யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு
Arts
8 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – பகுதி 1

April 7, 2023 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம்

கட்டுரைக்குள் நுழைய முன்னர்

’Caste, Religion and Ritual in Ceylon’  என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு  Anthropology Quarterly என்னும் பருவ இதழில் (1965.38(4): 218 -227) ஆய்வுக்கட்டுரையொன்றினை றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம்  ஆங்கிலத்தில்   வெளியிட்டார். இவ்வாய்வில் கூறப்படும் கருத்துக்களைத் தழுவியும், சுருக்கியும் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தில் ‘இலங்கை’ (Ceylon) எனக் குறிப்பிட்டுள்ளபோதும், கட்டுரையாசிரியர் யாழ்ப்பாணத்தைப் பற்றியே பேசுவதால் தமிழில்  கட்டுரையின் தலைப்பை ‘யாழ்ப்பாணத்தில் சாதி சமயம் சடங்கு’ எனக் குறிப்பிட்டுள்ளோம். றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம் யாழ்ப்பாணம் மானிப்பாய் கிராமத்தில் பிறந்தவர். 1950களின் முற்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலைச் சிறப்புப் பாடமாக கற்று  பட்டம் பெற்றவர். பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோருடன் சமகாலத்தில் மாணவராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். முற்போக்குச் சிந்தனையுடைய அறிவாளியான இவரின் ஆக்கங்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. இதனாற்போலும் தமிழுலகம் இவர் பற்றி அறியாதுள்ளது. கட்டுரையின் தமிழாக்கத்தை படிப்பதற்கு முன்னர் வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில குறிப்புக்களைக் கூறுவது பொருத்தமுடையது.

old-jaffna
  • தமிழாக்கத்தில் சாதிப்பெயர்கள் குறிப்பிடப்படுதல் இயன்றளவிற்குத் தவிர்க்கப்பட்டுள்ளது. ‘சாதி’ என்ற சொல்லிற்கு பதிலீடாக ‘சமூகம்’ ‘சமூகக்குழு’ ஆகிய சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
  • யாழ்ப்பாணத்தில் 1965 காலத்தில் சமயம், சடங்கியல் என்பனவற்றில் முக்கியமான வகிபாகத்தைப் பெறுவனவாக 10ற்கும் உட்பட்ட சாதிகளையே கட்டுரையாசிரியர் அடையாளம் காண்கிறார். ஆகையால் யாழ்ப்பாணத்தின் சாதிக்கட்டமைப்பைப் பற்றிய முழுமையான சித்திரத்தை இந்தக்கட்டுரை  தரவில்லை. அவ்வாறான சித்திரத்தை தருவது கட்டுரையாசிரியரின் நோக்கமாகவும் இருக்கவில்லை என்றே கருதலாம். 
  • இவ்வாய்வில் காட்டப்படும் கிராமம் யாழ்ப்பாணக் கிராமங்களின் முக்கியமான கூறுகளைக் கொண்டதான கற்பனை மாதிரி (IDEAL TYPE ) ஆகும். ஸ்தூலமாக புறநிலையில் இருப்புடைய ஒரு கிராமமாக இதனைக் கொள்ளக்கூடாது. இனி கட்டுரைக்குள் செல்வோம்.

