கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் III
Arts
12 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் III

August 31, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

பூர்வ சரித்திரம் சொல்வனவற்றில் புறச்சான்றுகளைக் கொண்டும் ஊகத்தின் அடிப்படையிலும் ஏற்கத்தக்க விடயங்களை நாட்டார் தொன்மங்கள் என்ற ரீதியிலும், சிலவற்றை வரலாற்றுண்மைகள் என்ற ரீதியிலும் வகைப்படுத்திப் பார்க்கலாம்.

அவற்றில் முதலாவது, கூத்திக மன்னனால் மட்டுக்களப்பு எனும் அரசு உருவான கதை. சேனன், கூத்திகன் (237 – 215) என்போர் சேர நாட்டுக் குதிரை வணிகர் மைந்தர் என்பது மகாவம்சக்கூற்று. இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் தென்னகத்தவராக இனங்காணப்பட்டுள்ள அரசர்களின் பெயர்களை அக்காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் தமிழ்ப்படுத்தி நோக்கும் பார்வை இலங்கை ஆய்வுலகில் இதுவரை முயலப்படவில்லை. சேன, |குத்திக (sēna, guttika) எனும் பாளிமொழிப் பெயர்களை தமிழில் அக்காலை வழங்கிய சென்னி, குட்டுவன்  எனும் பெயர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலும். ஆனால் இதை உறுதிப்படுத்த மேலதிக மொழியியல் ஒப்பாய்வுகள் தேவை.

கூத்திகனுக்கு கிழக்கிலங்கையோடு நெருங்கிய தொடர்பிருந்ததற்கான வேறு தகவலேதும் இல்லை. சகோதரர்களாக மகாவம்சம் முன்வைக்கும் அவ்வரசர்களைப் பூர்வ சரித்திரம் சொல்வது போல தந்தையும் மகனும் (கூத்திகனின் மகன் சேனன்) என்று கொள்வதிலும் முரண்பாடுள்ளது. 

ஆனால் தீகவாபிமண்டலத்தில் முதலாம் பராக்கிரமபாகுவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த கலகக்காரர்கள் அடக்கப்பட்ட ஊர்களின் வரிசையில் மாளவத்துகம், சேனகுத்தகாமம் ஆகிய இரு ஊர்கள் வருகின்றன. சேனகுத்தகாமம் (சேன+குத்த) எனும் ஊர்ப்பெயர், சேனன் – கூத்திகன் என்போர் பெயர்களுடன் இணைத்து சிந்திக்கத்தக்கது.

தீகவாபிமண்டலம் அம்பாறை இறக்காமத்துக்கு அருகே இருந்த ஒரு பழைய நகர். மாளவத்துகம் என்பது இறக்காமத்துக்கு வடக்கே இன்றுள்ள மல்வத்தை தான் என்பது கல்வெட்டுகளாலும் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய கடையம்பொத் நூல்களாலும் உறுதியாகியிருக்கிறது. எனவே சேனகுத்தகாமம் மல்வத்தையின் அருகிலே அமைந்திருக்கக்கூடும் என்று ஊகிப்பதில் தவறிருக்க முடியாது.

பழைய மட்டுக்களப்பு நகரம் இன்றைய சம்மாந்துறையின் அருகே அமைந்திருந்தது. மட்டக்களப்பு வாவியின் தென்னெல்லை சம்மாந்துறை வரை நீண்டிருந்ததையும் அது தொடர்ச்சியான ஆற்றுமண் படிவால் தூர்ந்து சதுப்பாக மாறிவருவதையும் பிரித்தானிய காலக்குறிப்பொன்று சொல்கின்றது[1]. மட்டக்களப்பு வாவியிலிருந்து பின்னாளில் துண்டிக்கப்பட்ட, அல்லது மாரி காலத்தில் மட்டும் பெருக்கெடுத்தோடும் கல்லாற்றின் (அல்லது கல்லோயா பட்டிப்பளை ஆற்றின்) படுகையில் அமைந்திருந்த சிறு நீர்நிலைகளில் ஒன்றான மேட்டுக்களப்பே கூத்திகனாக பிற்காலத்தில் இனங்காணப்பட்ட நாயகன் ஒருவனால் மண் கல் இட்டு நிரப்பி மேடாக்கப்பட்டு, பின்னாளில் மட்டுக்களப்பு ஆக்கப்பட்டிருக்கக்கூடும். பூர்வ சரித்திரத்தின் மட்டுக்களப்பு அமைவிடத்தை உறுதிப்படுத்துமாற்போல், சிங்காரத்தோப்பு அணைக்கு – இன்றைய நிந்தவூர் – அட்டப்பள்ளத்துக்கு மேற்கில் தான் சம்மாந்துறை அமைந்துள்ளது.

