மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
19 நிமிட வாசிப்பு

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 2

April 21, 2025 | Ezhuna

இலங்கையின் வறண்ட மண்டலமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீர்வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்கான கொள்கைகள் உருவாக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உதவுகின்றது. மேலும், நிலையான நீர்வள மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு உதவியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாகவும் அமையும். இதன் மூலம், வறண்ட மண்டலங்களில் உள்ள நீர்வளங்கள் பாதுகாக்கப்படும். “வறண்ட மண்டல நீர்வளங்களின் இருப்பும் பேண்தகு பயன்பாடும்: வடக்கு – கிழக்குப் பிரதேசங்கள், இலங்கை” எனும் இந்தக் கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து ஆற்றுப்படுகைகளின் நீர்வளங்களின் நிலையை ஆராய்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், அவற்றின் திறம்பட்ட பயன்பாட்டை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதைக்கூறும்.

1.2 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்     

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியவை. இந்த மாகாணங்களின் மொத்தப் பரப்பளவு 18,881 சதுர கி.மீ ஆகும்.  ‘இலங்கை பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிவரங்கள் 2018’ அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இப்பகுதிகளின் மக்கள்தொகை 27.89 இலட்சமாக இருந்தது (அட்டவணை 1.5 இல் காணலாம்).

கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் விவசாயம் ஆகியன இந்த இரு மாகாணங்களிலும் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன. இந்த இரு மாகாணங்களின் மொத்த வேலைத் தொழிலாளர்களில் (Work force) 30% இற்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தைச் சார்ந்தே உள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் வேளாண்மை

கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் விவசாயத்துறை ஆகியன, போரிற்குமுன், இரு மாகாணங்களினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50% இற்கும் மேலாக பங்களித்து வந்தன. 1980களில், உற்பத்தி அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள், நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் சுமார் 20% இற்கும் மேலாகப் பங்களித்தன. நாட்டின் நிலப்பரப்பின் மூன்றிலொன்று இந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ளது. இது வறண்ட பகுதியானாலும், நிலத்தடி மற்றும் மேற்பரப்பிலுள்ள நீர்வள ஆதாரங்கள், பலவகை விவசாய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துகின்றன.

மோதலுக்கு முன்னர், நாட்டில் உற்பத்தியாகும் அரிசியில் சுமார் 33%, உலர்ந்த மிளகாயில் 40%, வெங்காயத்தில் 85%, தானியவகைகளில் 30%; வடக்கு – கிழக்கு மாகாணங்களிலிருந்து உற்பத்தியாகின. நாட்டின் மொத்த மாடுகளில் 30% இற்கும் மேல் இம்மாகாணங்களிலிருந்து உற்பத்தியாகியது. மீன்வள உற்பத்தியில் இம்மாகாணங்கள் 55% இற்கும் மேல் பங்களித்தன.

1983 ஆம் ஆண்டில் தொடங்கிய மோதல், இந்தத்துறைகளைக் கடுமையாகப் பாதித்தது. அரசும் தனியாரும் வைத்திருந்த சொத்துகள் சேதமடைந்தன; விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறினர்; முதலீடுகள் குறைந்தன; ஆதரவுச் சேவைகள் சுருங்கின. இதனால் உற்பத்தித்திறன் குறைதல், இழப்புகள் அதிகரித்தல், சொத்துகளின் பராமரிப்பு இல்லாதநிலை, வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமூக அதிருப்தி போன்ற விளைவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் ஏற்பட்ட விவசாய உற்பத்தி இழப்புகள் மற்றும் சொத்துச்சேதங்களின் மொத்த இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்படுகின்றன.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆறுகளின் நீர்பாய்வு பிரதேசங்களில் 348 பாசனக் குளங்கள்/ தடாகங்கள் மற்றும் 41 நீரோட்டத்தைத் திருப்பும் கட்டமைப்புகள் (Anicuts) உள்ளன. இந்தக் குளங்கள் மற்றும் நீர்திருப்பும் அமைப்புகள், ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீரைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டவை. மேலும், இவை வெள்ளப்பெருக்குகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றன. இந்தக் குளங்களில் தேக்கப்பட்ட நீர், மழைக்காலப் பயிர்களுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது; மீதமுள்ள நீர், வறட்சிக்காலப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் குளங்களில் உள்ள நீர், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுகிறது. எதிர்காலத்தில், இந்நீரை விவசாயம் தவிர்ந்த பிற பொருளாதார வளர்ச்சிச் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். மேலும், இந்தக் குளங்களில் நீரைத் தங்கவைப்பதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிக நிலைப்பில் பராமரிக்க முடியும்.

