பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் 1860 களிலேயே கோப்பிப் பயிர்ச்செய்கையை ஹெமீளியா வெஸ்டாரிக்ஸ் (Hemilia Vestaricx) என்ற நோய் தொற்றிக் கொண்டபோது இந்நோய் எதிர்காலத்தில் கோப்பியை முற்றாக காவு கொண்டு விடும் என்று அப்போது பேராதனை தாவரவியல் பூங்காவில் பணிப்பாளராக இருந்த கலாநிதி ஜி எச் துவாய்ட்ஸ் எதிர்வு கூறியிருந்தார்.
கோப்பிச் செய்கையின் அழிவால் பாதிக்கப்பட்ட பல பெருந்தோட்ட சொந்தக்காரர்களும் சிங்கோனா, கரும்புத் தோட்டம், றப்பர், கொக்கோ போன்ற வேறு பயிர்களை நாடிச் சென்றனர். இதே காலப்பகுதிகளில் கோப்பியின் இடத்துக்கு தேயிலையை பிரதியீடாக கொண்டு வந்து விட வேண்டும் என்று பலரும் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்த போதும் அவை அநேகமாக தோல்வியிலேயே சென்று முடிவடைந்தன. கோப்பியைத் தொடர்ந்து சிங்கோனாவே அதிகம் லாபம் தரும் பயிர்ச்செய்கையாக இருந்தது என பலரும் கருதினர். தேயிலைக் கைத்தொழிலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ஜேம்ஸ் டெய்லர் கூட லூல் கந்துரா என்ற தனது முதல் தேயிலைத் தோட்டத்தில் சிங்கோனாவையே பயிரிட்டு அறுவடை செய்தார்.
இக்காலப்பகுதியில் உலகெங்கும் நுளம்பு வாயிலாகப் பல்கிப்பெருகிய மலேரியாவின் தீவிரத்தன்மை காரணத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிரித்தானிய – வெள்ளைக்கார – குடியேற்றக்காரர்கள் உயிரிழந்தனர். எனவே இந்த நோயில் இருந்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு பிரித்தானியாவுக்கு ஏற்பட்டது. இந்தக் காலத்தில் தென்னமெரிக்காவின் அமேசன் காடுகளில் இருந்து பெறப்பட்ட சிங்கோனா என்ற தாவரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்பட்ட குயினைன் (Quinine) என்ற திரவ மருந்து மலேரியா நோய்க்கு வெற்றிகரமான தடுப்பு ஊசி மருந்தாகப் பயன்பட்டது. அமெரிக்காவிலிருந்து இதனை பெறுவது அதிக செலவு மிக்கதாக இருந்ததால் கீழைத்தேய நாடுகளில் இதனை உற்பத்தி செய்ய பிரித்தானியர்கள் தீர்மானித்தனர்.
இதன் ஒரு விளைவாக 1860 ஆம் ஆண்டளவில் ஒருதொகை சிங்கோனா விதைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையின் பேராதனைத் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக அப்போது செயற்பட்டு வந்த கலாநிதி ஜி. எச். துவாய்ட்சுக்கு அனுப்பப்பட்ட இந்த விதைகளை, அவர் பரீட்சித்துப் பார்ப்பதற்காக நுவரெலியா, ஹக்கல பூங்காவின் பொறுப்பாளர் மெக்னிகோல் (maknicall) என்பவருக்கு அனுப்பி வைத்தார். இவற்றிலிருந்து ஆரம்பத்தில் 800 கன்றுகள் பெறப்பட்டன. 1864 ஆம் ஆண்டளவில் முப்பத்து ஒன்பது பேர்ச்சஸ் காணியில் 1 லட்சத்து 30 ஆயிரம் கன்றுகள் உண்டாக்கப்பட்டிருந்தன. இக்காலத்தில் கலாநிதி துவாய்ட்சுடன் சேர்ந்து ஜேம்ஸ் டெய்லரும் இந்த ஆய்வில் பங்கு கொண்டு இருந்ததால் அவரின் அனுபவத்தைக் கருத்திற் கொண்டு லூல்கொந்தரா தோட்டத்தில் பயிரிட வென ஒரு தொகை சிவப்பு பட்டை வகையிலான சிங்கோனா (Succirubra Red Bark) வகை மரக்கன்றுகளை லூல்கொந்தரா தோட்டத்தில் பயிரிடவென அப்போதைய உரிமையாளர்களான மார்ட்டின் லீக் மற்றும் ஜி. டி. பி. ஹரிசன் (Martin Leak and G.D.B.Harrison) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
ஜேம்ஸ் டெய்லரின் மேற்பார்வையில் மேற்படி மரக்கன்றுகள் பயிரிடப்பட்டு அதன் முதல் அறுவடை 1867 ஆம் ஆண்டு பெறப்பட்டது. 1870 அளவில் அது லூல்கந்துரா தோட்டத்தில் நன்கு வளர்ச்சி அடைந்து மூன்று லட்சம் மரங்கள் என அதிகரித்தன. அதன் உயரம் கருதி ஏனைய நாடுகளின் உற்பத்திகளை விட அதிகமான விலையை லூல்கந்துராவில் சின்கோனா பெற்றது. இதன் பின்னர் 1885ஆம் ஆண்டு வரை சராசரியாக ஒரு அவுன்ஸுக்கு 12 சில்லிங்குகளை விலையாகப் பெற்றுக்கொண்டு பெருத்த லாபம் தேடித் தந்தது. இதன் உற்பத்திக்கான செலவை விட ஆறு மடங்கு அதிகமான வருமானத்தை அது பெற்றுத் தந்ததால் ஜேம்ஸ் டெய்லர் பேரும் புகழும் பெற்றார். பத்திரிகைகள் அவரை புகழ்ந்து எழுதின.
