சீன நிறுவனங்களின் பின்னணியில் கடல்விவசாய முன்னெடுப்பும் பரீட்சார்த்த முயற்சிகளும்
Arts
28 நிமிட வாசிப்பு

சீன நிறுவனங்களின் பின்னணியில் கடல்விவசாய முன்னெடுப்பும் பரீட்சார்த்த முயற்சிகளும்

October 11, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

1992 இல் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இப்படி ஒரு வசனம் பேசுவார்.

” 2000 வருஷமா, வேல் கம்பையும் அரிவாளயும் தூக்கிட்டு திரிந்த பய. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரத்திற்கு ஆள் வேணும் என்று கேட்டப்ப, ஓடிப்போய் முதல் வரிசையில் நின்றவன் முக்காவாசி பேரு நம்ம பய தான். “

அதே போலத்தான், கருவாட்டு கத்தியோடும், கலவாய் கம்பியோடும், மண்டாவோடும் நின்று பழக்கப்பட்டவர்கள் 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் வட்டுக்கோட்டை தமிழீழ பிரகடன தீர்மானம் போட்ட பின்பு ‘தமிழ் தேசிய’ விடுதலை இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டுப் போனார்கள். ஆனால் அந்த தனிநாட்டுத் தீர்மானத்தைப் போட்டவர்களின் பரம்பரையோ, முதலிலேயே தமிழ் தேசத்தை விட்டு நீங்கியது.

தமது அதிகாரத் தேவையை பூர்த்தி செய்ய எதையும் செய்யத் துணியக்கூடிய, யாழ்ப்பாண சைவ வேளாளிய மேல்தட்டு சாதிய சிந்தனைவாதிகளின் தமிழீழ கோசத்தைக் கேட்டு, உணர்ச்சி வசப்பட்டு தமிழீழ போராட்டத்திற்கு போனவர்கள், இறுதியில் உடுத்த உடுப்புடன் அனைத்தையும் இழந்து வீடு திரும்பினார்கள். தமிழீழ கோசத்தால் ஏமாற்றப்பட்ட மக்கள், சட்டியில் இருந்து குதித்து எரியும் அடுப்புக்குள் விழுந்தவர் ஆனார்கள்.

தொடர்ச்சியாக இனவாதக் கருத்தியலுக்குள் ஆட்பட்ட இலங்கையின் முப்படைகளும், 2009 யுத்த முடிவிற்குப் பின்னர் அவர்களின் பாதுகாப்புடனும், ஆதரவுடனும் இயங்கிய தமிழ் அரசியல் ஆயுதக் குழுக்களும், அரச ஒடுக்குமுறை இயந்திரத்தின் கரங்களான சிஐடி, TID, இராணுவப் புலனாய்வு பிரிவுகளும் கூட்டாகச் சேர்ந்து, எனது ஊர் மக்களின் வாழ்வைக் குலைத்து, அவர்களை திறந்த வெளிக் கைதிகள் ஆக்கினார்கள். எங்கள் ஊர் மட்டுமல்ல, வடக்கு கிழக்கின் அனைத்து மக்களின் வாழ்புல சூழலும் இவ்வாறே சீரழிக்கப்பட்டன.

2009 போர் முடிவுக்குப் பின், பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்த அரசாங்கமும், அரசபடை பிரிவுகளும், அவர்களோடு நின்ற தமிழ் அரசியல், ஆயுதக் குழுக்களும் 2009 வரை ‘போரிட்டு வாழ்ந்தவர்களையும்’, போருக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களையும் – அவர்களின் வறுமை மற்றும் கையறு நிலையையும் பயன்படுத்தி – பல வழிகளில் விலை கொடுத்து வாங்கினார்கள். தம்முள்ளே பல குறைகள் இருப்பினும், காலங்காலமாக கூட்டமாக சேர்ந்திருந்து கூடி வாழ்ந்த சமுதாயம், முள்ளிவாய்க்கால் வரை ஏதோ ஒரு நம்பிக்கையில் கூட்டமாக கொண்டு செல்லப்பட்ட சமுதாயம், மிக விரைவிலேயே சிதறிப்போனது. 

‘ஐந்துக்கும் பத்துக்கும்’ அரச உதவிகளைப் பெறுவதற்கும், அரசாங்கத்தின் அரவணைப்பில் நிற்கும் அடாவடி அரசியல் கும்பலிடமிருந்து நலன்களைப் பெறவும், அவர்களின் பலாத்காரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், அந்த அடாவடி அரசியல் அதிகாரத்துக்கு பணிந்து போனார்கள். அவர்களில் சிலர் தமது சமூகத்தின் கூட்டு வாழ்வை சீரழிக்கும் சக்திகளின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தரகர்களாகக்கூட ஆக்கப்பட்டார்கள். 