1.2.1. வடக்கு மாகாணம்

2017 நடுப்பகுதியில் மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வட மாகாணத்தின் மக்கள்தொகை 1,120,000 ஆக இருந்தது. அங்கு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 135 மனிதர்கள் என்னும் சனத்தொகை அடர்த்தி இருந்தது. இதேநேரத்தில் தேசிய சராசரி சதுர கிலோமீட்டருக்கு 337 மனிதர்களாக இருந்தது. எனவே, இலங்கையில் மக்கள்தொகை குறைவான மாகாணமாக வட மாகாணம் காணப்படுகிறது.

படம் 1.7 இல் காணப்படுவதுபோல், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நகர மக்கள்தொகை சுமார் 20% ஆக இருக்கிறது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரும்பாலும் கிராமப்புங்களாக உள்ளன.

வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்துறை மிக முக்கியமானதாகும். சுமார் 60% மக்கள் பயிர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 25% இற்கும் மேற்பட்ட தொழிலாளர் குழு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்துறையில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வாழ்கின்றது. போருக்கு முன்பு இந்தத் துறையின் பங்களிப்பு, நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் சுமார் 12% ஆக இருந்தது. இதில் அரிசி 15%, வற்றல்மிளகாய் 30%, சின்ன வெங்காயம் 75% மற்றும் பருப்பு வகைகள் 30% என்ற வீதத்தில் பங்காற்றின.

தற்போது, இந்த மாகாணத்தில் விவசாயத்துறை சீரமைக்கப்படாது; ஒழுங்கற்ற, சந்தை சார்ந்ததல்லாது; உள்ளூர் நுகர்விற்கு மட்டுப்பட்டதாகவே உள்ளது. இதனால் விவசாயம் இலாபமற்ற செயலாக மாறியுள்ளது. உட்பிரதேசங்களில் உள்ள கிராமப்புறம், மாகாண உணவுத் தேவைகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் பிரதான ஆதாரமாக உள்ளது.

இந்த மாகாணத்தில் மொத்தமாக 150,000 விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இதில் சுமார் 80,000 குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. நெல் பயிரிடக்கூடிய நிலம் 100,000 ஹெக்டேயர் ஆகவும், பிற உணவுப் பயிர்கள் பயிரிடக்கூடிய நிலம் 55,000 ஹெக்டேயர் ஆகவும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், நெல் சராசரியாக 55,000 ஹெக்டேயர் நிலத்திலும், பிற உணவுப் பயிர்கள் 27,000 நிலத்திலுமே பயிரிடப்படுகின்றன.

சந்தை வாய்ப்புக் குறைந்ததாலும், பராமரிப்பு இல்லாமையாலும், உற்பத்தித்திறன் கொண்ட நிலங்கள் கைவிடப்பட்டமையினாலும், விவசாயிகள் இடம்பெயர்ந்தமையினாலும் மிளகாய், பழங்கள், வாழை மற்றும் திராட்சை போன்ற பணப்பயிர்களின் சாகுபடி பெரிதும் குறைந்துள்ளன. வட மாகாணத்தில் நிலத்தின் கிடைப்பும், பகிர்வும் அட்டவணை 1.6 இல் காணப்படுகின்றன. வட மாகாணத்தில் 69 பெரிய/ நடுத்தர அளவிலான குளங்களும், 4,773 சிறிய குளங்களும், 28 கிராமிய அணைக்கட்டுகளும் உள்ளன. இவை மொத்தம் 41,878 ஹெக்டேயர் நிலப்பகுதியை பாசனத்துக்கு உகந்தவையாகச் செய்கின்றன. இருப்பினும், மழைப்பொழிவின் முறை மற்றும் தீவிரம் ஆகியவை தண்ணீர் கிடைக்கும் அளவைத் தீர்மானிக்கின்றன. இதனால் இவையே பயிரிடப்படும் பரப்பளவை நிர்ணயிக்கின்றன.

