வடக்கு கிழக்கு காடுகளின் பொதுவான தன்மைகள்
காடுகளிலுள்ள மண்ணானது மிகவும் வளமுள்ளது. ஆண்டாண்டு காலமாக சிதைவடையாமல் பேணப்படும் இம் மண், மண்ணின் சகல கூறுகளையும் கொண்டுள்ளது. அதிகமாக காணப்படும் பிரிகையாக்கும் பக்டீரியாக்கள் இப் பகுதியின் சமநிலையைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது. வேருடன் இணைந்து ஒன்றிணைந்து வாழும் அநேக பக்டீரியாக்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பிரிகையாக்கிகளான பங்கசுகளும் இங்கு உண்டு. வேருடன் இணைந்துவாழும் பக்டீரியாக்கள் மண்ணிலுள்ள பொஸ்பரஸை கரைத்து தாவரங்களுக்கு தேவையான போசணைகளை வழங்குவதில் பங்காற்றுகின்றன. காட்டில் வளரும் காளான்கள் ஒருவகை பிரிகையாக்கும் பங்கசுகளே ஆகும். இவை மனித உணவிற்குப் பயன்படுவதோடு காடுகளில் வாழும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாக்கின்றன. இப் பகுதியில் அதிகளவான மண்புழுக்களும் வாழுகின்றன. காடுகளில் காணப்படும் தரைப் பகுதி, ஊர்வன மற்றும் முள்ளந்தண்டுள்ள, முள்ளந்தண்டற்ற விலங்குகள் அத்துடன் பூச்சியினங்களுக்கு உகந்த வாழிடமாக அமைகின்றது. இப் பகுதியில் தனித்துவமான உயிரியல் சமநிலை பேணப்படுகின்றது. காட்டில் உருவாக்கப்படும் உணவுச் சங்கிலித் தொடரில் இப் பகுதிக்கு முக்கிய பங்குண்டு. ஊர்வன, பூச்சிகள், முள்ளந்தண்டுள்ளவைகள் என்பன இவ் உணவுச் சங்கிலியின் பிரதான பங்காளிகள் ஆகும். இக் காட்டில் வளரும் தாவர வகைகள் இப் பகுதி மண்ணிற்கு பத்திரக் கலவையாக தொழிற்படுவதால் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் பிரயோசனமுள்ள பங்காற்றுகிறது. பெருந்தொகையில் படையெடுத்து நகரும் வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டுப்புழுப் பருவம் இப் பகுதிகளிலேயே நிறைவடையும். ஆக காடுகளில் இருக்கும் இவ்வகை நிலப்பரப்பு பெரிதும் உயிரியல் பல்வகைமை பேணிப்பாதுகாக்கப்படும் ஒரு தொகுதியாகும்.
பூச்சிகளுக்கு மட்டுமல்ல பாம்புகளுக்கும் இப் பகுதி வாழ்விடமாக அமைகிறது. நாகம், புடையன் விரியன் மற்றும் வெங்கனாந்தி போன்றவற்றுடன் பச்சைப்பாம்பு, சுருட்டை போன்ற பல வகைப்பாம்புகள் இங்கு காணப்படுகின்றன. குக்கிளான், முயல், கீரி உடும்பு, காட்டுப்பூனை போன்ற சிறு மிருகங்களும் மான், மரை, கரடி, குழுவன், எருமை, சிறுத்தை மற்றும் யானை போன்ற காட்டு விலங்குகளும் இப் பகுதிகளில் காணப்படுகின்றன. தரையில் வாழ்விடங்களை கொண்டவற்றைப் போன்று அங்குரப் பகுதிகளில் காணப்படும் பல்வகைமையும் குறிப்பிடத்தகுந்தவை. முசுறு, காட்டெறும்பு, தேனீக்கள் மற்றும் குரங்கு போன்றன அங்குரப் பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டுள்ளன.
