காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் - Ezhuna | எழுநா

காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்

Kadal

மரியநாயகம் நியூட்டன் 

எழுநா – 17

2025

‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் இந் நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது.

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” என்ற இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் ‘சுதந்திரம்’ என்ற கதையாடலின் கீழ் எப்படி இலங்கைக் குடிமக்கள் சுதந்திரமின்றி தங்கள் சுயமான தொழில் வாய்ப்புகளைப் பறிகொடுத்து தங்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவுமின்றிப் பரிதவிக்கிறார்கள் என்பதை படிப்பவர் எவரும் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றன.

இந்நூலில் கட்டுரையாளர் பிரதானமாக இரண்டு விடயங்களை தனது பார்வைக்கும், பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளார். ஒன்று கடலும் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும். மற்றையது சுற்றாடல் (சுற்றுப் புறச் சூழல்) மாசடைதல்.  அதனை அவர் “நீலப் பொருளாதாரம்” “கடல் விவசாயம்” “கடல் பொருளாதார அபிவிருத்தி” என்ற பார்வைக் கோணங்களுக்குள் அடக்கியிருப்பதாகத் தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, சுற்றிவரக் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு. அத்துடன் ஆழ் கடல், பரவைக் கடல், பாசிக் கடல், சேற்றுக் கடல் போன்று பல்வேறுபட்ட தன்மைகள் கொண்ட சூழல்களையும் பல்வேறுபட்ட கடல் வாழ் மீன் வகைகளையும் தனது கடல் எல்லைக்குள் கொண்டிருக்கும் ஒரு நாடு. சுதந்திரமான ஆட்சியும், சுயமான பொருளாதாரத் திட்டங்களும் கொண்ட நாடாக இருந்திருந்தால் கடலுணவு ஏற்றுமதி மூலமே கணிசமான அந்நியச் செலாவணியை நாட்டின் வருமானமாக சம்பாதித்திருக்க முடியும். ஆனால், காலனித்துவ ஆட்சியாளர்கள் ‘சுதந்திரம்’ என்ற போர்வையில் இலங்கையில் ஏற்பாடு செய்துவிட்டுச் சென்ற ஆட்சி முறைமை 75 வருடங்களில் எமது நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. (“மக்களின் அன்றாட சீவியத்தை விட கடலின் -இயற்கை வளத்தின் பெறுமதியை விட அவர்களுக்கு சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகார வேட்கையைத் தீர்த்துக் கொள்வதுமே பெரிதாக இருக்கின்றது” – நூலில் இருந்து).

இதன் பின்னணியிலேயே காலங்காலமாக கடலுடன் பின்னிப் பிணைந்து கடற்றொழில் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டிக் காத்து வாழ்க்கைத் தரத்தையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வந்த மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதனால் அனுபவிக்கும் துன்ப துயரங்களையும் விரிவாகவும், துல்லியமாகவும் எடுத்துரைக்கிறது இந்த நூல்.

2009லிருந்து இலங்கையின் வடக்கு – கிழக்கு மீன்பிடி சமூகத்தினர் இரண்டு பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்று இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நடாத்தும் கடற் கொள்ளை. மற்றையது கடல் அட்டை வளர்ப்பு உட்பட பல் தேசிய நிறுவனங்களின் பரிசோதனை ஆராய்ச்சிக் கூடங்கள். இவ்விரு பிரச்சினைகளும் மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளாகும். இயற்கை அழிவு மற்றும் மாசடையும் சுற்றாடல் என்பவை முதற் குறிப்பிட்ட நடவடிக்கைகளின் பக்க விளைவுகள் ஆகும்.

இந்த நூல் குறிப்பாக, இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி ஊடாக அவர்களுக்குப் புரியவைப்பதற்கு முயற்சிக்கிறது. அதனூடாக இதில் உள்ள கட்டுரைகளைப் படிக்கும் அனைவரையும் அப் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இது ஒரு ஆய்வு நூலாகவும் அதேவேளை ஒரு வரலாற்று ஆவணமாகவும் அத்துடன், மாற்றத்திற்கான தூண்டுகோலாகவும் காணப்படுகிறது.