போர் காரணமாக, அலுவலகக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல சொத்துகள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, விவசாய சமுதாயத்திற்கு வழங்கப்படும் சேவைகளின் செயற்றிறன் குறைந்துள்ளது. மேலாண்மை மற்றும் விவசாய விரிவாக்கப் பணியாளர்களின் பற்றாக்குறை, அவர்களது கண்காணிப்புத் திறனின் (Field inspection) குறைபாடு, அறிவுப்பகிர்வு வசதிகள் இல்லாமை ஆகியன இந்த சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளன.

விவசாயச் சமூகத்தின் சமூக அதிகாரமூட்டலும், திறனூட்டலும், விவசாய வளர்ச்சியில் விவசாயிகளை சுயநிறைவுடையவர்களாக உருவாக்குவதும் மிகவும் அவசியமாகின்றன. மாவட்ட வேளாண்மை பயிற்சி மையங்கள், நடைமுறைசார்ந்த மற்றும் தகுந்த பயிற்சிகளை வழங்கும் இடங்களாகவும், அறிவியல் அடிப்படையிலான விவசாய சமூகத்தை உருவாக்கும் பங்களிப்புகளாகவும் உள்ளன.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சேவைப்பணி பயிற்சி நிறுவனங்கள் (DATC), விவசாயத்துறையில் அறிவும், திறனும் மேம்படுத்தப்பட வேண்டிய அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களாக உள்ளன. இருப்பினும், இவை முழுத்திறனுடன் செயற்படவில்லை. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட பல தொழில்கள் மாகாணத்தில் இயங்கி வந்தாலும், அவை உற்பத்தி மற்றும் தரத்திலுள்ள ஏற்றமற்றநிலையை எதிர்கொண்டு வருகின்றன.

உலக வங்கி நிதியுதவியில் செயற்பட்ட வடக்கு – கிழக்கு பாசன விவசாய திட்டத்தின் (NEIAP) ஊடாக 2004 ஆம் ஆண்டு கனகராயன் குளம், ஒட்டுசுட்டான் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மூன்று முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் முதல் இரண்டையும் சேவைப்பணி அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்றாவது மையம் பாசனத்துறையால் அதன் நோக்கத்திற்கு மாறாகப் பயன்படுத்தப்படுகிறது.

போர் முடிந்த உடனேயே உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு அவசர மீட்பு திட்டத்தின்கீழ் (ENREP) (இத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளராகக் கட்டுரையாளரே இருந்தார்) பாசன, நீர்வள, விவசாயத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக்காக 40 அறைகள், விரிவுரை மண்டபம், சொற்பொழிவுக் கூடம், உணவகம், சமையலறை மற்றும் பிறவசதிகளுடன் கூடிய சேவைப்பணி பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இது நீண்டகாலமாக தனது நோக்கத்திற்கேற்ப பயன்படுத்தப்படவில்லை. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீடம், இந்த மதிப்புமிக்க இடத்தை, தங்களது ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றது. இருப்பினும் இதுவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.

நீர் என்பது வாழ்விற்கு அத்தியாவசியமான இயற்கை வளமாகும். வட மாகாணத்தின் வேளாண்மை உற்பத்தி, மாகாணத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே, பாசனத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த சில தசாப்தங்களில், வட மாகாணம், சிறிய தொழில்கள் மற்றும் குறைந்த மக்கள்தொகையுடன், விவசாயம்சார்ந்த கிராமப்புறக் கட்டமைப்பையே கொண்டிருந்தது. அதனால், ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை (IWRM) என்பது அப்போது அவசரத் தேவையாக இருந்தது எனச் சொல்ல முடியாது. ஆனால் தற்போது சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது. நீரின் தேவை அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில், இந்தத்தேவை, நிலைத்த நீர்வளக் கிடைப்பை மீறிச் செல்லும் அளவுக்கு உள்ளது. ஒழுங்கற்ற நீர் பெறுகை, மாகாணத்தின் நீர்வள ஆதாரங்களை குறைக்கும் மற்றும் கெடுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேளாண்மைத்துறையைப் பாதுகாத்தபடியே (இது மாகாணத்தின் முக்கிய வாழ்வாதாரமாகும்), வீட்டுப்பயன்பாடு, பாசனத் தேவைகள் மற்றும் தொழில்துறை தேவைகள் ஆகியவற்றிற்கான நீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் நலனையும் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய சவால்.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற்பம் மற்றும் மன்னார் மாவட்டத்தில், மேற்கூறிய வெளி நீர் வளங்கள்மூலம், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய வட மாகாணத்தில் நீர்வள மேம்பாடு

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் உள்ள வடமத்திய மாகாணத்திலும், தென்மாகாணத்திலும் நீர்வள மேம்பாடு குறித்துப் பரந்தளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; சிறப்பாகவும் ஆவணமாக்கப்பட்டுள்ளது. ஆனால், வட மாகாணத்தில் இதுபோன்ற பண்டைய நீர்வள மேம்பாடு குறித்த வரலாறு விரிவாக ஆவணப்படுத்தப்படவில்லை.

