கணக்குப் பதிவு நூல் : கணக்கியல் கற்கைக்கான முன்னோடித் தமிழ் நூல்
Arts
21 நிமிட வாசிப்பு

கணக்குப் பதிவு நூல் : கணக்கியல் கற்கைக்கான முன்னோடித் தமிழ் நூல்

November 19, 2024 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

தமிழ்ச் சமூகம் நெடுங்காலத்திற்கு முன்பே வணிகத்தில் நன்கு வளர்ச்சியடைந்திருந்துள்ளது. தொல்லியற் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் ஐயத்திற்கிடமற்ற வகையில் அதனை நிரூபிக்கின்றன. பொ.ஆ. முற்பட்ட காலத்திலேயே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழரின் வணிக வலையமைப்பு பரந்து விரிந்திருந்துள்ளது. தனிமனித நிலையிலும் பலரின் கூட்டிணைவுடன் குழும நிலையிலும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாங்குளத்து பிராமிக் கல்வெட்டில் இடம்பெறும் ‘வெள்ளறை நிகமத்தோர்’ என்ற குறிப்பு, பொ.ஆ.மு. 02 ஆம் நூற்றாண்டில் குழுவாக வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வெளிப்படுத்தி நிற்கிறது. கொடுமணலில் கிடைக்கப்பெற்றுள்ள பானையோட்டிலும் ‘நிகம’ என்ற பொறிப்பு இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் மூதூர்ப் பொன்னுடை நியமம், இருபெரு நியமம், விழுப்பெரு நியமம் முதலான வணிக நகரங்கள் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் முசிறிக்கும் அலெக்சாண்ரியாவுக்கும் இடையில் உடன்படிக்கையின் அடிப்படையில் வணிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை வியன்னாவில் உள்ள பேபிரஸ் தாள் ஆவணத்தின் மூலம் கண்டுகொள்ள முடிகிறது. இவற்றின் தொடர்ச்சியாக இடைக்காலத் தமிழ்நாடு வணிகத்தில் மேலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

மணிக்கிராமத்தார், திசையாயிரத்து அஞ்நூற்றுவர், வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் முதலான பல வணிகக் குழுக்கள் இடைக்காலத்தில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகளாக இயங்கியுள்ளன. இந்தியாவில் ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா முதலான நாடுகளிலும் மேற்படி வணிகக் குழுக்களுடன் தொடர்புடைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவ்வணிகக் குழுவினர் தமக்கெனத் தனித்த படைகளைக் கொண்டிருந்துள்ளமையையும் அறியமுடிகிறது. உலகநாடுகள் பலவற்றில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த இந்த வணிகக் குழுக்கள் பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தம் முதன்மையை இழந்து, பின்னர் அடையாளமற்று மறைந்துள்ளன. இதற்கு ஐரோப்பியரின் ஆதிக்கம், அவர்களது ஆக்கிரமிப்பு ஆகியனவும் முதன்மையான காரணங்களாக விளங்கியுள்ளன.

ஐரோப்பியரின் ஆட்சிநடைமுறைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் சுதேசியரின் வணிக நடவடிக்கைகளுக்கும் தொழில் முயற்சிகளுக்கும் இடந்தருவதாக அமையவில்லை. பாரதி தன் சுயசரிதையில் ஆங்கிலேயர் செய்த சதியினால் தன் தந்தை (சின்னச்சாமி ஐயர்) பொருள் இழந்தார் என்பதைப் பதிவு செய்துள்ளார். அது தொடர்பில் ஆராயும்போது தொ.மு.சி. ரகுநாதன், “சின்னச்சாமி ஐயர் ஆலை தொடங்கியபின் விரைவிலேயே ஸ்கொட்லாந்துக்காரர்களான இரு சகோதரர்கள் திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடியில் ஒரு சிறு ஆலையைத் தொடங்கினர். இதுவே மதுரையில் தலைமையகத்தையும் சுதுமலை, தூத்துக்குடி, அம்பா சமுத்திரம், புனலூர் ஆகிய இடங்களில் கிளை ஆலைகளையும் கொண்ட உலகப் பிரசித்திப்பெற்ற ஹார்வி நூற்பாலையாக விரிவடைந்தது” என்ற மகாதேவனின் கருத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் “எட்டயபுரம் அமைந்துள்ள கோவில்பட்டி தாலுகாவும் அதனையடுத்த பிரதேசங்களும் வெள்ளையரின் ஹார்வி மில்லுக்கு இரைபோடும் பிரதேசங்களாக இருந்தன. அவர்கள் பல்வேறு சூழ்ச்சியான திட்டங்கள் மூலம் அப்பிரதேச மக்களைத் தம் கட்டுக்குள் கொண்டுவந்தனர். உள்ளூரில் யாரேனும் பருத்தி ஆலை தொடங்கினால் அவர்கள் ஹார்வி நிர்ணயித்த கூலிக்கு ஹார்வியின் பஞ்சை அரைத்துக் கொடுக்கவோ, ஹார்வியின் தயவின்றித் தாமே ஆலையை நடத்த முடியாத நிலையில், பெரிய மீன் தன்னை விழுங்கச் சம்மதிக்கும் சின்ன மீனைப் போன்று தமது ஆலைகளையே ஹார்வியின் கையில் ஒப்படைத்து விடவோ வேண்டிய நிலைதான் நேர்ந்துவந்தது. உள்ளூர் தொழில் முயற்சிகள் அந்நிய மூலதனத்தின் அசுர முயற்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இரையாகிப் போய் உள்ளன” என விளக்கியுள்ளார். ஐரோப்பியர் காலத்தில் சுதேசிய வணிகர்களும் தொழில் முயற்சியாளர்களும் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு இது ஒரு சான்றாகும். வ.உ.சி இன் சுதேசிய கப்பல் கம்பெனியை முடக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றொரு சான்றாகும்.

