என். கே. எஸ். திருச்செல்வம்
எழுநா – 18
2025
கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் தனது 19 ஆவது ஆய்வுப்படைப்பாக வெளிக்கொணர்ந்திருக்கும் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ எனும் இந்நூலை அறிமுகப்படுத்துவதில் நான் மிகுந்த மனமகிழ்வு அடைகின்றேன். வாய்மொழி வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பாளி நூல்கள் கூறும் ஈழத்தின் பூர்வீக மக்கள் பற்றிய வரலாற்றை தொல்லியல் சான்றுகள் கொண்டு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை தனது ஆய்வுகளில் வலியுறுத்திக் கூறிவரும் இந்நூலாசிரியர் அதற்குச் சான்றாக பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் இருந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றை அடையாளப்படுத்தியிருப்பதன் மூலம் தனது கருத்தை நிறுவுவதில் வெற்றியடைந்துள்ளார் என்றே கூறலாம்.
இந்நூலாசிரியர் காடுகள், மலைகள் எல்லாம் சென்று பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை மீளவும் வாசித்திருப்பதுடன், அவற்றில் இதுவரை தமிழர் பற்றிச் சொல்லப்படாத புதிய கல்வெட்டுகளை அடையாளம் கண்டு அவை பற்றிய விபரங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர் தனது ஆய்வை பிராமிக் கல்வெட்டுகளுடன் முடித்துக் கொள்ளாது, 8ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்ட பல சிங்களக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து, அவற்றில் காணப்படும் தமிழர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் இந்நூலில் எழுதியுள்ளார். வரலாற்று நம்பகத்தன்மையுடைய கல்வெட்டுகளை முக்கிய மூலாதாரங்களாகக் கொண்டு, இலங்கைத் தமிழருக்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்நூலைப் படைத்துள்ளமை இந்நூலுக்குரிய சிறப்பம்சமாகும்.
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
ஈழத் தமிழரின் பூர்வீக வரலாற்றிற்குப் புது வெளிச்சமூட்டும் இன்னொரு அரிய படைப்பு
கடந்த மூன்று சகாப்த காலங்களுக்கு மேல் தனது வரலாற்று ஆய்வுப் பரப்பில் ஆழமாக அகலக் கால் பதித்திருக்கும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் தனது 19 ஆவது ஆய்வுப் படைப்பாக வெளிக்கொணர்ந்திருக்கும் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலை அறிமுகப்படுத்துவதில் நான் மிகுந்த மனமகிழ்வு அடைகின்றேன். வாய்மொழி வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பாளி நூல்கள் கூறும் ஈழத்தின் பூர்விக மக்கள் பற்றிய வரலாற்றை தொல்லியல் சான்றுகள் கொண்டு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை தனது ஆய்வில் வலியுறுத்திக் கூறிவரும் இந்நூலாசிரியர் அதற்குச் சான்றாக பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் இருந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றை அடையாளப்படுத்தியிருப்பதன் மூலம் தனது கருத்தை நிறுவுவதில் வெற்றியடைந்துள்ளார் என்றே கூறலாம்.
ஒரு நாட்டின், ஒரு வட்டாரத்தின் அல்லது குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் ஆதிகால, இடைக்கால இனம், மொழி, மதம், எழுத்து, தனிநபர்கள், உறவுமுறைகள், சமூகப் பிரிவுகள், தொழிற் பிரிவுகள், ஊர்ப் பெயர்கள் முதலானவற்றின் வரலாற்றை அறிவதில் வரலாற்று இலக்கியங்களைக் காட்டிலும் தொல்லியல் ஆதாரங்கள் நம்பகரமானவையாகக் காணப்படுகின்றன.
காலத்திற்குக் காலம் பேணப்பட்டு வந்த செவிவழிச் செய்திகள், வட்டார வழக்கிலிருந்த வாய்மொழி வரலாற்றுக் கதைகள், ஐதீகங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றை மூலாதாரங்களாகக் கொண்டு வரலாற்று இலக்கியங்கள் பிற்காலத்தில் நூல் வடிவில் எழுந்தவை. இவ்வரலாற்றுச் செய்திகளில் கற்பனைகள், ஐதீகங்கள், வரலாற்றுத் திரிபுகள், இடைச் செருகல்கள், இன – மத உணர்வுகள், சமகால அரசியல், பொருளாதார, சமய, சமூக செல்வாக்குகள் முதலியன இடம்பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் அதிலும் குறிப்பாக கல்வெட்டுகள் பெரும்பாலும் சம்பவம் நடந்த காலத்துக்குரிய ஆதாரங்களாகக் காணப்படுவதால் அவற்றில் வரலாற்று இலக்கியங்களில் காணப்படும் குறைபாடுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம். இதனால்தான் உலக நாடுகள் பலவற்றின் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் தொல்லியற் கண்டு பிடிப்புகளால் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து மீள் வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. இந்த வரலாற்றுப் பார்வையின் மாற்றத்திற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.
தென்னாசியாவில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய முதலாவது கல்வெட்டுகள் பிராமிக் கல்வெட்டுகள் என்றே அழைக்கப்படுகின்றது. இவை பிராகிருத மொழியில் பெரும்பாலும் பௌத்த மதம் சார்ந்த செய்திகளைக் கூறுவதனால் பௌத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக தமிழகத்தின் பிராமிக் கல்வெட்டுகளின் மொழி தமிழாக இருந்தபோதும் அக் கல்வெட்டுகளிலும் பிராகிருத மொழியின் செல்வாக்கு காணப்படுகின்றது.
