சுன்னாகம் நிலத்தடி நீர்: குடிக்கலாமா, கூடாதா?
Arts
21 நிமிட வாசிப்பு

சுன்னாகம் நிலத்தடி நீர்: குடிக்கலாமா, கூடாதா?

October 23, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

போருக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் வடபுலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான சூழலியல் போராட்டமானது சுன்னாகத்தின் நிலத்தடி நீர் பற்றியதாகும். இலங்கையின் வடபுலத்தில் நிகழ்ந்த ஏனைய போராட்டங்கள் போலன்றி எதுவித வேறுபாடுகளுமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் என்ற வகையில் இது முக்கியமானது. அதேவேளை வடமாகாண சபை தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற போராட்டம் என்பதும் இங்கு கவனிப்புக்குரியது. இந்தப் போராட்டம் மூன்று விடயங்களைப் பற்றியது. முதலாவது யாழ்ப்பாணத்தின் நீர்வளம், சூழலியல் எதிர்காலம் பற்றியது. இரண்டாவது, அரசியற் பிரதிநிதிகளின் இயலாமையும் கயமையையும் பற்றியது. மூன்றாவது, ஒரு சமூகமாக இந்தப் போராட்டங்களின் வழி பெற்றுக்கொண்ட பாடங்களை நாம் கவனத்தில் எடுத்திருக்கிறோமா என்ற வினா பற்றியது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் முக்கிய மண் வகை கால்சிக் சிவப்பு – மஞ்சள் லாடோசோல்கள் ஆகும். இது அதிக ஊடுருவல் விகிதத்துடன் நன்றாக வடிவமைக்கப்பட்ட மற்றும் நன்கு வடிகட்டிய மண்ணாகும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வற்றாத ஆறுகள் இல்லாததாலும், மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் வற்றாத மூன்று ஆறுகள் மட்டுமே இருப்பதாலும் யாழ்ப்பாண மக்கள் தங்கள் நுகர்வு, தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நிலத்தடி நீரைச் சார்ந்துள்ளனர். அதன் தட்டையான நிலப்பரப்பு காரணமாக இப்பகுதியில் நீர்த்தேக்கத்தை அமைப்பதும் சாத்தியமற்றது. இந்தப் பகுதி மயோசீன் சுண்ணாம்புக் கற்களாலானது. இது நிலத்தடி நீர்த்தேக்கங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற பொருளாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நான்கு முக்கிய நிலத்தடி நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன; அதாவது, சுன்னாகம் (வலிகாமம் பகுதி), வடமராட்சி, தென்மராட்சி, ஊர்காவற்றுறை. மழைக்காலத்தில் நிலத்தடி நீர்த்தேக்கங்கள் தங்களை மீள்நிரப்பிக் கொள்கின்றன. சுன்னாகம் நீர்நிலையானது அதிக நீர்க் கொள்ளளவைக் கொண்டுள்ளது. ஏனைய மூன்று நிலத்தடி நீர்த்தேக்கங்களுடன் ஒப்பிடும் போது சுன்னாகம் நிலத்தடி நீர்த்தேக்கத்தில் காணப்படும் நீரின் தரம் சிறப்பானது. குடிப்பதற்கும் ஏனைய பாவனைகளுக்கும், அதிக கொள்ளளவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரமான நீரையும் சுன்னாக நிலத்தடி நீர்த்தேக்கமானது கொண்டுள்ளது. இந்த அதிக கொள்ளளவு மற்றும் நல்ல தரம் காரணமாக, இந்தப் பகுதியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இக்காரணங்களால் இப்பிரதேசத்தில் இருந்து பல நீர் விநியோகங்கள் ஆரம்பிக்கப்பட்டு காரைநகர், அச்சுவேலி, நவாலி, யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட நீர்ப்பற்றாக்குறைப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் தமது பாவனைக்காக ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் மூலம் தமது அன்றாடப் பயன்பாட்டுக்கான நீரைப் பெறுகிறார்கள். விவசாயக் கிணறுகளைப் பயன்படுத்தி தமது பயிர்ச்செய்கைகளுக்கு நீரைப் பெறுகின்றனர்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் யாழ்ப்பாணத்தின் மின்சாரத் தேவையை காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் மின்சாரம் தீர்த்து வைத்தது. எனினும் சுதந்திரத்தின் பின்பு யாழ்ப்பாணத்தின் அதிகரிக்கும் மின்சாரத் தேவையைக் கருத்திற்கொண்டு 1958 இல் சுன்னாகத்தில் டீசலில் இயங்கும் மின்சக்தி உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது. 1973 இல் இலங்கையின் பிரதான மின்னிணைப்புப் பரிமாற்ற வலையமைப்புடன் யாழ்ப்பாணம் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லக்சபான நீர்மின்நிலையத்தில் இருந்து மின்சாரத்தை யாழ்ப்பாணம் பெற்றது. இனப் பிரச்சினை போராகியதன் பின்புலத்தில் மின்சாரம் தடைப்பட்டது. 1995 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் மீண்டும் சுன்னாக மின்நிலையம் செயற்படத் தொடங்கியது. புதிய மின்சாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு 2007 இல் இலங்கை மின்சார சபை நோர்த்தேன் பவர் என்கிற தனியார் மின் உற்பத்தி நிலையத்துக்கு அனுமதியளித்தது. 2008 ஏப்ரல் முதலாம் திகதி முதல் குறித்த மின்உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது.

