இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் 1750-1900 : கித்சிறி மலல்கொடவின் நூல் பற்றிய அறிமுகம்
Arts
17 நிமிட வாசிப்பு

இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் 1750-1900 : கித்சிறி மலல்கொடவின் நூல் பற்றிய அறிமுகம்

March 8, 2024 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றிய சமூகவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்களில் முக்கியமான ஒருவரான கித்சிறி மலல்கொட அவர்களின் நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. கித்சிறி மலல்கொட 1960 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்லைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1970 இல் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு பின்னர் திருத்தங்களுடன் 1976 இல் ‘யுனிவர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ்’ வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. ‘BUDDHISM IN SINHALESE SOCIETY  1750 – 1900 : A STUDY OF RELIGIOUS REVIVAL AND CHANGE’ என்பது நூலின் ஆங்கிலத் தலைப்பாகும். இந்நூலின் தலைப்பில் ‘மறுமலர்ச்சியும் மாற்றமும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image 1

யாழ்ப்பாணத்தில் 19 ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் ஆறுமுகநாவலரின் சமூக சீர்திருத்தப் பணிகளின் பயனாக சைவமறுமலர்ச்சி ஏற்பட்டதைப் பற்றி நாம் நன்கு அறிவோம். இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்ட இச்சமய மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் தென்னிலங்கையில் தோன்றிய பௌத்த சமய  மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் இடையே அடிப்படையான வேறுபாடு ஒன்று உள்ளது. தென்னிலங்கையில் பௌத்த சமய சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் இருவேறு கட்டங்களில் ஏற்பட்டது.

முதலாவது சீர்திருத்த இயக்கம் கண்டி இராச்சியப் பகுதிக்குள் வாழ்ந்தவரான சரணங்கர தேரர் என்ற சமயத்துறவியினால் 18 ஆம்  நுாற்றாண்டில் தொடக்கி வைக்கப்பட்டது. இம்முதலாவது கட்ட சீர்திருத்த இயக்கமும் அதன் பயனான மாற்றங்களும் 1860 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன. 1860 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாணந்துறை விவாதம் இரண்டாவது கட்ட சீர்திருத்தங்களினதும் பௌத்த சமய மறுமலர்ச்சியினதும் தொடக்கமாக அமைந்தது.

பண்டைநாளில் சிறந்து விளங்கிய சமயக் கொள்கைகைளும் நடைமுறைகளும் பின்னர் நலிவடைந்த நிலையை அடைந்த வேளையில் அவற்றை மீள உயிர்ப்பித்து புது மலர்ச்சியை உண்டாக்கும் இயக்கமே மறுமலர்ச்சி இயக்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. 1750 – 1900 காலப்பகுதியில் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்குகளை ‘மறுமலர்ச்சி’ என்று மட்டும் கூற முடியாது. இவ்வளர்ச்சிப் போக்குகளில் முக்கிய மாற்றங்களும் வெளிப்பட்டன. ஆகையால் மறுமலர்ச்சியும் மாற்றமும் என்று குறிப்பிட்டுள்ளதாக மலல்கொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1750 – 1900 காலப் பகுதியில் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில் இரண்டு அம்சங்கள் இருந்தன. 

(1) மரபுவழி அரசியல் சமூக அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றங்களின் விளைவாக சமயத்துறையில் மறுமலர்ச்சியும் மாற்றமும் நிகழ்ந்தது. 

(2) இக்காலத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் தாக்கமும் பௌத்த சமயத்தைப் பாதித்தது. 

இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும் என்ற விடயத்தோடு மேற்குறித்த இரு அம்சங்கள் தொடர்புபட்டிருப்பது முக்கியமானது. மேலும் இக்காலப்பகுதியில் டச்சுக்காரரும் (1796 வரை) பின்னர் பிரித்தானியரும் இலங்கையை ஆட்சி செய்தனர். தனித்து சுதந்திரமாகச் செயற்பட்ட கண்டி அரசும், 1815 இல் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வந்தது.

சமய மறுமலர்ச்சியின் இருவேறு கட்டங்கள்

1750 ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி இயக்கத்தை இருவேறு கட்டங்களாகப் பிரித்து நோக்குதல் முடியும்.

