ஈழத்தில் கற்ற அடிப்படையில் சிலிக்கன் வலியில் வணிகம்
Arts
9 நிமிட வாசிப்பு

ஈழத்தில் கற்ற அடிப்படையில் சிலிக்கன் வலியில் வணிகம்

October 26, 2024 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை” 
திருக்குறள் (512)

மு. வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

நான் எதிர்பாராத விதமாக எனது முகநூல் உள்பெட்டியில் நண்பர் ஒருவர், 63 வருடங்களுக்கு முந்தைய சில ஆவணங்களை தனது தாத்தாவின் பழைய ஆவணக் கோப்புகளிலிருந்து எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். அந்த ஆவணமானது எனது தாத்தாவும் (தந்தையின் அப்பாவும்), எனது தந்தையும் எமது கிராமத்தில் நடாத்திய கடையின் (General Store) ரசீது (Receipt) ஆகும். அவை அவர்களின் கையெழுத்தோடு எமது கடையான ‘K. V. கந்தப்பர்’ எனும் தலைப்பில் இருந்தது. அந்த ரசீதில் இருந்ததன் படி, அவர்கள் கடையில் விற்ற பொருட்களைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு பக்கம் பலசரக்குப் பொருட்கள், மருந்துச் சரக்குகளும்; மறுபக்கம் விளக்குகள், தும்புக்கட்டை, கட்டிடப் பொருட்களும் விற்றார்கள். அதனோடு தோட்டம் செய்ய தேவையான பொருட்களும் விற்றார்கள். அது மட்டுமன்றி 1961 ஆம் ஆண்டு காலத்தில், வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள தொலைபேசி வைத்து, அதனை கிராமத்தவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்தார்கள். இதனை இப்போது ‘Communication’ என்று கூறுவார்கள். 

நான் கடையில் வேலை செய்யத் தொடங்கியது எனக்கு 8 – 9 வயது இருக்கும் போது. அதேபோல், எனது நான்கு அண்ணாக்களும் பாடசாலைக்குப் பின், விடுமுறைக் காலத்தில் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் உதவி செய்வார்கள். தாத்தாவின் மடியில் இருந்து ரசீது போட்டதும், எண்களைக் கூட்டப் பழகியதும், மிச்சப் பணத்தை வாடிக்கையாளருக்கு மாற்றிக் கொடுத்ததும் எனது ஆரம்ப கால ஞாபகங்கள். நாங்கள் எல்லோரும் கடையில் பொருட்களை அடுக்குவோம்; அலுமாரிகளை துப்பரவாக்குவோம்; இரவில் கணக்குப் புத்தகங்களைப் பார்த்து கணக்குகளைச் சரிசெய்வோம். எனது தந்தையார் ட்ராக்டர் ஒன்றை விவசாய நடவடிக்கைகளுக்கு வாடகைக்கு வழங்கவென வாங்கினார். எனது அண்ணாக்களும் நானும் வாகனங்கள் ஓட்டப் பழகியது இந்த ட்ராக்டரில் தான். எனக்கு அப்போது 12 வயதிருக்கும். 

இப்போது, 40 வருடங்களுக்குப் பின், எனது வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால், நான் உலகின் முன்னணியான சிலிக்கன் வலியில் தொழில் செய்வதற்கு, நான் அன்று கற்ற பாடங்கள் – அனுபவங்கள் அடித்தளமாக இருக்கின்றன என்று புரிகிறது. ஒரு சிறிய கிராமமான புலோலியில் பிறந்து, முதல் 19 வருடங்களை அங்கு கழித்து, பின்னர் வட அமெரிக்காவிற்கு வந்து இரண்டு பெரிய நிறுவங்களை உருவாக்கியதற்கு, எனது சிறு வயது அனுபவங்கள் அடிப்படையாக இருந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பகிரலாமென்று இருக்கின்றேன்.

மனப்பான்மை வளர்ச்சி/ கடின வேலை: நான் சிலிக்கன் வலியில் ஆரம்ப நிறுவனங்களை நிறுவி, அதனை பெரும் நிறுவனமாக ஆக்கி, பல நூறு தொழிலாளர்களை வேலைக்கு வைத்து, பொருட்களை உற்பத்தி செய்து, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்றேன். அதற்கு ஒவ்வொரு நாளும் 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்து, தொழிலாளர்களுடன் கூடி நின்று பொருட்களை வடிவமைக்க வேண்டியிருந்தது. 

எனது கிராமமான புலோலியில், காலையில் எழுந்து கடைக்கு அல்லது வயலுக்குப் போய் வேலை செய்துவிட்டு, நேரத்திற்கு பள்ளிக்கூடம் போவோம். பள்ளி முடிந்த பின், எமது நண்பர்கள் ஊரெல்லம் விளையாடிக் கொண்டிருக்க, நாங்கள் மீண்டும் கடைக்குப் போய், தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் உதவி செய்வோம். மாலை நேரத்தில் கடை மிகவும் பரபரப்பாக இருக்கும். அப்போதும் எமது வயதிற்கேற்ற வேலைகளை நாங்கள் செய்வோம். கடையை மூடும்போதும், கணக்குகளை எழுதிவிட்டே வீடு செல்வோம். வீடு செல்ல இரவு 9 மணியாகிவிடும். பின்னர், இரவுச் சாப்பாடு அருந்திவிட்டு, பள்ளிப் பாட வேலைகளை முடித்துவிட்டுத் தூங்குவோம். சிறுவயதில் கடின வேலைக்குப் பழகியமையே, இப்போது அமெரிக்காவில் நீண்ட நேரம் வேலை செய்யும் மனப்பான்மையை வளர்த்தது என நம்புகிறேன்.

