…1920 களில் யாழ்குடாநாட்டில் நிகழ்ந்த சமூக உருவாக்கத்தினை முதன்மை மையப் பொருளாகக்கொண்டு, அச்சமூக உருவாக்கத்தில் பங்காற்றிய சிந்தனைப் போக்குகளின் பிரதிநிதிகளில் கனமிகு பாத்திரத்தை வகித்த யாழ் வாலிபர் காங்கிரஸ் குறித்தும் அவ்வமைப்பின் பங்களிப்பாளர்களுள் ஒருவராக இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விபுலானந்தரின் பங்கு குறித்தும் இந்நூல் பேசுகின்றது…
0 0 0
“இந்நூல் வெளிக்கொணரப்பட்ட காலப்பகுதியில் அந்நிய நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்கொள்வதின் போதான பேரிழப்புகளின் பின்னால், தமிழீழ அரசு மீளவும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அந்நிய இராணுவத் தலையீடும் அதை வெற்றிகொள்ள புலிகள் இயக்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இராணுவ, அரசியல் வழிமுறைகளும், பல படிப்பினைகளை தமிழ் பேசும் மக்களுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் கொடுத்திருந்தன. இப் படிப்பினைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் அரசியல் சிந்தனைப்போக்குகளை தமிழ்பேசும் மக்களிடையேயும், புலிகள் இயக்கத்தினுள்ளும் தோற்றுவித்தன. புலிகள் இயக்கத்துள் ஆக்கபூர்வமான, சுமுகமான ஓர் உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமானது என்றும் கூறலாம். இது புலிகள் இயக்கத்திற்கு முற்றிலும் புதியதோர் மரபாகும். புலிகள் இயக்கமும் இதைப் புரிந்துகொண்டிருந்தது. மறு-பிறப்பெடுக்க முயற்சித்தது. அதற்கான வழிமுறைதான் மேற்குறிப்பிட்ட உட்கட்சிப் போராட்டமாகும். இம்முயற்சிகளின் வெளிப்பாடுகளில் ஒரு துளிதான் இந்நூல்.”
-நூலாசிரியர் -அ.கௌரிகாந்தன்
யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் (1920களில்) எனும் இந்நூல், பதினாறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதப்பட்டு, யாழ்ப்பாணத்தில் அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் அனுமதியுடன் பிரசுரிக்கப்பட்டது. ஆகவே மீள்பதிப்பாகும் இவ்வேளையில் இந்நூல் எழுதப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட அரசியல் சூழல் பற்றி சிறிது கூறவேண்டும்.
அப்போது, ஈழத்தில் இரு அரசுகள் இருந்தன. யாழ்ப்பாணத்தின் பெரும் பகுதி, தமிழீழ அரசின் ஆட்சியின் கீழேயே இருந்த்து. யாழ்ப்பாணத்தின் மீதிப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு பெயரளவிற்கே இருந்தது. இந்நூல் எழுதப்பட்ட, வெளிக்கொணரப்பட்ட காலப்பகுதியில் அந்நிய நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்கொண்ட்தன் போதான பேரிழப்புகளின் பின்னால், தமிழீழ அரசு மீளவும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அந்நிய இராணுவத் தலையீடும் அதை வெற்றிகொள்ள புலிகள் இயக்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இராணுவ, அரசியல் வழிமுறைகளும், பல படிப்பினைகளை தமிழ் பேசும் மக்களுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் கொடுத்திருந்தன. இப்படிப்பினைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் அரசியல் சிந்தனைப்போக்குகளை தமிழ்பேசும் மக்களிடையேயும், புலிகள் இயக்கத்தினுள்ளும் தோற்றுவித்தன. இது இயல்பானதே. புலிகள் இயக்கத்துள் ஆக்கபூர்வமான, சுமுகமான உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமான காலப்பகுதி என்றும் கூறலாம். இது புலிகள் இயக்கத்திற்கு முற்றிலும் புதியதோர் மரபாகும்.
இதற்கான காரணத்தை ஆராய்வோம். அந்நிய இராணுவ வெளியேற்றத்துடன் புலிகள் இயக்கம் ஓர் இயக்கமென்ற நிலையிலிருந்து, ஓர் அரசாங்கம் என்ற நிலைக்கு பரிணாமம் அடையவேண்டிய நிலையேற்பட்டதுதான் அகநிலைமாற்றம் ஏற்படுவதற்கான பிரதான அகக் காரணியாகும். ஏற்கனவே இருந்த புலிகள் இயக்கம் என்ற இராணுவமைய-அரசியல் கட்டுமானம் அரசு இயந்திரமாக மாற்றமுறுவதுவும், அரசாங்கம் என்ற புதிய சிவில் அங்கம் ஒன்று உருவாகுவதுவும் உடனடி அவசியங்களாகின்றன. இச்சிவில் அங்கம் நூறு விழுக்காடும் அரசியல் தன்மை பெற்றதாக இருக்க வேண்டியதுவும், அரசு இயந்திரம் தொடர்ந்தும் இராணுவமைய-அரசியல் அங்கமாக இருக்க வேண்டியதுவும் அவசியமாகின்றது. ஆனால் அவசியப்படும் இந்த இராணுவமைய-அரசியல் கட்டுமானம், இயக்ககாலத்தில் இருந்ததைப் போலன்றி முற்றிலும் வேறுபட்டதாகும். இயக்ககால இராணுவம் ஒரு எளிய அங்கியாகவே (Simple Organism) இருந்தது. ஆனால் அரசாங்கம் எனும் அங்கத்துடன் இணைந்த இராணுவமோ ஒரு பல்தொகுப்பு அங்கியாகவே (Complex Organism) அமைய வேண்டும். இராணுவக் கட்டமைப்பு, காவல்துறைக் கட்டமைப்பு, அதிகாரத்துவக் கட்டமைப்பு, வங்கிக் கட்டமைப்பு, ஊடகத்துறைக் கட்டமைப்பு ஆகிய இன்னும்பிற சுயாதீன செயல்பாடுள்ள எளிய அங்கிகளின் கூட்டான பல்தொகுப்பு அங்கியே இந்த அரசு இயந்திரமாகும். அரசாங்கக் கட்டுமானம் புலிகள் இயக்கத்திற்கு முற்றிலும் புதியது, ஆனால் அரசு இயந்திரக் கட்டுமானமோ புதியதல்ல, ஆனால் பல மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவேண்டியது. இந்த மாற்றங்கள், எண்ணிக்கை மாற்றங்களோ அல்லது புதிய புதிய அங்கங்களை பழைய இயக்க இராணுவத்துடன் கொண்டுபோய் ஒட்டுவதோ அல்ல. அடிப்படை மாற்றத்தைக் கோரிநிற்கும் ஒரு புதிய வடிவமாகும்.
இக்கட்டத்தை புலிகள் இயக்கத்தின் மாறுநிலைக் கட்டமெனக் கொள்ளலாம். இயக்கம் என்ற நிலையில் இருந்து அரசாங்கம் என்ற நிலைக்குச் செல்லும் காலம். புலிகள் இயக்கத்திற்கு, ஏற்கனவே உருவாகியிருந்த அரசு இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை, மாறாக, தானே தனது சொந்த அரசு இயந்திரத்தை உருவாக்கிக் கொள்ள முயன்றது என்பதை மிக உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் நூல் எழுதப்பட்ட காலகட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் தமிழ்த்தேசியத்தின் அடையாளங்களாக ஆகியதற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும். புதிய வார்ப்புகளாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள், மறுபிறப்பெடுங்கள் எனபனவே தமிழீழ மக்களின் அபிலாசைகளாக இருந்தன. புலிகள் இயக்கமும் இதைப் புரிந்துகொண்டிருந்தது. மறுபிறப்பெடுக்க முயற்சித்தது. அதற்கான வழிமுறைதான் முன்னர் கூறிய உட்கட்சிப் போராட்டமாகும். இம்முயற்சிகளின் வெளிப்பாடுகளில் ஒரு துளிதான் இந்நூலாகும்.
இம்முயற்சியில் புலிகள் மறு-பிறப்பெடுத்தார்களா? புதிய வார்ப்புக்களானார்களா? என்பதுபற்றி, இம்முன்னுரையில் நான் எதுவும் கூறப்புகவில்லை. ஏனெனில், அதற்குரிய மேடையிதுவல்ல.
அக்காலகட்டத்தில் நிலவிய புறச்சூழல் இயக்கத்துள் நிலவிய உட்கட்சிப்போராட்டத்தை மேலும் நெறிப்படுத்தவும் ஆரோக்கியப்படுத்தவும் உதவியது. அது என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான் இந்நூல் தோன்றிய அன்றைய அரசியல் சூழலைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.
அந்நிய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னால், தமிழீழப் பிரதேசத்தில் ஓர் அரசியல் உற்சாகம் தோன்றியிருந்தது. ஆனால் இப்பிரதேசத்தில் நிலவிய கண்டிப்பான ஒரு கட்சி ஆட்சிமுறையினால், இவ் அரசியல் உற்சாகம் அரசியல் அணிதிரளல்களாக மாறுவது சாத்தியமற்றதானதாகவே இருந்தது. அதாவது அரசியல் உற்சாகத்திற்கு ஒரு சுதந்திரமான வடிகால் கிடைக்கவில்லை. இதனால், புலிகள் இயக்கத்தை முற்றுமுழுப் பாசிஸ இயக்கமாக புரிந்துகொண்டவர்கள் புலம்பெயர்ந்தனர், அல்லது நிசப்தமாகினர், அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர். புலிகள் இயக்கத்தை முற்றுமுழுப் பாசிஸ இயக்கமாக ஏற்றுக்கொள்ளாத வர்க்க, தேசிய உணர்வாளர்களிலும், சமூக-தேசியப் பற்றாளர்களிலும் ஒரு பகுதியினர், ஏதோ ஒரு வழியில் புலிகள் இயக்கத்துடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். இதனால் இயக்கத்துள் நடந்துகொண்டிருந்த உட்கட்சிப் போராட்டம் மேலும் விரிவடையும் நிலையும் செழுமையடையும் தோன்றியது.