சரணங்கர தேரர் என்னும் சமயத்துறவி தொடக்கி வைத்த சீர்த்திருத்தங்களும், அதன் தொடர்ச்சியாக சியாம் நிகாயவில் இருந்து பிரிந்து சென்ற கீழ்நாட்டு சிங்கள பௌத்த துறவிகளின் அமரபுர விகாரையின் தோற்றமும் வரையான கட்டம் சமய மறுமலர்ச்சியின் முதலாவது கட்டமாகும். இக்கட்டம் 1860 இல் முடிவடைகிறது. மலல்கொடவின் நூலின் முதலாம் பகுதி இக்கட்டத்தைப் பற்றிய விரிவான ஆய்வாகும். அத்தியாயம் II, III, IV, V என்ற நான்கு அத்தியாயங்களில் இது பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

நூலின் இரண்டாம் பகுதியில் கிறிஸ்தவத்திற்கு எதிர்ப்பாகத் தோன்றிய சீர்த்திருத்தவாத இயக்கமும் அதன் விளைவான சமய மறுமலர்ச்சியும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி VI, VII என இரு அத்தியாயங்களைக் கொண்டது. இரண்டாம் கட்ட மறுமலர்ச்சி இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்த ஒரு இயக்கம் ஆயினும் நூலாசிரியர் தம் ஆய்வை 1900 என எல்லையிட்டுக் கொண்டுள்ளார். இவ்விரண்டாம் கட்டம் 1860 களில் ஆரம்பித்தது. இரண்டாம் கட்டத்தில் எழுந்த இயக்கத்தை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என்று மலல்கொட குறிப்பிடுகின்றார். இரண்டாம் பகுதியின் தலைப்பாகவும் இத்தொடரையே அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமாற்றம் என்ற கருத்து

இந்தியாவில் புத்தபிரான் காலத்தில் தோன்றிய ஆரம்பகாலப் பௌத்தம் பல மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்தது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பௌத்தத்தில் முக்கிய பல மாறுதல்கள் ஏற்பட்டன. இலங்கையில் பௌத்தம் புகுந்த போதும் இலங்கை நிலைமைகளுக்கு ஏற்ப அது பல மாற்றங்களைப் பெற்றது. பௌத்த சமயத்தின் வரலாற்றில் ஏற்பட்ட இம்மாற்றங்களிற்கு மக்ஸ்வெபர் என்ற சமூகவியலாளர் நிலைமாற்றம் (Transformation) என்ற கருத்தை உபயோகித்து விளக்கம் கொடுத்தார். மலல்கொடவின் நூல், நிலைமாற்றம் என்ற இக்கருத்தை பிரயோகித்து இலங்கையின் பௌத்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களிற்கு விளக்கம் கொடுக்கிறது. நூலின் முதலாம் அத்தியாயமான முன்னுரையிலும், இரண்டாம் அத்தியாயமான ‘பின்னணி’ (The Background) என்ற தலைப்பில் உள்ள அத்தியாயத்திலும் நிலைமாற்றம் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை மலல்கொட தருகின்றார். வரலாறு, சமூகவியல், ஒப்பீட்டுச் சமயம் ஆகிய துறைகளின் கல்வியில் அக்கறையுடையோருக்கு இக்கோட்பாட்டு விளக்கங்கள் மிகுந்த பயனுடையவை.

