வாழ்வாதாரத் தொழில் முயற்சித் துறைகளில் உயிரின வளர்ப்புத் துறையானது முக்கியத்துவம் வாய்ந்தது. இவ் வளர்ப்புத் துறை விலங்குகளையும் பறவைகளையும் உள்ளடக்குகின்றது. பறவை வளர்ப்பில் முதன்மையாக அமைந்திருப்பது கோழி வளர்ப்பாகும். இவை இறைச்சி, முட்டை ஆகிய இரு பெரும் நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. சமூகத்தில் பலரும் இந்த வாழ்வாதார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த முதலீட்டுடன் இத்தொழிலை ஆரம்பிக்க முடிவதுடன் இயலுமையின் விருத்திக்கேற்ப படிப்படியாக அதிகரித்துச் செல்லவும் முடியும் என்பது பலரும் இத்தொழிலில் இணைவதற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. சுயதேவைப்பூர்த்தி, உபதொழில், நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த முதன்மை தொழில் வரை இந்த கோழிவளர்ப்பை விருத்தி செய்ய முடியும் என்பதால் பலருக்கும் இது விருப்பத் தொழிலாகிறது.
உள்ளூர் போசாக்கு பேணுகையில் புரத நுகர்வை குடும்பங்களுக்கு உறுதி செய்யும் கொல்லைப்புற கோழிவளர்ப்பு முறையானது வாழ்வாதார தொழில்முனைவுக்கு அப்பால் எல்லா சமூக மட்டங்களிலும் வாழ்வோரையும் பங்கேற்கற் செய்கிறது. கோழி, வாழ்வியலுடன் இணைந்த பறவையாக அனைத்து வீடுகளிலும் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். வீட்டுமட்டத்தில் உடனடியான தேவைப்பாட்டை, விருந்தினர் வந்தவுடன் ஏற்படும் அவசரத்தையெல்லாம் சமாளிக்கும் ஒரு பொறிமுறையாக கொல்லைப்புற கோழிவளர்ப்பு காணப்படுகின்றது. எமது சமூகத் தேவையை பூர்த்திசெய்யவே இதன் பங்களிப்பு போதுமானதாக இருப்பதால் தேசிய மட்டத்தில் முட்டை உற்பத்தியின் மதிப்பீட்டில் இதன் உற்பத்தியளவு பதிவு செய்யப்படுவதில்லை.
கோழி வளர்ப்பில் தரமுயர்த்தப்பட்ட பறவைகள், உள்ளூர் இனங்கள் என்ற இரு பிரதான வகைப்பாடுகள் காணப்படுகின்றன. அடிப்படையில் இவ்விரு வளர்ப்பு முறைகளும் பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது. இதனை தனித் தனியாக பிரித்து தகவல்களை பெற முடியாத காரணத்தினால் ஒரே நிலையில் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 2021 களின் தகவல்களின் அடிப்படையில் 1,650,745 முட்டை, இறைச்சி மற்றும் உள்ளூர் இனக் கோழிகள் காணப்படுகின்றன. வட மாகாணத்தில் 2,360,978 கோழிகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 401,678 கோழிகளும் மட்டக்களப்பில் 564,849 கோழிகளும் அம்பாறையில் 684,218 கோழிகளும் காணப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 752,109 கோழிகளும் கிளிநொச்சியில் 269,571 கோழிகளும் மன்னாரில் 331,525 கோழிகளும் முல்லைத்தீவில் 345,723 கோழிகளும் வவுனியாவில் 662,050 கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கோழிவளர்ப்புத் தொழிற்துறையில், எண்ணிக்கை அடிப்படையில் செறிவை மதிப்பிடுவதனை விட உடமை அடிப்படையில் மதிப்பிடுவதே பொருத்தமாகும். ஏனெனில் கொல்லைப்புற கோழிவளர்ப்பு என்பது இவ்விரு மாகாணங்களிலும் மிக பிரதான தொழில்துறைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. வீட்டு மட்டத்தில் போசாக்கு, வருமானம், சுயநுகர்வு ஆகிய மூன்று பெரு நோக்கங்களை ஒரே நேரத்தில் அடைந்து கொள்வதில் பாரம்பரிய இனங்களின் வளர்ப்பு முறை பங்களிப்புச் செய்து வருகிறது. இதன் உற்பத்தியளவு, முறைசார் வகைப்படுத்தலில் தரவு சேகரிப்புக்கு உட்படுவதில்லையாயினும் நிலைத் தன்மையுள்ள ஒரு தொழில்துறையாகவே இது இடம்பெற்றுவருகிறது. அதிகளவு பராமரிப்புச் செலவின்றி திறந்த வளர்ப்பு முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அதிக லாபம் தரும் தொழிலாகவும் உள்ளது. எதிர்பாராத இழப்புகளுக்கு உட்படக்கூடிய இத்தொழில் துறையிலிருந்து பெறப்படும் உற்பத்தி ஒப்பீட்டளவில் அதிகம். எனினும் நாட்டின் மொத்த முட்டை, இறைச்சி தேவையில் இது முழுநிலை பங்களிப்பை வழங்கவில்லை என்பது இதன் விருத்தி குறித்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்மைக் காலத்தில் தரமுயர்த்தப்பட்ட உள்ளூர் இனக் கோழிகள் பண்ணை முறையில் வளர்ப்புச் செய்யப்பட்டு, நாட்டுப்புற இனமாக சந்கைக்கு வருவதனால் பாரம்பரிய கோழி வளர்ப்புத்துறை பெற்றிருந்த முதன்மை இடம் சரிவடைந்து வருகிறது.
