ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின
ஒற்றையாட்சி அரசு (Unitary State), ‘நேஷன் ஸ்டேட்’ (Nation State) என்பன நவீன அரசியல் கோட்பாடுகள் சார்ந்த அரசறிவியல்துறை எண்ணக்கருக்கள் (Concepts) என்பதையும், நவீனத்துக்கு முந்தியகால அரசுகளை ஒற்றையாட்சி முறையில் அமைந்த நேஷன் ஸ்டேட்ஸ் (Nation State) என விளக்கம் கூறுவது வரலாற்றுத் திரிபு என்பதையும் பேராசிரியர் செனிவிரத்தின விளக்கிக் கூறியிருப்பதை இக்கட்டுரையின் முதலாம் பகுதியில் எடுத்துக் கூறினோம். 2500 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சிங்கள – பௌத்த அரசு இருந்து வந்தது என்றும், அனுராதபுரத்தின் அரசர்கள் இலங்கை முழுவதையும் ‘ஒரு குடைக்கீழ்’ ஆண்டு வந்தனர் என்றும் கூறுவது ஆதாரமற்ற கற்பனை, வரலாற்றுத் திரிபு என்பதை பேராசிரியர் ஆசிய நாடுகள் சிலவற்றின் வரலாற்று உதாரணங்களை எடுத்துக்காட்டி விளக்கியிருந்தார். இவ்விரண்டாம் பாகத்தில் அனுராதபுர அரசின் இயல்பு குறித்த விவாதம் ஒன்றைப் பற்றி அவர் கூறியிருப்பனவற்றை எடுத்துக் கூறவுள்ளோம்.
‘இலங்கைத் தீவு 2500 சதுர மைல் பரப்பளவுள்ள சிறிய தீவு. இத்தீவின் ஒரு பகுதியான வன்னிப் பிராந்தியத்தை இன்று (இக்கட்டுரை எழுதப்பட்ட ஆண்டான 2002 இல்) விடுதலைப் புலிகள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆணை அவர்களின் பிடியில் உள்ள பகுதியில் செல்லுபடியாகாது என்ற நிலை உள்ளது. போக்குவரத்து வசதிகள் முன்னேற்றமடைந்ந இந்த நவீன காலத்தில் இந் நிலை இருக்கின்றதென்றால் பண்டைய காலத்தில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்ட அரசர்கள் வடபகுதி உட்பட்ட இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் கட்டியாண்டார்கள் என்று கூறுவது நம்பக்கூடிய விடயமா என்ற வினாவை (பக்கம் 7) செனிவிரத்தின முன்வைக்கிறார்.
பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த மன்னர்களின் ஆணைக்கு உட்பட்டதாக இலங்கையின் வட பகுதி இருந்தது என்று கூறுவது சடங்கியல் அர்த்தத்தில் (Ritual Sense) உண்மையாக இருக்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் உள்ளூர் மக்கள் சமூகங்களிடமும், அச் சமூகங்களின் தலைவர்களிடமும் (Chieftains) இருந்திருத்தல் வேண்டும் என்பதே நியாயமான ஊகமாகும் என்ற கருத்தைச் செனிவிரத்தின அவர்கள் அழுத்திக் கூறுகிறார்.
