கடலும் காலநிலைமாற்ற அரசியலும்
Arts
20 நிமிட வாசிப்பு

கடலும் காலநிலைமாற்ற அரசியலும்

August 4, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

கடலட்டை வளர்ப்பை நியாயப்படுத்த அதிகார வர்க்கத்தினரும், அதன் கடல் விஞ்ஞானிகளும் முன் வைக்கும் சில கூற்றுக்களை ஆராய்வோம்.

இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும். ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்ற இடங்களாகப் போய்விடும். வெப்ப அதிகரிப்புக் காரணமாக புல், பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் சார்ந்த நிலம். இதைத் தவிர்ப்பதற்கு எந்த விதத்திலும் முடியாது. காரணம் தற்போது நிலவும் காலநிலை மாற்றமும், புவி வெப்பமடைவதுமாகும். “ 

இந்த நியாயங்களை, காரணங்களை கொஞ்சம் விரிவாக ஆராய்வோம். 

காலநிலை மாற்றம் 

சூழல் மாசடையும் உற்பத்தி முறை, எரிபொருள் பாவனை, நகரமயமாதல், நுகர்வுப் பொருளாதாரக் கலாசாரம் என்பன காலநிலை மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துவதாக ஐக்கியநாடுகள் சபையின் காலநிலை மற்றும் சுற்று சூழலியல் நிறுவனம் (UN Environment) கூறுகிறது. அதேவேளை இயற்கையாகவே வளிமண்டலத்தில் வெப்பம் உருவாகுவதற்கான காரணிகளாக பின்வருபவை கண்டறியப்பட்டுள்ளன : 

  1. பூமியை நோக்கி வரும் சூரியக் கதிர்களின் வெப்பநிலையின் அளவு மாற்றம் அடைந்துள்ளமை,
  2. அந்தக் கதிர்களை பூமி உள்வாங்கிக் கொள்வது அல்லது செரித்துக்கொள்வதில் உள்ள வேறுபாடுகள் – மாற்றங்கள்,
  3. கடலில் நீர் ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்,

என்பனவாகும்.

நம் சமகாலத்தில் காலநிலை மாற்றத்திற்கான சில இயற்கையான காரணங்கள் மேற்கூறியது போல இருந்தாலும், அதே நேரத்தில் உலக அளவில், மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளே காலநிலை மாற்றத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காலநிலை மாற்றத்திற்கு எப்பொழுதும் ஒரு நிறுவப்பட கூடிய / நிரூபிக்கத்தக்கதான காரணங்கள் உள்ளன. காலநிலை மாற்றத்தில் மனிதன் செல்வாக்குச் செய்ய ஆரம்பித்தமை, விவசாயம் செய்யத் தொடங்கிய காலம் அல்லது முதல் நாகரிகங்கள் ஆரம்பமாகிய காலத்திலேயே தொடங்கியது எனலாம். 1750 களில் ஆரம்பித்த (Industrial Revolution) தொழில்துறை புரட்சிக்குப் பிறகு, மனிதர்கள் காலநிலையில் கட்டற்ற அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை அதிகரித்தது. எடுத்துக்காட்டாக, உலகளாவிய நகர்ப்புற வளர்ச்சியானது (உ+ம் : சீனா, இந்தியா, பிரேஸில்) வளிமண்டலத்தில் வெப்பநிலையை அதிகரிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வகை வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பானது, ஒட்டுமொத்தமாக உலகளாவிய அளவில் வளிமண்டலத்தை வெப்பமடைய வைக்கிறது. இதன் தொடர்ச்சியாக பூமியின் பரப்பளவில் 71% வீதத்தை கொண்ட கடற்பகுதிகளிலும் காலநிலை, கடல் சூழலியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

கடல் சூழலியல் மாற்றங்கள்

  1. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு

உலகப் பெருங்கடல்கள் வெப்பமடைந்து வருகின்றன. வெப்பமயமாதல் 11,000 ஆண்டுகளில் இருந்ததைவிட கடந்த நூற்றாண்டில் மிக வேகமாக நிகழ்ந்துள்ளது என்று ஓகஸ்ட் 2021 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை அறிக்கை கூறுகிறது. மனிதர்களினால் பெரும்பாலும் ஏற்படுத்தப்படும் இந்தப்பாதிப்பினால் இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை இப்போது இருப்பதை விடவும் 1-3 டிகிரியால் அதிகரிக்குமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

