ஆதித் தமிழ் குறித்தும் தமிழர் குறித்துமான ஆய்வுக் கட்டுரைகள்
சுவாமி ஞானப்பிரகாசர்
தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ்
எழுநா வெளியீடு 12
மே 2013
சுவாமி ஞானப்பிரகாசரின் இந்நூல், உலகின் ஆதித்தாய்மொழியாகத் தமிழினை முன்வைத்து, தமிழர் தம் ஆதித்தாயகமான நடுநிலக் கடற்பகுதியிலிருந்து சிந்துவெளி பரவிப் பின் தென்னகம் போந்தார்கள் எனும் கருத்தினை நிறுவும்வகையிலே மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் “செந்தமிழ்” இதழ்களிலே வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். இப்போதைய ஆய்வுச்சூழலில் பொருந்தாத சில கருத்துக்கள் இத்தொகுப்பில் இருந்தபோதுங்கூட தமிழ், தமிழர் குறித்த ஆய்வுவரலாற்றில் இந்நூல் இன்றியமையாததாகிறது.
1875 இலே மானிப்பாயிலே பிறந்த பன்மொழிவித்தகர் சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ்மொழி, தமிழினக்குழுவின் வேர்களை காலத்தினாலே முன்னாய்ந்த அறிஞராவார். மொழியியலில்மட்டுமின்றி, கத்தோலிக்க மதகுருவான அவரின் வரலாற்று, தத்துவ ஆய்வுகளின் பெறுபேறுகள் யாழ்ப்பாணவரலாற்று நூலாகவும் சைவசித்தாந்தம் பற்றிய நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.
இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாவார். தனது கலாநிதிப் பட்டத்தினை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக்கொண்ட இவர் தமிழ்ப் பாடநூல்கள் தொடர்பாக முதுதத்துவமாணி ஆய்வினை மேற்கொண்டார். இரண்டு நூல்களை எழுதியுள்ள ஜெ.அரங்கராஜ் ‘சுவாமி விபுலானந்தரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள்’ மற்றும் ‘சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுக் கட்டுரைகள்’ ஆகிய இரு நூல்களின் பதிப்பாசிரியர் ஆவார்
மக்களிடையே தற்போது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகியுள்ளது. விஞ்ஞானத்தின் வேகமான வளர்ச்சியும் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும் கணினியின் கையாட்சியும் இதற்கு முக்கியக் காரணங்கள் எனக் கருதப்படுகிறது. அச்சுப்பதிப்பில் வெளியாகும் நூல்களைக் கையில் எடுத்துப் படிப்பதை விடக் கணினியில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதுதான் நாகரிகமாகி விட்டது.
மனிதனின் அறிவு வளர்ச்சியால் இது ஏற்பட்டாலும் நமது முன்னோருடைய காலத்தில் ஏட்டு வடிவிலே நூல்கள் எழுதப்பட்ட போது இருந்த தேடல் நிலை இப்போது இல்லையென்றே கூறவேண்டும். எனவே அச்சில் வந்த நூல்களையும் புறந்தள்ளும் போக்கும் தோன்றிவிட்டது.
இந்நிலையில் தொகுப்பு நூல்களை வெளியிடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் அரங்கராஜனும் இனம் காணப்படுகிறார். தமிழகத்திலே அச்சுக்கலை வளர்ச்சியுற்ற காலத்தில் ஏட்டுவடிவிலே இருந்த செய்திகளையும் தகவல்களையும் தொகுத்து நூல்களாக அச்சு வடிவில் கொணரும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. அம்மரபின் வளர்ச்சி நூல் வடிவாக்கும் முறைமையும் தோற்றம் பெற்றது. இப்பணியையே இந்நூல் தொகுப்பாளரும் செய்துள்ளார். ஒரு காலத்துச் சஞ்சிகைகளிலே பிரசுரமானவற்றை இப்போது தேடி எடுப்பது கடினமான வேலையாகும். மேலும் அவற்றை ஓரிடத்திலே கொண்டு வந்து வைப்பதும் எளிதன்று. சஞ்சிகையிலே குறிப்பாக ஒருவருடைய கட்டுரைகளைப் படிப்பதற்கு அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக அமைப்பதே நன்று.
