யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முக நோக்கு - பகுதி 2
Arts
18 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முக நோக்கு – பகுதி 2

August 21, 2024 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

பஸ்தியாம்பிள்ளை அவர்களின் ஆய்வுக் கட்டுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியக் காலனிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் சாதி உறவுகள் தொடர்பாக எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தின என்பதை ஆராய்வதாக பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை அவர்களின் கட்டுரை அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதி என்ற குறுகிய கால எல்லையை தமது ஆய்வுக்கான காலமாக வகுத்துக் கொண்ட பேராசிரியர் தமது கட்டுரையின் தலைப்பைப் பின்வருமாறு குறித்துள்ளார்: ‘CASTE IN NORTHERN SRI LANKA AND COLONIAL ADMINISTRATIVE PRACTICE IN THE MID 19th CENTURY: COMPROMISE AND EXPEDIENCY’

‘வட இலங்கையில் சாதி : பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலனிய நிர்வாக நடைமுறைகள் – விட்டுக் கொடுப்பும் சூழலுக்கு ஏற்ப நெறி பிறழ்தலும்’ என்பது இதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இத் தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியிருப்பதைக் காணலாம்.

  1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி

பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் 1796 இல் தொடங்கியது. ஆயினும் 1833 இன் பின்னரே அவ்வாட்சியின் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் பிரித்தானியர் புகுத்திய மாற்றங்கள் சமூக மாற்றங்களுக்கு அடித்தளம் இட்டன. சாதி உறவுகளை நிர்வகிப்பதிலும் பிரித்தானிய அதிகாரிகளின் நடைமுறைகள் இக்காலத்தில் மாற்றம் பெற்றன.

1833 முதலான 50 ஆண்டு காலத்தில் காலனிய நிர்வாக நடைமுறைகளின் தாக்கம் பேராசிரியரின் கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. இக்கட்டுரை ஒரு குறுகிய காலப் பகுதியைப் பற்றிய நுண்ணாய்வு (Micro – analysis) ஆகும்.

  1. காலனிய நடைமுறைகள்

பிரித்தானியக் காலனியம் புகுத்திய மாற்றங்களில் முக்கியமானது நிர்வாகம் தொடர்பான மாற்றங்களாகும். பிரித்தானியக் காலனிய நிர்வாகம் சாதி உறவுகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்வு செய்வதில் கையாண்ட கொள்கைகளும் நடைமுறைகளும் இக்கட்டுரையில் விரிவாக ஆராயப்படுகின்றன.

  1. விட்டுக் கொடுப்பும் சூழலுக்கு ஏற்ப நெறி பிறழ்தலும்

ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சமூகநீதி (Social Justice) பற்றிய மனச்சாட்சியுணர்வு இருந்தது. சமூகக் குழுக்களிடையிலும், தனிநபர்களிடமும் பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதை ஆங்கிலேய அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆயினும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த சாதி வழமைகளை உடனடியாக மாற்றுவது கடினம் என்பதையும், சாதி முறையில் தலையீடு செய்தல் தமது ஆட்சி நலன்களுக்குத் தீங்கானதாக அமையும் என்பதையும் காலனிய அரசாங்கம் உணர்ந்தது. இதன் பயனாக விட்டுக் கொடுத்தல் (Compromise) கொள்கை பின்பற்றப்பட்டது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நிர்வாக விதிமுறைகளை வளைப்பதும், சூழலுக்கு ஏற்ப நெறி பிறழ்தலும் (Expediency) நிர்வாக நடைமுறைகளில் காணப்பட்டன.

