தொடக்கக் குறிப்புகள்
வரலாறு முழுவதும், அனைத்து நாகரிகங்களின் பொருளாதார நடவடிக்கைகளிலும் கடல் எப்போதும் உணவு வளம், போக்குவரத்து மற்றும் வணிக வர்த்தகத்திற்கான வழிமுறையாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நீலப் பொருளாதாரம் என்பது கடல்சார் வளங்கள் மற்றும் பெருங்கடல்களில் வளர்ந்த பொருளாதாரங்களுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கருத்தாக மாறியுள்ளது. கடலோரப் பகுதிகளோடு சமரசம் செய்யாத பொருளாதார வளர்ச்சியையே நீலப் பொருளாதாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதை இழக்காமல் முன்னேற்றம், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார வளர்ச்சியினை சாத்தியமாக்கும் ஒரு கருத்தாக்கமாக ‘நீலப்புரட்சி’ முன்வைக்கப்படுகிறது. இது இரண்டு முரண்பாடுகளை உருவாக்குகிறது என்பதை முன்னிலைப்படுத்துவது முக்கியம். ஒருபுறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையவை அனைத்தும்; மறுபுறம், கடலின் வளங்களைப் பாதுகாப்பதிலும் பேணுவதிலும் காட்டப்பட வேண்டிய அக்கறையுடன் தொடர்புடையவை.
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடல் மட்ட உயர்வு மற்றும் பிற நெருக்கடிகளால் ஆபத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கரையோர மண்டலங்கள் ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்து வாழும் பிற உயிர்களின் பரந்த இருப்புக்கு வழியமைப்பனவாய் இருக்கின்றன. ஆயினும்கூட, இன்று, மிதமிஞ்சிய மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் நவீன வளர்ச்சியின் நீடிக்க முடியாத வடிவங்கள் மூலம் கடலோர வளங்களை பெருமளவில் அழிந்துள்ளன. அதிளவிலான கடலுணவுகளுக்கான உலக நுகர்வோர் தேவைகள் அதிகரித்து வருவதால், கடல்வாழ் உயிரினங்களின் இருப்புகளில் கடுமையான சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் புதிய சவால்களை எவ்வாறு சிறப்பாகச் சந்திப்பது என்பதற்கான பதிலை இன்றுவரை யாராலும் வழங்க முடியவில்லை.
இந்தச் சவாலுக்கான ஒரு முன்மொழியப்பட்ட தீர்வான மீன் வளர்ப்பு, இன்று அரசாங்கங்கள், உலக கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையால் மிகவும் பாராட்டப்படுகிறது. மேலே உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அடுத்த தர்க்கரீதியான படியாக பலர் இதைப் பார்க்கிறார்கள். மேலும், நவீன மீன்பிடியில் ஒரு புரட்சியை அவர்கள் முன்மொழிகிறார்கள். இதை அவர்கள் ‘நீலப் புரட்சி’ என்று அழைக்கிறார்கள். விவசாயத்தின் ‘பசுமைப் புரட்சி’யைத் தொடர்ந்து, ‘கடலில் விவசாயம்’ செய்வதற்கான கதவைத் திறக்கும் திறவுகோலை உலகின் ஆர்வமுள்ள கைகளுக்கு வழங்குவதன் மூலம், நவீன மீன் வளர்ப்பானது, கடல் மற்றும் நன்னீர் வழிகளில் இருந்து கடலுணவு உற்பத்தியை சாத்தியமாக்க முயற்சிக்கின்றது.
உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உணவு உற்பத்தியின் தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது, மனித நுகர்வுக்கான மொத்த விலங்கு மூலப் புரதத்தில் 17% மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் இருந்து வருகிறது. நீர்வாழ் உயிரினங்களான பின்மீன்கள், மொல்லஸ்க்குகள், ஓட்டுமீன்கள் மற்றும் கடற்பாசிகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் விவசாயத்தை மீன்வளர்ப்பு முன்வைக்கிறது. பழங்காலத்திலிருந்தே நீர்வாழ் விலங்குகள் புரதம், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக உள்ளன. காலப்போக்கில் நீர்வாழ் விலங்குகளைப் பிடிக்கும் பழக்கம், மனித நுகர்வுக்காக அவற்றைப் பிடித்து வளர்ப்பது, அறுவடை செய்வது ஆகியவற்றிலிருந்து உருவானது. எப்போதெல்லாம், எங்கெல்லாம் மக்களின் தேவைகள் அவர்களின் சொந்த நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் திறனை மீறுகிறதோ, அங்கெல்லாம் மீன்வளர்ப்பு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறையாக வெளிப்பட்டது. சீன, எகிப்திய மற்றும் ரோமன் போன்ற பல நாகரிகங்கள் மற்றும் கலாசாரங்களில் பரவியிருந்த மீன் வளர்ப்புத் தோற்றம், குறைந்தது 8000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் போது மீன் வளர்ப்பு, உலகளாவிய இறைச்சி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக வெளிப்பட்டது. 1970 களில் இருந்து மீன் பிடித்தலில் ஏற்பட்ட தேக்கநிலை அல்லது வீழ்ச்சியின் காரணமாக, 1970 மற்றும் 1990 இற்கு இடையில் மீன் வளர்ப்பு உற்பத்தியில் அதற்கேற்ப அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இன்னும் அதிகமாக, கடல் உணவுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய அது முயன்றது. இந்த விரைவான வளர்ச்சி, மீன் வளர்ப்புத் தொழிலை உலகில் வேகமாக வளரும் உணவு உற்பத்தித் துறையாக மாற்றுகிறது. மீன் வளர்ப்பின் இந்த உடனடி விரிவாக்கம் ‘நீலப் புரட்சி’ என்று பெயரிடப்பட்டது. இது விவசாயத்தின் முக்கியமான மற்றும் மிகவும் திறமையான வடிவமாக அதன் குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.
