காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்
Arts
10 நிமிட வாசிப்பு

காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

May 4, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

அறிமுகம்

பல சர்வதேச நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்த் தரகு முதலாளிகளும் இலங்கையின் அரச அதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு நமது கடலை அபகரிப்பதை, அதன் வளங்களை கொள்ளையிடுவதை துணிந்து எதிர்த்து நிற்கிறார்கள் கடல் தாயின் மக்கள். அவர்கள் தமது அந்த வாழ்வாதாரம் அழிக்கப்படும் அநியாயத்தை முன்னிறுத்திப் போராடுகிறார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம், அப்போராடும் மக்கள் சக்திக்கு உரமூட்டும் விதமாக போராட்டங்களுக்கான நியாயங்களை சமூகவியல், பொருளாதாரம், அரசியல், வரலாறு மற்றும் உயிரியல் – கடலியல் விஞ்ஞானப் பார்வையிலும் முன் வைப்பதாகும்.

இக்கட்டுரையின் பேசுபொருளானது குறிப்பாக இன்று இலங்கையின் வட மேற்கின் கரையோரக் கடல் பரப்பில் நடத்தப்படும் கடலட்டை வளர்ப்பை பற்றியதாகும். அதேவேளை, இந்தக்கட்டுரையின் போக்கில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் கடல்வள அழிவை ஏற்படுத்தும் இறால், நண்டு, மீன்வளர்ப்பு சார்த்த செயற்பாடுகள் பற்றிய பார்வைகளையும் இது முன்வைக்கின்றது.

அத்துடன் இந்தப்பதிவின், இறுதிப் பாகத்தில் இந்தக்கட்டுரையாளர் 2022ம் ஆண்டு சித்திரை – புரட்டாதி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொண்ட கள ஆய்வுகளும்-பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்திய சந்திப்புக்களும் சாட்சியங்களாக விபரிக்கப்படுகின்றன.

கட்டுரையின் பெருமளவான உள்ளடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ‘நீலப் பொருளாதாரம்’ ‘கடல் விவசாயம்’ பற்றியதாகவே இருக்கும். அதேவேளை, இந்த உள்ளடக்கம் இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் நடைபெறும் இந்த வகையான ‘கடல் பொருளாதார அபிவிருத்தி’ வேலைகள் பற்றி விளங்கிக் கொள்ளவும் உதவும்.

இது ஒரு கல்விப் புலமைசார் (Academical) கட்டுரையல்ல. அதேவேளை, இதன் உள்ளடக்கம் சார்ந்த நிரூபிக்கத்தக்க ஆய்வுத் தரவுகள் பின் இணைப்பாக – உசாத்துணையாக கட்டுரையின் இறுதி பகுதியில் பதியப்பட்டுள்ளன.

சாந்த பேதுறு

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்பதாம் ஆண்டு, தை மாதம் பத்தாம் திகதி, எனது அய்யா (தந்தை) மரியநாயகம் நீர்கொழும்பிற்குச் சென்று, அங்குள்ள குடாபாடு அல்லது குடாபாடுவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தோனி பெர்னாண்டோபிள்ளை என்பவரிடமிருந்து இயந்திரப் படகு ஒன்றை வாங்கி வந்தார். அதனுடைய பெயர்தான் ‘சாந்த பேதுறு’. 2 சிலிண்டர் லீஸ்ட்டர் இன்ஜின் பூட்டிய படகு அது. அவர் அந்தப் படகை வாங்கும்போது அதன் வயது 30-க்கு மேல். நீலம் மற்றும் வெள்ளை நிறத்தைக் கொண்ட அந்த படகு, கடல் அட்டை குளிக்கும் தொழிலுக்கு அவரால் பயன்படுத்தப்பட்டது.

Life-cycle-of-sandfish-based-on-cultured-situations

மழை காலம் முடிவுக்கு வந்து, வானம் வெளிக்கும் காலத்தில், இளம் பிறை தோன்றும். அது அநேகமாக தை மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரமாக இருக்கும். இக்காலத்தில் பெருமழை மற்றும் வாடைக் காற்றின் உக்கிரம் தணிந்து கடல் சீராகும். முத்துப்போல தெளிவாக கடல் இருக்கும். வள்ளத்தில் இருந்து பார்த்தால் மூன்று பாக ஆழத்திலும் கடல் அடித்தளம் தெளிவாகத் தெரியும். வழிச்சல், படுப்பு வலை, அறகொட்டியான் வலை போன்ற மாரிகால தொழிற்பாடுகள் குறைந்து வரும் காலம் இது.