குறித்த மின்நிலையத்தின் உருவாக்கம் என்பது பல சர்ச்சைகளை உள்ளடக்கியது. குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கான மின்விநியோகம் என்பதே பாரிய முறைகேடுகள், ஊழல்கள் நிறைந்ததாக இருந்தது. குறிப்பாக 1999 – 2003 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான மின்சாரம் அவ்வப்போது தடைப்பட்டது. இந்தச் சூழ்நிலையின் காரணமாக இப்பகுதியின் மின் தேவையை குறுகிய கால அடிப்படையில் பூர்த்தி செய்ய 2 தனியார் அனல்மின் நிலையங்களுக்கான (15MV மின்உற்பத்தி வலுவுள்ள Agirco மற்றும் 13MV மின்உற்பத்தி வலுவுள்ள Cool Air) அனுமதியை இலங்கை மின்சார சபை வழங்கியது. எவ்வாறாயினும், இந்த இரண்டு அனல்மின் நிலையங்களின் மின்சாரச் செலவு மற்றவற்றை விட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. இலங்கை மின்சார சபை ஏனைய தனியார் மின் உற்பத்தியாளர்களின் விலைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக விலைக்கே மின்சாரத்தை வாங்கியது. எனினும் வேறு வாய்ப்புகள் இல்லாமையால் தொடர்ச்சியாக இவ்விரு நிறுவனங்களிடமே மின்சாரத்தை வாங்க வேண்டியிருந்தது. இந்தச் செயன்முறையில் பாரிய ஊழல் நடைபெற்றிருப்பதாக பல ஆதாரங்களுடன் பத்திரிகைகள் எழுதின.

இந்தப் பின்புலத்தில் 24 மே 2006 திகதியிடப்பட்ட ஒரு வர்த்தமானி அறிவிப்பின்படி அப்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன, இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக 2007 ஆம் ஆண்டளவில் முந்தைய 2 அனல்மின் நிலையங்களை அகற்ற முடிவு செய்து அதற்குப் பதிலாகவே ‘நோர்த்தேன் பவர்’ அனல் மின் நிலையத்தை முன்மொழிந்தார். குறித்த நிறுவனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்குமிடையிலான ஒப்பந்தமானது முதலில் 15MV மின்உற்பத்திற்கு அனுமதியளித்தது. பின்னர் அது 30MV ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் பாரிய குளறுபடிகளைக் கொண்டது. முதலாவது, பொதுவாக இவ்வாறான ஒப்பந்தங்களில் குறித்த நிறுவனமானது புதிய இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று வரையறை செய்யப்படும். மின்சார சபை அதுவரை காலமும் மின்சாரத்தைக் கொள்வனவு செய்த அனைத்து அனல்மின் உற்பத்தி நிறுவனங்களுடனும் செய்து கொண்ட உடன்படிக்கையில் இவ்வாறானதொரு சரத்து இருந்தது. ஆனால் குறித்த ஒப்பந்தத்தில் அந்தச் சரத்து இருக்கவில்லை. ஏனெனில் அது வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே ‘நோர்த்தேன் பவர்’ நிறுவனம் 30 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களை இறக்குமதி செய்தது.

