BBK Partnership Sri Lanka பற்றி நான் முதன் முதலில் அறிந்தது 2015 இல். 2018 இல் இதன் இணை நிறுவுநரான ஆனந்தன் ஆர்ணோல்டுடன் நான் பேசியிருந்தாலும் மார்ச் 2020 இல் தான் அவரை நேரடியாகச் சந்தித்தேன். மானிப்பாயிலுள்ள மருத்துவ மனையொன்றில், மிகவும் எளிமையா உடைகளுடனிருந்த அவரைச் சந்தித்தபோது, லண்டன் நகரிலுள்ள BBK பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (BBK Partnership of Chartered Accountants) ஒரு பங்காளியாக அவரைப் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு தனது கோட், சூட், ரை போன்ற வியாபார உடைகளை ஓரங்கட்டிவிட்டு சைக்கிள் ஓட்டவீரரின் வளி கிழிக்கும் லைக்றா ஆடையில் ஆனந்தன் (படத்தில் வலது பக்கம் இருப்பவர்) என்னை மனமுவந்து வரவேற்றார். அவரது சகோதரர் கிறிஸ் உட்பட 50 பேர் கொண்ட குழுவின் 435 கி.மீ. கொழும்பு – யாழ்ப்பாணம் சைக்கிள் பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனைக்கான நிதிச் சேகரிப்பிற்காக ‘இலங்கைக்கான ஓட்டம்’ (Ride For Ceylon) என்ற அமைப்பினால் இச்சைக்கிளோட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 1848 இல் அமெரிக்க மத போதகர் டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனையே இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியாகும். தற்போது இது ஒரு தர்ம ஸ்தாபனமாக, நோயாளிகள் கொடுக்கும் (பெரும்பாலானவர்கள் எதுவுமே கொடுப்பதில்லை) சிறிய பணத்தின் உதவியுடன் தனது சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது.

இலங்கையின் இனப்போரினால் சிதைக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையை மறூசீரமைத்துச் செயற்படுநிலைக்குக் கொண்டுவர ஆர்ணோல்ட் குடும்பம் தீர்மானித்ததையடுத்து, இந்நிதிச் சேகரிப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இம் மருத்துவமனைக்கும் ஆர்ணோல்ட் குடும்பத்திற்குமிடையேயான உறவு மிக நீண்டது என்கிறார் ஆனந்தன். ஆனந்தனின் தந்தையார் திரு ஜோயெல் தர்மராஜா ஆர்ணோல்ட் அவர்கள் பிரிவு வருமான அதிகாரியாக (Divisional Revenue Officer – DRO) – இப்போது இப்பதவி உதவி அரசாங்க அதிபர் என அழைக்கப்படுகிறது – கடமையாற்றிவந்தார். அதேகாலத்தில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய திரு ஆர்.ஆர். செல்வத்துரையின் மகளான சுகிர்தம் அவர்களே ஆர்ணோல்டின் மனைவியானார். இவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். போர் முடிந்த கையோடு, இவர்களில் இரண்டாவது மகனான டாக்டர் ஜயந்தா ஆர்ணோல்ட் அவர்களது தலைமையில் மீதிச் சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகபாடிகள் எல்லோரும் இணைந்து இம்மருத்துவமனையை மறுசீரமைப்பதற்காக பெருந்தொகையான பணத்தைச் சேகரித்துக் கொடுத்தார்கள். இந்நிதியின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனை தன்னை அண்டி வரும் நோயாளிகளிக்குச் சிறப்பான சேவைகளைச் செய்துவருகிறது. இந்தத் தடவை, டாக்டர் ஜயந்தா ஆர்ணோல்ட், தனது பிள்ளைகளான ரம்யா மற்றும் ரோஹன் ஆகியோரது வாகன ஓட்டக்காரருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன், முன்னணியில் வழிகாட்ட 435 கி.மீ. சைக்கிள் பவனி தன் பயணத்தை ஆரம்பித்தது. இதன் மூலம் ஆணோல்ட் குடும்பத்தின் சேவை மனப்பான்மை அடுத்த தலைமுறைக்கும் கடந்து செல்கிறது.