2. கடல் நீரின் மட்டம் உயர்தல்

மேற்கூறியது போல கடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது உலகின் வட துருவம் மற்றும் தென் துருவதிலுள்ள பனிப்பாறைகளும், மலைகளும் உருகி வருகின்றன. இதனால் கடல் நீரின் அளவு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பானது பூமியின் நிலப்பரப்பை மூழ்கடித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை ஆய்வுக் குழு, இந்த நீர்மட்ட உயர்வினால் மாலைதீவு மற்றும் பசுபிக் கடலில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகள் இன்னும் சில வருடங்களில் காணாமல் போய்விடும் எனக் கூறுகிறது. இதற்கு இலங்கை கூட விதிவிலக்கல்ல. இலங்கையில் உள்ள தீவுகளின் கரைகளுள் நீர்மட்டம் அதிகரித்து, கடல் அண்ணளவாக 10-25 மீட்டர் நிலப் பகுதிக்குள் புகுந்துள்ளது. உதாரணமாக, ஊர்காவற்றுறை – காரைநகருக்கு இடையிலான குடாவில் அகலம் 80 களில் இருந்ததை விட சில நூறு பரப்பளவு அதிகரித்துள்ளது. 

sea level rise

3. CO2 இன் அளவு அதிகரிப்பு

வழமையாக வளிமண்டலத்திலும், கடலிலும் கார்பன் டி ஒக்சைட்டின் (CO2) அளவு ஒரே நிலையிலேயே இருக்கும். மனிதர்களின் எரிபொருள் பாவனையினால், கார்பன் டி ஒக்சைட் வெளியிடப்பட்டு, அது வளிமண்டலத்தை மாசடைய வைக்கிறது. இதனை, கடல் அண்ணளவாக 25% உறிஞ்சிக் கொள்கிறது. கடலில், நீலக்காடுகள் எனப்படும் கடல் தாவரங்களான கடற்பாசிகள், தாளைகள் மற்றும் அறுகுகள் இந்த கார்பன் கழிவுகளை தமக்குள் சேமித்துக்கொள்கின்றன. மீதமானவை கடலடித்தளத்தின் சேறு, மணல், முருகைகளில் படிகின்றன. கடலின் தாங்கு திறனுக்கும் அதிகமாக (The Ocean’s Tolerance Limit of CO2), கடல் தனக்குள் செரித்துக்கொள்ளும் திறனுக்கும் அதிகமாக, கார்பனின் (CO2) அளவு அதிகரிக்கும் போது, கடலின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் உண்டாகிறது. இன்றுள்ள நிலையை போலவே தொடர்ந்தும் கார்பன் (CO2) கடலில் அதிகரித்துக்கொண்டே போகுமானால் கடலின் சூழலியல் தொடர்ந்தும் அழிவுக்கு உள்ளாகும். 

மேற்கூறியது போல கார்பனின் (CO2) அளவு கடலில் அதிகரிப்பதனால் கடல்நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. இதனால் :

  • கடல் கரையோரம் சோறாகி நிலஅரிப்பு ஏற்பட ஏதுவாகிறது 
  • கார்பனின் (CO2) அதிகரிப்பினால் கடல் தாவரங்கள் அழிந்து போகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்த தாவரங்களில் தங்கிவாழும் நுண்ணுயிரிகள் மற்றும் கடல் சீவராசிகளின் உற்பத்திப் பெருக்கம் தடைப்படுகிறது.
coral in Mannar

Corel எனப்படும் நுண்ணுயிரியினால் உருவாகும் பவளப் பாறைகள், முருகைப் பாறைகள், கடலடித்தளக் கற்கள் அழிவைச் சந்திக்கின்றன. இந்தப் பவளப் பாறைகளானவை சுண்ணாம்புத் தன்மை கொண்டவை அல்லது காரத்தன்மை கொண்டவை. கடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும் போது, காரத்தன்மை கொண்ட இந்தப்பாறைகள் கரைந்து போகின்றன. அல்லது சிதைந்து போகின்றன. இந்த அழிவினால் பவளப்பாறைகளில் தங்கிவாழும் பலவகை மீனினங்கள் மற்றும் உயிரிகளின் பெருக்கம் குறைந்து அழிந்து போகின்றன. இதை கண்டுகொள்ள பெரிய விஞ்ஞானிகளாக இருக்கத் தேவையில்லை. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதுமானது.