அதிர்ஷ்டவசமாக, பிரோஹியர் தனது புகழ்பெற்ற நூலான ‘Ancient Irrigation Works of Ceylon’ (1934 இல் வெளியானது) இல் ‘The Northern Vanni and Peninsula of Jaffna’ என்ற தலைப்பில் ஓர் அத்தியாயத்தைத் தொகுத்திருக்கிறார்.

திரு. புரோஹியர் வட மாகாணப்பகுதியில் உள்ள சிறு நீரோடைகள் பண்டைய காலத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை, அவரது புரிதல் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிலப்பட ஆய்வுகளின் அடிப்படையில் முடிவு செய்கிறார். சற்றே அலைக்கம்பமான நிலப்பரப்பும், ஒழுங்கற்ற வெள்ளப்பாய்ச்சல்களும் நீர்வள மேலாண்மையைச் சவாலான பணியாக ஆக்கியிருக்கலாம். அட்டவணை 1.7, வட மாகாண நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் நீர்வள மேம்பாட்டைச் சுருக்கமாக விளக்குகிறது.

கல் ஆற்றில் உள்ள மேல்நிலைக் குளமாக இரட்டைப் பெரியகுளம் உள்ளது. பிரோஹியரும் ஆறுமுகமும், இக்குளத்தின் தடுப்பணையில் முதலாம் கஜபாகு மன்னரால் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில் இது ‘அளவிச்ச குளம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இப்பிரதேசத்தில் பண்டைய காலத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு முக்கியமான குளம் பாவற்குளம் ஆகும்.

கல் ஆற்றில் அமைந்துள்ள ஒரு திரிப்பான் அமைப்பாகக் கொரிஞ்சக்குளம் தடுப்பணை உள்ளது. இத்தடுப்பணையிலிருந்து நீங்கும் கால்வாய்கள் செயலிழந்ததால், ஆறு தன் வழித்தடத்தை மாற்றி இந்தத் திரிப்பான் அமைப்பைத் தவிர்த்துவிட்டது. மற்றொரு திரிப்பான் அமைப்பு அல்லேகட்டு தடுப்பணை ஆகும். இவை இரண்டும் பல பழமையான பெரிய குளங்களை நீரூட்டிய கால்வாய்கள் மூலம் இணைத்திருந்தன. தற்போது அந்தக் குளங்களில் பலவும் கைவிடப்பட்டுள்ளன.

வவுனியா – ஓமந்தைப் பகுதிகளில் தோன்றும் பறங்கி ஆற்றில், பண்டைய காலத்திலேயே உருவாக்கப்பட்ட பல குளங்களைப் பற்றிப் பிரோஹியரும் ஆறுமுகமும் குறிப்பிடுகின்றனர். அதுபோலவே, பாலி ஆறும் முக்கியமான ஆறாகும். இதன் வழியிலேயே வவுனிக்குளம் போன்ற பல பண்டைய குளங்கள் இருந்தன.

மன்னார்ப் பகுதியில், புவியியல் மற்றும் நிலவியல் தன்மைகளைக் கருத்தில் கொண்டு, மேற்பரப்பின் நீர்நிலை பண்டைய குடியிருப்புகளுக்குத் தேவையான அளவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை என பிரோஹியர் கூறுகிறார். இதனால், இந்தப் பகுதி நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. ஏனெனில், மழை மற்றும் மேல்நில நீர்த்தரங்கள் ஏனைய பகுதிகளில் பிரதான நீர்வள ஆதாரங்களாக இருந்தன.