பூர்வ சரித்திரம் சொல்வதுபோல, நீர்நிலையொன்றை மண்ணிட்டு நிரப்பி கரையை உயர்த்தி அதைக் கோட்டையாகப் பயன்படுத்தும் வழக்கம் முக்கார ஃகதன முதலிய வேறு சிங்கள நூல்களிலும் சொல்லப்பட்டிருப்பதாலும்,  மட்டக்களப்பு வாவியின் தென்னந்தமாக நீடித்து அக்கால போக்குவரத்து – வணிகத்துக்கு உதவி புரிந்திருக்கக்கூடிய அமைவிடச் சிறப்பை இன்றைய சம்மாந்துறை – அன்றைய மட்டுக்களப்பு கொண்டிருந்ததாலும், அதற்கு மிக அருகிலேயே சிங்கள மற்றும் பாளி இலக்கியங்களில் புகழ்பெற்றிருந்த மல்வத்தை மற்றும் இறக்காமத்து தீகவாபிமண்டலம் ஆகிய தொல்நகரங்கள் அமைந்திருப்பதாலும்,  கூத்திகனால் அமைக்கப்பட்ட மேட்டுக்களப்பு நகரம் என்ற பூர்வ சரித்திரத் தொன்மத்தை உண்மையானது என்றே கொள்ளவேண்டி இருக்கிறது. இடச்சு வணிகர்கள் கண்டி அரசுடன் தொடர்பு கொள்ள முற்பட்ட மட்டிக்கலோ நகர் பழைய சம்மாந்துறை மட்டுக்களப்பு தான் (உரு.01).

ancient batticaloa

இரண்டாவது தகவல், பூர்வசரித்திரத்தில் வரும் புவனேக கயவாகு, அவன் மகன் மனுநேய கயவாகு, அவனால் வளர்க்கப்பட்ட ஆடக சவுந்தரி, அவள் கணவன் மகாசேனன் ஆகியோர் திருக்கோணேச்சரத் தொன்மங்களிலும் இடம்பிடித்துள்ளனர் (வடிவேல், 1993: 110, 123-126). ஆனால் மகாசேனன் என்ற பெயருக்குப் பதிலாக கோணேச்சரத் தொன்மங்களில் “குளக்கோட்டன்” என்ற பெயர் பயன்படுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணத் தொன்மங்களில் உடற்குறை கொண்டிருந்து அது நீங்கப்பெற்ற மாருதப்புரவீகவல்லி, அவள் அழகில் மயங்கி அவளை மணந்துகொண்ட உக்கிரசிங்க மன்னன், அவர்கள் பெற்ற மகனான நரசிங்கராசன் ஆகிய மூவரும் இடம்பெற, கீழைக்கரைத் தொன்மங்களில் உடற்குறையை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டிருந்த ஆடகசவுந்தரி, அவளால் ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டு பின் அவளையே மணந்துகொண்ட குளக்கோட்டன் / மகாசேனன், அவர்கள் பெற்ற மைந்தனான சிங்ககுமாரன் ஆகியோர் இடம்பெறுகின்றனர். ஒன்றையொன்று ஒத்ததாக, அல்லது ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியதாக ஊகிக்கக்கூடிய இவ்விரு தொன்மங்களிலும் திருக்கோணமலை சார்ந்த குளக்கோட்டன் – ஆடகசவுந்தரி தொன்மமே காலத்தால் முற்பட்டது என்பது ஆய்வாளர் முடிவு. (ஞானப்பிரகாசர், 1928: 6-12)

ஆடகசவுந்தரி பேழையில் கிடைத்த பாலநகை ஊர் பற்றியும் அவள் ஆண்ட உண்ணாசகிரி பற்றியும் கூட, பதினெட்டாம் நூற்றாண்டு கோணேசர் கல்வெட்டும் இருபதாம் நூற்றாண்டு பூர்வ சரித்திரமும் சொல்கின்றன. அக்கதை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேயருக்குக் கூடத் தெரிந்திருந்தது என்பதை முன்பு பார்த்தோம் (பார்க்க: Robinson 1867:17-18). உண்ணாசகிரி என்பது மட்டக்களப்பு அரசின் தெற்கே இருந்த நாடு என்பது அவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஊகம்.