பெரிய வணிக முயற்சிகள் ஐரோப்பியர் வசமிருந்ததால் வணிக முயற்சியில் ஈடுபட்டுவந்த சுதேசியர்கள், ஐரோப்பியருடன் இணைந்து வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன்போது தமிழ்ப் பாரம்பரியத்தில் வணிக நடைமுறைகளைப் பேணி வந்தவர்களுக்கு ஐரோப்பிய வணிகர்களின் மேலைத்தேய வணிக நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள – பின்பற்ற வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாக விளங்கியுள்ளது.

ஐரோப்பியர் இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய கல்விமுறையில் வணிகக் கல்வியும் முதன்மையான இடத்தைப் பெற்றது. அக்காலத்தில் உருவாக்கப்பட்ட சர்வகலாசாலையில் வணிகக் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பாடசாலைகளும் வணிகக் கல்வியைப் பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கியுள்ளன. வியாபாரம் தொடர்பில் மேலைத்தேயர் பின்பற்றும் வழிமுறைகளை ஆங்கில வழியில் கற்பிப்பதாக அப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் தமிழ்மொழி உள்ளடங்கலாக ஏனைய சுதேசிய மொழிகளில் அத்துறையைக் கற்க முடியாத சூழல் நிலவியதுடன் சுதேசிய மொழிகளில் அதற்கான மூல நூல்களும் உருவாக்கப்படவில்லை. அதன்போதே வியாபாரக் கல்வியில் டிப்ளோமா பட்டம் பெற்று, தஞ்சாவூர் கலியாணசுந்தரம் உயர்தரக் கலாசாலையில் வியாபாரப் பயிற்சி ஆசிரியராக விளங்கிய கோ. நடேசய்யர், தமிழ்வழியில் கற்கும் மாணவர்களையும் தமிழ் வியாபாரிகளையும் கருத்திற்கொண்டு கணக்குப் பதிவு நூலை எழுதியுள்ளார். புதிதாக அறிமுகமாகி, பரவலாகிவந்த ஓர் அறிவுத்துறையைத் தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாகவும் பாரம்பரிய தமிழ் வணிக முறையை அணுசரித்து வியாபாரத்தை மேற்கொண்டு வருவோரிடத்து சமகாலத்தில் ஆங்கிலேயர் பின்பற்றும் வர்த்தக முறையைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாகவும் இந்நூலாக்கம் அமைந்துள்ளது. அதனால் தமிழ்வழிக் கல்வி வரலாற்றிலும் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் கவனத்தில் கொள்ளவேண்டிய பங்களிப்புகளுள் ஒன்றெனும் சிறப்பு இந் நூலுக்குரியதாகிறது.

தமிழ்ச் சமூகம் பண்டைய காலம் முதல் வணிகத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்திருந்த போதிலும் தமிழ்ச் சமூகத்தினர் பின்பற்றிய வணிக நடைமுறைகள், வரவு – செலவுகளைப் பதிவுசெய்த முறை முதலானவை பற்றிய ஆவணங்கள் பரவலாகக் கிடைக்கப்பெறவில்லை. கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம் எனும் இரு நூல்களே தமிழரின் கணக்கியல் தொடர்பாக அச்சிடப்பட்டுள்ள முக்கியமான நூல்களாக விளங்குகின்றன. அவை காலத்தால் பிந்தியவையாகும். கணக்கு நூல்களாக விளங்கும் அவை, வணிகக் கணக்குகள் பற்றி ஏராளமான தகவல்களைத் தந்துள்ளன. அவற்றிலிருந்து வணிகம் செய்த பொருட்கள், அவற்றுக்கான அளவுகள், கூலி வழங்கப்பட்ட முறை, பங்கீடுகள் முதலான பல வணிக நடைமுறைகள் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.

