சமூக மாற்றக் கருவியாக பக்திப் பேரியக்கம்
Arts
30 நிமிட வாசிப்பு

சமூக மாற்றக் கருவியாக பக்திப் பேரியக்கம்

October 26, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

“சனாதன ஒழிப்பு” விவகாரம் ஆப்பிழுத்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்ட பின்னரும் விடாத தூவானமாக சனாதனக் கோட்பாட்டு அடிப்படைகளைத் தாக்கும் வீரப் பிரதாபங்கள் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டவாறுள்ளன. இவ்வகை விட்டுக்கொடுக்காத வீரதீர முழக்கங்களை எழுப்புகிறவர்களாக மார்க்சியம் பேசுகிற சில பேர் இருப்பது காலதேச நிலவரங்களை விடவும் தமது ‘புரட்சி வேடம்’ கலையக் கூடாது என்ற அவர்களுக்கான அக்கறையையே வெளிப்படுத்துகிறது.

முன்னத்தி ஏராக ‘சனாதன ஒழிப்பு’ விவகாரத்தைத் தொடக்கி வைத்திருந்த தொல். திருமாவளவன் ‘இந்து சமயத்தின் தொன்மை பற்றிய நம்பிக்கைகளைத் தாக்கவரவில்லை; பழமையின் பேரால் சாதி – பாலின ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்துவதனையே எதிர்க்கிறோம்’ எனும் வகையிலான தன்விளக்கங்களை அளித்துப் ‘பின்வாங்குவது’ அதிதீவிரப் புரட்சியாளர்களுக்கு உவப்பானதாகப்படவில்லை; வட இந்தியாவிலும் சனாதன ஒழிப்புக்கு ஆதரவு பெருகுவதான சில உதாரணங்களைக் காட்டி கானல் நீரில் புரட்சிப் பயிர்விளைவிக்க முயல்கிறார்கள்.

இந்து சமயத்தின் அடிப்படைகளைத்  தாக்கியவாறேதான் திராவிடர் இயக்கம் கடந்த நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் வீறுகொள்ளத் தொடங்கி வளர்ந்துவந்ததென்றால் அது தொடர்ச்சியாக முன்னெடுத்த சமூக நீதிச் செயலொழுங்குகள் பெற்றுவந்த வெற்றியின் பேறு என்பது அனைவர்க்கும் தெரியும். இந்து மதப் பற்றாளர்களும் திராவிடரியக்க அரசியலைப் பெருமளவில் ஆதரித்தமையாலேயே 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆட்சியை வென்றெடுக்க இயலுமாக அமைந்தது. மட்டுமல்லாமல், இன்றளவும் தி.மு.க – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) எனும் திராவிடரியக் கட்சிகளே மாறி மாறி அதிகாரத்தைக் கைமாற்றித் தொடர வாய்ப்பளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்பாட்டுத் தளப் போராட்டங்களை மட்டும் திராவிடரியக்கத்தின் வாயிலாக முன்னெடுத்து வந்த ஈ.வெ.ரா.பெரியாரில் இருந்து வெளியேறி அண்ணாதுரை தி.மு.க. வை ஆரம்பித்த போதே ‘ஒன்றேகுலம், ஒருவனே தேவன்’ என்ற சுலோகத்தின் ஊடாகக் கடவுள் நம்பிக்கையாளர்களுடன் (அவரளவில் கடவுள் நம்பிக்கை இல்லாமலே) ஏற்படுத்திய சமரசம் வாயிலாக திராவிடரியத்தின் ஒரு அடிப்படையை அண்ணாதுரை கைவிட்டிருந்தார். அரசியல் அதிகாரத்தை வெற்றிகொண்டு அண்ணாதுரையும் அவரது மறைவை (1969) அடுத்துத் தலைமையேற்ற கலைஞர் கருணாநிதியும் மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாகவே திராவிடரியக் கோட்பாட்டாளர்களின் சமூக நீதிக் கனவுகள் நிறைவேறின என்ற வகையில் ‘தேவனொருவன்’ ஏற்றுக்கொள்ளப்பட்ட சமரசமும் ஏற்புடையதே எனக் கோட்பாட்டாளர்கள் பலரால் சமாதானம் காண இடமேற்பட்டது. கலைஞரைவிட்டு நீங்கி எம்.ஜி. இராமச்சந்திரன் உருவாக்கிய அ.தி.மு.க மத சார்புச்சறுக்கல்கள் பலவற்றுக்கு ஆட்பட்ட போதிலும் (முன்னோடித் தலைவர்கள்போலன்றி எம்.ஜி.ஆர் தன்னளவிலும் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தபடி) சமூக நீதி நடைமுறைகளையும் சட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்தகாரணத்தால் திராவிடரியக்கத் தொடர்ச்சி சிலபல அம்சங்களில் அ.தி.மு.க. ஊடாகவும் பேணப்பட்டதாகக் கணிக்கப்படுவதுண்டு.

