வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 3
Arts
8 நிமிட வாசிப்பு

வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் – 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு – பகுதி 3

December 22, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை

நொத்தாரிஸ் பதவி நியமனம் – நல்லூர்

பொற்கொல்லர்

1864ஆம் ஆண்டில் நல்லூர் பகுதியில் பொற்கொல்லர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபர் டைக் நொத்தாரிஸ் பதவிக்கு நியமித்தார். இந்த நியமனத்திற்கு அப்பகுதியின் உயர்சாதித் தலைமைக்காரர்களும், முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட்டனர். தமது முடிவை நியாயப்படுத்தும் குறிப்புகளை டைக் பதிவுசெய்தார். நல்லூர் பகுதியில் உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்படும் நபர் ஒருவருக்கு முன்னர் அநீதி இழைக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அந்தப் பின்னணியிலேயே தம் நியமனம் சரியான முடிவு எனக் குறிப்பிட்டார். சமுகமளித்திருந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் அவர் நேர்முகம் செய்து குறிப்புக்களை எழுதி கொண்டார். அங்கிருந்த தலைமைக்காரர்களிடம், மக்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றார். பொது விசாரணைகளில் சாதி பற்றிய வினாக்கள் கேட்கப்படுவதோ, பத்திரங்களில் பதிவுசெய்வதோ 1845இல் அனுப்பப்பட்ட அரசாங்க அறிவுறுத்தலின்படி தவறானபடியால் நேர்முகத்தின்போது டைக் அந்த விபரங்களை கேட்டறியவில்லை. இறுதியில் தமது தெரிவை அவர் அறிவித்தவேளை தெரிவுசெய்யப்பட்ட நபரே தாம் பொற்கொல்லர் சாதியை சேர்ந்தவர் எனக்கூறினார். அதைக் கேள்வியுற்ற பின்னர் டைக் தமது முடிவை மாற்றவில்லை. தம்மிடம் உயர்சாதியினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் முன் எண்ணம் இருக்கவில்லை எனவும், தனது நோக்கம் சரியானது என்றும் டைக் குறிப்பிட்டார். சாதி உணர்வுகள் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருந்ததையும், அரசாங்க நடைமுறைகளின் மாற்றம் மக்களின் மனப்பாங்குகளை அதிகளவில் மாற்றவில்லை என்பதையும் மேற்படி சம்பவம் உணர்த்துவதாக இருந்தது. நிர்வாக நடவடிக்கைகளாலும், சட்டங்களை ஆக்குவதாலும் யாழ்ப்பாண மக்களின் மனபாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மிசனரிகளும், சாதிநடைமுறைகளும்

View of St. Paul's School, Jaffna, Ceylon (1)

கிறிஸ்தவ மிசனரிகளின் மதம் பரப்பும் பணியும் சாதிப் பிரிவினைகளாலும், சாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டது. மிசனரிகள் தமது பணிகளை ஆரம்பித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் 1850களில் கூட சாதிப்பிரச்சினை பலமான ஒரு சக்தியாக இருப்பதை உணரமுடிந்தது. ஆயினும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்ட ஆங்கிலக்கல்வியை யாழ்ப்பாணத்தவர்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கவனத்தில் கொள்ளாது பெற்றுக்கொள்வதற்கு முன்வந்தனர். இருந்தபோதும் கிறிஸ்தவ மிசனரிகளும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. யாழ்ப்பாண நகரத்தில் வண்ணார்பண்ணை வெல்சியன் மெதடிஸ் பாடசாலையில் சலவைத்தொழில் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்ட போது உயர்சாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவரை பாடசாலையில் இருந்து மிசனரிகள் நீக்கிவிட்டனர். பின்னர் 1847ஆம் ஆண்டில் வெல்சியன் மிசன் பாடசாலை ஒன்றில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. உயர்சாதி மாணவர்கள் தாமாகவே பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டனர். பாடசாலைகளில் வெவ்வேறு சாதிப் பிள்ளைகளிடையே ஊடாட்டமும், தொடர்பும் ஏற்பட்டமை நல்லதொரு முன்னேற்றமே ஆயினும் சாதி உணர்வு தமிழர்களிடையே மேலோங்கியே இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட பிள்ளைகளோடு தொடர்பு கொள்வதால் தீட்டு ஏற்படும் என்ற எண்ணம் நீடித்தது. (தனஞ்செயராஜசிங்கம் 1974)