இக்காலத்தில், அட்டை குளிக்கும் தொழில் ஆரம்பமாகும். எமது ஊர்த் துறையிலிருந்து 20 நிமிட படகு ஓட்டத்திலேயே அட்டை குளிக்கும் பாடுகள் வந்துவிடும். அநேகமாக, அதிகாலைத் தொழில்களான அடிவலை, களங்கண்டி, படுப்புவலை ஏற்றுதல் போன்றவை முடிந்து காலை உணவை முடித்து விட்டு, இளைஞர்கள் வந்து இயந்திரப் படகில் ஏறி அட்டை குளிக்கப் புறப்படுவார்கள். இது காலை எட்டு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் நடைபெறும்.

Elephant-Trunkfish-a-least-endangered-species-of-sea-cucumber

அவர்கள் திரும்பி வரும்போது பிற்பகல் 4 மணி 5 மணி ஆகிவிடும். கரைக்கு கொண்டுவரும்  அட்டைகளை எனது அய்யாவின் தந்தையார் சுவானி வைத்தியானின் மேற்பார்வையில் எனது தாயார் விக்டோரியாவும், அய்யாவின் அப்பு மாமியின் மகனான அந்தோனிப்பிள்ளை மாமாவும் பதப்படுத்தும் வேலையை ஆரம்பிப்பார்கள். குடல் அகற்றி சுத்தம் செய்யப்பட்ட அட்டைகள் மொழுமொழுப்பு தன்மை மாறி, அவற்றின் உடலில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி வெளியேறி இறுகும் வரை கொதிநீரில் அவிக்கப்படும். அவித்த அட்டைகள் கடற்கரையில் உள்ள மணலில் அமைக்கப்பட்ட கிடங்கில் தாழ்க்கப்படும். அடுத்த நாள் விடிய காலை, அவை கிளறி எடுக்கப்பட்டு கடல் நீரில் நன்கு கழுவப்பட, அவற்றின் உடலில் உள்ள சுண்ணாம்பு கவசம் கழன்று போகும்.

பின்னர் மறுபடியும் அவை அவிக்கப்படும். அவிக்கப்பட்ட அட்டைகள் இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காய விடப்படும். பின்பு மறுபடியும் சுடு நீரில் சில நிமிடங்கள் அவித்த பின் காய விடப்படும். இந்த மூன்றாம் அவித்தலின் தேவை என்னவெனில் அட்டைகள் மேலும் இறுக்கம் அடைவதற்காகும். பின்னர் அவை சில நாட்கள் வெயிலில் காய வைக்கப்பட்ட பின், சாக்குகளில் கட்டி சில வாரங்கள் பாதுகாக்கப்படும். பின்பு அந்த அட்டை மூடைகள் எமது பகுதியைச் சேர்ந்த மீன்பிடி சமாசம் – மீன்பிடிச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். எமது கடலட்டைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. ஏற்றுமதி செய்யப்பட்ட அட்டைகளுக்கான பெறுமதி, ஏற்றுமதி செய்யும் மீனவர்களின் பெயரில் சிங்கப்பூர் வெள்ளிகளில் சங்கங்களை வந்து சேரும். அந்த வெள்ளிகள் கூட்டுறவுச் சங்கத்தின் மேற்பார்வையில் இலங்கை ரூபாய்க்கு மாற்றப்பட்டு, காசோலைகளாக மீனவர்களுக்கு வழங்கப்படும்.  

மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களின் யூனியன்

கடல்படு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இலங்கை வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல. கடற்சங்குகள் இந்தியாவுக்கும் – தென்னிந்தியப் பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வழக்கம் சேர – சோழ – பாண்டிய காலத்துக்கு முன்பேயே இருந்ததை வரலாற்றுப் பதிவுகளில் நாம் காணமுடியும். அதனைத் தமது அதிகாரத்துக்குள் கொண்டு வந்து, வரி விதித்து ‘ஒழுங்குபடுத்தியது’ ஆங்கிலேயர் ஆட்சியே. சுதந்திரத்துக்குப் பின் சங்குகளுடன், கருவாடு ஏற்றுமதியும் ஆரம்பிக்கப்பட்டது.

