என் பெற்றோருடைய மூன்றாவது பிள்ளையாக நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். அவர்களுடைய முதல் இரு பிள்ளைகளும் கோலாலம்பூர் நகரில் பிறந்தவர்கள். என் பெற்றோருடைய திருமணமே கோலாலம்பூரிலேதான் நடைபெற்றது. நான் பிறந்தபோது என் தாயாருடைய சகோதரர்கள் ஐவர் மலாயாவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு மூத்தவராக இருந்தவர் மலாயாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுத் திரும்பிவந்திருந்தார்.
மலாயா நாட்டுடனான இத்தகைய தொடர்பு யாழ்ப்பாணத்தில் பரவலாகப் பல இடங்களில் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில், இலங்கை சுதந்திரம் அடையுமுன், யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்துக்கு மலாயா/சிங்கப்பூர் நாடுகளுடன் இருந்த தொடர்பு ஒரு முக்கிய காரணியாகும். இத் தொடர்பு எவ்வாறு இடைக்காலச் சமூக அமைப்பில் முடங்கி கிடந்த யாழ்ப்பாணத்தில் பலவகைப்பட்ட மாற்றங்களுக்கு வழிவகுத்து முன்னேற்றத்துக்கு உதவியது என்பதை விளக்க என் தாயார் குடும்பமும், அவர்கள் சுற்றத்தாரும் பிறந்து வளர்ந்த சிறிய ஊர் நல்லதோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடியது.
இந்தச் சிற்றூர் வட்டுக்கோட்டை மேற்கின் ஒரு பாகமாகும். கடிதப் போக்குவரத்துக்கும் உத்தியோகபூர்வ தேவைகளுக்கும் இதன் முகவரி வட்டு மேற்கு, வாட்டுக்கோட்டை எனவே இருந்தது. யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வடக்காக இருந்த இச் சிற்றூருக்கும் கல்லூரிக்கும் இடையில் இதை ஒத்த பல சிற்றூர்கள் இருந்தன. இவை அனைத்தும் மலாயாத் தொடர்புடையவை. இங்கு சிற்றூர் எனப்படுவது இரத்த உறவுடைய சுற்றத்தார் கூட்டமாக வாழ்ந்த இடமாகும்.
இராமலிங்கம் குடும்பம்
எங்களுடைய சிற்றூரில் நான் சிறுவனாக வாழ்ந்த காலத்தில் எல்லாமாக 24 குடும்பங்கள் இருந்தன என்று இப்பொழுது எண்ணக்கூடியதாக உள்ளது. பெரும்பாலானவை கூட்டுக் குடும்பங்கள். ஊரின் ஒரு புறத்தில் குடும்பங்களின் வீடுகள், இவற்றுக்கு அப்பால் குடும்பங்களுக்குச் சொந்தமான வயல் காணிகள். ஊரின் பாரம்பரியத் தொழில் கமத்தொழில். இதனால், மழைகாலத்தில் எல்லா வயல்களிலும் நெல் பயிரிடப்படும். ஏனைய காலங்களில் மரக்கறி வகைகள், குறிப்பாக மிளகாய், கத்தரி, மரவள்ளி, வெண்டி, கீரை போன்றவை பயிரிடப்படும். சாமையும் குரக்கனும் சில வயல்களில் பயிரிடப்பட்டன. இந்த நிலையை 1940களில் நான் சிறுவனாக இருந்தபோது காணமுடிந்தது.
இவ்வாறான வாழ்வாதார விவசாயம் நிலவிய எங்கள் ஊரில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓரளவு வெற்றிகரமாகக் கமத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் என்னுடைய பேரனார், என்னுடைய தாயின் தகப்பனார், இராமலிங்கம். இவருக்கு எட்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். அப் பெண் பிள்ளை என் தாயார்.
முழுமையான கமத் தொழில் வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த என் பேரனார் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைப் பெற வசதிசெய்து, பாரம்பரியக் கமத் தொழிலை விட்டு வேறு தொழிலைப் புரிய உதவவேண்டும் என்று எண்ணினார். ஆங்கிலக் கல்வி மூலம் பிறர் முன்னேறுவதைக் கண்டு தன் பிள்ளைகளும் அக் கல்வியைப் பெறவேண்டும் என விரும்பினாரா அல்லது யாராவது இது தொடர்பாக அறிவுரை வழங்கினார்களா என்பது தெரியவில்லை.