Anna

இன்று இந்துத்துவ அரசியலுக்கு உடன்போக்கில் அ.தி.மு.க. தளம் அமைத்துக் கொடுப்பதும் இந்து சமயத்தைப் புரிந்துகொள்ளாமல் எதிர் நிலைச் செயற்பாடுகளைத் தி.மு.க. வினர் சிலர் அதிதீவிரப் பேசுபொருளாக்குவதும் காரணமாக தமிழகத்தில் இந்துத்துவம் ஆழ ஊடுருவும் வாய்ப்பைச் சாத்தியப்படுத்துகின்ற தவறு திராவிடரியப் போதாமையின் பாற்பட்டது. இதனைத்தடுத்து மக்கள் விடுதலை மார்க்கம் நோக்கி சமூக நீதி அரசியலை ஆற்றுப்படுத்தவேண்டிய பொறுப்புக்குரிய மார்க்சியர்கள் சிலரே ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டைக்கூட்டியதன் வாயிலாக இவ்விவகாரத்தை நெய்யூற்றிப் பற்றியெரிய இடமேற்படுத்தி உள்ளனர். முன்னர் பெரியாரியம் முன்னிறுத்திய சமூக நீதிக்கோரிக்கையின் அவசியத்தைக் காணத் தவறித் திராவிடரியக்கம் என்பது ஏகாதிபத்தியத்துக்குக் காட்டிக்கொடுக்கும் அமைப்பாக்கம் என எதிர்நிலைப்பாட்டை முன்னெடுத்த தவறை நிவர்த்திப்பதை விடுத்து எதிர் முனைக்குச்சென்று திராவிடரியப் போதாமைகளைத் தாமும் கையேற்று சமூக விடுதலைக்குப் பாதகம் விளைக்கும் கைங்கரியத்தைத் தமிழக மார்க்சியர் சிலர் செயற்படுத்தி வருகின்றனர்.

periyar

‘தொன்றுதொட்டு வரும் நெறி’ என்ற பொருளில் ‘சனாதன தர்மம்’ என்பதனை விளங்கிக் கொள்பவர்களாக இந்துக்களில் பெரும்பாலான மக்கள் உள்ளனர். ‘இந்து சமயம்’ எனப் பிரித்தானிய ஏகாதிபத்தியம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பேரால் வடிவப்படுத்தும் முன்னரே ‘சனாதன தர்மம்’ , ‘வைதிகநெறி’ என்பதாக இயங்கிய – இயக்கிய வாழ்முறை இங்கு இருந்து வந்துள்ளது; சைவம், வைணவம், சாக்தம், நாட்டார் சமயங்கள் என இயங்கிய பல வகைப்பிரிவுகளும் ஒரே கோட்பாட்டு அடிப்படையாகிய, ‘ஒரு முழு முதல் கடவுளும் பரிவாரத் தெய்வங்களும்’ என்ற அடித்தள நிலைப்பாட்டுக்கு உரிய ‘ஒரு மதம்’ எனும் ‘மதமல்லாத மத’ வாழ்வியல் இங்கே தொடரும் வகையில் திணைமேலாதிக்க அரசியல் செல்நெறி ஒன்று எமது சமூகத் தளத்துக்கானதாக இயக்கம் கொண்டிருந்தது.

பக்தி இயக்கத்தை வடிவப்படுத்திச் செயற்படுத்தியவரான திருநாவுக்கரசர் ‘முதல் சங்கத்தில் சிவன் தலைமையேற்றுத் தமிழ் வளர்த்தார்’ என்ற புராணப் புனைவைத் தொடக்கிவைக்க வேண்டிய சூழல் இருந்தது. அவரது காலத்திலும் முன்னதாகச் சில நூற்றாண்டுகளாகவும் (கிமு 4 ம் நூற்றாண்டில் தமிழகத்தினுள் பிரவேசிக்கத்தொடங்கிய போதிலும் கிபி 2 ம் நூற்றாண்டு முதலாக) அவர்களுக்கான சங்கம் வாயிலாகத் தமிழ் வளரப் புதிய தடம் அமைப்பவர்களாகப் பௌத்தர்களும் சமணர்களும் திகழ்ந்தனர். நாவுக்கரசரும் நீண்டகாலம் சமணப் பள்ளியில் இயங்கிச் சங்கங்களின் செயற்பாட்டில் நிபுணத்துவ அனுபவத்தைப் பெற்றிருந்தவர் தான். இந்த அவைதிக மதங்களுக்கும் மூத்ததான ஆசீவக மதம் தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டு வடிவப்படலுக்குமான அடித்தளங்களை கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்தே வழங்கி வந்திருந்தது. வணிகச் சிந்தனைக்கான அறிவியல் பூர்வக் கருத்தியல்களுடன் கூடவே அக்காலத்துக்குரிய எல்லைப்படுத்தல்களுடனான கடவுள் நம்பிக்கைகள் அப்போதிருந்தே செயற்பட்டு வந்துள்ளன. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த’ முன்னோடிக் கடவுளருடன் தாய்த் தெய்வ வழிபாட்டின் கடவுளர்களும் அவ்வகைப்பட்டவர்கள். பொருள் தேடலின் பேறான செல்வத்துக்குரிய இலட்சுமி, நாடுகள் கடந்த வணிகத் தேவையுடன் இணைந்த அறிவு நாட்டத்துக்கான சரஸ்வதி போன்றகடவுளர்களுடன் மூத்த தாய்த் தெய்வமான மூதேவி வழிபாடும் தமிழருக்கு உரியனவாக அப்போதிருந்தே நிலவிய சூழலில் அவற்றையும் ஏதோவொரு வகையில் உள்வாங்கி, அவற்றைவிடவும் மூத்தவராகவும் மேலானவராகவும் சிவனைப் ‘பழமைக்குப் பழமையானவராயும், புதுமைக்குப் புதுமையானவராயும்’ உயர் பரம்பொருளாக்கும் ஐதீகத்தை நாவுக்கரசர் தொடக்கும் வண்ணம் முதல்சங்கப் புராணப் புனைவு ஊடாகக் கருத்துரைத்து நிலைநிறுத்தினார். தமிழின் தொன்மையும் அதனுடன் இணைந்த ‘தொன்றுதொட்டு இயங்குவதான’ (சனாதன) மத நம்பிக்கைகளும் பக்திப் பேரியக்கத்தின் வாயிலாகப் புதிய தளவிரிவாக்கங்களைப் பெற்றன. 