குறுங்கதைகள்

நிர்வாக நடைமுறைச் சிக்கல்களோடு சம்பந்தப்பட்ட குறுங்கதைகள் பேராசிரியரின் கட்டுரையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சுவாரசியமான இக்கதைகளின் பிரதான கதாப்பாத்திரமாக அரசாங்க அதிபர் பீ.ஏ. டைக் (1805 – 1867) விளங்குகிறார். யாழ்ப்பாணத்தின் முதலியார்கள், கிராமத் தலைமைக்காரர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துக்கூறி முறையிடும் முறைப்பாட்டாளர்கள், பிணக்குகளிலே சம்பந்தப்பட்ட சாதிகள் – சமூகக்குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகிய பல்வேறு கதைமாந்தர்களையும் இக்கதைகளின் ஊடாகச் சந்திக்க முடிகிறது. இக்கதைகளின் ஊடாக சம்பந்தப்பட்ட கதை மாந்தர்களின் ‘அக உலகத்தைக்’ காண்பதற்கும், நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அகக் காரணிகளைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. சாதிச் சச்சரவுகள், பிணக்குகள் என்பன பற்றிய இக்குறுங்கதைகள், விடய ஆய்வு (Case Study) என்னும் ஆய்வு உத்தியைப் பிரயோகித்து, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்னும் வரலாற்றுக்கால நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு உதவுகின்றன.

பேராசிரியரின் கட்டுரையின் சிறப்பு, ஆவணச் சான்றுகளைத் துல்லியமாக எடுத்துக்கூறி இக்குறுங்கதைகளைக் கட்டமைத்திருப்பதாகும். காலனிய ஆட்சிக்காலத்து ஆவணங்கள், பதிவேடுகள், கடிதங்கள், அறிக்கைகள், அரசாங்க அதிபர் டைக்கின் ‘டயரிக்’ குறிப்புகள் என்பனவற்றில் இருந்து பெறப்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டு விடய ஆய்வுக்குரிய கதைகள் எழுதப்பட்டுள்ளன. புள்ளி விபரங்கள், தரவுகள் என்பனவற்றின் விபரிப்பாக இல்லாது பேராசிரியரின் கட்டுரை, பகுப்பாய்வு முறையில் 19 ஆம் நூற்றாண்டின் யாழ்ப்பாணச் சாதி முறையைக் காட்சிப்படுத்துகிறது.

அரசரத்தினம், அருமைநாயகம், பஸ்தியாம்பிள்ளை ஆகிய மூன்று வரலாற்றாசிரியர்களின் கட்டுரைகளின் முக்கியமான கருத்துகள் இதுவரை எடுத்துக் கூறப்பட்டன. அடுத்து மானிடவியலாளர்கள் மூவரின் ஆக்கங்கள் பற்றி நோக்குவாம்.

சமூகவியல் / மானிடவியல் ஆய்வுகள்

சமூகவியல் / மானிடவியல் நோக்கில் யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பையும், சமூக உறவுகளையும், சாதியக் கருத்தியலையும் ஆராயும் நான்கு கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் மைக்கல் பாங்ஸ் அவர்களின் கட்டுரை நீர்வேலிக் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கள ஆய்வின் பயனாக எழுதப்பட்ட ஆய்வேட்டினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. பாங்ஸ் அவர்களின் ஆய்வேடும், கட்டுரையும் 1950 களில் பிரபலம் பெற்றிருந்த ‘கிராமிய ஆய்வுகள்’ (Village Studies) என்னும் வகை ஆய்வுகளாக அமைந்தன. கிராமிய ஆய்வுகள் விவசாயச் சமூகங்கள் (Agrarian Societies) பற்றிய ஆய்வுகளாகவும் அமைந்தன. இனக்குழு வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகங்களில் (Tribal Societies) இருந்து மானிடவியலாளர்களின் கவனம் விவசாயச் சமூகங்கள் பக்கம் திரும்பிய ஒரு காலகட்டத்தில், இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வந்து, நீர்வேலிக் கிராமத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்த மைக்கல் பாங்ஸ் அவர்களின் ஆய்வு, யாழ்ப்பாண விவசாயச் சமூகத்தில் சாதியின் இயங்கியல் பற்றிய கோட்பாட்டுப் புரிதலுக்கு உதவும் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. பாங்ஸ், யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஆய்வில், கள ஆய்வு (Field Work) முறையியலைப் புகுத்திய முன்னோடி என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 1960 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பாங்ஸ் அவர்களின் கட்டுரையின் முக்கியமான கருத்துகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சாதி முறையின் வரைவிலக்கணம்