இந்த கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை சைக்கிள் பவனியை இடைநடுவில் முறித்துக்கொண்ட ‘BBK Partnership’ இன் மற்றுமொரு பங்காளியான காண்டி என அழைக்கப்படும் அரியரத்னம் காண்டீபனை நான் லண்டன் நகரில் சந்தித்தேன். இச்சைக்கிள் பவனியில் கலந்துகொண்ட அவரது சைக்கிள் மன்னாருக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவரது மார்பெலும்பு உடைந்தநிலையில் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்த அம்புலன்ஸ் வண்டிகூட இதற்கு முதல் வருடத்து ‘Ride for Ceylon’ சைக்கிள் பவனியின்போது சேகரிக்கப்பட்ட பணத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒன்று என்பது ஆனந்தமான ஆச்சரியம். “நீங்கள் விதைத்ததை நீங்களே அறுவடை செய்வீர்கள்” என்ற விவிலிய வாக்கியத்தை நிரூபித்ததுபோல் (எதிர்மறையாக) அமைந்தது காண்டியின் அம்புலன்ஸ் பயணமும்.
மூன்று சகோதரர்களுடன் ஆனந்தன் ஆர்ணோல்ட் மானிப்பாயில் வளர்ந்தார். கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் பிறந்த அவர் செண்ட். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். ஆனந்தனுக்கு 9 வயதாகவிருக்கும்போதே அவரது தந்தையார் இறந்துபோக முழுக்குடும்பத்தையும் அவரது தாயாரே பொறுப்பேற்று நிர்வகித்தார். செண்ட். ஜோன்ஸ் கல்லூரியில் ஆனந்தன் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் திறமைகளுடன் சித்தியடைந்திருந்தாலும், 1983 இல் வெடித்த இனப்போரினால் அவரது உயர்தரக்கல்விக் கனவுகள் சிதைந்து போயின. போர் ஆரம்பித்ததும் ஆனந்தனின் குடும்பம் யாழ்ப்பாணத்தைவிட்டுப் போகத் தீர்மானித்தது. லண்டன் மருத்துவமனையொன்றில் டாக்டராகப் பணி புரிந்துவந்த ஆனந்தனின் சகோதரரான ஜயந்தா, குடும்பத்தை லண்டனுக்கு அழைத்தார். ஆனந்தனுக்கு அப்போது 18 வயது. தானும் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்ற கனவுகளுடன் இருந்த ஆனந்தனுக்குப் பல மணித்தியாலங்களைத் தின்று ஏப்பம்விடும் அண்ணா ஜயந்தாவின் மருத்துவர் பணி அச்சத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது. அவர் தனது திசையை மாற்றிக்கொண்டார். அப்போது அவரிடம் செண்ட். ஜோன்ஸ் கல்லூரி பெற்றுத்தந்த, விஞ்ஞானத்தில் நான்கு A தரப் பெறுபேறுகள் கைவசம் இருந்தன. அடுத்த 8 மாதங்களில் கணக்கியல், பொருளாதாரம், சட்டம் ஆகிய பாடங்களில் மேலும் மூன்று A தரப் பெறுபேறுகளைச் சேர்த்துக்கொண்டார்.
இன்னும் பதின்ம வயதைக் கடக்காத ஆனந்தன் லண்டனிலுள்ள ஒரு யூதக் கணக்காளரான திரு அலன் கேயி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதுவரை தனியாகத் தொழில் செய்துவந்த கேயி, ஆனந்தனை இணைத்துக்கொள்வதன் மூலம் தனது நிறுவனத்தை இரட்டிப்பாக்கினார். இப்போது அந்நிறுவனத்தின் பெயர் ஏ.டி. கேயி அண்ட் கொம்பனி. அடுத்த சில வருடங்களில் ஏ.டி. கேயி அண்ட் கொம்பனி வளர்ந்து டேவிட் பெக்வித் மற்றும் போல் பிளேக் ஆகிய இரு நிறுவனங்களையும் உள்வாங்கி பெக்வித், பிளேக் அண்ட் கேயி (The BBK Partnership) என்னும் நிறுவனமாக உருவெடுத்தது. இப்போது இந்நிறுவனத்தில் ஆனந்தன் ஒரு பங்காளி. பிளேக்கும் பெக்வித்தும் ஏறத்தாழ ஓய்வுநிலைக்குப் போகும்நிலையில் அலனுடன் பங்காளியாக ஆனந்தனும் இணைந்து, The BBK Partnership நிறுவனத்தை நிர்வகிக்கிறார்கள்.