பிரதான முரண்பாட்டின் சமூக சக்திகள்

பக்திப் பேரியக்கம் அடிப்படையான சமூக அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கான வரலாற்றைப் படைத்திருந்தது என்பதான க. கைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்பினை அநேகமான இந்தியவியலாளர்கள் மட்டுமன்றித் தமிழக மார்க்சிய அறிஞர்களும் கவனத்தில் எடுத்ததில்லை. வடஇந்தியாவை மையப்படுத்தியதான வரலாற்று எழுது முறையே கோலோச்சி வந்துள்ளது என்பது (கீழடியில் கிமு 6 ம் நூற்றாண்டுக்குரிய நகரப் பண்பாட்டுஆதாரங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஏற்பட்டு வரக்கூடிய கருத்துமாற்றங்கள் இனி வெளிப்பட இயலும்) அடிப்படையான ஒரு காரணம். மட்டுமன்றி, தனித்துவச் செல்நெறியுடன் தமிழர் வரலாற்றுத் தடம் இயங்கி வந்துள்ளது என்பதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதுடன் நவீன வரலாற்றில் திராவிடரியக்கம் சாதித்த பலமான பக்கங்களைப் புறக்கணித்த அதேவேளை அவர்களின் தவறுகளில் ஒன்றான நாத்திகவாத நிலைப்பாட்டில் இந்து மதத்தின்மீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களாலும் தமிழக மார்க்சியரது இந்தத்தளத்துக்குரிய சிந்தனை வளம் எல்லைப்பாட்டுக்கு ஆட்பட்டிருந்தது. இவை குறித்துப் பகுதி 3 இற்குரிய “சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்” என்பதில் பொதுவாகவும் அதன் 5 வது இயலான “நாத்திகவாத வெகுஜன எழுச்சி” என்பதில் குறிப்பாகவும் பார்க்க இயலும்; இங்கு பக்தி இயக்கம் வாயிலாக சமூக அமைப்புமாற்றம் ஏற்பட்டிருந்ததா என்பது குறித்தான பேசுபொருளை அலசுவோம்!

பக்திப் பேரியக்கத்தில் நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகியோரது பங்களிப்புகளில் பிராமணப் புனிதப்படுத்தலின் பேரால் சம்பந்தருக்கு அதீத முக்கியத்துவத்தை வெள்ளாளச் சமூகத் தளத்துக்கு உரிய சிந்தனையாளர்களே வழங்கியிருந்த சூழல் பற்றிக் கடந்த இயல்களில் பேசி வந்துள்ளோம். இதற்கு எதிர் முனைக்குரிய நிலைப்பாடு நவீன வரலாற்றில் திராவிடரியக் கருத்தியலாளர்களால் முன்வைக்கப்படுகின்றது. வேத முதன்மையைச் சம்பந்தர் முன்னிறுத்திய அதேவேளை அதற்கு மாறாகவும் சாதிச் சழக்குகளுக்கு எதிராகவும் நாவுக்கரசர் களமாடிய வகையில் பிராமணிய மறுப்பு நாவுக்கரசரிடம் வெளிப்பட்டதாக இன்றைய திராவிடரியச் சிந்தனையாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். பிராமணர் – பிராமணரல்லாதவர் எனும் வேறுபட்ட தளங்களுக்கு உரியவர்களான அவ்விரு ஆளுமைகளது வெளிப்பாட்டு முறைகளில் வேறுபாடுகள்இருந்த போதிலும் அவை ஒன்றையொன்று எதிர்ப்பனவாக அன்றி (அப்போதுவெள்ளாள – பிராமண முரண் எந்த வடிவிலும் வெளிப்பட இடமற்ற வகையில் வெள்ளாளத் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாகப் பிராமணர்கள் இயங்கினார்களேயல்லாமல்) இரு தரப்பினரும் ஒரே பொது எதிரியை இலக்குவைத்துத் தாக்குதலை முன்னெடுத்ததன் ஊடாக ஒரு குறிக்கோளை வெற்றிகொள்ளும் இலட்சியத்துக்குரிய சமாந்தரத் தள இயக்கத்தைக் கொண்டிருந்தனர் என்ற உண்மை கவனங்கொள்ளப்படுதல் அவசியம்.

அவர்களது தாக்குதல் இலக்கு வணிக நலன் பேணும் அவைதிக மதங்கள் (பௌத்தமும் சமணமும்); அவர்கள் வென்றெடுக்க முனைந்த இலட்சியம் நிலப்பிரபுத்துவ நலனை மேலோங்கச் செய்யும் சிவனுக்குரிய மேலாதிக்கத்தைநிலை நிறுத்துதல். பொருளுற்பத்தியும் விநியோகமும் என்ற சமூக – பொருளாதாரத் தளத்துக்குரிய கருத்தியல் பிரதிநிதிகள் இடையேயான போராட்டம் முன்னிலைப்பட்டு வெளிப்படுவதன் வாயிலாகவே எமக்கான சமூகமாற்றச் செல்நெறி இயங்கி வந்துள்ளது என்பதனைக் கவனங்கொள்பவர்களில் ஒரு தரப்பினர் ‘முற்போக்குச் சிந்தனைக்குரிய அவைதிக மதங்களை’ வீழ்த்திச் ‘சாதியப் பிற்போக்குச் சிந்தனைக் கருவூலமான பிராமணியத்தை’ பக்தி இயக்கம் அதிகாரம்பெற வைத்தமையைக் காரணமாக முன்னிறுத்தி முற்போக்கான வரலாற்று மாற்றமாக இதனைக்கொள்ள இயலாதெனக் கருதுவர் (அதன்பேரிலான கண்டுபிடிப்பே நாவுக்கரசர் – சம்பந்தர் முரண்). இவர்களும் ‘பிராமணஎதிர்ப்பு’ எனும் திராவிடரிய எல்லைக்குள் தம்மை அறியாமலே ஆட்பட்டுவிடுகின்றனர் (நடைமுறையில் பிராமண வெறுப்பு உள்ளூர இருந்தாலும்‘பிராமணிய எதிர்ப்பை’ அன்றிப் ‘பிராமண எதிர்ப்பை’ முன்னெடுக்கவில்லைஎனத் திராவிடரியக்க கர்த்தாக்கள் போலவே இந்தத் ‘திராவிடரியமார்க்சியர்களும்’ சொல்லுவர்). 