அரச மானியங்களும், வீட்டுத் திட்டங்களும், கடல் தொழில் சாதனங்களும், வாழ்வாதார உதவிகளும் இந்த அடாவடி அரசியல் அதிகாரத்தை தொழுது நின்றோர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அதிகாரத்தை எதிர்த்தவர்கள், கேள்வி கேட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டமென்ற வாள் கொண்டு மிரட்டப்பட்டார்கள். நடுச் சந்தியில் வைத்து பச்சை மட்டையால் அடிக்கப்பட்டார்கள். இராணுவ முகாமுக்கும், சிஐடி அலுவலகத்துக்கும் விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தப்பட்டார்கள்.

2009, கார்த்திகை. வாடைக் காற்றடித்து கலக்கெடுத்த கடலில், கையில் கிடைத்த வலைத் துண்டைப் பொத்தி எடுத்து, இத்துப்போன வள்ளத்தின் கலப்பொத்தை சரிபார்த்து கடலில் இறங்கிய மீனவருக்கு, ஒரு ‘சுடு கீளி’யும் கிடைக்கவில்லை. இந்திய ரோலர்களின் கடல் கொள்ளையால் வளம் அழிந்து போன கடல் தாயால், தன்னைத் தேடிவந்த தன் சொந்தப் பிள்ளைகளுக்கு எதையும் கொடுக்க முடியவில்லை.

கடன் வாங்கி கடலில் படுத்த வலை, இந்தியக் கடல் கொள்ளைக்காரர்களால் சிதைக்கப்பட்டது. எதிர்த்து நின்ற தொழிலாளிகளின் சிறுவள்ளங்கள், இந்திய ரோலர்களால் இடித்து கடலில் மூழ்கடிக்கப்பட்டன. கரையோரத்தில் போட்ட வலை, உயர் பாதுகாப்பு வலய கடல் பிரதேசத்துக்குள் நீரோட்டத்துடன் மிதந்து போன காரணத்தால், அதிகாலையில் வலையேற்ற போன தொழிலாளிகள் கடற்படையால் அடித்து விரட்டப்பட்டார்கள். கடலில் போட்ட வலையும் இழந்து தொழிலிலும் இழந்து வீடு திரும்பினார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

‘தமிழ் தேசத்து’ மக்கள் கடலில் அடித்து விரட்டப்பட்டும், இந்திய கடற் கொள்ளைக்காரர்களினால் கஞ்சிக்கின்றி ஆக்கப்பட்ட நிலையிலும்கூட, எந்தத் ‘தமிழ் தேசியக் கட்சியும்’ மீனவருக்காக குரல் கொடுக்கவில்லை. இந்திய கடற்கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பது, தமிழ்நாட்டின் ‘தொப்புள்கொடி உறவுகளை’ எதிர்க்கும் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ‘தமிழ் இனத்தின் பெயரால் இந்தப் பிரச்சினையை பெரிய பிரச்சினையாக ஆக்காதீர்கள்.’ என பாடம் எடுத்தார்கள் 2009 இற்கு பின் உருவான தமிழ் தேசியத் தலைவர்கள். 

இலங்கை கடற்படையானது, சில சந்தர்ப்பங்களில் இந்திய கடற் கொள்ளையர்களை தடுக்க முயற்சித்தாலும், அது பெரும் பயனை கொடுக்கவில்லை. இலங்கை மீதான இந்திய அரசியல் மேலாதிக்கம், அதன் கடல் ஆளுமை, பொருளாதார வன்மை போன்றன இலங்கை அரசை பேசாமடந்தை ஆக்கியது.

இவற்றிற்கு எதிராக போராட முனைந்த கடற்கரை சார்ந்த சமூகம், இலங்கை அரசின் நிழலில் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோராலும், தமிழ் தேசிய ஏஜண்டுகளாலும் மௌனிக்க வைக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பகுதியினரும் இந்திய நலன் சார்ந்து, கடல் தொழில் சமூகத்தை கைவிட்டார்கள்! காட்டிக் கொடுத்தார்கள்!

2009 மே மாதம், வகைதொகை தெரியாத அழிவுகளுக்கு முகம் கொடுத்த கரையோர மீனவச் சமூகம் அநாதரவாய் தெருவில் நின்றது. தடுப்பு முகாம்களில் வதைபட்டது. யுத்தம் இல்லாத காலத்தில், அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தாலும் சக மனிதனுக்கு தன்னிடம் இருந்ததை பகிர்ந்தளித்து உண்ட சமூகம் அது. இன்று பலரது தயவையும் எதிர்பார்த்து உயிர் வாழப் பணிக்கப்பட்டிருக்கிறது. கௌரவமாய் களித்துண்ட, பகிர்ந்துண்ட சமூகம், இன்று அரசியல் பாதகர்களின் சந்தர்ப்பவாத அரசியற் பொறியில் விழுந்து, அதன் ஆதரவின்றி வாழ முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.