மீன் வளர்ப்பு என்பது மனித நுகர்வுக்காக மட்டி, மீன் மற்றும் கடல் அட்டைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட அடைப்புகளை நிறுவுவதாக பரவலாக வரையறுக்கப்படுகிறது. மீன் வளர்ப்புச் செயல்முறை மிகவும் பழமையானது. ஆசியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் ஏறக்குறைய 2000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரிய, குறைவான தீவிர வடிவங்களில் இது தோன்றியது. துரதிர்ஷ்டவசமாக, மிகவும் தீவிரமான நவீன தொழிற்துறை மீன் வளர்ப்பின் வருகைக்குப் பிறகு, தீவிர சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மில்லியன் கணக்கான பழங்குடிக் கடலோர மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரங்கள், வீடுகள் மற்றும் கலாசாரங்களை நீடிக்க முடியாதளவு – நவீன மீன் வளர்ப்பின் வளர்ச்சியால் – இழந்துள்ளனர்.
இறால் பண்ணைகள்: வணிகம் தின்ற நிலங்கள்
நவீன மீன்பிடித் தொழிற்துறைக்கு இறால் வளர்ப்பு ஒரு நல்ல உதாரணம். கடந்த 25 ஆண்டுகளில், இறால் மீன் வளர்ப்புத் தொழிலின் விரைவான மற்றும் பெருமளவில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம், மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கையான கடலோர வளங்களின் சீரழிவும் இழப்பும் முக்கியமானதொரு பிரச்சனையாகும். தீர்க்கப்படாத மாசாக்கல் பிரச்சினைகள் இத் தொழிற்துறையை இன்னும் பாதிக்கின்றன. இது காலப்போக்கில் அருகிலுள்ள கரையோரங்கள் மற்றும் கரையோர விரிகுடாக்களின் நீரின் தூய தன்மையைக் கெடுத்துவிடும். இதனால் வளமான மீன்பிடித் தளங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் முக்கியமாக மீனின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. அவற்றின் வாழ்விடங்கள், ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளால் இல்லாதொழிக்கப்படுகின்றன.
தொழிற்துறை இறால் வளர்ப்பின் ஒட்டுமொத்த அமைப்பு, செயல்முறைகள் மற்றும் செயற்பாடுகள் கடலோரச் சூழலியலின் நுட்பமான மற்றும் சிக்கலான சமநிலைக்கு பெரும் இடையூறு விளைவிப்பனவாய் உள்ளன. இறால் குளங்களுக்கு வழி வகுப்பதற்கான விலைமதிப்பற்ற சதுப்புநிலக் காடுகளின் பரந்த பகுதிகள் அழிக்கப்படுகின்றன. இறால் பண்ணைகள் பல்வேறு பன்மைச் சூழலை, பெரிய அளவிலான ஒற்றை வளர்ப்புச் செயற்பாடுகளுக்கு மாற்றுகின்றன. உலகளவில், நூறாயிரக்கணக்கான ஹெக்டேர் மதிப்புமிக்க சதுப்புநிலக் காடுகள் இறால் வளர்ப்பால் மட்டுமே – இது கடந்த இரண்டு தசாப்தங்களில் மட்டும் – அழிக்கப்பட்டுள்ளன.
மண் அடுக்குகள், கடற் புற் படுக்கைகள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற பிற முக்கியமான கடலோர வாழ்விடங்கள் சிதைந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒருமுறை உற்பத்தி செய்யும் இடங்கள் கைவிடப்படுவதனால், முக்கியமான நீர்வழிகள் மற்றும் நிலத்தடி நீர்நிலைகள் ஆபத்தான முறையில் மாசுபட்டுள்ளன. தொழிற்துறை இறால் வளர்ப்பின் ஒரு சோகமான முரண்பாடு என்னவென்றால், இதன் செயல்முறைக்கு சுத்தமான நீர் தேவைப்படுகிறது. இருப்பினும் அது கடுமையான நீர் மாசுபாட்டின் ஆதாரமாக மாறியுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீர்ச் சேர்க்கைகள் போன்ற இரசாயன உள்ளீடுகளின் தடையற்ற பயன்பாடு, குளத்தின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்படாத தீவனங்கள் மற்றும் மலம் ஆகியவற்றுடன் இணைந்து பண்ணைகளில் உள்ள இறால்களின் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கிறது. இது பல இறால் பண்ணைகள் மூடப்படுவதற்கு வழிவகுத்தது. நச்சுக் கழிவுகள், இறால் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மனித மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படுபவைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. எனவே சுகாதாரத்துக்குக் கேடானவை.
