வணிகம் - தொழில்நுட்பம் - நிதி : முப்பது வருட அனுபவத்திலிருந்து முப்பது பாடங்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

வணிகம் – தொழில்நுட்பம் – நிதி : முப்பது வருட அனுபவத்திலிருந்து முப்பது பாடங்கள்

September 2, 2024 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்”
திருக்குறள் (621)

மு. கருணாநிதி விளக்கம் : சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

எனது உயர் படிப்பை ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துவிட்டு, முப்பது வருடங்களுக்கு முன் (1994 ஆம் ஆண்டு) ஐக்கிய அமெரிக்காவில் எனது தொழில் வாழ்க்கையை தொடங்கினேன். இந்த முப்பது வருடங்களில் மூன்று உலகளாவிய நிறுவனங்களிலும் இரண்டு ஆரம்பத் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஓர் ஆரம்பப் பங்காளராகவும் வேலை செய்து பல வெற்றிகளை அடைந்திருக்கிறேன். அந்த பயணத்தின் போது நான் பெற்ற அனுபவங்களை மூன்று வகையான தலைப்புகளுக்குக் கீழே கூறலாமென்று இருக்கிறேன். 

வணிகம் (Business):

  1. சந்தைப் பொருத்தம் (Market Fit): பொருள் உற்பத்தியை அதன் சந்தைப் பொருத்தத்துடன் தொடங்குவது மிக முக்கியமானது. பலருக்கு பல அனுபவங்கள், சிந்தனைகள், திறமைகள் இருக்கலாம். ஆனால் ஓர் நிறுவனம் தொடங்குவதற்கு மிக முக்கியமானது உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதும் முதலீட்டாளர்களுக்கு இலாபம் பெற்றுக் கொடுப்பதும் ஆகும்.
  2. நல்ல போட்டியாளர் (Competition is good):  சிறப்பாகச் சிந்திக்கக் கூடிய போட்டியாளர் நம்மையும் அவருக்கு இணையாகச் சிந்திக்கத் தூண்டுவார். அவருடன் போட்டி போடுவதன் மூலம் எம்மாலும் அவருக்கு இணையாகச் சந்தையைக் கைப்பற்ற முடியும். இதன் மூலம் சந்தை விழிப்புணர்வு அதிகரிக்கும்.
  3. வாடிக்கையாளருடன் நேரடித் தொடர்பு (Direct Customer Interaction): வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் நாம் செய்யும் பொருளைப் பற்றிய வாடிக்கையாளர்களின் அபிப்பிராயத்தை அறியலாம். குறித்த பொருள் பற்றிய வாடிக்கையாளர்களின் கருத்துகள் அப் பொருளின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். 
  4. வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர்களை அறிவது: இதை அறிவதன் மூலம் நாம் உருவாக்கும் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பதையும் பொருளின் மதிப்பையும் அறிய முடியும். இது உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
  5. பொருளின்/சந்தையின் தன்மை: ஓர் நிறுவனம் உருவாக்கும் பொருளை இன்னொரு நிறுவனத்திற்கோ (B2B) அல்லது நேரடியாகப் பாவனையாளர்களுக்கோ (B2C) விற்க முடியும். எனது இரு நிறுவனங்களும் ‘B2B’ நிறுவனங்கள். பிற நிறுவனங்கள் மூலமாக எமது பொருட்களை விற்பதன் மூலம் எமது வியாபாரத்தை விரிக்க முடிந்தது.
  6. நிதி வழிகளை அறிதல் (Understanding Financials): நிதி வழிகளையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்ளுவது வியாபாரத்தில் மிக முக்கியமானது. 
  7. பழைய சந்தை – புதிய அணுகுமுறை (Old Market – New Approach): புதிய அணுகுமுறை மூலம் ஓர் பழைய பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் உற்பத்திகளை இலகுவாகச் சந்தைக்குக் கொண்டுவர முடியும். 
  8. பலவகையான வாடிக்கையாளர் (Diverse Customers): ஒரே வகையான வாடிக்கையாளரை மனத்தில் கொண்டு நிறுவனங்களைத் தொடங்குவது மிக ஆபத்தானது. அந்த ஒரே வகையான வாடிக்கையாளர்கள் மனதை மாற்றிக்கொண்டால் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் இல்லாமல் போய்விடும். பல வகையான வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நிறுவனத்தின் திசையை மாற்றமுடியும்.
  9. அவதானமான பங்குடமை (Careful partnership): சக நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் வியாபாரத்தை விரிபுபடுத்த முடியும். ஆனால் சிறப்பாக இயங்காத நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.
  10. ஆக்கபூர்வமான செலவு: வருமானம் வரும்வரை செலவுகளைக் குறைப்பது முக்கியம். விற்பனையாளர்களுடன் உரையாடுவதன் மூலம் செலவுகளைக் குறைக்கவோ, தள்ளிப்போடவோ முடியும். அதன் மூலம் இயங்கும் காலத்தை அதிகரிக்க முடியும்.