அனுராதபுரத்தை ஆட்சி செய்த ஆளும் குழுவை (Ruling Class) ‘சிங்கள’ என்ற மொழி அடையாளத்தால் குறிப்பிட்டமைக்கு 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டகால நூல்களில் சான்றுகள் கிடையாது என்று ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன (R.A.L.H. Gunawardana) ‘சிங்கத்தின் மக்கள்’ (PEOPLE OF THE LION) என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டார். இக்கட்டுரை 1984 ஆம் ஆண்டில் இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் (Social Scientist Association – SSA) வெளியிடப்பட்ட ‘ETHNICITY AND SOCIAL CHANGE IN SRI LANKA – 1984 என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. பெரும் விவாதத்திற்குக் காரணமாக இருந்த இக் கட்டுரையில் அவர் கூறிய முக்கியமான கருத்துகள் சிலவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமானது. அனுராதபுரத்தை ஆட்சிசெய்த ஆளும் குழு 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டகாலத்தில் ‘சிங்கள’ என்ற மொழி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை என்று குணவர்த்தன கூறியிருப்பதன் பொருள் ‘சிங்களம்’ என்ற மொழி அடையாளம் 12 ஆம் நூற்றாண்டு வரை அனுராதபுரத்தில் வாழ்ந்த எல்லா மக்களையும் உள்ளடக்கும் அடையாளமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதாகும். சிங்கள மொழி ஆளும் குழுவான சிறு குழுவினரின் மொழியாக அக்காலத்தில் இருந்துள்ளது. அனுராதபுரச் சமூகம் அக்காலத்தில் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அச் சமூகத்தில் சிங்கள மொழியைப் பேசும் பல குழுக்கள் இருந்தன. உதாரணமாகக் கைவினைஞர் (Craftsmen) சமூகத்தினரும் விவசாயத்தைச் செய்பவர்களாகவும் சிங்கள மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். ஆயினும் ‘சிங்கள’ என்ற அடையாளத்தில் இருந்து கைவினைஞர்கள் அக்காலத்தில் விலக்கி வைக்கப்பட்டனர். சமூகத்தின் உயர்குழுவான (Elites) ஆளும் குழுவே ‘சிங்கள’ என்ற அடையாளத்தைத் தமக்கே உரியதாக வைத்திருந்தது.
இக்காரணத்தால் இலங்கை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சிங்கள மொழி, அம்மொழியைப் பேசும் அனைவரையும் குறிக்கும் அடையாளமாக இருக்கவில்லை. தமக்குரிய அடையாளமாகவும், பிறரை அவ்வடையாளத்தில் இருந்து விலக்கி வைத்ததுமான சிறு சமூகக் குழுவை குணவர்த்தன அவர்கள் ‘ஆளும் வர்க்கம்’ (Ruling Class) எனக் குறிப்பிட்டார்.
‘சிங்கள’ என்பது பொது அடையாளமாக உருவாக்கம் பெற்றிருக்கவில்லை எனக் குணவர்த்தன கூறியிருப்பதைக் குறிப்பிட்டோம். அக்காலத்தில் பௌத்தர்கள் (Buddhist) என்ற அடையாளம் ‘சிங்கள’ என்பதைவிடச் சிக்கலானதாக இருந்தது. ‘சிங்கள’ என்ற அடையாளம் உடையவராய் இருந்த சிங்கள மொழி பேசுபவர்களில் பலர் பௌத்தர்கள் அல்லாதவராய் இருந்தனர். அத்தோடு ‘சிங்கள’ மொழி பேசாதவர்களான பிறமொழி பேசும் குழுவினர் பௌத்தர்களாகவும் இருந்தனர். இக்காலத்து நிலை அனுராதபுரக் காலத்து நிலையை விட வேறானது என்பது கவனிக்கத்தக்கது. இன்று இலங்கையில் ஒருவரை பௌத்தர் என அடையாளம் கண்டால் அவர் சிங்களவராகத்தான் இருப்பார் என்ற நிலை உள்ளது. அதாவது ‘சிங்கள – பௌத்தர்’ என்ற அடையாளம் இன்று வாழ்வியல் உண்மை. அனுராதபுரக் காலத்தில் அப்படியிருக்கவில்லை. குணவர்த்தன அவர்களின் கருத்துப்படி ‘சிங்கள’ என்ற அடையாளம் முதலில் ஆளும் சிறு குழுவான உயர்குழுவின் அடையாளமாக இருந்தது. இவ்வடையாளம் பின்னர் படிப்படியாக அனுராதபுர இராச்சியத்தின் மக்களை (People of the Kingdom) உள்ளடக்கிய அடையாளமாக மாறியது. பௌத்தர் என்ற அடையாளம் ‘சிங்கள’ என்பதனோடு ஒருங்கிணைவதாக அக் காலத்தில் இருக்கவுமில்லை.
