இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அதாவது இடைக்கற்காலக் காலந்தொடக்கம் இலங்கையில் வேடர் சமூகம் வாழ்ந்து வருகின்றது என்பதனை, இலங்கை மானிடவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் தமது வரையறைக்கு எட்டியவரை எடுத்துக்காட்டி நிற்கின்றன. இலங்கையில் கிழக்குப்பக்கமாக திருகோணமலை தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என மிக நீண்டதான கரையோரத்துடன் அண்டியதாகக் கடலோர வேடர் குடிப்பரம்பலை இன்றும் வாழும் சாட்சிகளாகக் காணமுடிகின்றது. கிழக்கிலங்கையின் இனக்கலப்பில் இன்றும் வேடப்பூர்வகுடிகளின் அடையாளங்கள் சடங்கார்ந்த நடவடிக்கைகள் ஊடாக வெளிக்கிளம்பியபடியே உள்ளன. இன்று தமிழகத்திலும் பல குடிசார் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களில் சிலர் மட்டுமே சங்க இலக்கியத்தில் இடம்பெற்றார்கள். அவற்றுள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றவர்கள் தான் மிகவும் பழமையான குடிகளாகக் கொள்ளப்படுகிறார்கள். இவர்களில் சிலர் வேட்டுவர், வலையர், குறும்பர், குறவர், பறையர் போன்ற சமூகங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இலங்கையின் தமிழ், சிங்கள மக்களை விடவும் வேட்டுவ மக்கள் இந்தியாவின் பிரதான ஐந்து பழங்குடிகளுடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வொன்றில் கூடத் தெரிய வந்துள்ளது. அவ்வகையில் இந்தியாவின் ஒடிசாவிலுள்ள சந்தால் மற்றும் ஜீவாங் பழங்குடியினருடனும், தமிழ் நாட்டின் இருளர், பணியர், பள்ளர் முதலான பழங்குடியினருடனும் வலுவான மரபணு ஒற்றுமையைப் பேணவதாகத் தெரியவந்துள்ளது (timesofindia.indiatimes.com).
அவ்வகையில் இன்றும் மட்டக்களப்பில் வேட்டுவப் பூர்வ குடிகள் கலப்புற்றோ, கலப்புறாமலோ வாழும் கிராமங்களாக பால்ச்சேனை, வாகரை, மாங்கேணி, கழுவாக்கேணி, காயங்கேணி, பனிச்சங்கேணி, கோறளங்கேணி, மதுரங்குளம், ஆலங்குளம், கிரிமிச்சை, உறியக்காடு, கதிரவெளி, கட்டுமுறிவு, அமந்தனாவெளி, குஞ்சன்குளம், மட்டக்களப்பு வேடர் குடியிருப்பு (குடியிருப்பு), தளவாய், கருங்காலிச்சோலை, இலுக்கு, பறங்கியாமடு, சித்தாங்கேணி, களுவன்கேணி (யக்குறே, குரங்கமூலை, மாவடிப்பற்று, அக்கரை, நெடியமடு), நாசிவன் தீவு, இறால் ஓடை, பொண்டுகள் சேனை, கொங்கனை, திராய்மடு, வாகனேரி, முறுத்தானை, கழுமுந்தன் வெளி, கரடியன்குளம், வேப்பவெட்டுவான், பாலர்சேனை குசலன்மலை, முதலான கிராமங்கள் பார்த்துணரும் சான்றுகளாகக் காணப்படுகின்றன.
இன்று நாம் காணுகின்ற ஈழத்துச் சமூகங்களில் பூர்வகுடிகளாக வேடர்களை அறுதியிடுவதற்கு கண் பார்க்கும் இடமெல்லாம் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆரியக் குடியேற்றங்களிலும், பௌத்த மதப் பரம்பலிலும் இரண்டாம் படி நிலைக்குள் உள்வாங்கப்படாது விடுபட்டுப்போன பெருமளவு இயக்கரும், நாகரும் வேடர் என்ற சமூக அமைப்பினுள் வந்தவர்கள் என்றே கொள்ள வேண்டும். பண்டைய மட்டக்களப்பின் விந்தனை, வேகம் (நாடு, காடு), கோறளை (வாகரைப் பகுதி) போன்ற நிலப்பரப்புக்குள் தொடராக இச்சமூகத்தினர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றனர். மட்டக்களப்பு பிரதேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் வேடர்களின் வாழ்விடங்கள், வழிபாடுகள் மற்றும் மொழி பற்றிய தகவல்களும் தடயங்களும் ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுகின்றன. இப்பிரதேச ஆலய நடைமுறைகளிலும் வழிபாட்டுத் தன்மையிலும் வேடர்களின் வழக்காறுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
திருக்கோவில் சித்திர வேலாயதர் ஆலயம், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீச்சரம், கோவில் போரதீவு சித்திர வேலாயுதர் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், சித்தாண்டி சித்திர வேலாயதர் ஆலயம், வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் போன்ற மட்டக்களப்பின் புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களிலும் மற்றும் பல பண்டைய ஆலயங்களிலும் வரலாற்றுத் தொடக்க நிலை வேடர்களைக் கொண்டே முன்னெடுக்கப்படுவது நம் கவனத்தில் கொள்ளத்தக்கதாகின்றது. எனவே இயக்கர், நாகர் என்போருக்கு அடுத்த நிலையில் இன்றும் மட்டக்களப்பில் பல்வேறு இடங்களிலும் பரந்து வாழ்வோரான வேடர் சமூகத்தினரே தற்கால மட்டக்களப்புத் தமிழகத்தின் பூர்வகுடிகள் எனக் கவனிக்கத்தக்கவராகின்றனர்.