இக்கால கட்டத்தில் புலிகள் இயக்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளாவன:
1. மக்கள் மத்தியிலான பிணக்குகளை இணக்கமாகவும், வெளிப்படையாகவும், மக்களின் பங்களிப்புகள் மூலமும் தீர்த்து வைக்கவுமான அமைப்பான இணக்கசபை. இது மக்களின் அமோக ஆதரவுடன் துரிதமாக வளர்ந்துவந்தது. இணக்கசபை கிராமங்களின் அதிகார மையங்களுக்கு ஒரு சவாலாகவும் இருந்து வந்தது.
2. விடுதலைப் புலிகளின் சார்பில் பிற அரசியல் அணிகளுடன் அரசியல் ரீதியான தொடர்புகளைப் பேணவும், பாரளுமன்றத் தேர்தலுக்கு அவசியமான மக்கள் ஆதரவுத் தளத்தை தயார்படுத்தவுமென அமைக்கப்பட்ட புலிகளின் அரசியல் பிரிவு. மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதில் அரசியல் பிரிவு வெற்றிபெற்றிருந்தது.
3. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தையும், அதன் செயற்பாடுகளையும் திரைக்குப் பின்னால் இருந்து நெறிப்படுத்துவதற்கென அமைக்கப்பட்ட ‘நிழல் நிர்வாகம்’. அரசாங்க அதிகாரிகளை ஆயுதத்தின் துணைகொண்டு ‘ஆணையிடுகிறேன் கீழ்ப்படி’ என இயக்குவதற்குப் பதிலாக, இணக்கமான முறையில் சம்பந்தப்பட்ட மக்களையும் முன்வைத்துக் கலந்துரையாடியும் மக்கள் அழுத்தத்தை உருவாக்கியும் அரசாங்க அதிகார அடுக்குகள் இயக்கப்பட்டன. இவ்வதிகார அடுக்குகளுக்கு ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புப் பிரிவினரின் பக்கத்துணை கிடைக்காத நிலை இருந்ததால், அவர்கள் அடக்கியே வாசித்தார்கள். சயனைற் குப்பிகள் அணியாத, தலைவருக்கு விசுவாசமாக இருப்பேன் என சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாதவர்களே, நிழல் நிர்வாகப் பொறுப்பாளர்களாக இருந்தனர். இதை இராணுவ ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சில தளர்வுகள் எனக் கூறலாம். இவ் அமைப்பு மிகச் சிறந்த முறையில் வளர்ச்சி பெற்று வந்தது.
4. தமிழீழ பொருளாதார மறுசீரமைப்புக்கென அமைக்கப்பட்ட தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம். இப்பிரிவு முறையாகச் செயற்படவில்லை. பொறுப்பாளரின் ஆளுமைக் குறைபாடும், நிதிப் பற்றாக்குறையும் இதற்கான காரணங்களாக இருந்திருக்கக் கூடும்.
5. தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம். இது புதுவை இரத்தினதுரையின் தலைமையின் கீழ் இருந்ததை சகலரும் அறிவர். மக்கள் இலக்கியங்களை உருவாக்குவதில் இது குறிப்பிடக்கூடிய பங்கு எதுவும் வகிக்கவில்லை. துதிபாடலும், இயக்க பிரச்சாரமுமே இதன் செயற்பாடுகளாக இருந்தன.
6. மாணவர் அமைப்பு. சமூக உள்ளடக்கம் கொண்ட கல்வித்திட்டதை அமுல்படுத்துவதுவும், சமூக உணர்வு கொண்ட மாணவர்களை உருவாக்குவதுமே மாணவர் மத்தியிலான நோக்கமாக இருந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இரண்டுதான், சாளரம் எனும் மாணவர் இதழும், வருடாவருடம் நடத்தப்பட்ட அன்னை பூபதி பொது அறிவுப் பரீட்சைகளுமாகும். இப் பொது அறிவு வினாத்தாள் பற்றிய திறனாய்வு, ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்தது. யாழ் குடாநாட்டு பாடசாலைகளில் இம் முயற்சிகள் மிகக் குறைந்தளவு வெற்றியையே தந்தன. ஆனால் வடமாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் பாடசாலைக் கல்வி கற்பிக்கப்படும் முறையிலும், மாணவர்களின் கண்ணோட்டத்திலும் குறிப்பிடக்கூடியளவு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தை வன்னியப் பாடசாலைகளில் இருந்து வந்த போராளிகளில் காணக்கூடியதாய் இருந்தது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டுவதிலும் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், மாணவர்களையும், ஆசிரியர்களையும் தனித்தனி அமைப்புகளாக கட்டியமைப்பதில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை.
யாழ்மாவட்டத்தில் மாணவர் அமைப்பு வேலைகள் மிக அற்ப முன்னேற்றத்தைத் தந்தது பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாளரம் அணியினரிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது இயல்பானதே. இந்த விவாதத்தின் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பதை, சாளரம் பதிப்பாசிரியரின் கீழ்வரும் வாக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.
“ஆறுமுகநாவலர், சைவசமய வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு செயற்பட்டவர் என்பர். விபுலானந்த அடிகளும் சைவ சமய வளர்ச்சிக்குப் பணி செய்வதற்காகத் துறவறம் பூண்டவர். இதனால் இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.
நாவலரும் அடிகளாரும் சமூகப் பிரச்சினைகளில் வெவ்வேறு கருத்து நிலைகளைக் கொண்டிருந்தவர்கள். முரண்பட்ட கருத்து நிலைகளைக் கொண்டிருந்தவர்கள். இது சமூகப் பிரச்சினைகளை அவர்கள் அணுகிய விதங்களின் வெளிப்பாடு. சமூகத்தை அவர்கள் பார்த்த கண்ணோட்டத்தின் வேறுபாடு.“
பதிப்பாசிரியரின் இந்தக் கூற்று இந்நூல் வெளிவருவதற்கான உடனடி அரசியல் பின்னணியை தெளிவாக்குகின்றது. யாழ் சைவ வேளாளப் புத்திஜீகளால், ஆறுமுகநாவலரைப் பற்றி உருவாக்கவும், பரப்பவும்பட்டுவரும் உண்மைக்குப் புறம்பான மதிப்பீடுகளை பகிரங்கமாக நிராகரிக்கவேண்டும் என்பதே அந்தப் பின்னணியாகும். அதற்குகந்த நூலை எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகுஜனத்தன்மை பெறவேண்டிய ஒரு நூலில் மத, ஆன்மீக, சாதிய மதிப்பீடுகளால் ‘புனிதமானவர்’, ‘இறைஅருள் பெற்றவர்’ என சமூகத்தின் உச்சாணிக் கொம்பில் தூக்கிவைக்கப்பட்டுள்ள ஒருவரைப் பற்றிய நிராகரணத்தை வெளிப்படையாக முன்வைப்பது என்பது எந்த சாதக பலனையும் தரப்போவதில்லை, மாறாக பாதகமான விளைவுகளையே தரும். ஆகவே நூலின் தொனியும், முன்வைப்பும் எவ்விதம் இருக்கவேண்டும் என்பது பற்றி பலரிடம் ஆலோசித்ததில் மௌனகுரு அவர்கள் முன்வைத்த ஆலோசனை மிகவும் பொருத்தமானதாகப்பட்டது. நேர்மறை குணாம்சங்கள் மிக்க விபுலானந்தரை முன்கொண்டு வருவதன் மூலம் ஆறுமுகநாவலரின் எதிர்மறைக் குணாம்சங்களை ஆராயும் போக்கை உருவாக்கலாம் என்பதுதான் அவர் முன்வைத்த ஆலோசனையாகும். அது சரியானதாகப்பட்டது. நூல் பிறந்தது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் வீழ்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நூல் வெளிவந்தபின்னர், இவ்வெதிர்பார்ப்பு தப்பானது என்பது புரிந்தது. சைவ வேளாளிய ஆதிக்கத்திற்கு எதிரானது என்ற பக்கத்தில் இயக்கத்தினர் இந்நூலை வரவேற்றனர். ஆனால், புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் இந்நூலில் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பற்றிக் கூறியிருப்பதை விரும்பவில்லை. இலங்கைத் தேசியம் பற்றிப் பேசுபவர்கள் அனைவரையும் தமிழ்த் தேசியத் துரோகிகளென வகைப்படுத்தி வைத்திருக்கும் அவர்கள் யாழ் வாலிபர் காங்கிரஸை முற்போக்கானது என்று கூறுவதை வெறுத்தார்கள். இவ் அமைப்பை சாதராண படித்தவர்கள் மத்தியில் இருட்டடிப்புச் செய்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
யாழ்குடாநாட்டிலும் சமூக அரசியல் தேடல் உள்ள புத்திஜீவிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். புலிகள் மீதிருந்த அதீத நம்பிக்கையினாலும், தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலும் தேசிய அரசியல் தேடல்கூட மிக மந்தமானதாகவே இருந்தது. இதனால் எதிர்பார்த்த பலாபலன்களை இந்நூல் அப்போது தரவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சமூக அரசியல் தேடலும், தேசிய அரசியல் தேடலும் அளவிலும் குணாம்சத்தைலும் அதிகரித்துள்ளது. ஆகவே இச் சூழலில் இந்நூல் மறுபதிப்புச் செய்யப்படுவது நல்லது.
நூல் எழுதப்பட்ட காலத்தின்போது நிலவிய உட்கட்சிப் போராட்டம், கருத்து இறுக்கத்தில் சில தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தபோதும், எழுதுவதற்கான எல்லைப்படுத்தல்கள் அதிக வல்லமை பெற்றவையாகவே இருந்தன. அதன் பிரதிபலிப்பு இந்நூலிலும் காணப்படுகின்றது. இந்நூலில் கூறப்படவேண்டிய மூன்று விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. தமிழ்த் தேசியம் தொடர்பான விபுலானந்தரின் நிலைப்பாடு.
2. கல்வி அபிவிருத்தி தொடர்பான விபுலானந்தரின் நிலைப்பாடு.
