கீழைக்கரையில் சோழர்
Arts
10 நிமிட வாசிப்பு

கீழைக்கரையில் சோழர்

November 15, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

10 ஆம் நூற்றாண்டில் இராசநாட்டில் இருந்த அனுராதபுரச் சிங்கள அரசு இலங்கை சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்துவிடுகின்றது. அக்கால ஆசியாவின் ஆதிக்க சக்திகளாக விளங்கிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய வணிக கணங்களும் அனுராதபுர அரச வம்சத்தினரிடையே காணப்பட்ட ஆட்சிப் போட்டியும் சோழர் இலங்கையுள் நுழைவதற்கு சாதகமாக விளங்கின. மெல்ல மெல்ல இவ்வாதிக்கமானது முழு இராச நாட்டிலும், அக்கால இலங்கைத் தலைநகர் அனுராதபுரத்திலும் கிளர்ச்சிகள், அரசியல் கலவரங்களின் வழியே அதிகாரத்தைக் கைப்பற்றியது. இறுதியில் சிங்கள அரசின் சந்ததியில் எஞ்சினோர் சிதறுண்டு தெற்கே பின்வாங்கி உரோகணத்தில் மறைந்து வாழத் துவங்கியதுடன் சுமார் நூறாண்டு காலம், இலங்கை மணிமுடிக்கு சோழநாடு உரிமை கோரலாயிற்று.

சோழர் காலத்தில் இடம்பெற்ற ஈழப் படையெடுப்புகளை வருமாறு சுருக்கி நோக்கலாம். வளர்ந்து வந்த சோழ அரசுடன் அனுராதபுர அரசு முரண்பட்ட முதல் சம்பவம் பதிவாகியது பராந்தகச் சோழனை எதிர்த்த இராசசிம்ம பாண்டியனுக்கு அனுரை அரசன் ஐந்தாம் காசியப்பன் படையுதவி அளித்த போது தான். அதனால் சீற்றமுற்று 919 இல் பராந்தகச் சோழன் இலங்கை மீது படையெடுக்கின்றான். பாண்டிய – சிங்களக் கூட்டுப்படையை வென்ற பராந்தகன் ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டாலும், அவன் கடல் கடந்து இலங்கை வந்து வென்றதாகத் தெரியவில்லை.

ஆனால் அண்ணளவாக 930 அளவில் அதே இராசசிம்ம பாண்டியன் சோழருக்கு அஞ்சி தன் பாண்டிய குலச்சின்னங்களை அனுரை அரசன் நான்காம் தப்புலனிடம் ஒப்படைக்கிறான். 947 பிற்பாதியில் பராந்தகச் சோழனின் ஈழப்படையெடுப்பு நான்காம் உதயன் காலத்தில் இடம்பெறுகிறது. உதயன் பின்வாங்கி உரோகணத்தில் தங்க நேரிடுகின்றது. சுமார் ஐம்பதாண்டுகளுக்குப் பின் 992, 993, 994, 1002 ஆகிய ஆண்டுகளில் மாமன்னன் இராசராசன் ஈழம் மீது படையெடுத்தான். அவன் மகன் இராசேந்திரன் 1017 இல் நிகழ்த்திய படையெடுப்பில் ஈழமண்டலம் முழுவதும் சோழர் வசமானது. இப்படையெடுப்பில் முன்பு பாண்டியன் சிங்கள அரசனிடம் ஒப்படைத்த பாண்டிய குலச் சின்னங்களையும் சோழர் கவர்கின்றனர்.

சோழர் ஆதிக்கத்தின் கீழ் முழு ஈழமும் அமைந்திருந்தாலும், உரோகணப் பகுதி அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் முற்றாக நீடியாதவாறு அடிக்கடி கலவரங்களும் கிளர்ச்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருந்தமை மகாவம்சத்தின் மூலம் தெளிவாகின்றது. 1044 ஆம் ஆண்டு இராசாதிராச சோழன் உரோகணப் பகுதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய நான்கு சிங்களக் நாட்டுக் கிளர்ச்சியாளரை வென்றிருந்தான். இறுதியில் 1070 இல் விசயவாகு சோழரை வென்று இலங்கையின் சுயாட்சியை மீட்கிறான்.