கணக்குப் பற்றிய நூல்களைக் கணக்கதிகாரம் என்ற ஒரே பெயரில் அழைக்கும் மரபு தமிழ்ச் சூழலில் நிலவியுள்ளது. அறியப்பட்டுள்ள கணக்கதிகார நூல்களுள் காரி என்பவரின் கணக்கதிகாரம் முதன்மையானதொன்றாக விளங்கியுள்ளதை அறியமுடிகிறது. 1862 ஆம் ஆண்டு முதன் முதல் பதிப்பிக்கப்பட்டுள்ள அந்நூல் பின்னர் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இந்நூல் பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கலாம் எனக் கூறுவர். சரஸ்வதிமஹால் நூலகம் காரியின் கணக்கதிகாரத்துடன் கணக்கதிகாரம் என்ற பெயரில் கிடைக்கின்ற சில சுவடிகளையும் இணைத்து ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளது. அத்துடன் சூரிய பூபன் என்பவர் எழுதிய கணக்கதிகாரம் என்ற நூலையும் தனியாகப் பதிப்பித்துள்ளது. இந்நூல் பொ.ஆ. 17 ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கலாம் என்பர். சரஸ்வதிமஹால் நூலகம் வெளியிட்ட கணக்கதிகார நூல்களைப் பதிப்பித்த திருமதி சத்தியபாமா காமேஸ்வரன், அந்நூல்களிலிருந்து ஏரம்பம், அதிசாகரம், கலம்பகம், திரிபுவன திலகம், சிறுகணக்கு, கிளராலயம், கணித ரத்தினம், பெருங் கணக்கு, மலையான் கணக்கு முதலான பல கணக்கு நூல்கள் இருந்துள்ளமையை அறியமுடிகிறது என்பார்.

வணிக அறிவை – வணிக நடைமுறைகளைக் கல்விச் சாலையில் கற்றுக்கொள்ளல் என்பது ஐரோப்பியர் காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. அதற்கு முன்னைய தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தில் கணக்கு கற்பிக்கப்பட்டுள்ள போதிலும் வணிக நடைமுறைகள் தனியாகக் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியவில்லை. ஆனால், கணக்கினைப் பதிவுசெய்யும் தொழில்முறையினர் பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் கணக்கு, கணக்கன், கணக்கர், கணக்குப்பிள்ளை எனப் பலவாறு அழைக்கப்பட்டுள்ளனர். “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” எனக் குறுந்தொகை, வானியல் கணக்குகளைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிக் குறிப்பிடுகிறது. நாலடியாரில் ‘ஓலைக் கணக்கர்’ என்ற பதிவு இடம்பெறுகிறது. மணிமேகலையில் ‘சமயக் கணக்கர்’ என்ற குறிப்பு இடம்பெறுகிறது. சிலம்பில் ‘கணக்கியல் வினைஞர்’ பற்றிய பதிவு காணப்படுகிறது. இடைக்காலத் தமிழக ஆவணங்களில் கணக்கர்கள் பற்றிய பதிவுகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. அப்பதிவுகளைக் கொண்டு, “நகரக் கணக்கு, கோவில் கணக்கு, நாட்டுக் கணக்கு, ஊர்க் கணக்கு” எனப் பலவகையான கணக்கர்கள் இருந்துள்ளமையை ஆ. சிவசுப்பிரமணியன் எடுத்துக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சி காலனியக் காலத்திலும் நிலவியுள்ளதுடன் அதன் வெளிப்பாடுகள் இன்றுவரை நிலைத்துள்ளன. காலனியப் பெருந்தோட்டங்களில் ‘கணக்கப்பிள்ளை – கணக்கன்’ என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அப்பதவி தற்காலத்திலும் வழக்கில் உள்ளது.