சரியான நேரத்தில் தேவையான பொருள்: எமது கடை, பலசரக்கு கடையாக ஆரம்பிக்கப்பட்டு பின் விவசாயப் பொருட்களையும் விற்கத் தொடங்கியது. பின்னர், சீமெந்தில் வீடு கட்டும் கலாசாரம் ஆரம்பித்ததும், அதற்குத் தேவையான இரும்புக் கம்பிகள், சீமெந்து, மண், ‘பெயிண்ட்’ அடிப்பதற்கான பொருட்கள் போன்றவற்றை விற்பதாக அது விரிவடைந்தது. அக் கிராமத்தில், எமது கடையிலேயே முதலாவதாக தொலைபேசி இணைப்பு வந்தது. அதனைக் கொண்டு, ஊர் மக்கள் தூரத்திலிருக்கும் தமது உறவுகளுடன் தொடர்பு கொள்ள ‘Communication Center’ போன்ற ஒன்றை உருவாக்கினோம். எமது கடை கால மாற்றத்திற்கு ஏற்ப, சரியான நேரத்தில் தேவையான பொருட்களை விற்பனை செய்ததால், ஊர் மக்கள் எமது கடையை நாடி வரவேண்டிய தேவை எப்போதும் இருந்தது.

எனது முதலாவது ஆரம்பத் தொழில் நிறுவனத்தில், சரியான நேரத்தில் இணையத்தின் மூலம் தொலைபேசி அழைப்புகளை (Voice over Internet Protocol) சுலபமாகவும் மலிவாகவும் வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினேன். அதன் மூலம், உலகில் சகல மூலையிலும் இருந்தவர்களை இணைக்க முடிந்தது. இச் சிந்தனைக்கு எமது கடையின் வியாபார அனுபவம் உதவியது.

தேவை உருவாக்கம் (Demand Creation): ஓர் ஊரின், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, முதலில் தேவையை உருவாக்க வேண்டும். அதன்பின், தேவையைக் கொள்வனவு செய்யக் கூடிய, வாடிக்கையாளர்கள் தேவை. எமது பிரதேசத்தில் கல்வியறிவு பணம் படைத்தவர்களை உருவாக்கியது. கிராமங்களில் கல்வியை வழங்க பாடசாலைகள் அமைத்தோம். எனது ஆரம்பக் கல்வியை புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். ஆரம்பத்தில் ஓர் சிறிய திண்ணைப் பள்ளியாக இருந்த அதனை அரசாங்க மகா வித்தியாலயமாகப் பதிவு செய்து, அதன் மூலம் பல வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள் என்று பலர் உருவாக எமது முன்னோர்கள் வழியமைத்தார்கள். அதனால் அவர்களது பொருளாதார பலம் அதிகரித்தது. அவர்களது தேவையை விற்பனை செய்ததன் மூலம் எமது வர்த்தக சாலையின் வியாபாரம் கூடியது.

அமெரிக்கா நாட்டில் வர்த்தகமானது மக்களின் பொருள் வாங்கும் பலத்தினால் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைச் சரிவரப் பயன்படுத்த வேண்டுமானால் அவர்களுக்கு வேண்டிய தேவைகளை உருவாக்க வேண்டும். பின், அத் தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை வடிவமைக்கக் கூடிய துறைசார் நிபுணர்களைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். சிலிக்கன் வலியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அது இருக்கும் இடம். அந்த இடம் நான் மேற் கல்வி படித்த ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் உலகப் பெருமை பெற்ற பல்கலைக்கழகமான பேக்கிளி பல்கலைக்கழகத்திற்கும் மத்தியில் அமைந்திருக்கிறது. இந்தச் சூழல், மக்களின் தேவைகளை அறிந்து அல்லது உருவாக்கி, பொருட்களை உற்பத்தி செய்யக் காரணமாவதுடன், அதற்கான பாவனையாளர்களையும் உருவாக்கி வருகிறது.

தலைமைத்துவமும் ஆளிடைத் தொடர்புகளும்: எனது தந்தையார் ஊரின் சமாதான நீதவானாகவும், எமது வலயத்தின் பெரிய கோவிலான வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தர்மகர்த்தாவாகவும் இருந்தார். அவை மூலம், பல சேவைகளைப் புரிந்தார். பல அரசாங்க அதிகாரிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் வலயத்தின் சக வர்த்தகர்களுடனும் தொடர்பு வைத்திருந்தார். அதன் மூலம் எமது வர்த்தகத்தின் அடைவுகளைப் பெருக்கினார்.

