சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்
Arts
10 நிமிட வாசிப்பு

சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்

September 16, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

(ஜனவரி, 2025 இல் ‘சமஷ்டி அரசியல் முறைமைகள் : ஓர் அறிமுகம்’ எனும் நூல் ‘எழுநா’ வெளியீடாக வரவுள்ளது. அந் நூலிற்கான முன்னுரை இங்கே தரப்படுகிறது.) 

இத்தொகுப்பில் 10 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இக்கட்டுரைகள் ‘எழுநா’ இணைய இதழில் 2022 – 24 காலத்தில் தொடராக வெளியிடப்பட்டவை. அரசியல் யாப்புச் சட்டம், அரசியல் கோட்பாடு, உலகின் தேசிய இனங்களின் பிரச்சினைகள், முரண்பாடுகளை இணக்கமான முறையில் தீர்வு செய்தல் ஆகிய துறைகளின் புலமையாளர்களும், செயற்பாட்டாளர்களுமான அறிஞர்களால் இக்கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன. இவ் ஆங்கிலக் கட்டுரைகளின் கருத்துகளைத் தழுவி, இத் தமிழ்க் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஆசிரியர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்தம் புலமைத் துறைப் பங்களிப்புகள் பற்றிய குறிப்புகளும் இந்நூலின் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் சமஷ்டிமுறை செயற்பாட்டில் உள்ள நாடுகளாகும். இவற்றுள் பெல்ஜியம் முன்னர் ஒற்றையாட்சி நாடாகவிருந்து, பின்னர் சமஷ்டி முறையைத் தழுவி இன்று முன்னேற்றப் பாதையில் பயணிக்கின்றது. தேசிய இனங்களின் பிரச்சினைகளைத் தீர்வு செய்வதில் புதுமையான அரசியல் யாப்பு உபாயங்களைக் கையாண்டு, சமஷ்டி முறையைப் பரிசோதனை செய்து வரும் ஸ்பானியா தேசம் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஒற்றையாட்சி முறைக்கு இலக்கணமாகக் கூறப்பட்டு வந்த ஐக்கிய இராச்சியம், ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மூன்று பகுதிகளின் மக்களும் பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule), சுயாட்சி (Autonomy) ஆகியவற்றின் பயன்களைப் பெறக்கூடிய வகையில் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. சோவியத் ரஷ்யாவும், யூகோசிலாவியாவும் சமஷ்டி முறைமை தோல்வியடைந்த நாடுகளுக்கு உதாரணங்களாகும். சமஷ்டி முறைமை தோல்வியடைந்த இவ்விரு உதாரணங்களில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் எவை என்பது சிந்தனைக்குரியது.

மேலே குறிப்பிட்ட கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ரஷ்யா, யூகோசிலாவியா ஆகிய எட்டு நாடுகளின் அரசியல் யாப்பு வளர்ச்சி (Constitutional Development) வரலாற்றை விரிவாகவும், ஆழமாகவும் பகுப்பாய்வு செய்யும் ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியான பத்தாவது அத்தியாயம் ‘பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புகளை வரைதல் : பயனுள்ள சர்வதேச அனுபவங்கள் சில’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இக்கட்டுரை பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட சமூகங்கள் எதிர்நோக்கும் தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு, சமஷ்டி முறையிலான தீர்வு சாலவும் பொருத்தமானது என்பதைக் குறிப்பிடுவதோடு, பொருத்தமான அரசியல் யாப்புகளை வரைதல் பற்றி ஆராய்வதாகவும் உள்ளது.

சமஷ்டி அரசியல் முறைமைகள் – சொற்தொடர் விளக்கம்

இந்நூலின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ (Federal Political System) என்ற சொற்றொடரின் பொருளைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாகவிருக்கும் எனக் கருதுகிறோம். றொனால்ட்.எல். வாட்ஸ் என்னும் அறிஞர் இச்சொற்றொடரைப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.