இப்பூர்வ குடிகளின் திருமண உறவுகள் பெரும்பாலும் மட்டக்களப்பின் பிற சமூகங்களுடன் தொடர்புற்றுக் கலந்திருப்பதும் இங்கு அவதானிப்புக்கு உட்படுத்தப்படுவதாகின்றது.
வெள்ளாளருடன் வேடர் சமூகத்தினராகக் காணப்படுகின்றனர். இதனிடையே வாகரை போன்ற பகுதிகளில் வெள்வேடர் என்ற பெயரில் ஒரு பிரிவினர் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
தாய்வழிச் சமூக அந்தஸ்தை இறுக்கமாகப் பறைசாற்றும் வேடர் சடங்கு முறைகள்
ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் வேடர்களின் வழிபாடானது பெண்மயப்பட்டதாக, வழிபாட்டு முறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவே உள்ளது. முன்னோர் வழிபாட்டில் இருந்து அடுத்தபடியாக வேடர்கள் பின்பற்றிய வழிபாடானது பெண் தெய்வங்களை மையப்படுத்தியே நிகழ்ந்துள்ளன. அவ்வகையில் இன்றைய வேடர் சடங்கு மையங்களின் கப்புறாளையாகவும் (மதகுரு) அவற்றின் பிரதான தெய்வமாகவும் பெண்களே முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். அவ்வகையில் செம்பக நாச்சி, செம்பு நாச்சி, கொம்பு நாச்சி, தெய்ய நாச்சி, அந்தன் குமாரி, மோட்டுக்காட்டுத்தெய்வம், மாநீலி (நூற்றுக்கு மேல்), குடா நீலி (நூற்றுக்கு மேல்), கிரியம்மா, பூச்சாண்டி முதலானவற்றையும் (இவை எதற்குமே உருவம் இல்லை.), பிற்காலத்தில் வந்து சேர்ந்த பத்தினி தெய்யோ (கண்ணகி) வழிபாட்டையும் குறிப்பிடலாம். இடத்திற்கு இடம் இவற்றில் மாறுபாடும் காணப்படும். இதில் இன்னும் அழுத்தமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறித்த வழிபாடுகளிலே ஆண் தெய்வங்களாகக் கொள்ளப்படுபவைகள் அனைத்தும் பெண் துணைப்பரிவாரங்களாக, தெய்வங்களுக்கான உதவியாட்களாகவே காணப்படுகின்றன. அதாவது, இன்றும் வேடர் வழிபாட்டினை முன்னின்று நடாத்தும் வேடர் சமூகப் பெண் மதகுரு ஒருவரின் கருத்து இவ்வாறு அமைந்தது.
“களுவோ வித்தனம்மா தொழுவோ வித்தனம்மா
களுவன்னீ…… தொழுவன்னீ…. லே பூஞ்சி தப்புரம்மா
பூனொச்சிமுனையோ…
கல்குடாவோ.0
தொப்பிகலையோ….
சீம்பிலாகல் மாப்பாரே தெய்யநாச்சி…”
(வேட்டுவப் வழிபாட்டுப் பாடல் ஒன்று – மட்டக்களப்பு களுவன்கேணி – வேடக்கப்புறாளை – ஜெயராணி )
“நாங்க தெய்யநாச்சியதான் (பெண் தெய்வம்) தலைத்தெய்வமா வெச்சிருக்கம் (பிரதான தெய்வம்). எங்கட அப்பா இறந்த பிறகு நான் தான் சடங்க செய்து வாரன். அப்பாக்கு முதல் அப்பாட அம்மாதான் செய்து வந்தவ. அவட பூட்டி முறையான குடற்புரி ஆச்சிதான் இந்த தேவாதி முறைகள இந்த ஊருக்குள்ள கனகாலமா ஆதரிச்சு வந்ததாம் எண்டு அப்பா சொல்லுவாரு. இப்ப நான் ஒரு பொம்புளையா எல்லாம் செய்து வாரன். இந்த சடங்கு மையத்தின் பிரதான தேவாதியும் நான் தான்.” (மட்டக்களப்பு- களுவன்கேணி – நடராசா ஜெயராணி)
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் வேடர் வழிபாட்டு முறைகள் ஒரு சில இடங்களில் பத்தினி தெய்யோ என்ற பதத்துடன் உருவ வழிபாட்டுடன் இணைந்து கொள்கின்றன. இதன் விளைவாக வேடர் சடங்கு அம்சங்களுடன் பத்ததி முறை எனப்படுகின்ற கிராமிய வணக்க முறைகளும் இணைந்து கொள்கின்றன. இவ்வாறு இச்சடங்காற்றுகைகள் காலத்திற்கு ஏற்றால் போல் மாற்றமுற்றாலும், பெண்களைச் சடங்கோடு இணைத்துக் கொள்ளுதல் என்பதில் வேடர் சமூகத்தினரிடையே எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை. பத்தினி தெய்யோ சடங்கு நடவடிக்கையின் போது மடைப்பெட்டி எடுத்துவரல், நெல்லுக்குற்றுதல், கண்ணிமார் பிடித்தல் முதலான சடங்கின் பிரதான அம்சங்கள் யாவும் பெண்மையப்பட்டதாகவே இன்றும் காணப்படுகின்றன.