மேற்கே மாதோட்டத்திலிருந்து அனுராதபுரம் வரையான பகுதியும், கிழக்கே திருக்கோணமலையிருந்து பதி, பொலனறுவை வரையான பகுதிகளும் சோழரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. குருநாகல், திசமாராமம், களுத்துறை பகுதிகளில் ஆங்காங்கே சோழர் ஆதரவில் உருவான திசையாயிரத்து ஐந்நூற்றுவரின் வணிகக் குடியிருப்புகள் நீண்ட நாள்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் இந்தக் காலகட்டத்தில் கீழைக்கரையில் எத்தகைய சமூக – பொருளாதார மாற்றங்கள் இடம்பெற்றன என்பது இப்போது கிடைக்கும் எழுத்து மற்றும் பொறிப்புச் சான்றுகள் மூலம் தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டு சிங்களக் கல்வெட்டுகளில் அனுராதபுர சிங்கள ஆட்சியின் கீழ் விளங்கியதாகத் தென்படும் கொட்டியாரப்பற்று, பாணமைப்பற்று, வேகம்பற்று, சம்மாந்துறைப்பற்று என்பனவற்றில் வாழ்ந்த மக்களின் நிலவரம் அடுத்த நூறாண்டில் சோழராட்சியில் என்னவானது என்பது தெளிவில்லை. ஆனால் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் கால வழுக்களுடன் பிரசன்னசித்து சரித்திரம், மனுநேயகயவாகு, புவனேயகயவாகு என்ற தலைப்புகளில் சில மறைமுகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

அ. சோழ இளவரசியை மணந்திருந்த கலிங்க இளவரசன் ஒருவன் இலங்கைக்கு யாத்திரை வரும்போது, கொட்டியாரப்பற்று நாகர் குலத் தலைவனின் எதிர்ப்பைச் சந்தித்து “தன்னோடு வந்த சோழ வீரியர்களை ஏவி” அவனையும் படை வீரர்களையும் “வெட்டிச் செயித்து” தட்சணாபதி (திருக்கோணமலை) யைத் தன்னிழலமர்த்தி சோழநாட்டு வீரியர்களைக் காவல் வைக்கிறான்.

ஆ. பின்பு தெற்கே மட்டக்களப்பு வந்து அங்கு ஆட்சிபுரியும் மன்னனுடன் குலமுகமன் கொண்டாடுகையில் மட்டக்களப்பு மன்னன் “நாகர்முனையில் பண்டுநாளில் சுப்பிரமணியர் ஆலயத்தை” சோழநாட்டு சிற்பிகளைக் கொண்டு செப்பனிட்டுத் தருமாறு வேண்டுகிறான்.

இ. கலிங்க இளவரசன் தன் மாமன் சோழ இராசனுக்கு ஓலை எழுதி சிற்பிகளும் திரவியங்களும் வருவித்துக் கோவிலைத் திருத்திக் கொடுத்து “அந்தணரை அழைத்து பத்ததியின் படி அபிசேகஞ் செய்வித்து திருக்கோயிலென நாமஞ்சார்த்தி” மட்டக்களப்பு மன்னனிடம் ஒப்புக்கொடுக்கிறான்.

ஈ. அதற்கு நன்றிக் கடனாக மட்டக்களப்பு மன்னன், மட்டக்களப்பின் தென்புறம்  மாணிக்க கங்கைக்கு வடக்காக ஒரு நகரை அமைத்து கலிங்க இளவரசனுக்கும் மனைவிக்கும் வழங்குகிறான். அந்நகரின் பெயர் உன்னாசகிரி.

உ. கலிங்க இளவரசனுக்கும் சோழ இளவரசிக்கும் பிறந்த மகன் உன்னாசகிரிக்கு “மேற்கிலும் தெற்கிலும் உள்ள நாடு, நகரங்களை எல்லாம் தன்வசப்படுத்தி”, மீண்டும் நாகர்முனை ஆலயத்தை சோழ நாட்டு சிற்பிகளை வரவழைத்து செப்பனிட்டு (சோழ நாட்டிலிருந்து) அரசர் பந்துக்களையும் நாற்பது திறவு குடிகளையும் வரவழைக்க, அவர்களால் இங்கு ஏற்கனவே இருந்த அந்தணர்கள் “தம்பட்டர்” என வாழ்த்தப்படுகின்றனர். பின் கலிங்க இளவரசன் மகனும் மட்டக்களப்பு மன்னன் மகனும் “திருப்பணிக்கு ஆதாரமாக” ஏரிகளும் கழனிகளும் இயற்றி தத்தம் ஊர் திரும்புகின்றனர் (கமலநாதன் & கமலநாதன், 15 – 19). 