‘தமிழீழக் கனவு’ கலைந்து, யுத்தம் முடிந்து, எல்லோரும் தமது வீடு வந்துசேர, 2010 தை மாதம் ஆகிவிட்டது. வடக்கின் வசந்தங்களும், கிழக்கின் உதயங்களும் தமிழ் மக்கள் மீது ‘கரிசனைக் கொள்ளை’ நிகழ்த்த தொடங்கிய காலம். ‘தமிழ்த் தேசிய விடுதலைக்’ களத்தை கொலைக் களமாக்கிய இயக்கங்களின் எச்சசொச்சங்கள், மக்களின் புதிய எசமானர்களாக இலங்கை அரசின் நிழலில் வடக்கு கிழக்கெங்கும் களிப்போடு வலம் வந்தார்கள்.  

அரசாங்கத்தினால் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பான அபிவிருத்தித் திட்டங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டுவரப்பட்டன. வடக்கின் வசந்தம் – கிழக்கின் உதயம் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் தொழில் துறை அபிவிருத்திகளையும் செய்யப்போவதாக அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசு அறிவித்தது.

இந்த அபிவிருத்திகளின் பின்னால் இந்திய தேசம் சார்ந்த மூலதனமும், அதன் பாதுகாப்பு அரசியல் திட்டங்களும் வடக்கு கிழக்கைத் தேடி வருவதாக கூறப்பட்டது. இந்திய மூலதனமும், இந்திய அதிகார வர்க்கமும், அதை ஆட்டிப்படைக்கும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கி தரப்போவதாக இன்னொரு புறமாகப் பேசப்பட்டது. அதேவேளை, எந்தவித சந்தடி சாக்குமின்றி சீனாவின் மூலதனத் தேவையை நிறைவேற்றுவதற்கான வேலைகளை முன்னெடுப்பதில் ராஜபக்ச அரசு மும்முரமாக ஈடுபட்டது.

மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற பெயரில், சீனாவின் நீலப் பொருளாதார நலனை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் கொண்டுவரப்பட்டன. வடமேற்கே கற்பிட்டி பிரதேசத்தில், அட்டை வளர்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக அட்டைக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் நிலையங்கள், சீன மூலதனம் மற்றும் அதன் தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டன.

கற்பிட்டி அட்டைக் குஞ்சு உற்பத்தி நிலையங்கள், 2009 போர் முடிவுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டு இருந்தமையால், அட்டைக் குஞ்சுகளை பண்ணைகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் 2010 களிலேயே ஆரம்பித்துவிட்டன. கற்பிட்டியில் உற்பத்தி செய்யப்பட்ட அட்டை குஞ்சுகளை வளர்த்தெடுக்கும் கடல் பிரதேசம் பெரும்பாலும் வடக்கிலேயே காணப்பட்டது. இதனால், போர் முடிவுக்கு பின்னான காலத்தில் கற்பிட்டி தொடக்கம் வடக்கே தீவகம் வரையான கடற்கரைப் பிரதேசங்கள் அட்டை வளர்ப்பிற்கான கடற் களமாக தெரிவு செய்யப்பட்டன.

கிழக்கில், வாகரைப் பிரதேச கடற்கரைகள் இறால் வளர்ப்பிற்கும், நண்டு வளர்ப்பிற்கும் உகந்ததாக கணிக்கப்பட்டன. ஆனாலும், அரச அதிகாரத்தின் பிரதிநிதிகளாக செயற்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் குழுவினர், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோரங்களில் உல்லாசப் பிராயண தொழிற்துறயை அபிவிருத்தி செய்வதிலேயே அதிக கரிசனை காட்டினார்கள். நேரடியாக தமக்கு பெரிய பலன்தராத மீன், இறால் வளர்ப்பை விட இன்றய சந்தைப் பெறுமதியில் பல்லாயிரம் கோடி பெறுமதியான, நன்னீரும் செம்மணலும் கொண்ட கிழக்கின் கரைகளில், அவர்களின் கண் இருந்தது இயல்பானதே. அதிகார வர்க்கமும், அரசியல் சார்ந்த சமூகக் கொள்ளையர்களும் இணைந்து கிழக்கின் கரைகளை தமக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். இது இன்றுவரை பெரிதாக ஒருவரும் பேசப்படாத விடயமாக இருக்கிறது. கிழக்கில் இவர்களைப் போல, வடக்கில் இயங்கிய ராஜபக்சக்களின் சாகாக்களுக்கு, தமக்குள் பங்குபோடக் கிடைத்த ஏனைய வளங்களில், வடக்கின் கடல்வளம் முதன்மையானது.