இரண்டாவது, குறித்த இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஏனெனில் அதை விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கிய நாட்டில் இவ்வாறு பழைய, சூழலுக்குத் தீங்கானவற்றை விற்பனை செய்வதற்கான சில நெறிமுறைகள் இருந்தன. அதன்படி, குறித்த இயந்திரங்கள் நிறுவப்படவுள்ள பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதியின் ஒப்புதல் கடிதம் கட்டாயமானது. அவ்வகையில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினரான இருந்த ஒருவரின் ஒப்புதல் கடிதம் (குறித்த பகுதியில் இதை நிறுவுவதால் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் மக்களின் தேவை கருதி இந்த இயந்திரங்கள் அவசியமானவை என்று குறிப்பிட்டு) பெறப்பட்டே இவ்வியந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.  

மூன்றாவதாக, பழைய இயந்திரங்களுக்கு கூட புதிய இயந்திரங்களின் விலைகள் குறிப்பிடப்பட்டன. ஆனால் அவை கேள்விக்குட்படுத்தப்படாமல் அனுமதியளிக்கப்பட்டன. நான்காவதாக, மின்சார சபையானது, கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரங்களின் பொருத்தப்பாடு குறித்தோ அவற்றின் நிலைமை குறித்தோ ஆராய்ந்து சான்றளிக்கவில்லை. எவ்வாறாயினும், மின்சார சபையின் பொது முகாமையாளர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சான்றிதழை வழங்கினார் என்ற உண்மையையும் ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

இவ்வாறு பல பிரச்சினைகளுடன் நடைமுறைக்கு வந்த நோர்த்தேன் பவர் அனல்மின் நிலையம் தொடர்ந்தும் ஊழலில் ஈடுபட்டது. இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில், மின்சார சபையின் நிதியில் முழு இயந்திரங்களையும் குறித்த நிறுவனம் மாற்றியுள்ளது. எவ்வாறாயினும், இவ்வளவு செலவுகள் இருந்தபோதிலும், ஒப்புக் கொள்ளப்பட்ட 30MV மின்சாரத்தை குறித்த நிறுவனத்தால் வழங்க இயலவில்லை. இந்தப் பின்புலத்தில் 2009 இல் ‘Cool Air’ அனல்மின் நிலையத்தை மின்சார சபையால் மூட முடிந்தாலும், ‘Agirco’ இனை மூட முடியவில்லை. உடன்படிக்கையின் படி, நோர்த்தேன் பவர் வழங்க ஒப்புக்கொண்ட மின்சாரத்தின் அளவை வழங்காமையானது, யாழ்ப்பாணத்தில் 2 வருடங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொண்ட ‘Agirco’ இனை 10 வருடங்கள் தொடர வழி வகுத்தது.

யாழ்ப்பாணத்திற்கான மின்சாரமானது பெருமளவில் அனல்மின் நிலையங்களின் வழியே உற்பத்தி செய்யப்பட்டது. 2009 வரையிலான போர்க் காலத்தில், சுமார் 20 இலட்சம் லிட்டர் வரையிலான மசகு எண்ணெய் சுற்றியுள்ள நிலத்திற்குள் கொட்டப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் 1990 ஆம் ஆண்டு சுன்னாகம் அனல்மின் நிலையத்திற்கு அருகாமையில் 1500 சதுரஅடிகள் கொண்ட டீசல் தாங்கிகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலாலும் பாரியளவு எண்ணெய் நிலத்தடி நீருடன் கலந்தது. ஹைட்ரோகார்பன்கள் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் போது, அவை பாரிய சூழலியல் தாக்கங்களை ஏற்படுத்தும். அதன் ஒரு பகுதி தண்ணீருடன் கலந்து மண்ணில் அசுத்தங்களை உருவாக்கும். மேலும் மூலக்கூறு பரவல் மற்றும் நீர்த்தலின் ஒருங்கிணைந்த விளைவுகளால் அவை ஹைட்ரோடைனமிக் என்று அழைக்கப்படுகின்றன. நீர்த்தல் என்பது மாசுபடாத நீரை எண்ணெய்யுடன் கலக்கும் முறையாகும். நீர்த்தேக்கத்தில் ஓட்டம் இல்லாதபோது, அசுத்தமான கழிவுகள் இலகுவில் பரவுகின்றன. நிலத்தடி நீர் மாசுபடுவதானது, வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகளைப் பொறுத்தது. இந்தப் பின்புலத்திலேயே சுன்னாகம் நீலத்தடி நீரின் சிக்கலை நாம் நோக்க வேண்டியுள்ளது.