ஆரம்பகால பௌத்தம் ஞானிகளின் மார்க்கமாகும், பௌத்த சமயத் துறவிகள் சமூகத்தில் இருந்து விலகி, உலகியல் வாழ்க்கையை நிராகரித்து தமது ஆன்மீகப் பயணத்தில் கவனம் செலுத்தினர். அவர்கள் தியானத்திலும், சமயஞானச் சிந்தனையிலும் தம் கருத்தைச் செலுத்தினர். புத்தர் போதித்த சமயம், காலப்போக்கில் பெருந்தொகையான மக்களின் சமயமாக மாறிய போது ஆரம்பகால பௌத்தத் துறவிகளில் இருந்து வேறுபட்ட இயல்புகளையுடைய துறவிகள் தோன்றினர். உலகை முற்றாகத் துறந்து காடுகளை நோக்கிச் செல்லும் சந்நியாச நெறிக்குப் பதிலாக மக்களுடன் சமூகத்தில் வாழ்ந்து சாதாரண மக்களின் சமயத் தேவைகளை நிறைவு செய்யும் துறவிகளிற்கான தேவை எழுந்தது. பௌத்தம், குடியான் விவசாயச் சமூகங்களில் வேரூன்றிய போது பெருந்தொகையான ஜனத்திரளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் சமயமாக மாறியது. பெருந்தொகையான மக்களின் சமயம் சில முன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மக்ஸ்வெபர் கூறினார். முதலாவதாக அது அடிநிலை மக்களின் ஆன்மீகத் தேவைகளை (Plebian Religious Needs) பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவதாக அச்சமயம் உலகியல் சார்ந்த நிறுவனங்களுடனும், அரசுடனும் பிணைப்புக்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் பௌத்தம் மேற்குறித்த இரு இயல்புகளையும் பெற்றது. அவ்வாறு நிலை மாற்றம் பெற்ற பௌத்தம் சாதாரண மக்களின் தேவைகளுக்கு உரிய மதமாகியது.

பௌத்தம் உலகச் சமயமாகப் பிறநாடுகளில் பரவிய வரலாற்றுப் போக்கை 20 ஆம் நூற்றாண்டின் சமூகவியலாளர்கள் பலர் ஆராய்ந்தனர். தாய்லாந்தின் பௌத்தம் பற்றி இலங்கையரான ஸ்ரான்லி ஜே. தம்பையா ஆராய்ந்தார். யங், Kaufman போன்ற ஆய்வாளர்களும், தாய்லாந்து பௌத்தம் பற்றி ஆராய்ந்தனர் என்று கூறப்படுகிறது. நாஷ், ஸ்பைறோ என்ற இருவர் பர்மா பற்றிய ஆய்வைச் செய்தனர். இலங்கையின் பௌத்தம் பற்றி கணநாத் ஒபயசேகர, அமிஸ், யால்மன், கொம்பிரிட்ஜ் ஆகிய ஆய்வாளர்கள் சிறப்பான ஆய்வுகளைச் செய்தனர். இவ்வரிசையிலேயே தமது நூலும் அடங்குவதாக மலல்கொட குறிப்பிடுகிறார்.

‘மிசனரி’ வேட்கை

பௌத்தம் உலக மதமாகத் தழைத்து வளர்வதற்கு அது சாதாரண மக்களின் சமயத் தேவைகளை பூர்த்தி செய்வதாய் மாற்றம் பெற்றமையோடு இன்னோர் அம்சமும் துணை செய்தது. அதனையே மதம் பரப்பும் ‘மிசனரி வேட்கை’ (Missionary Zeal) என்று வெபர் குறிப்பிடுகிறார். இந்தியாவின் ஆரம்பகாலப் பௌத்தம் அரசியல் சார்பற்றதாக இருந்தது. அது சமூகத்தில் இருந்து விலகிய துறவிகளின் சமயமாக இருந்தது. கி.மு.3 ஆம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தி ஆட்சி செய்த போது அரசு அதிகாரம் பௌத்தத்திற்கு துணையாக மாறியது. சமயத்தைப் பரப்பும் வேட்கையும் வெளிப்பட்டது. இலங்கையிலும் அசோகனின் சம காலத்தவரான தேவநம்பியதீசன் (கடவுளின் அன்பைப் பெற்றவர்) அரசானாக முடி சூட்டிக்கொண்டார். காலப்போக்கில் இலங்கையில் போதிமர வழிபாடு, புத்தரின் புனித சின்னங்களை வைத்து வழிபடும் சைத்தியங்களை அமைத்தல், பெரும் சமய விழாக்களை நடத்துதல் ஆகிய சடங்கு முறையிலான வழிபாடுகள் என்பனவும் வளர்ச்சி பெற்றன. பௌத்தம் பெரும் ஜனத்திரளின் சமயமாகியது.