இறால் வளர்ப்பு, மற்ற வகை மீன் வளர்ப்புடன், மரபணு மாசுபாட்டின் உண்மையான ஆபத்தை ஏற்படுத்துகிறது; மற்றும் பல்லுயிர்த் தன்மையைக் குறைகிறது. பண்ணையில் வளர்க்கப்படும் இறால் அல்லது மீன்களின் தற்செயலான வெளியீடு, அவற்றுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பூர்வீக இனங்கள் மீது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். பிரதேசத்திற்கான போட்டி, மரபணுச் சறுக்கல், நோய் பரவல் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களில் அதிகப்படியான தேவை ஆகியவை இன்று உண்மையான கவலைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, நோர்வேயில், பண்ணையில் தப்பிய சால்மன் மீன்களின் எண்ணிக்கை நோர்வே கடற் பகுதியில் குடியேறும் காட்டு சால்மன்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறால்களின் தற்செயலான வெளியீடுகள் உள்ளூர் காட்டு இனங்களில் ஏற்படுத்தும் விளைவைப் பற்றி அதிகம் அறியவில்லை.
தொழிலில் வெளிப்படும் மேற்கண்ட பிரச்சினைகளைத் தவிர, இறால் வளர்ப்பு அத்தியாவசிய உணவு உற்பத்தி செயல்முறைகளையும் பாதிக்கிறது. விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இறால் பண்ணைகளால் நிலம் மற்றும் நீர்வழிகள் ஆகிய இரண்டிலும் உப்புத்தன்மை மாறுபாடு ஏற்படுகிறது. மேலும் அது மீன்வளம் மற்றும் பயிர் உற்பத்தி இரண்டையும் அழிக்கிறது. சில பகுதிகளில், கடுமையான அரிசி உற்பத்தி இழப்புகள் உள்ளுர் விவசாயப் பொருளாதாரங்கள் ஒரு காலத்தில் பிராந்தியத்தின் பிரதான உணவுப் பயிராக இருந்ததை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன.
நீலப் புரட்சியின் கதை
1960 மற்றும் 1970 களில் தொடங்கி, வணிக உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தொழிற்துறை செயல்முறைகள் மீன் வளர்ப்பில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், 1980 களின் முற்பகுதியில், குஞ்சு பொரிப்பக உற்பத்தி மற்றும் தீவனச் செயலாக்கத்தில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்கள், இறால் வளர்ப்பு நுட்பங்களில் விரைவான முன்னேற்றங்களை அனுமதித்தது. இதனால் வியத்தகு அளவில் அதிகரித்த விளைச்சலை உருவாக்க முடிந்தது.
இந்த ‘நீலப் புரட்சி’ பசுமைப் புரட்சியின் படிகளை பல வழிகளில் திரும்பப் பெற்றுள்ளது. பிந்தையது வளரும் நாடுகளில் பெரிய அளவிலான ஏற்றுமதி சார்ந்த வேளாண் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தது. ஆனால் அதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களில் பரவலான விமர்சனத்தையும் உருவாக்கியது. புதிய மீன்வளர்ப்பு நுட்பங்கள் ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க வளரும் நாடுகள் முழுவதும் கடலோர இறால் வளர்ப்பில் பெருமளவிலான விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
உலகளவில் வளர்க்கப்படும் இறால்களில் 85 சதவீதம் ஆசியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை மற்ற வெளிநாட்டுச் சந்தைகள் மற்றும் ஆடம்பர உள்நாட்டுச் சந்தைகளுக்கு இடையில் பிரிக்கப்படுகின்றன. இழுவைப் படகில் பிடிக்கப்படும் இறால் உலக இறால் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்றாலும், வளர்க்கப்படும் இறால் உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2000 ஆம் ஆண்டுக்குள் பிடிக்கப்பட்ட (கடலில்) உற்பத்தியை முந்தவும், விஞ்சவும் அனுமதித்தது. 1970 களில் வெறும் 26 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தியில் இருந்து, 1980 களின் முற்பகுதியில் 100,000 மெட்ரிக் டன்னாகவும் 1995 இல் 700,000 மெட்ரிக் டன்னாகவும் உயர்ந்தது. ஆசியாவில் இறால் வளர்ப்பின் கதை மிகவும் சுவையானது.
1970 களில், இறால் முக்கியமாக ட்ரோலர் கப்பல்கள் மூலம் கடலில் பிடிக்கப்பட்டது. இருப்பினும், இந்த இலக்கற்ற மீன்பிடித்தலால் கடல் வளங்கள் குறையும் அபாயம் காரணமாக, பல அரசாங்கங்கள் 1980 களில் இழுவை முறைகளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தன. அதே நேரத்தில், தைவானிய ஆராய்ச்சியாளர்கள் 1983 ஆம் ஆண்டில் இறால்கள் முட்டையிடுவதை நிர்வகிப்பதில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக தைவானில் இறால் வளர்ப்பு, விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. தைவான் இந்தத் துறையில் அதிக வளர்ச்சியை அடைய முடிந்தது. ஏனெனில் இது மீன் வளர்ப்பு, சமதளமான கடலோர நிலம் மற்றும் பொருத்தமான தட்பவெப்பம் ஆகியவற்றில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது வெகுஜன பரவல் மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு போன்ற மேம்பட்ட மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களையும் கொண்டிருந்தது. இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்களில் அவர்களின் கண்டுபிடிப்புகள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் அடிப்படைப் பணிகளால் ஆதரிக்கப்பட்டது. தைவான் மற்றும் ஜப்பானில் வளர்ந்த தொழில்நுட்பம் 1980 களில் ஆசியாவின் பிற நாடுகளுக்கும் பரவியது.