முதல் இரண்டும் தவிர்க்கப்பட்டிருந்தமைக்கான காரணம் இயக்கமே. மூன்றாவதற்கான காரணம் வாசகர்களிடையே காணப்பட்ட சமூக விழிப்புணர்வின்மை. அது பற்றிக் கூறியிருந்தால் அது சைவத்திற்கு எதிரான கண்டன விமர்சனமாக மாத்திரமே நோக்கப்பட்டிருக்கும். இது தமிழ்த் தேசிய அணிதிரளலுக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு. தேசிய அணிக்குள்ளும், மதத்தைப் பற்றியும் ஆராயவேண்டுமெனும் கருத்து தோன்றியுள்ளது. ஆகவே விடுபட்ட இம்மூன்று நிலைப்பாடுகளையிட்டும் சிறிது கூறவேண்டியுள்ளது.
1. தமிழ்த் தேசியம் தொடர்பான விபுலானந்தரின் நிலைப்பாடு (முதற்பகுதி)
இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஒருங்குசேர்ந்து உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் நேசித்த ஒரிரு டசின் தமிழ் அறிஞர்களில் விபுலானந்தர் முதன்மையானவர். இவர் ஒரு பல்துறை அறிஞர். தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கியதில் இவருக்கு இணையாக இன்றுவரை எவரும் தோன்றவில்லை. அறிவியற் களத்தில் மாத்திரம் அவர் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகிய இரண்டிற்காகவும் உழைத்த ஒரு செயல் வீரனாகவும், போராளியாகவும் இருந்துள்ளார். அவரின் இப்பங்களிப்புகள் பற்றி மிகச் சில ஆய்வு நூல்களும், ஏராளமான விவரணக் குறிப்புகளும் வெளிவந்துள்ளன. ஆகவே இவை பற்றி இங்கு தவிர்த்துக் கொள்வோம்.
தமிழ் மொழியினதும், தமிழ்ப் பண்பாட்டினதும் வளர்ச்சிக்காக இவ்வளவு பெரும் சாதனைகள் புரிந்த விபுலானந்தரில் தமிழ்த் தேசியத்தின் சாயல்கூட படாதிருந்தது என்பதுதான் இங்கு அவதானிப்புக்குரிய விடயமாகும். அவர் சமூக அரங்கிலும், தமிழ் அரங்கிலும் செயற்பட்ட காலத்தில் (1910-1947 வரை) தமிழ்த் தேசியம் தோன்றியிருக்கவில்லை என்று கூறமுடியாது. இக்காலத்தில்தான் தமிழ் நாட்டுப் பகுத்தறிவு இயக்கம் முதலில் திராவிட இயக்கத்தையும், பின்னர் தமிழ்த் தேசிய இயக்கத்தையும் நடத்தியது. பெரியார் யாழ் வாலிபர் காங்கிரசின் அழைப்பின் பேரில், அவர்களின் விருந்தினர்களாக யாழ்ப்பாணம் வந்து, சில நாட்கள் இங்கு தங்கியிருந்து தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரமும், பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தும் உள்ளார். யாழ் வாலிபர் காங்கிரஸ் தலைவர் ஹண்டி பேரின்பநாயகம் இந்தியா சென்று பெரியாரின் பாசறையில் சிறிது காலம் பயின்றும் உள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கைத் தேசியத்தின் ஒரு கிளையாக தமிழ்த் தேசியம் வளரத்தொடங்கியிருந்தது. ஆறுமுக நாவலர் இதில் பிரதானியாகச் செயற்பட்டுள்ளார். ஆகவே விபுலானந்தரின் சமகாலத்தில், தமிழ்த் தேசியம் விவாதத்திற்குரிய பொருளாகவும், அரசியல் முக்கியத்துவம் மிக்க சமூக நிகழ்வுப்போக்காகவும் உருவாகியிருந்ததை காணக்கூடியதாய் உள்ளது. அதே காலப்பகுதியில் விபுலானந்தரையும் பிரதானமானவர்களில் ஒருவராகக் கொண்டிருந்த யாழ் வாலிபர் காங்கிரஸும் இலங்கைத் தேசியத்தையே முன்வைத்தது; தமிழ்த் தேசியத்தைக் கண்டுகொள்ளவில்லை. காந்தியின் தலைமையிலான இந்திய தேசிய இயக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டே இவர்கள் இலங்கைத் தேசியத்தையும் வேண்டினார்கள். டொனமூர் விசாரணைக் கமிஷன் வந்திருந்த அதே வேளையில் காந்தியும் யாழ்ப்பாணத்தில் யாழ் வாலிபர் காங்கிரஸின் விருந்தினராக இருந்தார். தமிழ்த் தேசியத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் யாழ் வாலிபர் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியது. தமிழ்ப் பண்பாட்டு மீட்சியும் இவர்களின் முழக்கங்களில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சங்ககால பண்பாடு என்று இவர்கள் கருதியது சங்ககால மீட்பேயாகும். ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTURY எனும் கட்டுரை இதற்கு ஆதாரமாகும். 1928-ஆம் ஆண்டு, யாழ் கீரிமலையில் நடந்த இளைஞர் காங்கிரஸின் வருடாந்த மாநாட்டில் தலைமையுரை ஆற்றியது விபுலானந்தரேயாகும். இத்தலைமையுரையின் உள்ளடக்கம் தமிழ் கலை இலக்கியத்தின் மீட்சியாகும்.
விபுலானந்தரால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது, தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, தேசிய எல்லைகள் அற்ற தமிழின இயலும்தான் (Pan Tamilism). தமிழ் இனத்தின் அகத்தில் ஒன்றுடன் ஒன்று பகைமுரண் தன்மைபெற்ற இரு தத்துவங்களும், இரு பண்பாடுகளும் காணப்படுவதே உண்மையாகும். இவற்றிற்கு இடையேயான போராட்டம்தான் தமிழ் இனத்தின் வரலாறாகும். ஓர் இனம் ஒரே நேரத்தில் இரு குணாம்சங்களைக் கொண்டதாகவுள்ளது. அது, அதுவாக இருக்கும் அதேநேரத்தில், அதுவல்லாத மற்றொன்றாகவும் உள்ளது. இந்த உண்மையை மூடிமறைத்து, தாம் விரும்பும் தத்துவத்தையும், பண்பாட்டையையும் மட்டுமே ஏகமானது என வாதிட்டு அதைத்தான் அவ் இனத்தின் ஏக குணாமசமாக காண்பிப்பவர்களே தமிழியவாதிகளாவர். தேசிய எல்லைகளையும் இவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. தமிழியவாதிகள் இருவகைப்படுவர், ஒரு சாரார் சைவ சித்தாந்தம்தான் தமிழினத்தின் தத்துவம் என வாதிடுபவர்கள், மறுசாரார், திராவிட மரபுதான் தமிழின மரபு என வாதிடுபவர்கள்.
திராவிட மரபு வேதாந்தத்திற்கு எதிரானது. சைவ சித்தாந்திகள் வேதாந்தத்தின் வைதீக மரபைச் சேர்ந்தவர்கள். விபுலானந்தர் இவ்விரு மரபுகளில் எந்த மரபையும் சேர்ந்தவரல்ல, அவர் வேதாந்தத்தின் அவைதீக மரபினர் (சன்மார்க்க மரபு). ஆகவே அவர் தமிழியத்தின் எந்தப் பிரிவினருடனும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியத்தை விபுலானந்தர் நிராகரித்தமைக்கான காரணம் என்ன? தமிழியத்தின் மூன்றாவது அணியாக விபுலானந்தர் மாறாதது ஏன்? பதில் காண முற்படுவோம். என்ன காரணமாக இருந்தாலும் தமிழ்த் தேசியர்கள் இதை விபுலானந்தரின் பலவீனம் என்றே கருதுவர். தமிழராகப் பிறந்த அனைவரும் தமிழ்த் தேசியத்தை ஏற்றேயாகவேண்டும் என அடம்பிடிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் விபுலானந்தரை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இதனால்தான், இந்நூல் விபுலானந்தரிடம் இல்லாதிருந்த பக்கம் பற்றி எதுவுமே பேசாமல், அவரிடம் இருந்த நிறைவுகள் பற்றியே பேசியுள்ளது.
தேசியம், தமிழியம் ஆகியன தொடர்பான அவரின் நிலைப்பாட்டிற்கான காரணம் பற்றிய விவாதத்தைத் தொடரமுன்னர், மதம் பற்றிய அவரின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முயலுவோம். அதன்பின்னர், தேசியம் பற்றிய விவாதத்துள் மீண்டும் செல்வோம். ஏனெனில் மதம் தொடர்பான அவரின் நிலைப்பாடுதான் தேசியம் தொடர்பான அவரின் நிலைப்பாட்டிற்கான நேரடிக் காரணமாகும். எவ்விதம் என்பதை நோக்குவோம்.
கடவுளை வள்ளல், உத்தமன் என அடையாளப்படுத்துகிறார். அறநெறி வகைப்பட்ட அடையாளப்படுத்தல். அனைத்து மதப்பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளப்படுத்தல். எந்தக் கடவுளுக்கு எந்தப் பூ என அவர் விவாதிக்க வரவில்லை. உள்ளத்தூய்மையெனும் பூவே போதும் என்கிறார். வழிபாட்டில் அறநெறியை வலியுறுத்துவதுடன், வைதீகத்தையும் நிராகரிக்கிறார்.
“மதமானது தரம் குறைந்துவரும் கடந்த 600 அல்லது 700 வருடங்களையிட்டு சற்றுச் சிந்தித்துப்பாருங்கள், பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் வருடக் கணக்காக எதையிட்டு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? நாம் தண்ணீர் அருந்தும் கோப்பையை வலக்கையால் பிடிக்கவேண்டுமா அல்லது இடக்கையால் பிடிக்கவேண்டுமா? கைகளை மூன்றுதரம் கழுவவேண்டுமா அல்லது நான்குதரம் கழுவவேண்டுமா? போன்றவற்றைப் பற்றித்தானே? எமது மதம் சமையல் அறைக்குள் செல்லும் அபாயம் உண்டு. எமது கடவுள் சமையல் பானையாகியுள்ளார். அந்தப் பானை (எமது மதம்) ‘‘என்னைத் தொடாதே நான், புனிதமானவன்’ எனப் பறைசாற்றி நிற்கிறது. வாழ்க்கையின் உயர் சிக்கல்களை மனித மூளை எதிர்கொள்ளமுடியா நிலை வரும்போது, மனித மூளை வலுக்குறைந்து வருதலுக்கான அடையாளமே இதுவாகும். மூளை தனது அனைத்து சக்திகளையும், தனது அனைத்து செயல்பாடுகளையும், தனது அனைத்து சிந்தனை ஆற்றல்களையும் இழந்து நிற்கிறது. அதன் அனைத்து இயல்புத் தன்மைகளும் இழக்கப்பட்டுவிட்டன.”
