மாடு வளர்ப்பும் சூழல் மாசடைதலும்
Arts
10 நிமிட வாசிப்பு

மாடு வளர்ப்பும் சூழல் மாசடைதலும்

January 21, 2025 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கறவை மாடு வளர்ப்பு சூழல் மாசடைதலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான தொழிலாக இருக்கிறது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மிக முக்கியமான மெதேன் பச்சை வீட்டு வாயுவை வெளியேற்றும் முக்கிய காரணியாக கறவை மாடு வளர்ப்பு அமைகிறது. உலகின் பச்சை வீட்டு வாயு விளைவில் 14.5% கால்நடை வளர்ப்பின் பக்க விளைவுகளாலேயே நிகழ்கிறதாம் (FAO அறிக்கை). மேலும், பல்வேறுபட்ட சூழல் பாதிப்புகளையும் இந்தத் துறை ஏற்படுத்துகிறது. கால்நடை வளர்ப்பின் செலவுகளைக் கருத்தில் எடுக்கும் போது கால்நடை வளர்ப்பால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை யாரும் கருத்திற் கொள்வதில்லை. இது மிகவும் பாரதூரமான தவறாகும். இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு ஏற்படுத்தும் சூழல் பாதிப்புகளையும் சாத்தியமான காப்பு நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் ஆராய்கிறது.

பச்சைவீட்டு விளைவுகள் ஏற்படுதல்

உலக வெப்பமுறுதலை ஏற்படுத்தும் மெதேன், நைற்றஸ் ஒக்சைட், காபனீரொக்சைட் போன்ற பச்சை வீட்டு வாயுக்கள் கால்நடை வளர்ப்பின் பக்கவிளைவுகளாகும். பசுக்கள், எருமைகள், ஆடுகள், செம்மறி போன்றவற்றின் சமிபாட்டுச் செயன்முறை (Enteric Fermentation) காரணமாக அதிகளவில் மெதேன் உருவாகிறது. அத்துடன் எருக்களை சேமித்தல் மற்றும் கையாளும் போதும் இந்த வாயு வெளிப்படுகிறது. மெதேன் காபனீரொக்சைட்டை விட அதிக பச்சை வீட்டு விளைவைத் தருகிறது.

நைட்ரஸ் ஒக்சைட்டும் கணிசமானளவு பச்சைவீட்டு விளைவைத் தரும் வாயுவாகும். கால்நடைகளின் எரு, சிறுநீர் போன்றவற்றை மண்ணுக்கு இடும் போதோ, காற்றின்றிய நிலையில் சேமிக்கும் போதோ இந்த வாயு வெளிப்படுகிறது. மேலும், பசுந்தீவனங்களுக்கு இடப்படும் இரசாயன உரங்கள் காரணமாகவும் இந்த வாயு வெளிப்படுகிறது. நைற்றஸ் ஒக்சைட், காபனீரொக்சைட்டை விட அண்ணளவாக முந்நூறு மடங்கு பச்சைவீட்டு விளைவைத் தர வல்லது.

காடழித்து நிலங்களை கையகப்படுத்தி, கால்நடைப் பண்ணை செய்யும் போது அதிகளவில் காபனீரொக்சைட் வாயு உற்பத்தியாகிறது. எரிபொருட்களை கொண்டு சக்தியை பெறுதல், இயந்திரங்களின் பாவனை, உணவு உற்பத்தி, விநியோகம், களஞ்சியப்படுத்தலுக்கு பயன்படும் சக்தி மூலங்கள் காரணமாக காபனீரொக்சைட் உருவாகிறது.

மேற்கூறிய முக்கிய பச்சைவீட்டு வாயுக்கள் கால்நடைப் பண்ணைகளின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகி, உலக வெப்பமுறலுக்கு காரணமாக அமைகின்றன.

நீர்நிலைகளின் பாதிப்பு

அதீத அளவில் பசுந்தீவன மற்றும் கால்நடைத்தீவன தானிய உற்பத்திக்கு பயன்படும் உரங்கள் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடைகின்றன; குறிப்பாக நைதரசன் மற்றும் பொஸ்பரஸ் மூலகங்கள். இதனால் நீர்நிலைகளில் அல்கா மலர்தல் போன்ற செயற்பாடுகள் ஏற்பட்டு நீர்நிலைகளில் எந்தவித உயிர்களும் வாழமுடியாத நிலை (Dead zone) ஏற்படுகிறது.