காடுசார் பொருளாதாரம்
வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள காடுகளில் விசேடித்தமான காடுசார் பொருளாதாரம் ஒன்று நடைமுறையில் உள்ளது. இப் பகுதிகளை அண்டிவாழும் மக்கள் இவ்வகைப் பொருளாதாரத்தினால் நன்மையை பெற்றுக்கொள்கின்றனர். ஏலவே குறிப்பிட்டதற்கு அமைவாக மான், மரை, குக்கிளான் என்பன வேட்டையாடப்பட்டு காட்டுறைச்சி எனும் பெயரில் விற்பனைசெய்யப்படுகிறது. இவற்றில் பல விலங்குகளை கொல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தாலும் இவ்வகை செயற்பாடு தொடர்ந்தும் நடைபெறுகிறது. வடகாடுகளின் குஞ்சுக்குளம் பகுதிகளிலும், கிழக்குகரைப் பகுதிகளில் வெருகல் மற்றும் ஹபரணை கதிரவெளிக் காடுகளிலும் தேனெடுக்கும் வழக்கம் உண்டு. இது பெரும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. இப்பகுதிகளில் காணப்படும் வீரை மரமானது நன்கு எரியக்கூடிய விறகுவகைகளில் ஒன்றாகும். அத்துடன் வீரை மரங்களின் பரம்பல் அதிகரித்துக்காணப்படுவதால் விறகுக்காக வெட்டப்படும் மரங்களால் இக் காடுகளின் சமநிலைக்கு பெரும்பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை மாதங்களில் பழுக்கும் பாலைப் பழங்களும் ஆவணி – புரட்டாதி மாதங்களில் பழுக்கும் நாவல் பழங்களும் இக் காடுசார் பொருளாதாரத்தில் குறித்துச் சொல்லப்படவேண்டிய விடயங்களாகும்.
அதிகமாக பாலைப்பழம் கிடைக்கும் காலங்களில் கிராமத்தவர்களால் பாலைப்பாணி உருவாக்கப்படும். தேனைப் போல சுவையுள்ள இந்தப் பாலைப்பாணி அதிக மதிப்புடையது. காடுகளில் காணப்படும் இலுப்பை மரங்களை அண்டிய பகுதிகளில் கிடைக்கப்பெறும் இலுப்பை கொட்டைகள் இலுப்பெண்ணை வடித்தலுக்கும் அரப்பு உற்பத்திக்கும் பயன்படுகிறது. காட்டாறுகளில் காணப்படும் மண்வகைகள் வரையறைகளுடன் பாவனைக்குட்படுத்தப்படும் போது பயனுள்ள பொருளாதாரமாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. இவ் வகைப் பொருளாதாரம் பாரம்பரியமிக்கதும் பயனுள்ளதுமாதலால், ஆற்றோர அபிவிருத்திக் குடியிருப்புகளை மேற்கொள்ளும்போது கவனம் பேணப்படவேண்டும். யானைத்தந்தம், புலிப்பல், மான்தோல், மான்-மரைக் கொம்புகள் அதிக பெறுமானத்தைப் பெறும் பொருளாதாரம் ஆகும். இவ்வகை செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது வாசகர்கள் அறிந்ததே.
