சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும்
Arts
12 நிமிட வாசிப்பு

சிவில் சமூகமும் சிவில் சமூக அமைப்புகளும்

March 27, 2025 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

சிவில் சமூகம் (Civil Society) என்னும் அரசியல் விஞ்ஞானக் கலைச்சொல் இன்று சாதாரண மக்கள் மத்தியிலும் அறிமுகமாகியுள்ள சொல்லாக உள்ளது. ஆனால் இச்சொல் பற்றிய கோட்பாட்டு விளக்கங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் தமிழில் போதியளவு இல்லை. ‘சிவில் சமூகம்’, ‘சிவில் சமூக அமைப்புகள்’, ‘ஜனநாயக சமூகத்தில் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம்’ என்பனவற்றை விளக்கும் முறையில் ‘சிவில் சமூகம்’ (Civil Society) என்னும் தலைப்பில் அரசியல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அவர்கள் ‘Politics and Political Science: A Contemporary Introduction (2018)’ என்னும் நூலில் (பக். 161 – 166) கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துத் தருவதாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது.

சிவில் சமூகம்: வரைவிலக்கணம்

சிவில் சமூகம் பற்றி அதன் விரிந்த அர்த்தத்தில் (Wider Meaning) அமையும் வரைவிலக்கணம் பின்வருமாறு:

“தமது பொதுவான தேவைகளை அடையும் இலக்கினை உடையதாய் பிரஜைகளின் சுயாதீனமான ஒன்றிணைந்த அமைப்பாக, சமூக வெளியில் அரசு என்ற நிறுவனத்திற்கு வெளியே இயங்குவதாக சிவில் சமூகம் உள்ளது.”

மேற்படி வரைவிலக்கணத்தில் உள்ளடங்கியுள்ள முக்கிய கூறுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

  1. அரசு (State) என்ற நிறுவனத்திற்கு வெளியே சமூக வெளியில் (Social Space) இயங்குவது சிவில் சமூகம்.
  2. சிவில் சமூகம் பிரஜைகளின் (Citizens) பொதுவான தேவைகள்/ இலக்குகளை (Common Goals) அடைவதற்காக ஒன்றிணைந்து செயற்படும் அமைப்புகளைக் (Organisations) கொண்டமைவது.
  3. சிவில் சமூகம், அரசில் இருந்து வேறானது; சுயாதீனமாகவும் (Autonomous) அரசுக்கு வெளியே (Outside the State) சுதந்திரமாகவும் இயங்குவது.

சிவில் சமூகம் பற்றிய விரிந்த அர்த்தம், ‘சிவில் சமூகம் x அரசு’ என்ற இரண்டு கருத்துகளை வேறுபடுத்தியும், ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தியும் நோக்குவதற்கு உதவுகிறது.

சமுதாய மட்டத்திலும் (Community Level), பிரதேச, மாவட்ட, பிராந்திய மட்டங்களிலும் இயங்கும் பிரஜைகள் அமைப்புக்கள் (Citizens Associations) மக்களின் சமூக நலன்களை (Social Welfare) அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உழைத்து வருகின்றன. அவை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயற்படுகின்றன. வேறுசில அமைப்புகள் மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டல், அவர்களின் உரிமைகளுக்காக வாதாடல் செய்தல் (Advocacy) போன்ற பணிகளை ஆற்றுகின்றன. இத்தகைய பிரஜைகள் அமைப்புகளினைப் பற்றி விபரிக்கும் போது ‘சிவில் சமூகம்’ என்ற சொல் அதன் குறுகிய அர்த்தத்தில் (Narrow Meaning) உபயோகிக்கப்படுகிறது.

சமகாலத்து ஜனநாயகக் கோட்பாட்டில் (Contemporary Democratic Theory) சிவில் சமூகம் என்ற எண்ணக்கரு முக்கியம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு, அதற்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்து ஜனநாயகக் கோட்பாட்டையும், சிவில் சமூகம் பற்றிய நவீன காலத்துக் கோட்பாட்டையும், அவற்றின் வரலாற்று வளர்ச்சி நோக்கில் பார்க்கும் போது, ஜனநாயகம் பலமானதாக நிலைபெறுவதற்கு, பலமான சிவில் சமூகம் கட்டி வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து அழுத்திக் கூறப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

சிவில் சமூகம் என்ற எண்ணக்கருவின் வளர்ச்சி வரலாறு

சிவில் சமூகம் என்ற எண்ணக்கருவின் வரலாற்றின் (The Conceptual History of Civil Society) ஊடாக அது பற்றிய நான்கு வகை அர்த்தங்கள் (Meanings) வெளிப்பட்டன.