இத்தகையதொரு பயனுள்ள பணியின் நிறைவாகவே இத்தொகுப்பு நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் வரிசையில் சிறப்பிடம் வகிக்கும் சுவாமி ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்ந்த காலம் 1875 – 1947 வரையாகும். பிறப்பினால் சைவர். பின்னர்க் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர். அதனால் வைத்திலிங்கம் என்ற இயற்பெயர் மறைய ஞானப்பிரகாசர் என்ற பெயரைப் பெற்றார். இவருடைய தாயார் தந்தை இறந்த பின் மறுமணம் செய்து கொண்டார். மணம் செய்து கொண்ட தம்பிமுத்துப்பிள்ளை சிறந்த தமிழறிஞராகவும் பதிப்பாசிரியராகவும், எழுத்தாளராகவும், புலவராகவும், பத்திரிகையாசிரியராகவும் விளங்கியவர். ‘வச்சியந்திரசாலை’ என்னும் பெயரில் ஓர் அச்சகமும் வைத்திருந்தார். ‘சன்மார்க்க போதினி’ என்னும் பத்திரிகையை 47 ஆண்டுகளாக வெளியிட்டவர். இத்தகைய வாழ்வியற் சூழல் ஞானப்பிரகாசரையும் தமிழ்ப் பணியிலே ஈடுபட வைத்தது. ஆங்கில மொழியறிவும் பெற்றுச் சிறப்படைந்தார். 1896ல் குரு மடத்திலே சேர்ந்து 6 ஆண்டு வேத சாஸ்திரங்களை முறையாகக் கற்றார். 1901ல் குருப்பட்டம் பெற்று ‘சுவாமி ஞானப்பிரகாச சுவாமிகள்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். இவருடைய வாசிப்புப் பழக்கம் சிறப்பானதாக இருந்தது. அவர் தேடிக் கொண்ட பன்மொழி அறிவு அவருடைய தொண்டுகளுக்குப் பேருதவியாக இருந்தது. பிரஞ்சு, சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பாளி , சிங்களம், சுமேரியம் போன்ற மொழிகளை நன்கு அறிந்திருந்தார்.
மேலும் சுவாமிகள் சிறந்ததொரு நூலகத்தையும் வைத்திருந்தார். பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். உலகின் பிரதான மொழிகளில் எழுதப்பட்ட மொழியாராய்ச்சி, மொழிவரலாறு, விமர்சனம், தத்துவம், வரலாறு தொடர்பான நூல்களும் அவருடைய நூலகத்திலே இருந்தன. 1903இல் ஊர்காவற்றுறையிலே குருவாகக் கடமையாற்றிய போது திரு இருதய வாசிகசாலை என ஒரு வாசிகசாலையை நிறுவியுள்ளார். அக்காலத்தில் தமிழில் வெளிவந்த நூல்களை அங்கு வைத்து இரவல் வழங்கும் ஒழுங்கையும் ஏற்படுத்தியிருந்தார்.
தமிழ் மொழியின் வரலாற்றை ஆராய்வதில் ஈடுபாடு கொண்ட சுவாமிகள் அதற்கு ஆதாரமாக அறிஞர் பலரின் மொழி தொடர்பான நூல்களையெல்லாம் படித்தார். மாக்ஸ் முல்லர், கால்டுவெல் ஐயர், பீம்ஸ், குண்டார்ட், சுப்பிரமணி ஐயர் போன்றோர் எழுதிய ஆய்வு நூல்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்தார். தனது கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதி அச்சிலே வெளியிட்டார். அக்காலத்திலே நூல்களை வாசிப்பவர்களை விடப் பத்திரிகைகளை வாசிப்போர் எண்ணிக்கையே அதிகமாயிருந்தது. மேலும், பொதுமக்களால் பத்திரிகையே விரும்பி வாசிக்கப்பட்டது. அதனால் ஞானப்பிரகாசர் தமது ஆய்வுக் கருத்துகளைச் சான்றாதாரங்களுடன் பத்திரிகைகளிலே கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதினார்.