“அதற்குப் பதிலாக மதம் ஒரு செயல் சக்தியாக மாறவேண்டும், செயல்படு நம்பிக்கை மாத்திரம்தான் மனிதனுக்கு செயல்படு ஆளுமையைக் கொடுக்கவல்லது. இதன் ஊடாகத்தான் மனிதன் கடவுளின் கரங்களாக மாறுகிறான். பிறர் மீதான ஆக்கிரமிப்பு உந்துதலிலும், பிறரை வெல்லவேண்டும் என்ற அவாவிலும் இருந்து அவன் விடுபடும்போது மாத்திரம்தான் மனிதன் அச்சம் என்றால் என்ன என்பதை அறியாத மனிதனாக மாறுவான். இனியும் அவன் செயலற்ற மனிதனாக இருக்கமாட்டான். ஏனெனில் உருவாக்குவதற்கு ஒரு சமுதாயமே உள்ளது என்பதையும், அவ்வுருவாக்கலில் பங்குபற்றத் தான் கடமைப்பட்டவன் என்பதையும் உணர்ந்த அவன் இனியும் தயக்கவாதியாகவும் மென்போக்காளனாகவும் இருக்கமாட்டான். அவன் இவ்வுலக ஆசாபாசங்களில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், உண்மைக்கான போராட்டத்தை நடத்துவதற்காக, எப்போது அவசியப்படுகிறதோ, எங்கே தேவைப்படுகிறதோ, அப்போது, அங்கே, அதற்காக தனது இன்னுயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டான்.”
எந்தக் கையால் கோப்பையைப் பிடிப்பது, எத்தனைதரம் கையைக் கழுவுவது என்பதையும், இறைவனுக்கு சூட்டப்படும் மலர் எதுவாய் இருக்கவேண்டும் என்பதையும் பொருத்திப் பார்க்கவும். ஒரே விடயம் வெவ்வேறு உவமானங்கள். ஆனால், இது விபுலானந்தரின் கூற்றல்ல. விபுலானந்தரின் குருவான விவேகானந்தரின் கூற்றாகும். இக்கூற்றை மேற்கோள்காட்டி பேசியது விபுலானந்தரல்ல, கலாநிதி அஸிஸாகும். பேசப்பட்ட சந்தர்ப்பம், யாழ்-வைத்தீஸ்வராக் கல்லூரியின் விழாவொன்றின் போதாகும். இவர்தான் ஒரு இந்துக் கல்லூரியில் படித்த முதலாவது யாழ்-முஸ்லீம் மாணவனாகும். விவேகானந்தரின் சிந்தனையைப் புரிந்துகொள்ள இம்மேற்கோள் உதவும். இதுதான் விபுலானந்தரின் சிந்தனையுமாகும். இச்சிந்தனையை மேலும் விவரிப்போம்.
மேற்கூறிய இரு கூற்றுகளும் சைவநெறிக்கு எதிரானது என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா? பிற மத எதிர்ப்பும், அனுஸ்டானங்களை மயிரிழை பிசகாமல் பின்பற்றுவதுவுந்தான் சைவநெறியாகும். ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே நடந்த அருட்பா, மருட்பா மோதல், சைவநெறிக்கும் சன்மார்க்க நெறிக்கும் இடையே நடந்த மோதலாகும். ஆறுமுக நாவலாரால் மேற்கொள்ளப்பட்ட மதச் சீர்திருத்தம் சமூகவளர்ச்சியை நேர் எதிர்நின்று தடுப்பதற்கானது. விபுலானந்தரால் மேற்கொள்ளப்பட்ட மதச் சீர்திருத்தம் சமூகவளர்ச்சியை முன்நோக்கித் தள்ளுவதற்கானது.
இருந்தும், சன்மார்க்க நெறியும், சைவநெறியும் வேதாந்தப் பள்ளியின் இரு கிளைப் பள்ளிகளாகும். முன்னையது அவைதீகக் கிளை, பின்னையது வைதீகக் கிளை. இவ்விரு பள்ளிகளும் ஒரே சூலின் இரு குழந்தைகளானதால் சிந்தனைப் பள்ளி என்ற முறையில் இவர்களுக்கிடையே இணக்கமும் உண்டு பிணக்கமும் உண்டு; இணக்கமே அதிகம்; ஆனால், நடைமுறை சார்ந்த விடயங்களில் பிணக்கமே அதிகளவில் உண்டு. பாரதியாரைப் பொறுத்த மதிப்பீட்டில் இந்த நடைமுறைப் பிணக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். பாரதியார் வாழுங் காலத்தில் அவர் விரைவில் செத்துப்போவதற்கான சமூகச் சூழலை வைதீகப் பிரிவு உருவாக்கிக் கொண்டே இருந்தது. செத்தபின்னர் அவரின் புகழுடம்பை இருட்டடிப்புச் செய்து வந்தது, அது முடியாமல் போனபின்னர், அவரை வேதாந்தச் சிமிழுக்குள் அடக்கிவைக்க முற்பட்டது, இன்றும் அம்முயற்சி தொடர்கிறது. ஆனால் அவைதீகரான விபுலானந்தர், விவேகானந்தரின் விசுவாசியும், சன்மார்க்கத்தை ஒரு நெறியாக்கி தமிழரிடையே முன்வைத்து, அந்நெறிப்படி வாழ்ந்தும் காட்டிய வள்ளலாரை தனது மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டவருமான பாரதியாரைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றி இருந்தார். இது பற்றி நூலில் கூறப்பட்டுள்ளது.
சன்மார்க்கத்தின் வரலாறு பற்றிய சிறு குறிப்பு:
மோகன் ராயால் உருவாக்கப்பட்ட பிரம்மசமாஜமே சன்மார்க்க நெறியின் தோற்றுவாயாகும். வேதாந்தத்தின் வைதீகத்திற்கு எதிராகப் போராடிய முதல் அரசியல்-மத இயக்கம் இதுவேயாகும். பிரம்மம் ஒன்றே அநாதியானதும், உண்மையானதும் என்பதே இவர்களின் தத்துவமாகும். அந்தப் பிரம்மத்துக்கு இவர்கள் எந்த உருவத்தையும் கொடுக்கவில்லை. அது எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் ஒரு அருவம் என்றார்கள். ஆகவே எந்த உருவத்தையும் இவர்கள் வழிபடுவதில்லை. வைதீகம் கட்டிக்காத்துவரும் அனைத்து நியமங்களையும், தூய்மைகளையும், அனுஸ்டானங்களையும் நிராகரித்தார்கள். மத வேறுபாடுகளையிட்டு சகிப்புத்தன்மை காட்டினார்கள். மாட்டுக்கறி மீதிருந்த தடையைக்கூட நீக்கினார்கள். அரசியல் வேலைத்திட்டம் எதற்கும் உட்படாத, ஆனால் அரசியல் ஆர்வமுள்ள மதவாதிகளக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இவர்களின் காலனியல் எதிர்ப்புத் தன்மை மறைந்துவிட்டது. ஆங்கிலவழிக் கல்வியின் ஊடாக கிறிஸ்துவமத செல்வாக்கிற்கு உள்ளானார்கள்.
பிரம்ம சமாஜத்தின் திசைமாறலினால் அதிருப்தியுற்ற பிரிவினரின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையே இராமகிருஷ்ண அணியாகும். இவர்கள் பிரம்ம சமாஜத்தின் வைதீக எதிர்ப்பில் அதிருப்தி கொண்டவர்களாவர். வைதீக எதிர்ப்பு காலனியல் எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும், பிற மதங்களிடம் சரணடையும் தன்மை அற்றதாவும் இருக்கவேண்டும் எனும் கொள்கை உடையவர்களாகும்.
இது ஒரு புறமிருக்க அடுத்தபுறத்தில், ஆரிய சமாஜத்தின் வைதீக எதிர்ப்பின் மீது கோபம் கொண்ட ஒரு அணியும் களம் இறங்கியது. பிற மதங்களை மூர்க்கமாக எதிர்ப்பதுவும், வைதீகத்தைப் பேணிப்பாதுகாப்பதுவுமே இவர்களின் இலட்சியமாக இருந்து. இந்த இலட்சியத்தில் அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தார்கள். காலனியல் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்து மன்னர்கள் இவர்களின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் தீவிர காலனிய எதிர்ப்பாளர்களாகவும் இருந்தார்கள். தயானந்த சரஸ்வதியே இதன் ஸ்தாபகராவார். ‘சுத்தி’ இயக்கமே இவர்களின் முதல் இயக்கமாகும். ‘சுத்தி’ என்பது, மதம் மாறிய கிறிஸ்துவர்களையும் , இஸ்லாமியர்களையும் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றுவதாகும். இது பிற மதங்களுக்கு எதிரான போர்ப்பிரகடனமே. வைதீக மரபுகளைப் பேணுவது கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலம் அவைதீகர்களுக்கு எதிரான ஒரு கருத்தியல் போரும் ஆரம்பமாகிறது. அவைதீகர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்துமதம் தனக்குள்ளும் போராடியது. பிற மதங்களுடனும் போராடியது. இதனால் இப்போராட்டத்தை நடத்தியவர்கள் தீவிர அரசியலிலும் ஈடுபடுகிறாரகள். தயானந்த சரஸ்வதி எனும் கடுங்கோட்பாட்டாளரின் அரசியல் வழித்தோன்றல்தான் ஆர்.எஸ்.எஸ் ஆகும்.