பெண்களின் பல்லாளுமைகளைப் பிரதானப்படுத்தும் வேடர் சமூகம்
வழிபாட்டு அம்சங்களில் எவ்வாறு பெண்கள் தனித்துவமாகக் காணப்படுவார்களோ அதுபோலவே வேறு துறைகளிலும் அவர்கள் நிகரற்ற நிபுணத்துவம் கொண்டோராக, தனித்த சிறப்பு உடையவர்களாகவே காணப்படுவர். உதாரணமாக, சிறந்த தேன் வேட்டைக்கான வழிகாட்டியாகவும் காணப்படுவார். சிறந்த கூத்துப்பாடல், காவியப்பாடல், காவடிப்பாடல் பாடக்கூடியவராகவும் கலையம்சத்தோடு காணப்படுவார். அதே சமயம் கைமருந்து, சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், மருத்துவ மந்திர நடவடிக்கைகள் முதலானவற்றிலும் சிறந்து விளங்குவார். இவ்வாறு மேற்சொன்ன சகல துறைகளிலும் தாடனம் கொண்ட வேட மருத்துவிச்சி (லட்சுமி) மூதாட்டி ஒருவரின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருந்தன.
“மன! எங்கட காலம் வேற உங்கட காலம் வேற இப்ப எல்லாத்துக்கும் இங்கிலீசு மருந்து. எல்லாரும் வருத்தம் தாற நோவுக்கு மருந்து தேடுறாங்களே ஒழிய வருத்தத்த அடியோட ஒழிக்க மருந்து தேடுறாங்க இல்ல. வெறும் வருத்தத்தோட நோவ மட்டும் இல்லாமல் ஆக்கி என்ன நன்ம கிட்டப்போகுது? நான் ஒரு புள்ளைக்கு சுகமில்லாம (மாதவிடாய்) நிண்டு பொயித்தெண்டால் அடுத்த மாதம் இருந்தே வைத்தியத்தத் தொடங்கிடுவன். புள்ள புறகு கண்ட கண்ட மாதிரி எல்லாத்தையும் தின்ன ஏலாது. அவக்கெண்டு சில பத்தியச் சாப்பாடுகள் இரிக்கி. அதத்தான் குடுக்கனும். மூணூ மாசம் கழிய மட்டும் புள்ளைய கவனமா பார்க்கம். ஆறு மாசத்துக்குப் புறகு நான் எண்ட வேலையத் தொடங்கிடுவன். தாயும் சேயும் நலமா இரிக்கிறது நாம கவனிக்குறதுலதான் இரிக்கி. முதலாவது வேலையா ஆமணக்கு எண்ண போட்டு இரண்டு நாளைக்கு ஒருக்கா நல்லா நீவி (மசாஜ்) விடுவன். பெறு மாசம் வர மட்டும் இந்த வேலையச் செய்யனும். அப்பதான் தாய்ட வயிறு நல்லா இழகி புள்ள இறுக்கமில்லாமல் புறக்கும்.
இப்படி எண்ட காலத்துல நான் 650 பிரசவம் பார்த்து இரிக்கன். ஆனால் போன பத்து வருசத்துக்கு முதல் ஆஸ்பத்திரியால வந்து என்னை இனிமேல் மருத்துவிச்சி வேல பாக்கக்கூடாது எண்டு போட்டாங்க. மீறி செய்தா மறியலுக்குப் போக வரும் எண்டாங்க. ஆனா மனே நான் இடைக்கிடைக்க அவசரம் எண்டு ஆரும் வந்து கூப்பிட்டா போறதுதான். ஆரு வந்து என்ன தண்டன தந்தாலும் பரவால்ல. ஆனா மனே இவங்க எல்லாரும் எங்கட மருத்துவம் இனி சரிவராது எண்டு சொல்லுறாங்க. ஆஸ்பத்திரியில என்னதான் புதுப்புது மருத்துவம் வந்தாலும் தாயும் சாகுது, புள்ளையும் சாகுது. ஆயுதம் போட்டு புள்ளைய எடுக்கக்குள்ளையே கொல்லுதுகள், வவுறு நோகத்தொடங்கி உடனயே வெட்டு, புள்ளயையில கொடி சுத்திக்கிடந்தா வெட்டு, அதவிடப் புதினம், நாள் பார்த்து திகதி பாத்து வெட்டி எடுக்குதுகள். இப்படியான புறப்பெல்லாம் இந்த பூமி தாங்குமா மனே? ஆனா இதெல்லாம் குத்தமில்ல. நாம் பூமியோட வானத்தோட சேர்ந்து பாக்குற மருத்துவம் குத்தம். இத ஆரிட்ட சொல்லுற? இந்தா நீ கேக்குறதால எல்லாம் சொல்லுறன். நான் ஒருமுற வைத்தியம் பார்க்கக்குள்ள தாய்க்கு ரெண்டு புள்ள. அது ரெண்டும் தல கால் மாறிக் கிடக்கு. தாய்க்கு பன்னீர் குடமும் உடைஞ்சித்து. நான் ஆமணக்கு எண்ணைய போட்டு நீவி நீவி ரெண்டு புள்ளையையும் வெளில எடுத்தன். ஒண்டு தலையால புறந்திச்சி, இன்னொண்டு காலால புறந்திச்சி. இப்ப ரெண்டுக்கும் கல்யாணம் நடந்து புள்ள இரிக்கி. அதான் சொன்னனே எங்கட காலம் வேற. உங்கட காலம் வேற.” (தகவல் – லட்சுமி களுவன்கேணி மட்டக்களப்பு)
இவ்வாறான பல விடயங்களை ஒரே மூச்சில் கதைத்து முடித்தார் அந்த 90 வயது மூதாட்டி. அவர் மருத்துவிச்சியாக மட்டும் இல்லாமல் வேடர்களின் மதகுருப் பெண்ணாகவும் இருந்துள்ளார். இன்றும் தனியாக ஒரு சடங்காற்றுகையினை வழி நடத்தும் திறன் வாய்க்கப் பெற்றவர். அவரது கிராமத்தின் சடங்கு நிகழும் காலங்களில் அனைத்துச் சடங்கு மையங்களுக்கும் ஒரு முதுசமாக அழைக்கப்படுகிறார்.