கடல் அட்டை வளர்ப்பு சார்ந்த பரீட்சார்த்த முயற்சி செய்வதற்காக, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைகள் தொடக்கம் அராலி – நாவாந்துறை வரையுமான கடல் பிரதேசங்களில் சில பகுதிகள் தெரிந்து எடுக்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லப்போனால், கிளிநொச்சி மாவட்டத்தில் – கிராஞ்சி, நாய்ச்சிக்குடாக் கரைகள், யாழ்ப்பாண மாவட்டத்தில் – புங்குடுதீவு பெரிய புட்டிக் குடா, நரையாம் பிட்டியின் மேற்கு களம் மற்றும் கன்னாத் தீவு, கெட்டில் அம்பிகை நகர் துறைமுகத்துக்கு மேற்காக சுருவில் சந்திக் கடற்பரப்பு (கடற்படை முகாம் கடற்பகுதி), காரைநகர் வடக்குக்கரை தொடக்கம் அராலி – நாவாந்துறை வரையிலான கடல் மற்றும் மண்டைதீவு, மாடோடுபிட்டி / சிறுத்தீவு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. 

இக்கடற்பரப்பில் கடல் அட்டை வளர்ப்பதற்காக சீன நிறுவனங்கள் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை. மாறாக, சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தவர்களே அட்டை வளர்ப்பில் ஈடுபட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். முதலாமவர், புலம்பெயர் நாடுகளில் புலிகள் இயக்க அழிப்பிற்கு ஆதரவாக இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கியவர்கள். குறிப்பாக, இவர்கள் ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் – கருணா போன்றோருக்கு நெருக்கமானவர்கள். அடுத்த பிரிவினர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் பெரும் தொகையில் பணம் புரளும் புலிகளின் நிறுவனங்களை பினாமியாக நடத்தி, அதில் திரண்ட கணக்கு வழக்கற்ற மூலதனத்தோடு, 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிற்குப் பின், நேரடியாக மஹிந்த ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வியாபாரம் செய்யப் போனவர்கள்.

இதில் வினோதம் என்னவென்றால், இவர்களில் பலருக்கு கடலட்டை பற்றியோ அல்லது கடல் வளம் பற்றியோ பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் எல்லோரும் பெரிதாக விருப்பம் காட்டியது, சுற்றுலாத்துறை உள்ளிட்ட மதுபான சாலை நடத்தும் அனுமதிப் பத்திரங்கள்; அல்லது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வது என்பது பற்றியதாகும்.

ராஜபக்ச அரசாங்கம் இவர்களில் பலருக்கு, சீனாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மருந்துகள் உட்பட உணவு பொருட்கள், வாகனங்கள், மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் இறக்குமதி செய்யும் அனுமதிப் பத்திரங்களை வழங்கியது. சிலருக்கு மதுபான விற்பனை லைசென்ஸ் மற்றும் தங்குவிடுதிகள் நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது. அவ் அனுமதிப் பத்திரங்களுடன் ‘கொசுறாகவே’ கடல் விவசாய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் அடிப்படையில், இவர்கள் கடல் விவசாயத்தில் ஈடுபட விருப்பம் காட்டவில்லை. ஏற்றுமதி – இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் பெறுவதானால், கடலட்டை வளர்ப்பு மற்றும் – கடல் விவசாயத்தில் ‘முதலீடு’ செய்ய வேண்டுமென்ற நிபந்தனையையும் – அதை, சீன நிறுவனங்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்ற ‘கட்டயானமான கோரிக்கையையும்’ மஹிந்த அரசு இவர்களிடம் வைத்ததினால் இந்தப் புலம்பெயர் முதலீட்டாளர்களால் அதனைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தாலேயே மேற்படி புலம் பெயர்ந்த மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடச் சம்மதித்தனர்.

கடலட்டை வளர்ப்பைப் பற்றியோ அல்லது கடலைப் பற்றியோ பெரிய அக்கறையோ அறிவோ இல்லாத இவர்கள், சில உள்ளூர் மீனவர்களின் துணையுடன் தமக்கு வழங்கப்பட்ட கடல் பகுதிகளில், சீன நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடலட்டைக் குஞ்சுகளை வளர்ப்பில் இட்டனர். இது 2010 நடுப்பகுதியில் நடைபெற்றது. சீன நிறுவனங்களால் கற்பிட்டி பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட அக்கடலட்டைக் குஞ்சுகள் வடமேற்கு கடலின் சீதோஷ்ண நிலைமைக்கு தாக்குப்பிடிக்க முடியாதவையாக இருந்தன. சீனாவின் மரபணு மாற்றப்பட்ட அட்டை குஞ்சுகளில் பெரும்பகுதி கடலடித்தள மணலின் தன்மைக்கும், உப்பின் அளவுக்கும் தம்மை இயைபாக்கம் செய்யமுடியாமல் அழிந்து போயின. மீதமானவை 2010 மழை காலத்தில் கடலில் வந்து விழும் நன்னீர்ப் பெருக்கு காரணமாக மண்ணோடு மண்ணாகின.