  1. செவ்வியல் தாராண்மைவாத அர்த்தம் (Classical Liberal Meaning): செவ்வியல் தாராண்மைவாதச் சிந்தனையின்படி அரசு (State), குடும்பம் (Family) என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் சிவில் சமூகம் இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது. தனிநபர்கள், குடும்பம் என்ற எல்லைக்கு வெளியே சிவில் சமூக நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்குகிறார்கள்; அச்சிவில் சமூகம் அரசில் இருந்து வேறானதாகவும் உள்ளது. இத்தாராண்மைவாத அனுமானத்தை ஏற்றுக்கொண்ட இம்மானுவல் கான்ட் (Immanuel Kant), பிரட்ரிக் ஹெகல் (Fredrich Hegel) என்னும் இரு ஜேர்மனிய தேசத்து மெய்யியலாளர்கள் அரசு, குடும்பம் என்ற இரண்டிற்கும் வெளியே இருப்புக்கொண்டுள்ள சிவில் சமூகத்தில் முதலாளித்துவச் சந்தையும் (Capitalist Market) இயங்குகிறது எனக் கூறினர்.
  2. செவ்வியல் மார்க்சிய அர்த்தம் (Classical Marxist Meaning): ஹெகல், முதலாளித்துவச் சந்தையின் இயக்கம் இருப்புக்கொண்டுள்ள இடமாக சிவில் சமூகம் உள்ளது என்ற எடுகோளின் அடிப்படையில் தமது கருத்துகளை விளக்கினார். மார்க்ஸ், முதலாளித்துவச் சந்தை (Capitalist Market) என்பதற்கு ஒத்த கருத்துடைய சொல்லாக சிவில் சமூகம் என்பதைக் கருதினார். இவ்வாறு மார்க்ஸ் இச்சொல்லைப் பயன்படுத்தியதால், சந்தைச் சக்திகளால் நெறிப்படுத்தப்படும் முதலாளித்துவச் சமூகம் (Capitalist Society) என்பதன் மறுபெயர், சிவில் சமூகம் என்ற அர்த்தத்தைப் பெற்றது. மார்க்சின் இந்த அர்த்தத்தில், சிவில் சமூகத்தில் முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரப் போட்டி இடம்பெறுகிறது; தனிமனிதர்கள் தமது சுயநல இலக்குகளை அடைவதற்கான போட்டியில் ஈடுபடும் களமாக சிவில் சமூகம் விளங்குகிறது எனப் பொருள் கொள்ளப்பட்டது. இக்காரணத்தினால் சிவில் சமூகத்தில் மனிதர்களின் கூட்டு நலன்களை (Collective Welfare) அடைவதற்கான சாத்தியப்பாடு இல்லை. ஏனெனில் மனிதர்கள் தனிநபர் நலன்களால் உந்தப்பட்டு சுயநல நோக்குடன் செயற்படுகிறார்கள்.
  3. ஜனநாயகக் கோட்பாட்டின்படியான அர்த்தம்: மக்கள் பொதுவான நலன்களை (Common Interests) அடைவதற்காக, உழைக்கும் அமைப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு மக்கள் ஒன்றுகூடி உருவாக்கும் அமைப்புகளை ஆங்கிலத்தில் ‘அசோசியேஷன்ஸ்’ என்று கூறுவர். தமிழில் இச்சொல்லின் பொருளை கழகம், சங்கம், கூட்டமைப்பு என்னும் ஒத்த கருத்துள்ள சொற்களால் விளக்கலாம். ஜனநாயகம் பற்றிய கழகக் கோட்பாடு (Theory of Associational Democracy), சிவில் சமூகம் என்னும் சமூக வெளியில் (Social Space) மக்களின் கழகங்கள் செயற்படுகின்றன எனவும், மக்களின் கூட்டு நலன்களை (Collective Interests) அடைவதற்காக இவை செயற்படுகின்றன என்றும் கூறுகின்றது. இவ்வாறு மக்களின் கழக ஜனநாயகத்திற்கான (Associational Democracy) இடமாக சிவில் சமூகத்தைக் குறிப்பிட்டவர் அலெக்ஸ் த ரொக்வில் (Alex De Tocqueville) என்னும் பிரஞ்சு தேசத்து அறிஞராவர். அவரின் ‘Democracy in America’ என்னும் நூலில் இக்கருத்து விளக்கிக் கூறப்பட்டது. ஆயினும் ரொக்வில், சிவில் சமூகம் என்ற சொல்லை தனது நூலில் உபயோகிக்கவில்லை. அவர் சிவில் வாழ்க்கை (Civil Life) என்னும் சொல்லை உபயோகித்தார். அவர் உண்மையில் சிவில் வாழ்க்கை என்ற சொல்லை சிவில் சமூகம் என்ற அர்த்தத்திலேயே உபயோகித்தார்.
  4. கிராம்சியின் நவமார்க்சிய அர்த்தம்: அந்தோனியோ கிராம்சி இத்தாலிய தேசத்து மார்க்சியர் ஆவர். இவரது மார்க்சியத் தத்துவத்தில் சிவில் சமூகத்திற்கு கொடுத்த விளக்கம் சிவில் சமூகம் என்னும் எண்ணக்கரு பற்றிய நவமார்க்சிய அர்த்தம் (Neo-marxist Meaning) எனக் கொள்ளப்படுகிறது. 1930களில் இவரால் இவ்விளக்கம் இவரது எழுத்துகள் ஊடாக முன்வைக்கப்பட்டது. கிராம்சியின் விளக்கத்தின்படி அரசுக்கும், பிரஜைகளுக்கும் இடைநடுவில் அமையும் வெளியில் இயங்குவதே சிவில் சமூகம் ஆகும். இச்சிவில் சமூக வெளியை சமூக பண்பாட்டுவெளி (Social and Cultural Space) என கிராம்சி குறிப்பிடுகிறார். இவ்வெளி சமயம், பண்பாடு, கல்விக்கழகங்கள் ஆகியன இயக்கம் கொண்டுள்ள வெளியெனவும் கிராம்சி குறிப்பிடுகிறார். சிவில் சமூக வெளியில் (இத்தாலியின்) கத்தோலிக்கத் திருச்சபைக்குழுக்கள் (Church Groups), தன்னார்வ அமைப்புகள், வெகுஜன ஊடகங்கள் (Mass Media) என்பனவும் செயற்படுகின்றன எனவும் கிராம்சி குறிப்பிட்டார். சிவில் சமூகத்தை இவ்வாறு வரையறை செய்யும் கிராம்சி, ஆளும் குழுக்கள் பிரஜைகள் மீது தம் அதிகாரத்தைச் செலுத்துவதற்குத் தேவையான கருத்தியல் மேலாண்மையைப் (Ideological Hegemony) பெறுவதற்காகத் தலையீடு செய்யும் களமாக சிவில் சமூகம் விளங்குகிறது எனக் குறிப்பிடுகிறார். சமூக வெளியிலும், பண்பாட்டு வெளியிலும் ஆளும் குழுக்கள் தமது தலையீடு மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் மேலாதிக்கத்தை கிராம்சி ‘கெஜிமொனி’ (Hegemony) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதனைத் தமிழில் ‘மேலாண்மை’ என்ற சொல்லால் குறிப்பிடலாம். பிரஜைகள் மீது ஆளும் குழுக்கள் செலுத்தும் அதிகாரம், மேலாண்மை அதிகாரம் (Hegemonic Power) ஆகும். இம்மேலாண்மை அதிகாரம் ஆட்சியாளர்களால் வன்முறை மூலம் திணிக்கப்படுவதல்ல; பண்பாடு, கருத்தியல் என்ற கருவிகள் மூலம் மக்கள் மனதை ஆட்கொண்டு அவர்களின் சம்மதத்தைப் (Consent) பெறுவதன் மூலம் நிறுவப்படும் மேலாண்மை அதிகாரம் ஆகும். கிராம்சியின் கோட்பாட்டின்படி, அடக்குமுறைக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாகும் சமூகக் குழுக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தை (Resistance) சிவில் சமூகம் என்ற வெளியில் பிரஜைகளை ஒன்றிணைப்பதன் மூலம் முன்னெடுக்கின்றனர். அதன்மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்திற்கு (Hegemony of the Ruling Class) எதிர்ப்பு வலுவடைகிறது எனவும் கிராம்சி விளக்கினார்.