தமிழ்ப் பாரம்பரியத்தில் வணிகமானது பெரிதும் பரம்பரையாக வருவதாகவும் சிறுபராயத்திலே வணிகம் செய்வோரிடம் சென்று பழகிக் கொள்வதாகவும் இருந்துள்ளது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டிலும் வணிகம் செய்வோரிடம் சென்று குறைந்த கூலியிலும் கூலி இல்லாமலும் தொழில்பார்த்து வியாபார நடைமுறைகளைப் பழகிக் கொள்ளும் வழமை பின்பற்றப்பட்டுள்ளது. ப. சிங்காரம் தன்னுடைய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களில் வட்டிக்கடைகளில் – லோவாதேவி – எவ்வாறு அத்தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது என்பதையும், பயிற்சியாலும் அனுபவத்தாலும் அத்தொழிலில் படிப்படியான வளர்ச்சி நிலைகளை அடைவதையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பெட்டியடிப் பையன், அடுத்தாள், மேலாள் என்ற படிமுறையான வளர்ச்சி அக்கடைகளில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலாளாக வருபவர் பின்நாளில் முதலாளியாக உயர்கின்றார். கடலுக்கு அப்பால் நாவலில் வரும் வயிரமுத்துப் பிள்ளை பெட்டியடிப் பையனாக அத்தொழிலில் நுழைந்து அடுத்தாளாக மாறி, மேலாளாக வளர்ந்து பின்னர் முதலாளியாக உயர்ந்தவராவார். புயலிலே ஒரு தோணி நாவலில், “வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி ‘வசூலுக்குப் போகும்’ நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ‘ஆட்டி வைக்கும்’ காலத்தையும் எண்ணிக் கனவு காண்பர்” என வட்டிக் கடையில் நிலவும் படிமுறை வளர்ச்சியையும் அப்படியான நிலைகளில் பணியாற்றுபவர்களின் உளநிலையையும் ப. சிங்காரம் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறான நடைமுறைகள் நவீன காலத்தோடொட்டிப் பயணிப்பதில் பல பலவீனங்களையும் சவால்களையும் கொண்டிருந்ததால் மேலைத்தேயர் அறிமுகப்படுத்திய கல்விச்சாலையில் வணிகத்தைப் பயிலும் முறை பெருவழக்குக்கு வந்துள்ளது. அதனால் வணிகக் கல்விக்குத் தேவையான கருவி நூல்களை உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

நடேசய்யரின் கணக்குப் பதிவு நூல் 1914 ஆம் ஆண்டு லாலி எலெக்டிரிக் பிரிண்டிங் பிரஸ்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது. இது கருணாமிர்த சாகரம் தந்த ராவ் சாகேப் ஆப்பிரகாம் பண்டிதரால் நடத்தப்பட்ட பதிப்பகமாகும். நூலுக்கான அணிந்துரையை (சிறப்புப் பாயிரம்) K. சுப்பிரமணி அய்யர் எழுதியுள்ளார். அவர் பம்பாய் வாணிபப் பயிற்சி கல்லூரியின் கௌரவத் தலைவராகவும், கே.எஸ். அய்யர் அண்டு கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராகவும், பம்பாய் லயிப் அஷ்யூரன்ஸ் கம்பெனியின் முகாமையாளராகவும் விளங்கியுள்ளார் என்பதை அவர் பற்றிய குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சுப்பிரமணி அய்யரின் சிறப்புப் பாயிரம் இடம்பெற்றுள்ளது. நூலுக்கான வாழ்த்துரையைக் கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவரான T.V. உமாமகேஸ்வரம் வழங்கியுள்ளார். இந்நூலின் அரங்கேற்றமும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. கணக்குப் பதிவு நூலின் தொடர்ச்சியாக வியாபாரப் பயிற்சி, விளம்பர விளக்கம் ஆகிய நூல்களை நடேசய்யர் எழுதியுள்ளார். வியாபாரப் பயிற்சி நூலைக் கணக்குப் பதிவு நூலின் இரண்டாம் பாகமெனக் குறிப்பிடும் அவர் அதில் “கடிதம் எழுதும் வகை, கடிதங்களைக் கோர்வை செய்து வைத்துக் காப்பாற்றும் விதம், இந்தியாவில் வழங்கிவரும் வியாபாரச் சட்டத்திட்டங்களைப் பற்றிய விபரங்கள் ஆகியனவும், விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் பற்றிய குறிப்புகளும்” சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணி அய்யர் தன் குறிப்பில் நவீன இந்தியாவில் வியாபாரப் பயிற்சிக் கல்வி அறிமுகமாகி வளர்ச்சியடைந்தவாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அக்கல்வி சுதேசிய மொழியிலும் அமைய வேண்டியதன் தேவையை எடுத்துக்காட்டி, அப்பின்புலத்தில் நடேசய்யரின் கணக்குப் பதிவு நூல் பெறுகின்ற முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். “ஏராளமான முதலோடும், கொஞ்சம் முதலோடும் ஆங்கில பாஷாப்பியாசமில்லாமல் வியாபாரம் செய்யும் இந்தியச் சிறுவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இவ் வியாபாரிகள் மேல்நாட்டார் முறைப்படி நடத்திவரும் பாங்குகள், வியாபாரச் சங்கங்கள், உத்தரவாதம் நிர்ணயிக்கப்பட்ட கம்பெனிகள் முதலியவற்றோடு அடிக்கடி பற்று வரவு வைத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் இவர்களும் அம் மேல்நாட்டார்களது முறைகளைத் தெரிந்துகொள்ளச் சாதனங்கள் ஏற்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. இந்தச் சிலாக்கியமான எண்ணம் நிறைவேறத் தடைப்பட்டதற்குக் காரணம் தகுந்த உபாத்தியாயர்களில்லாமையும் தேச பாஷைகளில் எழுதிய நூல்களின்மையுமேயாகும்” என அவர் குறிப்பிடும் கருத்துகள் மிகுந்த அவதானிப்புக்கு உரியவை. சுதேசிய மொழிகளில் வியாபாரப் பயிற்சிக் கல்வியை வழங்குவதன் தேவையையும் அதனை நிறைவேற்றுவதில் உள்ள தடையையும் இப்பதிவு நன்கு எடுத்துரைத்துள்ளது. இத்தகைய சமூகத் தேவையையே நடேசய்யர் இந்நூலினூடாக நிறைவேற்ற முனைந்துள்ளார்.