பக்க வியாபாரமாக, கடலட்டை வளர்ப்பில் (Side Business) மூலதனம் போட்டவர்களுக்கு இது பெரிய இழப்பாக இருக்கவில்லை. அவர்களின் குறி, பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் தமது மூலதனத்தைப் பெருக்கும் தொழிலில் இருந்ததனால், அட்டை அழுகி மண்ணாகிப் போனது அவர்களுக்கு பெரிய விடயமாகப்படவில்லை. இதே காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தின் சில கடற்பகுதிகளில் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் சீன நண்டுக் குஞ்சுகள் கடலில் இடப்பட்டு வளர்க்கப்பட்டன. அந்த நண்டு வளர்ப்பும் பெரிய வெற்றியை அளிக்காமல் இராணுவத்தால் கைவிடப்பட்டன.


நண்டு ஏற்றுமதியும், உள்ளூர் நிறுவங்கள், சிறு முதலீட்டாளர்கள், முதலாளிகளின் அழிப்பும் 


இப்பதிவின் ஆரம்பத்தில் கூறப்பட்டது போல 2010 இல் ஊருக்கு திரும்பிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமது சீவியத்தை கட்டமைக்கத் தொடங்கினார். போர் முடிவுக்கு வந்த நிலையில் எமது கடலில் பெருமளவில் காணப்பட்ட வெள்ளை நண்டுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி (Demand) உருவாகியிருந்தது. பல வருட காலமாக பெரிய அளவில் அடிபடாத கடல் என்றபடியால், நண்டு பிடிபாடு பெரும் வருமானத்தை மீனவர்களுக்கு வழங்கியது. பாரம்பரியமாக, மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடும் சிறு முதலாளிகள் பெரும் இலாபத்தை அடைந்தனர். மீனவர்களுக்கும் மீன்பிடி சார்ந்து இயங்கும் உள்ளூர் சிறு முதலாளிக்குமான உறவானது நீண்டகால பாரம்பரிய பொருளாதார அடிப்படையை கொண்டது. அதில் சிலவற்றை பார்ப்போம். 

முற்பணம் கொடுப்பது: மீன்பிடி சீசன் தொடங்குவதற்கு முன்பேயே சிறிய மீனவர்களின் வாழ்க்கைச் செலவுத் தேவைகளைச் சமாளிக்க, புதிய தொழில்களை உருவாக்க என முதலாளி முற்பணம் கொடுப்பார். மீன்பிடி சீசன் தொடங்கும் போது, இந்த முற்பணத்தில் பெரும்பான்மையான தொகை முதலாளிக்கு திரும்பி வருவதில்லை. முதலாளியின் இலாபம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அவர் இதை கேட்பதும் கிடையாது.

“நல்லநாள் பெருநாளுக்கு” பெறும் உதவி: தைப்பொங்கல், நத்தார், வருடப் பிறப்பு போன்ற பெருநாட்களை கொண்டாடுவதற்கு வசதியற்ற குடும்பங்களுக்கு முதலாளிகளால் மீனவர்களின் தேவைக்கேற்ப தொகைகள் வழங்கப்படும். வழமையாக, மேற்குறிப்பிட்ட பண்டிகைகளின் போதே மீன்பிடி சமூகம் உடைகளையும் நகைகளையும் வாங்குவது வழமை. பெருநாள் கொண்டாட்டங்களுக்காக வாங்கப்படும் கடனானது பெரும்பாலும் முற்று முழுதாக செலுத்தப்படும். காரணம், இக்கடன் பெறும் பண்டிகை காலங்களிலேயே பெரும்தொகையாக மீன்பிடி நடக்கும் வாடைக்காற்று வீசும் காலமாகும். 

நல்லது- கெட்டத்துக்கான” உதவி: இக் கடன், ஒரு குடும்பத்தில் திருமணம், சாமத்தியச் சடங்கு போன்ற ‘நல்ல சடங்குங்கள்’ அல்லது செத்த வீடு மற்றும் துன்பகரமான நிகழ்வு நடக்கும் போது முதலாளியிடம் இருந்து பெறப்படுவது. இதில் பெரும்பாலும் துன்பகரமான நிகழ்வுகளுக்கு படும் கடன், மீன்கார முதலாளிகளால் திரும்பி கோரப்படுவதில்லை. 

