இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். இந்த மாடுகளைக் கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. [இலங்கையைப் பொறுத்த வரையில் வருடாந்தம் 1250 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுகின்ற போதும் உள்ளூரில் 500 மில்லியன் லீட்டர் அளவிலேயே பால் உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதி 750 மில்லியன் லீட்டர் பால் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் அதிகளவு பால் மா வடிவில் தான் இறக்குமதியாகிறது.]

அதிக பாலுற்பத்தியைக் கொண்ட மாடுகளை பெற இரண்டு வழிமுறைகள்தான் உள்ளன. ஒன்று நல்லின மாடுகளை இறக்குமதி செய்ய வேண்டும். இந்த முறையில் பல தடவைகள் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மற்றைய வழி இருக்கும் மாடுகளை தரமுயர்த்துவது[upgrading]. இந்த வழியில் இரண்டு முறைகளை கையாளலாம். ஒன்று நல்லின காளைகளை இறக்குமதி செய்து பண்ணையாளருக்கு வழங்கி அவற்றைக் கொண்டு இனப்பெருக்கம் செய்து பண்ணைகளை தரமுயர்த்துவது. மற்றையது தரமான காளைகளின் உறைவிந்தணுக்களை [frozen semen] இறக்குமதி செய்தோ அல்லது தரமான காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்துகளை உறையச் செய்து அவற்றைக் கொண்டு செயற்கை சினைப்படுதல் மூலம் மாடுகளை தரமுயர்த்துவது. மாடுகளை நேரடியாக இறக்குமதி செய்வதை விட சினைப்படுத்துவதற்கு அதிக காலம் எடுக்கும். எனினும் சிக்கனமானது.
இலங்கையில் ஆரம்ப காலங்களில் பல இடங்களில் காளை நிலையங்கள் [stud center] உருவாக்கப்பட்டு மாடுகள் சினைப்படுத்தப்பட்டிருந்தன. செயற்கை சினைப்படுத்தலின் அதிகரிப்பின் பலனாக அந்த காளை நிலையங்கள் இல்லாமல் செய்யப்பட்டன. பல காளை நிலையங்கள்தான் இன்றைய அரச கால்நடை வைத்திய அலுவலகங்களாக இன்று உள்ளன. குண்டசாலை, யாழ்ப்பாணம், பொலநறுவை போன்ற இடங்களில் குளிரூட்டிய விந்து [chilled semen] உற்பத்தி செய்யப்பட்டு இடைப்பட்ட காலத்தில் மாடுகள் சினைப்படுத்தப்பட்டிருந்தன. உறை விந்தணு குச்சிகளின் உருவாக்கத்தின் பின் ஏனைய இடங்கள் நிறுத்தப்பட்டு குண்டசாலையில் இருந்து மாத்திரமே நாடு முழுதும் அவை விநியோகிக்கப்படுகின்றன. சில வகை உறை விந்துகள் பொலநறுவையில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவையும் குண்டசாலையூடாகவே விநியோகிக்கப்படுகின்றன. [அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உறை விந்துகள் வழங்கல் மற்றும் திரவ நைதரசன் வழங்கல் என்பன சகல கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கும் நிகழ்வதில்லை. பெரிய அதாவது மாவட்டங்களின் முக்கிய அலுவலகங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் செயற்கைச் சினைப்படுத்தல் கணிசமாகக் குறைந்துள்ளது.]
வெளிநாட்டு மாடுகளை இறக்குமதி செய்வதன் மூலம் சடுதியாக பாலுற்பத்தியை கூட்ட முடியும் என்ற போதும் அண்மைக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மாடுகளில் இருந்து சாதகமான பயனை பெற முடியவில்லை. கொண்டு வரப்படும் மாடுகளின் இனம், காலநிலை, வளர்ப்பு முறை, உணவு முறை வேறுபாடு, நோய்கள் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்திருந்தன. இந்த மாடுகள் மீது முதலிட்டவர்கள் பாரிய நட்டத்தை சந்தித்திருந்தனர். இலங்கையின் கால்நடை துறை அதிகாரிகளின் சரியான ஆலோசனைகள் இன்றியும் இலங்கை கால்நடை இனப்பெருக்க கொள்கைக்கு முரணாகவும் [Breeding policy] மேற்படி மாடுகள் கொண்டு வரப்பட்டதும் இதற்குரிய முக்கிய காரணமாகும். ஒரு சில அரச ஆதரவு மற்றும் தனியார் பண்ணைகளை தவிர இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளை கொண்ட பண்ணைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மாடுகளும் பல காரணங்களால் இறந்துள்ளன. [வடக்கு மாகாணத்தில் வவுனியா ஓமந்தை பகுதியில் 250 வரையான மாடுகளை கொண்டு தொடங்கப்பட்ட பண்ணை முழு மாடுகளும் இறந்த நிலையில் தற்போது மூடப்படுள்ளது. பொருத்தமற்ற மாடுகள் பொருத்தமற்ற இடத்துக்கு வந்ததன் விளைவு இது.] செயற்கை சினைப்படுத்தல் முறை பயனை தர சில வருடங்கள் பிடிக்கும் ஆனால் நிலைத்த பயனை தரக்கூடியது. எனினும் செயற்கை சினைப்படுத்தல் தொடர்பான மக்களின் மனநிலை, அதனை செய்யும் வினைத்திறனான உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மிகப் பெரிய சவாலாக உள்ளது.