மடாலய நிலப்பிரபுத்துவம்

பெருந்தொகையான மக்கள் திரள் பௌத்த சமயிகளாக ஆகும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும், தூய்மையான சமயக் கோட்பாடுகளில் இருந்து நடைமுறைச் சமயம் விலகுவதையும் மலல்கொட சமூகவியல் நோக்கில் தெளிவுபடுத்துகிறார். பௌத்தத்தின் முதன்மையான நோக்கம் ஆன்மீக ஈடேற்றம் அல்லது துக்க நீக்கம் மூலம் நிர்வாண நிலையை அடைதல் ஆகும். இம்முதன்மை நோக்கத்தை விட வேறு சில இரண்டாம் நிலை நோக்கங்களும் இருந்தன. அவை உலகியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள இல்வாழ்வோரை, நல்வழிப்படுத்தும் கடமைகளை கொண்டனவாக இருந்தன. வனவாசம் (ஆரண்ய) மேற் கொள்ளாது சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு (ஹம்வாசி) பணிசெய்யும் துறவி உலகியல் கருமங்களில் இருந்து தன் பிணைப்புக்களை அறுத்துக் கொள்ளவில்லை. துறவிகள் ‘சங்க’ என்ற அமைப்பை ஒரு நிறுவனமாகக் கட்டமைத்துக் கொண்டனர். ஆழமான கல்வியில் ஈடுபட்ட துறவிகள் ‘அபிதம்மம்’ என்னும் பௌத்த மெய்யியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். நூல்களைப் பாளி மொழியில் அறிவாளிகளுக்காக எழுதினர். இன்னொரு பிரிவினர் சாதாரண மக்களுக்கு மதத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் பொதுமக்களின் மொழியான சிங்களத்தில் மக்களுக்கு விளங்கக் கூடிய வகையில் நூல்களை எழுதினர். பிக்குகளின் பொருண்மியத் தேவைகளை நிறைவு செய்யும் தேவை ஏற்பட்டது. மடாலயங்கள் தோன்றின. இம் மடாலயங்களுக்குச் செல்வந்தர்கள் பணத்தையும், பொருளையும் தானமாக வழங்கினர். நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. மடாலயங்கள் பெரும் சொத்துடமை நிறுவனங்கள் ஆயின. பௌத்தம் நிலமானிய அமைப்பின் நிறுவனச் சமயம் என்ற நிலையைப் பெற்றது. மக்ஸ்வெபர் பௌத்தம் அடைந்த இந் நிலைமாற்றத்தை மடாலய நிலப் பிரபுத்துவம் (Monastic landlordism) என்று குறிப்பிட்டார். மத்திய கால இலங்கையில் பௌத்தம் மடாலய நிலப்பிரபுத்துவமாக நிலைமாற்றம் பெற்றது.

பெரு நெறியும் சிறு நெறியும்

சமூகம் பற்றிய சமூகவியலாளர் பெருநெறி (Great tradition), சிறு நெறி (Little tradition) என்ற கருத்தாக்கங்களை பிரயோகித்துச் சமய நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றின் இயல்புகளை விளக்குவதுண்டு. தேரவாத பௌத்தம் அறிவாளிகளிற்குரிய கோட்பாடுகளை கொண்ட மதம். அதன் சமய வழிபாட்டு முறைகளும், சமயச் சடங்குகளும் பெரு நெறி என்ற வகைக்குள் அடங்குவன. பௌத்தம் அல்லாத நம்பிக்கைகள், பௌத்தத்திற்கு எவ்விதம் புகுந்தன; நிலைத்திருந்தன, பௌத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கிருந்த சமய நம்பிக்கைகளும், இந்து சமய நம்பிக்கைகளும், மகாயான பௌத்த மரபுகளும் எவ்விதம் பௌத்தத்தில் நுழைந்தன என்பன பற்றி வரலாற்று முறைப் பரவல் (Historical diffusion) வகையான விளக்கங்கள் உள்ளன. பௌத்தத்திற்கு அந்நியமானவையும், அதன் கொள்கைகளோடு முரண்பட்டனவுமான நம்பிக்கைகளும் வழக்கங்களும் ஏன் இலங்கைப் பௌத்தத்தில் நிலைத்திருந்தன என்பதற்கு வரலாற்று முறைப்பரவல் என்ற நோக்குமுறையினால் திருப்தியான விளக்கத்தை தரமுடியாது என்று மலல்கொட கூறுகிறார்.