எங்கள் ஊரில் இருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் யாழ்ப்பாணக் கல்லூரியும் வடக்கே ஏறக்குறைய அதே அளவு தொலைவில் விக்டோரியாக் கல்லூரியும் (சுழிபுரத்தில்) இருந்தன. ஆங்கிலக் கல்வி பெறத் தம் பிள்ளைகளை அனுப்ப விரும்பிய பெற்றோர்க்கு இரண்டு கல்லூரிகளும் ஈர்ப்புச் சக்திகளாக இருந்தன என்பதில் ஐயமில்லை. என் அம்மாவின் சகோதரர்கள், அதாவது என் மாமன்மார், எந்தக் கல்லூரிக்குச் சென்றனர் என்பது தெரியவில்லை.
நான் பிறக்குமுன் அம்மாவின் பெற்றோர் இறந்துவிட்டனர். இவர்களைப் பற்றி அம்மாவிடம் இருந்தும் நான் அதிகம் அறியவில்லை. என் தாயார் பெயர் கனகாம்பிகை. அவருடைய மூத்த முதலாவது தமையன் பெயர் வைத்திலிங்கம். இவர் இளமையில் இறந்துவிட்டார் என்று நினைக்கின்றேன். இரண்டாவது தமையன் வேலுப்பிள்ளை. இவர் மலாயாவுக்கு முதலில் சென்றிருக்கவேண்டும். இவருக்குப் பின் மூன்றாவது தமையன் செல்லத்துரை சென்றார் என்று நினைக்கிறேன். பின்னர், நாலாவது தமையன் அருணாசலம் என்பவரைத் தவிர, அம்மாவும் ஏனைய சகோதரர்களும் மலாயாவுக்குச் சென்றுவிட்டனர். அருணாசலம் மற்றவர்களைப் போல் படிக்கவில்லை. இதனாலோ வேறு காரணங்களுக்காகவோ இவரிடம் வீட்டையும் காணி வயல்களையும் பொறுப்புக் கொடுத்துவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர்.
இவர்கள் மட்டுமல்ல, எங்கள் ஊரில் இருந்த ஒவ்வொரு குடும்பமும் ஒருவரையாவது மலாயாவுக்கு அனுப்பியிருந்ததை நான் அறிவேன். இவர்களுள் பலர் ஊருக்குத் திரும்பிவந்து சொந்தக்காரப் பெண்களை மணம் முடித்து அவர்களையும் மலாயாவுக்கு அழைத்துச் சென்றனர். இருவர் மட்டும் குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை.
மலாயாவின் ஈர்ப்பு
மலாயா என்ற பெயர் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் மலாய் இன மக்கள் வாழ்ந்த மலாய்த் தீபகற்பத்துக்கு வழங்கிய ஒரு பொதுப் பெயராகும். அப் பெயரால் வழங்கிய இடம் இன்று மலேசியா நாட்டின் முக்கிய பாகமாக, மேற்கு மலேசியா எனப் பெயர்பெறும். மலேசியா என்ற நாடு, பிரித்தானியப் பேரரசின் வேறு இடங்களைப் போலவே, பிரித்தானியர் உருவாக்கிய ஒரு நவீன நாடாகும்.
பிரித்தானியர் 18ஆம் நூற்றாண்டு முடிவடையும் கட்டத்தில் தென் ஆசியாவின் பெரும் பாகத்தைத் தம் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்திருந்தனர். கைப்பற்றிய இடங்களைப் பிரித்தானிய மன்னன் சார்பில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுவே (English East India Company) ஆண்டுகொண்டிருந்தது. தனது வர்த்தகத்தைக் கிழக்கு நோக்கிச் சீனாவுடன் துரிதமாக வளர்க்கும் நோக்கம் கொண்ட வணிகக்குழுவின் இந்திய அரசாங்கம், தென்கிழக்கு ஆசியாவில் கண்வைத்தது. அதன் நோக்கத்தை நிறைவேற்ற மலாய்த் தீபகற்பத்தில் ஒரு நிலையம் தேவைப்பட்டது.
