தொண்ணூறுகளில், குறிப்பாக அம்பேத்கார் நூற்றாண்டுக்குப்பிறகு தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி பெறுகின்றது. இந்த எழுச்சியானது தமிழகத்தின் சமூக, பண்பாட்டுச் சூழலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தலித் சமூகத்தின் அரசியல், வாழ்வியல், சமூகவியல் சார்ந்த பல்வேறு கற்கை நெறிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணமாகவும் அமைந்தது.
இதே காலப்பகுதியில் ஈழத்தில் தேசிய விடுதலைப் போராட்டம் அதன் முழுவீச்சில், ஆயுதப் போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தமும், மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலைகளும் மக்களை அப்போதைய முதன்மையான பிரச்சனையாக சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையே கருதவைத்தன. தவிர, இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமற்ற தமிழர் அரசொன்றை நிர்வகித்து வந்தார்கள். புலிகளுடைய நிர்வாகத்தால் சாதியப் பாகுபாடு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப் பட்டிருந்ததனால் வெளிப்படையாகச் சாதிகளைக் குறிப்பிட்டுக் கதைப்பதும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட பிற கதையாடல்களும் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால், பேசாமல் இருப்பதன் மூலம் சாதியத்தை ஒழித்துவிடலாம் என்பது மிகத் தவறான அணுகுமுறை என்பதையே வரலாற்றில் இருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாயிருக்கின்றது. சாதி ஒழியவேண்டும் என்று நினைப்பவர்களும், அதற்காகச் செயற்படுபவர்களும் சாதியமைப்பு மற்றும் சாதியமைப்பின் காலத்துடனான மாற்றம் பற்றிய ஆழமான அறிவுடனும் புரிதலுடனும் இருந்தால் மாத்திரமே சாதி ஒழிப்புக் கைகூடும் என்பது நடைமுறையில் உணரப்பட்டுமிருக்கின்றது.
ஈழத்துச் சாதியமைப்புப் பற்றிய தரவுகளும், ஆய்வுகளும், புத்தகங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பது ஈழத்துச் சாதியமைப்புப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதி ஒழிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் மிகப் பெரிய தடையாக உள்ளது. குறிப்பாக தமிழில் ஈழத்துச் சாதியக்கட்டமைப்பு தொடர்பாக விரல் விட்டு எண்ணக் கூடிய நூல்களை மாத்திரமே காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக தமிழகச் சாதியமைப்பே ஈழத்திலும் இருப்பதாகக் கருதுவதோடு, ஈழத்துச் சாதியமைப்புகளில் காட்டப்படும் பாகுபாடு, ஆதிக்க சாதியினரின் சாதி வெறி போன்றவற்றைப் பற்றிப் பேசும்போது சர்வசாதாரணமாக தமிழகத்து நிகழ்வுகளை மேற்கோள் காட்டிப் பேசுவதையும் அவதானித்திருக்கின்றோம். நுணுக்கமான வேறுபாடுகளைத் தம்மிடத்தே கொண்டுள்ள ஈழத்துச் சாதியமைப்பையும், தமிழகத்துச் சாதியமைப்பையும் ஒரே விதமாக அணுகுவது சாதியம் தொடர்பான கற்கைகளையும், செயற்பாடுகளையும் ஒருபோதும் ஆரோக்கியமான பாதையில் நகர்த்தாது.
இந்தச் சூழ்நிலையில் அறிவுசார் செயற்பாடுகள் ஊடாக சாதியம் பற்றிய முறைமையான அறிவுசார் கற்கை நெறிகளை ஊக்குவிக்கவும், சாதியமைப்புகளைத் தெரிந்துகொள்வதிலும், சாதி ஒழிப்பிலும் அக்கறை உள்ளோரிடம் பரவலாக அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எழுநா பதிப்பகத்தின் நோக்கங்களில் ஒன்றின் முதன் முயற்சியாக “யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். ஈழத்துச் சாதியமைப்பு என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே மட்டக்களப்புச் சாதியமைப்பிற்கும், யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பிற்கும் இடையே சமூகரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும் அனேக வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்படவேண்டும் என்பதாலேயே “யாழ்ப்பாண தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்கிற இந்நூலில் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பை மையமாகக் கொண்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பில் 1) யாழ்ப்பாணத்தில் சாதி: மரபும் மாற்றமும், 2) யாழ்ப்பாணச் சமூகத்தின் புலப்பெயர்வு, பணவருவாய் மற்றும் சாதி, வகுப்பு, மத அடையாளங்களின் இயங்குநிலைகள், 3) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும், 4) யாழ்ப்பாணத்தில் சாதியும் இனத்துவமும்: அடையாளக் கட்டுமானங்கள் என்கிற நான்கு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கட்டுரைகளூடாக போரும், அதன் நிமித்தம் நடந்த தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் சாதியக் கட்டுமானத்தில் என்னென்ன மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பது புள்ளிவிபரங்கள் ஊடாகவும், பரவாலாகச் சேர்க்கப்பட்ட வாய்மொழித்தரவுகளூடாகவும் தொகுக்கப்பட்டு அத்தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கருதுகோள்கள், அனுமானங்கள், முடிவுகள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன.