 யாழ்ப்பாணப் பின்னணியையும் – சிங்கப்பூர் – மலேயா தொடர்புகளையும் கொண்டிருந்த அரசியல்வாதியான ஜி. ஜி. பொன்னம்பலத்தின் கீழ், அவர் தொழில்துறை மற்றும் மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில், (ஆனி -1952-ஐப்பசி 1953) அவரின் தனிப்பட்ட தொடர்புகள் ஊடாக கடலட்டை  சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய ஆலோசிக்கப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் இருந்து அட்டையை இறக்குமதி செய்ய விரும்பியது. இலங்கையில், தனியார் அந்நியச் செலாவணியை கையாளும் வர்த்தக முறைமை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும், சிங்கப்பூருடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கு, அந்நியச் செலாவணியைக் கையாளும் – லைசென்ஸ் – அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற அரசியலில் “புயல் வீசிய” காரணத்தினால், டட்லி சேனநாயக்காவிற்கு பின்னால் பதவிக்கு வந்த ஜெனரல். யோன் கொத்தலாவலையால் டட்லி சேனநாயக்காவின் ‘கையாள்’ என அறியப்பட்ட ஜி. ஜி. பொன்னம்பலம் மந்திரி பதவியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டார். இதனால், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் நிறுத்தப்பட்டன. அதில் ஒன்று கடலட்டை ஏற்றுமதியாகும்.

1965 இல் மறுபடியும் ஐக்கிய தேசிய கட்சியின் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியில் சிங்கப்பூருக்கு அட்டை ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னின்று செயற்படுத்தியவர் டட்லி அரசில் மீன்பிடி மற்றும் தொழில்துறை அமைச்சராக 1965 இல் பதவியேற்ற பிலிப் குணவர்த்தன அவர்கள் ஆவர். ஆரம்பகால மார்க்சிசவாதியான பிலிப் குணவர்த்தனாவுக்கு, தனியார் துறை மீதும் – தேசியப் பொருளாதாரத்தில் அவை செலுத்திய அவற்றின் ஆதிக்கத்தின் மீதும் பெரிதாக பிடிப்பு இருக்கவில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் மிக வெற்றிகரமாக இயங்கிய கூட்டுறவு துறையினூடாக கடலட்டை மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் பரீட்சார்த்த முயற்சியை அவர் ஆரம்பித்தார். கடலட்டையானது, இலங்கையின் முழுக் கடற்பரப்பிலும் காணப்பட்டது. அதேவேளை, வர்த்தக அடிப்படையில் அதை சந்தைப் பொருளாக்கும் (Commercial Commodity) வகையில், சுலபமாகப் பிடிக்க கூடியதாகவும், மிகப் பெருந்தொகையிலும் வடக்கின் மேற்குக் கரையோரத்திலேயே கடலட்டைகள் பெருகியிருந்தன.

இதனாலேயே, வடக்கின் கூட்டுறவு சங்க இயக்கம் ஏற்றுமதியை பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டும் என்று பிலிப் குணவர்த்தனா விரும்பினார். வடமாகாண மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களின் யூனியன் லிமிட்டெட் என்ற நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கப்ட்டது. இந்த நிறுவனத்துக்கு அந்நியச் செலாவணியை கையாளும் அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஏற்றுமதி அனுமதியும் தனித்துவமான முறையில் வழங்கப்பட்டன.

இந்த நிறுவனத்தின் மூலம் 1965-1966 காலப்பகுதியின் செய்த மொத்த கடலட்டை ஏற்றுமதி 20,225, GWT (Gross Weight Ton) அல்லது 112781 kg ஆகவும், இதற்காக கிடைத்த தொகை 3,80,528.00 – இலங்கை  ரூபாய்களுமாகும்.

தனியார்மயமும் தாழ்ந்து போன படகும்

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த ஆட்சியில் முதல் முறையாக தனித்துவமான மீன்பிடி அமைச்சு உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சின் மந்திரியாக ஜோர்ஜ் ராஜபக்ச பதவியேற்றார். இவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய குடும்ப உறவினர் ஆவார்.