கணக்குப் பதிவு நூலின் உரிமை, ‘தென் இந்தியா வியாபாரச் சங்கத்தாருக்கு’ வழங்கப்பட்டுள்ளது. இது நடேசய்யர் தென்னிந்திய வியாபார விருத்தியில் – சுதேசியரின் வியாபார முன்னேற்றத்தில் கொண்டிருந்த அக்கறையைக் காட்டி நிற்கிறது. சுதேசிய வியாபாரிகளிடத்தில் ஐரோப்பிய வணிகர்களிடமிருப்பதைப் போல வர்த்தகச் சங்கங்கள் அரிதாக இருப்பதை அறிந்த நடேசய்யர், செயற்பாட்டில் இருக்கின்ற வியாபாரச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் புதிய சங்கங்களை உருவாக்குதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு வெளிப்பாடாகவே தன் நூலின் உரிமையைத் தென் இந்தியா வியாபாரச் சங்கத்தாருக்கு வழங்கியமை அமைகிறது.

நூன்முகம் நீங்கலாகக் கணக்குப் பதிவின் சரிதமும் உபயோகமும் முதல் வருமான வரிக் கணக்குகள் தயார் செய்யும் வழிகள் வரை இருபத்தியிரண்டு அதிகாரங்கள் நூலில் காணப்படுகின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் என்னென்ன விடயங்கள் அந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன என்ற தகவல் – உப தலைப்புகள் – இலக்கமிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அதற்குக்கீழ் அந்த இலக்கங்கள் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவை குறித்த செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உபதலைப்புகளுக்கு வழங்கப்பட்ட இலக்கங்கள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் தனித்தனியாக வழங்காமல் நூல் முழுமைக்கும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நூன்முகத்தில் இடம்பெறும் ‘பணமென்பது என்ன’ என்பது முதல் இறுதி அத்தியாயத்தில் இடம்பெறும் ‘கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்படாத செலவுகள்’ வரை 236 உபதலைப்புகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உபதலைப்புக்கும் உரிய தகவல்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ள நடேசய்யர், தேவையான இடங்களில் விரிவான உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். பாடப்புத்தகமாக நூலினை ஒழுங்கமைத்துள்ளதால் சில அதிகாரங்களின் முடிவில் பயிற்சி வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வணிகம் தொடர்பான கலைச்சொற்கள் பரலான புழக்கத்திற்கு வராத காலத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதால் ஆங்கிலச் சொற்கள் அதிகமாகக் கையாளப்பட்டுள்ளன. அதேவேளை, குறிப்பிட்ட சொற்களுக்கான கலைச்சொற்களை நடேசய்யர் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் அநேகமானவை பொருத்தமானவையாகவும் பின்வந்தோரால் பயன்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன.