துட்டகைமுனு – எல்லாளன் யுத்தம்
துட்டகைமுனு – எல்லாளன் யுத்தம் பற்றி தேசியவாத வரலாற்றாசிரியர்களின் எழுத்துகள் அனுராதபுரக் காலத்துச் சமூக அரசியல் நிலைமைகள் பற்றிய தவறான கருத்துகளை மக்களிடையே உருவாக்கியுள்ளன. அக்காலத்தில் சிங்கள இனக்குழுமம், தமிழ் இனக்குழுமம் என்று இருவேறு குழுமங்கள் தெளிவான மொழி, சமய அடையாளங்களுடன் வளர்ச்சி பெற்றிருந்தன என்பது ஆதாரமற்றது. மகாவம்சத்தை தவறான முறையில் வாசிப்புச் செய்து இவ்வாறு ஒரு பொய்மையைத் தேசியவாத வரலாறு உருவாக்கியுள்ளது. துட்டகைமுனு – எல்லாளன் யுத்தத்தில் துட்டகைமுனுவிற்கு எதிராகப் போரிட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர். துட்டகைமுனு எல்லாளனை எதிர்கொண்டு போரிடுவதற்கு முன்னர் 32 ஆட்சியாளர்களுடன் போரிட்டு அம்மன்னர்களைப் போரில் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் உண்மை யாதெனில், 32 தனித்தனியான சுதந்திரமான சிறிய இராச்சியங்கள் இருந்தன. அந்த இராச்சியங்களின் மன்னர்களைத் துட்டகைமுனு தோற்கடித்தான் என்பதாகும். 32 வெவ்வேறு அதிகார மையங்கள் (Power Centres) இருந்தன. அவை யாவற்றையும் வெற்றிகொண்ட துட்டகைமுனு அவற்றை ‘ஒரு குடைக் கீழ்’ (One Umbrella) கொண்டுவந்தான். இதன் பொருள், அவற்றையெல்லாம் அழித்து ஒன்றுபடுத்தல் (Unification) என்பதன்று. வரலாற்றுப் பாட நூல்கள் ‘ஒரு குடையின் கீழ்’ என்பதை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட அரசாட்சியை துட்டகைமுனு நிறுவியதாகச் சித்தரித்துள்ளன. குணவர்த்தன அவர்களின் விளக்கத்தின்படி அனுராதபுரப் பிராந்தியத்தில் பல சிற்றரசுகள் இருந்து வந்தன. பல அதிகார மையங்கள் இருந்தன. அவற்றுள் ஒரு சிற்றரசாகவிருந்த தேவநம்பியதீசனின் அரசு, பிற சிற்றரசுகளை விடச் செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. அவ்வரசின் செல்வாக்கு சடங்கியல் இறைமை (Ritual Sovereignty) சார்ந்ததாகும். இக்கட்டுரையின் முதற்பகுதியில் J.M. ஹல்லிக் (J.M. Gullick) மலாயாவின் அரசு முறையைப் பற்றியும் எஸ்.ஜே. தம்பையா தாய்லாந்து அரசுமுறை பற்றியும் கூறியிருப்பனவற்றை விவரித்துக் கூறினோம். அனுராதபுரத்தின் அரசுமுறை மலாயா – தாய்லாந்து ஆகியவற்றின் அரசுமுறைகளை ஒத்த ‘மண்டல அரசு’ (Galactic Polity) ஆகவே இருந்தது எனலாம். பிராமிக் கல்வெட்டுகளிலும், மஹாவம்சம் போன்ற நூல்களிலும் கிடைக்கும் தகவல்கள் இவ்வுண்மைக்குச் சான்றாக விளங்குகின்றன. துட்டகைமுனு – எல்லாளன் யுத்தம் பற்றிய வரலாற்றுத் தகவல்களின் மீளாய்வு அனுராதபுர அரசுருவாக்கம் பற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்துவன.
பௌத்த அடையாளம்
அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்களின் பௌத்த அடையாளம் பற்றிய தப்பெண்ணங்கள் பல உள்ளன. தென்னிந்தியாவில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் (Invaders) பௌத்த சமயத்திற்கு அழிவை ஏற்படுத்தினர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை என குணவர்த்தன கூறுகிறார். இலங்கைக்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்களில் பலர் பௌத்த சமயத்தினை ஆதரித்தவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் ‘புத்ததாச’ ஆகும். ‘புத்ததாச’ என்பதன் பொருள் புத்தரின் சேவகன் என்பதாகும்.