இந்தத் தொன்மங்களைப் படிக்கும்போது இவற்றில் இரு வரலாற்றுக் குறிப்புகள் மறைந்திருப்பதைக் காணலாம். முதலாவது, திருக்கோணமலையிலிருந்து தெற்கே மட்டக்களப்பிலும் பின் மாணிக்க கங்கை வரையிலும் சோழர் ஆதிக்கம் பரவியிருக்கின்றது. சோழரின் ஆதிக்கப் பரவுகையில் கலிங்கரின் ஆதரவை உய்த்துணர முடிவதுடன், கலிங்கர்கள் சோழர் வருகையின் போதே மட்டக்களப்பில் அரசு செலுத்துபவர்களாகக் காண்பிக்கப்படுகின்றனர். சோழராட்சிக்குப் பல ஆண்டுகள் பின்னர் பொலனறுவையில் அரசாட்சிக்காக இடம்பெற்ற கலிங்க – ஆரிய வம்சச் சண்டையில் ஆரியவம்சமான சிங்களவருக்கு பாண்டியரின் ஆதரவு இருந்தது என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

எவ்வாறெனினும் சோழ அரசின் உரோகணப் பரவலாக்கலுக்கு வெவ்வேறு எதிர்ப்புகள் நிலவின என்பதை கலிங்க இளவரசனுக்கான நாகரின் எதிர்ப்பு, அவன் மகன் மாணிக்க கங்கையின் மேற்கு மற்றும் தெற்கு நாடுகளைத் தன்வசப்படுத்தியது முதலிய குறிப்புகள் மூலம் அறியலாம்.

இரண்டாவதாக, சோழரின் ஆதரவில் ஒரு பெருங்கோவில் அமைக்கப்பட்டமை, அக்கோவில் சார்ந்த சோழநாட்டுக் குடிகளின் வருகை, அந்தக் கோவில் சார்ந்த பொருளாதார ஆதாரமாக ஏரிகளும் கழனிகளும் அமைக்கப்பட்டமை என்பனவற்றைக் காணலாம். இந்தப் புதிய குடியேற்ற சமூகத்தில் “தம்பட்டர்” என ஏனைய சமூகங்களால் போற்றப்பட்ட அந்தணர்கள் முதன்மை பெற்றமையும், வருகை தந்த குடிகளுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டமையும் சோழராட்சியில் கிழக்கு உரோகணத்தில் திடுதிப்பென இடம்பெற்ற சடுதியான சமூகவியல் மாற்றங்களை சுட்டிக்காட்டுகின்றன. இதன் பொருள் அதற்குமுன் இலங்கைச் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதோ அந்தணர் இங்கு வதியவே இல்லை என்பதோ அல்ல. ஆனால், பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பரவலாகிக் கொண்டிருந்த கோவில் சார்ந்த நிலவுடைமைப் பொருளாதார மாதிரியை அச்சொட்டாக ஒத்திருக்கும் சமூக அமைப்பொன்று இலங்கையிலும் முகிழ்ப்பதை பூர்வ சரித்திரத்தின் தகவல்களூடே நாம் காண முடிகின்றது. கிட்டத்தட்ட இதே நிலை திருக்கோணேச்சரம் சார்ந்து திருக்கோணமலையிலும் நிலவியதை கோணேசர் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது (வடிவேல், 1993. பார்க்க: ஈழத்துக் கீழைக்கரை அத்தியாயம் 07).

இந்த இலக்கியச் சான்றுகள் மூலம் ஊகிக்கக்கூடியவாறு, சோழ நிலவுடைமை மாதிரிக்குள் கீழைக்கரையின் ஒரு பகுதியேனும் முற்றாக உள்ளீர்க்கப்பட்டிருந்தமையை தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டொன்றால் அறிகிறோம். நூறாண்டுகளுக்கு முன் தமிழ் விகாரத்துக்கு அனுரை அரசர்கள் நிலமளித்த கணக்கன் கொட்டியாரம், அதன் அருகே இருந்த மாப்பிசும்பு கொட்டியாரம் என்பனவற்றின் கிராமங்களிலிருந்து தஞ்சைக் கோவிலுக்கு காசும் இலுப்பைப் பாலும் (விளக்கெரிப்பதற்கான இலுப்பை நெய்) ஏற்றுமதி செய்யப்பட்டதை அக்கல்வெட்டு விவரிக்கின்றது (Sastri, 1913:424-438). இது பதினோராம் நூற்றாண்டில் கீழைக்கரையின் வட அந்தத்தில் இருந்த கொட்டியாரப்பற்று முற்றாக சோழ நிலமாக மாறியிருந்தது என்பதற்கான மறுக்கமுடியாத சான்றாகும்.