ஒரு லீட்டர் வரை பாலை தரும் மாடுகளின் உற்பத்தி திறனை மேலும் ஒரு லீட்டர் வரை உயர்தினாலேயே கணிசமான அளவில் பாலுற்பத்தியை அடையலாம்
இலங்கையில் உற்பத்தியற்ற மாடுகளின் அதிகரிப்பும் அவற்றை அகற்ற முறையான திட்டம் இன்மையும்
முன்னைய கட்டுரைகளில் நான் குறிப்பிட்டது போல இலங்கையில் உள்ள மாடுகளில் கணிசமானவை பாலுற்பத்தி செய்யாதவை. அவற்றில் தற்போது பாலுற்பத்தியில் இருப்பவை [milch animals] அண்ணளவாக 23% ஆகும். உற்பத்தியில் பங்களிக்காத பசு மாடுகளையும் ஆண் மாடுகளையும் குறைக்கும் அல்லது கழிக்கும் முறையான முறை இலங்கையில் இல்லை. மாடுகளைக் கொல்வது மதத்துடன் பிணைக்கப்பட்டு அரசியலாகப்பட்டுள்ளது. தரமான கொல் களங்களும் [slaughter houses] கிடையாது. ஒரு வெற்றிகரமான பண்ணை இயங்க தேவையற்ற மற்றும் உற்பத்திக் குறைவான மாடுகள் கழிக்கப்பட வேண்டியது அவசியமானது. உலகின் நடைமுறையும் அதுதான். உற்பத்திக் குறைவான மற்றும் மலட்டு [infertile], ஆண் மாடுகள் [Bulls] பண்ணைகளில் தொடர்ந்து காணப்படும் பட்சத்தில் பண்ணையின் செலவு கூடுவதோடு உணவு பற்றாக்குறையும் ஏற்படும். ஒவ்வொரு பண்ணைகளிலும் மேற்படி உற்பத்தியற்ற மாடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் மொத்த பால் உற்பத்தி செலவும் கால்நடை உணவு பஞ்சமும் அதிகரித்து எதிர்மறையாக மாடுகளின் எண்ணிக்கையும், பாலின் அளவும் வீழ்ச்சி ஏற்படும். அண்மைய நாட்களில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக கருதப்படும் மாடறுப்புத் தடை சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால் இந்த நிலை மேலும் தீவிரமடையலாம். ஆட்சி மாறியதால் என்னவோ அந்த திட்டம் தற்போதைக்கு கிடப்பில் போடப் பட்டுள்ளது.
இலங்கையின் கால்நடை பண்ணைகளின் கட்டமைப்பு

இலங்கையின் பெரும்பாலான பண்ணையாளர்கள் சிறு பாலுற்பத்தியாளர்கள் [small scale]. ஓரிரண்டு மாடுகளை வைத்து மிகக் குறைந்தளவு பாலை பெறுபவர்கள். பாலுற்பத்தியில் தன்னிறைவு கண்ட பல நாடுகளில் [இந்தியா பாகிஸ்தானை தவிர] பண்ணைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதுடன் ஒவ்வொரு பண்ணையிலுள்ள மாடுகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒப்பிட்டளவில் இலங்கையில் உற்பத்தித் திறனுடன் ஒப்பிடும் போது பண்ணைகளின் எண்ணிக்கை மிக அதிகம். [350000 ற்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட பண்ணைகள் உள்ளன.] மத்திய medium] மற்றும் பெரும் பண்ணைகள் [Mega farms] அதிகரிக்கும் போதுதான் கணிசமான பாலுற்பத்தியை எதிர்பார்க்க முடியும்.