இந்த தருணத்தில் மகிழ்ச்சி அடைந்த ஜேம்ஸ் டெய்லர் தன் வீட்டுக்கு முன் நின்று கொண்டு தோட்டத்தையும் சேர்த்து புகைப்படம் எடுத்து இங்கிலாந்திலிருந்த தன் தந்தைக்கு அனுப்பினார். பின்னர் விரைவிலேயே சிங்கோனாவின் ரகசியத்தை புரிந்து கொண்ட பல தோட்டச் சொந்தக்காரர்களும் சிங்கோனாவைப் பயிரிடத் தொடங்கினர். அதன் விளைவாக உற்பத்தியும், விநியோகமும் அதிகரிக்க அதன்விலை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 1873 இல் இருந்து 1876 வரையில் 3.6 மில்லியன் சிங்கோனாக் கன்றுகள் பல தோட்டங்களிலும் நடப்பட்டிருந்ததுடன் ஏற்றுமதி 1886ஆம் ஆண்டு 303 மில்லியன் தொன்களாக அதிகரித்தது. இத்தகைய கண்மூடித்தனமான மிகை உற்பத்தியும் வியாபாரப் போட்டியும் விரைவிலேயே சந்தையில் மிகை வழங்கலை ஏற்படுத்தியதால் அதன் விலை படிப்படியாக சரிவடைந்தது. சந்தையில் அதன் உற்பத்தி செலவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது சிங்கோனா பயிர்ச்செய்கை இலங்கையில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. பலரும் இப்பயிர்ச்செய்கையை கைவிட்டனர்.
இவ்வாறு ஒரு குறுகிய காலத்துக்கு சிங்கோனா பயிற்செய்கையானது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய செல்வாக்கு செலுத்தி வரலாற்றில் தன் பெயரை பதித்துக் கொண்டது. கோப்பிப் பயிர்ச்செய்கையினைத் தொடர்ந்து சிங்கோனா பயிற்செய்கையும் தோல்வி அடைந்ததால் தோட்டச்சொந்தக்காரர்கள் அடுத்து தமது எதிர்காலம் தொடர்பில் கவலை கொண்டிருந்தனர். அக்காலப்பகுதியில் இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக மட்டுமே இருந்தபோதும் உலகத்துக்கும் பிரித்தானியாவுக்கும் அதன் காலனித்துவ நாடுகளுக்கும் புதிய உற்பத்திப் பொருளாகவோ நுகர் பொருளாகவோ இருக்கவில்லை. ஏற்கனவே அது பிரித்தானியாவுக்கும் ஏனைய பல காலனித்துவ நாடுகளுக்கும் மத்திய சீனாவில் இருந்தும் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்தும் அறிமுகமாகி இருந்தது.