சிவில் சமூகம் என்ற எண்ணக்கருவின் வளர்ச்சி வரலாற்றை மேற்கண்ட நான்கு நோக்குமுறைகளின் ஊடாக விளக்கும் பேராசிரியர் உயன்கொட, 1970களிலும் 1980களிலும், சிவில் சமூகம் என்னும் எண்ணக்கரு பிறிதோர் அர்த்தத்தைப் பெற்றதையும், நவீன ஜனநாயக அரசியல் கோட்பாட்டில் இப்புதிய அர்த்தத்தின் முக்கியத்துவத்தையும் அடுத்து எடுத்துக் கூறுகிறார். சிவில் சமூகம் என்பது ஜனநாயக அரசியல் நடவடிக்கைக்கான வெளி (Civil Society as Space for Democratic Political Action). ஜனநாயக அரசியல் நடவடிக்கைக்கான வெளியாக சிவில் சமூகம் அமைந்த வரலாற்றுச்சூழல் இலத்தீன் அமெரிக்காவில் 1970களிலும், கிழக்கு ஐரோப்பாவில் 1980களிலும் காணப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் அக்காலத்தில் சர்வாதிகார அரசாங்கங்கள் ஆட்சி செலுத்தின. அந்நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டிருந்தன. 1970-1990 காலப்பகுதியில் ஆசிய நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ், வடகொரியா போன்ற நாடுகளிலும் சர்வாதிகார அரசுகள் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு நசுக்கின. இப்பின்புலத்தில் இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளில் அரசியல் விடுதலையையும், ஜனநாயகத்தையும் இலக்காகக்கொண்ட மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களை முன்னெடுப்பதற்கு, அரசியல் கட்சிகள் இல்லாத சூழ்நிலையில், இப்போராட்டங்களை சிவில் சமூகக் குழுக்கள் (Civil Society Groups) முன்னெடுத்தன. தொழிற்சங்கங்கள், சமயக்குழுக்கள், எழுத்தாளர் கழகங்கள், நடிகர்கள், நடன, இசைக்கலைஞர்களின் அமைப்புகள் என்பன இச்சிவில் சமூக நடவடிக்கைகளில் முக்கிய வகிபாகத்தைப் பெற்றன. மாணவர் அமைப்புகளும், விவசாயிகள் அமைப்புகளும் சாதாரண மக்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்கி சிவில் சமூக நடவடிக்கைகளில் அவர்களை அணிதிரட்ட உதவின. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சிவில் சமூக இயக்கங்கள் (Civil Society Movements) என்னும் எண்ணக்கரு பிரபலம் பெற்றது. இன்று அரசியல் சொல்லாடலில் முக்கிய விடயப்பொருளாக அமையும் ‘சிவில் சமூக இயக்கங்கள்’ அரசியல் கோட்பாட்டில் (Political Theory) ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள விடயமாகும்.

