முத்துவடிவு சின்னத்தம்பி
எழுநா – 13
2024
மலையகம், தேயிலைக் கைத்தொழிலின் உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த அம்சங்களைப் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது. மலையகச் சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சினைகளையும், தோட்டத் தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்திய கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவருகிறது. மற்றொரு கோணத்தில் நோக்கும்போது, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மலையக இளைஞர்கள், மலையகப் பெண்கள், தோட்டங்களில் வாழும் தொழிலாளர் சாராத குழுவினர் போன்றோரது பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்கின்ற கட்டுரைகளையும் இந்நூல் தன்னகத்தே தாங்கி வெளிவருகின்றமை ஒரு சிறப்பம்சம் எனலாம்.
அத்தோடு, மலையகத்தில் தேயிலைக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகளைக் கொண்டுள்ள கட்டுரைகள், இத் தொகுப்பு நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அனைத்து விடயங்களையும், ஒரு வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ஆராய்ந்து, பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதோடு, அவற்றிற்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து உருவான அறிவுசார் மரபின் அடையாளமாகப் பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்கள் விளங்குகின்றார். இவரை மலையகத்தின் முதல் தலைமுறை சார்ந்த புலமையாளர் எனக் குறிப்பிடுவது வழக்கமாகும். தமக்குப் பிறகு அந்த அறிவு மரபினை முன்னெடுப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். அவரது மாணவப் பரம்பரையொன்று உருவாகி காத்திரமான சமூகப் பங்களிப்புகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதே ஆகும். பேராசிரியர், மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த விடயங்களைத் தமது ஆய்வுப் பரப்பாகவும், சிந்தனைப் பரப்பாகவும் கொண்டு தொடர்ச்சியாக இயங்கி வந்தவர். அவரது பெரும்பாலான எழுத்துகள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருக்கின்றன. பெருந்தோட்டச் சமூகம் பற்றி அவர் ஆங்கில மொழியில் மேற்கொண்ட ஆய்வுகள் இலங்கையில் பிற சமூகங்கள் மத்தியிலும், சர்வதேச ரீதியிலும் மலையக மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுபொருளாக்கின என்றே சொல்லவேண்டும்.