இதில் தரப்பட்டுள்ள தரவுகள், புள்ளி விவரங்கள், விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் யாவுமே இதுவரை மக்களால் அறியப்படாத அல்லது அவர்கள் அறியாத வண்ணம் மறைத்துவைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது. கடல் எல்லைப் பிரச்சினையும் கடல் அட்டை வளர்ப்பு ஊடுருவல்களும் தனியே தமிழ் மீன்பிடி சமூகத்தினரை மட்டும் பாதிக்கும் விடயம் அல்ல. தென்னிலங்கை சிங்கள மீன்பிடி சமூகத்தினரையும் அதன் ஊடாக ஒட்டுமொத்த இலங்கைக் குடிமக்களையும் பாதிக்கிறது என்பதனை படிப்பவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாளர் இந்நூலைப் படைத்துள்ளார். சட்ட விரோத எல்லை தாண்டிய கடற்கொள்ளை வட பகுதி தமிழ் மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கத் தொடங்குவதற்கு முன்னரேயே கிழக்குத் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி தமிழ் சிங்கள மீன்பிடி சமூகத்தினரைப் பாதிக்கும் விதத்தில் சீனப் பல்தேசியக் கம்பெனி இழுவைக் கப்பல்களின் எல்லை தாண்டிய கடற்கொள்ளை இலங்கை அரசின் அனுமதியுடன் ஆரம்பித்து விட்டிருந்ததையும் இக் கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பரவலாக உலகின் பல நாடுகளில் இயற்கையையும் சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டும் எனச் சட்டங்கள் இயற்ற வேண்டிய தேவை அந்தந்த நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு காரணமாக உருவாகி வருகிறது. பாரிய மீன்பிடிக் கப்பல்களின் இடைவிடாத செயற்பாடுகளினால் மீனினங்களின் இனப்பெருக்கம் தடைப்பட்டு அவை முற்றாக அழிந்து போகும் ஆபத்து காணப்படுகிறது. இயந்திர இழுவைப் படகுகள் கடலடி மீன்களின் வாழ்விடங்களை நிர்மூலமாக்குவதால் மீனினங்கள் அழிந்து போகின்றன. இதனால், ஆழ்கடல் மீன்பிடி சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. முறைதலையற்ற கடல் அட்டை வளர்ப்பு கரையோரத் தொழில் சார்ந்த மீன்பிடி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. மேலும், இவைகள் பற்றிய தெளிவான விளக்கமான புள்ளிவிவரத் தரவுகளை இந் நூலில் படித்தறிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளரின் சொந்த அனுபவங்களே படிப்பவர்களுக்கு இதனை ஒரு வரலாற்று ஆவணமாக உணர்ந்துகொள்ளச் செய்கிறது. அவரது தேடல்களே இதனை ஒரு ஆய்வு நூலாக கருதவைக்கிறது. அவர் கற்றுணர்ந்த தொழில்துறையே இதனை மாற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாகவும் ஆக்கியுள்ளது.

இலங்கைக் குடிமக்களின் சுபீட்சமான சுதந்திர நல்வாழ்வை வேண்டி நிற்போர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தோழமையுடன்,

அழகிரி,

பிரான்ஸ்,

26.01.2023.

Read More

காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்என்ற இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் சுதந்திரம்என்ற கதையாடலின் கீழ் எப்படி இலங்கைக் குடிமக்கள் சுதந்திரமின்றி தங்கள் சுயமான தொழில் வாய்ப்புகளைப் பறிகொடுத்து தங்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவுமின்றிப் பரிதவிக்கிறார்கள் என்பதை படிப்பவர் எவரும் வெகு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கின்றன.

Read More

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், 2009 போர் முடிவுக்கு பின்னான காலத்தில் கடல், அதன் இயற்கை வளங்கள், கடல் சார்ந்த மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆறு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மூன்று கட்டுரைகள், நோர்வேஜிய மொழியில் என்னால் எழுதப்பட்ட சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றின் உள்ளடக்கம் இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Read More