இக் காலகட்டத்தில் மலாய்த் தீபகற்பம் பல சிற்றரசுகளாகப் பிளவுபட்டு, ஒவ்வொன்றும் ஒரு சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்ட சுல்தானரசாகக் காணப்பட்டது. மேற்கு கரையோரத்தில் இருந்த அரசு கெடா (Kedah). இம் மேற்குக் கரையோரம், 2000 ஆண்டுகளாக இந்தியாவின் கிழக்குக் கரையோரத்துடன், சிறப்பாகத் தமிழ்நாட்டுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது. பழந்தமிழ் நூலாகிய பட்டினப்பாலையில் ‘காழகத்து ஆக்கம்’ காவிரிப்பூம்பட்டினத்துக்கு வருவது பற்றிக் குறிப்பு உள்ளது. காழகம் என்ற பெயரும், பின்னர் சோழர் கல்வெட்டுகளில் வரும் கடாரம் என்ற பெயரும் இன்று மலாயில் கெடா எனப்படும் பெயருடன் தொடர்புடையவை.
கெடா அரசு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட எல்லையில் இருந்த பௌத்த அரசுகளாகிய சயாம் (இன்றைய தாய்லாந்து) மற்றும் பர்மிய (இன்றைய மியன்மார்) அரசுகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி அவதிப்பட்ட நிலை, ஆங்கிலேயருக்கு அரிய வாய்ப்பாகியது. கெடா சுல்தானுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆங்கிலேயர் முன்வந்தனர். இவர்கள் பாதுகாப்பைப் பெற்ற கெடா சுல்தான் மேற்குக்கரையில் இருந்த பினாங் (Penang) தீவை ஆங்கிலேயருக்குக் கொடுத்தான். ஆங்கிலேயர் தென்கிழக்கு ஆசியாவில் 1786இல் காலடி வைத்தனர். பினாங் அவர்களுடைய காலனி ஆகியது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் இன்னொரு காலனி ஆகியது. விரைவில் மலாய் சுல்தானரசுகள் பிரித்தானியரின் காப்பரசுகளாயின. சில Federated Malay States (FMS) என்ற புதிய அரசியல் அமைப்புக்குள் அடங்கின; சில Straits Settlements என ஒன்று கூட்டப்பட்டன.
தமிழ்நாட்டார் வருகை
பினாங் தீவு தம் வசமாகியதும் அதனை ஓர் ஆங்கிலேயக் காலனியாக மேம்படுத்தத் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களையும் கைதிகளையும் அதிகாரிகள் கூட்டிச் சென்றனர். இப்படிச் சென்றவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள். இவர்கள் செல்லுமுன் அங்கு முந்திய வர்த்தகத் தொடர்புகளின் விளைவாகக் குடியேறிய தென்னிந்தியக் குடிகளும் இருந்தனர். இவர்களைச் ‘சூளியர்’ (Chuliyas/ சோழியர்?) என்று அழைத்தனர். பெருந்தொகையான தமிழ்நாட்டார் வருகை 1786இன் பின் தொடங்கியது.
தமிழ்நாட்டில் இருந்து தொழிலாளர் மலாயாவுக்குச் சென்ற வரலாறு ஒரு நீண்ட, ஏகாதிபத்தியம் விளைவித்த இன்னல்கள் நிறைந்த சோகக் கதையாகும். ஏழ்மையில் தவித்த ஆயிரக் கணக்கானோர் கைதிகளாகவும், ஒப்பந்தத் தொழிலாளராகவும் (Indentured Labour) கண்காணி சேர்த்த கூலியாட்களாகவும் சென்று பட்டபாடு இக் கதையில் நிரம்பிவழியும். யாழ்ப்பாணத்தவர் மலாயாவுக்குச் சென்ற வரலாறு முற்றிலும் வேறானது. ஆனால் இதனுடன் தொடர்புடையது.