இறால் வளர்ப்பு உலகளாவிய தொழிலாக மாறியுள்ளது; ஏற்றுமதி டொலர்களை அதிகரிக்க ஆர்வமாக உள்ள அரசாங்கங்களால் தூண்டப்படுகிறது. இறால் வளர்ப்பு மேம்பாட்டிற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களின் தாராளமான ஆதரவு மற்றும் ஊக்கங்கள் உதவுகின்றன. மீன் வளர்ப்பு முதலீடுகளை நியாயப்படுத்த, சர்வதேச கடன் வழங்கும் முகவர்கள் ‘வளரும் நாடுகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் கருவியாக இது பயன்படும்; அதாவது ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக இதனைச் செய்கிறோம்’ எனும் கருத்தாடலைப் பயன்படுத்துகின்றனர். முரண்பாடாக, இந்த முதலீடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உள்ள ஆடம்பர நுகர்வோருக்கு பிரத்தியேகமாக அனுப்பப்பட்டுகிறது; உண்மையாக பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு ஆதாரமாக மாறவில்லை. இறால் தொழிலின் நடவடிக்கைகளால் பாரம்பரிய விவசாயம் மற்றும் மீன்வளம் சீரழிந்து வருவதோடு, கடலோர ஏழைகளின் நிலையான உணவு ஆதாரங்களும் சூறையாடப்படுகின்றன.
உலகளாவிய பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் மற்றும் விரைவான முதலீட்டு வருமானத்தின் கவர்ச்சி ஆகியவை, இறால் மீன் வளர்ப்புத் தொழில் வியத்தகு சிக்கல்களைக் கொண்ட ஒன்று என்ற கருத்துருவாக்கத்தைப் பொய்யாக்குகிறது. கொடிய தொற்று வைரஸ்களின் பரவல் தைவான் (1988), சீனா (1993), மற்றும் வியட்நாம் (1995) ஆகிய நாடுகளில் செழித்து வந்த இறால் மீன் வளர்ப்புத் தொழில்களை அழித்துவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்தப் பின்னடைவுகள் இருந்தபோதிலும், இத் தொழில் மிகவும் வலுவாக உள்ளது. மேலும் இதன் சந்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. ஜப்பானின் இறால் பொருட்களின் இறக்குமதி 1986 இல், மொத்தக் கடல் உணவுகளில் 29 சதவீதத்தில் இருந்தது. 1991 இல், 46 சதவீதமாக அதிகரித்தது.
ஆரம்பகால இறால் குளம் மூடப்படுவதற்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, ஆசியாவில், கடுமையான மாசுபாடு மற்றும் நோய்ப் பிரச்சினைகள் கண்டறியப்பட்டன. இறால் ஏற்றுமதிச் சந்தையில் உலக மேலாதிக்கத்திற்கான பெரும் பந்தயத்தில் தாய்லாந்து நுழைந்த முதல் தசாப்தத்தில், இறால் குளங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்பட்டுவிட்டன. தொழிற்துறை இறால் வளர்ப்பு அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும் அதே வேளையில், பரந்த அளவிலான உற்பத்தி அடிப்படையில் நடைமுறையில் இருந்தது என்பது ஒரு உண்மை. இறால் – மீன் வளர்ப்புத் தொழிலின் கண்மூடித்தனமான விரிவாக்கம், இன்னும் சோதிக்கப்படாத முன்மாதிரி வணிக ஜெட் விமானத்தில், சந்தேகத்திற்கு இடமில்லாத பயணிகளை, தனது கன்னிப் பயணத்திற்கு ஏற்றிச் செல்வதற்கு நிகரானது. சோதனை விமானிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் விமானத்தை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்துவதில் எடுக்க வேண்டிய நிச்சயமற்ற அபாயங்கள் தான். எவ்வாறாயினும், இறால் வளர்ப்பு வேகமாகப் பரவி வருவதால், நம் அனைவருக்கும் மற்றும் நாம் வாழும் கிரகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொழிற்துறை வீழ்ச்சியின் பெரும் வாய்ப்புகளுடன், இந்த ஆபத்தான பயணத்தில் நாம் அனைவரும் பறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று நீலப்புரட்சி தொடர்ந்து சொல்லியது.
இலங்கையில் இறால் வளர்ப்பின் கதை
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் 1990 களின் தொடக்க ஆண்டுகளில் இறால் உற்பத்தியில் விரைவான விரிவாக்கம் ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் நீர்வாழ் பொருட்களிலிருந்து கிடைக்கும் மொத்த அந்நியச் செலாவணி வருவாயில் இறால்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின. இந்த குறிப்பிட்ட வருவாயில் 48% முதல் 70% வரையான பங்களிப்பு இறால் ஏற்றுமதியால் கிடைத்தது. 1990 களில் இறால் வளர்ப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட மொத்தப் பரப்பளவு தோராயமாக 1200 ஹெக்டேர் ஆகும். சிலாபக் குளம், டச்சுக் கால்வாய், முந்தல் குளம் மற்றும் புத்தளம் களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்ணைகள் உருவாக்கப்பட்டன. இந்தச் செயன்முறையின் 70% இற்கும் அதிகமானவை, டச்சுக் கால்வாய் மற்றும் முந்தல் களப்பு ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டவை [i] (பார்க்க: படம் 1).