மேற்கண்ட அட்டவணை, பூமிக்கடியில் ஓடும் நதிகளை உள்ளடக்கிய ஒரு நெடுந்தொடரான பாதை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதைக் கூறுகிறது. இதற்கமைய, முதற்கட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளம் (Giants Tank) ஒரு பூமிக்கடிநதியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட வளமான வாழ்வாதாரத்திற்கு, இத்தகைய பூமிக்கடிநதிகளின் இருப்பும், அவற்றைப் பயன்படுத்தும் திறனைப் பற்றிய அறிவுமே காரணங்களாகும். பின்னர், 12 ஆம் நூற்றாண்டில், இத்தகைய குளங்களுக்கு ஆறு திரிப்புகள் மூலம் நீரூட்டும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

1889 ஆம் ஆண்டில், மன்னாரில் உள்ள கட்டுக்கரைக்குளத்துடன் தொடர்புடைய ஒரு அணைக்கட்டிலிருந்து எடுக்கப்பட்ட காங்கிரீட் மாதிரியின்மீது (அந்தக் காலத்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டது) பிரித்தானியப் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. இது, நமது பண்டைய பாசன மரபின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உயர்தரமான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதுதான் என்பதைக் குறிப்பிடுகிறது.

“லண்டன், E.C. மே 17, 1889

ஐயன்மாரே,
கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில்  தங்கும்போது திரு. A. M. பெர்குசன் என்பவரால் எனக்கு வழங்கப்பட்ட கற்காரை மாதிரியின் முழுமையான பகுப்பாய்வு முடிவுகளை உங்களுக்கு அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘The Builder’ ஆகஸ்ட் 18, 1888, இதழில் வெளியான எனது கட்டுரையில் சிறந்த காரை மோட்டாரின் பகுப்பாய்வு முடிவுகளுடன் இதை ஒப்பிட்டுப்பார்த்தால், பலவகைகளில் இவை நெருங்கிய ஒற்றுமை கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

உண்மையில் சிறந்த காரை மோட்டாரில், சுண்ணாம்பின் ஒரு பகுதி எப்போதும் கால்சியம் சிலிக்கேட்டாக (சிமெண்டில் உள்ளது போல்) காணப்படுகிறது. அதாவது, இது சாதாரண காரையில் உள்ள கால்சியம் கார்பனேட்டுடன் (CaCO₃) மட்டுமல்லாமல், போர்ட்லாண்ட் சிமெண்டில் உள்ள கால்சியம் சிலிக்கேட்டையும் (CaSiO₃) கொண்டிருப்பதால், இது மிகவும் உயர்ந்ததரமும் கடினத்தன்மையும் உடையதாகிறது.

இந்த மாதிரியில், நான் நுண்ணோக்கியின் உதவியால் கவனித்தபோது, பயன்படுத்தப்பட்ட கற்களின் விளிம்புகள் முரடாக இருந்தன. மேலும், அவை காரையுடன் மிக நுணுக்கமாக பிணைந்திருந்ததால், பகுப்பாய்வுக்காக அவற்றை பொடியாக உடைப்பது மிகவும் கடினமாக இருந்தது.

‘கெமிக்கல் டிரேட் ஜர்னல்’ (பிப்ரவரி 16, 1889) இதழில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில், மூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த சில காரை மாதிரிகளின் கலவை பற்றி டாக்டர் W. ஃபாரியன் நான்கு பகுப்பாய்வுகளை வழங்கியுள்ளார். அவற்றில் எந்த ஒரு மாதிரியிலும் காரத்தில் கரையும் சிலிக்கா (SiO₂) 2.50% இனைவிட அதிகமாக இல்லை. ஆனால், இந்த இலங்கை கற்காரை மாதிரியில், காரத்தில் கரையும் சிலிக்கா 7.10% ஆக உள்ளது. இதை நான் கால்சியம் சிலிக்கேட்டாக கருதியுள்ளேன். ஏனெனில் போர்ட்லாண்ட் சிமெண்டுகளை பகுப்பாய்வு செய்யும்முறையிலேயே இதையும் சோதனை செய்தேன்.

டாக்டர் ஃபாரியன் குறிப்பிடுவதாவது, பண்டைய ரோமானிய காரை மாதிரிகள் எந்தவகையிலும் சிறந்தவை அல்ல. மாறாக மிகவும் தரம் குறைந்த பண்புகளைக் கொண்டிருந்தன. சமீபத்திய பல பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் என் கருத்துப்படி, இந்த தரக்குறைவு முக்கியமாக கால்சியம் சிலிக்கேட்டின் குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையின் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கற்காரையில், 7.10% சிலிக்கா (SiO₂) கால்சியத்துடன் சேர்ந்துள்ளது. மேலும், இதில் நிறைய கால்சியம் கார்பனேட் (CaCO₃) மற்றும் முரடான விளிம்புகளுடன் கூடிய கற்கள் உள்ளன.