தேக்கு மரநடுகை மிகவும் பயனுள்ள மீள்வனமாக்கல் பொறிமுறையாகும். அழிக்கப்படும் மரங்களை விட குறித்த பரப்பில் அதிக மரங்களை நடும் பொறிமுறை இத் தேக்கு மரநடுகையால் எய்தப்படக்கூடும். தேக்கு மரங்களை வெட்டியபின் வேரிலிருந்து கிளம்பும் இளங்கன்றுகள் பெருவிருட்சமாக மாறுதல் தேக்கின் பிரதான நன்மையாகும். மர அரிவு இயந்திர தொழிற்சாலைகளின் மரத்தூள் மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்டு விறகுக் கட்டைகளாக மாற்றப்படுகிறது. அத்துடன் வீடு கட்டப் பயன்படுத்தப்படும் செங்கற்கள் போன்ற கற்களை உருவாக்குவதிலும் பயன்படுகிறது. மரத்தேவைக்கு பயன்படுத்தப்பட்ட பின்பு மீந்திருக்கும் கிளைப் பகுதிகள் உயிர்க்கரியாக மாற்றப்படுகிறது. இவ் உயிர்க்கரி சேதன விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
காடுகளில் காணப்படும் சிறு சிறு நீர்பரப்புகள் அவ்வப்போது காட்டாறுகளால் தொடர்புபடுத்தப்படுவதால் பல மீன்வகைகள் இவ் நீர்ப்பரப்புகளை வந்தடைகின்றன. இறால் மற்றும் விலாங்கு என்பன குறித்துச்சொல்லப்படும் மீன்வகைகளாகும். ஆதலால், கரையோரக் காடுகளும், கண்டல்காடுகளும், அடர்காடுகளும் காடுசார் பொருளாதாரத்தில் பங்களிக்கின்றன எனக்கூறுவது பொருத்தமானதாக இருக்கும். மரத்தேவைக்கு பயன்படும் மரங்கள் பற்றி இங்கு சொல்ல எத்தனிக்கப்படவில்லை. இருப்பினும் பாலை, தேக்கு, முதிரை, வேம்பு என்பன பெரும் பொருளாதாரத்தை ஈட்டித்தருகின்றன என்பதை குறிப்பிடலாம்.
காடுசார் பல்வகைமை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்
இயற்கைக் காடழிப்பு மாற்றத்தால் காடுகள் மட்டுமல்ல பல்வேறுவகைப்பட்ட சூழலியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. சுனாமி, வெள்ளப்பெருக்கு என்பன பாதிப்புகளை ஏற்படுத்துவது வழக்கம். இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இவ் அச்சுறுத்தல் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். நவீனமயமாக்கல், ஆற்றோரக் குடியேற்றங்கள் மற்றும் காணியற்றோருக்கான குடியமர்த்துதல்கள் போன்றன கரையோரக் காடுகளுக்கும் ஆற்றோரக்காடுகளுக்கும் பெரும் அச்சுறுத்துலாக அமைகின்றன. சமகாலத்தில் இந் நடவடிக்கைகளும் இன்றியமையாதவையே. ஆகையால் சமுதாயக் காடுகள், திட்டமிட்ட மரநடுகை நடைமுறைகள் என்பன மேற்கொள்ளப்பட்டால் அழிக்கப்படும் காடுகளுக்கு இணையான ஒரு காட்டுப்பரம்பலை ஏற்படுத்தாவிடினும் அவ்வப்பகுதியில் தங்கியிருக்கும் மக்களுக்கான விறகுத் தேவை மற்றும் மரம்சார் அபிவிருத்திக்குரிய நடவடிக்கைகளையாவது ஓரளவு ஈடுசெய்யக்கூடும். அத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது சுற்றாடல் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை (Environment Impact Assessment) சரி பார்க்கப்படவேண்டும்.
அபிவிருத்தி என்பது காட்டிலுள்ள விலங்குகளின் வாழ்விடங்களை பெரிதும் பாதிப்பதால் உயிரியல் பல்வகைமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. யானைகள், குரங்குகள் போன்றவை வாழ்விடங்களை இழந்து கிராமங்களுக்குள்ளும் விவசாய நிலங்களுக்கும் புகுவது அண்மைக்காலமாக நடந்துவருகிறது. பொதுவாக யானைகள் பழக்கப்பட்ட பாதைகளூடாக செல்வது இதற்கு காரணமாகும். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மனிதன் – யானை போராட்டம் அண்மைக்காலத்தில் அதிகரிப்பதும் இதனால் சூழலியல் சமநிலைகள் குழப்பப்படுவதும் அறியப்பட்டுள்ளது. குரங்குகள் விவசாய நிலங்களைத் தாக்குவது இக் காடழித்தலுடன் தொடர்புபட்ட இன்னொரு அச்சுறுத்தலாகும். லேசர் கருவிகள், வாயுத் துப்பாக்கிகள் என்பவற்றை பயன்படுத்துதல் இவற்றிற்கான தடுப்பு நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டாலும் மனித விலங்குப் போராட்டம் அதிகரிக்கும் போக்கே காணப்படுகின்றது.