யாழ்ப்பாணத்தின் புவியியல், தரைத்தோற்றம், சமூக வரலாறு என்பன பற்றி சில வாக்கியங்களில் அறிமுகம் செய்யும் பாங்ஸ், கட்டுரையின் தொடக்கத்திலேயே சாதிமுறை (Caste System) பற்றிய வரைவிலக்கணம் ஒன்றையும் கூறி விடுகிறார். இவ் வரைவிலக்கணம் சாதிமுறை பற்றிய பொதுவான வரைவிலக்கணம் அன்று. நீர்வேலிக் கிராமத்தின் கள ஆய்வு அனுபவத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் சாதி முறையின் மிக முக்கியமான அம்சங்களை வாசகர் கவனத்திற்குக் கொண்டு வரும் வரை விலக்கணமாக இது அமைந்துள்ளது. பாங்ஸ், சாதி முறையின் நான்கு அம்சங்களை முக்கியத்துவப்படுத்திக் கூறுகிறார்.

அ) சாதி ஓர் அகமணக் குழுவாகும் (Endogamous Group)

ஆ) துடக்கு (Pollution) என்னும் கருத்து சாதியின் கருத்தியலாக உள்ளது.

இ) சாதிகள் சடங்கு முறைச்சேவைகளை (Ritual Services) ஆற்றுகின்றன. இச்சடங்கியல் சேவைகள் பொருளாதாரம், சமயம், அரசியல் என்னும் அடிப்படைகளில் சாதிகளிடையே பரஸ்பர உறவுகளை உருவாக்குகின்றன.

ஈ) சாதிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர்கள் இருக்கும். அவை மேல் – கீழ் என்ற தரவரிசையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். சாதிகளின் மரபுவழி நடத்தைகள் (Customary Behaviour) அவற்றின் தரவரிசை வேறுபாடுகளைக் குறியீட்டு வடிவில் வெளிப்படுத்துவன (Symbolise Rank Differences).

யாழ்ப்பாணச் சாதி பற்றிய இந்த வரைவிலக்கணம் நீர்வேலிக் கிராமத்தின் சாதி ஒழுங்கமைப்பின் விபரிப்பிற்குப் பொருந்துவதாகவும் அதனை சமூகவியல் நோக்கில் புரிந்து கொள்ளவும் உதவுகின்றது. 

மூன்று வகைக் கிராமங்கள்

யாழ்ப்பாணத்தின் சாதிகளின் புவியியல் பரம்பலை எடுத்து நோக்கின், அங்கு மூன்று வகையான கிராமங்கள் இருப்பதைக் காணலாம். இம் மூவகைக் கிராமங்களாவன:

  1. ஒரே ஒரு சாதியை மட்டும் கொண்ட ஒரு சாதிக்கிராமம்
  2. பல சாதிகளைக் கொண்ட பல சாதிக்கிராமம் 

இவ்வகைப் பல சாதிக் கிராமங்களில் ஒவ்வொரு சாதியும் தெளிவான எல்லைகளையுடைய வெவ்வேறு வட்டாரங்களில் தமது குடியிருப்புகளைக் கொண்டிருக்கும்.

  1. கலப்புக் கிராமம் 

பல சாதிகளைக் கொண்ட கிராமத்தில் வேளாளர் சாதி, பெரும்பான்மையினராக இருப்பர். வேளாளர் குடியிருப்புகள் கிராமம் முழுவதும் பரவியிருக்கும். அப்பெரும்பான்மையினர் மத்தியில் வேறு சாதிகளின் குடும்பங்கள் திட்டுத் திட்டாகப் பரவியிருக்கும். உதாரணமாக சனத்தொகையின் 75% வேளாளரைக் கொண்ட ஒரு கிராமத்தில் வேறு 4 – 5 சாதிகளின் குடியிருப்புகளும் பரவிக் காணப்படும்.

இந்த மூவகைக் கிராமங்களில் குடாநாட்டுக்குள் இரண்டாவது, மூன்றாவது வகைக் கிராமங்களே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. முதலாவதான ஒரு சாதிக் கிராமங்கள் குடா நாட்டில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ளன. ஆனையிறவுக்குத் தெற்கே முதலாவது வகையான ஒரு சாதிக் கிராமங்கள் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் சமூகப் புவியியலின் (Social Geography) இந்த அம்சம் சாதியுறவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதைக் காணலாம்.