மலடு நீக்க சிகிச்சையும் அதன் நிலையும்

பாலுற்பத்தி செய்ய முடியாத கணிசமான மாடுகளை மலடு நீக்க சிகிச்சை [infertility treatment] செய்வது மூலம் ஓரளவுக்கு நிலையை சரிப்படுத்த முடியும். எனினும் அதற்குரிய வசதிகள் சகல இடங்களிலும் இருப்பதில்லை. அதிகளவு அரச துறையாகவுள்ள கால்நடை உற்பத்தித் துறை இந்த விடயத்தை கையாள சரியான பெளதீக, மனித வளத்தை கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக கிராமப் புறங்களில் தேவையான மருந்துகளும் கால்நடை வசதிகளும் இல்லை என்பதுடன் சிகிச்சைக்குரிய செலவும் அதிகம் என்பதால் பண்ணையாளரும் மலடு நீக்க சிகிச்சையை விரும்புவதும் மினக்கடுவதும் இல்லை. உடனடியாக, சிகிச்சை செய்யக் கூடிய விலங்குகளை இறைச்சிக்காக விற்று விடுகின்றனர். பெண் மாடுகளை மலடு நீக்க சிகிச்சை செய்யும் அதேவேளை பாலுற்பத்திக் குறைவான இனத்து ஆண் மாடுகளை மலடாக்கம் [castration] செய்யவும் வேண்டும் அல்லது பண்ணையில் இருந்து அகற்ற வேண்டும். இரண்டையும் செய்யக் கூடிய மன நிலையில் எமது பண்ணையாளர்கள் இருப்பது மிக மிகக் குறைவு.
செயற்கை முறைச் சினைப்படுத்துனர்களின் குறைவு
ஐம்பதுகளில் இருந்து செய்யப்படும் மாடுகளை மேம்படுத்தக் கூடிய செயற்கை சினைப்படுத்தல் முறை அண்மைய நாட்களில் குறைவடைவதை காணமுடிகிறது. [நகரங்கள் மற்றும் மிகக் குறைந்தளவு நல்லின மாடுகளை வைத்திருப்பவர்கள் இந்த முறையை நாடுகின்ற போதும் கிராமப்புறங்களில் குறிப்பாக அதிகளவு மாடுகளை வைத்திருப்பவர்கள் மிக குறைவு]. வழமையாக கால்நடை அலுவலகங்களில் செயற்கை முறை சினைப்படுத்தலை செய்யும் அரச கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் [LDO- Livestock Development officers] அண்மைக் காலத்தில் செயற்கை முறை சினைப்படுதலை செய்வது குறைந்து தனியார் செயற்கை முறை சினைப்படுத்துனர்கள் [Private AI technicians] அதிகரித்துள்ளதை காண முடிகிறது. உயர்தர விஞ்ஞான பிரிவிலிருந்தே கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் அரச கால்நடை போதனாசிரியரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன் அதிகளவு பெண் கால்நடை போதனாசிரியர்கள் உள்வாங்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பண்ணையாளரின் வீடுகளுக்கு சென்று செயற்கை சினைப்படுதலை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் களப் பணிகளை விட அலுவலகங்களிலுள்ள வேலைகளை செய்வதிலேயே அதிக ஆர்வத்தை காட்டுகின்றனர். தனியார் செயற்கை சினைப்படுத்துனர்கள் தமது சினைப்படுதல் பணிகளை விட குறுக்கு வழியில் பணம் பார்க்கும் சிகிச்சையளிக்கும் வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுவதை காணமுடிகிறது. பெரும்பாலான தனியார் சினைப் படுத்துனர்கள் குறித்த காலத்தில் இந்த தொழிலில் இருந்து விலகி முழு நேர சட்ட விரோத கால்நடை வைத்தியராகவும் [illegal] பண்ணைக் கடை முதலாளிகளாகவும் மாறியிருப்பதை பல பகுதிகளில் காண முடிகிறது.
எருமைகளின் பற்றாக்குறை
உலகின் அதிக பாலுற்பத்தி செய்யும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகளவில் எருமை மாடுகள் காணப்படுவதோடு கணிசமான அளவில் பாலுற்பத்தியையும் செய்கின்றன. எருமைகளின் பால் அதிக கொழுப்பை கொண்டதுடன் பல பால் உற்பத்திப் பொருட்களை செய்யக் கூடியது. அத்துடன் அதிக நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. இலங்கையை பொறுத்த வரை கடந்த சில தசாப்தங்களாக எருமைகளின் அளவு குறைந்து வருகின்றது. எருமைகளில் வேட்கை அறிகுறிகளை காண்பது கடினம் என்பதால் செயற்கைச் சினைப்படுத்தல் செய்வது மிகக் கடினம் பல செயற்கை முறை சினைப்படுத்துனர்கள் எருமை மாடுகளில் அதனை செய்வதில் குறைந்த தேர்ச்சியையே கொண்டுள்ளனர். இங்கும் நல்லின மூரா, நிலி ரவி போன்ற அதிக பால் உற்பத்தியை உடைய எருமைகள் மிக குறைவு என்பதுடன் அதிகளவில் உள்ள உள்ளூர் எருமைகள் மிக உறைந்த பாலையே தருகின்றன. மேற்கூறிய மாடுகளின் இனம் தொடர்பான பிரச்சனையான விடயங்கள் சரிவரக் கையாளாமல் பாலுற்பத்தியை அதிகரிக்க முடியாது.
தொடரும்.