இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள் - எழுநா
Arts
28 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள்

June 7, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

அறிமுகம்

தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும்  தோற்றம் பெற்றதே காரணமாகும். அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே  தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவ்விலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் இருந்த இராசதானிகளின் வரலாற்றையும், அவற்றில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றையும் கால அடிப்படையில் எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் முதல் பாளி இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் இலங்கையில் அரச உருவாக்கம் தோன்றிய காலம் முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டுவரை அநுராதபுர அரசை தமிழ், சிங்கள மன்னர்கள் மாறிமாறி ஆட்சிபுரிந்த வரலாற்றைக் கூறுவதில் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூலை ஆதாரமாகக் கொண்டு கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் 200 ஆண்டு காலத்தில் 21 மன்னர்கள் அநுராதபுர அரசில் ஆட்சிபுரிந்ததையும் அதில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்ததையும் அறிய முடிகின்றது. அவர்களுள் தமிழ் மன்னன் எல்லாளன் மட்டும் 44 ஆண்டுகள் நீதி தவறாது நீண்டகாலம் ஆட்சிபுரிந்த முதல் மன்னன் என இந்நூல் கூறுவது மேலும் சிறப்பாக நோக்கத்தக்கது. இருப்பினும் இந்நூல் இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் வடஇந்தியாவில் இருந்து ஏற்பட்ட மக்கள் புலப்பெயர்வுடன் தொடங்கியதென்ற வரலாற்றுக் கதையைக் கொண்டிருந்ததால், அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களை அக்கரையில் இருந்து வர்த்தகராக, படையெடுப்பாளராக அவ்வப்போது வந்து ஆட்சி செய்த அந்நியர் என்றே குறிப்பிடுகின்றது. இதனால் பிற்காலத்தில் இந்நூலை முதன்மைச் சான்றாகக் கொண்டு அநுராதபுரகால அரசியல் வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் தமிழர்களுக்கும், தமிழ் மன்னர்களுக்கும் இந்நாட்டு மண்ணோடொட்டிய தொன்மையான வரலாறு இல்லை என்ற கருத்தையே உருவாக்கினர். 

இந்நிலையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகளும், தொல்லியற் கண்டுபிடிப்புக்களும் தமிழ் மன்னர்களின் பூர்வீகம் பற்றிய பாளி இலக்கியக் கதைகளையும், வரலாற்று அறிஞர்கள் முன்வைத்த கருத்துகளையும் மீள்வாசிப்பிற்கு உட்படுத்துவதாக உள்ளன. அவற்றை உறுதிப்படுத்துவதில் தொல்லியற் சான்றுகள், பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், முத்திரைகள், கல்வெட்டுகள், நாணயங்கள் என்பன பெறும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

இலங்கையில் தமிழ் மொழியின் தொன்மையும், அரச உருவாக்கமும் 

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இருந்து வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் மேலைப் பழங்கற்காலம், நுண்கற்காலம், பெருங்கற்காலம் அல்லது ஆதியிரும்புக்காலம் ஆகிய பண்பாடுகளுக்குரிய மக்கள் இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 70 இற்கு மேற்பட்ட இடங்களில் நுண்கற்காலப் பண்பாட்டுக்குரிய சின்னங்களும் 60 இற்கு மேற்பட்ட மையங்களில் ஆதியிரும்புக்கால பண்பாட்டுக்குரிய சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சின்னங்கள் தொல்லியல், மானிடவியல் மற்றும் வரலாற்று மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் தென்னிந்திய நுண்கற்கால, ஆதியிரும்புக் கால பண்பாட்டு வட்டத்திற்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றன. பேராசிரியர் இந்திரபாலா இவ்விரு பண்பாடுகளும், அவற்றிற்குரிய மக்களும் தென்தமிழகத்தில் இருந்தே இலங்கைக்கு வந்தனர் எனக் குறிப்பிடுகின்றார் (இந்திரபாலா,கா.,(2006). அவற்றுள் இற்றைக்கு 3000 ஆண்டளவிலிருந்து பரவிய ஆதியிரும்புக்காலப் பண்பாடே இலங்கையில் நாகரிகம் தோன்றுவதற்கு காரணமாக இருந்துள்ளது. இதனால் இப்பண்பாடு இலங்கை நாகரிகத்தின் ஆக்ககாலம் எனவும் அழைக்கப்படுகின்றது. இப்பண்பாட்டுடன் இலங்கையில் நிலையான குடியிருப்புகள், நிரந்தர பொருளாதாரக் கட்டமைப்பு, நீர்ப்பாசனக் குளங்களை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புகள், இரும்பின் உபயோகம், மந்தை வளர்ப்பு, கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்களின் பயன்பாடு, சக்கரங்களைப் பயன்படுத்திய மட்பாண்டங்களின் உற்பத்தி, சிறு தொழில்நுட்ப வளர்ச்சி, உள்நாட்டு – வெளிநாட்டு வர்த்தகம், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோற்றம் பெற்றன (Seniviratne,S., 1984:237-307).

தமிழக, இலங்கை அரச உருவாக்கத்தின் தொடக்கப் புள்ளியாக ஆதியிரும்புக் காலப் பண்பாடே காணப்படுகின்றது. இப்பண்பாட்டுடன் தோன்றிய குளங்கள், நீர்பாசனக் கால்வாய்கள், பெரிய கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஈமச் சின்னங்கள், சிறு தொழில்நுட்பக் கூடங்கள், கடல்சார் வாணிபம் என்பவற்றில் பல மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டதற்கான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. இதனால் அம்மக்களை வழிநடாத்தும் பல தலைவர்கள் தோன்றினர். அத்தலைவர்களின் தோற்றமே குறுநில அரசுகள் அல்லது அரச உருவாக்கத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. எல்மன் என்ற அறிஞர் இவ்வகை அரசுகளை இனக்குழு நிலையில் இருந்து அரசு தோன்றுவதற்கு இடைக்கட்டமாக இருந்த சிறு அரசுகள் எனக் கூறுகின்றார். கலாநிதி பூங்குன்றன், சங்ககால மூவேந்தர் ஆட்சிக்கு முன்னர் தமிழகத்தில் ஐவகை நிலங்களிலும் ஆட்சி புரிந்தவர்கள் வேள், வேளீர் எனக் குறிப்பிடுகின்றார் (1996). இலங்கைக்குரிய ஆதியிரும்புக்காலப் பண்பாடு தமிழகத்தில் இருந்து பரவியதெனக் கூறும் பேராசிரியர் செண்பகலட்சுமி ஆதியிரும்புக்கால வேளாண்மைச் சமூகத்தில் இருந்த வேள், வேளீருடன் அரசு தோன்றியதாகக் கூறுகின்றார் (1993:70). பேராசிரியர் இராஜன், வேளீர் ஆட்சிக்கும் ஆதியிரும்புக்கால நடுகற்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார் (1996:220). அண்மையில் இலங்கை – தமிழக அரச உருவாக்கம் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் சுதர்சன் செனிவரட்ன, அரச உருவாக்கத்தின் தொடக்கமாக ஆதியிரும்புக்காலப் பண்பாட்டைக் குறிப்பிட்டு, சங்ககால வேள் – வேளீரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் வரும் வேளும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றார்.