சமூக அடுக்கமைவு

யாழ்ப்பாணச் சமூகத்தின் சமூக அடுக்கமைவு (Social Stratification) பற்றி மைக்கல் பாங்ஸ் கூறும் கருத்து முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் மூவகை அடுக்கமைவு காணப்படுவதாக பாங்ஸ் கூறினார். அவையாவன:

  1. வேளாளர் முதலிய பெயருடைய சாதிகளின் அடுக்கமைவு
  2. வர்க்க அடிப்படையிலான அடுக்கமைவு
  3. ‘சொந்தக்காரச் சாதி’ என்னும் அடுக்கமைவு

சொந்தக்காரச் சாதி

பாங்ஸ் யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரத்தியேகமான இயல்பை விளக்கும் ‘சொந்தக்காரச் சாதி’ (Sondakara Sathi) எனப்படும் உட்பிரிவுகளை அடையாளம் காட்டியுள்ளார். இது அவருடைய சுவாரசியமான கண்டுபிடிப்பாகும். யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்திற்குள் பல வட்டாரங்கள் இருக்கும். அவ்வட்டாரங்களுக்குள் வேளாளர் குடியிருப்புகள் செறிந்திருக்கும். “வட்டாரப் பிரிவுகள் காரணமாக ஒரு வட்டாரத்திற்கும் இன்னொரு வட்டாரத்திற்கும் இடையே திருமண உறவு இருப்பதில்லை. பந்தி போசனமும் இருக்காது. ஏனைய சமூக உறவுகளும் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருக்கும். வட்டாரங்களைச் சேர்ந்தவர்களிடையே சிறுசிறு கொடுக்கல் வாங்கல்கள் இருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் சமூகவியல் முக்கியத்துவமுடைய அவதானிப்புகள் சில வருமாறு :

  1. ஒரு எண்ணக்கரு (Concept) என்ற வகையில் சொந்தக்காரச் சாதி ஓர் மூடிய அகமணக்குழு முறையாக (A Close Endogamous System) இருப்பதைக் காணலாம்.
  2. சொந்தக்காரச் சாதி உட்பிரிவுகள், அந்தஸ்துக்காகப் போட்டியிடும் குழுக்களாக உள்ளன (Groups Competing for Status).
  3. வட்டாரங்களிடையே காணப்படும் புவிவெளி இடைவெளி, சமூகப் பிரிவினையாக (Social Separation) வெளிப்படுகிறது. 

கென்னத் டேவிட்

சாதிகளின் இடையூடாட்டம் என்னும் எண்ணக்கரு மூலம் யாழ்ப்பாணத்தின் சாதி முறையின் இயல்புகளை மைக்கல் பாங்ஸ் விளக்கியிருப்பதை மேலே குறிப்பிட்டோம். பாங்ஸ் கூறிய விடயத்தை மானிடவியலாளர் கென்னத் டேவிட், சாதிகளின் அடிப்படையிலான பரிவர்த்தனை முறை (Caste Based Exchange System) என்னும் எண்ணக்கரு மூலம் விளக்கியுள்ளார். ‘SPATIAL ORGANISATION AND NORMATIVE SCHEMES’ என்னும் தலைப்பில் அமைந்த அவரது கட்டுரையின் தழுவலாக்கம் இந்நூலில் 5  ஆவது அத்தியாயமாக இடம்பெறுகிறது.

கென்னத் டேவிட் அவர்களின் மேற்படி கட்டுரை யாழ்ப்பாணத்தில் சாதிகளின் குடியிருப்பு முறைக்கும், பரிவர்த்தனை முறைக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகிறது. பரிவர்த்தனை (Exchange), நிகழும் இடம் (Space or Locality), சூழமைவு (Context) என்பன முக்கியம் என அவர் குறிப்பிடுகிறார்.

யாழ்ப்பாணச் சமூகத்தின் சமூகவெளி அல்லது இடம், மூன்று வகைக் குடியிருப்புகளைக் கொண்டது என அவர் குறிப்பிடுகிறார். அவையாவன:

  1. வேளாளர் சாதி நில உடமையாளர்களின் விவசாயக் கிராமக் குடியிருப்புகள்
  2. கடற்கரையோர மீனவர் கிராமங்களின் குடியிருப்புகள்
  3. நகரத்தைச் சார்ந்து, சந்தை – கோவில் என்பனவற்றைச் சூழ அமையும் கைவினைச் சாதிகளும், பிறசாதிகளும் வாழும் நகரம்சார் குடியிருப்புகள்

மேற்குறித்த மூவகைக் குடியிருப்புக்களை உடைய புவிவெளியில் / சமூகவெளியில் நான்கு வகையான பரிவர்த்தனை உறவுகள் இடம்பெறுவதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.