வணக்கங்களுடன், உங்களின் விசுவாசமான,

ஜான் ஹ்யூஸ், F.C.S., மே 17, 1889.

மூலம்: ‘Ceylon Observer,’ வார இதழ், 1889, பக்கம். 582

ஆதாரம்: இலங்கையின் பொது வேலைத்துறை வரலாறு, 1796 முதல் 1913 வரை, தொகுதி 2, தொகுப்பாளர்: P. M. Binham; பங்களிப்பு: J. A. Balfour, பாசனத்துறை இயக்குநர்.

படங்கள் 18(a) மற்றும் 18(b) முறையே கட்டுக்கரைக் குளத்திற்கான (Giants Tank) திசைமாற்றுக் கால்வாயின் நீர்வரத்துக்கான அணைக்கட்டும், மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டின் கீழ்வரப்பகுதியைக் காண்பிக்கும் காட்சியும் ஆகும்.

வடக்கு மாகாணத்தின் நீர் வளங்கள் – துணைப் பாசனத் திட்டங்கள் மற்றும் நீர்த்தரம்

வடக்கு மாகாணத்தில் 25 ஆறுகள் உள்ளன. இவை அனைத்தும் பருவகால ஆறுகளாகும் (நீடித்த ஓட்டம் இல்லாதவை). இந்த மாகாணத்தில் 62 பாரிய/ நடுத்தர பாசனத் திட்டங்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்பது முக்கிய நீர்த்தேக்கங்களும் அடங்கும். இவை மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் முதன்மையாக 28,430 ஹெக்டேயர் நிலங்களுக்கு பாசன வசதியை வழங்குகின்றன. இது இப்பகுதியில் 28,459 விவசாயக் குடும்பங்களுக்குப் பயனளிக்கிறது.

வழுக்கையாறு வடிகால் திட்டம் 810 ஹெக்டேயர் விவசாய நிலத்திற்கு வடிகால் வசதியை வழங்குகிறது. 54 உப்புநீர் தடுப்புத் திட்டங்கள் 6,686 ஹெக்டேயர் விவசாய நிலத்திற்கு உப்புநீர் புகாமல் காக்கும் வசதியை அளிக்கின்றன. யாழ்ப்பாணம் கடல் நீரேரித் திட்டம் (ஆனையிறவு கடல் நீரேரித் திட்டம், உப்பாறு நீரேரித் திட்டம் மற்றும் வடமராட்சி கடல் நீரேரித் திட்டம் ஆகியவை) வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்கின்கீழ் செயற்படுகிறது. வடக்கு மாகாணத்தில் 9 பாரிய/ நடுத்தரப் பாசனத் திட்டங்கள் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களும் அடங்கும். இத்திட்டங்கள் 18,448 ஹெக்டேயர் விவசாய நிலத்திற்குப் பாசன வசதியை வழங்குகின்றன. வடக்கு மாகாணத்தில் 2,744 சிறு பாசனத்திட்டங்கள் கமநல சேவைத் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் முதன்மையாக 31,539 ஹெக்டேயர் நிலத்திற்கு பாசன வசதியை வழங்குகின்றன. மேலும் இவை இப்பகுதியில் 50,000 இற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்குப் பயனளிக்கின்றன.

நிலத்தடி நீர்நிலைகளின் பங்கு

யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் அடுக்குகளுக்குள் உள்ள நீர்நிலைகள் (Aquifers) முக்கியமானவை. இந்த நீர்நிலைகள் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

நீர் மாசுபாட்டின் அதிகரிப்பு

நீர்நிலைகள் மற்றும் குடிநீர் மூலங்களில் மாசுபாட்டின் அளவு அபாயகரமான விகிதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள்:

  • வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு.
  • கழிவுகளை சரியான முறையில் அகற்றாதது.
  • நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பற்றாக்குறை.
  • மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த பகுதிகளில் (போர் காரணமாக) திட்டமிடப்படாத கழிவறைக் கட்டமைப்புகள்.

இவை அனைத்தும் நீரின்தரம் படிப்படியாகச் சீர்கெடுவதற்கு வழிவகுத்துள்ளன.