1983 இல் லண்டன் வந்து ஒரு வருடத்திற்குள் ஆனந்தன் தனது சொந்த இடத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அடுத்த 10 வருடங்களில் லண்டனில் திருமணமாகாத ஓர் இளைஞர் அனுபவிக்கக்கூடிய சுதந்திரபோகத்தை ஆனந்தனால் அனுபவிக்க முடிந்தது. இக்காலத்தில்தான் லண்டனில் விடுமுறையைக் கழிக்கவென வந்திருந்த அமெரிக்கத் தமிழ்ப் பெண்ணைச் சந்திக்கிறார். மீரா என்ற இப்பெண்ணும்கூட மானிப்பாயைச் சேர்ந்தவர்தான். 1983 இல் ஆரம்பித்த இனப்போரினால் இடம்பெயர்க்கப்பட்ட பலரில் மீராவும் ஒருவர். அவரது 11 வயதில் ஃபுளோறிடாவில் தஞ்சமடைந்தவர்.
ஆனந்தனைப் போலவே மீராவும் சமூகசேவை மனப்பான்மை கொண்டவர். இருவரும் இணைந்து வடக்கிலுள்ள இளையோருக்கு பொருளாதார வளங்களைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்தார்கள். 2004 இல் அவர்கள் யாழ்ப்பாணம் சென்று அதன் பொருளாதார வளத்தை முன்னேற்றவும், அதேவேளை கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையைப் புனரமைக்கவும் தேவையான வழிமுறைகளை ஆராய்ந்தார்கள். அப்போது இம்மருத்துவமனை மிகவும் சீரழிந்தநிலையில் நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலங்களே சேவைகளை வழங்கிக்கொண்டிருந்தது. இதனால் மனமுடைந்த ஆனந்தன் லண்டன் திரும்பி சகோதரர் டாக்டர் ஜயந்தாவுடன் இணைந்து ‘மானிப்பாய் மருத்துவமனையின் நண்பர்கள் (Friends of Manipay Hospital)’ என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். 2005 முதல் இத்தொண்டு நிறுவனம் இம்மருத்துவமனைக்கான நிதிச் சேகரிப்பை நடத்தி வருகிறது. இவர்களது முயற்சியால் பலன்பெற்ற கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையை நான் நேரில் தரிசித்தேன். இன்றுவரை இங்கே அழகும், தூய்மையும், சேவையும் அசத்துகின்றன.
2009 இல் BBK Partnership நிறுவனத்தின் முதலாவது கிளை கொழும்பில் திறக்கப்பட்டது. மூத்த சகோதரர் றொஹானின் பணிப்பின்கீழ், ஆனந்தனின் பெரு நிறுவன, வல்லுநர்களான நண்பர்களின் உதவியுடன் இது சாத்தியமானது. போரின் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறிய பலர் இங்கு பணிபுரிகிறார்கள். போர் முடிவுக்கு வந்ததும் 2010 இல் வவுனியாவில் BBK கிளையொன்றை ஆனந்தன் நிறுவினார். இதன் ஆரம்பப் பணியாளர்கள் கொழும்புக்கிளையில் பணியாற்றிய வடக்கைச் சேர்ந்தவர்கள். தமது சொந்த இடங்களுக்கு அண்மையில் பணிபுரிவதை அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். இவர்கள் அனைவரும் பட்டதாரிகளாக இருந்தும் வடக்கில் கிடைக்காத வளங்களினால் இவர்கள் கடைகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ பணிபுரிந்திருப்பார்கள். BBK இவர்களுக்கு நிபுணத்துவத் தொழில்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறது.
வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அறைகளுடன் கூடிய BBK அலுவலகம் திறக்கப்பட்டதும் அங்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கிறதென்பதும் செய்திகளாகப் பரவத் தொடங்கியது. போரினால் துரத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த ஒரு பெண் விடுமுறையில் இலங்கை வந்தபோது வவுனியா BBK அலுவகத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு வேலை வாய்ப்பு இருக்கிறதென்பதை அறிந்து விண்ணப்பமும் செய்திருக்கிறார். லண்டனிலிருந்து ஆனந்தனுடன் தொலைபேசி உரையாடலும் நிகழ்ந்தது. அப்பெண்ணின் அவுஸ்திரேலிய (ஆங்கில) மொழிப்பாவனையும், தன்னம்பிக்கையும் ஆனந்தனுக்குப் பிடித்துப்போனது. உடனேயே அவர் பணிக்கு அழைக்கப்பட்டார். கணவனையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அப்பெண் இலங்கை திரும்பிவிட்டார்.