இவ்வாறே மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட செந்தமிழ் என்னும் இதழிலும் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வந்தார். மத்தியத் தரை நாடுகளில் தமிழர் முன்னேற்றம், பழங்கால எழுத்துமுறை, ஒத்த தெய்வ வழிபாடு, மேற்காசியாவில் தமிழ் இடப் பெயர்கள் முதலிய கட்டுரைகளின் தொகுப்பு ‘தமிழரின் ஆதி இருப்பிடமும் பழஞ்சீர் திருத்தமும்’ என்னும் நூலாக அமைந்துள்ளது. இத்தொகுப்பிலே இடம் பெறாத கட்டுரைகளை இப்போது அரங்கராஜன் தொகுத்து நூலாக வெளிவரச் செய்துள்ளார்.
இத்தொகுப்பிலே உள்ள கட்டுரைகள், சுவாமிகளது தமிழ்ப்புலமையையும் ஆற்றலையும் இன்றைய தலைமுறைகள் அறிய வாய்ப்பளிக்கும். சுவாமிகள் மறைந்து ஏறக்குறைய 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரைப் பற்றிய நினைவூட்டல் பணியாக இத்தொகுப்பு நூல் அமைகிறது. சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் தமிழர் வரலாறு பற்றியும் தமிழ்மொழி பற்றியும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற முனைப்புத் தோன்றியுள்ளது. அதே போன்று இன்றும் தமிழ் பற்றிய தேடல் தேவையாக உள்ளது. அது அமைப்புற்ற வரலாற்றையும் பிறமொழிகளோடு அது தொடர்புற்றிருந்த நிலையையும் தமிழருக்கே அறிவிக்க வேண்டியுள்ளது. குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழரின் தலைமுறைகளின் வாழிட மொழியோடு தமிழ் மொழியை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே அதற்கான தகவல்களையும் செய்திகளையும் ஒரு பார்வையில் காண்பதற்கு இத்தொகுப்புப் பெரிதும் உதவும்.
நிறைவாகத் தொகுப்பாளர் பற்றிய சிறப்பையும் கூற வேண்டும். தமிழகத்தில் இவர் பெற்ற தமிழ்க்கல்வியே இத்தகையதொரு பணியைச் செய்வதற்குத் தூண்டியுள்ளது. இளைஞராக இருந்த போதும் தமிழ் மூத்தறிஞர் பணிகளைப் பற்றிய தேடுதலில் இவர் ஈடுபட்டிருப்பது இவரைத் தனித்துவப்படுத்திக் காட்டுகிறது. முன்னர்த் தொகுக்கப்படாத கட்டுரைகளைத் தேடி ஒரு நூல்வடிவில் கொணரும் இலக்கிய முயற்சி ஒரு காலம் அறிந்த நற்பணியாகும். இன்னும் அடுத்த தலைமுறையினருக்குத் தேவையானவற்றை வாழும் காலத்திலேயே தேடி வைத்துவிட வேண்டும் என்ற வாழ்வியற் கடமையையும் இத்தொகுப்பு எல்லோருக்கும் நினைவூட்டும். மேலும் இளைய தலைமுறையை இவ்வழியே செல்லத் தூண்டும். மிகுந்த பொறுமை தமிழார்வம், ஓயாத உழைப்பு என்பவற்றைத் துணையாகக் கொண்டு இப்பணியைச் செய்து முடித்த அரங்கராஜன் பாராட்டுக்குரியவர். அவர் பணியின் செம்மை கண்டு மனம் மகிழ்கிறது. தமிழன்னைக்கு நூல் பல செய்து அழகு பார்க்கும் இளம் உள்ளங்கள் பல உருவாக இத்தொகுப்பு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
சிரேஷ்ட விரிவுரையாளர்
தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மதுரைத் தமிழ்ச்சங்கச் ‘செந்தமிழ்’ இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்த வேளையில் சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் இன்றைய ஆய்வுச் சூழலுக்கு ஏற்பில்லாத பல முரண்பட்ட கருத்துக்கள் இருந்தபோதும் தமிழியல் ஆய்வின் வரலாற்றுப் போக்குகளில் அவை தவிர்க்க முடியாத நிலையில் அமைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாயிருந்தது. எனவே இக்கட்டுரைகளைத் தொகுக்கலானேன்.