தொல்சமய வழிபாட்டுக்கூறுகளின் ஆணிவேராக வேடர் சடங்குகள்
உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாட்டு முறைகள் (Ancestress Ritual Process)
வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலே முதலாவதாக வழிபாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுவது உத்தியாக்கள் வழிபாடு ஆகும். அதாவது இவ்வழிபாட்டு முறை பற்றி ஒரு வேட மதகுருவின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருந்தன. “ஆரம்பத்துல ஆசுவாதிகள் (மூதாதையர்) தான் இந்த நடைமுறை எல்லாம் செய்து வந்தவங்க. அவங்க செத்ததுக்குப் புறகு இந்த உலகத்துல இருந்து அந்த உலகத்துக்குப் பொயித்தாங்க. அதாலதான் அவங்க எல்லாம் இப்ப தெய்வங்கள். நாங்க ஒரு சடங்கச் செய்யக்குள்ள அவங்களுக்கு ஒரு பூ வைக்கத்தான் வேணும். அவங்க வந்து உடம்புல ஆடின புறகு தான் எங்களுக்கு மத்த தெய்வமெல்லாம் வரும்.”
முன்னோர் மன்றாட்டுப்பாடல்
“இந்தா பெடியப்பா வடபலவலோ
நொதியம்பலோ ஆயியே……
நாயோ’ நாகனம்மாயா
கன்டா பெடியாப்பா கமகமளு
பனுவனளு ஏக் மந்த்ரயே ரயனமோ
ரயனமல் ஏ…
கமந்த் வெல்லாயன் வெல்லம்பாளன் வெரிகடிகத்தோ
உஸ்ட சாயனட உன்னும் பாணன் கட்டாங்கரியோ ஓ……
கமர்தரயோ தயங் …”
(கு. சண்முகம் – வந்தாறூமூலை மட்டக்களப்பு)
எண்டு கூப்புட உத்தியாக்கள் வரும். இப்புடி நாங்க பனுவள சீயா ( அவர்களது வேட குடிவழமை), பனிக்கர், களுவர், குடல்புரி ஆச்சி, ரெட்டையர், பால்குடியா, சியா, முடமாரி, களுக்கொட்டா, இங்குலு கொட்டா, உக்குளுமா சியா எண்டு (இவர்களுடைய மூதாதையர்கள்.) எல்லாரையும் கூப்புடுவம்” என்கிறார் அவ்வேட்டுவ மதகுரு.
உத்தியாக்கள் வழிபாட்டில் குணமாக்கல் விளைவுகள் (healing Effects in Ancestress Ritual Process)
வேடர்களின் வழிபாட்டு முறைகளில் உத்தியாக்களின் வழிபாடு என்பது மிகத் தோழமையுடனும், உறவுமுறையுடனும் ஆற்றுகை செய்யப்படுகின்றதோர் வழிபாடாகும். இச்சடங்கிலே காணப்படுகின்ற குணமாக்கல் தன்மை என்பதும் மிகவும் தனித்திறம் கொண்ட இயல்புகளினைக் கட்டமைத்துக் காணப்படுகின்றது. அதாவது, இவர்களின் கடவுளர் என்பது கண்ணுக்குத் தெரியாத மாய உருவங்களோ அல்லது உண்மைத் தன்மையற்ற கருத்துத் திரிபுகளோ கிடையாது. மாறாக தாம் ஒன்றாகக் கூடி வாழ்ந்த, வளர்ந்த, நல்ல கெட்ட நிகழ்வுகளுடன் ஒன்றித்துப் போன தமக்கு முந்தைய உறவுகளினை வழிபாடு செய்பவையாகவே காணப்படுகின்றன. குணமாக்கல் செயன்முறையில் மிகவும் இன்றியமையாத ஒரு யுக்தி முறையாகக் குணமாக்கல் உறவுமுறை (healing Relationship) என்பது காணப்படுவதையும் கூறவேண்டியுள்ளது.
இவர்களுடைய சடங்காற்றுகையின் போது உத்தியாக்கள் (மூதாதையர்) வழிபாடொன்றின் அவதானிப்புக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன. சடங்கு நடவடிக்கைகள் செவ்வனே ஆரம்பமாகி உத்தியாக்களின் வழிபாட்டின் அரையிறுதியில் இருந்து பக்தர்களின் வேண்டுகோளிற்கான, காத்திருப்புக்கான நேரம் வந்தது. அங்கு சிலர், பல பொருட்கள் தாங்கிய ஓலைப்பெட்டியுடன் (பழவகைகள், உணவுப் பண்டங்கள், மற்றும் சில பொருட்களுடன்) காத்துக் கிடந்தனர். அதில் ஒரு சிலரே ஆண்கள். அவர்களின் இருப்பிடம் நோக்கி உருவாடுகின்ற தேவாதி (கலையாடுபவர்) அழைத்துச் செல்லப்பட்டு, அவர் கொட்டு வாத்திய ஒலி மற்றும் பாடல்களின் மூலம் உருவேற்றப்படுகின்றார். அந்த உருவேற்றல் முறையானது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதாவது உருவேற்றப்பட்ட தேவாதி அழத்தொடங்கினார். பின்பு அழுகை அதிகரித்து விம்மி விம்மி அழத்தொடங்கினார். அவருடைய குரல் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. அந்த குரலினைப் புரிந்து கொண்டு அருகில் இருந்த நடுத்தர வயதான பெண் “எண்ட மகனே” என அழைத்த வண்ணம் அழுது கொண்டு அவர் தனது பெட்டியுடன் முன்னோக்கி வந்தார்.