இலங்கையின் வடக்கு கடலின் கரைகளில் இவ்வாறு சிதைந்துபோன பவளப்பாறைக் குழுமங்களைக் காணலாம். இதனாலேயே, 1980 களுக்கு முன்பு வரை வடகடல் கரையோரங்களில் பெருமளவு காணப்பட்ட கீளிமீன், கலவாய், செங்கண்ணி, செப்பலி, தாமரை காத்தான் எனப்படும் நிற மீன்கள், ஆமைகள், பாசிவகைகள் அழிந்து போயின. இன்று இவை மிக அரிதானதாகவே வடக்குக் கடல் கரைகளில் காணப்படுகின்றன. 

devastated coral

காலநிலை மாற்றம் கடலினையும் அதன் சூழலியலையும் பாதிக்கும் என்று, இலங்கையின் அரச ஆய்வு நிறுவனங்களில் தொழில் செய்யும் கடலியல் ஆய்வாளர்களும் அதிகாரிகளும் கூறுவதை பெரும் குரலில் நானும் ஆமோதிக்கிறேன். காலநிலை மாற்றம் கடலினையும் அதன் சூழலியலையும் பாதிக்கும் என்று இவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை அந்த மக்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தாமல், அல்லது அவர்களுடன் கலந்துரையாடலுக்கு உட்படுத்தாமல், மேலோட்டமாக வெறும் அதிகாரத் தோரணையில், மீனவர்களுக்கு வெற்றுத் தகவல் அறிக்கைகள் போல் வெளியிடுவதையே நான் கேள்வி எழுப்புகின்றேன். எனவேதான் நான் அந்தக் கருத்துக்களை அந்தச்சமூகத்தினருக்கும் அவர்களின் நலன் சார்ந்து அக்கறைப்படுவோருக்கும் விபரமாகவும், திறந்த விவாதத்திற்கு உட்படுத்தக் கூடியதாகவும் முன்வைக்க முனைந்துள்ளேன்.

எனது பிரதானமான கேள்வி என்னவென்றால், எல்லோராலும் பெரிதாக சிலாகிக்கப்படும் இந்த ‘காலநிலை மாற்றம்’ மற்றும் ‘கடலின் சூழலியல் மாற்றம்’ என்பவற்றை எதிர் கொள்ளவும், கடல் சூழலை நம்பி வாழும் அந்த மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் பாதுகாப்பிற்கு வகை செய்யவுமுள்ள ஒரே வழி, திட்டமிட்ட செயற்கையான அட்டை வளர்ப்பும், கொடுவாய் வளர்ப்பும், இறால் வளர்ப்பும்தான் என்பது நீங்கள் படித்த எந்த வகை சூழலியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது? எந்த வகைத் தர்க்கத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்படக்கூடியது? 

கடலட்டையும், கொடுவாய் மீனும், இறாலும் கடல்சார்ந்த உயிரிகள் அல்லவா? சக கடல் வாழ் உயிரிகள் கடலின் சூழலியல் மாற்றங்களைத் தாங்க முடியாது அழிந்து போகின்றன என்றால் கடலட்டையும், கொடுவாயும், மண்ணாவும், பாலமீனும், நண்டும் எவ்வாறு அதே கடலில் உயிர் வாழும்? இதற்கு ஏதாவது தர்க்க ரீதியான விளக்கம் உண்டா? விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் விளக்கங்கள் உண்டா?

அப்படி இல்லையென்றால், நீங்கள் சீனாவிடம் சொல்லி, காலநிலை மாற்றங்களைத் தாங்கக் கூடிய மரபணு மாற்றப்பட்ட அட்டைகளையும், நண்டுகளையும், மீனினங்களையும் வளர்ப்பதற்காக அவற்றை இறக்குமதி செய்யப்போகிறீர்கள் என்று, சொல்லாமல் சொல்ல வருகிறீர்களா? 

அப்படி இருக்காதென்று நம்புவோமாக!