நிலத்தடி நீர் மாசாதல்

2008 ஆம் ஆண்டளவில் சுன்னாகம் பகுதி விவசாயிகள் தங்கள் தோட்டக் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்திருப்பதை அவதானித்தார்கள். இதையடுத்து அதேயாண்டு சுன்னாகம் தெற்கு விசாயிகள் சம்மேளனம் தமது தோட்டக் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது பற்றி அப்போதைய யாழ்ப்பாண அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்க அதிபரால் சுன்னாகம் மின் நிலைய முகாமையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2010 ஆம் ஆண்டளவில் இவ்வகையான எண்ணெய்க் கழிவுகள், சுன்னாகம் பகுதி மக்களின் வீட்டுக் கிணறுகளிலும் தோன்றின. இதையடுத்து இது தொடர்பில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் யாழ். குடாநாட்டின் இறுக்கமான பாதுகாப்பு நிலவரமானது பாரிய நெருக்கடியாக இருந்தது. இருந்தபோதும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபை இது தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வானது, 2013 நவெம்பர் மாதத்திற்கும் 2014 ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சுன்னாகம் மின்நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் செறிவு இருந்ததாகச் சொல்லப்பட்ட 150 இடங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பரிசோதனைக்கு உள்ளான 150 கிணறுகளில் 116 இல் எண்ணெய் மற்றும் கிரீஸ் மாசுகள் இருந்தன. மின் நிலையத்திலிருந்து 200 மீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் இருந்த 81% கிணறுகளிலும் 200 தொடக்கம் 500 மீற்றர் தொலைவுக்குள் இருந்த கிணறுகளில் 74% கிணறுகளிலும் 500 மீற்றருக்கு அதிகமான தொலைவில் உள்ளவற்றில் 51% கிணறுகளிலும் எண்ணெய் மற்றும் கிரீஸ் மாசுகள் இருந்ததை இவ்வாய்வு உறுதி செய்தது. இலங்கையில் அனுமதிக்கப்பட்ட தர நிர்ணய அளவுகளை விட 32 மடங்கு அதிகமான மாசுக்களை சில கிணறுகள் கொண்டிருந்தன. இக்கிணறுகளில் ஒன்று மின் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் அமைந்திருந்தது. கிணறுகளின் மேற்பரப்பில் மெல்லிய எண்ணெய்ப் படலத்தைக் கொண்டிருந்த பெரும்பாலான கிணறுகள் மின் நிலையத்திற்கு அருகாமையில் இருந்தவையாகும். இது மின்நிலையத்துக்கும் குறித்த கழிவுகளுக்கும் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து தெல்லிப்பளை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் நீரில் கழிவெண்ணெய் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டு, அந் நீர் உடல் நலத்துக்குத் தீங்கானது எனத் தடை செய்யப்பட்டது. அன்றிலிருந்து இப்பகுதி மக்கள் காலங்காலமாகத் தமது தாகத்துக்கு அமிர்தமாக எண்ணிப் பருகிய அவர்களது கிணற்று நீரை நஞ்சாக ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன், அன்றிலிருந்து தற்காலிக நீர்த் தொட்டிகளிலும், போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரிலும் தங்கி நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

2015 பெப்ரவரியில் சுகாதார அமைச்சு உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய 4 சுகாதார வைத்திய அதிகார பணிமனைப் பிரிவுகளுக்கு உட்பட்ட 30 கிணறுகளின் நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 30 இலும் கழிவு எண்ணெய் அதிகளவில் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இப்போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாகாண சபை 2013 இல் ஆட்சிக்கு வந்திருந்தது. தொடக்கத்தில், வடமாகாண சபை, குறித்த பிரச்சினையை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவாக 2015 ஜனவரியில் இவ்விடயத்தை ஆராய்வதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.  