மேலைத்தேய வழிவரும் வணிகக் கல்வியைக் கற்கின்ற ஆரம்ப மாணவனுக்கு ஏற்ற வகையில் நூலின் உள்ளடக்கமும் எடுத்துரைப்பும் அமைந்துள்ளன. வணிகம் பற்றிய அடிப்படையான செய்திகளான பணமென்பது என்ன?, வியாபாரமென்ப தென்ன?, வியாபாரியின் அங்கங்கள், வியாபாரி அறிய வேண்டியவை, வியாபார விருத்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை முதலானவற்றைத் தொடக்கத்திலேயே விளக்கியுள்ள நடேசய்யர், வியாபாரம் செய்வோர் வியாபார முறைகளை நூல்வழி கற்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய வணிக முறையில் சமகால வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமையையும் புதிய முறைகளைக் கைகொள்ள வேண்டியதன் தேவையையும், “நம்மவர்கள் முற்காலத்தில் வியாபாரம் செய்துவந்த விதம் வேறு; தற்காலத்தில் செய்யவேண்டிய விதம் வேறு. முன், வியாபாரம் பெரும்பாலும் ரொக்கத்திற்கே நடந்து வந்தது. இப்பொழுதோ நாணயப் பொறுப்பின் பேரிலேயே நடந்து வருகிறது. முன்னிருந்த வியாபாரப் பழக்கங்கள் தற்காலத்திற்குச் சரிபடமாட்டா. நாம் காலத்திற்குத் தக்கபடி நம்முடைய வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள  வேண்டியது அவசியமாகவே இருக்கிறது. முற்காலத்தில் ஒருவன் வியாபாரம் செய்ய வேண்டி இருந்தால் அவன் மற்றொரு வியாபாரியை அடுத்துப் பழகி வரவேண்டியிருந்தது. இப்பொழுது அவ்விதமிருப்பது தவறாகக் காணப்படுகிறது. வியாபார முறையை பயிலுதற்காகக் கலாசாலைகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்கு வேண்டியவைகளை புத்தக ரூபமாக வெளிப்படுத்தி நாட்டுச் சிறுவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வணிக நடைமுறையில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் அதனால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்க் கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய புதிய அம்சங்களையும் எடுத்துரைத்துள்ளார். இந்நூல் முழுதும் இவ்வாறான சமூக அக்கறை அழுத்தமாக வெளிப்பட்டுள்ளதைக் காணலாம்.

வணிக நடைமுறைகளுடன் பிரிட்டிஷ் இந்திய அரசு ஏற்படுத்திய சட்டதிட்டங்களுக்கு அமைய வருமான வரி விதிப்பதற்காகத் தயார் செய்ய வேண்டிய கணக்குகள், மொத்த இலாபத்திலிருந்து கழிக்கக்கூடிய வகைகள், வருமான வரிக்காகக் கணக்கு எழுதும் முறை, அரசினால் அங்கீகரிக்கப்படாத செலவுகள் முதலானவையும் நூலில் விளக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற்றிவரும் வணிக முறைகளை அறிந்து, ஐரோப்பியரால் பின்பற்றப்படும் புதிய முறையினால் விளையக்கூடிய அனுகூலங்களையும் பழைய முறையைப் பின்பற்றுவதால் அடைகின்ற பிரதிகூலங்களையும் நன்கு ஆராய்ந்து, மேலைத்தேய வழிவருகின்ற கணக்குப் பதிவு முறைகளை மிகவும் எளிமையாக நடேசய்யர் எடுத்துரைத்துள்ளார். எடுத்துக்காட்டுகளையும் உதாரணங்களையும் வழங்கும்போது தமிழ்நாட்டு வழமையையும் சான்றுகளையும் கையாண்டுள்ளதுடன் பொதுப் புழக்கத்திலுள்ள பழமொழிகள், சொலவடைகள் முதலானவற்றையும் பேச்சு வழக்குச் சொற்களையும் கையாண்டு விடயங்களை விளக்கியுள்ளார். இந்த உத்தி கணக்குப் பதிவு எனும் மேலைத்தேய வழி வருகின்ற புதிய அறிவை, அந்நியப்படுத்தாமல் தமிழ்ச் சமூகத்தோடு ஒன்றிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் இந்நூலுக்கும் தனித்துவமான இடமுண்டு எனலாம். நூலின் சிறப்புப் பாயிரத்தில், “இவ்விஷயத்தைப் பற்றிய முதலாவது புஸ்தகத்தை மிகவும் மெச்சத்தக்க விதமாயும் அது எழுதப்பட்டிருக்கும் நோக்கத்தைச் சாதிக்கத்தக்க விதமாயும் எழுதப்பட்டிருக்கிறது என்று நான் சொல்வேன்” எனச் சுப்பிரமணி அய்யர் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி, இந்நூல்தான் கணக்குப்பதிவு பற்றிய முதலாவது தமிழ் நூலா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், முன்னோடி முயற்சிகளுள் ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நூலுக்குப் பிறகு, எம்.என். சுப்பிரமணிய அய்யரால் எழுதப்பட்ட ‘தமிழ்நாட்டுக் கணக்குப் பதிவு நூல்’ என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. தஞ்சாவூர் லாலி எலக்டிரிக் அச்சுக்கூடத்திலேயே பதிப்பிக்கப்பட்டுள்ள அந்நூலுக்கு, கலியாண சுந்தரம் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த C. சுப்பிரமணிய சாஸ்திரி நூன்முகத்தை எழுதியுள்ளார். அந் நூன்முகத்தில், “சிலகாலமாக வியாபார முறையை பழகுவது மிக அவசியமென்று நம்மிற் பலருக்கும் உணர்ச்சி உண்டாயிருக்கிறது. அத் தொழில்முறையைக் கற்றுக்கொள்ள இதுவரையில் ஒரு ஸாதனமும் இல்லாதிருந்தது. இப்போது தமிழ்நாட்டுக் கணக்குப் பதிவுநூல் என்ற இச்சிறு புஸ்தகத்தை M.N. சுப்பிரமணிய அய்யரவர்கள் எளிய நடையில் எழுதி எல்லோருக்கும் உபயோகப்படும்படி வெளியிட்டிருப்பது அம்முறையில் அவாவுடையவர்களுக்கு அதிக உதவியாயிருக்குமென்பதற்கு ஸந்தேகமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பதிவில் தன்னுடன் பணியாற்றும் ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் அத்தகைய நூலினை வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்ற குறிப்பைப் பதிவுசெய்ய ஏனோ தவிர்த்துள்ளார். அவ்வாறே M.N. சுப்பிரமணிய ஐயரும் தன்னுடைய நூலுக்கு முன்னர் நடேசய்யரின் நூலொன்று வெளிவந்துள்ளது என்ற தகவலைக் குறிப்பிடவில்லை.