கிறிஸ்தவ மதத்தில் எந்தவொரு பிரிவிலாவது ஒருவர் புதிதாகச் சேர்ந்து கொண்டால், அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்று சந்தேகிக்கும் நிலை யாழ்ப்பாணத்தில் நீடித்தது. இவ்வாறே கிறிஸ்தவப் பாடசாலையில் கல்விகற்பவர்களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டனர். அரசாங்க நிர்வாகத்துறையினராலும் கிறிஸ்தவ மிசனரிகளாலும் யாழ்ப்பாணத்தில் ஆழவேரூன்றியிருந்த சாதி மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. 20ஆம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் சாதிப்பாகுபாடும், சாதி உணர்வும் நீடித்தது. தலைமைக்காரர் பதவிகளில் இருந்தோரும் சாதி உணர்வு உடையவர்களாயும், சாதி முறையில் மாற்றத்தை வன்மையாக எதிர்ப்பவர்களாயும் இருந்தமையும் சாதியின் நீடிப்புக்குரிய காரணமாகும்.

யாழ்ப்பாணத்தின் பிராமணர்கள்

இந்தியாவின் சாதிமுறையும் யாழ்ப்பாணத்தின் சாதிமுறையும் வேறுபட்டவை. இந்தியாவில் சாதிப்பாகுபாடும் வேற்றுமைகளும் யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடுகையில் மிகத் தீவிரமானதாக உள்ளது. இந்திய சாதிமுறையின் திரிபுபட்ட ஒரு வடிவமாகவே யாழ்ப்பாணத்தின் சாதிமுறை காணப்படுகிறது. பிராமணர்களுக்கும் பிற இருபிறப்பாளர்களான சாதிகளுக்கும் இந்தியாவில் கொடுக்கப்படும் சடங்கியல் அந்தஸ்து யாழ்ப்பாணத்தில் கொடுக்கப்படுவதில்லை. யாழ்ப்பாணத்தில் வேளாளர்களே கோவில்களின் முகாமையாளர்களாகவும் உள்ளனர். பிராமணர்கள் அவர்களின் சேவகர்களாக கோவில்களில் பூசகர் வேலையைச் செய்கின்றனர், 1851ஆம் ஆண்டில் நல்லூரில் உள்ள பிரதான கோவில் ஒன்றின் பூசகர்களாக குறிப்பிட்டதொரு பிராமணர் குடும்பத்தை ஏற்றுகொள்வதற்கு கோவில் முகாமையாளர் மறுப்பு தெரிவித்தார். அரசாங்கமும் கோவில் முகாமையாளர் இவ்விடயத்தில் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனத் தீர்ப்பளித்தது. யாழ்ப்பாணத்தின் உயர்சாதியினரான வேளாளர்கள் இருபிறப்பாளர்கள் என்ற சடங்கியல் அந்தஸ்துக்கு உரித்துடையவர்கள் அல்லர். சாதியால் எழும் தீட்டு என்னும் கருத்து யாழ்ப்பாணத்தில் பலமாக இருந்த போதும் உட்சாதியிடையே அகமணம் கடைபிடிக்கப்படுவதில் நெகிழ்வு போக்கு காணப்பட்டது. இதனால் சாதிகளிடையே கலப்பு ஏற்படவும் சாதி இறுக்கம் குறையவும் வழி ஏற்பட்டது.