வட மாகாண சபை அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை, நிலத்தடி நீரில் கழிவெண்ணெய்க் கலப்பு இல்லை என கூறியது. மேலும், நிபுணர் குழுவின் அறிக்கை, மலத்தொற்றும், உரப் பாவனை அதிகரிப்பால் நைற்றேற்றும் நீரில் கலந்துள்ளது எனக் கூறியது. ஆனால் அவற்றின் அடர்த்தியும் ஆபத்துகளும் பற்றிய தகவல்கள் எதுவும் தரப்படவில்லை. ஊடகங்களில் வெளிவந்த தகவல்களில், நிபுணர் குழுவின் அறிக்கையானது சுன்னாகம் நிலத்தடி நீரின் தன்மை பற்றிப் பேசுவதைக் குறைத்து முழுக் குடாநாட்டு நிலத்தடி நீரையும் பற்றியே பேசியது என்பது தெளிவானது. ஆய்வின் முழு விபரங்களும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படாத அவ்வறிக்கையின் பின்னரும் மாகாண சபையோ, மத்திய அரசோ வழமைபோல மக்கள் அச்சமின்றித் தத்தமது கிணற்று நீரைப் பருகலாம் என உறுதி வழங்கவில்லை.

மக்கள் போராட்டங்கள்

சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பிரச்சினையானது கவனம் பெறுவதற்கான காரணம் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களே. குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் நிலவிய கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தமது நீருரிமைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வந்திருக்கிறார்கள். இதில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பங்களிப்பு மிகப் பெரியது. பாதிக்கப்பட்ட இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரும் உணவுத் தேவைகளுக்கான தரமான நீரும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மக்களுடன் இணைந்து போராடியது.

வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழு அறிக்கையின்படி, நிலத்தடி நீரில் கரைந்துள்ள நச்சுப் பார உலோகங்களில் மிகவும் ஆபத்தானதான ஈயம், நிக்கல் ஆகியன கண்ணுக்குத் தெரியாததுடன், உடல் ஆரோக்கியத்துக்குப் பெரும் தீங்கு விளைவிப்பனவுமாகும். அவை சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்தல், மலட்டுத்தன்மை, புற்றுநோய் ஆகிய பாரதூரமான நோய்களை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் அக் காலப்பகுதிகளில் சுட்டிக்காட்டினர். ஆனால் இது குறித்து மாகாண சபையோ, அரசாங்கமோ கவனஞ் செலுத்தவில்லை. 2015 இன் நடுப்பகுதியில் முன்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த நீர் விநியோகத்தைத் தற்போது பல இடங்களிலும் நிறுத்தியுள்ளமையால், பொதுமக்கள் மிகவும் அசௌகரியப்படுவதுடன் குடிநீருக்காகப் போத்தல்களுடன் அலையும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர். இந்நிலை மாசடைந்த நீரைப் பயன்படுத்துமாறு மக்களை நிர்ப்பந்தித்தது. இதனால் மக்கள் மாசடைந்த நீரை அருந்தியதுடன், குளிக்கவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.

இவற்றைக் கவனத்தில் கொண்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மாபெரும் துண்டுப் பிரசுர இயக்கத்தை யாழ். குடாநாடு எங்கும் நடாத்தியது. முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாக பின்வருவன குறிப்பிடப்பட்டன:

  1. பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எத் தாமதமுமின்றித் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
  2. நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை இவ் அனர்த்தம் தொடர்பாக அதிகூடிய கவனமெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்துக் கிணறுகளின் நீரையும் ஆய்வுக்குட்படுத்தி, அக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு அவை பற்றித் தனித்தனி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
  3. பாதிக்கப்பட்ட பிரதேச மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்கான மருத்துவ நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும்.
  4. இப் பாதிப்பிலிருந்து மண்ணையும், மக்களையும் காப்பதற்கான நிரந்தர செயற்திட்டம் உருவாக்கப்பட்டு, விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவெண்ணெய்யையும் பார உலோகங்களையும் முற்றாக அகற்றுவதற்கான செயற்திட்டமாக அது அமைய வேண்டும். ஆபத்தான நச்சுப் பதார்த்தங்கள் கொண்ட எண்ணெய்க் கழிவுகள் புதைந்துள்ள இடங்களை அடையாளங் கண்டு அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  5. பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரை வடிகட்ட, தூண்டப்பட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்க வேண்டும்.
  6. இப் பிரதேசத்தில் நீரியல் ஆய்வு மையம் ஒன்றினை நிறுவ வேண்டும். தொடர்ச்சியான ஆய்வுகளைச் சரியான முறையில் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
  7. இவ் இயற்கைப் பேரனர்த்தத்திற்குச் சரியான தீர்வு கிடைக்கும் வரையும், குற்றவாளிகளையும் அவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்டவர்களையும் இனங்கண்டு தண்டிக்கும் வரையும், ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சரியான நட்ட ஈட்டைப் பெறும்வரையும் மக்கள் அனைவரும் அணிதிரண்டு போராடவேண்டும்.