பிராமணியத்தை முன்னிறுத்தி ஆதரவா, எதிர்ப்பா என்பதாக (அனைத்துஅம்சங்களையும் கவனத்திலெடுக்காத) ஒருவழிப் பாதை விவாதத்துக்குள் மாட்டுப்படாமல் பொருளுற்பத்தித் தளத்தில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொள்ளும் மற்றொரு தரப்பினர் இன்னொரு விவாதத்தின் வாயிலாகப் பக்தி இயக்கம் சமூக அமைப்பு மாற்றத்தை நிகழ்த்தவில்லை எனக்காட்டுவர். பிரதான மோதலுக்கு ஆட்பட்ட அவைதிக – வைதிக மதங்களை வணிக-விவசாயச் சமூக சக்திகளின் பிரதிநிதிகளாகக் கணிப்பதில் தவறுள்ளது என இந்தத் தரப்பினர் விவாதிப்பர். இதனைத் தொடக்கி வைத்த மே.து. ராசுகுமார் சோழப் பேரரசர் கால நிலமான்ய அமைப்புக் குறித்த ஆழமான ஆய்வை மேற்கொண்டிருந்தார். அந்தக் காலத்துக்கான நிலப்பிரபுத்துவ எழுச்சிக்கும் விருத்திக்கும் வைதிக சமயங்களான சைவமும் வைணவமும் உதவியாக அமைந்திருந்தன என்பதனை ஏற்றுக்கொள்ளும் மே.து. ராசுகுமார் வைதிகமதத்தால் வீழ்த்தப்பட்ட பௌத்த – சமணத் தரப்பினரை வணிகத்துக்கு உரியோராக அன்றிச்  சிறுநிலவுடைமையாளர் என்றே இனங்காண்கிறார்.

முன்னதாக, அறநெறிக்காலம் வணிக மேலாதிக்கத்துடன் இருந்தது. அவர்கள் வணிக வளத்தைப் பயன்படுத்தித் தமக்கான காணி, நிலங்களைச் சொந்தமாக்கி இருந்ததோடு தமது மதங்களான பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் அந்த நிலங்களைத் தானமாக வழங்கி இருந்தனர். அந்தவகையில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வணிக வாய்ப்புடன் இருந்த சிறு நிலவுடைமையாளர்களுக்கும் (அவர்களது கருத்தியல் பிரதிநிதிகளாகச் சிறு நிலவுடைமையுடன் இருந்த அவைதிக மத பீடங்களுக்கும்) பெரு நிலப்பிரபுத்துவத்துக்கும் இடையேயான போராட்டமே வைதிக மதங்களது எழுச்சியில் வெளிப்பட்டிருந்தது என்பது ராசுகுமாரின் கருத்தாகும். வணிகர்களுக்கான சிறுநிலவுடைமை என்பது அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் விளைச்சல்களை வழங்கவல்லவை. வர்த்தகப் பண்டங்களாகத் திகழ்ந்த ஏலம், கராம்பு, மிளகு, கறுவா போன்றவற்றைகூட பெரும் பண்ணையாக உற்பத்தி செய்யப் பயன்பட்ட நிலபுலங்களல்ல அவை. நிலப்பிரபுத்துவ எழுச்சிக்குரிய (வணிகத்தை மேற்கொள்ளாத) விவசாயத் தரப்பினரது நிலமும் கூட அதே காலப் பரப்பில் (கிபி 7 ம் நூற்றாண்டில்) பெருவீத விவசாய உற்பத்திக்கு (சாகுபடிக்கு) உரிய வளர்ச்சியை எட்டியிருக்கவில்லை. அப்போது வணிக – விவசாய (இவர்கள் அப்போதே பெரு நிலப்பிரபுக்கள் என்ற விருத்தியை வந்தடைந்தவர்கள் அல்ல) தரப்பினர்களுக்கு இடையேயான அதிகாரப் போராட்டம் அவைதிக – வைதிக மதங்களின் தளத்திலேயே நடந்தேறியது; அவைதிக மதமாக ஆட்சி அதிகாரத்தில் அப்போது வணிகக் கருத்தியலில் உறுதியுடன் இருந்த சமணமே  இருந்தது என்பதும் கவனிப்புக்குரியது. சமண மதத்தில் இருந்து வெளியேறி ஆட்சியாளர்கள் சைவத்தை ஆதரித்த பின்னரே நிலப்பிரபுத்துவச் சார்பான பண்ட உற்பத்திக்கான சாகுபடி சாத்தியப்பட்டு பெருவீத விவசாயப் பெருக்கமும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை உள்ளடக்கியுள்ள வெள்ளாள, பிராமண சமூக சக்திகளும் (திணைகளும் – சாதிகளும்) பெரு நிலப்பிரபுத்துவச் சாதிகளாகத் தோற்றம்பெற்று விருத்தி பெறலாயின (திணை வாழ்வியல் கால வாசனைப் பொருட்களான ஏலம் போன்றவை இயற்கை விளைபொருட்களாக அமைந்தவை எனும் அம்சம் கவனிப்புக்கு உரியது). நாவுக்கரசரால் சமண மதத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவப் பேரரசரும் அவரது வாரிசுகளும் தொடர்ச்சியாக இரும்புக் கொழுவை பூட்டிய ஏர், மண்வெட்டி என்பவற்றை உற்பத்தி செய்வித்து விநியோகித்ததன் வாயிலாக விவசாயப் பெருக்கம் வீறுகொண்டு முன்னேற வழிவகுத்தமை குறித்த வரலாற்றுப் பதிவுகளை ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது சிறியதொரு நிலப்பரப்புடன் பல்லவர்களுக்குத் திறை செலுத்துவோராக இருந்த சோழநாடு இந்த மாற்றப் போக்கினூடாகவே சோழப் பேரரசாக கிபி 9 ம் நூற்றாண்டில் இருந்து எழுச்சிபெறத் தொடங்கி இருந்தது என்பதும் வரலாறு!