1992 முதல் 2012 வரையிலான ஒரு தசாப்த காலத்தில் இப்பகுதியில் இறால் பண்ணைகளின் அளவு 40 ஹெக்டேருக்கும் குறைவாக இருந்து 1,200 ஹெக்டேருக்கு அதிகமானதாக மாறியது. இது இயற்கையான வாழ்விடங்களின் வீழ்ச்சியுடன் இணைந்தது. குறிப்பாக சதுப்புநிலங்கள் அவற்றின் பரப்பளவில் சுமார் 36% இழந்தன. சதுப்புநிலங்கள் அதிக கார்பன் அடர்த்தி கொண்டவையாகும். இவை பெரும்பாலும் ஹெக்டேருக்கு 2,000 டன்களுக்கும் அதிகமான கார்பனை காடுகளின் அடியில் உள்ள வண்டல்களில் சேமித்து வைக்கின்றன. இறால் வளர்ப்புக்காக இந்தச் சதுப்புநிலங்களில் உள்ள தாவரங்கள் வெட்டி அகற்றப்பட்டமையால் காபனீரொக்சைட் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படுகிறது. ஆய்வுகளின் படி, புத்தளத்தில் மட்டும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களின் விளைவாக காலநிலை மாற்றத்தில் கிட்டத்தட்ட 192,000 டன் கார்பன் வளிமண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [ii]
சதுப்புநிலங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் இன்னொரு பிரச்சனை கரையோரங்கள் கடலில் மூழ்குவதாகும். உலக அளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3 மில்லிமீட்டருக்கு மேல் உயரும் நிலையில், ஆரோக்கியமான சதுப்புநிலக் காடுகள் இதற்கெதிரான சிறந்த பாதுகாப்பாக உள்ளன. ஏனெனில் அவை வண்டல்களை ஒன்றாக இணைத்து, உயரும் அலைக்கு ஏற்றவாறு மண்ணை உயர்த்துகின்றன. அவற்றை இழப்பதானது, கரையோரத் தாழ்வு, அரிப்பு மற்றும் புயற் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உண்மையில், சதுப்புநிலங்கள் மிகவும் பயனுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளாக இருக்கின்றன. குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கூட, அவற்றை அழிப்பதில் அர்த்தமில்லை.
இலங்கையானது இறால் பண்ணைகளை வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பரவலான வேலைவாய்ப்புக்கான தொழிற்துறையாகப் பார்த்தது. இதனால் 1980 மற்றும் 1990 களில் தீவில் கட்டுப்பாடற்ற மீன் வளர்ப்பு வளர்ந்தது. இது ஒரு சிலருக்கு செல்வத்தைக் கொண்டு வந்தது. மறுபுறத்தில், இது மோசமான கடலோர நிர்வாகத்தையும் வெள்ளைப் புள்ளி சிண்ட்ரோம் வைரஸையும் கொண்டு வந்தது. இது தண்ணீரிலும் பறவைகளின் காலிலும் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது ஒரு வாரத்திற்குள் ஒரு குளத்தில் உள்ள அனைத்து இறால்களையும் கொன்றுவிடும். இந்த வைரஸால் இலங்கையின் இறால் பண்ணைகள் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்தன. 1990 களில் இறால் பண்ணைகளாக இருந்த நிலங்களில் 90 வீதமானவை இப்போது வெறும் தரிசு நிலங்களாக உள்ளன.
விடத்தல்தீவு : புதிய களம் பழைய சிக்கல்கள்
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்திற்கு உரிய 418 ஏக்கர் நிலப்பரப்பை கைத்தொழில் மீன் வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அகற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது இறால் பண்ணைகளை இப்பகுதியில் உருவாக்கும் நோக்குடையது என்று சமூக ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்கள். விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் துணைப்பிரிவு 1 மற்றும் 4 மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ், 06 மே 2024 தேதியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது குறித்த நிலப்பரப்பை இயற்கைக் காப்பகத்திலிருந்து விலக்குவதாக அறிவித்தது. இதன்மூலம் அந்நிலம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதியளிக்கவியலும். குறித்த ஒதுக்கப்பட்ட நிலம், இறால் வளர்ப்புத் திட்டத்திற்காக ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இது குறித்து விசாரித்த போது, உயர்மட்ட அரச அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குறித்த நிலம் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தாக அறிய முடிகிறது.
