யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயர் கைப்பற்றியபோது, அதன் தலைநகராக நல்லூர் இருந்தது தெளிவு. விரைவிலேயே அவர்கள் தமது தலைமையிடத்தைப் பண்ணைத்துறைப் பகுதிக்கு நகர்த்தினர். அங்கே ஒரு கோட்டையையும் ஒரு நகரத்தையும் அமைத்துக்கொண்டனர். போர்த்துக்கேயர் “ஜஃப்னாபட்டவ்” என அழைத்த இந்த நகரத்தின் தொடர்ச்சியாகவே தற்கால யாழ்ப்பாண நகரம் வளர்ச்சியடைந்தது. போர்த்துக்கேயர் உருவாக்கிய நகரத்தை நவீன யாழ்ப்பாணத்தின் அல்லது யாழ்ப்பாண நகர வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாகக் கொள்வதில் தவறில்லை. 2021 ஆம் ஆண்டில் இந்த நவீன யாழ்ப்பாண நகரம் நான்கு நூற்றாண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தது. இது ஒரு முக்கியமான நிகழ்வாக எனக்குத் தோன்றியது.
யாழ்ப்பாண இராச்சியம் அந்நியருக்கு அடிமையான நிகழ்வோடு தொடர்புடையது என்ற வகையில், நவீன யாழ்ப்பாண நகரத்தின் உருவாக்கம் தொடர்பில் எதிர்மறையான சில உணர்வுகளும் நெருடல்களும் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால், நல்லனவும் கெட்டனவும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன. மோசமான காலங்கள் இல்லாமல் செழிப்பான காலங்களுக்குப் பொருள் கிடையாது. அடிமைத்தனம், அடக்குமுறை என்பவை இல்லாமல் எதிர் வினைகளும் எழுச்சியும் இல்லை. நாம் விரும்பாததை மறைத்து விரும்பியவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதனால் வரலாற்றைச் சரியானபடி புரிந்துகொள்ள முடியாது.
மேலும், இந்த நானூறு ஆண்டுகளில் யாழ்ப்பாண நகரம் வட பகுதி மக்களின் வாழ்வியலோடு நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தது. இன்று நகரில் காணக்கூடிய பல அம்சங்கள் மேற்படி பிணைப்பின் வெளிப்பாடுகளே. பல்வேறு துறைகளில் மக்களுக்குத் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்கிப் பலர் தனித்தனியாகவும் சமூகமாகவும் முன்னேறுவதற்கு இந்நகரம் பங்களிப்புச் செய்துள்ளது. இன்று இந்த நகரிலுள்ள பல்வேறு வசதிகளும் அம்சங்களும் என்ன பின்னணியில், எவ்வாறு உருவாகின என்பவற்றைப் பற்றியோ; இவற்றை உருவாக்குவதில் தொடர்புள்ள நிகழ்வுகள், முயற்சிகள், போராட்டங்கள், தியாகங்களைப் பற்றியோ நம்மிற் பலருக்குத் தெரிவதில்லை. இவ்விடயங்களைத் தெரிந்துகொள்வது, நமது சமூகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவுவதுடன், நகரின் பல்வேறு அம்சங்களின் முக்கியத்துவத்தைச் சரியானபடி புரிந்துகொண்டு அவற்றுக்கு உரிய மதிப்பளிக்கவும் அவற்றை உரியமுறையில் கையாளவும் பேணிப் பாதுகாக்கவும் பயன்கொள்ளவும் ஊக்குவிக்கும் என்பது எனது கருத்தாக இருந்தது.
இதனால், நவீன யாழ்ப்பாண நகரத்தின் 400 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அதன் வரலாற்றை ஒரு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு ஏற்பட்டது. நகரமொன்றின் சமூகவியல், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்றவை சார்ந்த வரலாறுகளின் அடையாளங்களாக உருவாகி நிலைத்திருப்பவையே நகரத்தின் உருவாக்கிய சூழல்கள். குடியிருப்புகள், வீதிகள், பலவகையான கட்டடங்கள், பூங்காக்கள், செயற்கையான நிலத் தோற்றங்கள் போன்றவை மேற்குறித்த உருவாக்கிய சூழலின் கூறுகள். இதனால், யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும், உருவாக்கிய சூழலின் (Built Environment) வளர்ச்சி என்ற நோக்குநிலையிலிருந்து எழுதுவதே எனது நோக்கமாக இருந்தது. ஒரு கட்டடக்கலைஞன் என்ற வகையில் உருவாக்கிய சூழல்கள் தொடர்பில் நான் பெற்றுக்கொண்ட அறிவையும்; நகர உருவாக்கம், நகர வளர்ச்சி ஆகியவை தொடர்பில் எனக்குள்ள ஆர்வத்தையும் மூலதனமாகக் கொண்டே நான் இந்த நூலை எழுதத் துணிந்தேன்.