இக்கட்டுரைகளில் இன்றைய ஆய்வு நிலைக்கு முரண்பட்டதாய்த் தமிழர்களின் தோற்றுவாய் குறித்துப் பல்வேறு வகையான கருதுகோள்கள் உண்டு. தமிழர்கள் நடுநிலக்கடல் பகுதிகளில் இருந்து கைபர், போலன் கணவாய்களைக் கடந்து சிந்துவெளியில் பரவி, அங்கு மிகப்பெரும் நாகரிக வளர்ச்சியை எட்டிய பின் மெல்ல மெல்லத் தென்னகம் போந்தனர் என்பது தமிழர்களின் தொடக்கக்காலத் தோற்றுவாய் குறித்த ஆய்வுக் கருதுகோள்களில் ஒன்றாக அமைகிறது.
இன்றைக்குத் தமிழியல் சூழலில் கிடைக்கக்கூடிய ஆய்வுத்தரவுகளின் வழியும் ஆய்வியல் மேம்பாட்டின் வழியும் இக்கருத்துகள் ஏற்புடையனவாகா. தொடச்சியான நாகரிகத்தினையும் அதனையொட்டிக் கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளையும் திராவிட மொழிகளின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய செம்மையினையும் நோக்கும் போது தென்னகத்தில் செழிப்புற்று வாழ்ந்த இனக்குழுக்களோடு சில இனக்குழுக்கள் வந்து இணைந்தனவாக இருக்கலாமேயல்லாமல், புதியதாய் ஒரு கட்டமைவே பிறிதோர் இடத்திலிருந்து வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டது எனும் கருத்தியலை ஏற்கலாகா. இதே கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளியினை ஆய்ந்த அறிஞர் ஹிராஸ் பாதிரியார் அவர்களின் நட்பும் ஞானப்பிரகாசருக்கு இக்கருத்தியல் உருவாகக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆயினும் தமிழியல் ஆய்வுப் போக்குகள் அனைத்தினையும் அறிதல் ஆய்வாளர்களுக்கு இன்றியமையாதது. அதுவும் இத்தொகுப்பின் தேவையாகிறது.
யாழ்ப்பாணத்தின் பழங்குடிகள் குறித்ததாய் இவரது கருத்துக்களும் ஏற்புடையனவாகா. ஆயினும் தமிழில் வந்த இடப்பெயர் ஆய்வுகளிலும் இவரது ஆய்வுகள் இன்றியமையாததாக அமைகின்றன. மொழிநடை என்பது தமிழில் பல்வேறு வகையான மாறுபாடுகளைக் கொண்டதாக அமையும். அதில் ஞானப்பிரகாசரின் மொழிநடைக்குச் சிறந்ததொரு இடமுண்டு.
இவரின் பரந்துபட்ட பன்மொழி அறிவினை ஒட்டிக் காட்டப்படும் மேற்கோள்கள் இவரது வேர்ச்சொல் ஆய்வின் திறத்தினை விளக்குவனவாக அமைகின்றன. இதுவே இவரைத் தேவநேயப் பாவாணர் முதலாய வேர்ச்சொல் ஆய்வாளர்களின் முன்னோடியாகக் காட்டுகிறது. பல்சமயத் தொன்மங்கள் குறித்த இவரது பார்வை இவரது ஆய்வுப் போக்கின் பண்பட்ட தரவியல் தன்மையைக் காட்டுவதாக அமைகிறது. இவை போன்ற காரணங்களின் பொருட்டு இப்பதிப்பு இன்றியமையாததாக அமையும்.
இப்பதிப்புக்கு அணிந்துரை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப. அருளி அவர்களுக்கும் ஈழத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த நூலினைத் தட்டச்சு செய்து உதவிய யாழினி சதீஸ்வரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். இந்த நூல் வருவதற்கு ஊக்கம் வழங்கிய சற்குணம் சத்தியதேவனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுநா சார்பாக முனைவர் ஜெ. அரங்கராஜ்