அடுத்த பக்கத்தில் சுத்தி இயக்கத்திற்கு எதிரான ஓட்டத்தினதும், பிரம்மசமாஜத்தின் வழித்தோற்றத்தினதும் திரட்சிதான் இராமகிருஷ்ணராகும். ஜீவகாருண்யம், மானுட நேயம், சன்மார்க்கம் ஆகிய கோட்பாடுகளுக்குக் காரணமான, `பிரம்மம் ஒன்றுதான்` எனும் தத்துவத்தை கொண்டிருந்ததால், மிக உயரிய உள்வலு கொண்டிருந்த இவர், நடைமுறையில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டே இருந்தார். அதுவும் பௌத்தத்திற்கு எதிரான கடுங்கோட்பாளர் பரம்பரையில் தோன்றிய இந்து மன்னர்கள் நிரம்பியிருந்த வங்கம் இராமகிருஷ்ணரை நிறையவே தனிமைப்படுத்தியிருந்தது. விவேகானந்தர் எனும் சீடர்தான் இராமகிருஷ்ணரை வெளிக்கொணர்கிறார். இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டின் குறுநில மன்னரும் தமிழ்நாட்டு மக்களுமே. வேதாந்தத்தின் ஒரு கிளையும், வைதீகத்தின் உறைவிடமுமான சைவம், தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்ற மதமாக இருந்தபோதிலும், அவைதீகர்களின் செல்வாக்கும் இங்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
விபுலானந்தரின் தத்துவார்த்த உள்ளடக்கத்தைச் சுருக்குவோம்; அது இரு குணாம்சங்கள் கொண்டது. ஒன்று வேதாந்தம், மற்றையது அவைதீகம். இதை, வேதாந்த சுத்திகரிப்புத் தத்துவம் என்று கூறலாம். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், உருவாகிவரும் புதிய சிந்தனைப் போக்குக்கு ஏற்ப வேதாந்தத்திற்குப் புத்துயிர்ப்புக் கொடுக்கும் தத்துவம் என்றும் கூறலாம். ஆகவே இங்கு தர்க்கம் வைதீகமா, அவைதீகமா என்பதை விடுத்து வேதாந்தமா, வேதாந்த எதிர்ப்புத் தத்துவமா என்ற தர்க்கத்துக்குச் செல்கிறது. இந்திய தத்துவார்த்த வரலாற்றின்படி வேதாந்த எதிர்ப்புத் தத்துவம் என்பது லோகாயதவாதமாகும். ஆகவே வேதாந்தமா, லோகாயுதவாதமா என்ற தர்க்கத்துக்குச் செல்கிறோம். அத்தர்க்கத்துக்குள் செல்லும் நோக்கம் இவ்விடத்தில் இல்லை. ஆகவே அத்தர்க்கத்தின் அடிப்படையில் விபுலானந்தரை மதிப்பிடும் நோக்கமும் இவ்விடத்தில் இல்லை. ஆனால் மத சீர்திருத்தம் தொடர்பான விபுலானந்தரின் நிலைப்பாடு பற்றிப் புரிந்துகொள்ள இவை போதும்.
1. தமிழ்த் தேசியம் தொடர்பான விபுலானந்தரின் நிலைப்பாடு (இரண்டாம் பகுதி)
மதம் தொடர்பான அவரின் நிலைப்பாட்டுக்கும் தேசியம் தொடர்பான அவரின் நிலைப்பாட்டுக்கும் இடையேயான தொடர்பு என்ன?
வேதாந்தம் இந்திய உபகண்டம் முழுமையும் தனதென்றே கருதுகின்றது. வைதீகப் பிரிவு பிற நம்பிக்கையாளர்களின் மீதான வலுப்பிரயோகத்தின் மூலம் இதைச் செய்ய எத்தனித்து வருகின்றது. கடும் போக்காளர்களான வைதீகர்கள் அரசியல் அரங்கினில் வேதாந்த(மத) பேரகங்காரவாதிகளாகிறார்கள். அவைதீகப் பிரிவு பிற நம்பிக்கையாளரை அரவணைத்துச் செல்வதன் மூலம் இதை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. அதாவது வேதாந்தத்தை நிலைநிறுத்துவதில் இவர்கள் மென்போக்காளர்களாக உள்ளார்கள். ஆனாலும், இவர்கள் லோகாயுத வாதிகளையும் நாஸ்தீகர்களையும் தம்முடன் அரவணைத்துச் செல்ல தயாராயில்லை. கடும்போக்காளர்கள், மென்போக்காளர்கள் ஆகிய இரு சாராரும் வேதாந்தத்தின் வளர்ச்சிக்குப் பாதகமான அனைத்துத் தேசியங்களையும் நிராகரிக்கிறார்கள். இந்திய உபகண்டத்தில் தோன்றக்கூடிய புதிய தேசியங்கள் வேதாந்தைப் பலவீனப்படுத்தும் என அவர்கள் அஞ்சினார்கள். அவர்களின் அச்சம் சரியானதுதான். பஞ்சாப் தேசியம் அவர்களை அச்சுறுத்துகின்றது. பாகிஸ்தானின் தோற்றம் இந்திய உபகண்டத்தில் வேதாந்தத்தை பலவீனப்படுத்தியே உள்ளது. வேதாந்த எதிர்ப்பு அரசைப் பலவீனப்படுத்துவதற்காகத்தான் பாகிஸ்தான் இரு கூறுகளாக்கப்பட்டது. இந்திய முஸ்லீம்களின் இந்தியத் தேசியம் வேதாந்த எதிர்ப்புத்தன்மை கொண்டதால் அதுவும் அவர்களை அச்சுறுத்துகின்றது. மூல பௌத்தம் வேதாந்தத்திற்கு மிகப் பெரும் எதிரியாக இருந்தாலும், ‘பிரச்சன்ன’ வேதாந்தமான இலங்கையின் இன்றைய பௌத்தம் வேதாந்தத்திற்கு எதிரானதல்ல. ஆகவே, இந்திய ஒருமைப்பாடு, இலங்கை ஒருமைப்பாடு, நேபாள ஒருமைப்பாடு, பர்மிய ஒருமைப்பாடு, பலுஸ்தித்தான் தன்னாட்சி உரிமை ஆகியவையே தெற்காசிய தேசியங்கள் தொடர்பான அவர்களின் கோட்பாடாகும். கடுங்கோட்பாட்டு வேதாந்திகள் ஈழத்தமிழ்த் தேசியத்தை இந்துத்துவத் தேசியமாகக் காட்ட முற்படுவது வாக்குவேட்டை நுனிநாக்கு அரசியலே தவிர வேறொன்றுமல்ல. அவர்களும் என்ன விலை கொடுத்தும் (அது தமிழரின் உயிராகவும் இருக்கலாம்) இலங்கையின் ஒருமுகப்பாட்டைப் பேணுபவர்களேயாகும். தலித்துகளும், பழங்குடியினரும் வேதாந்தை ஏற்கப்போவதில்லை. அவர்களின் தேசியம் வேதாந்தத்திற்கு எதிரானதே. இலங்கை, இந்திய தமிழ்த் தேசியங்களின் வரலாற்றை நோக்கும்போது, வேதாந்தத்திற்கு எதிரான அரசியல் போக்கும், வேதாந்தத்தின் வைதீக நெறிகளுக்கு எதிரான அரசியல் போக்கும் இன்னமும் பலவீனமடைந்து விடவில்லை. இத்தமிழ்த் தேசியங்களுக்கு தன்னாட்சி உரிமை கிடைக்குமானால் வேதாந்த எதிர்ப்புப் போக்கு பலப்படும் என நிச்சயமாகக் கூறலாம். ஆகவே இரு பிரிவு வேதாந்திகளும் தமிழ்த் தேசியத்தை நிராகரிப்பவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
கடுங்கோட்பாட்டாளர்கள் மத பேரகங்காரவாதிகளாகவும், மென்கோட்பாட்டாளர்கள் சன்மார்க்க நெறியர்களாகவும்; இருந்து வருகிறார்கள்.
கடுங்கோட்பாட்டாளர்கள் பிறமக்களுக்கு எதிரான வன்முறையின் மூலம் தேசிய ஒருமுகப்பாட்டை பாதுகாப்பவர்களாகவும், மென்கோட்பாட்டாளர்கள் சமத்துவத்துடன் கூடிய சமாதன-சகஜீவன வாழ்க்கைமுறையை மக்களிடையே உருவாக்குவதன் மூலம் வேதாந்தத்தை நடுவமாகக் கொண்ட தேசிய ஒருமுகப்பாட்டை உருவாக்க முயலுபவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
கடுங்கோட்பாட்டாளர்கள் பிற மக்கள் பிரிவினரின் தனித்துவத்தை, குறிப்பாக பண்பாட்டுத் தனித்துவத்தை (மொழியும் உள்ளடங்கும்- மொழி வெறுமனே ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல. புதிதாக உருவாக்கப்படும் மொழிகள் தவிர பிற மொழிகள் அனைத்துமே, பண்பாட்டின் உறைவிடமாவும், நிறமூர்த்தங்களாகவும் செயல்படுகின்றன.) அழிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களாகவும், மென்கோட்பாட்டாளர்கள் பிற மக்களின் பண்பாட்டுத் தனித்துவத்தை பாதுகாத்து வளர்த்தெடுத்து வருபவர்களாகவும்; இருந்து வருகிறார்கள்.
கடுங்கோட்பாட்டாளர்கள் வேதாந்த சிந்தனைப் பள்ளிக்கும், பிற சிந்தனைப் பள்ளிகளுக்கும் இடையேயான கருத்துப் போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்பவர்களாகவும், இக்கருத்துப் போராட்டத்தை மக்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இட்டுச்சென்று மக்கள் தமக்குள் பகைபடும் போக்கை உருவாக்குபவர்களாகவும், மென்கோட்பாட்டாளர்கள் கருத்தியல் போராட்டத்தில் ஜனநாயக வழிமுறைகளைக் கையாள்பவர்களாகவும், அதேவேளை சமூக பொதுப்பிரச்சனைகளில் எந்தச் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதில் முன் உதாரணிகளாக இருந்து, மக்கள் தமக்குள் இசைபட வாழும் போக்கை வளர்த்து வருபவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் விபுலானந்தரின் நடவடிக்கைகள் மென்கோட்பாட்டளர்களுக்கு உரித்தானதாகத்தான் இருந்தன என்பதை இந்நூல் விளக்குகின்றது. மாணவர்கள் மும்மொழியிலும் திறமை பெற்றிருக்கவேண்டும் எனும் அவரின் கொள்கைக்கான காரணமும் இதுதான். கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பல்வேறுபட்ட வளர்ச்சிக்கு காரணமாயிருந்த அஸிஸுக்கும் இவருக்கும் இருந்த நெருங்கிய நட்புக்கான காரணமும் இதுதான். அஸிஸ் இவரைத் தன் வழிகாட்டியாகவே ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்காக அறிவியல் துறையிலும், நடைமுறைக் களத்திலும் கடினமாக உழைத்ததற்கான காரணமும் இதுதான்.