ஆனால் கொட்டியாரப்பற்றுக்குத் தெற்கே கதிர்காமம் வரை அதே நிலைமை தான் நீடித்ததா என்பதை பூர்வ சரித்திரக் குறிப்புகளுக்கு வெளியே தேடியெடுக்க முடியவில்லை. ஆனால் இன்றைய மட்டக்களப்பு நகரிலுள்ள ஒல்லாந்துக் கோட்டையில் உடைந்த கற்றூணொன்றில் கிடைத்த கல்வெட்டு வாசகமொன்று அண்மையில் வாசிக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்த அக்கல்வெட்டு, கோவிலொன்றில் தட்சிணாமூர்த்தி திருவுருவம் நிறுவப்பட்டதைச் சொல்லும் (பத்மநாதன், 2013:413-415). தட்சிணாமூர்த்தி சிவாலயங்களின் கருவறை விமானங்களின் வெளிப்புறம் தெற்கே நிறுவப்படும் வடிமம். இந்தக் கல்வெட்டு அக்கோட்டைக்கு அருகே அமைந்திருந்த ஏதும் கோவில் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட பின்னர் எடுத்துவரப்பட்டிருக்கலாம். பூர்வ சரித்திரம், புளியந்தீவில் கோட்டை அமைப்பதற்காக போர்முனை நாட்டில் சித்திர வேல் ஆலயப் பட்டர்களிருந்த இடத்தில் இருந்து கல்லெடுத்து வரப்பட்டதாகக் கூறும் (கமலநாதன் & கமலநாதன், 2005:45). போர்முனை நாடென்பது கோவிற்போரதீவு. அவ்வூருக்குத் தெற்கே வெல்லாவெளியில் சிவாலயம் ஒன்றிருந்து அழிக்கப்பட்டதாக தொன்மங்கள் கூறுகின்றன .

சோழ மெய்க்கீர்த்திகள் மற்றும் மகாவம்சத் தரவுகளின் படி முழு இலங்கையும் சோழரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் ஒரு சில மாதங்களே அல்லது வருடங்களே அவ்வாதிக்கம் நீடித்திருந்தது. எனவே மகாவம்சம் தரும் அடையாளம் காணக்கூடிய தரவுகளின் படி, கீழைக்கரையில் சோழர் ஆதிக்கம் நீடித்த அதி தெற்குப் புள்ளியாக திருக்கோவிலுக்கு மேற்கே உள்ள சாகாமத்தைச் சொல்லலாம். அங்கிருந்த சோழர் படையரண், சோழரை இலங்கையிலிருந்து அகற்றிய விசயவாகுவால் தாக்கி அழிக்கப்பட்டிருக்கிறது (மகாவம்சம் 58:41-47). ஆக, பூர்வ சரித்திரத்தில் வரும் நாகர்முனை அல்லது திருக்கோவில் வரையேனும் சோழர் ஆதிக்கம் நீடித்தது சரியென்றாகும்.

இத்தரவுகளால் சோழர் ஆதிக்கம் இன்றைய மட்டக்களப்பு நகர் வரையும் அதற்குத் தெற்கே திருக்கோவில் வரையும் நீடித்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது. இப்பகுதிகளில் முன்பே தமிழரும் தமிழ் வணிகரும் வசித்ததை இராசக்கல் மலை, இலகுகலை கல்வெட்டுகள் எடுத்துரைப்பதால், சோழர் வருகையை அடுத்து கீழைக்கரையில் பௌத்தம் மருவி சைவ மலர்ச்சி ஏற்பட்டதும், திருக்கோவில் ஆலய நிருமாணத்துடன், அதன் தென்னெல்லையில் சைவத் தமிழ்ச் சமூகம் எழுச்சி பெற்றதும் தெரிய வருகின்றது.

திருக்கோவிலில் ஒரு கோவிலும் அது சார்ந்து புதிய குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் உருவானதை இன்னொரு விதத்தில் வாசிக்க முடியும். விசயவாகுவின் காலம் வரை கதிர்காமம் வரையான பகுதி உரோகணச் சிங்களவரின் கலவரங்களில் முக்கிய இடம் வகித்ததைக் காண்கிறோம். கதிர்காமத்திற்கும் மட்டக்களப்புக்கும் இடையே சோழச் சார்புடன் உருவான புதிய நகராக பூர்வ சரித்திரம் சொல்லும் ‘உன்னாசகிரி’ எனும் அரசு தொடர்பில் தொடர்ச்சியான தகவல்கள் நமக்குக் கிடைக்காத போதும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் அது ‘யால’ என்ற பெயரில் சக்தி வாய்ந்த அரசாக நீடித்ததும், மலேரியாப் பரவலால் அங்கு பெருமளவு மக்கள் மடிந்து அங்கிருந்த குடியிருப்புகள் கைவிடப்பட்டதும் போர்த்துக்கேயக் குறிப்புகளில் தெரிய வருகின்றது (Samaragunarathna & Gimantha, 2020:227). 