“பக்தி இயக்கம் நிலவுடைமையைக் கொண்டவர்களின் இயக்கமாக இருந்ததேயன்றி பிற மக்களின் பங்கேற்பைப் பெறவில்லை” என்ற வகையில் அதனைச் சமூக அமைப்பு மாற்றத்துக்கான வெகுஜனப் புரட்சியாகக் கொள்ள இயலாது என்பது ராசுகுமார் முன்வைக்கும் மற்றொரு கருத்தாகும். “சைவ நாயன்மார்களிலும் வைணவ ஆழ்வார்களிலும் அடிநிலையிலிருந்த உழைக்கும் பகுதியினரைச் சார்ந்த சில இனத்தினர் – சாதியினர் இருந்தார்கள் என்பது உண்மை தான். இதனால் மட்டுமே பக்தி இயக்கத்தின் ஈர்ப்பு எல்லாப் பிரிவினரையும் எட்டியிருந்தது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், இத்தகைய, உழைக்கும் பகுதியைச் சார்ந்த சைவ – வைணவ அடியார்கள், தனிப்பட்ட அளவில் பக்தி இயக்கத்தில் கலந்துகொண்டார்களேயன்றி, அவர்கள் சார்ந்த சாதியினர் அனைவரும் இயக்கத்துக்குள் வந்துவிட்டதாகச் சான்றுகள் இல்லை” என்பது மே.து. ராசுகுமாரின் கருத்து. தொடர்பாடல் விருத்தி வலுப்பட்டு பொதுமக்கள் பங்கேற்புக்கு அதிகளவு வாய்ப்புப் பெருகியுள்ள இன்றைய ஜனநாயககாலச் சூழலிலும் புரட்சி எழுச்சிகளில் பலவேறு சமூக சக்திகளைச் சார்ந்த அனைத்து மக்களும் களத்தில் பங்கேற்றுவிடுவதில்லை. கணிசமானோர் கலந்துகொள்ளும் எழுச்சி ஒன்றில் எந்தத் தரப்பினருக்கு உரியது அது என்பதனைக் கணிப்பதற்கு அவர்கள் சார்பாக வெளிப்பட்ட ஆளுமைகளை வைத்தும் முடிவுக்கு வர இயலும். தனி ஆளுமையைத் தந்துவிடாத சமூக சக்திகளது பங்கேற்புக்கான வாய்ப்புக்களும் உள்ளன. அந்தவகையில், பக்தி இயக்கத்தில் கலந்துகொண்ட சமூக சக்திகளுக்குரிய பிரதிநிதிகளே நாயன்மார்கள் எனக் கணிப்பிடுவதனைத் தவறெனக் கூறவியலாது என்பது தெளிவு!