பண்ணை முறையில் கோழி வளர்ப்பில் ஈடுபடும் நல்லின தரமுயர்த்தப்பட்ட வளர்ப்பாளர்களினாலேயே முட்டை, இறைச்சி சந்தையின் கேள்வி ஈடுசெய்யப்படுகிறது. இந்த வகையில் பண்ணை முறை வளர்ப்பாளரின் உடமை அடிப்படையில் நோக்கும் போது, வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 51,848 பேரும், 25 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 5,229 பேரும், 50-100 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 1,608 பேரும், 100 – 500 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 572 பேரும், 500 – 1000 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 35 பேரும், 1000 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 8 பேரும் காணப்படுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 4993 பேரும், 26 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 2,752 பேரும், 51 – 100 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 1030 பேரும், 101 – 500 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 442 பேரும், 501 – 1000 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 13 பேரும், 1001 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் ஒருவரும் காணப்படுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 7,446 பேரும், 26 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 3306 பேரும், 51 – 100 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 907 பேரும், 101 – 500 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 82 பேரும், 500 – 1000 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 05 பேரும், 1001 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 05 பேரும் காணப்படுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 15,212 பேரும், 26 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 1,838 பேரும், 51 – 100 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 463 பேரும், 101 – 500 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 213 பேரும், 1000 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 07 பேரும் காணப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்க்கும் சுயதேவை உற்பத்தியாளர்கள் 1,446 பேரும், 26 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 4,932 பேரும், 51 – 100 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 2,084 பேரும், 101 – 500 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 470 பேரும், 1000 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 24 பேரும், 1001 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 07 பேரும் காணப்படுகின்றனர்.
இதே போல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 11,843 பேரும், 25 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 54,061 பேரும், 50 – 200 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 11,719 பேரும், 200 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 8,689 பேரும் காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 5872 பேரும், 25 – 50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 4,196 பேரும், 50 – 200 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 1,937 பேரும், 200 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 933 பேரும் காணப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் 25 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்போர் 11,835 பேரும், 25-50 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 4,629 பேரும், 50 – 200 வரையிலான கோழிகளை வளர்ப்போர் 2,837 பேரும், 200 இற்கும் மேல் கோழிகளை வளர்ப்போர் 805 பேரும் காணப்படுகின்றனர்.
இவ்வகையில் ஆராயும் போது வடகிழக்கின் கோழி வளர்ப்புத் துறையில் குடிசன மட்டத்திலான கொல்லைப்புற சிறு உடைமை வளர்ப்பில் ஈடுபடுபவர்களே அதிகம் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் 26,900 பேரும் வடக்கு மாகாணத்தில் 7,957 பேரும் பண்ணை முறையில் 50 கோழிகளுக்கு மேல் வளர்ப்பவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் கோழி வளர்ப்பு கிழக்கு மாகாணத்தில் விரிவாக்கம் பெற்றுள்ள அளவுக்கு வடக்கில் விருத்தி பெறவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது. முட்டை, இறைச்சி தேவைக்காக வடமாகாணம் அதிகளவில் பிற மாகாணங்களில் தங்கியிருப்பதற்கும் இதுவே காரணமாகும்.
கால்நடை வைத்திய சேவையில் காணப்படும் பற்றாக்குறையும் உள்ளீட்டு தீவனங்களை உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள அதீத உற்பத்திச் செலவும் பண்ணை முறையிலான கோழி வளர்ப்பை விருத்தி செய்வதில் காணப்படும் பிரதான தடைகளாக அமைகின்றன. வட மாகாணத்தில் 35 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளும், கிழக்கு மாகாணத்தில் 45 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளும் செயல்படுகின்றன. இவ் 80 பிரிவுகளிலும் போதியளவு கால்நடை வைத்தியர்களோ, கால்நடை போதனாசிரியர்களோ பணியில் இல்லாமல் இருப்பதனால் கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பல்வேறு நோய்களையும் இறப்புக்களையும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. கால்நடை தீவன உற்பத்தியில் பிரதான பங்கை வகிக்கும் சோழச் செய்கையில் நிகழ்ந்த படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி, உள்ளூர் சோழ உற்பத்தியில் ஏற்பட்ட கணிசமான உற்பத்திக் குறைவு, அயல்நாடான இந்தியாவிலிருந்து சோழத்தை இறக்குமதி செய்தலில் காணப்படும் டொலர் நெருக்கடி என்பன காரணமாக கால்நடை தீவனத்தின் விலை என்றுமில்லாதவாறு உயர்ந்துவிட்டது. இதனால் பண்ணைத் தொழில் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பண்னைமுறை வளர்ப்பாளர்கள் தமது தொழில்களை நிறுத்தி வைத்திருக்கும் அவலம் நேர்ந்திருக்கின்றது.