பிரித்தானியக் காலனித்துவப் பேரரசின் எழுச்சியின் மற்றும் ஒரு விளைவாக உலக ஏற்றுமதி வர்த்தகத்தின் பெருக்கத்தை குறிப்பிடலாம். ஒரு புறத்தில் கோப்பி, தேயிலை, கரும்பு, பருத்தி, றப்பர், புகையிலை முதலான பாரிய பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளின் உற்பத்தியும் வர்த்தகமும் அதிகரித்ததுடன் இவற்றை முடிவுப் பொருட்களாக மாற்றி நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்காக பாரிய தொழிற்சாலைகளும் காலனித்துவ நாடுகளில் உருவாகின. பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டதைப்போல் தொழிற்சாலைகளில் பணிபுரியவென பெருமளவில் தொழிலாளர்கள் படையணி உருவானது. உலகில் முதல் தடவையாக லட்சக்கணக்கான மக்களை காலையில் எழுந்ததும் கோப்பி குடிப்பவர்களாகவும், தேநீரை அருந்துபவர்களாகவும், புகைப்பிடிப்பவர்களாகவும், சீனி நுகரும் பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும் மாற்றும் கைங்கரியம் மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ‘டீ’ அருந்துவது பிரபுக்கள் மத்தியில் ஒரு ஆடம்பர நடவடிக்கையாகவே இருந்தது. காரணம் இது விலை கூடிய ஒரு ஆடம்பரப் பொருளாக இருந்தமை தான். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்துடன் கோப்பியும் “டீ” யும் சகலரும் அருந்தும் பிரியமான பானமாகிவிட்டது. கோப்பியுடனும் டீ யுடனும் சேர்த்து பால், சீனி கலந்து பருக ஆரம்பித்ததுடன் அவற்றின் தேவையும் வர்த்தகமும் உற்பத்திகளும் அதே அளவுக்கு அதிகரித்தன.
பியரும், மதுவும் குடித்து புகைப்பிடிப்பதிலும் பார்க்க தேநீர் குடிப்பதால் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் கிடைக்கும் என மக்கள் மத்தியில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கோப்பி காரம் கூடியது என்றும் அதிகம் “கெபேன்” (Cafain) காணப்படுகின்றது என்றும், தேநீரில் அது குறைவாக உள்ளதால் தினம் மூன்று முறை அருந்தலாம் என்றும் உரத்துக் கூறப்பட்டது. இதனால் ‘விக்டோரியன் பிரித்தானிய ஆங்கிலேய சமூகம்’ (Proud Victorian English Society) மற்றும் மேற்கு ஐரோப்பாவின் மகா பெருமைக்குரிய ஆங்கிலோ சாக்சன் இனமும் (The great Anglo – Saxon Race) ‘தேநீர் அருந்தும் பெருமைக்குரியவர்கள்’ என்று பீற்றிக்கொள்ளும் ஒரு சமூகமாக உருவானது. இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை தேநீர் அருந்தி ‘தேநீரின் அடிமைகள்’ என்ற பெயரை பெற்றுக் கொண்டனர்.
உலகின் தேயிலை உற்பத்தித் தரத்திற்கு நிகராக இலங்கையின் தேயிலை உற்பத்தியை கொண்டுவருவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. இலங்கையின் தேயிலை உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு முன் ஏனைய நாடுகள், நீண்ட உற்பத்தி அனுபவத்தை பெற்று இருந்ததுடன் இக்காலத்தில் இலங்கையின் கோப்பி உற்பத்திக்கு நல்ல விலையும் சந்தையும் இருந்ததால் பலரும் தேயிலைச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் விவசாய ஆராய்ச்சியாளரான கலாநிதி துவாய்ட்ஸ் கோப்பிப் பயிர் செய்கைக்கு நீண்ட எதிர்காலம் இல்லை என்பதனை நன்கு அறிந்து வைத்திருந்தார். எனவே அவர் கோப்பியுடன் சேர்த்து சிங்கோனா, கொக்கோ போன்ற பல பயிர்கள் திட்டத்தை ஊக்குவித்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல்கந்துரா தோட்டத்தில் பயிரிட வென முதலில் தனது “கன்னொருவ” பேராதனை தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த 150 தேயிலை கன்றுகளை டெய்லரிடம் வழங்கினார். அவரது அந்த பரீட்சார்த்த முயற்சி அபார வெற்றி பெற்றது. அவரது தேநீர் ஏனையவர்களின் உற்பத்திகளை விட மிகுந்த சுவை, மணம், குணம் உடையதாக இருந்தது.
டெய்லரின் முயற்சி பற்றி கேள்விப்பட்ட அன்றைய ஆளுநரான வில்லியம் ஹென்றி கிரகரி (William Hendry Gregory) டெய்லரின் லூல்கந்துரா தோட்டத்துக்கு விஜயம் செய்தார். டெய்லரின் முயற்சிகள் பிறரின் மனதைக் கவர்வதாக இருந்தன. அவர் தன்னாலான சகல உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். இதனால் லூல்கந்துரா தோட்டத்தின் சொந்தக்காரர்கள் டெய்லரின் முயற்சிக்கு நிதி வழங்க முன்வந்தார்கள். தேயிலை யுகத்தின் பொற்காலம் ஆரம்பமானது. ஆனால் தேயிலையின் சொந்தக்காரர்களுக்குத் தான் அது பொற்காலமாக அமைந்ததே அன்றி தொழிலாளிக்கு இதன் பலன் துளியாவது போய் சேர்ந்ததா என்று பார்த்தால், அது நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.
தொடரும்.