காலநிலை மாற்றத்தைக் காரணமாகக் கொண்டு, செயற்கையான கடல் விவசாயம் செய்வது மட்டுமே மக்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்று மீனவர்களுக்குக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று, கடலியல் விஞ்ஞானிகளுக்கும் அத்துறையைக் கையாளும் அதிகாரிகளுக்கும் நன்கு தெரியும். அரசியல் அதிகாரத்தைச் சார்ந்து நின்று, கல்வியால் கிடைத்த பட்டங்களாலும் பதவிகளாலும் கிடைத்த சமூக அங்கீகாரத்தையும் – அதிகாரத்தையும் உபயோகித்து, உண்மைகளைப் பகிரங்கப்படுத்த துணிவில்லாத கல்விசார், புலமைசார் நேர்மையில்லாதவர்கள், படிப்பறிவில்லாத – உணர்வு சார்ந்து பேசும் மீனவ சமூகத்தினரை நிரந்தரப் பொருளாதார அடிமைகளாக்க முயலும் பொய்ப் பித்தலாட்டம் எவ்வளவு நாட்களுக்கு நின்று பிடிக்க முடியும்? 

கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள்  உயிரினங்களை முற்று முழுதாக அழித்து விடுமா?

முன்பு, சீனாவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டை வளர்ப்பினால் கடலின் உயிரினங்கள் அழிந்து, கருங்கடலாகும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதே வரியில் அந்த நிலைமை சில தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்றும் கூறியிருந்தேன். கடலானது காலங்காலமாக தன்னைத் தானே சுகப்படுத்தி கொள்வதும் தனது பிள்ளைகளான கடல் சீவராசிகளுக்காக தன்னைத் தானே மாற்றிக் கொள்வதும் தகவமைத்துக் கொள்ளுவதுமான தன்மைகளைக் கொண்டதென்பது விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபிக்கத்தக்கதாகும். இன்றுள்ள கடலாய்வுகளின் முடிவுகளின்படி, கடலில் சூழலியல் மாற்றங்களுக்கு ஏற்ப, ஒரு மீனினம் அல்லது உயிரினம் அழிவைக் காணும்போது, அங்கு வேறு ஒருவகை கடல் சீவராசி உயிர் வாழ்வதற்கு உகந்த இடமாகவும் அது மாறுகிறது

1980 ஆம் ஆண்டுகளில் வெள்ளை நண்டுகள் பெரிய சந்தைப் பெறுமதியற்ற ஒரு கடல் உற்பத்தியாக இருந்தது. ஆனால் 1990 களுக்கு பிற்பாடு வெள்ளை நண்டுகள் சர்வதேசச் சந்தையில் பெரும் விலைக்கு விற்கப்படும் பொருளாக மாறின. வெள்ளை நண்டுக்கான சந்தை சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளாகும். மேற்படி நாடுகளின் இயற்கையான நண்டு வளம், பாரிய நண்டு பிடியால் அழிந்துபோனது. இதனால் சீனா நண்டு வளர்ப்பை முதலில் கையிலெடுத்தது. மரபணுக்களை மாற்றி மிக விரைவாக வளரும் நண்டு இனங்களை உருவாக்கியது

அதேவேளை, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தின் கிழக்குக்கரை தொடக்கம் இலங்கையின் கிழக்குக் கரையோரங்கள் ஈறாக தீவுப் பகுதிகளிலும் நண்டு வளம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அதிகரித்து வருகிறது. இதற்கான காரணமாக கடல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமானது யாதெனில், கடலின் சூழலியல் மாற்றங்களினால் ஏற்பட்ட இரசாயனவியல் மாற்றங்கள், கடல் நீரோட்ட மாற்றங்கள் நண்டுகள் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கின்றன என்பதாகும்.

எனது பிறப்பிடமான வடஇலங்கையின் தீவகக் கடற்பரப்பில் கடந்த 20 வருடங்களாக ஏற்றுமதிக்கான நண்டுகள் பிடிக்கப்படுகின்றன. இந்த நண்டு பிடிப்பு கணக்கு வழக்கற்று எவ்வித கட்டுப்பாடுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்துக்கு பின்பு எமது சமூகம் தன்னைப் பொருளாதர ரீதியில் மீள் கட்டுமானம் செய்ய இந்த நண்டுப் பிடிப்பு தொழிலே முக்கியமான காரணமாக இருந்தது.  இன்றும் இருந்து வருகிறது. தற்போது பருமனில் சிறிய குருக்கான் நண்டுகளை மீனவர்கள் பிடிக்கிறார்கள். ஆனாலும், வருடம் முழுவதும் இவர்கள் பிடிப்பதற்கான நண்டுகள், குருக்கான் நண்டுகளாக இருந்தபோதும் அவர்களுக்கு கடலில் கிடைத்த வண்ணமே இருக்கின்றன