வன்னி பகுதியில் சாதி

யாழ்ப்பாண குடாநாட்டிற்கு தெற்கே அமைந்துள்ள வன்னிப் பிராந்தியமும் வட மாகாண அரசாங்க அதிபரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது வன்னி மக்களின் அரை பங்கினர் வேளாளர் சாதியினராவார். கரையார் சமூகப்பிரிவினர் எண்ணிக்கையில் அடுத்த நிலையில் உள்ளனர். நளவர், பள்ளர், சாணார் ஆகிய சாதிகளும், பிற சாதிகளும் வன்னியில் பரவியுள்ளன. ஒஸ்வால்ட் புறோடி என்னும் உதவி அரசாங்க அதிபர் வன்னி மாவட்டத்தின் வன்னியர் சாதி பற்றி சுவாரஸ்யமான குறிப்பு ஒன்றை 1856ஆம் ஆண்டில் பதிவு செய்தார். “ஒரு சாதிக்குழு இப்பிரதேசத்திற்குரிய பிரத்தியேக குழுவாக உள்ளது. வன்னியர் என்ற பெயருடைய இக்குழு இலங்கையின் பிறபகுதிகளின் உயர்சாதியை விடத் தாமே உயர்ந்தவர் எனக் கூறுவர். குறைந்த தரப் பதவி நியமனங்களை தமது அந்தஸ்துக்கு இழுக்கானவை என நிராகரித்த இக்குழுவினர் கல்வி கற்பதையும் தமது அந்தஸ்துக்கு இழுக்காகக் கருதினர். எல்லா உயர் பதவிகளுக்கும் தம்மையே நியமிக்கவேண்டும் என்ற இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இப்போது இவர்கள் வேளாளர் சாதியினருடன் கலப்புமணம் செய்துகொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வேளாளர் சாதிக்குள் இவர்கள் உள்வாங்கப்பட்டுவிடுவர்.” புறோடி ஒரு தனித்த சாதி பிரிவை அல்லாது வன்னியின் ஒரு உபகுழுவையே குறிப்பிட்டார் என எண்ண வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் வட இலங்கையின் வன்னிப்பகுதியின் சமூகக் கட்டமைப்பின் தனித்துவமான கூறாக இது விளங்குகிறது. (LEACH E.R.1960)

தொடக்க காலத்தில் பிரித்தானிய அதிகாரிகளிடம் சிங்கள சமூகம் பற்றியும் இதனையொத்த குழப்பமான கருத்து நிலவியது. ‘முதியான் சே’ என்ற தனியான சாதிக்குழு சிங்கள உயர்சாதிகளிலும் மேலானதொன்றாக இருந்ததென அதிகாரிகள் கருதினர். முதியான் சே ஒரு சாதி அல்லது உப சாதி எனக் கருதப்பட்டது.

வன்னியர் சாதி அல்லது ‘வன்னிகுறு’ (vannihuru) என்பதை வன்னி மாவட்டத்திலோ, நுவரகலாவியாவிலோ தனியான சாதிப்பிரிவாக அடையாளம் காண முடியாது. இதனை ஒரு சமூக வகுப்பாக அல்லது உபகுழுவாக அடையாளம் காண்பதே சரியானது. தம்மிடையே போட்டியிடும் வேளாளர் குழுக்கள் வன்னியில் இருந்து வந்த பின்புலத்தில் வன்னியர் என்ற உபகுழு மேலெழுந்தது எனலாம். (LEWIS. J. P 1856 புறோடியை மேற்கோள் காட்டுகிறார்) நுவரகலாவிய யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்குத் தெற்கே, அன்றைய வடமாகாணத்தின் பகுதியாக விளங்கியது. இங்கு வாழ்ந்தோர் சிங்களவர்களாவர். பழக்கவழக்கங்களிலும் உணர்விலும் தோற்றத்திலும் இம்மக்கள் கண்டியச் சிங்களவர்களேயாவார். முன்னைய கண்டிய அரசின் கீழ் கண்டியில் காணப்பட்ட எல்லா சாதிக் குழுமங்களும் நுவரகலாவியவிலும் காணப்பட்டன. அத்தோடு ஓரிரு சாதிகள் நுவரகலாவியவிற்கே உரிய தனித்துவமுடைய சாதிகளாகவும் இருந்தன.