Boiling-helps-preserve-and-cook-the-sea-cucumbers

இவரின் பதவி காலத்தில் கடல் உணவு ஏற்றுமதி விரிவுபடுத்தப்பட்டது. கடல் தொழில் செய்யும் சமூகத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் கடற்றொழிலை நவீனப்படுத்தும் நோக்கிலும் பெரிய முதலீடுகள் செய்யப்பட்டன. நவீன மீன்பிடிப் படகுகளையும், தொழில் முறைமைகளையும் இலங்கையில் அறிமுகம் செய்ய இம்முதலீடுகள் பயன்பட்டன. இக்காலத்திலேயே மீனவர்களுக்காக மானிய முறையும், மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான குறைந்த வட்டிக் கடன்களும் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டன.

70 களின் ஆரம்பம் வரை பெரிய அளவில் வறுமையும், சமூகப் பின்னடைவும் கண்டிருந்த மீனவ சமூகம் – சமூக பொருளாதார அடிப்படையில் தலைநிமிரும் காலம் எழுபதுகளின் இறுதியில்             ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் அரசால் உருவாக்கப்பட்டது. கணிசமான அளவு பணப் புழக்கம் அச்சமூகத்திலே நிலவியது. அவரவர் விருப்பத்திற்கேற்ற கடல் தொழில்சார் முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக, ஆழ்கடல் மீன்பிடி தொடக்கம் கரையோர களக்கடல் வரையுமான பன்மைத்துவமான கடல் தொழில்களைச் செய்யும் வாய்ப்பு வடக்கு மீனவர்களுக்கு கிட்டியது.

அதிகாலையில் படுப்புவலை ஏற்றி விட்டு வந்து, இரண்டாவது வருமானம் வரும் வகையில் பகலில் அட்டை குளிக்கப் போவது வழக்கமாகியது. வாடைக் காற்று வீசும் காலத்தில் ‘பெருமெடுப்பில்’ வாழ்ந்து, சோளகம் வீசும் கோடை காலத்தில் பசியுடன் வாடும் நிலைமை மாற்றப்பட்டது. ஸ்ரீமாவோ அரசின் காலத்தில் அடித்தளமிடப்பட்ட கடல் சார்ந்த பன்மைத்துவமான பொருளாதார வளர்ச்சி, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே. ஆர். ஜெயவர்த்தன வென்று பிரதமராகி ஆட்சி அமைத்த பின்னும் தொடர்ந்தது.

அதன் பின்னர்   ஜனாதிபதியாகி அனைத்து அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தன தனது வர்க்கத்தின் நலன் கருதியும், மேற்கத்தேய நலன்களைக் கருதியும் இலங்கையின் பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரமாக, ஏற்றுமதி-இறக்குமதி சார் பொருளாதாரமாக மாற்றியமைத்தார். இம்மாற்றமானது கடல்சார் பொருளாதாரத்தையும் அதன் கட்டுக்குள் கொண்டு வந்தது. கடல்சார் பொருளாதாரத்தில் தனியார் மூலதனம் பங்கெடுக்க வேண்டும் என்ற அரசியல் காரணத்தை முன்னிறுத்தி, வெளிநாடுகளுக்கு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அனுமதிப் பத்திரங்களும், அந்நியச் செலாவணியை கையாளும் அனுமதியும் தனியார் நிறுவனங்களுக்கும், அரசியல் செல்வாக்கு கொண்ட தனி நபர்களுக்கும் வழங்கப்பட்டன. இது 1982 ஆம் ஆண்டு, அமைச்சரவையில் எடுத்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

இப்படியிருக்க, 1982 கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி, சிலாபம் கற்பிட்டி பிரதேசத்தில் அட்டைத் தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது அய்யாவின் சாந்த பேதுறு, வேலணை – புங்குடுதீவு பாலத்துடன் மோதுண்டு, அடுத்த நாள் கடலில் மூழ்கிப் போனது. அந்த  திகதியில் இருந்து எனது தந்தையாரின் கடலட்டைத் தொழிலும் முடிவுக்கு வந்தது.