தென்னிந்தியாவில் சைவ – வைணவ எழுச்சிக் காலத்தில் பௌத்தம், சமணம் ஆகிய இரு சமயங்களுக்கும் எதிரான தீவிரவாதம் தோன்றியது. அதற்குப் பின்னரே இலங்கையின் பௌத்தர்கள் தமிழர்களைப் பகைமை உணர்வோடு, பௌத்தத்தின் எதிரிகளாகப் பார்த்தனர். இத்தகைய வெறுப்புணர்வு வளர்ச்சிபெறத் தொடங்கியதன் பின்னரே ‘சிங்கள’ அடையாளத்தின் பிரிக்க முடியாத அங்கமாக ‘பௌத்தம்’ என்ற அடையாளம் சேர்ந்துகொண்டது.
‘சிங்கள’ அடையாள உருவாக்கம் பற்றிய விவாதம்
‘சிங்கள’ அடையாளம் (Sinhala Identity) என்ற அடையாளம் வளர்ச்சியுற்றமை பற்றி குணவர்த்தன அவர்கள் ‘THE PEOPLE OF THE LION’ (சிங்கத்தின் மக்கள்) எனும் கட்டுரையில் கூறிய கருத்துகள் இலங்கையின் அறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியது. K.N.O. தர்மதாச என்ற பேராசிரியர் குணவர்த்தனவின் கட்டுரையை விமர்சித்து ஒரு ஆய்வுரையை எழுதினார். K.N.O. தர்மதாச பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களத் துறையில் பேராசிரியராக இருந்தவர். அவர் எழுதிய கட்டுரை ‘PEOPLE OF THE LION : ETHNIC IDENTITY, IDEOLOGY AND HISTORICAL REVISIONISM IN CONTEMPORARY SRI LANKA’ என்ற தலைப்பில் அமைந்தது. இக்கட்டுரை 1989 ஆம் ஆண்டு SRI LANKAN JOURNAL OF HUMANITIES – NO 1, 2 (1989) என்னும் பருவ இதழில் பிரசுரிக்கப்பட்டது. குணவர்த்தனவின் ஆய்வுக் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், K.N.O. தர்மதாசவின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்த மானிடவியலாளர் ஸ்டான்லி ஜே. தம்பையா அவ்விடயம் பற்றிய தனது கருத்துரையை ‘பௌத்தத்திற்கு துரோகம்?’ (BUDDHISM BETRAYED?) என்ற தலைப்பிலான நூலில் கூறியிருந்தார். பேராசிரியர் எச்.எல். செனிவிரத்தின அதனை மேற்கோளாகத் தந்துள்ளார். குணவர்த்தனவும், தர்மதாசவும் ‘சிங்கள அடையாள உருவாக்கம்’ பற்றிய விடயத்தின் நுட்பவிபரங்கள் பலவற்றைக் கூறியிருந்தபோதும் ஒரு விடயத்தில் இரு பேராசிரியர்களும் ஒருமித்த கருத்துடையவர்களாகவே உள்ளனர் என செனிவிரத்தின குறிப்பிடுகிறார். குணவர்த்தன, தர்மதாச ஆகிய இரு அறிஞர்களின் கருத்துகள் தொடர்பாக எஸ்.ஜே. தம்பையா கூறியிருக்கும் முக்கிய கருத்துகள் பின்வருவன:
அ) குணவர்த்தனவும் தர்மதாசவும் ஒருவருக்கு ஒருவர் எதிரான நிலைப்பாட்டை எடுத்த போதும் அடையாள உருவாக்கம் (Identity Formation) படிப்படியான செயல்முறை என்ற கருத்தில் ஒருமித்த கருத்துடையவர்களாகவே இருக்கின்றனர்.
ஆ) ‘முழு நிறைவான சிங்கள – பௌத்த அரசு’ இலங்கை முழுவதையும் தழுவியதாக இருந்தது என்பது கற்பனை. இக் கற்பனையைப் பௌத்த சமயப் புராண நூல்களின் வரலாறு கூறுகின்றது. துட்டகைமுனு அரசன் இவ்வாறான சிங்கள – பௌத்த அரசை நாடு முழுமையையும் உள்ளடக்கியதாக அமைத்திருந்தான் என்றும் இவ் வரலாறு கூறுகின்றது. இவை ஆதாரமற்ற கற்பனைகளாகும்.