யாழ்ப்பாண நகரம் ஏறத்தாழ 327 ஆண்டுகள் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிகளின்கீழ் இருந்தது. இக்காலப்பகுதி, வட பகுதியைப் பொறுத்தவரை, குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான காலப்பகுதி. ஆனாலும், அண்மைக் காலத்தில், ஐரோப்பியருக்கு முந்திய யாழ்ப்பாண வரலாற்றை ஆய்வு செய்வதிலும் அதைப் பதிவு செய்வதிலுமே நம்மவர் கூடிய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். அதற்குப் பிந்திய, குறிப்பாக ஐரோப்பியர் ஆட்சிக்கால வரலாற்றை ஆய்வு செய்து பதிவுசெய்வதில் அத்தகைய ஆர்வத்தைக் காண முடியவில்லை. இதனாற் போலும் யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
ஐரோப்பியர் ஆட்சிக்கால வரலாறு எங்களுடைய வரலாறு அல்ல என்றும் அவர்கள் உருவாக்கியவை நமக்கு அந்நியமானவை என்றும் மக்களிடையே உள்ள சிந்தனைப் போக்கு இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆள்பவரின் வரலாறே வரலாறு என்ற கருத்தின் விளைவே இது. உண்மையில் ஆள்பவர்கள் யார் என்பதற்கும் அப்பால் எல்லாக் காலத்து வரலாறுகளும் மக்களுடையனவாகவும் இருக்கின்றன. ஆட்சியாளருடைய நடவடிக்கைகள் மக்களில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன; அவர்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை உருவாக்குகின்றன; சில அவர்களின் பண்பாட்டு வரலாற்றில் திருப்பு முனைகளாகவும் அமைகின்றன. அதேபோல மக்களுடைய வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் கூட ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளிலும் வரலாற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. எனவே, ஐரோப்பியர் ஆட்சிக் கால வரலாற்றையும், அதற்குப் பிந்திய சமகால வரலாற்றையும் ஆராய்ந்து பதிவுசெய்ய வேண்டியது முக்கியமானது.
நகரொன்றின் வரலாற்றை அரசியல், பொருளாதாரம், சமயம், சமூகவியல், பௌதீகக் கட்டமைப்பு போன்ற துறைசார் கோணங்களிலிருந்து நோக்க முடியும். யாழ்ப்பாண நகரத்தைப் பொறுத்தவரையில், இவ்வாறான வரலாற்று ஆய்வுகளை வரலாற்றாளர்கள் போதிய அளவில் முன்னெடுக்கவில்லை. அதிலும், நகரத்தின் பௌதீக வளர்ச்சி வரலாறு குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகின்றது.
1948 இல் பிரித்தானியர் வெளியேறிய பின்னர் இன்று வரையான காலப்பகுதியில் சாதகமானதும் பாதகமானதுமான பல்வேறு நிலைமைகளை யாழ்ப்பாண நகரம் எதிர்கொண்டது. குறிப்பாக 1980களின் நடுப்பகுதிக்குப் பிந்திய காலத்தில் உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாண நகரம், கட்டங்கட்டமாகப் பெருமளவு பாதிப்புக்கு உள்ளானது. இக்காலத்தில் யாழ்ப்பாண நகரின் முக்கியமான பல பகுதிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் கட்டடங்களும் மரபுரிமைச் சொத்துகளும் முற்றாக அழிந்தன அல்லது பெரும் சேதங்களுக்கு உள்ளாகின.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், சேதமான பல உட்கட்டமைப்பு வசதிகளையும் கட்டடங்களையும் மீளமைப்புச் செய்துள்ளனர். மீளமைப்புச் செய்யவேண்டியவை இன்னும் உள்ளன. ஆனால், யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பௌதீக அம்சங்களை இருந்தபடியே மீளுருவாக்கம் செய்யவோ, பாதுகாக்கவோ, அவை தொடர்பான தகவல்களை வேறு வகைகளில் ஆவணப்படுத்தி வைக்கவோ முழுமையான முயற்சிகளை எவரும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பௌதீக வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது காலத்தின் தேவை. இது, யாழ்ப்பாண நகரத்தின் பல்வேறு பௌதீக அம்சங்களை அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் வைத்து அடையாளம் காண்பதற்கும், அவற்றின் வரலாற்று முக்கியத்தை உணர்ந்துகொள்வதற்கும், அவற்றுட் சிலவற்றையாவது உரியபடி பாதுகாப்பதற்கும் உதவும்.