எந்த வர்க்கத்தை உள்ளடக்கிய சமூக சக்தியின் மேலாதிக்கத்தைத் தகர்க்கவேண்டி இருந்ததோ அந்த வணிகச் சாதியின் பிரதிநிதிகளான காரைக்கால் அம்மையார், அப்பூதியடிகள் போன்றோரின் வகிபாகம் என்பது அதிகாரத்தில் இருந்த தரப்பின் அதிருப்தியுற்ற ஒரு பகுதியினரும் பக்தி இயக்கத்தில் பங்கேற்றமைக்கான குறிகாட்டி எனக் கொள்வதில் தடையேதும் இல்லை. அதற்காக வணிக – விவசாயச் சக்திகள் இடையேயான சமூக மாற்றப் பண்பாட்டுப் புரட்சியே பக்திப் பேரியக்கம் என்பது மறுதலிப்புக்கு உள்ளாகிவிடாது. வணிகநலனில் ஆட்சியாளர் கவனம் குவித்துப் பஞ்சமும் பட்டினியும் பெருகக்காரணமாகிய சூழலில் பாதிக்கப்பட்ட பலவேறு சமூக சக்திகளும் மாற்றத்தை அவாவியதன் பேறாகவே வேறுபட்ட பல தரப்பினர்களது பிரதிநிதிகளாக நாயன்மார்கள் வெளிப்பட வாய்ப்பாக அமைந்திருந்தது. அந்த மாற்ற நிலைக்காலத்தின் பிரதான முரண்பாட்டுக்கு உரிய வணிக சக்தியிடம் சிறுநிலவுடைமையும் காணப்பட்ட போதிலும் பஞ்சமும் பட்டினியும் ஏற்படாமல் தடுக்க ஏற்ற உற்பத்திச் சாதனமாக அதனைக் கையாண்டிருக்கவில்லை. அவ்வகை உற்பத்திச் சாதனமாக அதனைக் கையாளும் சிறுநிலவுடைமையாளர் (விவசாயத்தையே முற்றிலும் சார்ந்திருந்தோர்) எனும் சமூக சக்திக்கான கருத்தியல் பிரதிநிதியாக அமைந்தது வைணவ மதம். அவைதிக – வைதிகமதங்கள் இடையேயான மோதல் வணிக- விவசாயத் தரப்பினருக்கு இடையேயானது என்றால் சிறுநிலவுடைமையாளர் – பெருநிலவுடைமையாளர் எனும் பிரிவினர்கள் இடையேயான முரண்பாட்டின் வெளிப்பாடாக வைணவ – சைவ மதங்கள் இடையேயான மோதல்கள் அமைந்திருந்தன. முன்னையது பகை முரண்பாடாக வெளிப்பட்டு அதிகாரக் கைமாறுதலுக்கு உரிய புரட்சியை வேண்டிநின்றதைப் போலன்றிப் பெரு – சிறு நிலவுடைமையாளர்கள் இடையேயானது நட்பு முரணாக அமைந்து வைதிக மதப் பிரிவுகளாகத் தமக்குள் ஐக்கியமும் போராட்டமும் நிகழ்த்துவனவாக இயங்கின. பெருநிலவுடைமைச் சமூக சக்திகளாக ஒன்றுபட்டுத் தலைமையேற்று வெற்றிகொண்ட பின்னர் முளைவிடத்தொடங்கி விருத்தி பெற்று வந்த வெள்ளாள – பிராமண முரணும் கூட (கிபி 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்) இதே வகையில் ஐக்கியமும் போராட்டமும் எனும் வடிவத்துக்கு உரியது என்பது பற்றி முந்திய இயல்களில் பேசி வந்துள்ளோம் (அடுத்துள்ள இயல்களும் விரிவாகப் பேசும்).

மாற்றப் பலாபலன்கள்

சமூக மாற்றத்துக்கான உழைக்கும் மக்களின் போராட்டங்கள் கூர்மைப்பட்டு இருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தகைய வரலாறு படைக்கும் ஆற்றலின் பண்புக்கூறுகளை விளக்கும் சமூக விஞ்ஞானக் கருத்தியல்கள் வெளிப்பட்டன. இன்றைய உலகில் உற்பத்தி சக்தி பிரமாண்டமாக வியாபிதம் அடைவதற்கு கால்கோளிட்டு இயங்கும் முதலாளித்துவத்தின் (அதற்குரிய மூலதனத் திரட்சியின்) அடிப்படை விதிகளைக் கண்டறிந்ததோடு, அதன் ஆட்சியதிகாரத்தையும் தகர்த்தெறிவதூடாக ஏற்றத்தாழ்வற்ற சமூகம் படைக்கப் போராடும் பாட்டாளி வர்க்கத்துக்கான மார்க்கங்களை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் வகுத்து வழங்கியிருந்தனர். மார்க்சையும் இணைத்த வகையில் ஏங்கெல்ஸ் எழுதியிருந்த “டூரிங்குக்கு மறுப்பு” எனும் நூல் இந்தத் துறையில் (மார்க்சியத்தின் அடிப்படைகளைத் தொகுத்து வழங்குகிறது என்ற வகையில்) முக்கியத்துவம் உடையது. சமூக அமைப்பு மாற்றத்தின் அடிப்படை அம்சம் பற்றி இந்த நூலில் ஏங்கெல்ஸ் கூறியுள்ள பின்வரும் விடயம் கருத்தூன்றிக் கவனிக்க அவசியமுடையது:

“வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் விநியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய் பிரிக்கப்படுகிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்துகொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் விநியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதிகுறித்து மனிதனுக்குக் கிடைக்கப்பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளியலில் கண்டறிய வேண்டுமேஅல்லாது தத்துவவியலில் அல்ல. தற்போது நிலவும் சமுதாய நிறுவனங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாமலும் நீதிக்கு முரணாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறிவிட்டன என்ற உணர்வு வளர்ந்து வருகிறதென்றால், பொருளுற்பத்தி, விநியோக முறைகளில் ஓசைப்படாமல் மாறுதல்கள் ஏற்பட்டு முந்தைய பொருளாதார நிலைமைகளுக்கு இசைவாயிருந்த சமுதாய அமைப்பு இனி இசைவற்றதாகிவிட்டது என்பதற்கான நிரூபணமாகவே இருக்கிறது. பகிரங்கமாகிவிட்ட இந்த இசைவின்மையை அகற்றுவதற்கு வேண்டிய சாதனங்களும் மாறிவிட்ட இந்தப் பொருளுற்பத்தி முறைகளிலே தான், அதிகமாகவோ குறைவாகவோ வளர்ச்சியுற்ற நிலையில், இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்தச் சாதனங்கள் புனையப்படவேண்டியவை அல்ல, மூளையில் இருந்து விவாதித்துப் பெற வேண்டியவை அல்ல, மாறாக மூளையின் உதவியுடன் தற்போது நிலவும் பொருள் உற்பத்தியின் பௌதிக உண்மைகளில் இருந்தே கண்டறியப்பட வேண்டும்” (ஏங்கெல்ஸ், 2014, டூரிங்குக்கு மறுப்பு, அலைகள் வெளியீட்டகம், சென்னை.  பக். 373-4).