மேற்கூறப்பட்ட தொல்லியல் ஆதாரங்களும், அவை தொடர்பான அறிஞர்களின் கருத்துகளும் இலங்கையில் ஆதியிரும்புக் காலப் பண்பாட்டுடன் அரச உருவாக்கமும் தொடங்கிவிட்டதை கோடிட்டுக் காட்டுகின்றன. அவ்வாறான அரச உருவாக்கம், முதலில் தமிழ் மொழி பேசிய மக்களிடையே தோன்றியிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. இதற்கு, இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் காணப்படும் தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறிப்புக்கள் முக்கிய சான்றுகளாகும் (புஸ்பரட்ணம்,ப., 1993, பத்மநாதன்,சி.). இவ்வாதாரங்களை தமிழக ஆதியிரும்புக்கால மட்பாண்ட எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆராயும் போது அது மேலும் உறுதியாகின்றது. இந்தியாவில் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் பெரும்பாலும் தமிழகத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை தமிழகத்திற்குரிய தனித்துவமான பண்பாடாகக் கூறப்படுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள், மற்றும் தொல்லியல் மேலாய்வுகளில் நூற்றுக்கணக்கான பிராமி எழுத்துப் பொறிப்புடைய மட்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்துள்ளன (Subbarayalu,Y., 1984, Rajan,K., 1996, 1994, 1997). அவற்றுள், அண்மையில் கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், மாழிகைமேடு, கீழடி முதலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை தமிழர் நாகரிகம் பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைச் சொல்வதாக அமைந்துள்ளன. அவற்றுள் கீழடி அகழ்வாய்வில் பெறப்பட்ட தமிழ்ப் பிராமி எழுத்தின் காலம் இற்றைக்கு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்டிருப்பது தமிழ் மொழி, தமிழ் எழுத்து என்பவற்றுடன் தமிழ் அரசின்  தோற்ற காலத்தையும் மேலும் பின்னோக்கிக் காட்டுவதாக உள்ளது.

தமிழகத்தை அடுத்து பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் பயன்பாட்டிலிருந்த ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. இதற்கு வடஇலங்கையில் கந்தரோடை, சாட்டி, பூநகரி, ஈழவூர், கட்டுக்கரை, இரணைமடு, தென்னிலங்கையில் அநுராதபுரம், அம்பாந்தோட்டை கிழக்கிலங்கையில் மாவடிவேம்பு, பாற்சேத்துக்குடா ஆகிய ஆதியிரும்புக்கால பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டவற்றைச் சான்றுகளாகக் காட்டலாம். வடஇலங்கையில் இதுவரை கிடைத்த பெரும்பாலான பிராமி எழுத்துப் பொறிப்புகளில் ஓரிரு எழுத்துக்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் எழுத்துக்களும், எழுத்து வடிவங்களும் பெருமளவுக்கு தமிழ்நாட்டு எழுத்துப் பொறிப்புக்களை ஒத்ததாகவே காணப்படுகின்றன. பூநகரிப் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான பிராமி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்துள்ளன. அவற்றுள் வேள், நாக, ஈலா (ஈழம்?) முதலான பெயர்கள் சிறப்பாக நோக்கத்தக்கன. இவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்ததற்குச் சான்றாகும். இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதியிரும்புக்கால பண்பாட்டு மக்கள் வாழ்ந்த கந்தரோடையில் 2011 இல் இலங்கைத் தொல்லியற் திணைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் பிரிவுடன் இணைந்து இரு இடங்களில் இயற்கை மண்வரை அகழ்வாய்வுகள் மேற்கொண்டிருந்தது. இந்த அகழ்வின் போது ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுக்குரிய பலதரப்பட்ட சான்றாதாரங்களுடன் பிராமி எழுத்துப் பொறித்த பல மட்பாண்டச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அதன் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை இவ்விடத்தில் கூறமுடியாத நிலையில் உள்ளோம். ஆயினும் 1970 களிலும் இதற்குப் பின்னர் 1997 – 1998 காலப்பகுதியில் பேராசிரியர் கிருஸ்ணராஜா மேற்கொண்ட ஆய்வுகளிலும் அபிசிதன், ஆபதி, குணி முதலான தமிழ்ப் பெயர்களுடன் சில பிராகிருத மொழிச் சொற்களும் கலந்த மட்பாண்ட எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கிருஸ்ணராசா, செ.,1998 : 72-75,). 

2000 ஆண்டு காலப்பகுதியில் அம்பாந்தோட்டையில் இலங்கை – ஜேர்மன் நாட்டுத் தொல்லியல் அறிஞர்கள் இணைந்து ஆதியிரும்புக்கால குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது பெரிய பானையொன்றின் மூடியில் தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த சாசனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சாசனத்தை ஆய்வு செய்த தென்னாசியாவின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான ஐராவதம், சாசனத்தின் காலத்தை கி.மு. 3 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டு, சாசனத்தின் நடுவில் காணப்படும் வடிவத்தை குறியீடாகக் கொண்டு, அதற்கு இடப்பக்கமாக உள்ள எழுத்துப் பொறிப்பை ‘திரளி’ எனவும் வலப்பக்கமாக உள்ள எழுத்துப் பொறிப்பை ‘முறி’ என்றும் வாசித்துள்ளார் (Mahadevan,I., 2010).

muri

ஆயினும் இம் மட்பாண்டச் சாசனத்துடன் இணைந்து காணப்பட்ட பிற சின்னங்களின் காலத்தை கணித்திருந்தால் இச்சாசனத்தின் காலம் மேலும் முற்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு. திரளி, முறி என வாசிக்கப்பட்ட இரு சொற்களும் பொருள் அளவில் அளவு, பாத்திரம் என்பதையே குறிக்கின்றன. ஆனால் திரளி என வாசிக்கப்பட்ட சொல்லை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக வாசித்திருந்தால் அச்சொல்லை ‘புழைதி’ என வாசிப்பதே பொருத்தமாகத் தோன்றுகின்றது. இச்சொல் புலையன் என்பதன் பெண்பால் வடிவமாகும். இதன் பொருள் புழைதியின் அளவுப் பாத்திரம் எனப் பொருள்படும். இதற்கு ஆதாரமாக இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில், புலய(ன்) என்ற தனிநபர் பெயர் நான்கு இடத்தில் வருவதைக் குறிப்பிடலாம். எவ்வாறாயினும் இம் மட்பாண்ட எழுத்துப் பொறிப்பு தமிழ்ப் பிராமி எழுத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளமை, இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தென்னிலங்கையில் தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததற்கு முக்கிய சான்றாகக் காணப்படுகின்றது (Pushparatnam, P., 2014: 537 – 541).