இந்த நண்டுகளின் வரத்து இரண்டு வகைகளில் நடைபெறுகின்றன. தென் இந்து சமுத்திரத்திலிருந்து இந்தோனேசிய, தாய்லாந்து கரைகளை நோக்கி வடக்காக செல்லும் கடல் நீரோட்டம், அங்கிருந்து வங்காள விரிகுடாவைக் கடந்து தென் தமிழ் நாட்டு கிழக்கு கரை பாக்கு நீரிணை இலங்கையின் மீன்பிடித் தளமான பேதுரு கடற்தளம் (Pedro Bank) ஈறாக (வடக்கின்) கிழக்குக் கரை ஊடாக மறுபடியும் தென் இந்து சமுத்திரத்தை நோக்கி அவை பயணிக்கிறன.

இந்தப் பயணத்தில், நீரோட்டமானது நண்டு முட்டைகள் மற்றும் நண்டுக் குருக்கான்களையும் வடக்கின் தீவகக் கடலுக்கும் கொண்டு வந்து சேர்க்கிறது. இவ்வாறு வரும் நண்டு முட்டைகள் ஆறுமாத காலத்திலேயே வலையில் பிடிபடுமளவிற்கு வளர்ந்து விடுகின்றன. இதேபோன்று, மத்தியதரைக் கடலில் கூட அதன் உயிரியல் கட்டமைப்பு கடந்த 50 வருடங்களில் மாற்றமடைந்துள்ளதாக கடல் ஆய்வாளர்கள் கூறுகிறர்கள்

Portunus Segnis என்று அழைக்கப்படும் வெள்ளைநண்டு உட்பட, மத்திய தரைக்கடலின் இயற்கைக்கு தொடர்பில்லாத 900 புதியவகை உயிரிகள் அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம் மட்டுமல்ல கப்பல் போக்குவரத்தும் நீரோட்ட மாற்றங்களும்கூட புதியவகை உயிரினங்கள் இங்கு வருவதற்கு காரணமாகும். அதேவேளை, அந்த உயிரினங்கள் மத்தியதரைக் கடலில் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைக் காரணம் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடல்சார் சூழலியல் மாற்றங்களே. மணலை, ஒட்டி ஓரா போன்ற மீனினங்கள் கூட வடக்கு மத்தியதரைக் கடல் பிரதேசங்களில் பிடிபடுகின்றன. பல மத்தியதரைக் கடல் நாடுகள் தற்போது வெள்ளை நண்டுகளை வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.  

நோர்வேயின் மீன்பிடிப் பொருளாதாரத்துக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருவது கானாங்கெளுத்தி (Mackerel) என நம் இந்திய தமிழ் மீனவ சகோதரர்களினால் அழைக்கப்படும் மீனினமாகும். இந்த மீனினம் நோர்வேயின் வடகடலின் (Nordsjoen) வடமேற்கு கரைகளிலே பிடிக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 20 வருடங்களாக நோர்வேயின் வடக்குக் கரையோரங்கள் சார்ந்த மீன்பிடித் தளங்களிலும் இவை (Fishing Banks) பெருமளவில் பிடிபடுகின்றன. இந்த மீனோடு, அத்திலாந்திக் கடலில் காணப்படும் சூரை மீன்களும் (Atlantic Bluefin Tuna) நோர்வேயின் வடக்குக் கடல் பிரதேசத்தில் பிடிக்கப்படுகின்றன. கடந்த 10 வருடங்களுக்கு முன்வரை சில 10 தொன்களையே பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தென் அட்லான்டிக் சூரைகள், தற்போது 2022 இல், 350 தொன்கள் பிடிப்பதற்கு நோர்வே  மீன்பிடி திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Mackerel

நோர்வேயில் வட கடலில் கானாங்கெளுத்தியும் (Mackerel) அத்திலாந்திக் சூரையும் (Atlantic Bluefin Tuna) பிடிபடக் காரணம் காலநிலை மாற்றமும் கடலின் வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றங்களுமே என நோர்வேயின் கடலியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த வகை மீன்களில் வருகை அதிகரித்திருப்பதனால் நோர்வேயின் மீன்பிடித் திணைக்களமும் மீனவ சமூகமும் இதற்கேற்றாற் போல தமது சட்டங்களையும் தொழில் முறைகளையும் மாற்றம் செய்து வருகின்றன.