கட்டுரையாசிரியர் பரம்சோதி தங்கேஸ் சாதியம் தொடர்பான கற்கைசார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகத் தன்னை ஈடுபடுத்திவருபவர். தனது கலைமாமணிப் படிப்பிற்கான ஆய்வுக்கற்கையை யாழ்ப்பாணத்தில் சாதி மற்றும் இனத்துவ அடையாளங்களுக்கிடையிலான இடைவிளைவுகள் பற்றியதாக மேற்கொண்டவர். ஒரு சமூகவியலாளராக சாதியத்தின் கட்டுமானத்தை குறிப்பாக போர் மற்றும் போரின் விளைவுகளால் அதன் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாக்கங்களை கற்கைசார் ஒழுங்குடனும் தரவுகளுடனும் தனது எழுத்துக்களில் முன்வைத்துள்ளார். சாதியக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நுணுக்கமான மாற்றங்களையும் மாற்றங்களினூடு சாதியம் தன்னை எவ்வாறு நிலைநிறுத்தியுள்ளது என்பதையும் ஆராய்வது சாதிய விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படும் ஒவ்வொருவருடைய மிக முக்கிய கடமையாகும். அவ்வகையில் இன்றைய யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை விளங்கிக் கொள்ள உதவும் இவ் ஆய்வுப் பிரதி, சாதிய விடுதலையுடன் தொடர்புடைய செயற்பாட்டளர்களுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அதுமட்டுமல்லாது, வர்க்க விடுதலையை நோக்கமாகக் கொண்டு செயற்படுபவர்களுக்கு புதிய வர்க்க ஆய்வுக்கான ஆதாரமாகவும், தேசிய விடுதலையை முன்னகர்த்தும் செயற்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான தேசிய உள்ளடக்கத்தை உருவாக்கும் ஆதாரமாகவும் இருக்கும் என்று நம்பிக்கையுடன் வெளியிடுகின்றோம்.
எழுநா
டிசம்பர் 2012
Read Less
இலங்கையில் அறுபது மற்றும் எழுபதுகளில் சாதி பற்றிய முக்கியமான ஆய்வுக்கற்கைகள் பல இடம்பெற்றன. குறிப்பாக மேற்கத்தேய மானிடவியலாளர்களால் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர்களின் சாதிமுறைமை பற்றிய மிக முக்கியமான பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
Nur Yalman (1967), E. R. Leach (1961), J. Jiggins (1979), Bryce Ryan (1993), Roberts Michael (1982, 1983), R. Jayaraman (1975), Michael Banks (1957, 1960), Kenneth David (1973a, 1973b, 1974a, 1974b), M. D Raghavan (1957, 1953, 1967), Pfaffenberger (1982, 1990) முதலிய ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கற்கைகளை இதற்கான எடுத்துக்காட்டாக குறிப்பிட முடியும்.
எண்பதுகளைத் தொடர்ந்து இலங்கையில் இனமுரண்பாடு வலுவடைந்து, இனத்துவப் பிரக்ஞை மேலோங்கத் தொடங்கியது. இப்பின்னணியில் சாதி என்ற சமூக முறைமையின் முக்கியத்துவம் குறைந்து, இனத்துவவாதம், தேசியவாதம், விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம் முதலிய எடுத்துரைப்புக்கள் சமூக விஞ்ஞானக் கற்கைகளில் முக்கிய ஆய்வுப் பொருள்களாக உருவாகின. மதம், திருமணம், அரசியல், புலப்பெயர்வு, சமூக அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன சமூக, பொருளாதார, கலாசார விடயங்களில் தாக்கம் செலுத்தி நிற்கும் சாதி என்ற சமூக முறைமை முக்கியமற்ற அல்லது தேவையற்றதொன்றாக மாறியது. இந்தக் காரணிகளால் சமூக அறிவியலில் சாதி பற்றிய தற்கால இயங்குநிலையினைப் புரிந்துகொள்வதற்கு ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நிவர்த்திசெய்யுமொரு முயற்சியாக இப்புத்தகத்தில் இடம்பெறும் ஆய்வுக் கட்டுரைகள் அமைகின்றன.
யாழ்ப்பாணச் சாதியமைப்பு தொடர்பாக ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வெளிவந்த எழுத்துக்கள் பல்வேறு அறிவியல் தளங்களில் இடம்பெற்றமை கவனிக்கத்தக்கது. இவ்வெழுத்துக்களை “நிறுவனப்படுத்தப்பட்ட” சமூக ஆய்வுசார் கற்கைகளுடன் (மானிடவியல், சமூகவியல், அரசியல், கலாசாரக் கற்கைகள்) மட்டும் குறுக்கிவிடாமல் நோக்கும்போது, யாழ்ப்பாணச் சாதிபற்றிய எழுத்துக்கள் பின்வரும் நான்கு தளங்களில் இடம்பெறுவதாகக் கூறமுடியும்.