முரண்பாடுடைய சிறு நெறி மரபுகள் பௌத்தத்தில் நிலைத்திருப்பதற்குரிய காரணத்தை ‘அடிநிலை மக்களின் சமயத் தேவைகள்’ என்ற கருத்தின் இன்னோர் அம்சமான அவசரகால உதவி அல்லது ஆபத்து உதவி (Emergency aid) என்ற கருத்தின் துணையுடன் விளக்க முடியும் என மலல்கொட குறிப்பிடுகிறார். இதுவும் மக்ஸ்வெபர் குறிப்பிட்டதொரு கருத்தாக்கமே ஆகும். மனிதர் இரு வகையான ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றனர். அகத்தே இருந்து வரும் அச்சம், சந்தேகம், கலக்கம் என்பன ஒருவகை. புறத்தே இருந்து வரும் நோய், வறுமை, வன்முறை முதலிய ஆபத்துக்கள் இன்னொரு வகையின. சமயத்தின் பெருநெறி சார்ந்த தத்துவ விசாரமும், சமய ஒழுக்கங்களும் ஆபத்து உதவியாக அமைவதில்லை. மந்திரம், தந்திரம் என்பனவும் பேய் ஓட்டுதல் போன்ற சடங்குகளும், வரம் தரும் கடவுளர்களுமே ஆபத்தில் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியும். கர்மவினையின் தொடர்ச்சி, பிறப்பு, மறு பிறப்பு ஆகிய பௌத்த சமயக் கருத்துகள் கர்மா என்ற காரண காரியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. ஆபத்து உதவி என்ற கருத்தின் முதலாவது அம்சம் காரணகாரிய விளக்கம் ஆகும். கிரகங்களின் தாக்கம், துட்ட தெய்வங்கள், பிசாசுகள், ஆவிகள் கொண்டு வரும் தீமைகள், வரம் தரும் நல்ல தெய்வங்கள் தரும் நன்மைகள் என்பவை இரண்டாவது அம்சம்.

சாதியும் பௌத்த சமயமும் – அமரபுர நிகாயவின் தோற்றத்தின் பின்புலம்

இலங்கையின் நிலமானிய சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக சாதி முறை இருந்து வந்தது. இலங்கையின் பௌத்த சமயமும் சாதி என்ற சமூக நிறுவன ஒழுங்கிற்கு இயைந்ததாக தன் நடைமுறைகளை மாற்றிக் கொண்டது.

சாதிக்கும் சமயத்திற்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை மலல்கொடவின் நூலின் சில பகுதிகள் சிறப்பாக விபரிக்கின்றன. நூலின் முதற் பகுதியில் அமரபுர நிகாயவின் தோற்றமே சாதி அந்தஸ்தில் குறைந்தவர்களாகக் கருதப்பட்ட சாதியினரின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். மலல்கொடவின் கூற்றொன்றை இங்கே மொழிபெயர்ப்பாகத் தருகின்றேன்.

“கொள்கையளவில் பௌத்த துறவிகள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். ஏனெனில், சாதி என்ற வகைமை சமூகம் சார்ந்தது. சமூகத்தை துறந்த துறவிகளுக்கு சாதியென்று ஒன்று கிடையாது. ஆயினும் நடைமுறையில் இந்த இலட்சிய நிலையை காண்பது அரிது. குறிப்பாக எமது ஆய்வுக்குரிய காலப்பகுதியில் இந்த இலட்சியநிலை நடைமுறையில் காணப்படவில்லை. இதற்குரிய காரணங்களை நான் பின்னர் இங்கு கூறவுள்ளேன். துறவிகளாகச் ‘சங்க’ அமைப்பில் சேரும் பிக்குகள் சாதி அடையாளங்களைத் துறப்பது கிடையாது. மாறாக அவர்கள் தமது சாதிபற்றிய உணர்வு உடையவர்களாகவே இருந்தனர். இந்நூலில் ‘சலாகம் துறவி’, ‘கராவ துறவி’ போன்ற தொடர்களை நான் உபயோகிப்பதன் காரணம் யாதெனில் இச் சாதிகளைச் சேர்ந்த துறவிகளே இந்த அடையாளப் பெயர்களால் அக் காலத்தில் தம்மை அழைத்துக் கொண்டார்கள் என்பதாகும். (பக்.88)”