சிவில் சமூக இயக்கங்கள் தோன்றிய வரலாற்றுப் பின்னணி யாது? என்பது இவ்விடத்தில் விடைகாண வேண்டிய முக்கிய வினாவாகும். இந்தியாவின் அரசியல் கோட்பாட்டாளரான ரஜ்னி கொதாரி (Rajni Kothari), சிவில் சமூக இயக்கங்களை கட்சி சாராத அரசியல் அமைப்புகள் (Non-party Political Formations) என வரையறை செய்தார் (பார்க்க, Rajni Kothari; 1984, The Non Party Political Process, Economic and Political Weekly, 19:5, {February. 04. 1984} 216 – 224). அரசியல் கட்சிகள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஜனநாயகம், மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள், சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கத்தை வெளிப்படுத்துவதும், அலட்சியம் செய்வதுமான சூழ்நிலைகளில் மேற்குறித்த விடயங்களை முன்னிறுத்திப் போராட்டங்களை நடத்துவதற்கான சமூக இயக்கங்கள் தோன்றின. இச்சமூக இயக்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக அமைந்தன. இவற்றின் செயற்பாடுகளில் அரசியல் செயற்துடிப்பு (Political Activism) வெளிப்பட்டது. சிவில் சமூகம் என்றால் கட்சி சாராத அரசியல் அமைப்புகள் என்ற அர்த்தம் அண்மைக்காலத்தில் முக்கியம் பெற்றது.