  1. வேளாளருக்கும் கட்டுப்பட்ட சாதிகளுக்கும் (Bound Castes) இடையிலான உறவுகள்
  2. கட்டுப்படாத சாதிகளுக்கும் (Non – Bound Castes) வேளாளர் உட்பட எல்லாச் சாதியினருக்கும் இடையிலான உறவுகள்
  3. ஓரளவு கட்டுப்பட்ட தன்மையும், கட்டுப்படாத தன்மையும் கொண்ட சாதிகள், பிரதானமாக கட்டுப்பட்ட (Primarily Bound) சூழலில் கொள்ளும் உறவுகள்
  4. மேலே மூன்றாம் வகையாகக் குறிப்பிட்ட சாதிகள் பிரதானமாக கட்டுப்படாத (Primarily Non – Bound) சூழலில் கொள்ளும் உறவுகள்

மூவகைக் குடியிருப்புகளிலும் நிகழும் நான்கு வகைப் பரிவர்த்தனைகளை கென்னத் டேவிட்டின் கட்டுரை விரிவாக விளக்கிக் கூறுவதை ஆழமான வாசிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொது இடம் (Neutral Territory) என அழைக்கப்படும் ‘சந்தை’யில் இடம்பெறும் பரிவர்த்தனை உறவுகள் பற்றி மட்டும் சிறிய குறிப்பு ஒன்றை இவ்விடத்தில் கூறவுள்ளோம்.

‘சந்தை‘ என்னும் பொது இடம்

சந்தை (Market) என்பதை சாதி ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படுத்த முடியாத பொது இடம் (Neutral Territory) என கென்னத் டேவிட் கூறுகிறார். வர்த்தகமும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் போது யாழ்ப்பாணத்தில் சந்தை நகரங்கள் உருவாக்கம் பெற்றன. சந்தைகள், கொள்ளலும் கொடுத்தலும் நிகழும் இடங்களாகும். அங்கு பொருளைக் கொள்வனவு செய்வோர் விற்பனை செய்வோருடன் பேரம் பேசலில் ஈடுபடுவர். தனது உற்பத்திப் பண்டத்தை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வேளாளரான விவசாயியுடன், வேளாளர் அல்லாத மிகக் குறைந்த சமூக அந்தஸ்துடைய ஒருவர் கூட சமத்துவமான முறையில் பேரம் பேசலில் ஈடுபடும் நிலை இங்கே காணப்படும். பொது இடத்தில் நிகழும் சந்தை உறவுகள், அங்கு இடம்பெறும் பேரம் பேசுதல் என்பன சாதியைத் தகர்க்கும் செயல்முறைகளாகும். பேரம் பேசல் சாதிப் படித்தர ஒழுங்குக்கு எதிரானது (Bargaining is antithetical to hierarchy) என கென்னத் டேவிட் கூறுகிறார்.

சிறு நகரங்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் அடையளாம் காணலாம் என்று கூறும் கென்னத் டேவிட் இச்சிறு நகரங்களை அண்டி கைவினைச் சாதிகள், கடை வியாபாரிகள் (எல்லாச் சாதியினரும்), முஸ்லீம்கள் என்போரின் குடியிருப்புகள் காணப்படும். முன்னர் சந்தைகளையும் கோவில்களையும் இணைக்கும் வண்டிப் பாதைகளாக இருந்தவை 1930 – 1960 காலப்பகுதியில் ‘தார்’ வீதிகளாக மாறின. கோவில்களின் அருகில் பிராமணர், சைவக் குருக்கள் ஆகிய பூசகர்களின் குடியிருப்புகளும் அமைந்தன. சந்தைகள், கோவில்கள் என்பனவற்றைச் சுற்றி அரை மைல் வட்டம் ஒன்றைக் கற்பனை செய்தால், அந்த வட்டத்திற்குள் வேளாளருக்கு கட்டுப்படாத (Un-Bound) சாதிகளின் குடியிருப்புகள் இருப்பதைக் காண முடியும். இந்த வட்டத்திற்கு வெளியே நில உடமையாளர்களின் விவசாயக் கிராமங்கள் உள்ளன. கிராமங்களை அண்டிய யாழ்ப்பாணத்து நகரங்களின் வளர்ச்சி, வர்த்தகத்தை வளரச் செய்தது. இந்நகரச் சூழலில் நடைபெறும் வாங்கல் – விற்றல்,