பாரம்பரியமாக, மீனவருக்கும் – மீன்வாங்கும் வியாபாரிக்கும் இடையிலான உறவானது, சந்தைக்கும் அல்லது நுகர்வோருக்கும், மீனவருக்கும் இடையிலான ஒருவகை ‘கொடுக்கல் வாங்கல்’ உறவாகும். இதில் உள்ள பொருளாதாரம் உள்ளூர் சார்ந்தது. ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கும் பொருளாதாரம். இந்த பொருளாதாரம் 2009 இற்கு பின்னால், நண்டு சர்வதேச ஏற்றுமதி பொருளாக மாறிய வேளையில், தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிக்கும் ‘டொலர்’ பொருளாதரமாக மாறியது. உள்ளூர் சிறு முதலாளிகளிடம் இருந்து நண்டு கொள்வனவை கைப்பற்ற, சீன நிறுவங்களின் மூலதனப் பின்னணியை கொண்ட கொம்பனிகள் வடக்கில் கிளைகளைத் திறக்க தொடங்கின. 

crab farm

நேரடியாகவே மீனவர்களிடம் கொள்வனவு செய்ய களமிறங்கிய இந்த கம்பனிகளுக்கு சவாலாக இருந்தது யாதெனில் மீனவர்களுக்கும் – உள்ளூர் சிறு முதலாளிக்கும் இடையிலான மேலே விபரிக்கப்பட்ட பாரம்பரிய மீன்பிடிப் பொருளாதர ‘கொடுக்கல் வாங்கல்’ வியாபார உறவாகும். இந்த உறவை உடைப்பதன் மூலம் மட்டுமே தமது இலக்கை அடைய முடியுமென்று கண்ட சர்வதேச மூலதனம் சார்ந்த நிறுவனங்கள், அரசியல்வாதிகளுடனும் அவர்களின் அடியாட்களான அதிகார வர்க்கத்துடனும் கை கோர்த்தார்கள். 

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் செழித்து வளர்ந்த மீனவ சங்கங்கள், எண்பதுகளில் எவ்வாறு வீரியமற்றுப் போனது என்று இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். அச் சங்கங்களின் எச்சங்கள் சந்திரிக்காவின் காலத்தில் மீளக் கொண்டுவரப்பட்டு கூட்டுறவு சங்க வரையறுத்தல் சட்டத்திற்கிணங்க உயிர்கொடுக்கப்பட்டன. அல்லது மறு சீரமைக்கப்பட்டன என்று கூறப்பட்டது. சுயாதீனமான மீனவ சங்கங்கள் மாகாண அமைச்சுக்களின் கீழ் கொண்டுவரப்பட்டன. மீன்பிடி இலாகாவின் அதிகாரிகளும், மாகாண அமைச்சு அதிகாரிகளும் தமது தேவைக்கேற்ப கையாளும் ‘ஆயுதமாகவே’ வடக்கில் இச்சங்கங்கள் பாவிக்கப்பட்டன.

2009 இன் பிற்பாடு மீனவச் சங்கங்கள், அரச அதிகாரத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளுக்கு கைத்தடியாக செயற்படுபவர்களின் கூடாரம் ஆகியது. சங்கங்களின் தலைமையில் இருந்தவர்களும், அரச மீன்பிடி அதிகாரிகளும் இணைந்து அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற சீனத்து மூலதனம் சார்ந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வடக்கின் மீன்பிடியை கொண்டுவருவதற்காக செயலில் இறங்கினார்கள்.

சட்டரீதியான நெருக்கடியை கொடுப்பது, இலங்கையின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற பெயரில் மீன் வியாபார உட்கட்டமைப்பை அழிப்பது, சட்டத்துக்கு முரணான வகையில் கடல் போக்குவரத்து செய்தார்கள் என்ற பெயரில் கைது செய்வது, சுனாமி மற்றும் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி வாடி அமைத்தார்கள் என்று குற்றம் சாட்டுவது, லைசன்ஸ் அல்லது அனுமதி இல்லாமல் மீன் வியாபாரம் செய்தார்கள் என்று கைது செய்வது போன்ற நெருக்கடிகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மீன் பிடிச்சங்க கைக்கூலிகளும் சிறு முதலாளிகளுக்கு எதிராக பிரயோகித்தார்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் சிறு முதலாளிகள் தொழிலில் இருந்து வெளியேறினார்கள். தெற்கை தலமையாகக் கொண்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வடக்கின் ஏற்றுமதிப் பொருளாதாரம் சார்ந்த கடல் தொழில் கொண்டுவரப்பட்டது. 