தெற்காசிய நாடுகளின் இன்றைய உடனடித் தேவை, இந்நாடுகளின் மக்களிடையே சமத்துவத்துடன் கூடிய சமாதான-சகஜீவன வாழ்க்கை முறையொன்றை செயல்படவைப்பதுதான். மக்கள் தம்மிடையே இசைபடும் வாழும் வாழ்க்கைமுறையை வளர்த்துகொள்ளவேண்டும். இவ்விடயத்தில் விபுலானந்தரை நாம் ஒரு முன் உதாரணமாகக் கொள்ளலாம். விபுலானந்த சிந்தனைக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் வேதாந்தத்தை ஆதிக்க நிலையில் வைத்திருப்பது எனபது ஒரு அசட்டு நம்பிக்கை. ஆனால் இதற்காக அவர் பின்பற்றிய வழிமுறைக்காக அவரை வழிகாட்டியாகக் கொள்ளலாம்.
3. கல்வி அபிவிருத்தி தொடர்ப்பான விபுலானந்தரின் நிலைப்பாடு.
விபுலானந்தர், யாழ் சமூக உருவாக்கம், யாழ்-வாலிபர் காங்கிரஸ் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் சந்திப்பது கல்வி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டத்தில்தான். யாழ்-சமூக உருவாக்க நிகழ்வுகள் பற்றிக் கூறும் இந்நூல் சமூக உருவாக்கம் என்றால் என்ன என்பதுபற்றி எதுவுமே கூறியிருக்கவில்லை. முதல் முன்னுரையிலாவது கூறியிருக்கலாம். கூறவில்லை. மார்க்ஸியப் பள்ளிக்கு உரித்தான ஒரு சொற்பதத்தை தேசியப் பள்ளிக்கென வெளிவரும் நூலில் வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்பதே இதற்கான காரணமாகும். இரண்டாம் பதிப்பு இரு பள்ளிகளையும் சென்றடையும் என்ற நம்பிக்கையில், தற்போதைய, இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையில் சமூக உருவாக்கம் பற்றிக் கூறுகிறோம். எனைய இரண்டு சமூக நிகழ்வுகள் பற்றி இந்நூலுக்கு அவசியமானளவு கூறப்பட்டுள்ளது.
நூலின் வெவ்வேறு மையங்கள்:
நூல் யாழ் வாலிபர் காங்கிரஸ் பற்றியதா, விபுலானந்தர் பற்றியதா என்று வினவும் அளவுக்கு இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் பிரதான மையம் இவ்விரண்டிலும் எதுவுமேயில்லை. 1920களில் யாழ் குடாநாட்டில் நிகழ்ந்த சமூக உருவாக்கமே நூலின் பிரதான அல்லது முதன்மை மையப் பொருளாகும். அவை என்னென்ன என்பது நூலில் கூறப்பட்டுள்ளது, ஆனால் சமூக உருவாக்கம் பற்றிய தர்க்கம் நூலில் இல்லாதபடியால், சமூக நிகழ்வுகள் நூலின் பின்னணியாக மாறிவிட்டது. இச்சமூக உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் மூன்று சிந்தனைப்போக்குகள் செயற்பட்டுள்ளன. ஒரு போக்கு கிறிஸ்துவ மதபீடத்தினது, மற்றையது யாழ் வாலிபர் காங்கிரஸினது, மூன்றாவது இராமகிருஸ்ண மடத்தினது. இம்மூன்றிலும் யாழ்-வாலிபர் காங்கிரஸ் மட்டுமே யாழ் மண்ணிற்கே உரிய மக்கள் இயக்கமும் மக்கள் அமைப்புமாகும். இது ஒன்றுதான் தனக்குத் தானே தலைவனாக இருந்து செயற்பட்ட அமைப்பாகும். இது வேறு எவராலும் இயக்கப்பட்ட ஓர் அமைப்பல்ல. யாழ்ப்பாணத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளான ஏனைய இரண்டும் இதைச்சார்ந்தே இயங்கின. யாழ் வாலிபர் காங்கிரஸ் இல்லையானால் இவ்விரண்டு அணியாலும் தனித்து நின்று இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆகவே, ஒரு கட்டுரைக்குரிய இயல்பான தன்மையின்படி இந்நூலின் இரண்டாவது மையக்கருவாக அமையவேண்டியது யாழ்-வாலிபர் காங்கிரஸேயாகும். கிறிஸ்துவ மதபீடமும், விபுலானந்தரும் இரண்டாவது மையக்கருவின் துணைக்கருக்களாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் நூலின் தலைப்பும், குறிக்கோளும் பிரதான கருவையும், இரண்டாவது மையக் கருவின் துணைக்கருவையும் புரியவைப்பதாகவே இருந்தது. அதுவே அன்றைய தேவையாகவும் இருந்தது. அல்லது அன்றைய தேவையாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய வாசகர்களிடையே இரண்டாவது மையக்கருவான யாழ்-வாலிபர் காங்கிரஸ் பற்றிய புரிதல்கள் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. ஆகவே யாழ்-வாலிபர் காங்கிரஸ் பற்றியும் இந்நூலிலேயே சொல்ல வேண்டியிருந்தது. இன்றைய வாசகர்களோ யாழ்-வாலிபர் காங்கிரஸ் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அதைப்பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இது ஒரு காலகட்ட வேறுபாட்டுப் பிரச்சனையாகும், இம்முன்னுரையில் விபுலானந்தர் பற்றிய விவாதங்களை முன்வைப்பதன் மூலம் விபுலானந்தர் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.
சமூக உருவாக்கம் பற்றி பார்த்தால், சமூக உருவாக்கம் எனும் பதத்தின் பயன்பாடு சமூக மட்ட்த்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அவ்விதம் பயன்படுத்தப்பட்டாலும் அதைப் பற்றிய புரிதல் மிகமிகக் குறைவே. மார்க்ஸிய சொல்லாடல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் முதலாளித்துவ சமூக அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு, ஆண்டான்-அடிமை சமூக அமைப்பு, அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு போன்ற பதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது சமூகத்தை உற்பத்தி உறவு முறைமைகளால் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த உற்பத்தி உறவு முறைமைகள் தத்தமக்கென்று தனியான மேற்கட்டுமானங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. மேற்கட்டுமானத்தின் பிரதான அம்சங்கள் அரசியலும், பண்பாடுமாகும். மேற்கட்டுமானங்களும் முதலாளித்துவ மேற்கட்டுமானங்கள், நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு தேசத்தின் அல்லது பிரதேசத்தின் சமூகக் கட்டுமானத்தைப் புரிந்து கொள்வதற்கு இவ்வித பகுப்புகளும் பதங்களும் பலன் தரமாட்டாது. இவை, சமூகத்தை பகுப்பாய்வு செய்வதற்காக, மார்க்ஸிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட அருவங்களேயாகும். இவை ஒரு தேசத்துக்கோ பிரதேசத்துக்கோ கட்டுப்பட்டவையல்ல. எந்தத் தளமும் இன்றி தனித்து நிற்கும் அருவங்களாகும். இவ்வித உருவங்கள் எதுவுமேயில்லை. அருவங்களை உருவங்களாகக் கருதி தமது தேசத்தின் கோட்பாடுகளை வகுத்துக்கொள்ளலே டொக்மற்றிஸம் (Dogmatism) எனப்படுகிறது. சமூக அமைப்புகள் தொடர்பான இவ் அருவக் கோட்பாடுகளை குறிப்பிட்ட தேச அல்லது பிரதேச எல்லைக்குள்ளான சமூகக் கட்டுமானத்துள் புகுத்தி ஆராயும் போது கிடைக்கும் சித்திரமே சமூக உருவாக்கம் எனப்படுகிறது.
ஒவ்வொரு தேசமும் பல்வேறு உற்பத்தி முறைமைகளினதும், ஒரே உற்பத்தி முறைமையின் பல்வேறு வடிவங்களினதும் கூட்டுத் தொகுப்பாகும். இக்கூட்டுத் தொகுப்பு சுய இயக்கமுள்ள தனி உயிரியாகும். பல்வேறு பொருளாதார வடிவங்கள் அருகருகில் நிற்கின்றன என்று இதைப் புரிந்து கொள்ளல் தவறாகும். ஏனெனில் இம்முழுமையின் ஆக்கக்கூறுகள் ஒவ்வொன்றும் தத்தமது இருத்தலையும் மறு உற்பத்தியையும் தத்தமது சுயவிருப்பின்படி தீர்மானித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காலனியல் மற்றும் நவகாலனியல் நாடுகளில் இம் முழுமை முதலாளித்துவத்தின் மேலாண்மையின் கீழேயே செயற்படுகிறது. இம்மேலாண்மை வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் செலுத்தப்படுகிறது. இம் முதலாளித்துவத்தின் உள்ளூர் தேவைக்கு உகந்த முறையிலேயே பிற பொருளாதார வடிவங்களின் இருத்தலும், மறு உற்பத்தியும் அமைகின்றன. முதலாளித்துவம் மேலாண்மை செலுத்தினாலும், தேசத்தின் உள்ளே முதலாளித்துவ உறவுகள் இக்கூட்டுத் தொகுப்பை மீறிச் சுயமாக செயல்பட முடியாது. இவையனைத்தும் ஒன்றுகலந்து தனியொரு முழுமையில் சங்கமமாகியுள்ளன. சமூக உருவாக்கம் எனும் கோட்பாட்டின்படி இந்த முழுமையே அத்தேசத்தின் அல்லது பிரதேசத்தின் அடிக்கட்டுமானமாகின்றது.