“இது ஓர் விவரணக் கருத்துடைய சொற்றொடர். ஓர் அரசியல் முறைமை பற்றி இத்தொடர் விபரிக்கின்றது. ஒற்றை ஆட்சி முறையில் அரசியல் அதிகாரம் ஒரு இடத்தில் அதாவது மத்தியில் குவிந்திருக்கும். ஆனால் சமஷ்டி முறையில் அதிகாரம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பரவி இருக்கும் என்று இத்தொடர் விபரிக்கின்றது. வெவ்வேறு சமஷ்டி அலகுகளில் செயற்படும் சுயாட்சி (Self Rule) பற்றியும், யாவற்றுக்கும் பொதுவான நிறுவன அமைப்புகளில் செயற்படும் பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) பற்றியும் இத்தொடர் எடுத்துக் கூறுகிறது.“1

மேற்படி வரைவிலக்கணத்தில் கூறப்பட்டவற்றைத் தெளிவுபடுத்துதல் அவசியம்.

1. ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்னும் தொடர் விவரணக் கருத்துடையது (A Descriptive Term).

2. சமஷ்டி முறையில் அதிகாரம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பரவி இருக்கும். அரச அதிகாரம் மத்தியிலும் (Centre), மாநிலங்கள் – சுயாட்சிப் பிரதேசங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் பரவி இருத்தல் (Distribution of State Power) சமஷ்டி முறையின் முக்கிய இயல்பு.

3. மாநிலங்கள், சுயாட்சிப் பிரதேசங்கள் ஆகியன சுயாட்சி (Autonomy) உடையனவாக இருக்கும்.

4. சமஷ்டி அலகுகளிற்கு மத்தியில் உள்ள அரச நிறுவனங்களான பாராளுமன்றம், மேற்சபை போன்ற நிறுவனங்களிலும் அதிகாரம் இருக்கும். இதனை பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) என்ற சொல்லால் குறிப்பிடலாம்.

சமஷ்டி அரசியல் முறைகள் பலவகைப்பட்டவை. அவை யாவற்றுக்கும் பொதுவான அடிப்படை இயல்புகள் இவ்வரைவிலக்கணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமஷ்டி மாதிரிகள்

சுயாட்சி (Autonomy), பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) என்ற இரண்டு தேவைகளை சமஷ்டி அரசியல் முறை பூர்த்தி செய்கின்றது எனக் கண்டோம். சமஷ்டி அரசியல் முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சமஷ்டிகளிடையே காணப்படும் பொது இயல்புகள் என்னும் ஒற்றுமைகள் போன்றே அவற்றிடையே காணப்படும்  வேற்றுமைகளும் முக்கியமானவை. கனடாவின் சமஷ்டி முறையின் தனித்துவத்தை நாம் கண்டறிவதற்கு, அது பிறநாடுகளின் சமஷ்டியில் இருந்து எவ்வகையில் வேறுபடுகிறது என்னும் வேறுபாட்டையும் அறிதல் வேண்டும். இவ்வாறே இந்நூலில் ஆராயப்பட்டுள்ள ஒவ்வொரு சமஷ்டியும் தனித்தனி மாதிரிகள் (Models) என்று கூறத்தக்க வகையில் அமைந்துள்ளன. ஆகையால் நாம் சுவிஸ் மாதிரி, பெல்ஜியம் மாதிரி, கனடா மாதிரி, இந்திய மாதிரி எனப் பல்வேறு சமஷ்டி மாதிரிகளைப் (Federal Models) பற்றிப் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் நிறைய விடயங்கள் உள்ளன. இவ் விவாதங்கள் ஊடாக சமஷ்டி அரசியல் முறைகளின் அடிப்படையான அரசியல் யாப்புத் தத்துவங்களையும் (Constitutional Principles), அரசியல் கோட்பாடுகளையும் (Political Theories), உலகின் தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் விடுதலைக்கும் வழி வகுக்கக் கூடிய வழிமுறைகளைக் கூறுவதான சமஷ்டித் தத்துவங்களையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

இந்நூலில் ஒற்றையாட்சி நாடான ஐக்கிய இராச்சியத்தினைப் பற்றிய கட்டுரை ஒன்றினையும் சேர்த்துள்ளோம். ஐக்கிய இராச்சியம் நாம் மேலே சுட்டிக்காட்டியது போன்று சமஷ்டி முறைத் தீர்வுகளை ஒற்றையாட்சி முறைக்குள் புகுத்தி அந்நாட்டின் தேசிய இனங்களின் பிரச்சினையைத் தீர்வு செய்கிறது. ஐக்கிய இராச்சியம் குறித்த கட்டுரையின் ஆசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப் பகிர்வு (Devolution) உபாயங்களை “The Devolution in the United Kingdom: Unitary in Theory, Otherwise in Practice” என அழகாகக் குறிப்பிட்டார். இதன் பொருள், “கோட்பாட்டு அளவில் ஒற்றையாட்சியாகத் தோற்றமளிக்கும் ஐக்கிய இராச்சியம் யதார்த்தத்திலும் நடைமுறையிலும் வேறாக, சமஷ்டி என்று கூறத்தக்க நிலைக்கு மாறுகிறது” என்பதாகும்.