சாதியும் சமயமும் ஏன் ஒன்றாகப் பிணைப்புண்டிருந்தன என்பதை மலல்கொட பின்வருமாறு விளக்குகிறார்:

“இலங்கையில் பிற பௌத்த நாடுகளைப் போன்றே ஒழுங்கமைக்கப்பட்ட சமயம் ஒரு சமூக நிறுவனம் என்ற வடிவத்தைப் பெற்றது. சமூகத்துடன் தமக்கு உள்ள பிணைப்புக்களை அறுத்துக் கொண்ட தனிநபர்களின் சேர்க்கையாகச் சமயம் விளங்கவில்லை. அது நிறுவனமாக நிலை பெற்றதால் கோட்பாட்டளவில் சமயத்திற்கும், சமூகத்திற்கும் இடையில் நிலவிய வேறுபாடு யதார்த்தத்தில் நடைமுறையில் காணப்படவில்லை. சமூகத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அளவுகோல்கள் எவையோ, அத்தகைய (சாதி) அளவுகோல்கள் சமய நிறுவன அமைப்புக்குள்ளும் புகுந்து கொண்டன. (பக்.89)”

நிலப்பிரபுத்துவச் சாதியமைப்பு அரசியல் கட்டமைப்புக்களில் எவ்விதம் வெளிப்பட்டதோ, அவ்விதமே சமய நிறுவனக் கட்டமைப்புக்களிலும் பௌத்த விகாரைகளின் சமய நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டதை மலல்கொட பின்வருமாறு எடுத்துக் கூறுகிறார்:

“நிலமானிய பொருளாதார முறையின் சிக்கலான தொழில் பிரிவினை சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மடாலயங்களின் சொத்துக்களின் நிர்வாகக் கட்டமைப்பிலும் இது போன்ற தொழில் பிரிவினை இருந்தது. மடாலயங்களுக்குச் சொந்தமான ‘முத்தெட்டு’ வகை நிலங்களை கொவிகம சாதியினைச் சேர்ந்தோர் குத்தகைக்குப் பயிரிட்டனர். கோவில்களின் சமயத் துறவிகளுக்கு அவர்களின் அறுவடையின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கோவில்களுக்கு தமது சேவைகளை வழங்கினார். இவர்களுக்கு சேவைக்குரிய கூலியாக அரிசி வழங்கப்பட்டது. அல்லது கோவில் நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கப்பட்டது. கோவில்களைக் கட்டுதல், பிற தொழில்நுட்ப வேலைகள் தெரிந்த உழைப்பாளர்களையும், சித்திர வேலைகள், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளில் தேர்ந்தவர்களான ஆட்களையும் நவண்டன சாதிக் குழு வழங்கியது. செங்கல், ஓடு, மட்பாண்டங்கள் என்பனவற்றை கோவிலுக்கு வழங்குபவர்களாக குயவர் சாதியினர் பணி செய்தனர். கோவில்களதும் மடாலயங்களதும் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும், நிலத்திற்கு வெள்ளையடிக்கவும் தேவையான சுண்ணாம்பை ‘குணு’ சாதியினர் வழங்கினர். ‘ரதவ்’ என்னும் வண்ணார் குலத்தவர் சலவை செய்த துணியையும், விளக்கு எரிப்பதற்கான திரிச்சீலையையும் கொடுத்தனர். ‘பெரவயோ’ எனப்படும் சாதியினர் மேளமடித்தல், குழல் ஊதுதல், நடனம் ஆடுதல் ஆகிய பணிகளை கோவில்களில் நிகழ்த்தினர். ‘படுவோ’ சாதி ஆட்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லுதல், கோவிலின் தலைமைத் துறவியை பல்லக்கில் வைத்துக் காவிச் செல்லுதல் ஆகிய பணிகளைச் செய்தனர். இவ்விதமாக வெவ்வேறு சாதிகள் கோவிலின் பிரதம துறவிக்கு ஆற்றிய பணிகளை நோக்கும் போது நிலப் பிரபுவிற்கும் சேவைச் சாதிகளுக்கும் இடையிலான உறவு முறை கோவில் அமைப்புக்குள்ளே செயல்பட்டதைக் காண்கிறோம். (பக். 90)”