2013 இல் வடமாகாண நிர்வாகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில்கூட, எந்த விதத்திலும் வடக்கின் கடல் பொருளாதாரம் சார்ந்த சர்வதேச கொள்ளைகளையோ அல்லது மஹிந்த ராஜபக்ச அரசின் உள்ளூர் பிரதிநிதிகளின் அடாவடித்தனங்களையோ அவர்களால்  தட்டிக் கேட்க முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்தி சார்ந்த எந்த அரசியலிலும் தாம் ஈடுபட மாட்டோம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் ‘தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை’ காண்பது மட்டுமே தமது அரசியல் நிலைப்பாடு என்று எக்காலத்தையும்போல் அப்போதும் பேசித் திரிந்தார்கள். இதனால், வடக்கின் அனைத்து அபிவிருத்தியும், மக்களின் அன்றாட வாழ்க்கையும் அதன் மீதான அதிகாரங்களும் இராணுவம், வடக்கு மாகாண கவர்னர், மஹிந்த அரசாங்கம் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளிலேயே இருந்தது. இவர்கள், சீனாவின் நண்பர்களாக இருந்தார்கள் என்பதை மறுபடியும் இங்கே விளக்கமாகக் கூறத் தேவையில்லை.

மக்களைப் பரிதவிக்க விட்டு, மக்கள் நலம் சாராத அரசியல் செய்யும் கொடுங்கோலர்களின் ஆதிக்கத்துக்குள் இயற்கையையும், தேசத்தின் வளங்களையும் இருக்க விட்டுவிட்டு, இப்போதும் கூட தமிழீழ தேசிய விடுதலை பற்றி பேசித் திரிகின்றனர் மக்களின் நிலையறியா ‘தேசியவாதிகள்’. கடலும் கடல் சார்ந்த நிலமும் கூட தேசத்தின் முக்கியமான பாகம் என்பதனை இவர்கள் விளங்கிக் கொண்டதாக இல்லை.  

மைத்ரி – ரணில் நல்லாட்சியும் தொடர்ச்சியான சீனக் கடல்வள ஆக்கிரமிப்பும்  

வடக்கு மாகாண கரையோரத்தின் தெரிவு செய்யப்பட்ட கடற்பகுதியில் போடப்பட்ட அட்டைகள் எந்தவித பலனும் இன்றி, 2010 இறுதிப் பகுதியில் அல்லது 2011 இன் ஆரம்பத்தில், அழிந்து போனதைப் பற்றி பார்த்தோம். கடல் அட்டை குஞ்சுகளை வழங்கிய சீன நிறுவனம், கடலட்டை அழிவை ஆய்வு செய்து காரணங்களை கண்டறிந்தது. மரபணு மாற்றப்பட்ட அட்டைக் குஞ்சானது வட இலங்கையின் கடலின் இரசாயனத் தன்மை மற்றும் காலநிலைக்கு தாக்கு பிடிக்கத்தக்கனவல்ல என்பதனாலேயே அவை அழிந்து போயினவென்று முடிவுக்கு வந்தது. அத்துடன், கடலட்டை விவசாயம் செய்வதற்கான விஞ்ஞான ரீதியான அறிவுப் பற்றாக்குறையும் இலங்கையில் நிலவியதென்பதும் அறியப்பட்டது. 

சில வருட இடைவெளியின் பின் 2015 இன் ஆரம்பத்தில் மறுபடியும் புதிய இன அட்டை குஞ்சுகளுடன் சீன நிறுவனங்கள் அவற்றை வளர்ப்பதற்கான முயற்சியில் களத்தில் இறங்கின. 2015 ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், மஹிந்த ராஜபக்ச அரசின் வீழ்ச்சி, மைத்திரி ரணில் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசு அதிகாரத்துக்கு வந்தமை போன்ற காரணங்களினால், சீனக் கடல் அட்டை வளர்ப்பு மற்றும் சீன நீலப் பொருளாதார முன்னெடுப்புகள் இலங்கையில் தடைப்பட்டன.

‘நல்லாட்சி அரசாங்கம்’ எனக் கூறப்பட்ட மைத்திரி-ரணில் அரசானது, மஹிந்த அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மறு விசாரணை செய்யப்போவதாக அல்லது மறு ஆய்வுக்கு உட்படுத்த போவதாக அறிவித்தது. PORT CITY  ஒப்பந்தம், அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், அம்பாந்தோட்டை விமான நிலைய ஒப்பந்தம் மற்றும் கடல் வளங்கள் சார்ந்த ஒப்பந்தங்களும் அவ் ஆய்வுக்குள் உள்ளடக்கப்பட போவதாக தெரிவிக்கப்பட்டன. 

