1950 களைத் தொடர்ந்து அடுத்துவந்த ஒரு தசாப்த காலம் இந்த நாட்டில் வசித்த இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை பூர்வீக தமிழர்களுக்கும் கூட சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்தது போல் சிம்மசொப்பனமாகவே அமைந்தது. மேற்படி இரண்டாவது பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 237,034 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே பிரஜா உரிமை கிடைத்தது. இந்தக்காலத்தில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரமாக இருந்தது. இவர்கள் உள்ளடங்கலாக பிரஜாவுரிமை பெற்று வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்த ஏனைய இந்திய வம்சாவழித் தமிழர்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சம் பேர் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலைமையில்தான் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்க இறந்துபோக அவரது புத்திரன் டட்லி சேனாநாயக்க பிரதமராகப் பதவி ஏற்றார். உடனடியாக பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய சட்டத்தின் தேவை கருதி 1952 ஏப்ரல் 28 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதே காலப்பகுதியில் பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை இழந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டன. வாக்குரிமை பறிக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் இருந்த தொழிலாளர் தலைவர்களுக்கும் கூட அடுத்த தேர்தலின் போது போட்டியிட முடியாமல் போய்விட்டது. 1952 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலின்போது அமைந்திருக்க வேண்டிய தேர்தல் மாவட்டங்கள் மற்றும் தேர்தல் தொகுதிகள் என்பன அந்தந்த தொகுதிகளில் வாழ்ந்த பிரஜா உரிமையுள்ள சனத்தொகையின் எண்ணிக்கை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. அதிகமான தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் மத்திய மலைநாட்டின் அண்டிய மாவட்டங்களிலேயே வசித்தபடியினால் அவர்கள் அனைவரின் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட நிலையில் அவ்வித மேலதிக எல்லாத் தேர்தல் தொகுதிகளுக்கும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டதனால் அவர்கள் அதிக நன்மைகளைப் பெற்றனர். அப்படி நடந்ததால் அதில் அவர்கள் பேருவகை கொண்டனர். துள்ளிக் குதித்தனர், கொண்டாடினர். ஒரு மக்கள் கூட்டத்தினரை துன்பத்தில் தள்ளி விட்டுவிட்டு இன்னொரு மக்கள் கூட்டத்தினர் அதற்காகச் சந்தோஷப்பட்டனர். குதூகலித்தனர். உலக வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் இது புதுமையானதும் அல்ல, புதியதும் அல்ல.
அநேகமான சந்தர்ப்பங்களில் வரலாறு அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆபிரிக்க கறுப்பின மக்களைப் பொறுத்தவரையில் வரலாறு அவர்கள் தொடர்பில் மிகக் குரூரமாக நடந்து கொண்டது. இப்போதும் கூட ஆபிரிக்க எத்தியோப்பிய நாட்டு மக்கள் சபிக்கப்பட்ட மக்களாக தான் இருக்கிறார்கள். அவர்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் மாண்டு அழிந்து கொண்டிருப்பது எத்தனை கண்களுக்கு தெரிகிறது? ஒரு கவிஞன் சொன்னான் “மண்ணில் வந்த சொர்க்கம் என்று” ஆனால் மண்ணில் ஏற்படுத்தப்பட்ட சொர்க்கங்களுக்குப் புறம்பாக ஆயிரம் ஆயிரம் நரகங்களையே அவர்கள் விதித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கும் 1950 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து வந்த 3 தசாப்தங்கள் மண்ணில் விதிக்கப்பட்ட நரகங்களாகத் தான் இருந்தன. அவர்கள் ஒருகட்டத்தில் அந்த இறைவன் இந்த மண்ணில் நம்மை ஏன் படைத்தான் என்று மனதுக்குள் ஓலமிட்ட சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்பட்டன. அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நாடற்றவர்கள் என்று சாபம் விடுக்கப்பட்டு ஒன்றுக்கும் லாயக்கில்லாத நாதியற்றவர்களாக தெருவில் விடப்பட்டனர்.
இந்த இடைக்காலத்தில் 1953, 1954 ஆகிய ஆண்டுகளில் இந்த நாட்டிலிருந்து இந்த மக்கள் கூட்டத்தினரை ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே துரத்தி அடித்து விட வேண்டும் என்று திரைமறைவில் இந்திய அரசுத் தலைவர்களுடன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என்றபோதும் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் உறுதியான கொள்கையால் அந்தப் பேச்சுவார்த்தைகளின் உள்நோக்கங்கள் நிறைவேறவில்லை. இந்த நிலைமை 27, மே மாதத்தில், 1964 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணம் அடையும் வரை நீடித்திருந்தது. இந்தக்காலத்தில் இலங்கையின் நிலைமையும் அரசியலும் ஒரு ஸ்திரமற்றதாகவே காணப்பட்டது.