ஆங்கிலேயரின் வருகையுடன் இலங்கையிலும் பாடசாலைக் கல்வியிலும் பல்கலைக்கழகக் கல்வியிலும் வணிகக் கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வணிகம், கணக்குப் பதிவு பற்றிய பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. கணக்குப் பதிவு தொடர்பாக தனியாக வெளிவந்துள்ள பாடநூல்களுள் க. நவரத்தினம் அவர்களின் கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல் ஆகியன கவனிப்புக்குரிய தொடக்ககால முயற்சிகளாக அமைந்துள்ளன. 1948 ஆம் ஆண்டு முதற் பதிப்பாக வெளிவந்துள்ள கணக்குப் பதிவு நூல், 1958 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசகரும மொழி அலுவலகம் ‘கணக்குப் பதிவியல் சொற்றொகுதி’ ஒன்றினை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அனுசரித்து நவரத்தினம் அவர்கள் இரண்டாம் பதிப்பை விரிவுபடுத்தியுள்ளார். இவை இலங்கையின் கல்வித்திட்டத்தில் வணிகக் கல்வி – கணக்குப் பதிவியல் பெற்ற முதன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசகரும மொழி அலுவலகம் வெளியிட்ட ‘கணக்குப் பதிவியல் சொற்றொகுதி’ பாராட்டுக்குரிய முயற்சியாகும். தமிழ்மொழியில் கணக்குப் பதிவியலைக் கற்பவர்களுக்குச் சிறந்ததொரு கருவி நூலாக அது விளங்கியுள்ளது. தமிழ்க் கலைச்சொல்லாக்க வரலாற்றிலும் அறிவியல் தமிழ் வளர்ச்சியிலும் இத் தொகுதிக்கு முதன்மையானதொரு இடமுண்டு.