கால்நடை வளர்ப்பில் பயன்படும் பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்களில் காணப்படுகின்ற நுண்ணங்கிகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், இரசாயனங்கள் நீர்நிலைகளையும் நிலத்தடி நீர் ஆதாரங்களையும் அடைந்து அவற்றை மாசுபடுத்துகின்றன.

முறையாக சேமிக்கப்படாத எரு நீர்நிலைகளை அடைவதையும், கணிசமான அளவான கால்நடைப் பண்ணைகளின் அமைவிடம் நீர்நிலைகளை அண்மித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. பண்ணைகளின் கழிவுகள் கொண்ட நீர் சுத்திகரிக்கப்படாது நேரடியாக நீர்நிலைகளுக்கு விடுவிக்கப்படுகின்றன. இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்பு குறிப்பிட்டது போல அந்த நீர்நிலைகளில் எந்தவித உயிர்களும் வாழமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றன. அதாவது அங்கு வாழும் மீன்கள், தாவரங்கள் ஏனைய நுண்ணுயிர்கள் போன்றன அழிவடைகின்றன. மனிதர்கள் அவற்றை நுகர முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த நீரை அருந்தும் மனிதர்கள் நோய்வாய்ப்படுகின்றனர் (Public Health Concern).

அதீத நீர்ப் பாவனை

கால்நடை வளர்ப்பு அதிக நீர்த் தேவைப்பாடுடைய செயற்பாடாகும். ஒரு கறவை மாட்டுக்கு நாளாந்தம் சராசரியாக 80-100 லீட்டர் வரை குடிநீர் தேவைப்படுகிறது. அத்துடன் பண்ணை, மாடுகளைச் சுத்தம் செய்வதற்காகவும் கணிசமான நீர் தேவைப்படுகிறது. வறட்சிக் காலத்தில் சூழலில் நிலவும் அதீத வெப்பத்தைத் தவிர்க்க பயன்படுத்தும் குளிரூட்டும் செயற்பாடுகளுக்கும் கணிசமான நீர் பயன்படுத்தப்படுகிறது. கால்நடைகளின் பசுந்தீவன உற்பத்திக்கும் கணிசமானளவு நீர் பயன்படுகிறது. இப்படியான அதீத நீர்ப் பயன்பாடு சூழலின் குடிநீரின் அளவைக் குறைப்பதோடு, மனித மற்றும் ஏனைய விலங்குகளின் நீராதாரங்களையும் போட்டிக்குள்ளாக்கிறது. இதன் காரணமாக மாற்று வழிகள் மூலம் நீர் பெறப்படுகிறது (மத்திய கிழக்கில் கடல் நீரை நன்னீராக்குவதன் காரணமாக கடற் சூழல் சவாலுக்குட்படுகிறது); நிலத்தடி நீர் அதிகளவில் குழாய்க் கிணறுகள் மூலம் உறிஞ்சப்படுகிறது.

நிலம் பாதிப்படைதல்

முறையாக முகாமை செய்யப்படாத மேய்ச்சல் நிலங்கள் காரணமாக மண்ணின் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது. உறுதித்தன்மை குலைக்கப்பட்டு மண்ணரிப்பு நிகழ்கிறது. மண்ணின் உற்பத்தித் திறன் குறைகிறது. சில இடங்களில் நிகழும் அதீத மேய்ச்சல் ஏனைய காட்டுவாழ் மேய்ச்சல் விலங்குகளையும் பாதிக்கிறது. மேலும் இது அந்நிலங்களில் மனிதக் குடியேற்றங்களின் வருகையை அதிகரித்து மனித – காட்டு விலங்கு மோதலுக்கும் வழிவகுக்கிறது. அதிக மண்ணரிப்பின் மூலம் அகற்றப்படும் மண் நீர்நிலைகளை அடைந்து படையாகப் படிகிறது. இதனால் வெள்ள அனர்த்தம் போன்றன ஏற்படுகின்றன.

