இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து படிப்படியாக உரிமைகளை இழந்த மலையக தமிழ் மக்கள், 1977 ஆம் ஆண்டை தொடர்ந்து வந்த தசாப்தத்திலேயே தமது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை பறித்த அதே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து தமது உரிமைகளை படிப்படியாகப் பெற ஆரம்பித்தனர். ஆனால் அரசியல் வரலாறு அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு முறை திசை திரும்பியது. தேசிய இனப் பிரச்சினையை மையமாகக் கொண்ட உள்நாட்டு யுத்தம், வடக்கு கிழக்கு மக்களை மாத்திரமன்றி, நாட்டின் மூலை முடுக்குகளில் வாழ்ந்த சகல மக்களையுமே கடுமையாகப் பாதித்தது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் பேசிய அதே மொழியை தாமும் பேசினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மலையக தமிழ் மக்கள் மீது இன வன்முறை முடுக்கிவிடப்பட்டது.
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறை தாக்குதல் சம்பவங்கள் 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து கொண்டு இருந்தது. மலையக மக்கள் மனதிலும் உடம்பிலுமிருந்த ஆறாவடுக்கள், திரும்பத் திரும்ப குத்திக் கிளறப்பட்டு, இரத்தம் பெருகியோடிக் கொண்டே இருந்தது. கலவரங்கள் அனைத்தும் ஒரு திட்டமிடப்பட்ட பாணியைப் பின்பற்றியதாக கருதப்பட்டது. இக் கலவரங்களில் சிங்கள பொதுமக்கள் பங்குபற்றியதை பார்க்கிலும் காடையர்களும் குண்டர்களும் அரசியல்வாதிகளால் ஏவப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றன. இவர்கள் தோட்டங்களுக்குள் புகுந்து தோட்ட லயங்களில் குடியிருந்த தொழிலாளர்களை வன்முறைக்கு உட்படுத்தினர். பெண்களை மானபங்கப்படுத்தி அவர்கள் மீது காடைத்தனமான தாக்குதல்களை நடத்தி, லயங்களில் இருந்து விரட்டி அடித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தோட்ட நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல வாளாவிருந்தனர். ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டிருங்கள் என்று மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு கட்டளை வந்திருப்பது போல் தோன்றியது. பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவென அனுப்பப்பட்டிருந்த போலீசாரும் பாதுகாப்பு படையினரும் அந்த மக்கள் தமது நாட்டு மக்கள் அல்ல என்பது போல் அவர்கள் தாக்கப்படுவதை ஆதரித்தனர். இத்தகைய கொடுமைகளையும் வன்செயல்களையும் யார் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று நன்றே தெரிந்து வைத்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தை குற்றம் சுமத்தாது, வன்முறைகளைச் செய்தவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை விடுத்தது. இதற்கு முன்னரும் 1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வன்முறையின் போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை அரசாங்கம் விசாரணைகள் இன்றியே விடுதலை செய்திருந்தது. இதன்போதும் கூட (1981 ஆகஸ்டு – 29) வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை தயாரிக்கும் பொருட்டு ஐ.எம். இஸ்மாயில் அவர்களின் தலைமையில் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது.
1977 முதல் 1983 வரை இடம்பெற்ற இனவெறிக் கலவரங்கள் அனைத்துமே ஜே.ஆர். ஜெயவர்த்தன நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே இடம் பெற்றிருந்தது. இவரது அமைச்சரவையில் பதவி வகித்த பிரதான அமைச்சர்களான ஆர். பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ ஆகியோர் இவரது தளபதிகளாக செயற்பட்டனர்; இவரது இனவெறி நடவடிக்கைகளுக்கு ஒத்து ஊதுபவர்களாக இருந்தனர். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்த அமைச்சரவையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன நிதி அமைச்சராக கடமையாற்றினார். அப்பொழுது இடம்பெற்ற பிரஜா உரிமை பறிப்புச் சட்ட விவாதத்தின் போது ‘இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பிரஜா உரிமையை ஏன் பறிக்கக் கூடாது?’ என்பதற்குச் சாதகமாக அவர் பல இனவாத கருத்துக்களை முன் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களது இத்தகைய இனவெறிச் செயற்பாடுகள் 1983 ஜூலை கலவரத்தின் போது பலராலும் வெளிப்படையாகவே அவதானிக்கப்பட்டன.
இதற்கு முன் நடத்தப்பட்ட இனக் கலவரங்களை விட 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ இனக்கலவரமானது பாரிய அளவில் நாடு பூராகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இக்கலவரத்திலேயே அதிகமான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கம் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஏற்கனவே இடம்பெற்ற பல்வேறு இனக் கலவரங்களின் போதும் பாதிக்கப்பட்ட மலையக மக்கள், இனிமேல் இங்கு குடியிருக்க முடியாது என்ற நினைப்பில் வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று குடியேறி இருந்தனர். கறுப்பு ஜுலையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவ்வாறு வேறு பிரதேசங்களுக்கும் இந்தியாவுக்கும் சென்று குடியேறினர். இதனையே ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எதிர்பார்த்தது . 1983 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இடம்பெற்ற நாசகார வேலை தொடர்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது :
“சிறுபான்மை தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட இந்த வன்முறை நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட இன அழிப்புச் செயலாகும். குண்டர்களும் காடையர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும், தங்கு தடையும் இன்றி சுதந்திரமாக வீதிகளில் அலைந்து திரிந்து திட்டமிட்ட இலக்குகளை தெரிந்தெடுத்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபட்டு பேரழிவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படைகள் அவர்களை உற்சாகப்படுத்தியும் மேலும் அழிவுகளை ஏற்படுத்த ஒத்தாசையும் புரிந்தனர். அவ்விதம் அவர்களை செய்ய அனுமதித்துவிட்டு அரசு இயந்திரமும் பாதுகாப்பு படைகளும் வெறுமனே கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. காடையர்களும் குண்டர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு வீடுகளுக்கும் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தி கையில் கிடைத்த யாவற்றையும் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டனர். எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்கள் மீது படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை, தீ வைப்பு என்பன தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் மீது இந்த மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.”
இந்த வன்முறையால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு, தம் இருப்பிடம், உடைமைகள் என்பவற்றை இழந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த மக்களாகவுமே இருந்தார்கள். பெருந்தோட்ட பிரதேசங்களை அண்டி உருவாகியிருந்த சிறு நகரங்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் செய்யப்பட்டன. அவர்களின் கடைகளை தெரிவு செய்து முற்றாக எரித்து சாம்பலாக்கினர். தம் உடைமைகளை இழந்துவிட்ட சிறு முதலாளிகள், தமது ஒரே ஒரு தொப்புள் கொடி உறவான தமிழகத்துக்கு சென்று தஞ்சம் புகுந்ததுடன், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்டனர்.
நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றை உன்னித்துப் பார்ப்போமானால் இந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த அனைத்துக் கட்சிகளும், அதன் தலைவர்களும் இந்திய வம்சாவழி மலைநாட்டு தமிழ் மக்களை அவர்களுடைய வாசஸ்தலமான மலைநாட்டில் இருந்து துரத்தியடித்து விடவும், வேறு எங்காவது ஒரு பிரதேசத்துக்கு ஓடச் செய்யவும், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடவும், பல்வேறு முனைப்பான காரியங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பது புலனாகும். இருந்தாலும் அம் மக்கள் அவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து, சொந்தக் காலில் வேரூன்றி நிற்கத் தவறவில்லை.
தொடரும்.