1990 – 91 காலப்பகுதியில் பிரித்தானியா – அநுராதபுரத் தொல்லியல் ஆய்வுத்திட்டத்தின் கீழ் அநுராதபுரத்தில் ‘ஸல்கஹவத்த’ என்ற இடத்திலுள்ள ஆதியிரும்புக்காலக் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் அதிக எண்ணிக்கையிலான பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. ஆயினும் அவை பற்றிய புகைப்படங்கள் பெரும்பாலும் பிரசுரிக்கப்படாத நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் இங்கு கிடைத்த மட்பாண்ட எழுத்துக்களின் காலம் நவீன காலக்கணிப்பால் கி.மு. 650 இல் இருந்து கி.மு. 750 எனக்  கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் காலம் கீழடி மட்பாண்ட எழுத்தின் காலத்தை விட முற்பட்டதாகக் காணப்படுகின்றது (Conningham, R.A.E., 1999: 73-97). ஆயினும் இக் காலக்கணிப்புகள் எதிர்காலக்  கண்டுபிடிப்புகளாலும், காலக் கணிப்புகளாலும் மேலும் உறுதி செய்யப்படவேண்டும். இருப்பினும் இக்காலக் கணிப்புகள் இலங்கைக்கு விஜயன் தலைமையிலான வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னரே, அதிலும் குறிப்பாக பௌத்த மதத்துடனே வடஇந்தியப் பிராமி எழுத்து அறிமுகமாகியது எனக் கூறும் காலத்திற்கு முன்னரே, இலங்கையில் எழுத்தின் பயன்பாடு இருந்ததற்கு முக்கிய சான்றுகளாகக் காணப்படுகின்றன.

thampan

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவடிவேம்பு, பாற்சேத்துக்குடா ஆகிய இடங்களில் புராதன குடியிருப்புகளுக்குரிய சான்றுகளுடன் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழப் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ள வண்ணக்கன், தம்பன், ணாகன் முதலான தனிநபர்ப் பெயர்கள் கிழக்கிலங்கையில் தமிழ் மொழியின் தொன்மையை அறிவதற்கு முக்கிய சான்றுகளாக உள்ளன. இவ்வெழுத்துப் பொறிப்புக்களின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர் பத்மநாதனும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அவற்றுள் நாகன் என எழுதப்படும் பெயர் இம்மட்பாண்டங்களில் ணாகன் என எழுதப்பட்டுள்ளன. இம்மரபு இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிலும், சமகாலத்தில் சங்க இலக்கியத்திலும், பிராமிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இலங்கையின் மூத்த தொல்லியல், வரலாற்று அறிஞர்களான கலாநிதி சிரான் தெரணியகல, பேராசிரியர் இந்திரபாலா முதலானோர் இலங்கைக்கு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக்கூறுகின்றனர். இதனை பொருத்தமான கருத்தாகக் கொள்ளலாம் என்பதை அண்மையில் வடஇலங்கையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளும் உறுதிசெய்கின்றன (புஸ்பரட்ணம், ப., 2017: 132-140). இவ்வாய்வுகளின் போது ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் இணைந்த நிலையில் அதிக எண்ணிக்கையில் சுடுமண்ணாலான நாகச் சிலைகள், சிற்பங்கள், சமயச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாகபடுவான் என்ற இடத்தில் நாகச் சிற்பங்களை, பாம்பு புற்று வடிவிலமைந்த பானையில் வைத்து வழிபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியர் இரகுபதி இவ்வாதாரங்கள் ஆதிகால மக்கள் நாகபாம்பை புற்றில் வைத்து வழிவடுவதற்கு முன்னரே அச்சின்னத்தைப் பானையில் வைத்து வழிபடப்படும் மரபு தோன்றிவிட்டதைக் காட்டுவதாகக் குறிப்பிடுகின்றார். இவ்வாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் நாகபடுவான் என்றே அழைக்கப்படுகின்றது. இப்பெயர் நாககுளம் என்பதன் இன்னொரு வடிவமாகும். ஏனெனில் ‘படுவம்’ என்ற பின்னொட்டுச் சொல் சங்க இலக்கியத்தில் நீர்நிலைகளைக் குறிக்கின்றது. இதிலிருந்து நாகபடுவான் என்ற இடப்பெயரின் தோற்றம், நாக வழிபாட்டுடன் தொடர்புடைய தொன்மையான இடம் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இலங்கையில் கிடைத்து வரும் மட்பாண்டப் பொறிப்புகளிலும், பிராமிக் கல்வெட்டுகளிலும் நாக, ணாக, ணாகன் முதலான தமிழ் பெயர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் இலங்கைக்கு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக மக்களுடனே தமிழ் மொழியும், தமிழ்ப் பிராமி எழுத்தும் தோன்றியிருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.  

early age

பாளி இலக்கியங்கள் வடஇந்தியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இலங்கையில்  வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் குறிப்பிடுகின்றன (Mahavamsa.VII-VII 51-55). இம்மக்களை, மனிதப்பிறவிகள் அற்ற அமானுஜர் என வரலாற்று அறிஞர்களில் ஒரு சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் பேராசிரியர் சத்தமங்கல கருணாரத்தின போன்ற அறிஞர்கள் இவர்களை இலங்கையில் வாழ்ந்த ஒரு இனக்குழு எனக் குறிப்படுகின்றனர் (Karunarattne, 1984). இந்நிலையில் இம்மக்களை நினைவுபடுத்தும் பெயர்களிற்கு வரலாற்றுக் காலத்தில் இருந்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும், ஆதாரங்கள் காணப்படுகின்றன (Paranavithana 1970, 1983). அநுராதபுர இராசதானி காலத்தில் நாக என்ற பெயரில் பல  மன்னர்கள் ஆட்யிலிருந்தது பற்றி மகாவம்சம் கூறுகின்றது. சில காலங்களில் இப்பெயருக்கு உரிய மன்னர்கள் மாறி மாறி ஆட்சி புரிந்ததற்கும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இது, அநுராதபுர அரசில் நாகவம்ச ஆட்சி முறையும் தொடர்ந்ததைக் காட்டுவதாக உள்ளது. அவர்களில் தமிழ் மன்னர்களும் ஆட்சியிலிருந்தமை ஈழநாக(ன்) என்ற பெயரினாலும், அவன் மனைவி தமிழாதேவி (தமிழ் அரசி) என அழைக்கப்பட்டதிலிருந்தும் தெரிய வருகின்றது. கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 80 இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் ‘நாக, நாஹ, ணாக’ முதலான பெயர்கள் தனிநபர் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக, அல்லது பெயரின் பின்னொட்டுச் சொல்லாகக் காணப்படுகின்றது. இப்பெயருக்குரிய பலர் சிற்றரசர், குதிரை வணிகர், குதிரை மேற்பார்வையாளர், வரி சேகரிப்பாளர், அரச தூதுவர் முதலான அதிகாரப் பதவிகளில் இருந்ததை பிராமிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. வடஇலங்கைக்கு உட்பட்ட  வவுனியா வட்டாரத்தில் காணப்படும் நான்கு பிராமிக் கல்வெட்டுகள் நாகச் சிற்றரசுகள் பற்றிக் கூறுகின்றன (புஸ்பரட்ணம் 2003: 2-41). இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது ஆதியிரும்புக் காலப் பண்பாட்டுடன் தோன்றிய தமிழ் அரச உருவாக்கத்தை அல்லது தமிழ் சிற்றரசர்களின் தோற்றத்தை ‘நாக’ இனக்குழுவுடன் தொடர்புடையதெனக் கூறுவது பொருத்தமாகும்.  