கால்நடைகளின் பசுந்தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான எரு மற்றும் இரசாயன உரப் பாவணை, மண்ணின் அமில – கார சமனிலையைப் பாதிப்படையச் செய்வதுடன் அதன் ஊட்டச்சத்து விகிதத்தையும் மாற்றுகிறது. நவீன உழவு இயந்திரங்கள் இயற்கையான மண்ணின் கட்டமைப்பை மிக விரைவாக சேதமாக்குகின்றன. பழைய விவசாயக் கருவிகளை விட ஆழமாக நிலத்தைத் தோண்டுகின்றன. மேலும் ஒரே விதமான பசுந்தீவனங்களை தொடர்ச்சியாகப் பயிரிடுவதும் மண்ணின் ஊட்டச்சத்து விகிதத்தை மாற்றுவதுடன் இரசாயன உரப்பாவனையையும் அதிகரிக்கின்றது.

உலகிலுள்ள விவசாய நிலங்களில் 70% ஆனவை கால்நடை வளர்ப்புக்கு நேரடியாகவும்  (மேய்ச்சல்) மறைமுகமாகவும் (சோளம், சோயா மற்றும் ஏனைய பசுந்தீவன உற்பத்திக்கு) பயன்படுத்தப்படுகின்றன (FAO அறிக்கை) என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

உயிர்ப்பல்வகைமை இழப்பு

கால்நடைப் பண்ணைகளை அமைக்கவும், பசுந்தீவன மற்றும் கால்நடைத்தீவனத் தானிய (சோளம், சோயா) உற்பத்திக்கும், காடழித்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வாழ்ந்த பெரிய உயிர்கள் முதல் நுண்ணங்கிகள் வரை இருப்பிடமின்றி அழிக்கப்படுகின்றன. மனித – விலங்கு மோதலும் நிகழ்கிறது. பசுந்தீவனப் பயிர்கள் ஒற்றைப்பயிராக செய்யப்படும்போதும் உயிர்ப்பல்வகைமை இழப்பு நிகழ்கிறது.

இரசாயன உரப்பாவனை காரணமாக அங்கு வாழும் நுண்ணங்கிகள், பூச்சிகள் என உயிர்ப்பல்வகைமை இழப்பு நிகழ்கிறது. எரு மற்றும் ஊட்டச்சத்துகள் நீர்நிலைகளை அடைவதால் ஏற்படும் அல்கா மலர்தல் (Eutrophication) காரணமாக ஏனைய உயிர்கள் வாழமுடியாத நிலை தோன்றுகிறது.

ஒலி மாசு

கால்நடைகள் கூட்டம் கூட்டமாக வளர்க்கப்படும் போது அவற்றினால் எழுப்பப்படும் ஒலி அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. பெருநகரங்களில் நெருக்கடியான சூழலில் கால்நடைகள் எழுப்பும் ஒலிகள் அயலவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குகிறது. கால்நடைத் தீவன உற்பத்தி ஆலைகளின் இயந்திர ஒலிகளும், கொல்களங்களிலிருந்து எழும் விலங்குகளின் சத்தமும் சூழலை மாசுபடுத்துகிறது.

காற்று மாசு

கால்நடைப் பண்ணைகளிலிருந்து வெளியேறும் அமோனியா போன்ற வாயுக்கள் காற்றை மாசுபடுத்துகிறது. அருகிலுள்ள பொதுமக்கள் இதனால் ஏற்படும் துர்மணத்தால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் பண்ணைகளின் எரு காய்ந்து வெளிப்படும் தூசுக்களும் பாதிப்பைத் தருகின்றன. இதனால் பலர் சுவாச நோய்களையும் ஒவ்வாமை நிலைமைகளையும் சந்திக்கின்றனர்.

நுண்ணுயிர்க்கொல்லிகள் சூழலை அடைதல்

விலங்குகளுக்கு வழங்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகள் தண்ணீர் மூலமும் பால், இறைச்சி போன்ற உற்பத்திகள் மூலமும் சூழலை அடைந்து மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பு நிலையைத் தோற்றுவிக்கின்றன.