2011 இல் ஆனந்தன் தனது யாழ்ப்பாணக் கிளையைத் திறந்தார். பிரதான வீதியில் இருந்த பழைய முகமறியாக் கட்டடம் ஒன்றில் நான்கு பேருடன் இக்கிளை திறக்கப்பட்டது. சீரான கட்டடம் இல்லாமையால் மேலதிகப் பணியாளர்களைச் சேர்ப்பது கடினமாகவிருந்தது. 2016 இல் யாழ். கோட்டைக்கு அருகே இருந்த மறுசீரமைக்கப்பட்ட கட்டடமொன்றிற்கு அலுவலகத்தை நகர்த்தினார் ஆனந்தன். வேலை கேட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. 2016 முதல் 2019 வரையில் பணியாளர் தொகை 8 இலிருந்து 82 ஆக உயர்ந்தது. 2020 நத்தாருக்கு முதல் இத்தொகையை 100 ஆக அதிகரிக்க வேண்டுமென்பது ஆனந்தனது திட்டம்.
BBK பணியாளர்கள் கல்வியில் சிறப்பான தரங்களையுடையவர்கள் மட்டுமல்லாது இவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலமொழி பேசக்கூடியவர்கள். சிலர் AAT, CIMA, ACCA போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள். சிலர் அவற்றைப் பெறுவதற்காகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருபவர்கள். சிலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லத் தயாராகவிருப்பவர்கள். இலங்கையில் க.பொ.த. உயர்தரக்கல்வி முடித்தபின் பல்கலைக்கழகம் செல்வதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த இளையோர் சிறந்த கல்வியைப் பெற்றால்தான் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமென்பதை ஆனந்தன் மனதில் கொண்டு செயற்படுகிறார்.
BBK இலங்கைக் கிளை இலாபமீட்டுகிறதா என நான் ஆனந்தனைக் கேட்டேன். BBK Partnership நிறுவனத்தின் இலாபமும் நட்டமும் ஒட்டுமொத்த நிறுவனத்தின் கணக்காகவே கணிக்கப்படுகிறது; கிளைரீதியாக அல்ல என ஆனந்தன் கூறுகிறார். உலகம் முழுவதிலுமுள்ள BBK இன் வாடிக்கையாளர்கள் எப்படியான சேவைகளைப் பெறுகிறார்கள் என்பதுவே BBK இன் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்கிறார் ஆனந்தன்.
லண்டன் தலைமையகமே BBK நிறுவனத்தின் பெரும்பாலான வருவாயை ஈட்டுகிறது. இங்கு மணித்தியாலத்துக்கு நூற்றுக்கணக்கான பவுண்டுகளைக் கட்டணமாக அறவிடுகிறார்கள். வரித்திட்டமிடல் (Tax Planning), சொத்துத் திட்டமிடல் (Estate Planning), வியாபார அபிவிருத்தி (Business Development) போன்ற விடயங்களில் வழங்கப்படும் சேவைகளே இங்கு அதிகமாகக் கையாளப்படுகின்றன. இச்சேவை வழங்கலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வாடிக்கையாளர்களின் திறைசேரி மேலாண்மை (Treasury Management), கணக்கெழுதுதல் (Bookkeeping), ‘வீ ஏ ரி’ சமர்ப்பித்தல் (VAT Returns), சம்பளம் வழங்கல் (Payroll) போன்ற உதிரிச் சேவைகளை மலிவான விலையில் வழங்குவதன் மூலம் அவர்களைத் திருப்தியாக வைத்திருக்கிறது BBK. இப்படியான சேவைகளை இலங்கையிலுள்ள கிளைகள்மூலம் BBK வழங்குவதால் பிரித்தானிய வாடிக்கையாளர்கள் மலிவாகச் சேவைகளைப் பெற முடிகிறது.
