இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் - Ezhuna | எழுநா

இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்

Front

கந்தையா பகீரதன்

எழுநா – 16

2025

இந்நூல் பாரம்பரிய விவசாயத்தை காலம்காலமாகக் கைக்கொள்வதனாலும் விவசாயக் கொள்கையை சிறப்பாக நடைமுறைப்படுத்தாததினாலும் இலங்கையின் விவசாயத்துறை எவ்வாறு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி, நவீன விவசாய தொழில்நுட்பங்களை இறுக்கமான விவசாயக் கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தி விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வழிவகைகளை முன்னிறுத்தி, பலதரப்பட்டவர்களும் வாசித்துப் பயன்பெறக் கூடியவாறும், தமிழ் மொழியில் விவசாயம் சார்ந்த நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் நமது விவசாயத்துறையைச் சார்ந்த இளம் சந்ததிக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர். காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிக்கின்றன; அந்நாடுகள் தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்களினதும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்நூல் இத் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.

வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் பெரும்பாலான வேளாண் பெருமக்கள் இன்றும் தமது பாரம்பரிய விவசாய முறைகளையே கைக்கொண்டு வருகின்றனர், காரணம் அவர்களின் பட்டறிவு மற்றும் அனுபவ அறிவு, கல்வி அறிவிலும் அதிகம். ஆனால் இன்று நிலைமை வேறு. வளர்ச்சியடைந்த நாடுகள் வேகமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பல்வேறுபட்ட நவீன தொழில்நுட்பங்களை வேளாண் துறைக்குள் புகுத்தி அதிக இலாபத்தைச் சம்பாதிப்பதோடு தன்னிறைவையும் அடைந்துவிட்டன. எமது விவசாயிகளுக்கும் நவீன வேளாண் தொழில்நுட்ப அறிவை வழங்க வேண்டியது துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களினதும் கடமையும் சமூகப் பொறுப்பும் ஆகும்.

அந்த வகையில் துடிப்பான இளம் பேராசிரியர் கந்தையா பகீரதன் எழுதியுள்ள ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற நூல் இலங்கையின் பாரம்பரிய வேளாண்மையின் தொடக்கம், நாம் ஏன் நவீன பசுமைத் தொழில்நுட்பங்களை விவசாயத்துறையில் புகுத்தவேண்டும் என்றும் அவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும் இலங்கையில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கு வலுவான விவசாயக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் எளிய மொழிநடையில் தாய்மொழியான தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளமை மிகச் சிறப்பானது. இன்று விவசாயம், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைவு. இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் தமிழ்பேசும் மக்கள், தமிழ்நாட்டு அறிஞர்களினால் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் ஈழத் தமிழ் துறைசார் பேராசிரியர் ஒருவர் விவசாய விஞ்ஞானம் சார்ந்த அறிவை பாமர விவசாயிகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற முயற்சியில் இந்தநூலை எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

பேராசிரியர் பகீரதன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவசாய விஞ்ஞானத் துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விவசாயம் சம்பந்தமான அறிவுத் தேடலுக்கும் அறிவுப் பரப்பலுக்கும் சென்றவர். விவசாயத் துறையில் அதீத ஈடுபாடும் சிறந்த அனுபவமும் கொண்டவர். இத்தகைய சிறப்பு மிக்கவர், இன்று இலங்கை ஒரு பாரிய உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தறுவாயில், தமது நாட்டின் இளையோருக்கு தமது நாட்டின் விவசாய வரலாற்றையும் பாரம்பரிய உணவு உற்பத்தி முறையின் நன்மை தீமைகளையும் தெளிவுபடுத்தி, நவீன விவசாய நுட்பங்களை விளக்கி இளம் வேளாண் முயற்சியாளர்களுக்கு நவீன விவசாயத்தில் நாட்டத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தி, துறை சார்ந்தவர்களுக்கு விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை திட்டமிட இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும் வகையில் எழுதி உள்ளார். அப்படிப்பட்ட நூலுக்கு அணிந்துரை வழங்குவது எனக்கும் பெருமை. இதுபோன்ற நூல்களை அவர் தமிழ் மொழியில் எழுதி தமிழுக்கும் விவசாயத்துறைக்கும் பெரும்பணி ஆற்ற இறைவனின் திருவருள் அவருக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

பேராசிரியர் ரா. ராமன்,

உழவியல் துறைப் பேராசிரியர் மற்றும் இயக்குநர்,

இயற்கை மற்றும் நீடித்த வேளாண் மையம், விவசாய பீடம்,

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் – 608 002,

தமிழ்நாடு.

Read More

உலகெங்கும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெருகிவரும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய நெருக்கடியை காலநிலை மாற்றத்துக்கு மத்தியில் வளர்முக நாடுகள் முகம் கொடுக்கின்றன. எம்மிடம் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வழிமுறைகளைக் கையாண்டால் மாத்திரமே எம்மால் உணவு உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி தன்னிறைவு அடைய முடியும் என்பது கண்கூடு.

Read More

இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இலங்கைக்கு ஆரியர் வருகைக்கு முன்னர் இருந்தே இலங்கையின் விவசாயப் பாரம்பரியம் ஆரம்பிக்கிறது. இந்த உலகில் வாழ்கின்ற மூத்த இனமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள தமிழினம், மனித இனத்தில் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரிகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட இனம். இதனாலேயே தான் நாமக்கல் கவிஞர், “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்று தமிழரை அடையாளப்படுத்தினார்.

Read More