இ) ‘பௌத்தமயமாதல்’, ‘சிங்களமயமாதல்’ என்ற இரண்டு செயல்முறைகளும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் செயல்முறைகளாகும்.
சிங்கள – பௌத்த உணர்வு நவீனத்திற்கு முந்திய காலத்தில் படிப்படியாக உருவாக்கம் பெற்றது. அவ்வுணர்வு 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருந்தது. தென்னிந்தியாவில் தோன்றிய சைவ – வைணவ எழுச்சி, பௌத்த – சமண சமயங்களுக்கு எதிரான பகைமை உணர்வு ஆகியவற்றின் தாக்கத்தால், இலங்கையில் தமிழர்களை அந்நியர்களாகவும், ஆபத்தானவர்களாகவும் நோக்கும் போக்குக் காணப்பட்டமையும் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் ‘தமிழர் ஆபத்து’ தொடர்ச்சியான ஒரு அச்சுறுத்தலாக இருந்தது எனக் கூறமுடியாது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடியேறிய மக்கள் சிங்கள – பௌத்தப் பண்பாட்டுடன் இணைக்கப்பட்டு ஒன்றிக்கலந்து விடுதல் (Assimilation) என்னும் செயல்முறை இடம்பெற்றது. இவ்வாறு தென்னிந்தியாவில் இருந்து குடியேறியவர்களின் தமிழ் – சைவ – வைணவ பண்பாடுகள் இலங்கைச் சமூகத்தில் கலப்புறுதல் இடம்பெற்றதைக் குடியேற்றப் புராணப் புனைவுகள் (Colonisation Myths) எடுத்துக்காட்டுகின்றன. கஜபாகு மன்னன் 10,000 சோழப் படைவீரர்களைக் கைப்பற்றி இலங்கையில் குடியேற்றினான் என்பது இத்தகைய குடியேற்றப் புராணப் புனைவுகளில் ஒன்றாகும். இலங்கை வரலாற்றில் கோட்டை இராச்சியக் காலத்திலும், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறுதல், ஒன்றிக்கலத்தல் ஆகியன மூலம் கலப்புறுதல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்ற செயல்முறை என்பது தெளிவாகிறது.
இலங்கையின் வரலாற்றில் தென்னிந்தியக் குடியேற்றங்களிற்கான எதிர்வினையும், தாக்கமும் இரு வகையில் அமைந்தது:
1) குடியேறிகளை ‘சிங்களமயமாதல்’, ‘பௌத்தமயமாதல்’ என்னும் செயல்முறைகள் ஊடாக ஒன்றிக்கலக்கச் செய்தல். இது ஒரு வகையான எதிர்வினையாகும். இதனை ‘உள்ளீர்த்தல்’ (Inclusivism) எனவும் குறிப்பிடலாம்.
2) குடியேறிகளை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் காண்பது இன்னொரு வகை எதிர்வினையாகும். இதனை விலக்குதல் (Exclusivism) எனக் குறிப்பிடலாம்.
மேற்குறித்த இரு செயல்முறைகளில், மகாவம்சம், சூளவம்சம் போன்ற ‘வம்ச’ பனுவல்களில் விலக்குதல் என்னும் செயல்முறை மேலோங்கியிருந்தமையைக் காணமுடிகிறது. இலங்கையின் தேரவாத பௌத்த அரசு, அதிகாரக் கட்டமைப்புடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது. இந்தியாவின் தென்பகுதியில் பரவியிருந்த மகாயான பௌத்த நெறியையும், இந்து சமய வழிபாட்டு முறைகளையும் இலங்கையின் துறவிகளது ‘சங்க’ அமைப்பு கடுமையாக எதிர்த்தது. 13 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இலங்கை முழுவதையும் ஒன்றிணைந்த பிரதேச வெளியாக (Unitary Territorial Space) கட்டமைப்பதும், தமிழர்களை அந்நியர்களாகவும், சிங்கள – பௌத்த நலன்களுக்கு ஆபத்தானவர்களாகவும் சித்தரிப்பதுமான கருத்தியல்கள் பௌத்த இலக்கியப் பனுவல்களில் வெளிப்பட்டது. ஆயினும் சமகாலத்தில், இக் கருத்தியலுக்கு மாறான ‘உள்ளீர்த்தல்’ போக்கு (Inclusive Current) செயற்பட்டது. உள்ளீர்த்தல் செயல்முறையைத் தடுக்கமுடியவில்லை.