சமூக இயக்கங்களும் சமூகவெளியும்

மேலே குறிப்பிட்டவற்றில் இருந்து சிவில் சமூகம் என்றால் என்ன என்பதற்கான சமகால அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமூக இயக்கங்கள் (Social Movements), அச்சமூக இயக்கங்கள் இயங்கும் சமூகவெளி (Social Space) என்ற இரண்டினதும் சேர்க்கையே சிவில் சமூகம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. தொழிலாளர் இயக்கங்கள், விவசாயிகளின் இயக்கங்கள் (Peasants Movements), சமய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், ஊடக சுதந்திரத்திற்கான இயக்கங்கள், சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் ஆகியன சிவில் சமூக இயக்கங்களிற்கு உதாரணங்களாகும்.

சிவில் சமூக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும்

சிவில் சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகளைப் போன்றே அரசியல் பிரச்சினைகளைத் தமது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொண்டு செயற்படுகின்றன. அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூக இயக்கங்களிற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

  1. அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைக்கவும் அதனை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. ஆனால் சிவில் சமூக இயக்கங்களிற்கு அரசியல் அதிகாரத்தைக் (Political Power) கைப்பற்றும் நோக்கம் இருப்பதில்லை.
  2. அரசியல் கட்சிகள், தேர்தல் அரசியலில் (Electoral Politics) பங்கேற்கின்றன. சிவில் சமூக இயக்கங்கள் தேர்தல் நடைபெறும் சமயங்களில் குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரிக்கலாம். ஆனால் அவை நேரடியாகத் தேர்தலில் பங்கேற்பதில்லை.
  3. அரசியல் கட்சிகளுக்குத் தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டம் இருக்கும். அவ்வேலைத்திட்டம் பல்வேறு விடயங்கள் சார்ந்த கொள்கைப் பிரச்சினைகளை (Policy Issues) உள்ளடக்கியனவாக இருக்கும். சிவில் சமூக இயக்கங்களின் வேலைத்திட்டங்களின் நோக்கெல்லை (Scope) விரிந்ததாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சிவில் சமூக இயக்கம் குறிப்பிட்டதொரு பிரச்சினை அல்லது விடயம் சார்ந்து அக்கறை கொண்டிருப்பதால், அதன் வேலைத்திட்டமும் குறிப்பிட்ட அந்த விடயத்தைப் பற்றியதாகவே இருக்கும்.
  4. அரசியல் கட்சிகள், கட்சியின் கருத்தியலை ஏற்றுக்கொண்டவர்களை மட்டுமே அங்கத்தவர்களாகச் சேர்த்துக் கொள்வதுண்டு. மேலும், கட்சியில் அங்கத்தவர்களாகச் சேருவோர் கட்சியின் ஒழுக்கவிதிகளுக்குக் கட்டுப்பட்டு நடத்தலும் வேண்டும். சிவில் சமூக இயக்கங்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதில், நெகிழ்ச்சியான நடைமுறைகளைக் கொண்டிருக்கின்றன.

அரசியல் விஞ்ஞானம் ‘சிவில் சமூகம்’ என்பதை முக்கியமானதாகக் கருதுவதேன்?