அவ்வாறு வந்தவுடன் தேவாதியும், குறித்த அப்பெண்ணும் மாறி மாறி அழுத வண்ணம் ஒருவரையொருவர் கட்டித்தழுவிய படி தமது உறவுக்கான சம்பாசணைகளைச் செய்து கொள்கின்றனர். அவை ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த பின்னர் தேவாதி அப்பெண் கொண்டு வந்த பெட்டியினுள் இருந்த உணவுகளை எடுத்து புசிக்கின்றார். அதனுள் இருந்த உடைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொள்கின்றார். அதனைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கின்றார். அவ்வுரையாடலானது சைகை மொழியாகவே காணப்பட அதற்கான விளக்கத்தினை அருகில் இருப்பவர்கள் கூறினர்.
அவ்வாறு நடந்த பின்னர் குறித்த பெண் உரத்த குரலில் அழத்தொடங்கினார். மார்பில் அடித்தடித்து அழுதார். அவரோடு வந்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர். பல நிமிடங்களுக்கு இச்செயல் நீடித்தது. சில மணித்தியாலயங்களின் பின்னர் அவர்கள் சடங்கு நடடிக்கைக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டனர். குறித்த அப்பெண்ணுடன் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு கூறினார்.
“எண்ட மகன 2014ம் ஆண்டு சி.ஐ.டி புடிச்சுப்போன. அவரத் தேடாத இடமில்லை. தெரிஞ்ச எல்லாரிட்டையும் கேட்டுப்பாத்தும் பலனில்லை. பிறகு தான் இஞ்ச வந்தனாங்க. மூண்டு வருசமா சடங்குக்கு வந்தனாங்க. இந்த முறதான் எண்ட மகன் வாக்குத்துறந்து இருக்காரு. இவளவு நாளும் உண்ம என்னெண்டு தெரியாம நாங்க செரியான துன்பப்பட்டனாங்க தம்பி. இந்த முற மனசுக்கு கவலைய விட கொஞ்சம் ஆறுதால் இருக்கு. எண்ட புள்ள செத்துப்பொனது தெரியாம இருந்திட்டம். என்ன செய்ய முடியும் நம்மளால. எல்லாம் இவங்கதான் தான் பாத்துக் கொள்ளனும்” என்றார்.
உண்மையில் இச்சந்தர்ப்பமானது குணமாக்கல் செயன்முறையின் உச்சகட்ட விளைவாகும். மனிதருடைய மனப்பாதிப்புக்களைப் போக்குவதென்பது அவ்வளவு இலகுவான காரியமன்று. ஆனால் இவ்வகையான வேட்டுவச் சடங்கின் அடியாக, ஒரு குறிப்பிட்ட கண நேரத்தினுள் உளவிடுபடு நிலையினை முற்றிலுமாகக் கொடுத்து விட முடிகின்றமையானது வேட்டுவ வழிபாட்டின் உத்தியாக்கள் சடங்கின் ஊடாக ஈடேறுகின்றமை மிக வலுத்திறமான நோய் நீக்கல் நடவடிக்கை ஆகும். சடங்கு, வழிபாடு என்பவற்றின் அடியாக விளைந்த சடங்காசார நிகழ்வுகளின் மூலமே அது சாத்தியம் எனலாம். இன்றைய எமது தமிழ்ச் சூழலில் போரின் தாக்கம் மற்றும் அதனோடு இணைந்த நடவடிக்கையினால் எமது மக்கள் பட்ட, படுகின்ற சொல்லொணா மன அழுத்தங்களினைப் போக்கிக் கொள்வதற்கு இவ்வாறான சடங்காற்றுகைகள் பெரிதும் உதவியாக இருப்பதும், இருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே.
இவ்வாறான தன்மை கொண்டதாகவே சிங்களப் பகுதிகளில் வாழ்கின்ற வேடர்களின் மூதாதையர் வழிபாட்டு வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றன. இவர்கள் தமது மூதாதையினரையே தமக்கான பாதுகாப்புக் கட்டமைப்பாக நினைத்துக் கொள்கின்றார்கள். இவர்கள் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபாடு செய்து அவர்களைக் கௌரவப்படுத்தாவிடின், தமது உறவுகளில் யாருக்காவது நோய் பிணிகள் வந்து விடும் எனவும், தமது வேட்டைகளில் பிரச்சினைகள், இடையூறுகள் ஏற்பட்டு விடும் எனவும் அச்சம் கொள்கின்றனர்.