கரையோர மாகாணங்களின் சாதிக்கட்டமைப்பில் சலாகம, கராவ, துராவ என்ற மூன்று சாதிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. இச்சாதிகள் கொவிகம சாதியைவிடத் தாழ்ந்த அந்தஸ்தை பெற்றன. காலனிய ஆட்சியின் தாக்கத்தினால் இச்சாதிகள் பொருளாதார நிலையில் படிப்படியாகத் தம்மை உயர்த்திக் கொண்டன. இம்மூன்று சாதிகளுள் சலாகம சாதியினர் டச்சு ஆட்சியின்போது பொருளாதார நிலையில் உயர்ந்தனர். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலைச் செய்தவர்களான சலாகம சாதியில் இருந்து பொருளாதார நிலையில் உயர்வு பெற்ற உயர்குழாம் உருவாகியது. இவ்வுயர் குழாத்தில் இருந்து கிராமத் தலைமைக்காரன் போன்ற நிர்வாகப் பதவிகளிற்கு ஆட்களை டச்சுக்காரர் நியமனம் செய்தனர். சலாகம கிராமத் தலைமைக்காரர்கள் தம் சாதியைச் சேர்ந்த பிக்குகளுக்கு ஆதரவு கொடுத்தனர். கண்டியின் சியாம் நிக்காய பீடத்தால் ‘உபசம்பாத’ மறுக்கப்பட்ட சலாகம துறவிகள் மாற்றுவழி தேடினர். வலித்தர என்ற இடத்தைச் சோந்த டி சொய்சா ஜயதிலக சிறிவர்த்தன என்னும் சலாகம கிராமத் தலைமைக்காரர், பர்மாவின் தலை நகராக அன்று விளங்கிய அமரபுரம் என்ற நகருக்கு தூதுக் குழுவொன்றை அனுப்புவதற்கான பிரயாணச் செலவை கொடுத்து உதவினார். அங்கிருந்து 1803 ஆம் ஆண்டு நாடு திரும்பிய குழு பர்மிய தேசத்துப் பிக்குகளை அழைத்து வந்தது. உபசம்பாதச் சடங்கை நடத்தியது. இந்நிகழ்வுடன் தோன்றியதே அமரபுர நிகாய என்ற பௌத்தமத பீடம். சமயத்துறையில் கண்டியின் கொவிகம சாதி ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கத்தின் தோற்ற வரலாறு மலல்கொடவின் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவ்விபரங்களை இங்கு விரிவஞ்சித் தவிர்த்துள்ளோம். தாழ் நிலையில் இருந்த சிலசாதிகளின் பொருளாதார அந்தஸ்து மாற்றத்திற்கும் சமயத் துறையின் மறுமலர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை மேற்கூறியவை எடுத்துக் காட்டுகின்றன.

தமிழ் மொழியில் இந்து நாகரீகம், இஸ்லாமிய நாகரீகம் ஆகிய பாடங்கள் உயர் கல்விப் பீடங்களில் கற்பிக்கப்படுகின்றன. இப்பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் சமயங்களை ஒப்பீட்டு முறையில் கற்றல் மிகுந்த பயன்தருவது. ஒப்பீட்டுச் சமயம் (Comparative religion) என்ற கல்வித் துறையை வளப்படுத்தக் கூடிய நூல் என்ற வகையில் கித்சிறி மலல்கொடவின் நூல் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன்படக்கூடியது.

கித்சிறி மலல்கொட

இவர் 1960 களின் முற்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்றவர். இலங்கையின் தென் பகுதியான மாத்தறையின் இராகுல கல்லூரியில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர். பேராதனையில் இளமாணிப் பட்டம் பெற்ற பின்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இவரது ‘Buddhism in Sinhalese Society 1750-1900 : a Study of Religious Revival and Change’ எனும் நூல் 1976 இல் யுனிவேர்சிட்டி ஒவ் கலிபோர்னியா பிரஸ் பிரசுரமாக வெளியாயிற்று. இந் நூலின் இரண்டாம் பதிப்பு அண்மையில் இலங்கையில் வெளியாகியுள்ளது. கித்சிறி மலல்கொட நியூசிலாந்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு இவர் இயற்கை எய்தினார்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

27209 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்