அரசியல் விஞ்ஞானிகள் சிவில் சமூகம் பற்றிய கல்வியிலும், ஆய்விலும் ஆர்வம் உடையவர்களாய் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன:

  1. சிவில் சமூக அமைப்புகளும் சிவில் சமூகக் குழுக்களும் அரசியலில் அக்கறை கொண்டுள்ளன. அவை கட்சி அரசியலுக்கு (Party Politics) அனுசரணையானவை. ஆகையால் அரசியல் பற்றிய கல்வியில் சிவில் சமூகம் என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது.
  2. சிவில் சமூகம், அரசுக்கும் (State) அரசியல் கட்சிகளுக்கும் அப்பால், அவற்றில் இருந்து சுதந்திரமான (Autonomous) அரசியல் வெளியில் (Political Space) இருப்புக் கொண்டுள்ளன.
  3. பிரஜைகளின் அரசியல் பங்கேற்புக்கு (Political Participation) சிவில் சமூகம் புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுகின்றது. அரசியல் கட்சிகளில் இத்தகைய வாய்ப்புகள் இருப்பதில்லை.
  4. செயல்துடிப்புடைய சிவில்சமூகம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துகிறது (Deepen Democracy).
  5. அரசியல் கட்சிகளால் பொதுவாக அலட்சியம் செய்யப்படும் முக்கியமான பொதுப் பிரச்சினைகளை (Important  Public Issues) சிவில் சமூக அமைப்புகள் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு அப்பிரச்சினைகளின் தீர்வு நடவடிக்கைகளுக்காக மக்களை அரசியல் அணிதிரட்டல் (Political Mobilisation) செய்கின்றன.
  6. பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக மக்களை அணிதிரட்டும் சிவில் சமூக அமைப்புகள் மக்களை வலுவாக்கம் செய்கின்றன (Empower People).

சுருக்கம்

  1. சிவில் சமூகம்’ என்னும் அரசறிவியல் கலைச்சொல் பற்றிய வரைவிலக்கணமும் விளக்கமும் முதலில் கூறப்பட்டது.
  2. சிவில் சமூகம் என்ற எண்ணக்கரு (Concept of Civil Society) வளர்ச்சியுற்ற வரலாற்றில் செவ்வியல் தாராண்மைவாதம், செவ்வியல் மார்க்சியம் என்பனவற்றின் பங்களிப்பு முக்கியமானது. இம்மானுவல் கான்ட், ஹெகல், மார்க்ஸ் ஆகியோரின் எழுத்துகள் சிவில் சமூகம் என்னும் எண்ணக்கருவின் உருவாக்கத்திற்கு உதவின.
  3. சிவில் சமூகம் என்பது மக்களின் கழகங்கள் (Associations) செயற்படும் சமூகவெளி (Social Space). அது கழக ஜனநாயகம் (Associational Democracy) செயற்படும் களமாகும்.
  4. இத்தாலியரான அந்தோனியோ கிராம்சி (Antonio Gramsci) 1930களில் சிவில் சமூகம் பற்றிய நவமார்க்சிய விளக்கத்தை முன்வைத்தார். அவரின் மேலாண்மை (Hegemony), மேலாண்மை அதிகாரம் (Hegemonic Power) ஆகிய கருத்துகள் புதுமையான கருத்தாக்கங்களாகும்.
  5. சிவில் அமைப்புகளை கட்சிசாராத அரசியல் அமைப்புகள் (Non-party Formations) என வரையறை செய்த ரஜ்னி கோதாரி (Rajni Kothari), அரசியல் கட்சிகள் முன்னெடுக்கத் தயங்கும் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை வழி நடத்தும் சிவில் அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டினார். மூன்றாம் உலக நாடுகளில் 1970களிலும் 1980களிலும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக சிவில் அமைப்புகள் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன.
  6. இறுதியாக,

அ) சிவில் சமூகமும், சிவில் சமூக இயக்கங்களும்

ஆ) சிவில் சமூகங்களும் அரசியல் கட்சிகளும்

இ) அரசியல் விஞ்ஞானக் கல்வியிலும், ஆய்விலும் சிவில் சமூகம் பெறும் முக்கியத்துவம் என்பன விளக்கப்பட்டன.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொடவின் ‘Politics and Political Science: A Contemporary Introduction’ என்ற நூலின் 161 முதல் 167 வரையான பக்கங்களில் கூறப்பட்ட கருத்துகளை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட இத்தமிழ்க் கட்டுரை எளிமைப்படுத்திய தமிழ்ப்பெயர்ப்பாக அமைந்துள்ளது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்