1958 ஆம் ஆண்டில் டபிள்யூ.எல். ஜெயசிங்கம் தனது கலாநிதிப் பட்டத்துக்காக “The Urban Geography of Jaffna” (யாழ்ப்பாணத்தின் நகரப் புவியியல்) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.1 பதிப்பிக்கப்படாத இந்த ஆய்வுக் கட்டுரையில் யாழ்ப்பாண நகரத்தின் பெளதீக வரலாறு தொடர்பிலான விடயங்களும் உள்ளடங்குகின்றன. யாழ் நகர வரலாறு குறித்துக் கட்டுரைகளை எழுதிய சிலர், நகரின் பௌதிக வரலாறு சார்ந்த அம்சங்களையும் கவனத்திற் கொண்டனர். இந்த வகையில், பேராசிரியர் கா. இந்திரபாலா ஆங்கிலத்தில் எழுதிய “A Short History of Jaffna Town” (யாழ்ப்பாண நகரத்தின் சுருக்க வரலாறு) என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்கது.2 பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை,3 கலாநிதி க. குணராசா4 ஆகியோரும் நகரப் புவியியல் (Urban Geography), நகர உருவவியல் (Urban Morphology) ஆகிய நோக்குநிலைகளிலிருந்து சில கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஆனாலும், யாழ்ப்பாண நகரத்தின் பௌதீக வரலாற்றை முறையாக ஆராய்ந்து விரிவான பௌதீக வரலாறு என்று கூறுமளவுக்கு நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. நகரங்களின் பௌதீக அம்சங்கள் சார்ந்த துறைகளில் பயிற்சி உள்ளவர்கள் நம் மத்தியில் குறைவாக இருப்பது, அவர்களும் இவ்விடயத்தில் போதிய ஆர்வம் காட்டாமை போன்றவை இதற்கான காரணங்களுள் அடங்கும்.
இந்த நூல், இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் தோற்றப் பின்னணி, அது இன்றைய வளர்ச்சி நிலையை அடைவதற்குக் காரணமான காரணிகள் போன்ற விடயங்களை ஆராய்வதுடன், இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் கட்டமைப்புக்கள் உருவான வரலாற்றை அவ்வக்காலத்துப் புவியியல், பொருளாதாரம், சமூகம், சமயம், அரசியல், தொழில்நுட்பம் போன்ற இன்னோரன்ன அம்சங்களின் பின்னணியில் விளக்கவும் முயற்சி செய்கின்றது.
கிடைக்கக்கூடிய பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நிலப்படங்கள்; போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களைச் சேர்ந்த நூல்கள், அறிக்கைகள், குறிப்புகள்; பிரித்தானியர் காலத்து அரசாங்க அறிக்கைகள், வெளியீடுகள்; பிற்காலத்தவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள், ஆய்வுகள்; ஓரளவு கள ஆய்வுகள், நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளேன். உலகின் பல பகுதிகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் இந்த விடயம் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கக்கூடும். எனினும், இதற்கான வசதி வாய்ப்புகள் இன்மையால் இவ்விடங்களில் ஆய்வுகளை நான் மேற்கொள்ளவில்லை. ஆதலால், கிடைக்கக்கூடிய எல்லாத் தகவல்களையும் பயன்படுத்தி இந்நூலை எழுதியதாகச் சொல்ல முடியாது. எனினும், இந்நூலில் நான் முன்வைத்துள்ள கருத்துகள் ஆக்கபூர்வமான கருத்தாடல்களை ஏற்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இவ்விடயம் குறித்த ஆழமான ஆய்வுகளுக்குத் தூண்டுதலாகவும் அமையுமாயின் அதுவே இந்த நூலின் வெற்றியாக அமையும்.
குறிப்புகள்
- William Luther Jeyasingham, “The Urban Geography of Jaffna,” (PhD thesis, Clark University, 1958).
- K. Indrapala, “The City of Jaffna: A Brief History”, In The Jaffna Municipal Council Silver Jubilee Souvenir (Jaffna: Jaffna Municipal Council, 1974).
- P. Balasundarampillai, “Jaffna: Past, Present and Future, a Development Perspective,’ Jaffna Municipal Council, Golden Jubilee Number (Jaffna: Celebration Committee, 2002).
- க. குணராசா, “யாழ்ப்பாண நகரம்: உருவவியல் குறித்து ஓர் குறிப்பு,” எழில்மிகு யாழ்ப்பாணம் (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாநகர சபை, 1968).
Read Less