யாழ்ப்பாணத்தவர் வருகை
யாழ்ப்பாணத்து மக்கள் மிக நீண்ட காலமாக ஒரு தீவுக்குள் அடங்கி வாழ்வோர் போல வெளியுலகத்தாருடன் தொடர்புகொள்ளாது வாழ்க்கை நடத்தியவர்கள். தமிழிலும் சைவ மதத்திலும் புலமை பெற்றிருந்த ஒரு சிலர் தமிழ்நாட்டுக்குச் சென்றுவருவது வழக்கமாய் இருந்தது. வசதியுடைய ஒரு சிலர் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குச் சென்றுவரும் வழக்கமும் இருந்தது. ஐரோப்பியர் 16ஆம் நூற்றாண்டில் வந்து, யாழ்ப்பாணம் என்னும் அரணின் மதில்களை மெதுவாகத் தகர்க்கத் தொடங்கினர். பொது மக்களைச் சேர்ந்தோரும் வெளியுலகத் தொடர்பு கொள்ள வழிதிறக்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சி 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உறுதியானதும் சமூக மாற்றங்கள் விரைவாக ஏற்படத் தொடங்கின. இவற்றுக்கு முக்கிய உந்துசக்தியாக இருந்தது ஆங்கிலக் கல்வி என்பதில் ஐயமில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில் அரசாங்கமும் மிஷனரிமாரும் பாடசாலைகளை அமைத்து ஆங்கில மொழி அறிவைப் பெறுவதற்கு உதவினர் என்பது பொதுப்பட வரலாற்று நூல்களில் கூறப்படும் ஒரு விஷயம். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கும் இலங்கையின் பிற இடங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு என்பது பொதுவாக விளங்கப்படுவதில்லை. இந்த வேறுபாடுதான் நவீன இலங்கை வரலாற்றில் ‘யாழ்ப்பாணப் பிரச்சினை’ உருவாகுவதற்கு வழிவகுத்த ஒரு முக்கிய காரணி என்பது எனது கருத்து. இந்த வேறுபாட்டை இங்கு விரிவாக ஆராய்வது பொருத்தமற்றது. இதனைச் சுருக்கமாகக் கூறலாம்.
ஆங்கில மொழி அறிவையோ பொதுப்பட நவீன அறிவையோ, நாட்டில் பாடசாலைகளை அமைத்து வளர்க்கும் நோக்கம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனி அரசாங்கத்துக்கு இருக்கவே இல்லை. பாரம்பரிய சமூகத்தின் தலைவர்களாகப் பிரித்தானியர் அடையாளம் கண்ட முதலியார்களுடைய பிள்ளைகளுக்கு மூன்று பள்ளிகளைத் தொடக்கி, அவற்றில் ஆங்கிலத்தைக் கற்பித்தால் காலனி அரசாங்கத்துக்குத் தேவையான ஊழியர்களைப் பெறுவதற்கு அது போதுமானது என ஆட்சியாளர் நம்பினர். மேற்படிப்பு? இப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர் இருவரை ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்தால் அவர்கள் திரும்பி வந்து ‘பிறப்பால் தங்கள் நாட்டில் பற்றுடையவராகவும், கல்வியால் இங்கிலாந்திற்குப் பற்றுடையவராகவும்’ (A class “attached to their country by birth, and to England by education”) உள்ள ஒரு சமூக வகுப்பை உருவாக்குவர் எனக் காலனியின் முதலாவது ஆளுநர் நோர்த் பிரபு (Lord North) லண்டனுக்கு எழுதியிருந்தார். இது கொழும்பின் நிலை.
யாழ்ப்பாணத்தின் நிலை வேறொன்றாக இருந்தது. ஆங்கிலக் கல்வியைக் கொடுப்பதற்கு அங்கு அரசாங்கம் எந்தவிதத் திட்டமும் வகுத்திருக்கவில்லை. கிறிஸ்தவ மிஷனரிமார், குறிப்பாக அமெரிக்க மிஷனரிமார், பரவலாக யாழ்ப்பாணம் எங்கும் ஆங்கிலக் கல்விக்கும் தமிழ்க் கல்விக்கும் பாடசாலைகளைத் திறந்தனர். அவர்கள் அழைத்த பிள்ளைகள் முதலியார்களுடைய பிள்ளைகள் அல்லர், சாதாரண மக்களுடைய பிள்ளைகள், பெரும்பாலும் ஏழைகளாக வாழ்ந்த பிள்ளைகள். சிறிது காலத்தில் ஆங்கிலக் கல்வியின் நன்மைகள் தெரியவந்ததும் சமூகத்தின் உயர் பிரிவினரும் தங்கள் பிள்ளைகளையும் ஆங்கிலம் கற்க அனுப்பினர். யாழ்ப்பாணத்தில் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் கற்ற இளைஞர் சமூகம் ஒன்று தோன்றியது.