ஆனைக்கோட்டை முத்திரையும் தமிழ்ச் சிற்றரசும் 

இலங்கையில் தமிழ் அரச மரபு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய சான்றாக ஆனைக்கோட்டை முத்திரை காணப்படுகின்றது. 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் இளம் தொல்லியல் ஆசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் பொ. இரகுபதியால் முதலில் இம் மையம் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் இந்திரபாலா தலமையில் ஒரு குழுவினரால் விரிவான அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வகழ்வாய்வின் போது இரு மனித எலும்புகள் பெருமளவுக்கு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டது (Ragupathy, P., 1987). இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ஆதியிரும்புக்கால மனித எழும்புக்கூடுகளாகும். இவ்வெலும்புக்கூடு ஒன்றின் தலைமாட்டுப் பகுதியில்தான் கைவிரலில் அணியப்பட்ட  பிராமி எழுத்துப் பொறித்த முத்திரையும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது எழுத்துப் பொறிப்புள்ள முத்திரை மோதிரம் என்ற சிறப்பிற்குரியது. ‘ஸ்டிட்டைட்’ எனப்படும் கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்முத்திரை மோதிரம் 10.2. மி.மீ நீளமும், 10.6 மி.மீ. அகலமும், 5.05 மி.மீ தடிப்பும், 1.9 கிராம் நிறையும் கொண்டது. முத்திரையின் உட்பக்கம் கைவிரலில் பொருந்தக் கூடியவாறு சற்சதுரமாகச் செய்யப்பட்டுள்ளது.

aanaikoottai

இம்முத்திரையில் இரண்டு வரிகளில் எழுத்துக்கள் உள்ளன. முதல் வரியில் சிந்துவெளி நாகரிகக் கால முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளை நினைவுபடுத்தும் மூன்று குறிகள் காணப்படுகின்றன. இவை பிராமி எழுத்தின் தோற்றத்திற்கு முன்னர் பயன்பாட்டிலிருந்த தொடர்பு மொழிக் குறியீடுகள் எனக் கூறப்படுகின்றது. இரண்டாவது வரியில் மூன்று பிராமி எழுத்துகள் உள்ளன. இவ்வெழுத்துகள் ‘கோவேத’ எனப் படிக்கப்பட்டுள்ளது (மேலது, இந்திரபாலா.கா.,2006). இப்பெயரின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாக எமது மூத்த தொல்லியல், வரலாற்று அறிஞர் பேராசிரியர் கா. இந்திரபாலா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை இவ்விடத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது (இந்திரபாலா.கா. 206: 328-329).

“கோவேத என்ற சொற்தொடர் பிராகிருத மொழியைச் சேர்ந்தது அன்று. இதனைக் ‘கோூவேத’ எனப் பிரிக்கலாம். இது சமகாலத்துத் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் சொற்றொடர்களாகிய ‘கோ ஆதன்’, ‘கோபூதி விர’ ஆகிய சொற்றொடர்களுடன் ஒப்பிடத்தக்கது. இதில் வரும் ‘கோ’ மன்னனைக் குறிக்கும் ஆதித் தமிழ்/திராவிடச் சொல்லாகும். முத்திரைகளிலும், நாணயங்களிலும் வரும் பெயர்கள் பொதுவாக ஆறாம் வேற்றுமை உருபுடன் (அதாவது உடைய என்ற பொருள்படும் சொல் இறுதியுடன்) காணப்படும். இதே போன்று, ஆனைக்கோட்டை முத்திரையிலும் பெயர் ஒன்று ஆறாம் வேற்றுமை உருபுடன் காணப்படுகின்றது. அந்த உருபு பழந் தமிழில் காணப்படும் ‘அ’ உருபு ஆகும்.”

‘கோவேத’ என்ற பெயருக்கு பேராசிரியர் இந்திரபாலா கொடுத்திருக்கும் விளக்கம் யாழ்ப்பாணத்தில் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தமிழ்ச் சிற்றரசு தோன்றியதற்கு சிறந்த சான்றாகும். 

பிராமிக் கல்வெட்டுகளும் தமிழ் அரச மரபும்

இலங்கையின் 700 ஆண்டுகால (கி.மு. 3 – கி.பி. 4) மொழி, எழுத்து, மதம், சமூகம், பொருளாதாரம் என்பன சார்ந்த வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான சான்றுகளில் ஒன்றாகப் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் பெரும்பாலும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டு மையங்களை அண்டியே காணப்படுகின்றன. இவை வடபிராமி எழுத்தில், பிராகிருத மொழியில் பௌத்த துறவிகள் மற்றும் பௌத்த சங்கத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வழங்கிய தானங்கள் பற்றியே பெரும்பாலும் கூறுகின்றன. இக்கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களில் ஒரு சாரார் இக்கல்வெட்டுகளின் மொழியை பழைய சிங்களம் எனக் குறிப்பிட்டு, இலங்கையின் பூர்வீக மக்கள் வடஇந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு இது மேலும் சான்றாகும் எனக் கூறியுள்ளனர் (Paranavithana, S., 1970). ஆனால் இக்கல்வெட்டுகளின் எழுத்தும், மொழியும்  இலங்கையில் மட்டுன்றி பௌத்த மதம் பரவிய பெரும்பாலான நாடுகளில்  கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டிலிருந்துள்ளன. இவற்றிற்கு விதிவிலக்காக தமிழகத்தில் தமிழ் கல்வெட்டு மொழியாக இருந்தபோதும், அக் கல்வெட்டுகளிலும் 25 விழுக்காடு சொற்கள் பிராகிருத மொழி சார்ந்ததாகக் காணப்படுகின்றன (Subrayalu,Y., 1984). இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான எழுத்துகளும், அவற்றை ஒத்த எழுத்து வடிவங்களும் காணப்படுவதுடன் பல கல்வெட்டுகளில் தமிழ் மொழி சார்ந்த  தனிநபர், சமூகம், பட்டம், உறவுமுறை, இடப்பெயர் என்பனவும் காணப்படுகின்றன (புஸ்பரட்ணம்,ப. 2003). அவற்றுள் தமிழ் மொழிக்குரிய தனித்துவமான வரிவடிவங்களை ஆதாரங்களாகக் கொண்டு, தென்னிலங்கை அறிஞர்கள் சிலர், இலங்கைக்குப் பௌத்த மதத்துடன் வடஇந்தியப் பிராமி எழுத்து முறை  அறிமுகமாவதற்கு முன்னரே, தென்னகப் பிராமி (தமிழ்ப் பிராமி) வரிவடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் (Fernando, P.E.E. 1949, Ariyasingha, A., 1965, Karunaratne,S.M., 1960). இதற்கு ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோன்றி வளந்த தமிழ் பிராமி வரிவடிவம், கல்வெட்டுகளிலும் செல்வாக்கு செலுத்தியமை காரணமாகும். அண்மையில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் இந்திரபாலா வவுனியா, அநுராதபுரம், சேருவில் (திருகோணமலை) குடுவில் (அம்பாறை) ஆகிய இடங்களில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில், தமிழ் வணிகர் பற்றிக் கூறியிருப்பது, கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே இலங்கைத் தமிழர் தம்மை மொழியால் தனியொரு இனமாக அடையாளப்படுத்தியதற்கு சான்றாகும் எனக் கூறுகின்றார். இத் தனித்துவமான இலங்கைத் தமிழரிடையே அரச உருவாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்குப் பிராமிக் கல்வெட்டுகளிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