இரும்புவேலை செய்யும் கொல்லர் அல்லது பானை சட்டி வனையும் குயவர் எனப் பல தொழில்களைச் செய்யும் சாதியினர் இங்கு வாழ்ந்தாலும், கொல்லர் குயவர் ஆகிய அனைவரும் விவசாயத்தொழில் செய்பவர்களுமாவர். எவரும் தமது வாழ்வாதாரத்திற்காக தமது சாதி தொழிலை மட்டுமே நம்பி இருப்பதில்லை. ஆகையால் நுவரகலாவிய பகுதியின் கண்டி சிங்களவர் உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளாவர். கடை வைத்திருத்தல் வியாபாரம் முதலிய தொழில்களில் இப்பகுதியின் குடியேறிகளான கரைநாட்டு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய இனத்தவர்கள் உள்ளனர். இம்மூன்று இனத்தவர்களும் நுவரகலாவாவிய எங்கும் பரவலாக உள்ளனர். (IEVERS. R. W 1859)

நுவரகலாவியவின் சமூக கட்டமைப்பில் சாதி மிகமுக்கியமான கூறாகும், சாதியின் தாக்கம் அங்கு வெளிப்படையாக தெரிந்தது. அம்மாவட்டம் பலகிராமங்களின் கூட்டத்தொகுதியாக விளங்கியது. ஒவ்வொரு கிராமமும் சாதி அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது. பிரித்தானிய அதிகாரிகள் கொய்கம சாதியினருக்கு (தமிழ் வேளாளர்களுக்கு சமதையானவர்கள்) உயர்மதிப்பை வழங்கினர். அவர்களை மரபுவழி ஆளும் உயர்குழுவாக மதிப்புக்கொடுத்தனர். ஆயினும் கொய்கம அல்லாத பிறசாதிகளின் தலைவர்களையும் தலைமைக்காரர்களாக நியமித்தனர். இவ்வாறு வெவ்வேறு சாதியினருக்கு அவ்வவ் சாதியில் இருந்தே தலைமைக்காரர்களை நியமிப்பது நிர்வாகத்தை இலகுவாக கொண்டியக்க உதவியது.

நுவரகலாவ வன்னிக்குறு (vannihuru) என்ற பிரிவினரே மக்களால் உயர் சாதியாக மதிக்கப்பட்டனர். வெளியிடங்களில் உயர்சாதியாக கருதப்பட்ட வேளாளர் சாதியை விட வன்னிக்குறு உயர்சாதியாக கருதப்பட்டது. ஆயினும் வன்னிக்குறுவை தனியான சாதியாக கொள்ளமுடியவில்லை. அதனை பொருளாதாரநிலையிலும் சமூக அந்தஸ்திலும் உயர்ந்த ஒரு சமூக குழுவாக உயர்ந்தவர்களான வேளாளர்களுக்குள் முதன்மை இடம் பெறுபவர்களாகவே கருதவேண்டும்.

கண்டிய சாதிப்படித்தரத்தில் உயர்ந்த இடம் வன்னிக்குறுவிற்கு இருந்தது. உயர் பதவிகளுக்கு வன்னிக்குறு பிரிவினரே நியமனம் செய்யப்பட்டனர்.

குறிப்பு : ‘CASTE IN NORTHERN SRI LANKA AND BRITISH COLONIAL ADMINISTRATIVE PRACTICE IN THE MID 19TH CENTURY : COMPROMISE AND EXPEDIENCY, என்ற தலைப்பில் 1988 ஆம் ஆண்டு Sri Lanka journal of social sciences (j. s. s) 1988 11 (1&2) என்னும் இதழில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளைஅவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்


ஒலிவடிவில் கேட்க

20423 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)