முதல் முறையாக யாழ்ப்பாணத்தை விட்டுத் தொழில் தேடி வெளியே செல்லத் தொடங்கியவர்கள் இவர்களே. சிலர் தென் இந்தியாவுக்குச் சென்றனர். சிலர் கொழும்புக்குச் சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இவர்களுள் பலரைத் தூரநாடாகிய மலாயா அழைத்தது.
இங்கிலாந்தில் 19ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சியின் விளைவாகத் துரிதமாக வளர்ந்த உற்பத்தித் தொழில்களுக்குத் தேவைப்பட்ட இரண்டு முக்கிய மூலப்பொருட்களைப் பெற உகந்த இடமாக மலாயாவை ஆங்கிலேயர் கண்டனர். இவை தகரமும் (Tin) இறப்பரும் (Rubber) ஆகும். இப் பொருட்களைப் பெரும் அளவில் எடுத்து ஏற்றுமதிசெய்து பயனடைய முதலீட்டாளர் மலாயாவுக்குச் சென்றனர். ஆனால் தகரச் சுரங்கங்களிலும் இறப்பர் பெருந்தோட்டங்களிலும் கடின உழைப்பில் ஈடுபட மலாயாவில் தொழிலாளர் இருக்கவில்லை.
ஏகாதிபத்தியம் உச்சநிலையில் இருந்த காலத்தில் மூலப்பொருள் இருந்த இடத்தில் தொழிலாளர் இல்லாவிட்டால் வேறிடங்களில் இருந்து அவர்களைக் கொண்டுவர முடிந்தது. சீன முதலீட்டாளர் ஆதிக்கம் பெற்றிருந்த தகரச் சுரங்கங்களுக்கு ஏழை மக்கள் சீனாவில் இருந்து பெருந்தொகையாகச் சென்றனர். இறப்பர்ப் பெருந்தோட்டங்களில் வேலை செய்யத் தென்னிந்தியாவில் இருந்து ஏழைத் தொழிலாளர் சென்றனர்.
பெருந்தோட்டங்கள் தொடர்பான நிர்வாகத்துக்கும் பெருந்தோட்டங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்வதற்கும் நடுநிலை அலுவலர்கள் பலர் தேவைப்பட்டனர். இத்தகைய தொழில்களுக்கு பிரித்தானியர் செல்லமாட்டார்கள். இந்நிலை, ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பை உண்டுபண்ணியது.
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் படித்த இளைஞர்கள் இருந்தனர்; தொழில்வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர். மலாயாவில் பெருந்தோட்ட முதலீட்டாளரும் நிர்வாக அதிகாரிகளும் இத்தகைய இளைஞர்களை வேலைக்கமர்த்த ஆவலாய் இருந்தனர். இரு தரப்பாரையும் இணைப்பதற்கு வழிதிறக்கப்பட வேண்டுமே! இங்குதான் தற்செயல் நிகழ்வுகள் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலாயாவில் ஆங்கிலேயர் காலடி வைத்ததும் இலங்கையில் இருந்து அனுபவமுள்ள சில பிரித்தானிய அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு சென்றோருள் சிலர் புதிய இடத்தில் தங்கள் நிர்வாகத்தைச் சீராக அமைப்பதற்கு உதவக்கூடியவர்கள் எனத் தாம் மதிப்பிட்ட இலங்கையரையும் கூடவே அழைத்துச் சென்றனர். இந்த இலங்கையர் இடைநிலை அலுவலர்கள்; ஆங்கில அறிவுடன் பிரித்தானிய நிர்வாக முறைகளை நன்கு அறிந்தவர்கள்; பிரித்தானிய அதிகாரிகளுக்கு விசுவாசமுடன் பணியாற்றியவர்கள்.
மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டோருள் பலர் யாழ்ப்பாணத்தவர்கள். கொழும்பில் 1870களில் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக இருந்த J.W.W. Birch முதலில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பெராக் (Perak) சுல்தானரசுக்கு பிரித்தானிய வதிவாளர் (British Resident) என்ற முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டார் (பெராக் அரசைப் பிரித்தானியர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது). இவர் கொழும்பில் தனக்குப் பணியாற்றிய பல இலங்கையரைத் தன்னுடன் கூட்டிச் சென்றார். இவர்களுள் ஒருவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்றும் இவர் சிங்கப்பூரில் சேவைசெய்து ஓய்வு பெற்றுத் திரும்பியபின் ‘சிங்கப்பூர் வைத்திலிங்கம்’ எனப் பிரசித்தி பெற்றார் என்றும் சொல்லப்படுகின்றது.