முதலாவதாக யாழ்ப்பாணத் தமிழர் தொடர்பாக வெளிவந்த நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் சாதிபற்றிய முக்கிய பல விடயங்கள் இடம்பெறுகின்றன. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் சாதிக் கொடுமைகள் மற்றும் தீண்டாமை தொடர்பான கருத்துக்களை கூறுவதாக அமைகின்றன. கே. டானியல், டொமினிக் ஜீவா, தெணியான், ருத்திரமூர்த்தி போன்றோர்களின் எழுத்துக்களை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இவர்களது எழுத்துக்கள் பல கற்பனைப் கதாபாத்திரங்களுடன் பின்னப்பட்ட சமூகத்திலுள்ள நிஜவாழ்க்கைக்கான எடுத்துரைப்புகளாக உள்ளன.
இரண்டாவதாக வரலாற்றுரீதியில் இடம்பெற்ற சாதி அடக்குமுறைகள், அதற்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களை ஆவணப்படுத்தும் முகமாகத் தோற்றம்பெற்ற எழுத்துக்கள். இதற்கு உதாரணமாக வெகுஜனன், இராவணாவினால் (2007) எழுதப்பட்ட “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்” என்ற நூலைக் கூறலாம். இந்நூல் வரலாற்றுரீதியில் இடம்பெற்ற சாதி ஒழிப்புப் போராட்டம் பற்றிய குறிப்புக்களை அதன் காலஎல்லையுடன் புரிந்துகொள்ள தமிழில் வெளிவந்திருக்கும் முக்கியமான நூலாகும்.
மூன்றாவதாக சாதி தொடர்பாக ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தும் முகமாகத் தோன்றிய எழுத்துக்களைக் குறிப்பிடலாம். இவ்வெழுத்தினை சுயசரிதை (Autobiogrpahy) என்று கூறலாம். ஆங்கிலக் கலாசாரத்தில் இத்தகைய எழுத்துக்கள் பிரசித்திபெற்றவையாக உள்ளபோதும் தமிழில் மிக அரிதாகவேயிருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் யோகரட்ணம் (2011) என்பவரால் எழுதப்பட்ட “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” என்ற நூலினை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.
நான்காவதாக நிறுவனப்படுத்தப்பட்ட கல்விசார் துறைகளான மானிடவியல், சமூகவியல், அரசியல் மற்றும் கலாசாரக் கற்கைகளின் துறைகளைச் சேர்ந்த புலமையாளர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கற்கைகள் உள்ளன. அதிலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்புப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல் கற்கைகள் ஆங்கில மொழியிலேயே அதிகமான உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக மேற்கத்தேய புலமையாளர்களான David Kenneth, Michael Banks, Bryan Pfaffenberger, M. D. Raghavan போன்றோர்களது ஆய்வுக் கற்கைகளைக் குறிப்பிட முடியும். இவ்விடத்தில் கா. சிவத்தம்பி, க. அருமைநாயகம், சைமன் காசிச் செட்டி, “கண்டி” பேரின்பநாயகம் போன்றோர்களது பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதே. பெரும்பாலான நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல்சார் கற்கைகள் சமூகத்தினை ஒழுங்குபடுத்துமொரு முறைமையாக சாதியினைக் கற்பதற்கு (Caste as a Social and Functional System) முயற்சிக்கின்றன. அந்தவகையில் இக்கற்கைகள் தொழிற்பாட்டுவாத அணுகுமுறையினை (Funtional Perspective) கொண்டுள்ளன எனலாம். மேலும் இவ்வறிவியல் கற்கைகள் சாதி என்ற சமூக முறைமையில் நிலவும் உள்வாரியான பாகுபாட்டு வடிவங்களை ஆராய்வதில் அதிகம் அக்கறை செலுத்துவதில்ல்லை என்ற விமர்சனமும் உண்டு. அவ்விமர்சனத்தின் பின்னணியில் தோன்றியதாக “Casteless or Casteblind? Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka (2009)” என்ற ஆய்வு நூல் உள்ளது.
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு காலகட்டத்தில் ஆய்ந்து எழுதப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களின் சாதி, இனத்துவம், வகுப்பு மற்றும் மத அடையாளங்களின் இயங்குநிலை தொடர்பான நான்கு கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக குறிப்பாக சாதி என்ற சமூக முறைமையினை பற்றி எழுதப்பட்டமையால் சிலசமயம் கூறியது கூறல் இடம்பெறுகின்றது. எனினும், கட்டுரைகளின் ஓட்டம், ஒழுங்கமைப்புக் கருதி அவை அவ்வாறே விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சாதியமைப்பின் தற்காலப்போக்கினை பகுப்பாய்வு செய்வதில் இப்புத்தகத்தின் தேவை சமூக அறிவியலில் அவசியமானதொன்று என்பது எனது வலுவான நம்பிக்கையாகும்.
இப்புத்தகத்தினை வெளியிடுவதற்கு முன்வந்த எழுநா நிறுவனத்திற்கு எனது நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
பரம்சோதி தங்கேஸ்
London, December 2012
Read Less