இப்படியான தொடர்புகளை ஆங்கிலத்தில் ‘Networking Effect’ என்று கூறுவார்கள். நான் ஆரம்ப நிறுவனங்களைத் தொடங்கும் போது, இதனைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல, தலைமைத்துவம் மற்றும் ஆளிடைத் தொடர்புகளின் முக்கியத்துவம் தெரியவந்தது. அதன் மூலம் பெரிய நிறுவனங்களுடனும் நிதி முதலிடுபவர்களுடனும் இணைந்து எனது நிறுவனங்களைப் பெரிதாக்க முடிந்தது.

வாடிக்கையாளர், தொழிலாளர்கள் மேல் கரிசனை: அந்தக் காலகட்டத்தில் மக்கள் மண் வீடுகளிலிருந்து சீமெந்து வீடுகளுக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்களை மணம் முடித்துக் கொடுக்க, சீமெந்து வீடுகளை சீதனமாகக் கேட்ட காலம் அது. பலருக்கு ஒரே தடவையில் பணம் கொடுத்து கட்டிடப் பொருட்களை வாங்கி வீடு கட்ட வசதி இருக்கவில்லை. இதனால், எமது கடையிலிருந்த கட்டிடப் பொருட்களை, மாதத் தவணையில் பணம் செலுத்தும் அடிப்படையில் விற்பனை செய்தோம். சிலருக்கு அதனையும் செலுத்த முடியாது போனது. ஆனால் அப்பாவும் தாத்தாவும் அது பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை.

ஆரம்பத் தொழில் நிறுவனம் ஒன்றை சர்வதேச ரீதியில் உருவாக்குவது என்பது பல நூறு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், அவர்களிடமிருந்து ஆக்கபூர்வமாக வேலையை வாங்குதல் போன்ற செயல்களை உள்ளடக்கியது. அதே நேரம் தொழிலாளர்களது பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்ப அனுசரித்து நடந்து, அவர்களை ஊக்குவித்து, சிறப்பான விளைவுகளை உருவாக்குவதும் முக்கியமானது. நான் அந்த நெறியைக் கைப்பற்றியதால், எனது தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை புரிந்து எனது நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்க உதவினார்கள். அவர்களில் பலர் எனது இரண்டாவது நிறுவனத்திலும் இணைந்து வேலை புரிந்தார்கள். இதனை ‘விசுவாசம்’ (loyalty) என்று கூறுவார்கள். வாடிக்கையாளர், தொழிலாளர்கள் மேல் கரிசனை செலுத்துவதன் மூலம் இதனை அடையலாம்.

எல்லாவற்றிற்கும் வரம்பு உண்டு: வியாபாரத்தில், எமது நல்ல குணங்களை சிலர் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படியானவர்களுடன் கவனமாக இருப்பது அவசியம் என்பதை எனது தந்தையாரின் நடத்தைகளின் மூலம் கற்றுக்கொண்டேன். அவர் சமாதான நீதவான் என்பதாலும், வியாபாரம் புரிந்து பணம் உழைத்திருப்பதாலும் பலர் அவரிடம் பத்திரங்கள் நொத்தாரிசு செய்யவும், காசோலைகள் மாற்றவும் வருவார்கள். சிலர் போலி ஆவணங்களோடு, சட்டத்திற்குப் புறம்பான வேலை செய்யவும் முனைவார்கள். அந்த நேரங்களில் எனது தந்தையார் எச்சரிக்கையோடு நடந்து கொள்வதையும், அவர்களிடம் ரௌத்திரம் அடைவதையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். 

எனது இரண்டாவது ஆரம்ப நிறுவனத்தில் வேலை செய்த மூத்த அதிகாரி (CEO) ஒருவர், தனது வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் மற்றவர்களின் வேலைகளில் இடையிட்டு அவற்றைக் குழப்பினார். நான் எச்சரிக்கையோடு நடந்து கொண்டு அவரை வேலையிலிருந்து நீக்கினேன். அதே போல் இன்னொரு அதிகாரி, தனது பிழைகளுக்கு தான் பொறுப்பெடுக்காமல், தனது அணியின் அடிநிலை வேலையாளர்களை குற்றம் சாட்டினார். நான் அவரது தவறை பிற தலைவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டி, உண்மையை வெளியே கொண்டு வந்தேன்.

நான் ஈழத்தின் கிராமமான புலோலியில் கற்றவை இன்றும் எனக்குத் துணையாக இருந்து வருகிறது. நேர்மையாகவும் துணிச்சலாகவும், உலகில் வர்த்தகத்தில் உச்ச நாடாக விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் சிலிக்கன் வலியில் மற்றவர்களுக்கு இணையாக வியாபாரம் செய்ய முடிகிறது. நான் எப்போதும் இளையவர்களுக்கு கூறுவது ஒன்றுதான்: “நீங்கள் எங்கு தொடங்குகிறீர்கள் என்பது அல்ல, எங்கு முடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்! (It’s not where you begin, it is where you end, what is important!).”


ஒலிவடிவில் கேட்க

8450 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)