அறிமுகம்

சாதியமைப்பு, சமயம், சடங்குகள் என்ற மூன்று விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றுக்கிடையிலான தொடர்புகள் பற்றிப் பல அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். கோகார்ட் என்ற அறிஞர், தொழில் அடிப்படையிலான வேலைப்பகுப்பின்படியே சமூகக்குழுக்களின் சடங்குகள் (rituals) பிரித்தளிக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்டார் (HOCART, 1938). இதனைக் கொண்டு சாதிமுறையின் தோற்ற மூலத்தைக் கூறுதல் ஊகத்தின் படியானதாகவே அமைய முடியும். நாம் இங்கு முன்வைக்கும் வினா வேறு வகைப்பட்டது. சமயத்துக்கும் சடங்குகளுக்கும் உள்ள  தொடர்பு யாது? என்பதே நாம் முன்வைக்கும் ஆய்வு வினா. நுண்ணிலை அவதானிப்பின் மூலமே இதற்கான விடையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தரவுகளை அடையலாம்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் ஒருமைத் தன்மையுடையதான பண்பாட்டை உடைய சமூகமாக உள்ளனர் (RYAN, 1953). இந்தப்பண்பாட்டில் சாதியமைப்பு, சமயம், சடங்கு என்பவை சமூக ஒருங்கிணைவிற்கும் கிராமத்தின் ஐக்கியப்பட்ட செயற்பாட்டிற்கும் எவ்வாறு துணைபுரிகிறது என்பதும் இவ்வாய்வில் எடுத்துக்காட்டப்படும்.

jaffna-musicians

யாழ்ப்பாணத் தமிழர்கள் இந்து சமயத்தினர் அவர்கள் தமிழ்மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். இதனால் இந்தியத் தமிழர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்துள்ளனர். வரலாற்றில் காலத்திற்கு காலம் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறினர். இதனால் இலங்கைத் தமிழர்களின் சமூக நிறுவனங்கள் தென்னிந்தியச் சமூக நிறுவனங்களின் நீட்சியாகவே அமைந்துள்ளன. ஆயினும் இந்நிறுவனங்களில் யாழ்ப்பாணத்திற்குரிய தனித்துவ அம்சங்களும் உள்ளன. யாழ்ப்பாணத் தமிழர்கள் தமது பண்பாட்டினை இன்றும் கூடத் தமிழக உறவினால் வளர்த்து  வருகின்றனர். இலக்கியம், இசை, ஏனைய கலைகள் என்பவற்றில் இவ்விரு பகுதியினருக்கும் இடையே பொதுவான விடயங்கள் நிறைய உள்ளன. தென்னிந்தியாவின் கோவில்களுக்கு யாழ்ப்பாணத்தவர்கள் தலயாத்திரை செய்துவந்துள்ளனர். ஆயினும் இலங்கை அரசு இப்பண்பாட்டு உறவை ஆதரிக்கும் பதிற்குறியை வெளியிடுவதில் தாமதத்தை காட்டிவந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இந்து சமயத்தவர்கள் என்று கூறப்பட்ட போதும், இது அவர்கள் பற்றிய சரியான வரையறையாக அமையவில்லை. இலங்கைத் தமிழர்களில் 12% த்தினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர்.  இந்தக்கிறிஸ்தவர்களை நீக்கிய எஞ்சிய தமிழர்களின் சமயம் இந்து சமயத்தின் பெருநெறி (Great tradition), நாட்டார் சமயம் என்னும் இருசமய மரபுகளை உள்ளடக்கியதாய் உள்ளது. சிவன், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு, காளி ஆகிய தெய்வங்களுக்கான கோவில்கள் பெருநெறி சார்ந்தவை. இந்தக்கோவில்களில் சமஸ்கிருத நெறிப்பட்ட (சிறினிவாஸ், 1952) ஆகம முறைப்படியான சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளையும், பூசைகளையும் பிராமணர்கள் நிகழ்த்துவர். நாட்டார் தெய்வக் கோவில்களில் பிராமணர்கள் பூசை செய்வதில்லை. இவை சிறிய கோயில்களாக உள்ளன. வைரவர், முனி, தாய்த்தெய்வத்தின் பல்வேறு வடிவங்களான தெய்வங்கள் இந்தக்கோவில்களில் வழிப்படப்படுகின்றன. இந்தக்கோவில்களின் முக்கியமான சடங்குகளாக ஆடு, கோழி, ஆகிய மிருகங்களைப் பலியிடுதல், பழங்கள், உணவு வகைகள் ஆகியவற்றைப் படையல் செய்தல், பொங்கல் இட்டுப் படைத்தல் ஆகியன இடம்பெறுகின்றன. இறைச்சி, மீன் ஆகிய அசைவ உணவுகளை உண்ணுதலைத் தவிர்த்தல் இந்து சமயத்தின் உயர் வழக்காக அமைந்து வரும் இன்றைய சூழலில் நாட்டார் தெய்வக் கோயில்களில் மிருகபலி சடங்குகள் நடைபெறுவதை அவதானிக்கமுடிகிறது (CARTMAN,1958).