தொழில்நுட்பம் (Technology): 

  1. வலுவான அடித்தளம் (Strong Foundation): செய்யும் செயலில் வெற்றி அடைவதற்கு அதன் அடித்தளத்தைப் பலமாக வைத்திருப்பது அவசியம். பாடசாலைக் கல்வி மூலமும், சின்ன வயதில் பெறும் அனுபவங்கள் முலமும், சிறந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் அதனை அடையலாம்.
  2. எளிமை (KISS – Keep It Simple Stupid): கடினமான தேவைகளுக்கும் சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிமையான அணுகுமுறைகளே பொருத்தமானது.
  3. ஆரம்பத்திலிருந்தே விரிவாக்கும் திட்டத்தைப் பின்பற்றுதல்: அதிகமாக உற்பத்தி செய்து அதிகமாக விற்பனை செய்வதிலேயே நிறுவனத்தின் வெற்றி தங்கியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே அதை மனதில் கொண்டு திட்டங்கள் போட்டு, முடிவுகளை எடுக்க வேண்டும். 
  4. தனித்துவம்: ஏனையவர்கள் செய்வது போலன்றி வித்தியாசமாகவும், மதிப்புகளை அதிகரிக்கக்கூடிய முறையிலும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்களையும் புதிய சந்தைகளையும் கண்டடைய முடியும்.
  5. பொருத்தமான உற்பத்தி : இறுதிப் பாவனையாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமன்றி அவர்களது கட்டுமானத்துக்குள் பொருந்தக்கூடியதாக பொருளை உற்பத்தி செய்வதன் மூலம் ஒருங்கிணைப்பு வேகத்தை அதிகரிக்க முடியும். 
  6. முழுமையான அணுகுமுறை (Holistic Approach): முழுமையான அணுகுமுறை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதன் மூலம் அதன் விளைவுகளை அதிகரிக்க முடியும். முழுமையான தீர்வு மூலம் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன், முன்பு கூறப்படாத அவர்களது பிரச்சினைகளையும் அறிய முடியும். அதன்மூலம் எமது வியாபாரத்தை அதிகரிக்கலாம்.
  7. குழு அமைப்பு (Team Composition): முதலில் உருவாக்கும் அணியினர் புதுத் தொழில் நிறுவனங்களை அமைப்பதில் மிக முக்கியமானவர்களாவர். வேறுபட்ட அனுபவங்கள், கல்வி, வாழ்க்கைப் பின்னணி கொண்டவர்களை ஒரு அணியில் இணைத்தால், அவர்கள் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமாகத் தீர்வு காண உதவுவார்கள்.
  8. தவறுகளைத் தவிர்த்தல் : பின்னடைவுகளிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். பெரிய தவறுகளைத் தவிருங்கள். ஆரம்ப நிறுவனங்களில் நேரமும் பண வளமும் குறைவாக இருப்பதால், தவறுகளைக் குறைப்பதன் மூலம் எமது வெற்றிக்கான சாத்தியங்களைக் கூட்டலாம்.
  9. மூல காரணங்களை அறிதல் (Identify the root cause): சிக்கலான பொருட்களை உருவாக்கும் போது அதில் பிழை ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். அதை மூடி மறைக்காமல், அந்த பிழைக்கான மூல காரணங்களை அறிந்து, சரி செய்வதன் மூலம், சரி செய்வதற்கான நேரத்தையும் குறைத்து அதனைச் சிறப்பாகத் திருத்தவும் முடியும்.
  10. பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking): ஓர் பிரச்சினையைத் தீர்க்க, அதே போன்ற இன்னொரு பிரச்சினையைச் சமாந்திரமாக வைத்து, அப் பிரச்சனையைத் தீர்த்த வழியையே பயன்படுத்தி, புதிய பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

நிதி (Finance):