2021 காலப்பகுதியில் 571,614 முட்டைக்கோழிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 121,836 முட்டைகள் வட மாகாணத்தில் பெறப்பட்டிருந்தன. இதே போல 27,002 கிலோ இறைச்சி நாளொன்றுக்கு பெறப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் நாளொன்றுக்கு 320,546 முட்டைகளும் 35,722 ஒரு நாள் குஞ்சுகளும் 50,744 கிலோ கோழி இறைச்சியும் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இந்த நிலை 2023 இல் காணப்படவில்லை. உண்மையில் இத்துறையில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு அண்மைய பொருளாதாரப் பெருமந்தம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியாவிலிருந்தே முட்டை இறக்குமதி செய்யப்படுகின்றது.
கோழி வளர்ப்புத் தொழிற் துறையின் சமூக மட்ட அவசியம் கருதி பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மீள மீள நிதி முதலிட்டு வருகின்றன. நவீன தொழில்துறையாக்கத்திலும் பார்க்க பாரம்பரிய வாழ்வாதார விருத்தியில் இத்துறை முதன்மையானதாக இருப்பினும் மெய் வருமானம் தொடர்பிலும் தொடர்ந்தேர்ச்சி தொடர்பிலும் பாரிய தோல்வியைத் தழுவிய தொழிற் துறையாக இது இருந்து வருகிறது. 2010 உள்நாட்டு போரின் முடிவுக்குப் பின்னர், சர்வதேச ரீதியில் மீள் கட்டமைப்புக்கென ஒதுக்கப்பட்ட நிதியில், மக்கள் பங்கேற்புத் திட்டம் என்ற வகையில் கோழிவளர்ப்பு முன்னுரிமைப்படுத்தப்பட்டு, வாழ்வாதார ஊக்குவிப்புக்கள் பல நிலைகளில் வழங்கப்பட்ட போதும், அதிலிருந்து பண்ணைத் தொழிலாக அது விருத்தியடையவில்லை என்பது பொருளாதார ரீதியில் ஒரு பாரிய தோல்வியாகும்.
ஆயினும், இத்தொழில் இன்னமும் மீள மீள முதலீடு செய்யப்படுகிறதென்பது அதன் குறுகிய கால நலனும் பெறுகையும் காரணமாக எழும் நம்பிக்கைக்குச் சான்றாகும். உயிரின வளர்ப்பில் அதிக சந்தை வாய்ப்பை கொண்ட இத்தொழில்நுட்ப துறையானது சுய தேவைப் பூர்த்தி, குறுகிய கால வருமானம், நீண்டகாலத் தொழிலாதாரம் ஆகிய பண்புகளால் இன்னமும் நிறைவான வாய்ப்புகளுடன் தொடரக்கூடியதாக உள்ளது. அதனை பண்ணை முறைக்கு மாற்றி விருத்தி செய்யக்கூடிய உள்ளகக் கட்டுமான வளங்கள் வடக்கு கிழக்கில் நிறையவே உள்ளன. கோழி வளர்ப்புத் தொழில்துறை சார்ந்து விருத்தி செய்யப்படக் கூடிய 3 வகையான பிரதான பிரிவுகளான,
1. கொல்லைப்புறக் கோழி வளர்ப்பு
2. இறைச்சிக் கோழி வளர்ப்பு
3. முட்டைக் கோழி வளர்ப்பு
ஆகிய துறைகளில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம் மூன்று துறைகளிலுமே அபிவிருத்திக்கான உள்ளக வாய்ப்புகள் பெருமளவுக்கு காணப்படுகின்றன. இதில் இறைச்சி, முட்டைக் கோழி வளர்ப்பின் அளவை அதிகரிப்பதன் மூலம் மட்டும் பொருளாதாரச் சாத்தியப்பாடுடைய தொழில் துறையாக இதனை அபிவிருத்தி செய்வதுடன் வருமானம், வேலைவாய்ப்பு என்பவற்றையும் உயர்த்திக்கொள்ள முடியும். நிலம், உள்ளகக் கட்டமைப்புக்கள் ஆகியன போதியளவில் காணப்படும் நிலையில் முயற்சி, நிதி முதலீடுகளால் இத் தொழிற்துறைப் போக்கை நகர வைக்க முடியுமாயின், வடக்கு கிழக்கு பொருளாதார தொழிற் துறையில் கோழி வளர்ப்பை மேலும் பலப்படுத்தி நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
தொடரும்.