முதலாவது வகையான சிவன், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய ஆகமவழிபாட்டுக் கோயில்களின் உடைமையாளர்களாக யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க சாதியான வேளாளர் உள்ளனர் (Banks 1960). இரண்டாவது வகையான நாட்டார் தெய்வங்களின் கோயில்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வதியும், பிற சாதியினரின் கோயில்களாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வதியும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கோயிலாவது உடைமையாக இருப்பதைக் காணலாம்.  ஒரு சாதியின் குடியிருப்புப் பகுதிக்குள் பல நாட்டார் தெய்வக் கோயில்களும் இருப்பதுண்டு. தனித்தனி சாதிக்குரியனவாக விளங்கும் நாட்டார் தெய்வக் கோயில்களின் மிருகபலி போன்ற சடங்குகளில் பிற சாதியினரும் கலந்துகொள்வதுண்டு. இவ்வாறு கிராமத்தின் கோயில்கள் யாவற்றிலும் (பெருநெறிக் கோயில்கள், சிறுநெறிக் கோயில்கள்) கிராமத்துச் சாதிகள் அனைத்தும் பங்குகொள்வது கிராமத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்கு உதவியிருப்பதை காணலாம்.

சாதியமைப்பு

யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பை விபரிப்பதற்காக கற்பனையான மாதிரி கிராமத்தை பற்றி நாம் பேசவிருக்கின்றோம். இம்மாதிரி கிராமத்தில் (Ideal type) சமயம், சடங்குகள் என்ற இரண்டிலும் முக்கியமான வகிபாகத்தைப்பெறும் முக்கிய சாதிகள் யாவும் (8 – 10) இருப்பதாக காட்டவேண்டும். ஆனால் உண்மையில் அப்படியான கிராமங்களை யாழ்ப்பாணத்தில் காண்பது அரிது. சாதியமைப்பின் புரிதலுக்கு இத்தகைய மாதிரி (Ideal type) தேவை.

இன்னொரு விடயத்தையும் கூறிவிடுதல் பொருத்தம் உடையது. யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பை அந்நியர் ஒருவர் ஆராய்வதற்கு கள ஆய்வுமுறையைத் தேர்ந்து கொள்வார். கள ஆய்வுமுறைக்கு தேர்ந்தெடுத்த கிராமத்தில் ஓரிரு ஆண்டுகள் வாழ்ந்து பங்கேற்பு அவதானிப்பு (participant observation) முறையில் ஆய்வாளர் ஆய்வினைச் செய்வார். நான் அப்படியான ஆய்வுகள் எதனையுமே செய்யவில்லை. நான் யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்தவன். என் அனுபவத்தில் கண்டும், கேட்டும் அறிந்தவற்றையும் நேரடியான பங்கேற்பு அவதானிப்பு அறிவையும் கொண்டு நான் சாதி, சமயம், சடங்கு பற்றி எழுதுகிறேன்.

கிராமத்தின் குடியிருப்புகள் பல வட்டாரங்களாகப் பிரிபட்டுள்ளன. கிராமத்தின் பெரும்பான்மையான வட்டாரங்களில் பெரும்பான்மையான சாதியான வேளாளரின் குடியிருப்புகள் உள்ளன. இவற்றையடுத்து இரண்டொரு வட்டாரங்களில் வேளாளர்களுடன் நெருங்கிய உறவுடைய இன்னொரு சமூகக்குழுவின் (கோவியர்) குடியிருப்புகள் உள்ளன. இந்தச்சமூகக்குழுவினர் வேளாளர் குடும்பங்கள் சிலவற்றின் வீட்டுப்பணியாளர்களாகவும், அவர்களின் காணிகளில் உழுதுபயிரிடும் வேலையைச் செய்பவர்களாகவும் உள்ளனர். பொருளாதார நிலையில் பணியாள் உறவுடையவர்களான இச்சமூக குழுவினர் சமூக அந்தஸ்தில் வேளாளர்களுக்குச் சமதையானவர்களாக உள்ளனர். இந்தச்சடங்கியல் நிலை சமத்துவம் இவர்களுக்கு உண்டு (Banks, 1960).