சமஷ்டி பற்றிய விரிவான வரையறைகள்

மேலே ‘சமஷ்டி அரசியல் முறைகள் – சொற்றொடர் விளக்கம்’ என்ற தலைப்பில் நாம் எடுத்துக் கூறிய சமஷ்டி பற்றிய வரைவிலக்கணம் அடிப்படையான (Basic) சமஷ்டிக் கூறுகளை மட்டுமே விளக்குகின்றது. ஆகையால் சமஷ்டி பற்றிய விரிவான வரைவிலக்கணம் ஒன்றையும் தருதல் அவசியம் எனக் கருதுகின்றோம். இவ் வரைவிலக்கணத்தை – றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் கூறியிருப்பவற்றைத் தழுவி பின்வருமாறு வகுத்துக் கொள்ள முடியும்.2

சமஷ்டியின் பொது இயல்புகள்:

1. இரு நிலைகளில் அரசாங்கம்:

சமஷ்டி முறையில் அரசாங்கம் இரு நிலைகளில் (Two Levels of Government) செயற்படும். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் என தெளிவான இரு நிலை அரசாங்கங்கள் செயல்முறையில் இருக்கும்.

2. பிரஜைகளுடன் நேரடித் தொடர்பு:

    இருநிலை அரசாங்கங்களும் பிரஜைகளுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருக்கும்.

    3. அரச அதிகாரம்:

    அரச அதிகாரம் (State Power) மத்தியிலும், மாநிலங்களிலும் பகிரப்பட்டிருக்கும். சட்ட ஆக்கம், நிர்வாகம், வரி விதிப்பு என்பன தொடர்பான அதிகாரங்கள் அரசியல் யாப்பின்படி பகிரப்பட்டிருக்கும். ஒவ்வொரு அரசுக்கும் உரிய அதிகார எல்லை வகுக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படும்.

    4. மத்திய நிறுவனங்களில் பிரதிநிதித்துவம்:

    மத்திய நிறுவனங்களில் மாநிலங்களிற்கு பிரதிநிதித்துவம் (Representation) இருக்கும். சட்ட ஆக்கத்திற்குப் பொறுப்பான அவையின் ஓர் அங்கமான மேற்சபையில் (Second Chamber) சமஷ்டியின் அலகுகளிற்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். இதன் மூலம் கொள்கை வகுக்கும் அதிகாரத்தினை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

    5. அரசியல் யாப்பின் மேலாண்மை:

    அரசியல் யாப்பு, யாவற்றுக்கும் மேலான சட்டமாக இருக்கும். அதனை ஒரு தலைப்பட்சமாகத் திருத்த முடியாது. மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டு அவற்றின் சம்மதத்துடன் தான் யாப்பினைத் திருத்தலாம். எல்லா மாநிலங்களினதும் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் மேற்சபையின் அங்கீகாரத்துடன்தான் அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும்.

    6. உயர் நீதிமன்றம்  – பிணக்குகளிற்கு தீர்ப்புச் சொல்லும் நடுவர்:

    சமஷ்டி நாடுகளில் உயர் நீதிமன்றம் சட்டமன்றத்திற்கோ, நிர்வாகத்திற்கோ கீழ்ப்பட்டதாக இருப்பதில்லை. அது இறையாண்மையுடைய சுதந்திரமான நிறுவனமாக அமைந்திருக்கும். சமஷ்டியின் உறுப்புகளான அரசுகளின் அதிகாரங்கள் தொடர்பான பிணக்குகளிற்கு தீர்ப்புச் சொல்லும் நடுவர் என்னும் வகிபாகத்தை உயர் நீதிமன்றம் பெற்றிருக்கும்.