இந்தக்காலத்தில் அரசியல் பின்னணியில் இருந்து இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களில் சேர். ஜோன் கொத்தலாவல, சேர். ஒலிவர் குணதிலக்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சேர். ஜோன் கொத்தலாவல 12 ஒக்டோபர் 1953 ஆம் ஆண்டிலிருந்து 12 ஏப்ரல் 1956 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றினார். அதேபோல் சேர். ஒலிவர் குணதிலக்க இந்நாட்டின் ஆளுநர் நாயகமாக 1954 முதல் 1962 வரை கடமையாற்றினார். இவர்கள் தமது உயர் அலுவலக அந்தஸ்தைப் பயன்படுத்தி புதுடில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை இந்தியாவுக்கு அனுப்பவே திட்டமிட்டனர். ஆனால் அது சாத்தியப்படவில்லை.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து அரச நிர்வாகத்தில் சிங்களம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் தேசிய மதமாக பௌத்தம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கோரி, இனவாத அரசியலுக்குள் மிகக் கூரான வாள் ஒன்றைச் செருகினார். இந்தக் கூர்வாள் இந்நாட்டு மக்களை சாதி, இனம், மதம், மொழி, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், இந்திய தமிழர், பறங்கியர் எனப் பல துண்டுகளாக கூறுபோட்டு இன மத மொழி ரீதியிலான வன்மங்களை மக்களின் மனதில் ஆழமாக விதைத்தது. இந்த வன்மத்தையே முதலீடாகக் கொண்டு 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் தலைவரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவை பிரதமராக கொண்டு அரசாங்கம் அமைத்தது. அந்த அரசாங்கம் கொண்டுவந்த முதல் சட்டம் சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் அரச கரும மொழி என்பதாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமே வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரித்து தனிநாடு பெற்றுக்கொடுங்கள் என்ற கோரிக்கைக்கு தூண்டுகோலாகவும் அமைந்தது. 1956, 1958, 77, 78, 83ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தமிழ் – சிங்கள இனக் கலவரங்களுக்கும் காரணமாகியது. இந்த நாட்டில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற கோர யுத்தம் ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. இதுவரை இந்த நாட்டு மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த மொழிப் பிரச்சினை தான்.
இவ்விதம் இலங்கையில் அரசியல் தடாகமானது சேறும் சகதியுமாக நுங்கும் நுரையுமாக கலங்கி போய்க் கொண்டிருந்தபோதுதான் அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பௌத்த துறவி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது மீண்டும் ஒருமுறை பொதுத் தேர்தலுக்கு வழியமைத்தது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதும் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மீண்டும் ஒருமுறை அதே ஆண்டிலேயே பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்விதம் இம்முறை பொதுத்தேர்தல் 1960 ஜூலை மாதம் நடத்தப்பட்ட போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் விதவை மனைவியான திருமதி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டார். இவரது இந்த அமோக வெற்றிக்கு காரணமாக அமைந்ததும் கூட வேறொன்றுமில்லை, இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டு அவர்களால் வாக்களிக்க முடியாமல் ஆக்கப்பட்டதன் விளைவுதான்.
1959 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் பொருட்டு நிர்ணயம் செய்யப்பட்ட தேர்தல் தொகுதிகள் சனத்தொகை மற்றும் வாக்காளரின் அடிப்படையில் அடையாளம் செய்யப்பட்டிருந்தன. எனினும் மத்திய மாகாணம் கண்டி மற்றும் நுவரெலியா, அதனை அண்டிய பகுதிகளில் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுக்கான தேர்தல் பிரதிநிதித்துவம் இல்லாமல் அடிக்கப்பட்டது. அவர்களால் இந்தத் தேர்தலில் எந்த ஒரு பிரதிநிதியையும் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியவில்லை. ஆனால் அதற்கு மாறாக வெறும் இருபத்தி ஆறு சதவீதமே வாழ்ந்த கண்டியச் சிங்கள மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 44 சதவீதமாக உயர்ச்சி அடைந்தது. எனினும் புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது ஒரு கண்துடைப்புக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் திரு. எஸ். தொண்டமான் அவர்களுக்கு நியமன அங்கத்தவர் என்ற பதவியை வழங்கியது. இப்படித்தான் இந்த நாட்டை அவர்கள் படிப்படியாக படு குழியை நோக்கி இட்டுச் சென்றார்கள்.
தொடரும்.