கணக்கியல் சேவைகளுக்கு அப்பால் BBK – இலங்கைக்கிளை பிரித்தானிய வாடிக்கையாளர் ஒருவருக்காக பண்டசாலை (Warehousing) நிர்வாகமொன்றையும் செய்து வருகிறது. பண்டங்களின் இருப்பைக் கணக்கிடுதல் முதல் விநியோகப் பாதைகளைத் திட்டமிடுதல், விநியோக வாகனங்களை வரிசைப்படுத்தல், வாகனங்களினுள் விநியோக வரிசையில் பண்டங்களை அடுக்குதல், உரிய ஒழுங்கில் பண்டங்களை விநியோகித்தல் வரை பண்டசாலை முகாமைத்துவத்தை மேற்கொள்கிறது BBK – இலங்கை.
BBK – இலங்கைக்கிளையின் பணியாளர்கள் வருடமொன்றுக்கு இரண்டு தடவைகள் சம்பள உயர்வும் 32 நாட்கள் விடுமுறையையும் பெறுகிறார்கள். விடுமுறையைப் பெற விரும்பாதவர்களுக்கு அந்நாட்களின் ஊதியத்தின் 1.5 மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு, சகல பணியாளர்களுக்கும் ஒரு மாத மேலதிகச் சம்பளம் (Bonus) வழங்கப்படுகிறது. அத்தோடு அனைத்துப் பணியாளர்களுக்கும் குளிரூட்டப்பட்ட அலுவலக வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. EPF/ ETF போன்ற ஓய்வூதியப் பங்களிப்புகள் மற்றும் பணியிலிருந்து விலகுபவர்களுக்கு Gratuity Fund போன்ற சலுகைகளையும் BBK தாராளமாகச் செய்துகொடுக்கிறது என்கிறார் ஆனந்தன். குறைந்த சம்பளம் கிடைப்பினும் ஓய்வூதியத்துடன் கூடிய அரச பணிகளைப் பெறும்படி பெற்றோர்களது வற்புறுத்தல் காரணமாக, சிலர் பணிகளைத் துறந்தாலும், பணியாளர்கள் பணி துறப்பது இங்கு மிகவும் அரிது. யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு ஆகிய மூன்று கிளைகளுக்கும் தகமையுள்ள பணியாளர்களைச் சேர்த்துக்கொள்வதில் ஒருபோதும் சிரமம் இருந்ததில்லை.
BBK இன் கணக்கியல் வியாபாரத்துக்கு அப்பால், லண்டன் தொடர்புகளைப் பாவித்து, இதர பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஆனந்தன் அஞ்சுவதில்லை. யாழ்ப்பாணத்தில் ‘ஓவிய விழா’ (Art Festival) ஒன்றை நடத்துவதற்கான திட்டமொன்றும் அவரிடம் இருக்கிறது. பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து நடுவர்களைக் கொண்டுவந்து இங்கு உருவாக்கப்படும் கலைப்படைப்புகளைத் தரத் தேர்வு செய்ய அவர் உத்தேசித்திருக்கிறார். பரிசுகள் பணமுடிச்சுகளாக மட்டும் இருக்காது. ரூ. 100,000, ரூ.50,000, ரூ.25,000, ரூ.10,000 படி 50 ஆறுதல் பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுமென்பதற்கு அப்பால், வெற்றிபெறும் ஓவியங்கள் பகிரங்க உலகச் சந்தையில் ஏலம் விடப்பட்டு அதில் பெறப்படும் பணத்தின் 50% படைப்பாளிக்கும் மீதி 50% இலங்கை முழுவதிலுமுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் கல்விச்சேவைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படுமெனக் கூறுகிறார் ஆனந்தன். இவ்விழாவில் சிறப்பானதெனத் தேர்வாகும் ஓவியங்களை லண்டனின் நாகரீக டாம்பீகம் குடிகொண்டிருக்கும் செல்சீ மாவட்டத்திலுள்ள (Chelsea district) BBK வாடிக்கையாளர் ஒருவரின் காட்சிமண்டபத்தில் காட்சிப்படுத்தவும் ஆனந்தன் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் BBK நிறுவனத்தை நடத்துவதில் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என நான் ஆனந்தனைக் கேட்டேன். “வடக்கில் நிறுவனங்களை இயக்குவது பற்றிப் பலவிதமான கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. சோம்பல், வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிருத்தல், பணியாளர் மீது நம்பிக்கையின்மை, சண்டித்தனம் எனப் பலவகையான குணாம்சங்கள் கூறப்படுகின்றன. இவையெல்லாம் வெளிநாடுகளில் கூறப்படும் கட்டுக்கதைகள்; எதையும் செய்ய விரும்பாத வெளிநாட்டுக்காரர் இவற்றை நம்பி சும்மா இருப்பதற்கே இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன. லண்டனைச் சுற்றி வாழும் பல கோடீஸ்வரர்கள் யாழ்ப்பாணத்தில் தங்களது தென்னந்தோட்டங்களில் தேங்காய்கள் திருடப்படுவது பற்றிக் குறைபட்டுக்கொள்கிறார்கள். அதேவேளை பராமரிக்கப்படாமல் காடுகளாக வளர்ந்திருக்கும் இத்தோட்டங்களில் பாம்புகளும், எலிகளும் குடிகொண்டு அயலவர்களுக்கு இம்சை தருவது பற்றி அவர்களுக்கு எந்தவித அக்கறையுமில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகிறது” என்கிறார் ஆனந்தன் .