16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மட்டுக்களப்பு அரசின் தெற்கே இன்றைய வியாளையை மையமாகக் கொண்டு யாளை எனும் அரசு இருந்ததையும் அதை ஒரு பெண்ணரசி ஆண்டு வந்ததையும் 1546 இல் எழுதப்பட்ட போர்த்துக்கேயக் குறிப்பொன்று சொல்கின்றது (Pieris & Fitzler, 1927:186-189). அவள் அப்போதைய இலங்கை அரசியலில் ஒரு முக்கியமான சக்தியாக விளங்கியமையையும், மட்டுக்களப்பு அரசன் அஞ்சுமளவு பலம் வாய்ந்தவளாக இருந்தமையையும் அதே குறிப்பிலிருந்து ஊகிக்க முடிகின்றது. அத்தகவல் உண்மையெனில் வீரமும் மதிநுட்பமும் கொண்டிருந்த வியாளை அரசி பற்றிய தொன்மங்கள் வளர்ச்சியடைந்தே பிற்காலத்தில் ஆடகசவுந்தரி பற்றிய நம்பிக்கைகளாக வளர்ந்திருக்கக்கூடும். அல்லது 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கூட, வியாளையை ஆண்ட ஒரு பலம் வாய்ந்த அரசி பற்றிய ஐதிகங்கள், ஆடகசவுந்தரி பற்றிய கதையாக வளர்ச்சி கண்டிருக்கலாம்.

மனுநேயகயவாகுவின் தந்தையான புவநேயகயவாகு முனீச்சரத்துக்கும் பின்னர் திருக்கோணேச்சரத்துக்கும் செய்த திருப்பணிகளை கோணேசர் கல்வெட்டு விவரிக்க, அவன் திருக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்ததாக பூர்வ சரித்திரம் கூறுகின்றது. இரண்டிலும் காலத்தால் முற்பட்டது கோணேசர் கல்வெட்டு என்பதால், அதைப் பின்பற்றியே பூர்வ சரித்திரத் திருக்கோவில் பற்றிய தொன்மம் உருவாகியிருக்கக்கூடும். கோணேசர் கல்வெட்டில் கயவாகு மகாராசன் புவநேயகயவாகு பற்றிக் கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூர்வ சரித்திரலும் அவனது வரலாறு கலிங்க மாகோனுக்கு முந்தியதாக வருகிறது. எனவே புவனேயகயவாகுவும் மனுநேயகயவாகுவும், இலங்கை மன்னனான இரண்டாம் கயவாகுவுக்கு (1131 – 1153), முன்பு இலங்கையில் இருந்த சோழ அரசப்பிரதிநிதிகள் ஆகக்கூடும்[2].

கோவில் சார்ந்த வளர்ச்சிகளும் நெற்செய்கை – நீர்ப்பாசன அபிவிருத்திகளும் பூர்வ சரித்திரத்திலிருந்து எடுத்துக்கொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான தகவலாகும். திருக்கோவில், திருக்கோணேச்சரம், உக்கந்தகிரி, மண்முனை, கொக்குநெட்டி, போர்முனை நாடு ஆகிய இடங்களில் அவ்வப்போது மன்னர்களால் கோவில்கள் அமைக்கப்பட்டதும், அக்கோவில் சார்ந்து புதிதுபுதிதாக மக்கள் குடியேற்றப்பட்டு கோவில் கடமைகள் ஓரொழுங்குக்குக் கொணரப்பட்டதும், அக்கோவில்களின் அருகே புதிய குளங்கள் அமைக்கப்பட்டதும், அங்கு விதந்தோதப்படுகின்றது.

இன்னோரிடத்தில், செட்டித்திருப்பணி, தாண்டவத்திருப்பணி, புவனத்திருப்பணி, போர்முனைத்திருப்பணி, சங்குமண்கண்டித் திருப்பணி, உக்கந்தத் திருப்பணி எனும் ஆறு “சிவன் திருப்பணிகள்” சொல்லப்படுகின்றன[3] (கமலநாதன் & கமலநாதன் 2005:87-88).