தீர்வுகள்

சூழல்நேயமான மேம்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடித்தல், உச்சபட்சமான உற்பத்தித் திறனைத் தரக்கூடிய விலங்குகளை வளர்த்தல், சிறந்த நீர் – நிலப் பயன்பாட்டைச் செய்தல் ஆகியன அவசியமாகின்றன. மக்களுக்கு இது தொடர்பான போதிய விழிப்புணர்வு அவசியமாகிறது.

தேவையற்ற விதத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை பெருக்காமல் உணவு உற்பத்தியைச் செய்யலாம். புரதத் தேவைக்காக அதிகமாக மாட்டிறைச்சியை நுகராமல், பச்சைவீட்டு வாயுவை குறைவாக உற்பத்தி செய்யும் ஏனைய விலங்குகளையும் தாவர மூலங்களையும், செயற்கை இறைச்சி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான மாடுகள் பாலுக்காக அல்லாமல் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை அதிகப்படியான நிலப்பாவனையைக் கோருவதோடு, கணிசமானளவு பச்சை வீட்டு வாயுக்களையும் வெளிவிடுகின்றன.

வளர்ந்த நாடுகளில் ஒரு லீட்டர் பாலையோ ஒரு லீட்டர் இறைச்சியையோ உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நிலம் மற்றும் நீரை விட, வளர்முக நாடுகளில் அதிகளவு நிலம், நீர் பயன்படுத்தப்படுகிறது என்பது கசப்பான உண்மை. அந்த நாடுகளில் கால்நடைகளால் காபன் மற்றும் நைதரசன் சுழற்சிகள் பாதிப்படைகின்றன. கால்நடைப் பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு, சகலவிதமான சூழல் பாதிப்பு நடவடிக்கைகளையும் கருத்திற் கொண்டே அனுமதி வழங்க வேண்டும். நடைமுறையில் அவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

பசுந்தீவன உற்பத்திக்காக தேவையற்ற விதத்தில் காட்டை அழிக்காமல் Hydroponics, Sea Weeds போன்ற நவீன உணவுகளையும் TMR, ஊறுகாய்ப்புல் செய்கை போன்ற  நுட்பங்களை பயன்படுத்தலாம். முறையான மேய்ச்சல் முகாமை மற்றும் எருப் பரிபாலனமும் அவசியமாகிறது. உர மீதிகள், கழிவுகள், மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், எரு போன்றவை நீர்நிலைகளை நேரடியாக அடைதலைத் தவிர்க்க வேண்டும். பண்ணைக்கும் நீர்நிலைகளுக்கும் இடையே பாதுகாப்பு வலயங்களை (Buffer Zone) உருவாக்குதல், எரு போன்றவற்றை உக்கச் செய்வதற்காக பச்சைவீட்டு வாயுக்களை உற்பத்தி செய்யாத ஊக்கிகளைப் பயன்படுத்தல், முடிந்தவரை பெற்றோலிய எரிபொருளைப் பாவிப்பதைக் குறைத்து இயற்கை மூலமான புதுப்பிக்கத்தக்க எரிபொருளை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பண்ணைகளில் இருந்து வெளியேறும் ஒலி, தூசு – துணிக்கைகள், காற்று மாசு, பச்சை வீட்டு வாயுக்கள், கழிவு நீர் போன்றவற்றை சென்சர் மூலம் அறிந்து பண்ணைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத பண்ணைகளின் உரிமைகளை இரத்துச் செய்ய வேண்டும். தண்ணீர் மீள் சுழற்சி மற்றும் சுத்திகரிப்பை அந்தந்தப் பண்ணைகளே பொறுப்பெடுத்துச் செய்யவேண்டும். மிதமிஞ்சிய நுண்ணுயிர்க் கொல்லிப் பாவனையைத் தவிர்க்கவும், இறுக்கமான சட்டத்தின் மூலம் அவை இலகுவாக பண்ணையாளருக்குக் கிடைப்பதைத் தடுக்கவும் வேண்டும்.

இப்படியாக, கால்நடை வளர்ப்பின் மூலம் ஏற்படத்தக்க சூழல் பாதிப்புகளை இனங்கண்டு அதற்கேற்ப தற்காப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க சூழல்சார் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.


ஒலிவடிவில் கேட்க

208 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்