relationship

பாளி இலக்கியங்கள், பிராமிக் கல்வெட்டுகள் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு  இலங்கையில் தோன்றிய சிற்றரசர்கள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் குணவர்த்தனா அவற்றில் காணப்படும் ராஜ, மகாராஜா, கமணி, குடும்பிக முதலான பட்டப்பெயர்களை குறுநில அரசுகள் மற்றும் சிற்ரரசுகளுக்கு உரியவை என அடையாளப்படுத்தியுள்ளார். அப்பட்டப் பெயர்களின் அடிப்படையில், வடஇலங்கையிலும், தென்னிலங்கையிலும் ஏறத்தாழ 268 இற்கும் மேற்பட்ட சிற்றரசுகள் இருந்ததாக அவர் மேலும்  கூறுகின்றார் (Gunawardana 1985:1-39). ஆனால் இவற்றின் சமகாலத்திற்குரிய கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் பருமக, பருமகன் (பெருமகன்) பருமகள் (பெருமகள்) வேள், ஆய் முதலான பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவும், பிராகிருத மயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களாகவும் காணப்படுகின்றன. இவை பிராகிருத மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள ராஜ, மகாராஜா, கமணி, குடும்பிக முதலான பட்டங்களுக்குச் சமமாக தமிழில் பயன்படுத்தப்பட்ட பெயர்களாக உள்ளன (Sittrampalam,S.K. 1993, இந்திரபாலா,கா., 2006.). இப்பட்டப் பெயர்களுக்கு உரியவர்கள் குறுநில அரசன், பரதவ சமூகத்தின் தலைவன், குடும்பத் தலைவன், அரச தூதுவன், அரச அதிகாரி, குதிரை மேற்பார்வையாளன், வணிகன், நிதிசேகரிப்பாளன், வரி அறவிடுபவன், கிராம அதிகாரி முதலான பதவிகளில் (Paranavithana 1970, 1982) இருந்துள்ளமையை இக்கூற்றை மேலும் உறுதி செய்வதாக உள்ளது. அவற்றுள் வேள் என்ற பட்டப்பெயர் இவ்விடத்தில் சிறப்பாக நோக்கத்தக்கது.   

இலங்கையில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 27 பிராமிக் கல்வெட்டுகளில் வேள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது (Veluppillai 1980:12). இப்பெயர் சமகாலப் பாளி இலக்கியங்களிலும் கணப்படுகின்றன. தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளிலும், சங்க இலக்கியத்திலும், இப்பெயர் வேள், வேளீர் எனக் குறிப்பிடப்படுகின்றன. வேளீர் என்பது வேள் என்பதன் பன்மை வடிவமாகும். பேராசிரியர் ரோமிலா தாப்பர் வடமொழியில் ‘ராஜா’ என்ற பட்டப் பெயர் என்ன கருத்தைக் கொண்டுள்ளதோ, அதே கருத்தையே தமிழில் ‘வேள்’ என்ற பட்டமும் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார் (Thapar 1984:83). இலங்கை வரலாற்று மூலங்களில் இப் பட்டப் பெயர் பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களைக் குறிக்கும் பெயராகவே காணப்படுகிறது. இது தமிழகத்திற்குச் சமமான காலத்திலேயே இலங்கைத் தமிழரிடம் வேள் ஆட்சி தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அண்மையில் ‘பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம்’ என்ற தலைப்பில் கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண்ட தமிழ்நாட்டு தொல்பொருள் துறையின் ஆய்வாளர் திரு. பூங்குன்றன் தமிழக அரச உருவாக்கத்தில் வேள், வேளிருக்குரிய பங்களிப்பை விரிவாக விளக்கி, இதையொத்த அரச உருவாக்கம் சமகாலத்தில் இலங்கையிலும் இருந்துள்ளது என்பதற்கு, இங்கு காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் வேள் என்ற பெயரை ஆதாரங்களாகக் காட்டியுள்ளார் (பூங்குன்றன், 1999).  

சங்க இலக்கியத்தில் 2,400 பாடல்களில் 20 இற்கும் குறைவான பாடல்களில் வேள், வேளிர் பற்றிப் பேசப்படுகிறது. ஆயினும் இப்பெயர், குறிப்பிட்ட குடித்தலைவர்களை மட்டுமன்றி, சமூகத்தில் செல்வாக்கு மிக்க பிற தலைவர்களையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையே இலங்கைப் பிராமிக் கவ்வெட்டுகளில் வேள் என்ற பெயருக்குரியவர்கள் வகித்த பலதரப்பட்ட பதவிகளும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் வேள் என்ற பெயரை ஆநிரை கவர்தலில் தலைமை வகித்த தலைவர்களும், வணிகத் தலைவர்களும் பயன்படுத்தியதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இலங்கையிலும், இப் பட்டப்பெயரை குதிரை வணிகர்கள், குதிரை மேற்பார்வையாளர்கள் கொண்டிருந்தமைக்குப் பிராமிக் கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன (புஸ்பரட்ணம் 2003). சங்க இலக்கியத்தில் வேள், வேளிர் தொல் குடியினராகவும், போர் மறவர்களாகவும் பல இடங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளனர். இவங்கையில் கேகாலை மாவட்டத்தில் உள்ள பிராமிக் கல்வெட்டு ஒன்றில் ‘கொடயவேள்’ என்ற சொல் காணப்படுகிறது. ‘கொடய’ என்பதை கோட்டை என மொழிபெயர்த்த பேராசிரியர் பரணவிதான, இச் சொல்லின் மூலம் வடமொழியில் ‘கொஸ்டிகா’ எனக் கூறி, ‘கொடயவேள்’ என்ற சொல்லுக்கு கோட்டையின் படைத்தளபதி வேலு என விளக்கம் கொடுத்துள்ளார் (Paranavithana 1970 : no. 778). வேலு என்பதை தமிழ்ச் சொல்லான வேள் எனக் கூறும் பேராசிரியர் வேலுப்பிள்ளை, கொடய என்ற பிராகிருதச் சொல் தமிழில் கோட்டை எனக் கூறி, இதன் பொருள் ‘கோட்டையின் படைத்தளபதி வேள்’ எனக் கூறுகின்றார் (Veluppillai, A., 1980:13). எல்லாளன் – துட்டகாமினி போராட்டத்தில் துட்டகாமினி படையிலிருந்த தளபதியாக ‘வேளுசுமண’ என்பவன் குறிப்பிடப்படுகிறான். இவ்வாறான தளபதிகள், தலைவர்கள் எல்லாளன் படையிலும் இருந்ததாகத் தெரிகிறது. ராஜவாகினி என்ற நூல், ‘வேளுசுமண’ என்ற ஒற்றன், சிங்கள இளவரசன்  காக்கவண்ணதீசனைச் சிறைப்பிடித்து அடிமையாக்குவதாக, எல்லாள மன்னனிடம் உறுதி கூறியதாகக் கூறுகிறது (Ellawala 1969 : 61). இங்கே வேள், வேளுசுமண என்ற பெயர்கள் படைத்தளபதியாக கூறப்படுவது, சங்க இலக்கியத்தில் வேள், வேளிர், போர் மறவர்களாக வர்ணிக்கப்படுவதை நினைவுபடுத்துவதாக உள்ளது.