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், அங்கு விநியோகித்த துண்டுப் பிரசுரம் சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது. அவை சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பிரச்சினைக்குரியதாக மட்டுமன்றி பரந்தளவில் யாழ். குடாநாட்டினதும் இலங்கை முழுவதினதும் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. அதன் கோரிக்கைகளாவன:

  1. யாழ். குடாநாட்டில் பாதிக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை, பாதிப்பின் அளவு, பாதிப்பின் தன்மை போன்றவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாகப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும்.
  2. பாதிப்பின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  3. நீர் மாசடைவுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, தாமதிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும். ‘Northern Powers’ நிறுவனத்தின் மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
  4. நீர்த்தாங்கிகளில் குடிநீர் விநியோகிப்பது சரியான உடனடித் தீர்வல்ல. மாறாக, கிணற்றை நம்பி வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்துக்கும் அதே கிணற்று நீரைப் பயன்படுத்தும் வண்ணம், சுத்திகரிப்புக் கருவிகளை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும். கருவிகளை இயக்குவதற்கான எரிபொருளையும் மின்சாரத்தையும் மானியமாக வழங்க வேண்டும். இவற்றுக்கான செலவினை, நீரை மாசுபடுத்தியவர்களிடம் இருந்து அறவிடவேண்டும்.
  5. நீர் மாசினால் ஏற்படக்கூடிய தீங்குகள் தொடர்பில் மக்களுக்குப் போதிய தகவல்களை வழங்கி அறிவூட்ட வேண்டும்.
  6. உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களின் உதவியினை உடனடியாகப் பெற்று மாசடைந்த நீரை நீண்டகாலப் பயன்பாட்டுக்குத் தூய்மைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
  7. பிராந்தியப் பல்கலைக்கழகங்கள், இம்மாசடைவு பற்றிய ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.
  8. துறைசார் நிபுணர்கள் நீர்மாசடைவு தொடர்பான ஆய்வுகளுக்கும் தீர்வுகளுக்கும் உங்களாலான பங்களிப்புகளைச் செய்ய உடனடியாக முன்வர வேண்டும்.
  9. ஐக்கிய நாடுகள் சபை, நீரை அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்க வேண்டும்.

சுன்னாகம் நிலத்தடி நீர்ப் பிரச்சினையில் அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கை எதிர்த்து தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் போகுமிடமெல்லாம் மக்கள் ஒரே கேள்வியை மீண்டு மீண்டும் கேட்டார்கள்: “இந்தத் தண்ணீரைக் குடிக்கலாமா?”. இந்தக் கேள்வி அதிகாரத்தை உலுக்கியது. இக் கேள்விக்குப் பதிலளிக்க மாகாண சபை உறுப்பினர்களோ யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களோ தயாராக இல்லை. ஏராளமான மழுப்பல் பதில்கள் சொல்லப்பட்டன. ஆனால் இத் தண்ணீரைக் குடிக்கலாம் என்றோ குடிக்கக் கூடாது என்றோ யாரும் சொல்லவில்லை. நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர் நிர்மாண அமைச்சர் ரவூப் ஹக்கீம் “இப்பகுதியில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல. இப்பகுதி மக்கள் இத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது” என்று தெரிவித்ததும் இங்கு நோக்கற்குரியது.

நீதிமன்றம் தந்த நீதி

‘சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திர குணவர்தன காரியவசம், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். சுன்னாகம் அனல்மின் நிலையம் வெளியிடும் பெட்ரோலியக் கழிவுகள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பயன்படுத்தும் நீரேந்துக் கிணறு உட்பட, சுன்னாகம் பிரதேசத்திலுள்ள நிலத்தடி நீர், கிணறுகள் மற்றும் ஏனைய நீர் ஆதாரங்களில் எண்ணெய் மாசுபாட்டிற்கு காரணமாகி ‘பாரிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை’ ஏற்படுத்தியுள்ளது என்று கூறி, ஒரு அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்குத் தொடர்பாக உயர் நீதிமன்றம் மூன்று முக்கிய கேள்விகளை தீர்க்க வேண்டியிருந்தது. (அ) சுன்னாகம் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் பெட்ரோலியக் கழிவுப் பொருட்கள் அப்பகுதியின் நிலத்தடி நீரையும் மண்ணையும் மாசுபடுத்தியதா? (ஆ) சட்டபூர்வ அதிகாரிகள் தங்கள் சட்டபூர்வமான பொறுப்புகளைச் செய்யத் தவறிவிட்டார்களா? (இ) பிரதிவாதிகள், சுன்னாகம் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறினார்களா?