  1. அந்தஸ்து சாராதது
  2. நடு நிலையான சந்திப்பு இடங்களில் நடைபெறுவது
  3. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த கொள்வோருக்கும் கொடுப்போருக்கும் இடையிலான சமத்துவமான சந்தை உறவுகளாக அமைகிறது. 

வேளாளர் பெரும்பான்மையினராக உள்ள கிராமங்களில், சந்தை உறவுகளுக்கு மாறான சடங்கியல் சார் சேவைகள் (Ritualised Services) சாதிக் குறியீட்டியல் (Caste Symbolism) அடையாளங்களுடன் இடம்பெறும். இவை 1960 கள் வரை நீடித்து நிலைத்து இருந்தன. வாழ்க்கைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகளான குழந்தையின் பிறப்பு, பெண் குழந்தையின் பூப்புச் சடங்கு, திருமணம், மரணம் ஆகியவற்றில் மரபு சார்ந்த முறையில் சேவைகளின் வழங்கலும், சேவைகளைப் பெறுதலும் நிகழ்ந்தன. இப்பரிவர்த்தனை பின்வரும் இயல்புகளை உடையது:

  1. அந்தஸ்துச் சார்ந்தது
  2. வேளாளர் வீடு என்ற உள்ளூர்ப் பின்னணியில் (Localised Setting) நடைபெறுவது
  3. கட்டுப்பட்ட சாதிகள் (Bound Castes) இப்பரிவர்த்தனையில் சம்பந்தப்படுகின்றன.
  4. இப்பரிவர்த்தனை உறவு சமத்துவமற்ற (Un-Equal) உறவாகும்.
  5. ஆளுக்கு ஆளான உறவாகவும் தனிப்பட்ட தன்மையுடையதாகவும் இவ்வுறவு உள்ளது (Highly Personalised Relations).

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1844 இல் அடிமைகள் ஒழிப்புச் சட்டம் செயல்முறைக்கு வந்தது. அச்சட்டத்தின் பின்விளைவுகள் உடனடியாக வெளிப்படவில்லை. ஆயினும் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் (1844 – 1960) யாழ்ப்பாணத்தில் வர்த்தகம், சந்தை உறவுகள் சந்தைக்கான பண்ட உற்பத்தி, பணப்புழக்கம், பணக்கூலிமுறை ஆகியனவற்றின் வளர்ச்சிகள் சாதிமுறை படிப்படியாகத் தகர்ந்தும், நெகிழ்ந்தும் மாற்றமுறுவதற்குக் காரணமாக அமைந்தன. கென்னத் டேவிட் அவர்களின் ஆய்வுக் கட்டுரை சாதியின் இந்த இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கு உதவுவதாக அமைந்துள்ளது.

சாதியச் சமூகத்தில் பெண் அடிமைத்தனம்

‘மறைந்திருக்கும் சக்தி : யாழ்ப்பாணத்துப் பெண்களின் பண்பாடு, சமூக – பொருளாதார அந்தஸ்து என்பன குறித்த விபரிப்பு’ என்னும் தலைப்பில் அமையும் நாலாவது அத்தியாயம் கென்னத் டேவிட் அவர்களின் கட்டுரையின் தழுவலாக்கமாகும். பண்பாட்டுக் குறியீடுகள் மூலம் பெண்களின் அடிமைநிலை வெளிப்படுத்தப்படுவதை இக்கட்டுரை ஆராய்கிறது. நிலமானியப் பின்புலத்தில் சாதி, பாலினம் (Gender) ஆகியன சார்ந்த அடிமைத்தனம் ஒன்றை ஒன்று ஊடுருவி நிற்கும் (Cross Cutting) தன்மை உடையது. யாழ்ப்பாணத்தின் சாதிமுறை பற்றி ஆழமான ஆய்வினை மேற்கொண்ட கென்னத் டேவிட் யாழ்ப்பாணப் பெண்களின் சமூகநிலை பற்றியும் ஆராய்ந்துள்ளார். அவரின் இக்கட்டுரை பொருத்தம் கருதி இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