வர்க்கங்களாகப் பிளவுண்ட சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் படிநிலைகளுடன் இயங்கும் சமுதாயங்களையும் கவனத்திலெடுத்து, பொருளியல் அடித்தளத்தை மாற்றியமைக்கும் போராட்டங்களின் வாயிலாகவே சமூக மாற்றம் நடந்தேறுதல் சாத்தியம் என்பதனைத் தெளிவுற ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டி உள்ளார். பழைய அமைப்பைப் பாதுகாக்கும் கருத்தியல்கள் முறியடிக்கப்பட்டு புத்துலகம் சமைக்கும் புதிய கருத்தியல் வெற்றிகொள்ளப்படும் அவசியத்தை நிறைவேற்றவல்ல பண்பாட்டுப் புரட்சி வாயிலாகவே சாதியப் படிநிலையுடன் இயங்கும் எமக்கான சமூக மாற்றங்கள் சாத்தியமாகும் என்ற போதிலும் மோதுகின்ற கருத்தியல் தளங்கள் என்பவை நிதர்சனத்தில் இயங்கும் பொருளியல் அடிப்படைகளுக்கு உரியனவே என்பதனைக் காணத்தவறலாகாது. அந்தப் பண்பாட்டுப் புரட்சி வாயிலாக சாத்தியப்படும் புதிய அரசியல் முறைமையானது மாற்றம் பெற வேண்டிய புதிய பொருளாதார அடித்தளத்தை நிதர்சனமாக்கும்! 

ஆதிக்க சாதியினரது ஆட்சியதிகாரம் தகர்க்கப்பட்டு சாதிகளிடையே சமத்துவத்தை வென்றெடுப்பதனூடாக சமூக – பொருளாதாரத் தளங்களில் அனைவரும் ‘ஒப்பப்பர்’ என ஆகுதற்கு ஏற்புடைய பொருளியல் விருத்தி இன்று எட்டப்பட்டுள்ளது. அதனை வெற்றிகொள்ள ஏற்ற வகையில் பரந்துபட்ட சமூகசக்திகள் (சாதிகள்) அனைத்திலும் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக – நல்லெண்ணம் கொண்டோரும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும். வணிக மேலாதிக்கத்தைத் தகர்த்து நிலப்பிரபுத்துவச் சாதிகள் அதிகாரத்தை வென்றெடுக்கப் போராடிய பக்திப் பேரியக்கச் செயலொழுங்கில் அனைத்துச்சாதியினரும் ஐக்கியப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, வீழ்த்தப்படும் வணிகத்தரப்பாரும் அழித்தொழிக்கப்படும் எதிரியெனக் கணிக்கப்படாமல், அதன் ஒருபகுதியினரது பங்கேற்புடனேயே சமூக மாற்றம் வென்றெடுக்கப்பட்டு இருந்தது எனும் வரலாற்று அனுபவம் மிகுந்த கவனிப்புக்கு உரியது.

ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகளைப் பேணும் பிராமணியக் கருத்தியலைத் தாக்கும்போது பிராமண வெறுப்பு (எதிர்ப்புணர்வு) முன்னிலைப்படாமல் பிராமணர்களிலும் பெரும்பான்மையினர் வென்றெடுக்கப்பட வேண்டியுள்ள அவசியத்தை உணர்ந்தவர்களாக, அவர்களையும் ஐக்கியப்படுத்தும் அக்கறையுடன் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டாக வேண்டும். இனமரபுக் குழுமுறைமை தகர்க்கப்பட்டு வர்க்கப் பிளவு ஏற்படாமல் சாதிகளாக ஒருங்கமைந்து இயங்கும் எமக்கான வாழ்வியலில் தொன்றுதொட்டு (சனாதனமாக) இயங்குகின்ற பண்பாட்டு அம்சங்கள் பல உள்ளன எனும் அடிப்படையின் காரணமாகவே பண்பாட்டுப் புரட்சித் தளம் முன்னுரிமை உடையதாக செயற்பட்டு வருகிறது. படைக்கப்படும் புதுமைக்குள்ளும் ஊடுபாவாகவுள்ள பழமையின் இருப்பைப் புரிந்தவர்களாக, அதற்கான கருத்தியல் அடிப்படையை வலுவுடன் வடிவமைத்துப் பரந்துபட்ட ஒன்றிணைப்பைக் கட்டியெழுப்புதல் அவசியம்.

அவை குறித்த தேடல்களைத் தொடரும் வகையில் இங்கு பக்திப் பேரியக்கம் மூலமாகச் சாத்தியப்பட்ட சமுதாயமாற்றப் பெறுபேறுகள் குறித்து அலசுவது உடனடித் தேவையாகின்றது. அதன் தொடக்க நிலையில் பல்லவ மன்னன் நாவுக்கரசராலும்  சிற்றரசாயிருந்த சோழ நாட்டில் இருந்து வந்தவரான சம்பந்தரால் பாண்டிய மன்னனும்  சமணத்திலிருந்து சைவத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். விவசாயப் பெருக்கத்துக்கு உரிய அரசியல் நடவடிக்கைகள் இவ்விரு பேரரசர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தகாலப் பின்னணியில், பொதுமக்களை அணி திரட்டிய செயலொழுங்குகள் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சி வாயிலாக  இரு நாயன்மார்களும் சாத்தியப்படுத்தினர். பாலாறு, வைகைநதி என்பவை முறையே பல்லவ – பாண்டிய பேரரசுகளுக்கு உட்பட்டிருந்த நிலப்பிரபுக்களை வளப்படுத்தியதை விடவும் ஆறேழு நூற்றாண்டுகளுக்கு முன்னரே (வீரயுக இறுதிக்கட்டத்தில்) கரிகாலச் சோழனால் கல்லணை கட்டி நீர்ப்பாசன விரிவாக்கத்துக்கு உரயதாக்கப்பட்ட காவிரி நதிப் படுக்கையைக் கொண்டிருந்த சோழ நாட்டின் நிலப்பிரபுத்துவம் கங்கை முதல் கடாரம் வரை படை நடாத்திப் பேரரசு விரிவாக்கம் மேற்கொள்ளும் ஆற்றலை சோழ மன்னர்களுக்கு வழங்கி இருந்தது. இந்தப் பரந்த நிலப்பரப்பும் கடல் வளமும் முழுமையாக சோழப் பேரரசின் நேரடி அரசுக் கட்டமைப்புக்கு உரியதாக அமைந்திருக்கவில்லை என்றபோதிலும் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக (கிபி 9 முதல் 13 ம் நூற்றாண்டு வரை) பரந்த நிலப்பரப்பில் அவர்களது மேலாதிக்கம் நிலைபெற்றிருந்தது. பேரரசு எல்லைக்கு அப்பாற்பட்ட அதேவேளை மேலாதிக்கத்துக்கு ஆட்பட்டிருந்த ஏனைய நாடுகளிடம் இருந்து திறை பெறும் அதிகாரத்தைக் கட்டிக்காத்து வந்தனர்.

