு தொல்லியல் ஆணையாளர் எச். சி. பி. பெல் அவர்களால் நன்கு பரிசீலிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டில், இங்குள்ள விகாரைகளைப் பராமரிப்பது தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் இங்குள்ள குளத்தில் இருந்து பெறப்படும் நீர், விகாரைகளுக்குப் பயன்படுத்தப்படும் விதிமுறைகள் போன்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் வலது பக்கம் உள்ள கற்பலகையில் (Slab-B) 56 ஆவது வரியில் தமிழர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“கன வெவ திய வன் தாக் தன்ஹி பெர தெமழ் கல பெர சிரித் திய பெதுன் மே வெகரத் மே கத்த யுத்து இசா மே வெஹரஹி..”
இதன் பொருள், கனாவெவ எனும் குளத்திலிருந்து வழங்கப்படும் நீர், அத் வெஹெர எனும் விகாரைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், பண்டைய பழக்க வழக்கங்களின்படி, முன்பு தமிழர் ஆட்சி செய்த காலத்தில் இது நடைமுறையில் இருந்தது எனவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ள விபரங்கள் மூலம் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. அதாவது முன்பு தமிழர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் கட்டிய கோயில்களை மட்டும் பராமரிப்பதோடு நின்றுவிடாமல் மிகிந்தலையில் உள்ள விகாரைகளுக்கும் குளத்திலிருந்து கிடைக்கும் நீரை உரிய முறையில் பங்கிட்டு அவற்றையும் சரியான முறையில் பராமரிக்க உதவியுள்ளார்கள் எனத் தெரிகிறது.
தொடரும்.