ஆக, உரோகணத்திலிருந்து சிங்கள எதிர்ப்பை எதிர்கொள்ள ஒரு பலம் வாய்ந்த சோழ அரண் ஒன்றை கிழக்கு உரோகண எல்லையில் சோழர் அமைக்க முயன்றதன் விளைவே மகாவம்சம் சொல்லும் சாகாமக் காவலரணும், அதன் கிழக்கே தோன்றிய கோவில் சார்ந்து எழுந்த சோழக் குடியேற்றமொன்றும் என்பதாக பூர்வ சரித்திரத் தகவலை நாம் வாசிக்க இயலும். சோழர் அமைத்த குடியேற்றமும் காவலரணுமே கிழக்கிலங்கையில் இன்றும் தமிழர் வதியும் புவியியல் நிலப்பரப்புக்குத் திருத்தமான தென்னெல்லையொன்றாக அமைந்து விளங்குகின்றது என்பதை நாம் வியப்போடு எண்ணிப் பார்க்க முடிகின்றது. எனவே, தமிழகத்துக்கு அண்மையில் இருந்ததால் இடையறாத் தொடர்பாடல்கள் மூலம் தன் தமிழ்த் தனித்துவத்தைக் காத்துக்கொண்ட வட இலங்கை போலன்றி, தமிழகத்திற்கு அதி தெற்குப் புள்ளியில் இருந்தபோதும், கிழக்கு இலங்கை இன்றும் தமிழ்ப் பண்பாட்டு நிலப்பரப்பாக நீடிப்பதற்கான ஆதியான காரணமாக சோழப் படையெடுப்பைச் சுட்டிக்காட்ட இயலும்.

தொகுத்து நோக்குவதென்றால், பத்தாம் – பதினோராம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையில் வசித்த சமூகம் மிகப்பெரும் பண்பாட்டுத் திருப்பம் ஒன்றைச் சந்தித்தது. இங்கு குடியிருந்த பௌத்தம், சைவம், பழங்குடி நம்பிக்கைகள் ஆகிய சமயங்களைக் கடைப்பிடித்த பூர்விக தமிழர், சிங்களவர், தமிழக வாணிகர், வேடர் யாவரையும் மேவி சைவ சமயமும் தமிழ் மொழியும் முதன்மை இடத்தைப் பெற்றுக்கொண்ட சடுதியான சமூகவியல் மாற்றமொன்று சோழர் கால கிழக்கு உரோகணத்தில் உதயமானது. அது மகாவலி கங்கையை வட எல்லையாகவும் மாணிக்க கங்கையைத் தென்னெல்லையாகவும் கொண்டு, நடுவே திருக்கோவிலில் உண்டான சோழக் கோவிலொன்றையும் சோழக் குடியிருப்பையும் மையமாக வைத்து ஒரு பெரும் நிலப்பரப்பில் செழித்து ஆழ வேரூன்றியது. இதனால் அங்கிருந்த பண்டைய பௌத்தமும் பழஞ் சிங்களமும் நீர்த்துப்போக, சிங்கள உரோகணத்தின் வடக்கு எல்லை, மாணிக்க கங்கையாகச் சுருங்கிப் போனது. அடுத்த இரு நூற்றாண்டுகளில் உரோகணம் மீண்டும் பழைய கிழக்கு உரோகணத்தின் சிறு பகுதியை மீட்டுக்கொள்ள முடிந்தாலும், பின்னாளில் மட்டக்களப்புத் தமிழகம் அல்லது மட்டக்களப்புத் தேசம் என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரு தனித்துவமான பண்பாட்டு நிலப்பரப்புத் தோன்றுவதற்கு சோழர் வருகையே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். கொழும்பு – சென்னை: குமரன் புத்தக இல்லம்.
  2. பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  3. வடிவேல், இ. (1993). கோணேசர் கல்வெட்டு: கவிராஜவரோதயன் இயற்றியது. கொழும்பு 02: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  4. Samaragunarathna, D.D., Gimantha, M.A.J. (2020). The Drift of Ancient Kingdoms in the Post-Polonnaruwa Period: A Critical View of the Causes of Decline of Sinhala Kingdom, International Research Conference, 222-228.
  5. Sastri, H.K. (1913) Inscription No. 92. On the South Wall Third Tier. South Indian Inscriptions, Vol. II:(04), p. 424 – 428.

ஒலிவடிவில் கேட்க

1963 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)