முடிதிருத்துவோர்

அடுத்ததாக கைவினைத் தொழில்களைச் செய்வோரான மூன்று சமூகக்குழுக்களின் (தச்சர், கொல்லர், பொற்கொல்லர்) குடியிருப்புகள் அமைந்துள்ள வட்டாரங்களைக் காணலாம். இதுவரை குறிப்பிட்ட சமூகக்குழுக்களை நாம் உள்ளக சாதிகள் என்று ஹட்டன் (Hutton) குறிப்பிடும் வகைக்குள் சேர்த்துப் பார்ப்பது சமூகக்குழுக்களின் இடையூடாட்டத்தை புரிந்துகொள்ள உதவும். கோவில்களில் பூசகர் பணிக்கு உதவியாளர்களான வீரசைவர்களும் ‘உள்ளக’ என்ற வகைக்குள் சேர்க்கப்படவேண்டியவர்களாவர். இவ்வாறே கோயில் சடங்குகள், திருமணம் ஆகியவற்றில் சடங்கியல் முறையில் மேளம், நாதஸ்வரம் என்னும் மங்கல இசையைப் பொழியும் சமூகக்குழுவினரும் ‘உள்ளக’ வகையினரே. முடிதிருத்துவோர் சமூகக்குழுவும் ‘உள்ளக’ வகையினரே. ஆயினும், அவர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படுவதில்லை. மாறாக யாழ்ப்பாணத்தில் சலவைத்தொழில் செய்வோர் வேளாளர் வீடுகளுக்கும், கோயில்களுக்கும் நுழைவு அனுமதி உடையவர்களாக ‘உள்ளக’ சமூகக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ‘உள்ளக’ சமூகக்குழுக்களில் கட்டுப்பட்டவர்கள் (Bound) என்ற பிரிவினரைத் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். கைவினைச் சமூகக்குழுக்களும், மீன்பிடித் தொழில் செய்வோரான சமூகக்குழுக்களும் உள்ளகக் குழுக்களே என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் இந்தக்குழுக்கள் எவ்வகையிலும் வேளாளர் குடும்பங்களுடன் ‘கட்டுப்பட்டவர்களாய்’ இருப்பதில்லை, அந்தக்குழுக்கள் சுதந்திரமான இருப்பை உடையன என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

யாழ்ப்பாணத்தின் சாதிமுறையில் ‘புறச்சமூகம்’ (out caste) என்ற வகைக்குழுக்கள் இருப்பதைக் காண்கின்றோம். சமய நடவடிக்கைகளிலும், சமயச்சடங்குகளிலும், அகச்சமூகக்குழுக்களான ‘உள்ளக’ (Interior) குழுக்களின் வகிபாகம், புறக்குழுக்களின் வகிபாகத்தில் இருந்து வேறுபடுவதை அடுத்துக் காண்போம். பெருநெறிக்கோயில்களின் திருவிழாக்கள், நாட்டார் தெய்வக்கோயில்களின் வேள்வி அல்லது மிருகபலிச் சடங்குகள், வீட்டுச்சடங்குகள் (domestic rituals) என்பன அடுத்து விபரிப்புக்கும், பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்படும்.

குறிப்பு  : ’Caste, Religion and Ritual in Ceylon’  என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு  Anthropology Quarterly  (1965.38(4): 218 -227)  என்னும் பருவ இதழில் றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20774 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)