விடத்தல்தீவு இயற்கைக் காப்பகமானது தனித்துவமான தன்மையுடைய இயற்கைக் காப்பகமாகும். ஆழமற்ற கடலில் உள்ள கடற்பகுதிகள், சேற்றுப் பாறைகள், பவளப்பாறைகள் மற்றும் கற்பாறைகள் போன்ற பல சுற்றுச்சூழல் அமைப்புகள், உவர் நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோரத் தாவரங்கள் உள்ளிட்ட கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகள், உலர் புல்வெளிகள், முட்கள் நிறைந்த காய்ந்த காடுகள் உட்பட நிலத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் என அனைத்தையும் இது உள்ளடக்கியது. நாயாறு, பறங்கி ஆறு, வாப்பை ஆறு மற்றும் பாலி ஆறு போன்ற நன்னீர் ஓடைகள் உட்பட பல சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த இயற்கை காப்பகத்திற்கு சொந்தமானவை. எனவே இதனை இலங்கையின் தனித்துவமான பாதுகாப்புப் பிரதேசம் எனலாம்.
விடத்தல்தீவு இயற்கைக் காப்பகமானது உள்நாட்டில் ஆபத்தான நிலையில் உள்ள பல்வேறு வகையான மீன்கள் மற்றும் பல்வேறு வகையான மட்டிகளுக்கான சரணாலயமாக செயற்படுகிறது. இவை அனைத்தும் கடலோரச் சமூகங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைத் தக்கவைக்க இன்றியமையாதவை. இக் காப்பகமானது நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகும். ஆர்க்டிக் பகுதிகளிலிருந்து இலங்கை வரை பயணம் செய்யும் இப்பறவைகளின் மத்திய ஆசியப் பறக்கும் பாதையில் இக்காப்பகம் அமைந்திருக்கிறது. இந்த இயற்கைக் காப்பகத்தில் உள்ள உயிரினங்களின் மிகப் பெரிய பன்முகத்தன்மை, பறவைகளின் பன்முகத்தன்மை ஆகும். சிலோன் பேர்ட் கிளப்பின் அறிக்கையின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மற்றும் நீர்ப் பறவைகள் இந்தக் காப்பகத்தில் பதிவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள 512 வகையான பறவைகளில் 210 பறவைகள் இந்த இயற்கை காப்பகத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு.
இந்த இயற்கைக் காப்பகத்தின் புல்வெளிகள், முட்புதர் காடுகள் மற்றும் வறண்ட கலப்புப் பசுமையான காடுகளில் சுமார் 52 வகையான பூச்செடிகள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இயற்கை இருப்புப் பகுதியில் தாவரங்களின் பன்முகத்தன்மையைத் தவிர, தனித்துவமான விலங்குகளின் பன்முகத்தன்மையும் உள்ளது. டுகோங் எனப்படும் மிகவும் அரிதான மற்றும் அழியும் ஆபத்துள்ளன கடற் பாலூட்டிகள் இந்த பகுதியின் கடல் புல் படுக்கைகளில் அரிதாகக் காணப்படுகின்றன. மேலும் கபரா, முல்லா போன்ற டொல்பின் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இந்த நாட்டில் காணப்படுவதாகக் கூறப்படும் ஐந்து வகை ஆமைகளில் நான்கு (ஆலிவ் சவாரி ஆமை, லெதர்பேக் ஆமை, பச்சை ஆமை மற்றும் லாகர்ஹெட் ஆமை) இந்த காப்புக் கடற்கரையில் முட்டையிட வருகின்றன.
2012 இல் நடத்தப்பட்ட வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டின்படி, விடத்தல் தீவு இயற்கைக் காப்பகமானது அவசரமாகப் பாதுகாப்பு தேவைப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டது. குறித்த மதிப்பீட்டு ஆலோசனையின் பேரில், 2016 ஆம் ஆண்டு வர்த்தமானியின் மூலம் விடத்தல் தீவு இயற்கைக் காப்பகமானது தேசிய இருப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் மூன்றாவது பெரிய கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியான இக்காப்பகமானது கடற் புல்வெளிகள், உப்புச் சதுப்பு நிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் உட்பட 29,180 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியது. இது இலங்கையின் மிகப்பெரிய சதுப்புநில வாழ்விடங்களில் ஒன்றாகும்.
விடத்தல் தீவு இயற்கைக் காப்பகமானது, இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியமானதாக இருந்த போதிலும் 2017 ஆம் ஆண்டு முதல் அதன் எல்லைகளுக்குள் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான முன்மொழிவுகள் வந்தவண்ணமிருந்தன. 2017 ஆம் ஆண்டில், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1,000 ஹெக்டேர் பரப்பளவில் மீன்வளர்ப்பு தொழில்துறை பூங்காவிற்கான திட்டத்தை உருவாக்கியது. இது மீன்கள், நண்டுகள் மற்றும் அயல்நாட்டு வகை இறால்களை வளர்க்க தனியார் நபர்களை அனுமதிக்கும். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு மற்றும் சமூகத்தின் எதிர்ப்பு காரணமாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த காப்பகத்தின் நிலங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தபட்டுள்ளன. எனவே, மே 2024 இல் வெளியிடப்பட்ட இந்தப் புதிய அறிவிப்பு, தொழில்துறை பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும்.