இன்றைய மலேசியா, வியட்னாம், இந்தோனேசியா வரை கப்பல் படையுடன்சென்று தமது மேலாதிக்கத்தைச் சோழப் பேரரசு நிலைநாட்டியமை வெறும் கப்பம் அறவிடுவதற்காகவல்ல; படை நடாத்தத் துணிவளித்த கப்பல் போக்குவரத்தைப் பல நூறு வருடங்களாக மேற்கொண்டு வந்தவர்களான வணிகத்தரப்பாருக்கு அந்தத் தூர தேசங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அடிப்படை நோக்கமாயமைந்தது. வணிக மேலாதிக்கம் நிலவிய (கிபி 2 – 6 ம் நூற்றாண்டுகள்) காலத்தைவிட எந்தவகையிலும் குறைவுபடாத வர்த்தக வாய்ப்புகள் வணிகத் தரப்பாருக்கு சோழப் பேரரசர்கள் காலத்தில் கிடைத்திருந்தது. நிலப்பிரபுத்துவ உற்பத்திப்பெருக்கம், அதனுடன் ஊடாடிய தூர தேச வணிக ஆதாயம், ஆக்கிரமிப்பு யுத்தங்களால் அபகரித்துக் கொண்டுவரப்பட்ட செல்வ வளம் என்பவை சோழர்காலக் கோயில்களின் செழிப்பில் வெளிப்பட்டன.

வெறும் ஆன்மிக எல்லைக்குள் வழிபாட்டுத் தலமாக அந்தக் கோயில்கள் இருக்கவில்லை.  நிலப்பிரபுவாக, வங்கியாக, பாதுகாப்பு நிலையமாக, தொழில்நுட்பக் கேந்திரமாக, பொதுக் களஞ்சியமாக, கலைக் கூடமாக, பள்ளியாக, இலக்கியப்பெட்டகமாக என ஊரின் மையமாயமைந்து வாழ்வியலின் பலதளங்களிலும் செயற்படும் கோட்டையாகக் கோயில் கட்டமைக்கப்பட்டது. அவற்றின் நிர்வகிப்பில் மேலாதிக்கம்பெற்ற வெள்ளாள நிலப்பிரபுத்துவம் தானும் இருந்தபடி, மென்மேலும் வருவிக்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டு சமதையான நிலப்பிரபுக்களாக பிராமண சமூக சக்தியையும் வளர்த்தாக வேண்டிய அவசியம் வெள்ளாள நிலப்பிரபுத்துவத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருந்த காரணத்தால் கோயில் நிர்வாகம் – உரிமை என்பவற்றில் பிராமணர்களையும் பங்காளராக்கினர். 

எந்தவொரு இயக்கப் போக்கும் அதிகாரத்தில் இருக்கும் மேலாதிக்க சக்தியினதும் ஆட்சியாளரதும் விருப்பப் பிரகாரம் தொடர்ந்து நடந்தேறிவருவதில்லை. இத்தகைய உயர் நிலையை, ‘ஆவுரித்துத் தின்றுழலும்புலையரேனும்’ தமக்கான சிவனை மேலாண்மைக்கு உரியவராக ஏற்கும்பட்சத்தில் அவர்கள் அனைவருடனும் ஒன்றுபட்டுப் போராடிப் பெற்றுக்கொண்ட வல்லாண்மையுடன், எதிரிகளை மோதி மிதித்துக் கீழ்ப்படுத்தியதன் வாயிலாக வெள்ளாள நிலப்பிரபுத்துவம் சாதித்து வந்தடைந்தது. வெள்ளாள – பிராமண நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் வலுப்பட்ட பின்னர் சாதியம் இறுக்கமடைவதும் உடன் விளைவாகத் தொடர்ந்தது. பிளவாக்கத்துடன் படிநிலைப்படுத்தும் சாதியம்வலுவுடன் செயல் புரியத் தொடங்கிய பின்னரும் வரலாறு படைக்கும் ஆற்றலைத் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தினரால் தொடர்ந்திருக்க இயலாது என்பது புரிந்துகொள்ளத்தக்க ஒன்று. சாதி முரணின் வெளிப்பாட்டுக்கும் தமிழர் தத்துவமான சைவ சித்தாந்தத்துக்குமான தொடர்பாடலை அடுத்த அமர்வில் விவாதிப்போம்!

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7917 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)