இந்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் பொறியியலாளராகக் கடமையாற்றிய பிரித்தானிய நாட்டவரான ஹென்ரி பாக்கர் என்பவர், வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்தில் காணப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டில் ‘வேள்’ என்ற தமிழ்ச் சிற்றரசனைக் குறிக்கும் பட்டப் பெயரை ஆதாரம் காட்டி இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன் வைத்திருந்தார்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளை ஆய்வு செய்த பேராசிரியர்களான சத்தமங்கல கருணாரத்தின, இ.பி. பெர்ணாந்தோ, ஆரிய அபயசிங்க, கா. இந்திரபாலா, சி.க. சிற்றம்பலம், சி. பத்மநாதன், பொ. இரகுபதி போன்ற அறிஞர்களும் தமிழக அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், கலாநிதிகளான சு. இராஜகோபால், எஸ். பூங்குன்றன் முதலானோரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியில், தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்ட தனிநபர், பட்டம், பதவி, உறவுமுறை, சமூகம், ஊர்ப்பெயர் முதலியன இடம்பெற்றுள்ளதை அடையாளப்படுத்தியிருந்தனர். ஆயினும் இவர்களது ஆய்வுகள் பெரும்பாலும் ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தால் படியெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்பிரதிகளை ஆதாரங்களாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்நூலாசிரியர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் காடுகள், மலைகள் ஊடாகச் சென்று கல்வெட்டுகள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை மீளவும் வாசித்திருப்பதுடன் அவற்றில் இதுவரை தமிழர் பற்றிச் சொல்லப்படாத புதிய கல்வெட்டுகளை அடையாளம் கண்டிருப்பதாகக் கூறியிருப்பது பிராமிக் கல்வெட்டுகளை ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் புதிய செய்தியைக் கூறுவதாக உள்ளது.
மேலும் அவர் தனது ஆய்வைப் பிராமிக் கல்வெட்டுகளுடன் முடித்துக் கொள்ளாது, 8 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்ட பல சிங்களக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அடையாளப்படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழருக்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை வரலாற்று நம்பகத்தன்மையுடைய கல்வெட்டுகளை முக்கிய மூலாதாரங்களாகக் கொண்டு நிறுவியிருப்பது இவ்வாய்வாளரின் ஆழ்ந்த ஆய்வுப் புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வரலாற்று ஆர்வலர்கள் இந்நூலைப் படிக்கும் போது இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இலகு தமிழில் அழகாக எழுதப்பட்டிருப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும். ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் வாசகர்களின் பொருள் விளக்கம் கருதி ஒவ்வொரு கல்வெட்டுகளும் உபதலைப்புகளில் எழுதப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும் ஆய்வாளர் தனது கள ஆய்வுகளின் மூலம் பல கல்வெட்டுகளை அடையாளம் கண்டு அவற்றை மீளவும் படித்து ஆய்வு செய்திருப்பது ஈழத்தமிழர் வரலாற்றை மீளாய்வு செய்வதில் அவருக்கிருக்கும் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் காட்டுகின்றது. ஏற்கனவே 18 ஆய்வு நூல்களை வெளியிட்டு ஆய்வுப் பரப்பில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் கலாபூஷணம், கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் இந்த 19 ஆவது நூலும் பலரின் பாராட்டைப் பெறும் என்பதில் ஐயமில்லை. அவரின் ஆய்வுப்பணி மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஜூலை 2023
ஈழத் தமிழரின் பூர்வீக வரலாற்றிற்குப் புது வெளிச்சமூட்டும் இன்னொரு அரிய படைப்பு
கடந்த மூன்று சகாப்த காலங்களுக்கு மேல் தனது வரலாற்று ஆய்வுப் பரப்பில் ஆழமாக அகலக் கால் பதித்திருக்கும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் தனது 19 ஆவது ஆய்வுப் படைப்பாக வெளிக்கொணர்ந்திருக்கும் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலை அறிமுகப்படுத்துவதில் நான் மிகுந்த மனமகிழ்வு அடைகின்றேன். வாய்மொழி வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பாளி நூல்கள் கூறும் ஈழத்தின் பூர்விக மக்கள் பற்றிய வரலாற்றை தொல்லியல் சான்றுகள் கொண்டு மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை தனது ஆய்வில் வலியுறுத்திக் கூறிவரும் இந்நூலாசிரியர் அதற்குச் சான்றாக பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் இருந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றை அடையாளப்படுத்தியிருப்பதன் மூலம் தனது கருத்தை நிறுவுவதில் வெற்றியடைந்துள்ளார் என்றே கூறலாம்.
இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. இவற்றை உறுதிப்படுத்த போதிய சான்றுகள் அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்று அறிஞர்களான பேராசிரியர் எஸ். பத்மநாதன், பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், பேராசிரியர் க. இந்திரபாலா, கலாநிதி பரமு புஷ்பரட்ணம், கலாநிதி செ. கிருஷ்ணராசா ஆகியோர் இலங்கையின் ஆதித் தமிழர் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளை தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர்.