ஆறுகளின் புவியியல் பண்புகள்

இலங்கையின் மத்திய பகுதிகளில் உற்பத்தியாகி, கடைநோக்கிப் பாயும் ஆறுகளின் இயல்பைக் கருத்தில் கொண்டால், நிலப்பரப்பு நீர் வளங்களை அரசியல் அல்லது நிர்வாக எல்லைகளுக்கு ஏற்ப வரையறுப்பது கடினம் எனலாம். அட்டவணை1.7 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகள் பெரும்பாலும் வடக்கு நோக்கிப் பாய்கின்றன. சில ஆறுகள், ஒரு மாகாணத்தில் உற்பத்தியாகி மற்றொரு மாகாணத்திற்குப் பாய்கின்றன.

நிலப்பரப்பு நீர் வளங்களின் பங்கு

யாழ்ப்பாணக் குடாநாடு, சிறுதீவுகள், ஆறுகள் மற்றும் அவற்றுக்கிடையிலுள்ள பகுதிகள் நாட்டின் நிலப்பரப்பில் 24% ஆக உள்ளன. இருப்பினும், இப்பகுதிகளின் ஆண்டு நிலப்பரப்புநீர் வளம், மொத்த நீர்வளத்தில் 8% மட்டுமே ஆகும். யான் ஓயா, மல்வத்து ஓயா மற்றும் கலா ஓயா போன்ற பெரிய ஆறுகளைத் தவிர்த்தால், இந்தப் பங்கு வெறும் 4% ஆகக் குறைகிறது.

கிராமக்குளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல்

கிராமக்குளங்கள் இலங்கையின் பாரம்பரிய நீர்ப்பாசன நாகரிகத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகும். இலங்கையில், குறிப்பாக வறண்ட மண்டலத்தில், 10,000 இற்கும் மேற்பட்ட கிராமக்குளங்கள் இன்றும் செயற்பாட்டில் உள்ளன. இவை பொதுவாக விவசாயச் சமூகங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. கிராமக்குளங்களின் பலன்கள் பல்வகைப்பட்டவை:

  • பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம்: இவை இவற்றின் முதன்மைப் பயன்பாடுகளாகும்.
  • நிலத்தடி நீரை ஈடுசெய்தல்: கிராமக்குளங்களை மேம்படுத்துவது நீண்டகாலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு உதவுகிறது என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான தழுவல்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை நிர்வகிப்பதில் கிராமக்குளங்களை ஒருங்கிணைக்க, அவற்றின் பாரம்பரியப் பங்கு மற்றும் தற்போதைய சமூக, பொருளாதார நிலவரங்களைக் கவனத்தில் கொண்டு முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

நிர்வாகம் மற்றும் மேலாண்மை

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாகாண பாசனத் திட்டங்கள் அனைத்தும் மாகாண சபைகளின்கீழ் வரவேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும், சிறுபாசனத் திட்டங்கள் கமநல சேவைத் திணைக்களத்தால் (மத்திய அரசின் நிறுவனம்) பராமரிக்கப்படுகின்றன. வடக்கு மாவட்டங்களின் கிராமக்குளங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அட்டவணை 1.8 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர்வளங்கள்

ஆற்றுப்படுகை எல்லைகளுக்கு வெளியே உள்ள பகுதிகள் கணிசமான அளவு நிலத்தடி நீர் வளங்களைக் கொண்டுள்ளன. இப்பகுதியில் பல நிலத்தடி நீர்ப்படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

  1. முருங்கன் படுகை – அருவி ஆறு மற்றும் நாயாற்றுக்கு இடையே அமைந்துள்ளது.
  2. முழங்காவில் படுகை – பாலி ஆறு மற்றும் பல்லவராயன்கட்டு ஆற்றுக்கு இடையே அமைந்துள்ளது.
  3. பரந்தன் மற்றும் முல்லைத்தீவு படுகைகள் – வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ளன.

2002 ஆம் ஆண்டில் இந்த கட்டுரையாளரால்/ ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட PhD ஆய்வு ஒன்று, வவுனியாப் பகுதியின் நிலத்தில் நீர் தாங்கும் திறன் குறைவாக உள்ளது என்பதைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் மழைப்பொழிவால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வரலாற்றுப் பின்னணி மற்றும் தற்போதைய நிலை

  • பண்டைய காலம் முதல், துணை உணவுப் பயிர்களுக்கு நிலத்தடி நீர் பாசனமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
  • 1970களின் நடுப்பகுதியில், துணை உணவுப் பயிர்களின் விலை உயர்வு மற்றும் வறட்சி காரணமாக நீர் கிடைப்பது குறைந்ததால், விவசாயக் கிணறுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்