இன்றுள்ள நிலையில் கடலட்டை வளர்ப்புப் போன்ற கடல்சார் விவசாயத்தில் ஈடுபடுவதுதான் ஒரே வழியென்று கூறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேலையை அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் கைவிடல் வேண்டும். எனது இந்த வாதத்தின் அர்த்தமாகப்பட்டது, விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் கடற்பொருள் உற்பத்தியை எதிர்ப்பதென்பது அல்ல. மாறாக, அந்த விஞ்ஞான முறைமைகளும் தொழில் முறைகளும், எமது கடலுக்கும் அது சார்ந்த சூழலுக்கும், கடலையே நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கும் ஒவ்வாது; ஒத்துவராது என்பதேயாகும்.

ஒரு சின்னஞ் சிறிய நாடான இலங்கையின் சில நூறு கிலோ மீற்றர் தூரம் கொண்ட கடற்கரைகளை தனியாருக்குத் தானம் கொடுத்து, பாரம்பரிய மீன்பிடியை பாழ்படச் செய்வதையே நாம் எதிர்க்கிறோம். இந்தக் கடல் விவசாயத் திட்டங்கள் தோல்வியில் முடிந்தால் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட, கடல் விவசாயத்துக்கான மூலப் பொருளான குஞ்சுகளை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அதன் ஏஜெண்டுகள் தமது உற்பத்தியை நிறுத்தினால், பலநூறு வருடங்களாக இயங்கிவரும் பாரம்பரிய மீன்பிடிக்கான உட்கட்டமைப்பை யார் மறுபடியும் உருவாக்குவது? 

சர்வதேச சீன மூலதனம் மற்றும் அதன் தொழில்நுட்பத்தில் செய்யப்படும் கடல் விவசாயம் ஒரு சிலரை பணக்காரர் ஆக்கலாம்; இலங்கை அரசுக்கு டொலரைப் பெற்றுக்கொள்ள உதவலாம். ஆனால், ஆயிரக்கணக்கான அன்றாடங் காய்ச்சி மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு யார் வழி வகுப்பது? இந்த நவீன கடல் விவசாயம் எந்த விதத்திலும் பரந்துபட்ட வருவாயை மீனவ சமூகத்துக்கு கொடுக்கப்போவதில்லை. வேண்டுமானால், கூலிகளாக வருடத்தில் சில நாட்கள் வேலை கொடுக்கலாம். மீதமான நாட்களில் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?

சீன ஆதரவினாலான கரையோரக் கடல் விவசாயத்தை தவிர்த்து, வடக்கு கிழக்கு மற்றும் இலங்கையின் கரையோரங்களில் தற்போது நிலவும் மீன்பிடித் தொழில், அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். மேலே நான் கூறியது போல, பல நாடுகள் செய்வது போல, புதிய கடல் உயிரிகளைப் பிடிப்பதும், அதை வர்த்தக ரீதியாக வெற்றியடையும் தொழிலாக மாற்றுவதற்குமான வழிகளைக் கண்டடைய அரசும், துறை சார்ந்த நிறுவனங்களும் முன் வரவேண்டும்

உசாத்துணை : 

சீன மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டை பற்றிய குறிப்புகள்

  1. The sea cucumber genome points to genes for tissue regeneration
    Sciencedaily.com. October 12. 2017 .
  2. Sea cucumber has modified genes to help it live on hydrothermal vents
    Michael Marshall .Nyscienctist. 11. October 2021
  3. Authentication of sea cucumber products using NGS-based DNA mini-barcoding
    Food Control ,Volume 129, November 2021, 108199
    HYPERLINK”//www.sciencedirect.com/science/article/abs/pii/S0956713521003376?via%3Dihub” \n _blank //www.sciencedirect.com/science/article/abs/pii/S0956713521003376?via%3Dihub .
  4. Life cycle assessment of sea cucumber production: A case study, China

HYPERLINK “//www.sciencedirect.com/topics/earth-and-planetary-sciences/environmental-pollution” \n _blankEnvironmental pollution caused by

HYPERLINK “//www.sciencedirect.com/topics/earth-and-planetary-sciences/aquaculture-production” \n _blankaquaculture production has become an increasing problem in China. In the present study,

HYPERLINK “//www.sciencedirect.com/topics/engineering/life-cycle-assessment” \n _blanklife cycle assessment (LCA) was used to evaluate and analyse the environmental impact of sea cucumber (Apostichopus japonicus) production in Dalian as an example for Chinese

HYPERLINK “//www.sciencedirect.com/topics/earth-and-planetary-sciences/aquaculture” \n _blankaquaculture cleaner production (CP) research.