அபிவிருத்தியில் மின்சாரமயமாக்கல் மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றது. குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குகையில் கணிசமான எண்ணிக்கையுள்ள பெரு மரங்கள் அழிக்கப்படுகின்றன. இவை காட்டின் பரம்பலுக்கு மட்டுமல்ல பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாகும். வடக்கு கிழக்குப் பகுதியில் அநேக ஆண்டுகளாக அபிவிருத்தி ஏற்படாத இடங்களில் வளர்ந்துள்ள காடுகளிடையே ரயில் கடவைகள் மற்றும் மின்சாரக் கம்பங்கள் அமைக்கப்பட்டதால் அப் பகுதியின் பாதைகளை வழக்கமாகக் கொண்டிருந்த யானைகள், ரயில் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும், காயமடையும் சம்பவங்கள் அண்மைக்காலங்களில் அடிக்கடி இடம்பெறுகின்றன. யானை வேலிகள் சூரிய மின்கலத்தாலோ அல்லது வழமையான மின்னோட்டத்தாலோ அமைக்கப்பட்டிருப்பினும் அவற்றைத் தாண்டி இவ் ஆபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதுள்ளன. மட்டுமல்லாது புதையல் தோண்டுவோர், வேட்டைக்காரர்கள் யானையைக் கொன்று தந்தம் எடுப்போர் இவ் அரிதான யானைகளைக் கொல்வது துரதிஷ்டமே. ஆசிய யானைகள் ஆபிரிக்க யானைகளை விட வேறுபாடானவை. வேட்டையாடுவோர் அரிதான மிருகங்களைக் கொல்வது உயிரியல் பல்வகைமையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அழுங்கு, உக்குளான், உடும்பு, மான், மரை என்பனவும் இவ்வகை அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன.
அடிக்கடி தோன்றும் வெள்ளப்பெருக்கு காடுசார் உயிரியல் பல்வகைமையை பாதிக்கின்றது. காலநிலை மாற்றத்துடன் கூடிய வரட்சி மேற்பரப்பில் வேர் விட்டு வளரும் மரங்களையும் அதனுடன் இணைந்து வாழும் மிருகங்களையும் பாதிக்கின்றது. நெடுந்தீவு மற்றும் அதனை அண்டிய தீவுகளில் காணப்படும் கோவேறு கழுதைகள், உள்ளூர் ஆடுகள், மாடுகள் தமது சூழலிலுள்ள பற்றைக்காடுகள் அழிவடைவதால் உணவின்றி இறத்தல் உயிரியல் பல்வகைமையில் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது.
சட்டவிரோத மண்ணகழ்வு, மரம்வெட்டல் போன்றன அண்மைக்காலத்தில் காடுசார் பல்வகைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காரணிகளுள் முதலில் நிரற்படுத்தப்படுகின்றன. இவற்றைவிட மான்களின் அதிகரிப்பு மற்றும் தரையில் வாழும் விலங்குகளின் அதிகரிப்பு என்பனவும் இக்காட்டுச் சமநிலையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சட்டவிரோதப் பயிர்ச்செய்கையாலும் காடு அச்சுறுத்தப்படுகிறது. விசேடமாக குளக்கரையை அண்டிய பகுதிகளில் காடழித்து விவசாயம் மேற்கொள்ளல் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வகையான அச்சுறுத்தல்கள் காணப்படுவதால் சமுதாயக் காடு வளர்ப்பு மற்றும் விவசாயக் காடு வளர்ப்பு போன்றவற்றை அதிகரித்தளவில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாது பாடசாலை மட்டத்தில் காடழித்தல், வனமாக்கல் சம்பந்தமான பிரயோசனமான தகவல்கள் அடங்கிய பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடுகள் பற்றிய இத்தரவுகளை ஆய்ந்தறிந்த எமக்கு, காடுகளைக் காப்பாற்றும் கடமை உள்ளது எனும் கருத்தை ஆதரிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
தொடரும்.