கோவில்களை அமைத்து அக்கோவில் சார்ந்து வெவ்வேறு குடி மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு கோவில்சார்ந்து வாழ்வாதாரம் வழங்கி, அதன் மூலம் கோவில்களை பொருளாதார மையங்களாக நிறுவும் முறைமை ஒன்று இந்திய அரசுகளின் வழியே நீடித்து வந்திருக்கிறது. அவ்வமைப்பு இலங்கையிலும் நிறுவப்பட்டதன் எச்சங்களையே பூர்வசரித்திரக் கோவில் குறிப்புகளிலிருந்து அறியமுடிகின்றது. மேலும் இலங்கையின் செழுமை மிக்க நீர்ப்பாசனக் கட்டமைப்புகளின் நிலைபேற்றையும், சோழர்காலத்தில் தமிழகத்தில் மறுமலர்ச்சி கண்ட நீர்ப்பாசனத் துறையின் அபிவிருத்தியையும், கீழைக்கரைக் கோவில்கள் சார்ந்து  நீர்நிலைகள் அமைக்கப்பட்டதன்  மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

குறித்த கோவில்களின் பட்டியலில் திருக்கோணேச்சரமே மிகப்பழையது என்பது வேறு பல சான்றுகள் மூலம் உறுதியாகின்றது. அதைப் பின்பற்றி மட்டக்களப்பின் ஏனைய கோவில்களில் கோவில்மைய விவசாயப் பொருளியல் முறைமையொன்று நிலவியிருக்கக்கூடும். திருக்கோவில், கொக்குநெட்டி (கொக்கட்டிச்சோலை), போர்முனைநாடு (கோவிற்போரதீவு) ஆகிய மூன்று கோவில்களிலும் கோவில்மையப் பொருளியல் முறைமை ஒன்று வெகு அண்மைக்காலம் வரை நீடித்து வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. அவை பொதுவழக்கில் “திருப்படைக்கோவில்கள்”  என்று அழைக்கப்பட்டுவந்தன.  கீழைக்கரையில் கோணேச்சரத்துக்குப் பின்னர் தோன்றிய முதன்மையான கோவிலாக திருக்கோவிலைக் கருதமுடிகின்றது (உரு. 02).

ancient temple

உக்கந்தகிரியில் அண்மையில் அமைக்கப்பட்ட முருகன் கோவில், திருப்படைக் கோவில்களைப் பின்பற்றி பல ஊர் மக்களுக்கு திருவிழா உரித்து வழங்கப்பட்டிருந்த “தேசத்துக்கோவில்” எனும் வரையறைக்குள் இன்று உள்ளடங்குகின்றது. மண்முனையில் அமைந்திருந்த கோவில் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. அங்கிருந்த கோவில் மறைந்துவிட்டது[4].

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பஞ்சம் ஏற்பட ஒல்லாந்தர் மட்டக்களப்பு மக்களுக்கு  நெல் கொடுத்து தாபரித்ததை திருக்கோவிலிலுள்ள கல்வெட்டொன்று உறுதிப்படுத்துகின்றது. ஆனால் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்து கல்முனைக்கு மேற்கே கிறித்தவம் பரப்பியதாகச் சொல்லப்படும் ப`ச்கோல் முதலி, 1807 இலேயே மட்டக்களப்பு வந்து கல்முனைக்கு மேற்கேயுள்ள சொறிக்கல்முனையில் தேவாலயம் அமைத்ததுடன், 1817 இல் மட்டுநகருக்கு அருகேயுள்ள எருமைத்தீவு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் (Canagaratnam 1921: 8,40). ஒருவேளை ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் ப`ச்கோல் முதலி என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த வேறொரு பாதிரியார் பற்றிய தகவல்கள் பின்னாளைய ப`ச்கோல் முதலியாரோடு கலந்திருக்கக்கூடும் என்றும் ஊகிக்கமுடியும்.

மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்திலுள்ள தொன்மங்களும் தகவல்களும் இவ்வாறு மிக விரிவாக ஆராயப்படும் போது, அந்நூல் பல அரிய தகவல்களை வெளிப்படுத்தக்கூடும்.  