மலாயாத் தொடர்பும் மாற்றங்களும்
இதே காலத்தில் ஐரோப்பாவின் பாரம்பரிய சமூகங்களில் இருந்து பெருந்தொகையானோர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தனர். இச் சமூகங்களில் இதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஒத்த நிகழ்வுகள் யாழ்ப்பாணச் சமூகத்திலும் இடம்பெற்றன. மலாயாத் தொடர்பு, மூடப்பட்டிருந்த பாரம்பரிய யாழ்ப்பாண சமூகத்தை வெளியுலகுக்குத் திறந்து வைத்தது. முதலாவது பரம்பரையினர் பலர் மலாயா – சிங்கப்பூரில் குடியேறினர். அடுத்த பரம்பரையினர் பலர் அங்கிருந்து மேற்குலகுக்குச் சென்றனர். மலாயாத் தொடர்பு யாழ்ப்பாணத்தில் சமூக, பொருளியல் மாற்றங்களுக்கு உதவியது. இம் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டாக எனது பெருங்குடும்பத்தில் (எங்களையும் அம்மாவின் சகோதரர்களுடைய குடும்பங்களையும் உள்ளடக்கும்/ Extended Family) நடைபெற்றவற்றைச் சுருக்கமாகக் கூறலாம். இவை பிற குடும்பங்களுக்கும் பொருந்தும்.
முதலில் என் மூத்த மாமனார் வேலுப்பிள்ளை சென்றார். பின்னர் அவர் தம்பிமாரும் என் அம்மாவும் சென்றனர்; அவர்கள் தூண்டுதலால் எத்தனை உறவினர் சென்றனரோ தெரியவில்லை (Chain Migration). அதிகம் ஆங்கிலம் படிக்காதவர்கள் கூடத் தயக்கமில்லாது சென்றனர் (ஆங்கிலம் ஐந்தாம் வகுப்பு வரை படித்தால் போதும், மலாயாவுக்கு ஓடி விடுவார்கள் என்று என் தந்தையார் சொல்லுவார்).
மலாயாப் பணம் வதிவிடங்களை மாற்றத் தொடங்கியது. எங்கள் ஊரில் 1930களுக்கு முன் முற்றிலும் மண்வீடுகளே. 1930களில் ‘சிங்கப்பூர்ப் பெஞ்சன்காறர்’ திரும்பிவரத் தொடங்கியதும் கல்வீடுகள் கட்டப்பட்டன. என் மூத்த மாமனார் கட்டிய பெரிய கல்வீடே எங்கள் ஊரின் முதலாவது கல்வீடு.
இப் புதிய வீடுகளில் வெளியுலகில் பரவிக்கொண்டிருந்த நவீன ‘வாழ்க்கை வசதிகள்’ சிறிது சிறிதாக இடம்பெறத் தொடங்கின. மேசை, கதிரைகள், கட்டில்கள், மெத்தைகள் மட்டுமல்ல, ‘அரிக்கன்’ லாம்புகள் (Hurricane Lanterns), மேசைக் கரண்டிகள், மேசைக் கத்திகள், பீங்கான் தட்டுகள், பீங்கான் கோப்பைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வேலுப்பிள்ளை மாமா வீட்டில் இவை காணப்பட்டன.
வேலுப்பிள்ளை மாமா வீட்டில் பதிவு இசைக் கருவியாக அக்காலத்தில் அறிமுகமாகிய ‘கிராமபோன்’ (His Master’s Voice Gramophone) ஒன்றும் இருந்தது. இந்தப் ‘பாட்டுப் பெட்டி’ தந்த பாட்டுகளைக் கேட்பதற்குச் சிறுபிள்ளையாக இருந்தபோது நானும் குடும்பத்தவரும் போவோம். சுருங்கக் கூறின், மலாயாவில் இருந்து ஓய்வுபெற்று வந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் நவீனமயமாக்கத்தின் முகவர்களாக (Agents of Modernization) உதவினர்.
மலாயாத் தொடர்பால் மேலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. இவை பின்னர் கூறப்படும்.