குமாரர் வழிபாட்டு முறைமை (Kumarar Worship Process)
இவ்வழிபாட்டு முறையானது ஆதியில் களுவன்கேணியில் இருந்தே ஏனைய இடங்களான தளவாய், கிரான், இலுக்கு, சித்தாண்டி, கறுவப்பங்கேணி முதலிய இடங்களுக்குப் பரவியுள்ளமையினை ஆய்வின் ஊடாக அறிய முடிந்தது. “இஞ்ச இருந்த குமாரரத்தான் களுவர் ஆக்கள் தளவாய்க்குக் (களுவன்கேணிக்கு அருகிலுள்ள கிராமம்.) கொண்டு போனவங்க. இஞ்ச இருக்குறவங்க இத வழிபட மாட்டாங்க எண்டு.” (வீ.கிட்ணன் – களுவன்கேணி வேட்டுவ மதகுரு)
இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட குமாரர் வழிபாடு எவ்வாறு வேடர் வழிபாட்டிற்குள் நுழைந்தது என்பது பற்றிய பல புராணக்கதைகள் உலாவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குமாரர் வழிபாட்டில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை செல்லக்குமாரர், வீரக்குமாரர், காலிக்குமாரர், கொழும்புக்குமாரர், கண்டிக்குமாரர், சங்கிலிக் குமாரர், முத்துக்குமாரர், வதனக்குமாரர், புள்ளிக்குமாரர், பொல்லுக்குமாரர், ஆதிக்குமாரர் முதலிய குமாரர் கலைகள் ஆகும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழிபாட்டுச் சூழலில் நம்பமுடியாத வண்ணம் குணமாக்கல் திருப்தியைக் கொடுக்கும் விதமாக இக்குமாரர் வழிபாடானது காணப்படுகின்றமையை கள ஆய்வின் ஊடாக அவதானிக்க முடிந்தது. அதாவது பிள்ளைப் பேறுக்கான மிகவும் ஆத்மார்த்தமாக நம்பப்படுகின்ற சடங்கு முறையாக இது காணப்படுகின்றது.
குமாரர் வழிபாட்டின் குணமாக்கல் விளைவுகள் (healing Effects in Kumarar Worship Process)
ஒரு தம்பதியினர் பல காலமாக தமக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் வைத்தியசாலை மற்றும் ஏனைய பல முறைகளை எல்லாம் தம்மில் நடைமுறைப்படுத்திப் பார்த்து விட்டும், குழந்தைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்னும் மனக்கசப்பான தகவல் அவர்களுக்கு கிடைக்கின்றது. தமது உறவுகள், அயலவர்கள் உட்பட அனைவரின் வசையினாலும் உச்சக்கட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தவிக்கின்ற வேளையிலே குமாரர் வழிபாடு பற்றி அறிந்து இங்கு வருகின்றனர். பலனும் அடைகின்றனர்.
“தங்களுக்கு புள்ள இல்லண்டு தம்பதியள் வந்தால், உடனே நான் பெரிய சாமிக்குள்ளால (சிவன்) குறி பாப்பன். அதுல சொல்லும் என்னால முடியாது குமாரருக்கு உள்ளால வேல செய்யனும் எண்டு. புறகு நான் தம்பதிகளுட்ட எத்தின புள்ள வேணும் எண்டு கேட்பன். ஒண்டா, ரெண்டா எண்டு. ஏனெண்டால் குமாரருட்ட முதல் தரம் கேட்குற மாதிரிதான் புள்ளையள் புறக்கும். ஒண்டு எண்டால் ஒண்டுதான், ரெண்டு எண்டால் ரெண்டுதான். கேட்டுத்து குமாரருக்கு உள்ளால அஞ்சி வாழப்பழத்த அந்த பொண்ணுக்குக் ஓதிக்குடுப்பன். நான் ஓதிக்குடுக்குற அஞ்சி பழத்தையும் காலையில பச்சத்தண்ணியும் குடிக்காம சாப்புடனும். அப்புடி செஞ்சா அடுத்த மாதம் துவால (மாதவிடாய்) மாறி மாறி வரும். அதாவது முன்னுக்கு வரும், பின்னுக்கு வரும், பட்டும் படாத மாதிரி வரும் (அதாவது குறித்த அப்பெண்ணின் மாதவிடாய் ஆனது வழமைக்கு மாறாக சிறு அளவு வெளியேறல்). அதுதான் புள்ளைக்கான முதல் அறிகுறி, அதோட சேந்து அந்த பொண்ணுக்கு உடலுறவு சார்ந்த கனவுகளும் வரும். அத அந்த பொம்புல ரகசியங் காத்து என்னட்ட சொல்லனும். அப்படி சொன்ன புறகு நான் உடலுறவு கொள்ள அவங்களுக்கு விருப்பம் சொல்லுவன். அதுவரைக்கும் கூடாது. அப்படி அவங்க உடலுறவு செய்யக்குள்ள அந்த ஆண்ட ரூபத்துல குமாரர் போவாரு. இப்படி செய்தால் அடுத்த வருடம் இந்த ஆலயத்துக்கு புள்ளயோட வருவாங்க. இதுக்கு சடங்கு காலத்துலதான் வரணும் எண்டில்ல. எப்ப வந்தாலும் குமாரர் செய்து கொடுப்பாரு.
குணமாக்கல்
இவ்வாறாக, குமாரர் வழிபாட்டின் ஊடான செயன்முறையினை அந்த மதகுரு விளக்கினார். இங்கு பல விடயங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையாகும். மனித மனங்களின் ஒருமித்த சக்தி, ஒன்றை அடைய வேண்டும் என்ற தீவிர செயற்பாடு, தமக்கு தம்மை மிஞ்சிய சக்தி பாதுகாப்பு அளிக்கின்றது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதலான குணமாக்கல் உத்திகள் என்பன குறித்த பாதிப்படைந்தவர்களிடம் இவ்வழிபாட்டின் மூலம் ஈடேறி விடுகின்றமையே இங்கு கவனிக்கப்பட வேண்டிய குணமாக்கல் நிலைமையாகும். அதுவரை காலமும் வைத்தியசாலைகள் மற்றும் இதரபல இடங்களிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சாத்தியம் இல்லை என்று கைவிட்ட பின்னர் இது எவ்வாறு சாத்தியம் ஆகின்றது என்பது வியப்புக்குரிய விடயமாகும்.
