இரசவர்க்கம் - Ezhuna | எழுநா

இரசவர்க்கம்

Rasavarkkam

பால. சிவகடாட்சம்

எழுநா – 15

2024

மருத்துவ நூல்களைத் தமிழில் ஆக்கும் முயற்சிகள் மிகவும் பிற்காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டுவந்த ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையினரால் பொது ஆண்டு 1500க்குச் சமீபமாக ஆக்கப்பெற்ற செகராசசேகரம் என்னும் நூலும் அதனை மேலும் விரிவுபடுத்தி எழுதப்பெற்ற பரராசசேகரம் என்னும் பன்னிரண்டு பாகங்கள் கொண்ட நூலும் ஆகும்.

இவற்றுள் பரராசசேகரம் என்னும் நூலுக்குரியதாகக் கருதப்படும் பாடங்களுள் பெரும்பாலானவை கிடைத்துள்ள போதிலும் செகராசசேகரத்துக்கு உரிய பாடங்கள் இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை. இவற்றுள் ஒன்றுதான் மருந்தாகப் பயன்படும் பதார்த்தங்களின் குணங்கள் பற்றி எடுத்துரைக்கும் இரசவர்க்கம் என்னும் நூலாகும். ‘செகராசசேகரத்துக்குரிய இரசவர்க்கம்’ என்னும் பகுதியைக் கொண்ட ஏட்டுப்பிரதி பாரம்பரிய மருத்துவர்களான எமது மூதாதையரிடம் இருந்து எமக்கு வந்துசேர்ந்துள்ளது. இதனை முதன்முதலாக அச்சில் வெளிக்கொண்டுவரும் வாய்ப்பு எமக்குக் கிடைத்திருப்பதையிட்டு நாம் பெருமகிழ்வு அடைகிறோம்.

சமஸ்கிருத மொழியில் ஆக்கபெற்ற பண்டைய ஆயுள்வேத மருத்துவ நூல்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர் என்போரே படித்துப் பயன்பெற முடிந்தது. இவர்களே ஆயுள்வேத மருத்துவர்களாகப் பணிபுரிய முடிந்தது. குயவர், நாவிதர் முதலானோர் கழலை கட்டி அரிதல், புண்புரைகளுக்கு மருந்து கட்டுதல், எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடுதல் போன்ற சிகிச்சைகளைச் செய்துவந்தனர். சித்தர்கள் கண்டறிந்த மருத்துவமுறைகள் நெடுங்காலமாக எழுதப்படாது வாய்மொழி மரபாகவே பேணப்பட்டு வந்துள்ளன.

Read More

சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும் செகராசசேகரம் என்னும் வைத்திய நூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப் பெற்றனவே. கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் ஒருவனே மேற்படி நூல்கள் தோன்றக் காரணமாயிருந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

Read More