Journal of Cleaner Production, Volume 213, 10 March 2019, Pages 158-164

HYPERLINK”//www.sciencedirect.com/science/article/abs/pii/S0959652618338514?fbclid=IwAR1573c-YUgISkwpUGLGvxhCOQ5WScZa2DUtCJBY9088K2AC2J9hD76W4os” \n _blankhttps://www.sciencedirect.com/science/article/abs/pii/S0959652618338514?fbclid=IwAR1573c-YUgISkwpUGLGvxhCOQ5WScZa2DUtCJBY9088K2AC2J9hD76W4os

  1. GMO white sea cucumbers could make costly Chinese delicacy affordable
    Crystal Tse,

HYPERLINK “//geneticliteracyproject.org/source/new-york-times/” \n _blankNew York Times August 7, 2015
Now, Chinese scientists say they have cracked the genetic code of the albino sea cucumber, opening the door to its mass production.

According to the report by the HYPERLINK “//english.qdio.cas.cn/” \n _blankInstitute of Oceanology, Chinese Academy of Sciences, in Qingdao, researchers who have been studying the genetic makeup of sea cucumbers have identified the gene responsible for albinism, and have begun producing genetically modified albinos. This year alone, it says, the scientists, led by HYPERLINK “//english.qdio.cas.cn/pe/fas/201105/t20110519_70022.html” \n _blankDr. Yang Hongsheng, have succeeded in breeding 150 million white sea cucumbers suitable for aquaculture.

HYPERLINK “//geneticliteracyproject.org/2015/08/07/gmo-white-sea-cucumbers-could-make-costly-chinese-delicacy-affordable/” \n _blank//geneticliteracyproject.org/2015/08/07/gmo-white-sea-cucumbers-could-make-costly-chinese-delicacy-affordable/

  1. Secrets of white sea cucumber to be revealed following genetic breakthrough
    Hannah Osborne, 08.05.2015 .

HYPERLINK “//www.ibtimes.co.uk/secrets-white-sea-cucumber-be-revealed-following-genetic-breakthrough-1514186” \n _blank//www.ibtimes.co.uk/secrets-white-sea-cucumber-be-revealed-following-genetic-breakthrough-1514186
To study the sea cucumber, Yang and his team produced the first genetic map of the creature. From this they were able to modify the gene responsible for albinism and produce 150 million baby white sea cucumbers.

இதர குறிப்புகளும் – ஆதாரங்களும்

  1. Prof.Mrs.Sivashanthini Kuganathan
    Sea cucumbers, Status and culture potential in the Jaffna Lagoon, Sri Lanka.
    University of Jaffna 2014.
  2. நடராசா லோகதயாளன். சீனாவின் அட்டைக் குஞ்சை நம்பியே வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகள். 13.11.2022. lanka news web
  3. Atlantic Bluefin Tuna , Thunnus thynnus (Linnaeus 1758)
    Aol.org

HYPERLINK “//eol.org/pages/46577336/articles?locale_code=no” \n _blankhttps://eol.org/pages/46577336/articles?locale_code=no

  1. Luca Castriota(ORCID), Manuela Falautano(ORCID), Teresa Maggio and Patrizia Perzia (ORCID)
    The Blue Swimming Crab Portunus segnis in the Mediterranean Sea: Invasion Paths, Impacts and Management Measures
    -Italian Institute for Environmental Protection and Research, Lungomare Cristoforo Colombo 4521 (Ex Complesso Roosevelt), Località Addaura, 90149 Palermo, Italy
    Biologi 2022.

5.Suthamathy Nadarajah and Ola flaaten ,August . 2022
GLOBAL AQUACULTURE GROWTH AND INSTITUTIONAL QUALITY
Norwegian College of Fishery Science, UiT-The Arctic University of Norway, N-9037 Tromsø, Norway.

  1. Fiskarlaget, 04.03. 2022
    FLERE FÅR TA STØRJA
    HYPERLINK “www.fiskarlaget.no” \n _blank www.fiskarlaget.no

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10959 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)