மேற்கட்டுமானத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அத்தொகுப்பின் ஆக்கக்கூறுகளில் ஒன்றுதான், கூட்டுத்தொகுப்பான பொருளாதார அடிக்கட்டுமானத்தின் உருவாக்கமாகும். இரண்டாவது ஆக்கக்கூறு, கடந்தகால மேற்கட்டுமானத்தில் இருந்து பெறப்பட்டதும், மறு உற்பத்தி செய்யப்பட்டதுமாகும். மூன்றாவது ஆக்கக்கூறு அனைத்துலக முதலாளித்துவத்தால் புறத்தேயிருந்து புகுத்தப்படும் மேற்கட்டுமானமாகும். ஆகவே மேற்கட்டுமானமும் ஒரு கூட்டுத்தொகுப்பேயாகும். இக்கூட்டுத் தொகுப்பும் ஒரு உயிரியாகும். இத் தனி உயிரி, அடிக்கட்டுமானத்தைச் சார்ந்திருந்தாலும், சுய இயக்கம் உள்ள உயிரியாகவும் உள்ளது. இதனால் தனியுரிமையினையும், தனிச்சொத்துடைமையையும் பேணிப்பாதுகாப்பதில் அடிக்கட்டுமானத்தையும் விட மேற்கட்டுமானத்துக்கு அதிக வலு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல் சமூக அடிப்படை மாற்றதிற்கான (radical change) சூழல் ஏற்படும் முன்னரேயே, மேற்கட்டுமானத்திலான மாற்றத்தினால் சமூகக் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. சமூக உருவாக்கக் கோட்பாட்டின்படி இந்த உயிருள்ள கூட்டுத்தொகுப்பு தேசத்தின் மேற்கட்டுமானம் ஆகின்றது.
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் சுய இயக்கமுள்ள இவ்விரு கூட்டுத்தொகுப்புகளும், தமக்குள் ஒரு சேதன இணைப்பை உருவாக்கி மற்றோர் கூட்டுத்தொகுப்பாக மாறுகிறது. இந்த கூட்டுத் தொகுப்புத்தான் சமூக உருவாக்கமாகும். சமூக உருவாக்கம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். மார்க்ஸிஸம்-லெனினிஸத்தை தத்தமது யதார்த்த நிலைக்கு ஒப்ப பிரயோகிக்கவேண்டும் என்பதன் அர்த்தம் இதுதான்.
அ. கௌரிகாந்தன்
Read More
இந்நூல் வெளியாகிய காலப்பகுதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நூலாசிரியரின் பாத்திரத்தையும் சற்று விரிவாகப்பார்க்க வேண்டியுள்ளது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு போராட்ட சக்திகள் களத்திலிருந்து அகற்றப்பட்டு புலிகள் தமது நடைமுறை அரசுக்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டிருந்த காலப்பகுதியில் தீவிர இடதுசாரிப் பின்புலத்திலிருந்த கௌரிகாந்தன் அவர்களால் இந்நூல் எழுதப்பட்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இடதுசாரிச் செயற்பாட்டாளராக தனது பயணத்தைத் தொடங்கிய கௌரிகாந்தன் இரண்டாம் தலைமுறை இயக்கத்தில் ஒன்றான கீழைக்காற்று இயக்கத்தில் முக்கிய பங்காற்ரியவர். அதன் தொடர்ச்சியில் தேசியவாத இயக்கமொன்றிலும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டுள்ளார். புலிகள் இயக்க காலப்பகுதியில் மக்கள் இயக்கச் செயற்பாடுகளில், முக்கியமாக மாணவ அமைப்புக்கள் சார் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
தேசியப் போராட்டம் தொடர்பாகப் பல்வேறு பார்வைகளைக் கொண்டிருந்த அமைப்புக்கள் களத்தில் இல்லாத காரணத்தால் தேசியவாதம் தன்னை ஒருமுகப்படுத்தியிருந்த காலப்பகுதியது. குறிப்பாக தமிழ்த்தேசம் நடைமுறை அரசுக்கான தயார்ப்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. தமிழ்த்தேசத்தின் மரபார்ந்த ‘சொந்தக்காரர்களாக’ இருந்த சக்திகள் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியத்தைத் தம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கும் தேசியத்தின் பாதையும் குணாம்சமும் மாறிவிடாதபடி பேணுவதற்குமான வேலைத்ததிட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியவாறிருப்பர். அவ்வாறே, முற்போக்கு சக்திகளும் தேசியத்தின் பாத்திரத்தை முற்போக்காக மாற்றுவதற்கும் முற்போக்கு பாத்திரத்தையுடைய தேச உருவாக்கத்திற்குமான வேலைத்திட்டங்களில் நிச்சயமாக ஈடுபட்டிருப்பர். இவ்வாறான இருவேறு பார்வைகளையுடைய தேசிய சக்திகளுக்கிடையேயுள்ள முரண்பாட்டின் விளைவாகவே இந்நுல் வெளியாகியுள்ளதென்பதை நூலாசிரியர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ரீதியான ஒடுக்குமுறை நிகழும் காலங்களிலும் அதற்கெதிரான தேசிய ரீதியான விடுதலைப் போராட்டம் நடைபெறும் காலங்களிலும் ஓர் இடதுசாரி, தன்னை இடதுசாரியாகவும் மார்க்சியவாதியாகவும் தொடர்ச்சியாக உணரும் அதேவேளை, ஒரு தேசியவாதியாகவும் தன்னுடைய பாத்திரத்தை வகுத்துச் செயற்படுவது உலகப் பொதுமையானது.
வரலாற்றில் பல மார்க்சியவாதிகள் தேசிய விடுதலைப் போராட்ட காலப்பகுதியில் தம்மைத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு செயற்பட்டுள்ளனர். தேசியத்திற்கு இயல்பாக இருக்கக்கூடிய அசமத்துவத்திற்குச் சார்பான குணாம்சத்தை மாற்றியமைத்து, சமத்துவம் சார்பான கூறுகளை தேசியத்தின் குணாம்சங்களாக மாற்றும் நோக்கம் அவர்களிடம் இருந்திருக்கின்றது. கலாச்சாரக் கூறுகள் நிறைந்த தேசியவாதம் தன்னை அரசியல் கூறுகள் நிறைந்ததாக மாற்றிக் கொள்ளும் செயல்முறை தேசிய விடுதலைப் போராட்டக் காலப்பகுதியில் விரைவுபெறும். அவ்வேளையில் அதனை முற்போக்கான திசைவழியே முன்னகர்த்துவதற்கான செயற்பாட்டில் இடதுசாரிகளின் பங்கு மிக முக்கியமானதாயிருக்கும். தேசியவாதத்தின் முற்போக்கான பாத்திரத்திற்குரிய உள்ளீடுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சமூகத்தின் இடதுசாரிகளின் பங்களிப்புக்களால் ஆனவை. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்திலும் இடதுசாரிகளின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கின்றது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்போக்கான திசைவழி நகர்த்துவதற்கான செயற்பாடுகள், பல்வேறுபட்ட பின்னணிகளிலிருந்து செயற்பட்ட இடதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் கௌரி காந்தன் அவ்வாறான ஒருவர்.
தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை மாற்றியமைக்க முற்பட்ட வேளையில், நடைமுறைச் சமூகப் படிநிலை அமைப்பிலிருந்து வெளிக்கிளம்பக்கூடிய எதிர்ப்பைக் கருத்திற் கொண்டு, மையக்கருத்தியலில் கைவைக்காமல் – விளிம்புநிலையாக்கப்பட்ட கருத்தியல்களை மையத்திற்குக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அவ்வகையில் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்தின் முற்போக்கான பக்கத்திற்கு, கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஒருவரின் பங்கு குறித்துப் பேசுவதே இந்நூல். அந்நபர் சுவாமி விபுலானந்த அடிகளார். இலக்கியம், மொழியியல், சமயம், அறிவியல், இசை போன்ற துறைகளில் விபுலானந்தரின் பங்கு குறித்து ஏராளமாகப் பேசியாகிவிட்டது. அரசியல் தளத்தில் விபுலானந்தரின் பங்கு குறித்த ஆய்வுகள் மற்றைய துறைகளுடன் ஒப்பிடுகையில் குறைவானவை என்று கூறலாம். அவ்வகையில், இந்நூல் அரசியல் தளத்தில் விபுலானந்தரின் பங்கைப் பேசுகின்றது.