I) பொலநறுவையைக் கைவிட்டுத் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து, இலங்கையின் தென்பகுதிகளில் தம்மை பலப்படுத்திக் கொண்ட சிங்கள அரசுகளில் தென்னிந்தியாவின் தாக்கம் தடையற்றதாகத் தொடர்ந்தது.
II) மடாலயங்களைச் சேர்ந்த துறவிகளின் எழுத்துகளில் ‘தமிழரின் ஆபத்து’ (Tamil Threat) என்னும் விடயம் அழுத்திக் கூறப்பட்டதெனினும், அது ‘இராணுவப் படையெடுப்பு’ (Military Threat) பற்றிய ஆபத்து உணர்வு அல்ல என்பது கவனிக்கத்தக்கது. இத் துறவிகளின் எழுத்துகள் பண்பாடு, சமயம் என்பன தொடர்பான ஆபத்து பற்றியே கவலையையும், அச்சத்தையும் வெளியிட்டன.
III) ஆயினும் துறவிகளின் எழுத்துகளில் தென்னிந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளையும், சமயக் கூறுகளையும் உள்ளீர்த்து இணைத்துக்கொள்ளும் போக்கும் வெளிப்பட்டது. இலங்கைத் தீவு முழுவதிலும் சிங்கள – பௌத்த இறைமை இருந்து வந்தது என்ற மேலாண்மைக் கருத்துக்கு எதிரான உள்ளீர்த்தல் கொள்கையும் வெளியிடப்பட்டது. சிங்கள மேலாண்மைக் கருத்து சில சந்தர்ப்பங்களில் பலமாக ஓங்கி ஒலித்தது. வேறு சில சந்தர்ப்பங்களில் அது அடங்கிப் போனது. பகைமை உணர்வு வெளிப்படாத சந்தர்பங்களும் பல இருந்தன.
அநகாரிக தர்மபால
அநகாரிக தர்மபால 20 ஆம் நூற்றாண்டில் சிங்கள – பௌத்த அடையாளம் பற்றிய புதிய வரைவிலக்கணத்தைக் கொடுத்தார். அவரது வரைவிலக்கணம் காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களின் தாக்கத்தினால் உருவான கருத்தியலின்படி வடிவமைக்கப்பட்டது. நவீனத்திற்கு முற்பட்ட காலத்து சிங்கள – பௌத்த அடையாளத்திலிருந்து அநகாரிக தர்மபால கட்டமைந்த சிங்கள – பௌத்த அடையாளம் முற்றிலும் வேறுபட்டது.
சிங்கள – பௌத்த அடையாள உணர்வின் வளர்ச்சியோடு, சிறுபான்மை இனக் குழுமங்களையும் அரவணைத்து சிறுபான்மையினரின் சமயம், மொழி, பண்பாடு, ஆகியனவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையிலான பொதுவான தேசிய அடையாளத்தை (Broader National Identity) உருவாக்குவதற்கு அநகாரிக தர்மபாலவின் எழுத்துகளும் பேச்சுகளும் நடைமுறைகளும் தடையாக அமைந்தன. 20 ஆம் நூற்றாண்டின் கட்டமைக்கப்பட்ட சிங்கள – பௌத்த கருத்தியல் இலங்கையின் இன முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்தது. ஒற்றையாட்சி என்ற கருத்து, அதிகாரப் பகிர்வு மூலம் தமிழர்களின் அரசியற் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தடையாகவும் உள்ளது.
ஆதாரம்
இக்கட்டுரை ‘BUDDHISM, IDENTITY AND CONFLICT’ என்ற தலைப்பில் அமைந்த 29 பக்கங்களுடைய குறுநூலில் பக் 1 – 15 வரையான பகுதியில் உள்ள கருத்துகளைத் தழுவியும், சுருக்கியும் தமிழிலில் தருவதாக எழுதப்பட்டது.
H.L. SENEVIRATNE – BUDDHISM, IDENTITY AND CONFLICT, 1 – 29 PAGES (2004), INTERNATIONAL CENTRE FOR ETHNIC STUDIES, COLOMBO.
தொடரும்.