சங்க இலக்கியத்தில் வரும் வேள்கலி நாடு, வேள் நாடு, வேளிர் என்பன வேள் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடு, ஊர் எனக் கூறப்படுகின்றது. இது அரசியலிலும், சமூகத்திலும் செல்வாக்குப் பெற்ற தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சங்க காலத்திலேயே பெயரிடப்பட்டதைக் காட்டுகிறது. இம்மரபு இலங்கையில் இருந்ததற்குப் பாளி இலக்கியங்களிலும், பிராமிக் கல்வெட்டுகளிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள், மகாவம்சத்தில் இலங்கையில் இருந்த வேள் நாடு பற்றிக் கூறப்பட்டுள்ளமை, முக்கிய அம்சமாகக் குறிப்பிடத்தக்கது. அக் குறிப்பு பாளி மொழியில் ‘வெளோஜானபதொதஸிய’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (Mahavamsa V. XIII:69). இதன் பொருள் ‘அவர்களது வேள், அவர்களது நாடு’ என்பதாகும் (பூங்குன்றன் 1999:79). மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமிக் கல்வெட்டு ஒன்று ‘வேள் கிராமம்’ என்ற பெயரிலிருந்த இடம் பற்றிக் கூறுகிறது  (Paranavithana 1970 : no.78). இவ்வாதாரம் சங்காலத் தமிழகத்தைப் போல் ‘வேள்’ என்ற குறுநில மன்னனின் அல்லது இனக்குழுத் தலைவர்களின் பெயரில் இலங்கையிலும்  இடப்பெயர்கள் தோன்றியிருந்ததைக் காட்டுகின்றது. 

பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களும் தமிழ்ச் சிற்றரசர்களும்

இலங்கைத் தமிழரிடையே தமிழ் அரச மரபு தோன்றி இருந்ததை மேலும்  உறுதிப்படுத்துவதில் அண்மையில் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நாணயங்களில் இருந்து  அவை வெளியிடப்பட்ட காலத்து எழுத்து, மொழி, மதம், ஆட்சியாளரின் பெயர், ஆட்சி செய்த இடம் முதலான உண்மைகளைக் கண்டுகொள்ள முடிகின்றது. 1999 இல் தென்னிலங்கையில் ‘அக்குறுகொட’ என்ற இடத்தில் வீடு கட்டுவதற்கு அத்திவாரம் வெட்டிய போது பிராமி எழுத்துப் பொறித்த பல ஈய நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் சில நாணயங்களின் எழுத்துகளை மட்டும் தெளிவாக வாசிக்க முடிகின்றது. வாசிக்க முடிந்த நாணயங்கள் கி.மு. 3 – 1 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதை நாணயங்களின் எழுத்தமைதி கொண்டு உறுதிப்படுத்த முடிகிறது. தமிழகத்தில் பிராமி எழுத்துப் பொறித்த பல நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்நாணயங்களின் பின்பக்கத்தில்  சங்க கால அரச வம்சங்களின் அரச இலட்சனையான மீன், புலி, அம்பு – வில் முதலான  சின்னங்கள்  இடம்பெற்றுள்ளன. ஆனால் தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களின் முன்பக்கத்தில் அவற்றை வெளியிட்ட சிற்றரசர்களின் பெயர்களும், நாணயங்களின் பின்பக்கத்தில் பலவகைச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வேறுபாடுகள் இந்நாணயங்கள் இலங்கையில் வெளியிடப்பட்டவை என்பதை உறுதிசெய்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்துவதாக இந்நாணயங்களுக்குரிய சுடுமண் அச்சுகள் சிலவும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்நாணயங்களை ஆய்வு செய்து பின்னர் அவற்றை ஒரு நூலாக வெளியிட்ட  பேராசிரியர் ஒஸ்மோன் பொபேயாராய்ச்சி மற்றும் ராஜா விக்கரமசிங்கே அந்நூலில் உள்ள இரண்டு நாணயங்களில் தமிழ் மொழிக்குரிய ‘ன’ என்ற எழுத்தும் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தனர் (Bopearachchi, O. and Wickremesinghe, W., 1999). 

பின்னர் அந்நூலில் பிசுரிக்கப்பட்ட நாணயங்களின் புகைப்படங்களையும் சில நாணங்களின் மாதிரிகளையும் அவர்களிடம் இருந்து பெற்று, ஆய்வு செய்த நாம் பல நாணயங்களில் தமிழுக்குரிய சிறப்பெழுத்துகளையும், தமிழ்ப் பெயர்களையும் அடையாளப்படுத்த முடிந்தது. அவற்றுள் உதிரன், கபதிகஜபன், மகாசாத்தன், தஜபியன், திசபுரசடணாகராசன் முதலான பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்நாணயங்களில் தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான ‘ன’ என்ற எழுத்துப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், அவ்வெழுத்து தமிழில் ஆண்பாலைக் குறிக்கும் ‘அன்’ என்ற விகுதிப் பெயரின் பின்னொட்டாக நாணயங்களில் இடம்பெற்றுள்ளது (Pushparatnam.P., 2002). இந்நாணயங்கள் பற்றிய வாசிப்பு பொருத்தமானது என்பதைத் தமிழக சாசனவியல் அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொண்ட நிலையில், ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்நாணயங்களின் வாசிப்பு தொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார். இந்நாணயங்களில் இருந்து கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியும் இருந்துள்ளமை தெரிவந்துள்ளது.