மேற்கூறப்பட்ட ஒப்பந்தங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், கடல் வளங்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் எவற்றிலும் பெரிதான மாற்றங்கள் செய்யப்படவில்லை. மறுபடியும் சீனாவின் நீலப் பொருளாதார முயற்சிகள் இலங்கையில் தொடரப்பட்டன. தென் கடலில் சீனா வரையறையற்ற மீன்பிடியை இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

வடக்கில், 2015 வரையும் ராஜபக்ச அரசுடன் இணைந்து இயங்கிய டக்ளஸ் தேவானந்தா, அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால், சீன நிறுவனங்களாலும் மீன்பிடி சார்ந்த அரசின் நிர்வாகத்தாலும் அட்டை வளர்ப்பு உட்பட்ட கடல்சார் நடவடிக்கைகளை வடக்கில் செய்ய முடியவில்லை. 2015 ஆண்டு தொடக்கம் மீனவ சமூகம் சுயாதீனமாக, அரச நிர்வாகத்தை பெருமளவில் எதிர்த்துக் கொண்டு, மீனவ சங்கங்களை சீர்திருத்தம் செய்தது.

prawns farm

2015 வரை, அரசியல்வாதிகளின் விருப்பு-வெறுப்பிற்கேற்றபடி கொடுக்கப்பட்ட மீன்பிடி மானியங்கள், மீன்பிடிக் கலன்கள், உபகரணங்கள் உள்ளூர் சங்கங்களின் தீர்மானத்தின்படி தேவையானவர்களுக்கு நியாயமான முறையில் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் 2015 இற்கு முன்பு போல, தாம் நினைத்தபடி அட்டை வளர்ப்பு போன்ற விடையங்களைச் செய்வது மீன்பிடி அமைச்சுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சவாலாக இருந்தது. அட்டை வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்புக்காக  2015 வரை அதிகார வர்க்கத்தால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள், சங்கங்களின் முயற்சியால் இல்லாமல் ஒழிக்கப்பட்டன.

இந்நிலையில், நீலப் பொருளாதாரம் சார்ந்து 2009 இற்கு பிற்பாடு மகிந்த ராஜபக்ச அரசிடமிருந்து பல ‘நன்மைகளை’ பெற்றுக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சீன நிறுவனங்களின் தேவைகளை வடக்கில் பூர்த்திசெய்ய, சீனாவின் புதிய அட்டை வகைகளை கடலில் இட்டு பரிசோதிக்க அனுசரணை வழங்கும் வேலையில் இறங்கினார். 2015 இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற சில மாதங்களிலேயே, மஹிந்தவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் டக்ளஸ் தேவானந்தா. 

Koduva fish

2018 காலகட்டத்தில், தனது பழைய அரசியல் கூட்டாளியான அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து சில உதவிகளை பெற்று கொண்டார். அதில் ஒன்று, மீன்பிடி அமைச்சினால் வடக்கில் செய்யப்படும் சில அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சீனா சார்ந்த கடல் பொருளாதார வேலைத் திட்டங்களில் தலையீடு செய்வதற்கான வசதிகளையும், வாய்ப்புக்களையும் பெற்றுக்கொண்டதாகும். இதன் அடிப்படையில் மீன்பிடி அமைச்சரும் அதிகாரிகளும் சில வேண்டுகோள்களை நிறைவேற்றி கொடுக்கும் நிலைமை உருவாகியது. இதில் சீன தூதுவராலயமும், சீன நிறுவனங்களும் கூட பின்னணியில் இருந்தன. மீண்டும் வட கடலில் அட்டை வளர்ப்பு, கொடுவாய் மீன் வளர்ப்பு, கடற்பாசி மற்றும் நண்டு வளர்ப்புக்கான அனுமதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இக்காலத்தில் தான், வட கடல் பகுதியில் கடற்பாசி வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

sea weed

வெளிநாடுகளிலிருந்து கடல் தொழில் துறை ஆலோசகராக சிலர் இறக்குமதி செய்யப்பட்டார்கள். பெரும்பாலும், மீனவ கிராம பின்னணியைக் கொண்ட இந்த ‘கடல் துறை ஆலோசகர்கள்’, கடற்பாசி வளர்ப்பு, அட்டை வளர்ப்புக்கு எதிராகக் கிளம்பிய மக்களின் எதிர்ப்புக்களை சமாளிக்க பயன்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாக ரணில் பதவியில் இருந்து இறங்க, மஹிந்த தலைமையில் டக்ளஸ் மறுபடியும் அமைச்சரானார். 2018 இல் சில மாதங்கள் அமைச்சர் பதவியில் இருந்த பின்னர், 2019 இல் நடந்த ஆட்சி மாற்றத்தினால் மறுபடியும் மகிந்த தலைமையினான அரசில் கடற்தொழில் அமைச்சரானார். இன்று ரணில் தலைமையிலான அரசில் அதே அமைச்சுக்கு மந்திரியாக உள்ளார். 2019 இற்குப் பின்னான காலகட்டத்தில் பாரிய கடல் வளம் இவர் தலைமையிலான அமைச்சின் ஊடாக சர்வதேச மற்றும் உள்நாட்டு பெரு மூலதனத்துக்கு அளந்து அளந்து கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பிக்கப்பட்ட அட்டை வளர்ப்பு பட்டிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வடக்கின் கரையை ஆக்கிரமித்துள்ளன. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10374 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)