வெள்ளிக் காசுக்கும் – அதிகாரப் பேராசைக்குமாய் காட்டிக் கொடுத்தவர்கள்

Sea-cucumber-Project

1982 ஆம் ஆண்டின் இறுதியில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசு கடலுணவு ஏற்றுமதியை தனியாருக்கு வழங்கும் சட்டமூலத்தைக் கொண்டுவரத் தீர்மானித்தபோது, அந்தச் சட்டத்தை கொண்டுவருவது பற்றி மீனவ சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டங்கள் மீனவர்களின் நேரடிப் பங்களிப்புடன் நடத்தப்படவில்லை. அவை அதிகாரிகள் மட்டத்திலேயே நடைபெற்றன. அன்று, இந்தச் சங்கங்களின் மேலதிகாரிகளாக இருந்த கடல் தொழில் சமூகம் சாராத நபர்கள், கடலுணவு ஏற்றுமதியை தனியார்மயப்படுத்துவதை ஆதரித்தார்கள். அவற்றை மீனவ சங்கங்களின் மூலம் ஏற்றுமதி செய்வதனால் சங்கங்களுக்கும், மீனவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கும் நட்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டினார்கள், அந்த சங்கங்களின் மேலதிகாரிகள்.  

தனியார் நிறுவனங்களிடம், அதிலும் குறிப்பாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய அரச அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் அவர்கள் “வெள்ளிப் பணத்தை” இலஞ்சமாக வாங்கிக் கொண்டு மீனவ சங்கங்களின் ஏற்றுமதியை முடக்கினார்கள். ஆட்சியாளர்களின் அரசியல் கோட்பாட்டு மாற்றத்தின் விளைவாக மானியங்கள் நிறுத்தப்பட்டன. இலகு கடன் பெறும் வசதிகள் மறுக்கப்பட்டன. வெளிநாட்டுக்கு அட்டை ஏற்றுமதிக்கு செய்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வருமானத்தை இழந்தது. சிறு தொழிலாளர்களின் காவலனாக இருந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

மீனவ சங்கங்களில் உறுப்பினராகவிருந்த மீனவர்களால் செய்யப்பட்ட கடல் அட்டை ஏற்றுமதியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் கொடுத்த சில வெள்ளிக் காசுகளுக்காக வரையறையற்ற முறையில் அட்டைக் குஞ்சுகள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தக் காரணத்தினால் 1983 ஆம் ஆண்டு இறுதியில் வடக்குப் பிரதேசம் தொடக்கம் புத்தளம் வரையிலான கடற்பரப்பில் கடலட்டையானது 90 வீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி அடைந்தது. 1983 க்கு பின்பு வந்த காலத்தில், வடக்கு மாகாணம் சார்ந்த அட்டை ஏற்றுமதி, போரின் காரணமாக இன்னும் பெருமளவில் வீழ்ச்சி அடைந்தது.

வடக்கில் சிவில் யுத்தக் காலத்தில், களக்கடலில் அட்டை குளிக்க போனவர்கள், பயங்கரவாதிகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அல்லது ஆயுதக் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்கள். கடலோடிகளின் பாரம்பரிய கடற் பிரதேசம், பௌத்த சிங்கள பேரினவாதக்  கொடுங்கோன்மை இராணுவ ஒடுக்குமுறை பிரதேசமாக மாறியது.

தேசிய விடுதலைக்குப் போராட போனவர்கள் ‘தமக்கான போக்குவரத்துக் கரை’ என்ற பெயரில் சில கடற்கரைப் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். அங்கு பாரம்பரியக் கடலோடிகள் தொழிற் செய்வது   தடை செய்யப்பட்டது. அந்தப்போராட்ட இயக்கங்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்திய ரோலர்களை அந்தக் கடல் பிரதேசத்துக்குள் வர அனுமதித்தார்கள். அன்று அந்த இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட எமது வட கடல் இன்றுவரை விடுதலை அடையவில்லை.

அன்று முதல் கடல் கொள்ளையும், இயற்கை வள அழிப்பும் இன்றுவரை தொடர்கிறது. தமிழ் அரசியல்வாதிகளும்  இந்தியக் கடல் கொள்ளைகளுக்கு எதிராக இன்று வரை பெரிதாகப் பேசுவதில்லை. மக்களின் அன்றாட சீவியத்தை விடவும், கடலின் இயற்கை வளத்தின் பெறுமதியை விடவும், அவர்களுக்கு தமது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும், அதிகார வேட்கையை தீர்த்துக் கொள்வதுமே பெரிதாக இருக்கின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10465 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)