இறால் பண்ணைகள் தொடர்பிலான இலங்கையின் கடந்த கால அனுபவங்கள், பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை அகற்றுவதற்கான முடிவு குறித்த பாரிய பிரச்சினைகளைச் சுட்டி நிற்கின்றன. புத்தளம் களப்பு முதல் அனவிலுந்தாவ சரணாலயம் வரையில் மேற்கொள்ளப்பட்ட மீன்வளர்ப்பு முயற்சிகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு, மாசுபாடு மற்றும் கடல் வளங்கள் அழிந்து போனமை உறுதிப்படுத்தபட்டுள்ளன. இந்தப் பின்புலத்தில் விடத்தல்தீவில் மேற்கொள்ளப்படவிருக்கும் நவீன மீன்பிடி மற்றம் இறால் வளர்ப்பு நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் கவலைகளைக் கணிப்பிலெடுக்காதவையாக உள்ளன. இவை, குறித்த பகுதியின் சுற்றுச்சூழல் கட்டமைப்பை நம்பியிருக்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீறுகின்றன; பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகளைச் சீர்குலைக்கின்றன; மற்றும் கடல் வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதிக்கின்றன. விடத்தல் தீவில் உருவாக்கப்படவுள்ள இறால் பண்ணைகளில் பயிரிடப்படும் இறால் இனங்கள் பற்றிய அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பசிபிக் வெள்ளை இறால் (Litopenaeus vannamei) எனப்படும், இந்த இந்தியப் பெருங்கடல் தீவிற்குச் சொந்தமில்லாத இனமொன்றை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியின் பூர்வீக இனங்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கத்தை மதிப்பிடாமல் அந்நிய இனங்களை அறிமுகப்படுத்துவது, சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வளர்க்கப்படும் இறால்களில் சில, குறிப்பாக அவற்றின் நுண்ணிய இளம் பருவத்தின் போது, இயற்கையான வாழ்விடங்களுக்கு வெளியேறும். காடுகளில், அவை ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறக்கூடும். அவை அங்குள்ள பூர்வீக இனங்களை அச்சுறுத்தும். அதேவேளை பசிபிக் வெள்ளை இறால் இலகுவில் நோய்களைக் காவும் ஒன்றாகவும் உள்ளது.
குறித்த இயற்கைக் காப்பகமானது உள்ளூர்ச் சமூகத்திற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு உயிர்நாடியாகும். தாவரச் சாறுகள் அவற்றின் மருத்துவக் குணங்களுக்காக உள்ளூர் மக்களால் சேகரிக்கப்படுகின்றன. சதுப்புநில மரங்களின் இலைகள் பெரும்பாலும் விலங்குகளின் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மிக முக்கியமாக, சதுப்புநிலங்கள் மற்றும் கடற்புற்கள் பல வணிக மீன்கள் மற்றும் மட்டிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இது விடத்தல்தீவைச் சுற்றி வாழும் பல மீனவச் சமூகங்களுக்கு முக்கியமான கடல் உணவுகளின் உள்ளூர் வளத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. மன்னாரில் உள்ள மீனவர்களில் சுமார் 15% மீனவர்கள் விடத்தல்தீவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுப்பு நிலங்கள் மற்றும் கடற்பாசிகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய விடத்தல்தீவு பகுதி, சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விரிவான ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளுக்குப் பிறகு ஒரு பாதுகாப்புப் பகுதியாக நியமிக்கப்பட்டது. இந்த முடிவு, பிராந்தியத்தின் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், சமீபத்தில் இந் நிலம் இந்த இருப்பில் இருந்து விலக்கப்பட்டிருப்பது தீவிரமான நெறிமுறை மற்றும் சட்டரீதியான கவலைகளை எழுப்பியுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், பொது நலனுக்காக இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றை மீறுகின்றதாகவும் உள்ளது.
இப்பின்புலத்தில் விடத்தல்தீவு இயற்கைக் காப்பகத்திற்குரிய பகுதியில் இறால் வளர்ப்பு என்பது பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. இறால் பண்ணைகளிலிருந்து இரசாயனங்கள் கடலில் கசிந்து, பவளப்பாறைகள் மற்றும் கடற்புற்கள் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். பூச்சிக்கொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், குளோரின் மற்றும் பிற நீரின் தரத்தை ஒழுங்குபடுத்தும் இரசாயனங்கள் மற்றும் வளர்க்கப்படும் இனங்களின் மலம் ஆகியவை கடலில் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பறவையியல் வல்லுநர்களைப் பொறுத்தவரையில், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய ஆசியப் பறக்கும் பாதையில், ஒரு முக்கிய பறவை இடம்பெயர் பாதையின் மையமாகத் திகழும் விடத்தல்தீவை இழப்பது பாரதூரமானது. குளிர்காலத்தில் விடத்தல்தீவின் சேற்றுப் பகுதிகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. விடத்தல்தீவு, வங்காலை பறவைகள் சரணாலயத்தின் எல்லையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலமான இது பல பூர்வீகப் பறவைகள் மற்றும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாகவும் உள்ளது