விபுலானந்தரின் அரசியல் பணியை மூல ஆவணங்களில் இருந்து பூரணமாக அறிந்துவிட முடியாது. அவருடைய பிற பணிகள் தொடர்பான ஆய்வுகளில் இருந்தும் அக்காலப்பகுதிக்குரிய பிற ஆவணங்களில் இருந்துமே அறிந்து கொள்ள முடியும். விபுலானந்தர், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுடன் இணைந்து சில காலங்கள் இயங்கியுள்ளார். இளைஞர் காங்கிரசின் காலத்திற்குப் பின்பான காலப்பகுதிகளில் விபுலானந்தர் அரசியல் ரீதியாக நேரடியாக இயங்கியதற்கான ஆதாரங்கள் இல்லாதபோதிலும் அரசியல் தளத்திற்கு மிக நெருக்கமான சமூகத்தளத்தில் இறுதிவரை இயங்கியுள்ளார். ஒடுக்கப்பட்டோர் சார்பான அவருடைய அரசியலின் தாக்கம் சமூகத்தளங்களிலான அவருடைய செயற்பாடுகளில் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளது. முக்கியமாக முஸ்லிம்கள் தொடர்பான அவருடைய பார்வைக்கு ஜனாப் ஏ.எம்.நஹியா எழுதிய ‘முஸ்லிம் நேசர் சுவாமி விபுலானந்தர்’ என்ற நூல் சிறந்த உதாரணமாகும்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பாத்திரம் தொடர்பாக இவ்விடத்தில் சில விடயங்களைக் கூற முடியும். இலங்கைத் தீவின் இடதுசாரி அரசியலுக்கான விதை யாழ்ப்பாண காங்கிரஸ் ஊடாகவே ஊன்றப்பட்டது என்று சொல்வது மிகையானதல்ல. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், அகில இலங்கை இளைஞர் காங்கிரஸ் என்ற அச்செயற்பாட்டாளர்களின் பயணம், பிற்காலத்தில் சூரியமல் இயக்கம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களின் தாக்கம் லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றத்திலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திலும் கூட இருந்துள்ளது.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பாத்திரம் அதனுடன் தொடர்புபட்டவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அதன் முற்போக்கான பாத்திரம் தொடர்பாகப் பெருமளவு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இவ்விடத்தில் அவற்றை இருவகையான சட்டகங்களுக்குள் உட்படுத்திப் பார்ப்பது அவசியமானது. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் புறநிலையான பார்வையை நோக்கினால், காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட முடியும். புறநிலையில் முற்போக்கான பாத்திரத்தை வகித்ததுடன் மாத்திரமல்லாது, அகநிலையில் சமூக மாற்றம் தொடர்பாக 1920களிலேயே மிகவும் முற்போக்கான கருத்துக்களையும் முன்வைத்தது. தேசிய ஒற்றுமை, மதச்சார்பற்ற தன்மையை வலியுறுத்துதல், தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிரான போக்கு, கூட்டுறவுக் கலாச்சாரத்தை சமூகமட்டத்திற்குக் கொண்டு செல்லுதல், சுய பொருளாதாரக் கொள்கை என ஏராளமான முற்போக்கான கருத்துக்களை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கொண்டிருந்ததுடன் அவற்றுக்காகப் போராடியுமிருந்தது.
விபுலானந்தர், அரசியல் ரீதியாகத் தொடர்புபட்ட அமைப்பாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாத்திரமே இருந்துள்ளது. ஆக, அவருடைய அரசியல் பரிணாமம் அதனூடாகவே நேரடியாக அளவிடப்படக்கூடியது. மேலதிகமாக, சமூகத்தளத்தில் அவருடைய செயற்பாடுகளின் போதான அணுகுமுறையில் இருந்தும் மறைமுகமாக அளவிட முடியும்.
சமூகத்தளத்தில் முக்கியமாக கல்வித்துறையில் விபுலானந்தரின் பங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு சார்பானது என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இப்பின்புலத்தில் வைத்தே விபுலானந்தருடைய ‘அரசியலை’ உய்த்துணர்ந்து கொள்ள முடியும். யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்திலும் அதன் பிற்காலத்தைய அரசியல் அசைவியக்கத்திலும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பங்கு இன்றியமையாதது. அக்காலத்தில் அது வகித்த முற்போக்கான பாத்திரம் அதன் பின்வந்த பல அரசியல் இயக்கங்களால் கூட தொட்டுப்பார்க்க முடியாத உச்சத்தில் இருந்தது.
இந்நூல் இப்போது மீள்பதிப்பிற்குள்ளாகும் வேளையில், அதன் இக்காலத்தைய அவசியத்தையும் குறிப்பிட வேண்டும். அதற்கு, இன்றைய அரசியல் சூழல் பற்றிய பார்வையும் அவசியமானது. அதனூடாகவே இந்நுலை வெளியிட வேண்டியதன் அவசியம் பற்றிய புரிதலை வந்தடைய முடியும்.
2009 மே இல் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டது. அந்நிகழ்வுக்கு முதலான இறுதி 20 வருடங்களும் ஆயுதப்போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மாத்திரம் நடாத்தப்பட்டது. இந்நிலையில் அவ்வமைப்பு அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியலில் ஒரு வெற்றிடம் தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. வரலாற்று ரீதியாக இலங்கையில் இரு தேசங்கள் இருந்துள்ளன. நடைமுறையில் இரு தேசங்களும் இரு அரசுகளாக செயலாற்றியுள்ளன. தொடர்ச்சியான சிங்கள பேரினவாத நடைமுறைகளால், தமிழ்த்தேசிய அரசியல், கலாச்சார கூறுகளுக்கு மேலதிகமாக அரசியல் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு சமூகத்தளத்தில் தன்னை மீள ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றது.
இன்றைய தமிழ்த்தேசிய அரசியலானது, தேசியவாதத்திற்கு இயல்பிலேயே இருக்கக்கூடிய பிற்போக்கான கூறுகளைக் கொண்ட வலதுசாரித் தேசியமாக பிற்போக்கான பாத்திரத்தை கொண்டுள்ளது மறுக்க முடியாத உண்மையாகும். இந்நிலையை மாற்றி தமிழ்த்தேசிய சட்டகத்தில் இயங்கும் அரசியல் இயக்கங்கள் முற்போக்கான பாத்திரத்தை வகிக்க வேண்டியது அவசியமானது. ஆனால், இன்றுள்ள அமைப்புக்களிடம் வரலாற்று ரீதியான புரிதல் பெருமளவிற்கு இல்லை. இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் இயக்கங்கள் வெறுமனே சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையின் எதிர்வினை இயக்கங்களாகவும் பிற்போக்கான குணாம்சங்களையுடைய தேசியவாதக் கருத்தியலை உற்பத்தி செய்வனவாகவும் மாத்திரமே தொழிற்படுகின்றன.
ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் அரசியல் என்ற அறரீதியான பாத்திரம், அவற்றுக்கு முற்போக்கான பாத்திரத்தை வழங்கிவிடப் போதுமானதல்ல. அல்லது, புறநிலையான பார்வையும் இயக்கமும் முற்போக்கான கருத்தியலைக் கொண்டிருப்பது மட்டும் அவற்றுக்கு முற்போக்கான பாத்திரத்தை வழங்கிவிடாது. இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகிக்க வேண்டும் அல்லது இன்றிருக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டியக்கம் எவ்வாறான குணாம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு நாம் மீண்டும் 1920களில் செயற்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசிடம் செல்ல வேண்டியுள்ளது. புறநிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பும், தமிழ்த்தேசத்தின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் இறையாண்மையையும் வலியுறுத்தும் தன்மையும் இருக்க வேண்டும். அவ்வாறே, அகநிலையில், அசமத்துவங்கள் தொடர்பான தீர்க்கமான பார்வையைக் கொண்டிருப்பதுவும் அவசியமானது. சாதியப்படிநிலையுடன் கூடிய சமூக அசமத்துவக் கட்டமைப்பை கருத்தியல் ரீதியல் மட்டுமல்லாது நடைமுறையிலும் எதிர்கொள்ளத் துணிய வேண்டும். அதற்கெதிராகப் போராட வேண்டும். அவ்வாறே, வர்க்க ரீதியான சமத்துவத்திற்கு ஆதரவான தனது கொள்கைப் பிடிப்பைப் பகிரங்கப்படுத்த வேண்டியதும் அவசியமானது. மேலும், இதர சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பான தன்னுடைய பார்வையை முற்போக்கானதாக வெளிப்படுத்த வேண்டியதும் அவசியமானது. இன்னும், பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்டோர் சார்ந்த நிலைப்பாடுகளையும் அவற்றுக்கெதிரான செயற்பாடுகளையும் கொண்டதாக தன்னுடைய பாத்திரத்தை வகுத்துக் கொள்வதே தமிழ்தேசியத்தின் இன்றைய தேவையாகவுள்ளது.
இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, 1990களின் ஆரம்பத்தில் தேச உருவாகச் செயற்பாடுகளின் போது, பிற்போக்கான உள்ளடக்கத்துடன் நிகழும் தேச உருவாக்கம் தேச உருவாக்க நகர்வைத் தவறான திசைவழி நகர்த்திச் செல்லும் என்று முற்போக்காளர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை முற்போக்குப் பாத்திரம் நிரம்பியதாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் சிறிய அணிகள் போராடியுள்ளன. அதற்கான உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று, வெற்றிடத்தில் இருந்து பிற்போக்கான கூறுகளுடன் சுய விமர்சனமற்று நகர முற்படும் தமிழ்த்தேசிய அரசியலின் திசைவழியை முற்போக்கான வழியில் பயணிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் எழுநா இதனை மீள்பிரசுரம் செய்கின்றது.
நடைமுறை அரசொன்றை நிறுவ முற்பட்ட காலப்பகுதியும், வெற்றிடத்தில் இருந்து அரசியலை மீளத் தொடங்கும் தற்போதைய காலப்பகுதியும் ஒன்றல்ல என்ற போதிலும் தற்போதைய சூழல் இவ்விடயத்தை வலியுறுத்துவதற்குப் பொருத்தமான காலம் என்றே கருதுகின்றோம். ஈழத்தமிழர்களில் 1/3 பகுதியினர் புலத்திலும் 2/3 பகுதியினர் தாயகத்திலும் நிலைகொண்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. புலம்பெயர் அமைப்புக்களினதும் நீண்ட தூரத் தேசியவாதத்தினதும் செல்வாக்கிற்கு உட்பட்டே தமிழரசியல் தன்னை நகர்த்த வேண்டியுள்ளது. நீண்ட தூரத்தேசியவாதத்திற்கு தமிழ்த்தேசியத்தின் குணாம்சத்தை முற்போக்கானதாக மாற்றியமைக்க வேண்டிய தேவையிருக்காது. மேற்கத்தைய அதிகாரக்களின் ஏவல்படையாக இருப்பது முற்போக்கான வரலாற்றுப் பாத்திரம் அல்ல. இவ்விடத்தில், தாயகத்தில் உள்ள அமைப்புக்களே தேசியத்தின் முற்போக்கான பாத்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதற்கான கடப்பாடும் தேவையும் அதிகமுள்ளவர்கள் அவர்களே. இவற்றைக் கவனத்தில் கொண்டே முற்போக்கு சக்திகள் செயற்பட வேண்டும்.
அவ்வகையில் இந்நூல், தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டளர்களிடையே குறைந்தபட்சம் உள்ளக உரையாடலைத் தொடக்கி வைக்குமென்பது எம்முடைய நம்பிக்கையாகும்.
எழுநா
மே 2013
Read Less