  1. நீண்ட கால முதலீடு : நிதிச் சந்தையில் அதன் வட்டி வீதமும், பங்குகளின் விலைகளும் ஏறி இறங்கி வரும். ஆனால் நீண்ட கால இயக்கத்தில் அவை அதிகரித்துச் செல்லும். இதை அறிந்து முறையாக முதலீடு செய்வதால் நீண்ட காலத்தில் சிறப்பாக இலாபம் சம்பாதிக்க முடியும்.
  2. முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்குதல் (Start Investing Early): தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே சிறிய பணத்தையாவது முதலீடு செய்வதால் நீண்ட காலத்தில் அதன் வருமானம் பல மடங்காக அதிகரிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும்.
  3. நிறுவனப் பங்களிப்பு (Company Contribution): ஐக்கிய அமெரிக்காவில் 410 (k) என்றும், இலங்கையில் ETF/EPF என்றும் தொழிலாளர் வைப்புத் திட்டத்திற்கு நிறுவனங்கள் சிறிது பணத்தைப் பங்களிப்பார்கள். இதனால் தொழிலாளர்கள் பிற்காலத்தில் ஓய்வு பெறும்போது நல்ல சேமிப்புக் கிடைக்கும். இதனை முன்கூட்டியே பங்களிப்பதன் மூலம் எமது சேகரிப்பை பெரிதாக்க முடியும்.
  4. வரிக்கு முந்தைய முதலீடு (Pre – tax investing on IRA): சில நாடுகளில், அரசாங்க வரிக்கு முன்னரே, சம்பளத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்வர். இம் முதலீடானது, ஓய்வு பெறும் காலத்தில், உங்களது சேமிப்பை அதிகரிக்க உதவும். 
  5. வீடு, காணிகளில் முதலீடு செய்தல் (Real estate Appreciates): வீடு, காணிகளின் விலை நீண்ட காலத்தில் எப்போதும் அதிகரித்துக் கொண்டே போகும். அதில் முதலீடு செய்வதன் மூலம் எமது வளத்தை அதிகரிக்க முடியும்.
  6. கூட்டு வருமானம் (Compound Returns) : முன்கூட்டியே பல்வேறு முதலீடுகளைச் செய்வதன் மூலம் சேமிக்கும் பணத்தின் அளவை பல மடங்கு அதிகரிக்கலாம். அது கூட்டு வருமானமாக இருக்கும்.
  7. நிதிச் சொல்லியல்களை அறிதல் (Financial Terminologies): ஓர் நிறுவனத்தை ஆரம்பிப்பதென்றாலும் அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதென்றாலும், அத்தகைய நிறுவனங்கள் பயன்படுத்தும் நிதிச் சொல்லியல்களை அறிந்து இருப்பதன் மூலம் சுலபமாக ஏனையோருடன் உரையாட முடியும். 
  8. நீண்ட காலச் சிந்தனை (Think Long Term): பணத்தை குறைந்த காலத்தில் உழைப்பது அல்லது சேர்ப்பது என்பதற்கான சாத்தியம் குறைவு. அதனால் நீண்ட கால நோக்கில் சிந்திப்பதன் மூலம் உறுதியான நடைமுறைகளை அனுசரிக்க முடியும். அதன் மூலம் குறைந்த காலத்தில் வரும் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க முடியும்.
  9. பல்வகைப்படுத்தல் (Diversify): இருக்கும் வருமானத்தையும் முதலீடுகளையும் பல்வகைப்படுத்துவதன் மூலம் பொருளாதார ஏற்றம் இறக்கம் ஏற்படும் போது, நாம் அதைச் சமப்படுத்த முடியும்.
  10.  நிலையான முதலீட்டு மேலாண்மை (Passive Investment Management): பங்குச் சந்தையிலோ வேறு இடங்களிலோ முதலீடுகளை நாளாந்தம் மாற்றாமல் அதை ஓர் நிலையான உத்தியுடன் நிரிவாகிப்பதன் மூலம் அதனால் வரும் ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கலாம்.

இங்கு அனுபவம் என்பதையும் தாண்டி ஒருவருக்கொருவர் உதவுவதும் அவசியமானது. மற்றவர்களின் பிரச்சினைகளுக்காகவும் கொஞ்சம் நேரம் செலவழியுங்கள். கேள்விகளைக் கேளுங்கள். தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள். கடினமான காலங்களில் அமைதியோடு செயலாற்றுங்கள். நீங்கள் ஏனையவர்களுக்கு எப்படிப் பதிலளித்தீர்கள் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதில் இருத்துங்கள். இவை நான் கடந்த மூன்று தசாப்த கால பணிக் காலத்திலும், ஐந்து தசாப்த கால வாழ்க்கையிலும் கற்றவை. அவை உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்பி இங்கு பகிர்கிறேன்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4173 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்