அடிக்குறிப்புகள்

[1] திரு. ஃகென்ரி பார்க்கர் எனக்கு எழுதியது: “சம்மாந்துறை பற்றி உங்களுக்கு அதிகம் கூறமுடியாமலிருப்பதற்கு வருந்துகிறேன். சிங்களவர்கள் அதை ஃகம்பாந்தோட்டை என்கிறார்கள். உள்ளூர் மரபு என்னவென்றால், மட்டக்களப்பு ஏரியின் கரையானது முன்பொருமுறை இந்த ஊர் வரை நீண்டிருக்கிறது என்பது தான். அதற்குப் பிறகு அந்த இடத்தில் இன்றும் காணமுடிவது போல ஏரி சதுப்பாகி வந்திருக்கிறது. ஊர் தற்போது ஏரியிலிருந்து சில மைல் தூர தள்ளி இருக்கிறது….. சம்மாந்துறை பதினேழாம் நூற்றாண்டிலும் ஏரிக்கரையில் இருந்தது ஓவகேட்டின் 1620 ஓகத்து மாத நாட்குறிப்பின் வழியே தெரியவருகின்றது. அவர் குறிப்பின் படி, பழுகாமம் போவதற்கு அவர் சம்மாந்துறையில் ஒரு ஓடத்தில் ஏறினார். – ஐரோப்பிய அறிஞர் டொனால்ட் ஃபேர்குசனின் (1853 – 1910) நூல்  அடிக்குறிப்பு மொழியாக்கம் (1997:172). 

[2] இலங்கையில் சோழராட்சி திருக்கோவில் சாகாமம் வரை நீடித்ததற்கே ஆதாரங்களுண்டு. எனவே அதற்கும் தெற்கே இருந்ததாகச் சொல்லப்படும் உண்ணாசகிரி அரசு, பாணகை அல்லது பாலர்நகை ஆகிய அரசிருக்கைகள் பற்றி மேலதிக ஆய்வு தேவை. மகாவம்சம் சொல்வதன்படி, கலிங்க மாகோன் காலத்தில் பொத்துவிலுக்கு மேற்கே இருந்த கழிகாமமலையில் புவனேகபாகு என்பவன் மாகோனுக்கு எதிரான அரசொன்றை அமைத்திருந்தான்.

[3] புவனத்திருப்பணி என்பது திருக்கோவில். தாண்டவத்திருப்பணி – கொக்கட்டிச்சோலை, போர்முனைத் திருப்பணி – கோவிற்போரதீவு. செட்டித்திருப்பணி எதுவெனத் தெரியவில்லை. அதை வெருகல், சித்தாண்டி ஆகியவற்றுள் ஒன்று என்போர் உள்ளனர். உக்கந்தத் திருப்பணி – உகந்தை, சங்குமண்கண்டித் திருப்பணி – சங்கமன்கண்டி.

[4]  மண்முனையை அடுத்த ஆரையம்பதியில் இன்று “சிகரம்”, “கோவில்குளம்” என்ற பெயர்களிலுள்ள இடப்பெயர்களைக் கொண்டும் அங்கு முன்புகாணப்பட்ட தொல்பொருள் எச்சங்களைக் கொண்டும், உலகநாச்சியால் கயிலையிலிருந்து கொணர்ந்த சிவலிங்கத்தை வைத்து அமைக்கப்பட்ட சிவாலயமொன்று அங்கு அமைந்திருந்ததாககச் சொல்வர். அங்கு காணப்பட்ட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருங்கற் கதவுநிலையொன்று ஆரையம்பதி கந்தசுவாமி கோவில் வாயிலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு, சென்னை : குமரன் புத்தக இல்லம்.
  2. ஞானப்பிரகாசர், சு. (1927). யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம். அச்சுவேலி: ஞானப்பிரகாச யந்திரசாலை.
  3. வடிவேல், இ. (1993). கோணேசர் கல்வெட்டு: கவிராஜவரோதயன் இயற்றியது. கொழும்பு 02: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  4. Canagaratnam, C.O. (1921). Monograph of the Batticaloa District of the Eastern Province. Ceylon: Government Printers.
  5. De Silva, R.K., Beumer, W.G.M. (1988). Illustrations and Views of Dutch Ceylon, 1602-1796, London: Serendib Publication.
  6. Ferguson, D. (1998). The Earliest Dutch Visits to Ceylon. New Delhi _ Madras: Asian Educational Services.
  7. Pieris, P.E., Fitzler, M.A.H. (1927). Ceylon and Portugal: Kings and Christians Part 1, Verlag Der Asia Major. 
  8. Robinson, E.J. (1867). Hindu Pastors: A Memorial, London: Wesleyan Conference Office.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9607 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)