வங்காலைக்கு அடிக்கடி வரும் பெரும்பாலான பறவை இனங்களும் விடத்தல்தீவு இயற்கை இருப்புப் பகுதியை 50% முதல் 80% வரை உணவு, இளைப்பாறல் மற்றும் இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்துகின்றன. ஓராண்டு முழுவதும் கடல் அலைகள் தாமாகத் திறந்து மூடுவதால், விடத்தல்தீவை பயன்படுத்த முடியாத நேரத்தில் பறவைகள் வாங்காலையைப் பயன்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்; அது தவறானது. பறவைகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்கினங்கள் அவற்றின் உணவு மற்றும் இனப்பெருக்கச் சுழற்சியைப் பராமரிக்க வாங்கலை, விடத்தல்தீவு என்ற இரு இருப்பிடங்களும் தேவை. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, பறவைகள் அதே குளிர்கால இடம்பெயர்வுப் பாதையைப் பயன்படுத்துகின்றன. மேலும் நிலப்பரப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவற்றின் இடம்பெயர்வுப் பாதைகளை மாற்றுவதற்கான மரபணுத் திறன் அவைகளிடம் இல்லை என பறவையியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் 40,000 முதல் 80,000 இறால் உண்ணும் பறவைகள் இப்பகுதியை உணவைப் பெறும் ஒரு நிறுத்தப்புள்ளியாக பயன்படுத்தி வருகின்றன. இப் பகுதியில் இறால் பண்ணைகள் கட்டப்பட்டால், இந்தப் பறவைகள் அவற்றிலிருந்து உணவைப் பெற முயற்சிக்கும். இது இறால் விவசாயிகளுக்கும் பறவைகளுக்கும் இடையில் மோதலுக்கு வழிவகுக்கும். புத்தளம் மற்றும் கற்பிட்டியின் வடமேற்குப் பகுதிகளில், இத்தகைய மோதல்களினால், புலம்பெயர்ந்த பறவைகள் பாரியளவில் கொல்லப்பட்டதும் ஏனையவை இடையூறு விளைவித்துத் துரத்தப்பட்டதும் நமது கடந்தகால அனுபவமாகும்.
இலங்கையின் சதுப்புநிலப் பாதுகாப்பு முயற்சிகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், இலங்கையின் மிக முக்கியமான சதுப்புநிலக் காடுகளில் ஒன்றின் பாதுகாப்பை அகற்றும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், பொதுநலவாய நீல சாசனத்தின் ஒரு பகுதியாக சதுப்புநில மறுசீரமைப்புக்கான சாம்பியனாக ஒத்துழைக்க இலங்கை உறுதியளித்தது. 2019 இல், இலங்கையும் இந்தோனேசியாவும் கூட்டாக ஐக்கிய தேசிய சுற்றுச்சூழல் பேரவையில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க உலகளாவிய நடவடிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை சமர்ப்பித்தது. இலங்கை ஏற்கனவே 76 சதுப்பு நிலத் திட்டுகளை வனக் காப்பகங்களாக அறிவித்து, இந்த ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதித் திட்டத்தின் கீழ் மேலும் 12 இடங்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஜனவரியில், நாட்டின் பாராளுமன்றம் சதுப்புநிலப் பாதுகாப்புக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இதன் கீழ், இலங்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 ஹெக்டேர் (24,700 ஏக்கர்) சதுப்புநில மறுசீரமைப்பு இலக்கை அடைய உத்தேசித்துள்ளது. இந்தப் பின்புலத்திலேயே விடத்தல்தீவின் நிலங்களை கையப்படுத்துவதன் மூலம் கைவிடப்பட்ட பல இறால் பண்ணைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
நிறைவுக் குறிப்புகள்
புத்திசாலித்தனமான வளப் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலின் பின்னணியில் மீன்வளர்ப்பு என்பது உருவாக்கப்பட வேண்டும். இறுதி இலக்கான நிலையான வளர்ச்சி என்பது, சமூக மற்றும் தனிநபர் நலன் மட்டத்தில், நீடித்த அதிகரிப்பை உறுதிசெய்யும் வகையில் இயற்கை வளங்களை மேம்படுத்துவதாகும். நிலையான வளர்ச்சியை அடைய, மற்றவற்றுடன், ஒருங்கிணைந்த முடிவெடுக்கும் செயல்முறை, பயனுள்ள குடிமக்கள் பங்கேற்பைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் அமைப்பு, நீடித்த அடிப்படையில் தீர்வுகளை உருவாக்கும் பொருளாதார அமைப்பு, எழும் பதட்டங்களுக்கு தீர்வுகளை வழங்கும் ஒரு சமூக அமைப்பு ஆகியவை தேவை. ஆனால் இதை நோக்கி நாம் பயணம் செய்வதாகத் தெரியவில்லை. பொருளாதார நலன்களை மட்டுமே மையப்படுத்திய முரண்பாடான வளர்ச்சி, சூழலியல் அடித்தளத்தை பாதுகாக்கும் கடமையை மதிக்காத ஒரு உற்பத்தி அமைப்பு, நெகிழ்வில்லாத மற்றும் சுய – திருத்தத் திறன் அற்ற நிர்வாக அமைப்பு என்பன நிலைமையை இன்னமும் மோசாமாக்குகின்றன.
உசாத்துணை
- Corea, A,et al. (1995) “Environmental Impact of Prawn Farming on Dutch Canal: The Main Water Source for the Prawn Culture Industry in Sri Lanka”, Ambio, 24(7/8): 423-427.
- Bournazel, Jil, et al. (2015) “The Impacts of Shrimp Farming on Land-Use and Carbon Storage around Puttalam Lagoon, Sri Lanka.” Ocean & Coastal Management, 113: 18–28.
தொடரும்.