கென்னத் டேவிட்டின் கட்டுரை, பின்வரும் மூன்று விடயங்களை விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது:

அ) யாழ்ப்பாணப் பெண்களின் சமூக அந்தஸ்து நிலை (Social Status)

ஆ) அவர்களது அந்தஸ்து நிலை பொதுவாக ‘அடிமைத்தனம்’ என்று குறிப்பிடப்படுவது உண்மையே ஆயினும் குழந்தை, சிறுமி, பருவம் அடைந்த மங்கை, திருமணமான பெண், முதிய பெண், கணவனை இழந்த விதவை என்ற பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களைக் கடக்கும் போது அவளிடம் உறைந்திருக்கும் ஆற்றல் (சக்தி) வெளிப்படும் தன்மை வேறுபடுகிறது. சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளின் அளவும் தன்மையும் வேறுபடுகிறது.

இ) வெவ்வேறு பருவங்களூடே பயணிக்கும் யாழ்ப்பாணத்துப் பெண் ‘கட்டுதல்’ (Binding), ‘மழித்தல்’ (Shaving) என்ற இரட்டைக் குறியீடுகள் சார்ந்த பண்பாட்டு வழமைகள், நம்பிக்கைகள், சடங்குகள் (Rituals) ஆகியவற்றிற்கமையத் தன் நடத்தையை வடிவமைத்து கொள்கிறாள். 

குழந்தைப்பேறு, பூப்புச் சடங்கு, திருமணம், மரணச் சடங்கு ஆகியவற்றில் ஆற்றப்படும் சடங்குகளில் வெளிப்படும் பண்பாட்டுக் குறியீடுகள் (Cultural Symbols), கென்னத் டேவிட் ஆய்வில் நுட்பமான முறையில் விளக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கையில் 15 – 45 வயதுக்காலம் மிக முக்கியமானது. இக்காலம் கருவளம் (Fertility) மிக்க காலமாகும். குழந்தைகளைப் பெறும் தகுதியுடைய இக்காலத்தில் பெண் கணவனுக்குக் ‘கட்டுப்பட்டு’ வாழ வேண்டும் என்பது சமூகம் விதிக்கும் ஒழுக்க நெறியாகப் போற்றப்படுகிறது. ‘கட்டுதல்’ (Binding), பெண் உடலின் மயிரை மழித்தல் (Shaving) என்னும் இரட்டைக் குறியீடுகள் சார்ந்த வழமைகளையும் சடங்குகளையும் கென்னத் டேவிட் இக்கட்டுரையில விபரித்துள்ளார். பருவமடைந்தது முதல் ஏறக்குறைய 45 வயது வரையான (மாத விடாய் நின்று விடுதல் {Menopause} என்னும் நிகழ்வின் தொடக்கம் வரை) காலத்தில் பெண்கள் மீது சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் நுட்ப விபரங்களுடன் இக் கட்டுரையில் விபரிக்கப்படுகின்றன. இளம் விதவைகள் குடும்பம் என்ற சிறைக்குள், ஆண் தலைமையின் கீழ் படும்பாடுகளையும் இக்கட்டுரை மூலம் புரிந்து கொள்ள முடியும். போரின் காரணமாக விதவைகளாக்கப்பட்டோரான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வடக்குக் – கிழக்கு மாகாணங்களில் 90,000 வரை உள்ளதாகக் கூறப்படுகின்றது. இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு இவ் விதவைகளின் இரங்கத்தக்க நிலை மனக் கண்ணில் காட்சியாவதோடு கண்களில் ஈரத்தை வரவழைப்பதாகவும் உள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை தமிழ்ப் பெண்ணியவாதச் செயற்பாட்டளர்கள் கண்களில் இன்றுவரை படாமல் போனது எமக்கு வியப்பைத் தருவதாகவே உள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4719 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)