1 ஆவது கேள்வி ஓரளவு அறிவியல் பூர்வமாக இருந்ததால், மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் சமர்ப்பித்த அறிவியல் அறிக்கைகள் மீது உயர் நீதிமன்றம் கவனம் செலுத்தியது. 2 ஆவது மற்றும் 3 ஆவது கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் போது, உயர் நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் – ஒழுங்குமுறைகள் மற்றும் நிபுணர் அமைப்புகளின் அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. இலங்கையின் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பில் ‘பொது நம்பிக்கைக் கோட்பாடு’ முக்கிய பங்கு வகிக்கிறது. நீதிமன்றம், சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் மற்றும் மண் மாசுபடுவதால் சுன்னாகம் பிரதேச வாசிகளுக்கு ஏற்படும் கணிசமான இழப்பு, பாதிப்பு மற்றும் சேதத்தின் ஒரு பகுதியையாவது ஈடுசெய்ய 20 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது இலங்கையில் ஒரு முன்னோடியான தீர்ப்பானது.

இலங்கையின் அரசியலமைப்பின்படி, நிறைவேற்று மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. சுன்னாகம் மின் நிலைய வழக்கில், உயர் நீதிமன்றம் அதிகாரத்திற்கு எதிரான இழப்பீட்டு உத்தரவை நியாயப்படுத்துவதில் ‘மாசுபடுத்துபவர் செலுத்தும் கோட்பாட்டை’ கோடுகாட்டியது. சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், இலங்கையின் சுற்றுச்சூழல் உரிமைகள் மீதான குறுகிய பாதையை நீதித்துறையால் விரிவாக்க முடிந்தது.

நிறைவுக் குறிப்புகள்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதலானது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமான சில அடிப்படையான சூழலியல் கேள்விகளை எழுப்புகிறது. நிலத்தடி நீர் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. நன்னீரைப் பற்றிச் சிந்திக்கும்போது, ஓடும் நீரோடைகள் மற்றும் தெள்ளத் தெளிவான ஏரிகள் போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் உண்மையில், உலகில் உள்ள அனைத்து நன்னீரும் நிலத்தடி நீராகும். நிலத்தடி நீரே நமது நதிகளை ஓட வைக்க உதவுகிறது. நமது வாழ்வியலுக்கு அத்தியாவசியமான நீரின் இருப்பிடம் நிலத்தடி நீரே. எனவே அதைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும்.

வேகமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் உணவுத் தேவைகளால் உலகளாவிய உணவுப் பாதுகாப்புச் சவால்கள் அதிகரித்து வருகின்றன. இச் சிக்கலைத் தீர்ப்பதற்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர விவசாயம் மிக முக்கியமான தீர்வுகளில் ஒன்றாகும். பாதுகாப்பான விவசாயத்தில், பாதுகாப்பான நீர் ஆதாரமே பயிரின் தரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். நிலத்தடி நீர் விவசாயத்திற்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரமாகும்.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை நாம் எதிர்நோக்கியிருக்கையில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பது இன்றியமையாதது. ஆனால் சுன்னாகம் நிலத்தடி நீர் அனுபவம் சமூக நலன்களை விட அரசியல் நலன்களும், இலாபமும், ஊழலும் முக்கியத்துவம் பெறுவதைக் காட்டி நிற்கிறது. குடிதண்ணீரை உத்தரவாதப்படுத்தாத அரசியல் அவலம் கேவலமானது. சுத்தமான நீரும் காற்றும் எமது அடிப்படை உரிமைகள். அதையே மறுப்பவர்கள் எமக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தருவார்கள் என்று இனியும் தமிழ்ச் சமூகம் நம்புமாயின் அதைவிட அவலம் ஏதுமில்லை.


ஒலிவடிவில் கேட்க

5135 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)