முதல் தடவை யாழ்ப்பாணம் வந்தபோது ஆனந்தன் எதிர்கொண்ட மின்வெட்டு, இணையத் தொடர்பின்மை போன்ற சவால்கள் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன. 2015 இல், முதல் தடவையாக நான் யாழ்ப்பாணத்தில் குடியேறியபோது எதிர்கொண்ட மின்வெட்டுகள் இப்போது மிகவும் அரிது; அப்படியானாலும் அவை பற்றிய முன்கூட்டிய அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
இலங்லையிலுள்ள BBK பணியாளர் குறித்து ஆனந்தனது வாடிக்கையாளர்கள் திருப்தியாக உள்ளார்கள். பிரித்தானிய கிறீன்விச் நேரம் மாலை 6:00 மணியாகவிருக்கும்போது இலங்கை நேரம் இரவு 11:30 மணியாகவிருக்கும். அப்படியிருந்தும் இலங்கைப் பணியாளர் தூங்காமலிருந்து தமது வாடிக்கையாளரின் தேவைகளைத் திருப்திப்படுத்துகிறார்கள். இதனால் சில பணியாளர் நீண்டநேரத்தை அலுவலகத்தில் செலவிடவேண்டி ஏற்படுகிறது. இரவுநேரங்களில் பணியாளர் பாதுகாப்பாக வீடு செல்வதற்கு BBK வாகன வசதிகளைச் செய்து கொடுக்கிறது.
பணியாளரை மரியாதையாக நடத்துவதன்மூலமே அவர்களது விசுவாசத்தைப் பெற முடியும் என்கிறார் ஆனந்தன். அவர் அலுவலகத்தில் நுழையும்போது பணியாளர் எவரும் எழுந்திருப்பதோ அல்லது அவரை ‘சேர்’ என அழைப்பதோ இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. ‘ஆர்ணோல்ட் அண்ணா’ என அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார். உணவு தயாரிக்குமிடத்தில் கிண்ணங்கள் கழுவப்படாமல் இருந்தால் ஆனந்தன் அவற்றைக் கழுவி வைப்பார். இதன் மூலம் எந்தவொரு பணியும் இழிவானதல்ல என்பதை அவர் நிரூபிக்க விரும்புகிறார்.
ஆனந்தனது இப்பெரும்பணி பற்றி எழுதுவதற்கு நான் நீண்டகாலமாக முயற்சிக்கிறேன் என அவருக்கு முறையிட்டபோது, “இதுவரை காலமும் நான் இலங்கையில் மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பகிரங்கமாகச் செய்ய விரும்பவில்லை” என அவர் கூறினார். இப்போது அவர் தன்னை இனங்காட்டத் தயாராகி விட்டார். தன்னைப் போலவே மேலும் பலரும் இலங்கை வந்து, நிறுவனங்களை ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். அவை போட்டி வியாபாரமாக இருந்தாலும் வடக்கிற்கு வேலைவாய்ப்புகளை அளிக்குமானால் அதுவே அவருக்கு மகிழ்வைத் தரும்.
“கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்” என்ற பழமொழியோடு அவர் உரையாடலை முடித்துக்கொள்கிறார்.
ஆனந்தன் ஆர்ணோல்டுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள், arnold@bbkca.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
இக்கட்டுரை மார்ச் 19, 2020 இல் வெளியான லங்கா பிசினஸ் ஒன்லைன் பதிப்பில் ஆங்கிலத்தில் பிரசுரமானது.