வேடர் சமூக வழிபாட்டில் பூக்கள் முக்கிய பொருளாகின்றது. பூக்களில் தெய்வம் குடியிருப்பதாக நம்புகின்றனர். இவ்வாறு குறித்த மரங்களில் தெய்வம் குடியிருப்பதாகவும் நம்பூகின்றனர். பூ எவ்வளவு அதிகமாக அதிகமாக, தெய்வம் மகிழ்வடையும் (Shanmugam, 2022). இன்றும் பூசைக்கு காடுகளிலிருந்து லாக்கடைப் பூ, காத்திகைப்பூ, பட்டிப் பூ, ஒல்லிப்பூ, ஒட்டிப்பூ, நேரம்பூ, காட்டுக் குறிஞ்சிப் பூ எனப் பல பூக்களைக் கொணர்ந்து பூசைக்குப் படைக்கின்றனர். சடங்குச் சூழலை அலங்கரிக்கின்றனர். (Shanmugam 2022).
திராவிட அல்லது தமிழ் மரபில் வழிபாடுகளில் ‘பூ’ முக்கியமானது. ‘பூ + செய்’ என்பதன் கூட்டாக ‘பூசை’ என்பதும் இப்பூசையை நடாத்துபவர் ‘பூசாரி’ எனவும் பெயர் பெற்றமை இதன் அடிப்படையிலேயே (Baktavatchala Bharathi, 2017, p. 04) என்பதான கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது. கிழக்கிலங்கை வேடர்கள் பண்டைய தமிழகத்தின் நீட்சியில் வருபவர்கள்; திராவிட மரபிற்குரியவர்கள் எனும் பக்தவத்சல பாரதி (2019) அவர்களது கருத்து மேற்படி கருத்தை வலுப்படுத்துகிறது.
வேடுவர் வழிபாட்டுச் சடங்குகளில் பொதுவாக அவதானித்தக்க விடயங்களுள் ஒன்று, வழிபாட்டுப் பந்தல்கள் மட்டுமன்றி தமது குடியிருப்பு பகுதியில் ஓரிடத்தில் நடப்பட்டிருக்கும் ஈட்டியை ஒத்த வடிவுடைய கூரிய இரும்பிலான வழிபாட்டுப் பொருளாகும். இன்று வயிரவர் (காவல் தெய்வம்) தெய்வக் குறியீட்டுப் பொருளாகவும் வைதீக சமய வழிபாடுகளில் சூலாயுதமாகவும் மாற்றம் பெற்றிருப்பது இதுவே என்பதும் ஆய்வாளர் களரீதியான அவதானக்கருத்தாகும்.
வெருகல் பிரதேசத்தின் வட்டவன் கிராமத்தின் வேடர்களிடம் சேனை வயிரவர் வழிபாடு இன்றும் சிறப்புடன் காணப்படுகின்றது என அக்கிராமத்தில் உத்தியாச்சடங்கின் பிரதானியாகக் காணப்படும் சரசோதி (2023) அவர்கள் சொல்கிறார். மேலும் கிழக்கிலங்கைத் தமிழ்க் கிராமங்களில் வீட்டுக்கு வீடு சூலாயுதத்தை ஒத்த பொருளை பந்தலில் வைத்து வயிரவர் சடங்கு நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. வருடம் ஒருமுறை நடைபெறும் இச்சடங்கில் காய்கறிகள், கிழங்குகள், தானியங்கள் என்பவைகளோடு பிரதானமான படையல்களாக கஞ்சா ரொட்டியும், கள்ளு, சாராயமும் படைக்கப்படுகின்றன.
தொழிற்கருவி ஒன்று தெய்வ நிலையாக்கம் பெற்றதன் குறியீடாக இதை ஆய்வாளர்கள் (Baktavachala Bharathi, 2017) கருதுகின்றனர். மேலும் பண்டைத் தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகம்; இச்சமூகத்தில் பெண்ணே முதல் விவசாயி; இவ்விவசாயி பயன்படுத்திய முதற் கருவி ‘தோண்டு கழி’; இதன் மருவிய வடிவமே சூலாயுதம்; இன்று அது பெண் தெய்வங்களது கைகளிலேயே அதிகமாக காணப்படுகிறது (Baktavanchala Bharathi, 2017: p.60 70) எனும் கருத்தையும் இங்கு தொடர்புபடுத்த வேண்டியிருக்கிறது. மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகங்கள் தாய்வழிச் சமூக நடைமுறைகளை இன்றும் பயின்று வருவதில் வேடப்பூர்வ குடிகளின் சடங்கார்ந்த நடவடிக்கைகள் சான்று பகர்கின்றன.
இன, மத பேதங்கள் கடந்தும் இவ்வழிபாட்டு முறையில் குணமாக்கல் விளைவு பரவியிருந்ததை அறிய முடிந்தது. நம்பிக்கை என்னும் கூட்டுணர்வு என்பதற்கு முன்னால் இவர்களிடம் எதையும் கொண்டு செல்ல முடியாது. காரணம் இவ்வழிபாட்டு முறைகள் மிகவும் ஆழ்ந்த, மரபு சார் உணர்வு பூர்வமான, அதியுச்ச நம்பிக்கை நடவடிக்கையாகும். இவ்வாறான சடங்குகளுடன் பேயோட்டல், திருநீறு போடல் (உடற்சோர்வு முதலியவற்றிற்கு), தண்ணீர் ஓதிக்கொடுத்தல் (செரிமானப் பிரச்சினை, தலைவலி முதலியவற்றிற்கு), நூல் கட்டுதல், கூடு போடுதல் (கெட்ட ஆவிகள் நெருங்காமல்), குறி பார்த்தல் முதலான வழிபாட்டு வழி குணமாக்கல் நடைமுறைகளும் களுவன்கேணி வேடர் வழிபாட்டில் அவதானிக்கக் கூடியவையாகும்.