நவரத்தினம் அவர்கள் கணக்குப்பதிவு நூல் முதலாம் பதிப்பின் முகவுரையில் மேல்நாட்டு கணக்குப் பதிவின் முக்கியத்துத்தை, “மேல்நாட்டு வாணிப முறை எமது நாட்டிற் பல வழிகளாலும் பரவிவிட்டது. மேல்நாட்டு மக்களே இன்று வாணிப உலகில் முதன்மைபெற்று விளங்குகின்றனர். உலகத்தின் வியாபாரம் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது. எனவே, எமது நாட்டு வியாபாரிகள் எல்லோரும் மேல்நாட்டு வியாபார முறைகளைக் கற்று அறிந்தாலன்றி, அவர்களுடன் தகுந்த முறையில் வியாபாரஞ் செய்துகொள்வது இயலாத காரியமாகும். தமிழ்நாட்டு வியாபாரம் முற்போக்கடைய வேண்டுமாயின் அது இக்காலத்துக்கு வேண்டிய பல துறைகளிலும் வளர்ச்சி பெறவேண்டும். மேல்நாட்டு வியாபாரிகளுடன் வியாபாரஞ் செய்ய முன்வரும் தமிழன், அந்நாட்டு மக்களின் வியாபார முறைகளையும் அவர்களது கணக்குப்பதிவு முறைகளையும் நன்கறிதல் வேண்டும். எனவே, மேல்நாட்டு வாணிப முறைகளைப் பற்றியும் கணக்குப் பதிவு முறைகளைப் பற்றியும் நூல்கள் தமிழ்மொழியில் வெளிவருதல் அவசியமாகும். இதுமாத்திரமன்றி மேல்நாட்டுக் கணக்குப் பதிவு முறை தமிழ்ப் பாடசாலைகளில் ஒரு பாடமாகவும் அமைதல் வேண்டும்” என விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை நடேசய்யர் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலே உணர்ந்து, அதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். கணக்குப் பதிவு – வணிகம் தொடர்பான நூலினை வெளியிட்டதோடு மட்டுமன்றி வணிகச் செய்திகளுக்கென்றே வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையையும் நடேசய்யர் நடத்தியுள்ளார். நூல் வடிவில் வெளியிடுவதைக் காட்டிலும் பத்திரிகையில் செய்திகளை வெளியிடுவது பரவலான மக்களைச் சென்றடையும் என்ற நோக்கில் அப்பத்திரிகையை அவர் ஆரம்பித்துள்ளார். வர்த்தக மித்திரன் முதலாவது இதழில் பின்வருமாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதன் நோக்கம், நடேசய்யர் சுதேசிய பொருளார விருத்தியில் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது.

“இந்தியாவில் வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலியவற்றைப் பற்றிய விபரங்களை நமது தமிழ்நாட்டாருக்கு எடுத்துக்காட்டி அவர்கள் தொழிலில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றி வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இன்றைய தினம் நமது மித்திரனைத் தொடக்கியிருக்கிறோம்…

இந்தியாவானது முக்கியமாய் விவசாயம் நிறைந்த நாடு. விவசாயத்தைச் சீர்திருத்தாததால் நாட்டில் நாளுக்கு நாள் ஏழ்மை அதிகப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு வியாபாரமும் கைத்தொழிலும் அவசியம் உடனிருக்க வேண்டும். நமக்கு வேண்டிய சௌகரியப்படியே நமது தொழில்முறைகளை மாற்றிவர வேண்டும். மேற்சொல்லிய மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒரு மாறுபாடு ஏற்பட்டால் மற்றையத் தொழில்களிலும் அம்மாறுபாட்டிற்குத் தகுந்தாற்போல் மாறுபாடுகள் ஏற்பட வேண்டும். ஆகவே இப்பத்திரிகையில் வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலியவற்றைப் பற்றிச் சொல்லிவருவோம். மேலும் இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பற்றிய விபரங்களை (Economic Conditions Of India) நமது நாட்டார் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.”

வியாபாரக் கல்வியில் டிப்ளோமா பட்டம் பெற்று, வியாபாரப் பயிற்சி ஆசிரியராக விளங்கிய நடேசய்யர், தன்னுடைய துறைசார்ந்த தளத்தில் நின்று சுதேசிய நலனுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இந்தியாவின் வணிகத்தைத் தம் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த ஐரோப்பியர், சுதேசியரின் தொழில் முயற்சிகளையும் வணிக நடவடிக்கைகளையும் திட்டமிட்ட வகையில் சிதைத்துள்ளனர். அதேவேளை, ஆங்கில மொழியறிதாத சுதேசிய வியாபாரிகள் பலர் சமகால வணிக நடைமுறை பற்றிய போதிய அறிவின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலே சுதேசியரின் வியாபார நடவடிக்கைகளை வளப்படுத்தவும் புதிய தலைமுறையினருக்குச் சமகால வணிக முறைமைகள் பற்றிய அறிவினை வழங்கவும் கணக்குப் பதிவு நூல், வியாபாரப் பயிற்சி, விளம்பர விளக்கம் முதலான நூல்களையும் வர்த்தக மித்திரன் எனும் பத்திரிகையையும் நடேசய்யர் வெளியிட்டுள்ளார்; சுதேசிய வியாபாரிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வர்த்தகச் சங்கங்களை உருவாக்கியுள்ளார். இவை காலனித்துவ எதிர்ப்பின் ஒரு வடிவமாக விளங்கியுள்ளன. சுதேசியரின் வியாபார விருத்தியை முன்னிட்டு அவர் எழுதிய மேற்படி நூல்களும் நடத்திய பத்திரிகையும் தமிழ்மொழி – அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வளமான பங்களிப்பினை வழங்கியுள்ளன.


ஒலிவடிவில் கேட்க

2782 பார்வைகள்

About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)