இங்கு கிடைத்த நாணயம் ஒன்றில் ‘திசபுரசடணாகராசன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பாக நோக்கத்தக்கது. இதில் வரும் ‘அரசன்’ என்ற சொல் தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதச் சொல்லாக இருக்கலாம். இச்சொல் தமிழகத்திற்கு முன்னோடியாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டதற்கு இந்நாணயம் சிறந்த சான்றாகும். நாணயத்தில் வரும் வாசகத்தின் பொருள், திசபுரம் என்ற இடத்தில் ஆட்சி புரிந்த சடணாகராசன் என்ற அரசனால் இந்நாணயம் வெளியிடப்பட்டது என்பதாகும் (Ibid). இந்த இடத்தில் பாளி இலக்கியங்களில் வரும் குறிப்பொன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் நடந்த எல்லாளன் – துட்டகாமினி போராட்டம் பற்றிக் கூறும் மகாவம்சம், துட்டகாமினி என்ற மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றி கொள்வதற்கு முன்னர் தெனனிலங்கையில் ஆட்சிபுரிந்த 32 தமிழ்ச் சிற்றரசர்களை வெற்றி கொள்ள நேரிட்டதாகக் கூறுகிறது. இக்கூற்று தென்னிலங்கையில்  தமிழ்ச் சிற்ரரசர்களின் ஆட்சி இருந்ததற்கு ஆதாரமாகக் காணப்படுகிறது (Mahavamsa., XXV:25). அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்து, தமிழ் மொழி என்பவற்றின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் பிராமிக் கல்வெட்டுகளும், தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்ட மட்பாண்ட சாசனங்களும் தென்னிலங்கையில் கிடைத்து வருவதையும் இங்கு குறிப்பிடலாம் (புஸ்பரட்ணம் 2003 : 42- 58).

தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களின் சமகாலத்தில் வடஇலங்கையிலும் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டதற்கு கந்தரோடை, பூநகரி, உடுத்துறை முதலான இடங்களில் சான்றாதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் கந்தரோடை, பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த ஈய நாணயங்கள் தேய்வடைந்த நிலையில் காணப்பட்டாலும் அவை தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டவை என்பதை அடையாளம் காணமுடிகிறது (Pushparatnam, P.,202). இந்நிலையில் தமிழக நாணயவியலாளர் ஆறுமுக சீதாராமன், கந்தரோடையில் கிடைத்த நாணயத்தில் உள்ள எழுத்துப் பொறிப்பை ‘ஹபதிகன’ என வாசித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உடுத்துறையில் கிடைத்த செப்பு நாணயம் கி.பி. 1 ஆம், 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதன் முன்பக்கத்தில் உள்ள பெயரைப்  பேராசிரியர் சுப்பராயலு நாகவம்சம் எனவும், ஐராவதம் மகாதேவன் நாகபூமி எனவும் வாசித்துள்ளனர். சமகால இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில்  ‘நாஹ’ என எழுதப்பட்ட இப்பெயர், இந்நாணயத்தில் தமிழில் நாக என எழுதப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் வடஇலங்கை பாளி மொழியில் நாகதீப(ம்), எனவும் தமிழில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்டன. இதனால் நாணயத்தில் வரும் பெயர் நாக வம்சத்தை அல்லது வடஇலங்கையைக் குறித்திருக்கலாம். நாணயத்தின் பின் பக்கத்தில் ‘பொலம்’ என்ற சொல் காணப்படுகிறது. சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் ‘பொல’ என எழுதப்பட்ட இச்சொல் நாணயத்தில் ‘பொலம்’ என எழுதப்பட்டுள்ளது. பொல, பொலம் என்ற சொல் உயர்ந்தவன், பொன், செல்வம் என்பதைக் குறிக்கிறது. இப்பெயர் நாணயத்தில் வருவதால் இந்நாணயத்தை வெளியிட்டவன் உயர்ந்தவன் என்பதைக் குறிக்கலாம். 

முடிவுரை

பாளி இலக்கியங்கள் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த தொடக்ககாலத் தமிழ் மன்னர்களை சோழ, பாண்டிய நாடுகளுக்குரிய அந்நிய நாட்டவர்கள் எனக் கூறியிருந்தாலும், அப்பாளி இலக்கியங்களிலும், சமகாலப் பிராமிச் சாசனங்களிலும் இலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி பற்றியும், தமிழகப் படையெடுப்புகள் இன்றி அநுராதபுர அரசில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன. இதனால் அநுராதபுர அரசில் ஆட்சிபுரிந்த அனைத்துத் தமிழ் மன்னர்களையும் இன்னொரு நாட்டிலிருந்து வந்தவர்கள் எனக் கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. மாறாக, அவர்களை இலங்கைக்குரிய தமிழ் மன்னர்களாகக் கொள்வதே பொருத்தமாகும். ஏனெனில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாடுகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியதற்கு உறுதியான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழக வரலாற்று மூலங்கள் எதிலும் இலங்கையுடனான அரசியல் உறவுகள் பற்றி கூறப்படவில்லை. காதலையும், வீரத்தையும் பெருமளவுக்கு போற்றிப் பாடும் சங்க இலக்கியம் மூவேந்தர்களுக்கிடையிலான போர்கள் பற்றியும், போரில் வெற்றி பெற்ற மன்னர்களின் வீரத்தைப் பற்றியும் போற்றிப் பாடுகிறது. சற்றுப் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துச் சென்ற வரலாற்றைப் பெருமைபடக் கூறுகிறது. இந்நிலையில், இலங்கையுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தக, பண்பாட்டு தொடர்புகளைக் கூறும் இவ்விலக்கியங்களில் இலங்கையுடனான அரசியல் உறவு பற்றியோ, இலங்கை மீதான படையெடுப்புக்கள் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. அவ்வாறான அரசியல் தொடர்புகள், படையெடுப்புகள் இருந்திருந்தால் அவை பற்றிய செய்திகளும் இவ்விலக்கியங்களிலும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், இலங்கையிலும் தமிழகத்திலும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடனேயே அரச உருவாக்கம் தோற்றம் பெற்றதைத் தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. தமிழகத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகள் ஓரளவு பலமான அரசுகளாக எழுச்சி பெற்றிருந்தாலும், அதன் சமகாலத்திலும் அதற்கு முன்னரும் 200 இற்கும் மேற்பட்ட இனக்குழுத் தலைவர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியோரின் ஆட்சி இருந்ததையும், அவர்களுக்கிடையே ஆள்புல அதிகாரம் காரணமாக போராட்டங்கள் நிகழ்ந்ததையும் பழந்தமிழ் இலக்கியங்களும், பிராமிச் சாசனங்களும் உறுதிசெய்கின்றன. சமகால இலங்கையில் அநுராதபுரம் பலமான அரசாக எழுச்சிபெற்ற போதும், அதற்கு வடக்கிலும், தெற்கிலும் பல சிற்றரசர்களின் ஆட்சி நடைபெற்றதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அச் சிற்றரசர்களுள் பலமான சிற்றரசுககளின் ஆட்சியாளர்களே பின்னர் அநுராதபுர அரசின் மன்னனாக வந்ததற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வாதாரங்கள் தமிழக – இலங்கை அரச உருவாக்கம், அதன் வளர்ச்சி, படை பலம் என்பன ஏறத்தாழ ஒரே நிலையில் வளர்ந்து சென்றதைக் காட்டுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த மூவேந்தர்கள் அல்லது சிற்றறரசர்கள் தமிழகத்தின் இயற்கை எல்லையைத் தாண்டி, இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்யும் அளவுக்குப் பலமான நிலையில் இருந்தார்கள் எனவும் கூறமுடியாது.   