குணமாக்கல் என்பது ஒரு மீட்புக்குச் (Recovery) சமனான விடயமாகும். உளப்பாதிப்புற்ற ஒருவரை அவரது முன்னைய தொழிற்பாட்டு நிலைக்கு சகல வழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்ற மீட்புச் செயன்முறையினையே நாம் குணமாக்கல் என்கின்றோம். பாதிக்கப்பட்ட நபர்களினை ஒரு இயல்பான தொழிற்பாட்டு நிலைக்குச் செயற்பட ஆளாக்கி, அவர்களின் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, அவர்களினை சமூகத்திற்கு உபயோகம் உடையவர்களாக மாற்றும் நடவடிக்கைகளினை பொதுவில் குணமாக்கல் செயன்முறை என்பர். இச் செயற்பாடானது ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகின்றது. குணமாக்கலானது நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, செயற்பாட்டுத்திறன், மகிழ்வு போன்ற உணர்வுகளைப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மிகையாகக் கொடுக்கின்றது எனலாம்.
குணமாக்கல் விளைவுகள் மற்றும் ஆற்றுப்படுத்தல் முறைகள் என்பன மேற்கத்தேய உளவியல் செயற்பாடுகளிலேயே தோன்றி வளர்ந்துள்ளது என்பது பலரது நிலைப்பாடு ஆகும். ஆனால் எமது பாரம்பரிய சடங்காற்றுகைகள் மற்றும் அரங்க முறைமைகளில் இவ்வாறான செயற்பாடுகள் பல வருடங்களுக்கு முன்னே இருந்துள்ளமையினை குறித்த வழிபாட்டுச் சடங்கு நிகழ்வுகள் வலுவாக எடுத்தியம்புகின்றன. சக்தியற்ற ஓர் உணர்வையும், ஒரு சக்தியுள்ள உணர்வையும், இயற்கையின் மீது அச்சத்தையும், அதனோடு சேர்ந்து இயற்கையைக் கட்டுப்படுத்துகின்ற திறனையும் ஒரு சேர உருவாக்குகின்ற, மானுட வாழ்க்கையின் அடிவேரிலேயே இருக்கின்றன மாறாத தனித்துவங்கள் சடங்கு நடடிவக்கைகள் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. இயற்கையில் இருந்து ஒரு பொருளைப் பிரித்தெடுத்து ஒரு அடையாளத்தின் மூலமாகப் பெயரிட்டு, அந்த மொழியுருவத்தை ஒரு சக்தி ஆயுதமாக மற்ற மனிதர்களுக்கும் கொடுப்பதான வேலையில் அமைந்ததாகவே வேட்டுவச் சடங்கும், அதுசார் ஆற்றுகைகளும் அமைந்து விடுகின்றன எனலாம்.
அவ்வகையில் தான் சடங்குகள், சடங்கார்ந்த நிகழ்வுகள், அது சார்ந்த மரபுகள், அந்நிகழ்வுகளின் மூலம் உண்டாக்கப்படுகின்ற கூட்டுணர்வுச் சேர்க்கைகளின் சக்திப்பிரவாகம் என்பன இவ்வழிபாடுகளை மேற்கொள்ளுகின்ற மனிதர்களினதும், பாதிப்புக்களைக் களைவதற்காக வழிபாட்டுகளை நாடிவருகின்ற மனிதர்களினதும் அதியுச்ச நம்பிக்கையின் விளைவாக விளைகின்ற உணர்வுப் பெருக்கினாலேயே சாத்தியமாகின்றமை புலனாகின்றது. இவ்வாறான தன்மைகளின் ஊடாகவே காலங்காலமாக மக்களில் நிலவுகின்ற உள நெருக்குதல் நிலைமைகளினை, மிகவும் இலகுவான முறையில் ஏற்படுத்தப்படுகின்ற சடங்காசாரங்களினால் ஈடேற்றி விடுகின்றமையை அவதானிப்புக்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிந்தது. என்னதான் மேலைத்தேயக் கலாசாரங்களின் தாக்கங்களின் வாயிலாக குணமாக்கல் நடைமுறைகள் செயற்படுத்தப் பட்டாலும், பலவகையான பக்க விளைவுகளினை உண்டாக்கின்ற சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகள் என்பன பாதிப்புற்றவர்களின் குணங்குறிகளினை மட்டுமே மாற்றக்கூடியதாக அமைகின்றமையானது ஏற்றுக்கொள்ளப்படாத உண்மை. இவ்வாறான சடங்குகளில் விக்டர் டர்னரின் மீவியல் வெளி, தலைகீழாக்கம் என்பன இல்லாது போகின்றமையினையும் உணர முடிந்தது. பிறந்தது தொடக்கம் இறப்பது வரையான காலப்பகுதியில் மனிதனின் வாழ்வில் மதச்சடங்குகள் முக்கிய இடம்பெறுகின்றன.
“Animism, Magic Polytheism, Ghost beliefs and other forms of primitive religion, are rampant among the rural people to a far greater extent than among the urban people.” (Rural sociology in India – A.R.Desai)
ஆகவேதான இன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்ற உலகமயமாதல் மற்றும் காலனியச் சிலந்திச் சிக்கலுள் இருந்து விடுபட்டுக் கொள்வதற்கும், குணமாக்கல் விளைவுகளை தமது சடங்குகள் ஊடாகப் பாதுகாத்துக் கொள்வதற்குமான பல நற்திறக்கட்டமைப்புக்கள் கொண்டதாக மட்டக்களப்பின் வேட்டுவச் சடங்காற்றுகை முறைகள் காணப்படுகின்றமையை இங்கு அறிய முடிகின்றது.