மேலும் பாளி இலக்கியங்களில் குறிப்பிடுகின்ற அநுராதபுர காலத்து தமிழ் மன்னர்களது பெயர்களுக்கும், சமகாலத்தில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்த சங்ககால மன்னர்கள், குறுநில மன்னர்களது பெயர்களுக்கும் இடையே பெயரடிப்படையிலும் ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை. சில அறிஞர்கள், அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த பழையமாற, பிழையமாற ஆகிய மன்னர்களது பெயர்களுக்கும் சங்ககாலப் பாண்டிய மன்னர்களது பெயர்களுக்கும் இடையே ஒற்றுமை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இப்பெயர்கள் தமிழக அரச வம்சங்களிடையே புழக்கத்திலிருந்த பெயர்களைக் காட்டிலும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளிலும், பாளி இலக்கியங்களிலும் வரும் பெயர்களையே பெரிதும்  ஒத்ததவையாக உள்ளன.

அநுராதபுர அரசின் தொடக்க காலத்தில் பெரிதும் புழக்கத்தில் இருந்த சதுரவடிவிலான நாணயங்கள், வடிவமைப்பில் சங்ககால மூவேந்தர் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இந்த ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு இந்நாணயங்கள் தமிழகத்துடன் இருந்த அரசியல், வாணிபத் தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்நாணயங்கள் ஒன்றுதானும் தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவத்தை அரச இலச்சனையாகக் கொண்ட இந்நாணயத்தின் பின்பக்கத்தில், மூவேந்தர் பயன்படுத்திய அரச இலட்சனைகள் காணப்படவில்லை. அதற்கு மாறாக சதுரக் கோடும், அதற்குள் வட்டமும், வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு புள்ளிகளும் காணப்படுகின்றன. இதே பின்பக்கச் சின்னங்களுடன் கூடிய சதுர நாணயங்களின் முன்பக்கத்தில், சிங்க உருவமுள்ள நாணயங்களும் சமகாலத்தில் அநுராதபுர அரசில் புழக்கத்தில் இருந்துள்ளன. இவற்றை வசபன் போன்ற சிங்கள மன்னர்கள் வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. இதனால் காளை உருவம் பொறித்த தமிழ் நாணயத்தை அநுராதபுர அரசில் ஆட்சியாளனாக இருந்த எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகத் தெரிகின்றது. இவ்விரு வகை நாணயங்களின் பின்பக்கத்தில் ஒரே வடிவிலான சின்னங்கள் இடம்பெற்றுள்ளமைக்கு, அவை  அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறித்ததனெக் கருதுவதற்கு இடமுண்டு. 

மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து இலங்கைத் தமிழரின் அரச உருவாக்கம் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதெனக் கூறமுடிகின்றது. ஆரம்பத்தில் தலைவர்களாக, குறுநிலத் தலைவர்களாக இருந்து அதிகாரம் செலுத்திய இவர்கள் காலப்போக்கில் சிற்றரசர்களாக வளர, அவர்களில் ஆட்சிப் பரப்பால் பலம் பெற்ற சிங்களச் சிற்றரசர்கள் அநுராதபுர ஆட்சியாளர்களாக மாறினர். இப்பின்னணியிலே சேனன், குத்திகன், எல்லாளன், புலகத்தன், பாகியான், பணயமாறன், பிழையமாறன், தாடிகன், வடுகபன், நீலியன் முதலான தமிழ் மன்னர்கள் அநுராபுர இராசதானின் ஆட்சியாளர்களாக மாறிய வரலாற்றைப் பார்ப்பது பொருத்தமாகும். 

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்

  1. இந்திரபாலா,கா, 2006, இலங்கையில் தமிழர் – ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  2. புஷ்பரட்ணம்,ப.,1993, பூநகரி – தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
  3. …..1999, “தென்னிலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் – ஒரு வரலாற்று நோக்கு ” நாவாவின் ஆராய்ச்சி, இதழ். 49, சென்னை : 55 – 70.
  4. ……2003, “உடுத்துறையில் கிடைத்த அரிய தமிழர் நாணயங்கள்”, ஆவணம், இதழ். 14, தமிழகத் தொல்லியற் கழகம், தஞ்சாவூர் : 116 – 119. 
  5. ….2004, தமிழ் எழுத்தின் தோற்றம் – ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு , யாழ்ப்பாணம். 
  6. பூங்குன்றன்,ஆர்., 1999, “பண்டைய தமிழகத்தில் அரச உருவாக்கம்”, முனைவர் பட்டத்திற்காக தஞ்சைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வேடு, தஞ்சாவூர்.
  7. Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhuna an Ancient Civilization Revisited, -Numismatic and Archaeological Evidence on Inland and Maritime Trade, Nugegoda – Colombo. 
  8. Champakalakshmi, R., 1975, Archaeology and Tamil Literary Tradition in Puratattva, 8:110-122.
  9. Conigham,Robin., 1999, Passage to India? Anuradhapura and the Early Use of Brahmi Script in Cambridge Archaeological Journal .6(1): 73-97. 
  10. Deraniyagala, S.U., 1992, The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Department of Archaeological Survey, Colombo.
  11. Gunawardana, R.A.L.H,1977, Prelude to the State an Early Phase in the Evolution of Political Institutions in Ancient Sri Lanka in The Journal of the Humanities, University of Peradeniya, VIII(1-2): 1-39.
  12. Mahadevan,I., 2010.  “An Epigraphic Perspective on Antiquity”, The Hindu, on 24th June, Chennai.
  13. Mahavamsa, 1950, (e.d) Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.
  14. Michener, M 1998, The Coinage and History of Southern India, Hawakins Publication.
  15. Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo,I.
  16. ………1983,Inscription of Ceylon: Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa, and II [1].
  17. Pushparatnam.P., 2002, Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Chennai.
  18. ………2014, “Tamil Brahmi Inscription Belonging 2200 years ago, Discovered by German Archaeology Team in Southern Sri Lanka” in Jaffna University International Conference, 541-545.
  19. Rajan.,K. Archaeology of Tamil Nadu, (Kongu Country) Book, Indian Publication Co, Delhi.
  20. Ragupathy, P., 1987, Early Settlements in Jaffna: An Archaeological Survey, Mrs.Thillimalar, Ragupathy, and Madras.
  21. Seneviratne, S., 1984, The Archaeology of the Megalithic – Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 5:237-307.
  22. ……,1985, The Baratas: A Case of Community Integration in Early Historic Sri Lanka in Festschrift 1985 James Thevathasan Ratnam, [E.d], Amerasinghe, A.R.B., Colombo: 49-56.
  23. Sittampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka : An Interdisciplinary Perspective in Journal of the Institute of Asian Studies, VIII [1]: 1-8.
  24. ………..The Parumakas of the Sri Lankan Brahmi Inscriptions in Kalvettu, Tamil Nadu Archaeological Department, 29:19-28.
  25. Subrayalu,Y., 1984, Vallam Excavation in Tamil Civilization, Vol.2.No.4.
  26. Thapar, Romila., 1995, [e.d], Recent Perspectives of Early Indian History, Popular Prakashan, Bombay. 
  27. Veluppillai, A., 1980 Epigraphic Evidences for Tamil Studies, Publisher International Institute of Tamil Studies, Madras.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5304 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)