    7. அதிகாரங்களின் மேவுகை:

    சமஷ்டிகளுக்கிடையிலே காணப்படும் பொது இயல்புகளை மேலே குறிப்பிட்டோம். சமஷ்டிகளுக்கிடையே உள்ள பொது இயல்புகளை மாதிரியாகக் கொண்டு தூய்மையான இலட்சிய மாதிரி (Pure or Ideal Model) ஒன்றை உருவாக்க முடியாது. அவ்வாறான தூய்மையான வடிவம் உலகின் எந்த நாட்டிலும் இருப்பதாகவும் கொள்ள முடியாது. சமஷ்டி முறைகளின் தோற்றம் ஒவ்வொரு தேசத்தினதும், வரலாற்றுச் சூழமைவுகளாலும், அவ்வத் தேசங்கள் எதிர் கொண்ட பிரச்சினைகளின் விசேட தன்மைகள் காரணமாகவும் தீர்மானிக்கப்படுபவை. இதனால் சமஷ்டிகள் பற்றிய ஒப்பீட்டாய்வில் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 

    சமஷ்டிகளுக்கிடையிலான வேறுபாடுகளில் முக்கியமானவை சில கீழே தரப்பட்டுள்ளன. 3

    1. சமஷ்டியின் உறுப்புகளாக உள்ள அரசுகள் எண்ணிக்கையில் சிலவாகவும் இருக்கலாம், பலவாகவும் இருக்கலாம்.
    2. சமஷ்டியின் பரப்பளவு, சனத்தொகை என்பன வேறுபடலாம்.
    3. அவற்றின் வளங்களும், பொருளாதார பலமும் வேறுபட்டதாக இருக்கலாம்.
    4. சமஷ்டி நாடுகளின் இனக்குழுமங்கள் ஒன்றா அல்லது பலவா, அவை பிரதேச ரீதியாக எப்படிப் பரவியிருக்கின்றன? என்பதில் வேற்றுமைகள் இருக்கும்.
    5. அரசின் பல மட்டங்களில் அதிகார மத்தியப்படுத்தல் (Centralisation) எவ்விதம் உள்ளது, அதிகாரம் பல்வேறு மட்டங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளதா, நிறுவனங்கள் சுயாதீனமாக உள்ளனவா, இல்லையா? என்ற விடயங்களில் வேறுபாடுகள் இருக்கும்.
    6. அரசின் பல மட்டங்களில் வளப்பங்கீடு (Distribution of Resources) எவ்வாறு உள்ளது என்பதில் வேறுபாடுகள் இருக்கும்.
    7. அரச அதிகாரம் சமஷ்டி அலகுகளில் பங்கிடப்பட்டிருப்பதில் சமத்துவம் உள்ளதா, அல்லது அசமத்துவம் (Asymmetry) உள்ளதா? என்பதைப் பொறுத்த வேறுபாடுகள்.
    8. சமஷ்டி நிறுவன அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கும். ஜனாதிபதி முறை உள்ளதா, அல்லது பாராளுமன்றமுறை உள்ளதா, அல்லது இரு வகைக்குள்ளும் அடங்காத கலப்பு முறை உள்ளதா?
    9. மேற்சபையின் கட்டமைப்பு எத்தகையது? அதன் அதிகாரங்கள் எந்த வகையின என்பதைப் பொறுத்த வேறுபாடுகள்.
    10. மாநில, மத்திய அரசுகளுக்கு இடையிலான கலந்தாலோசித்தல் (Consultation) எவ்விதம் நடைபெறுகிறது, ஒத்துழைப்பு (Collaboration) எவ்விதம் இடம்பெறுகிறது, அவற்றிற்கான நிறுவன ஒழுங்குகள் எவை? என்பன குறித்த வேறுபாடுகள்.
    11. நீதித்துறையின் கட்டமைப்பு அதிகாரங்கள் எப்படி உள்ளன, நீதி மீளாய்வுக்கு (Judicial Review) இடம் உள்ளதா? என்பதைப் பொறுத்த வேறுபாடுகள்.

    சமஷ்டிவாதம் சார்பாக

    சமஷ்டிவாதம் சார்பாக (In-defence of Federalism) அறிஞர்கள் முன்வைக்கும் வாதங்கள் பின்வருவன: 4

    1. சமாதானத்தை நிறுவுதல், மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல், பொதுவான உயர் விழுமியங்களைக் கட்டமைத்தல், பன்மைத்துவ ஜனநாயகத்தை (Plural Democracy) வளர்த்தல் என்பனவற்றுக்கு உதவும் உயர் இலட்சியங்களை உடையது ‘சமஷ்டிவாதம்’.
    2. மனிதர்களிடையே நிலவும் வேற்றுமைகளை அல்லது பன்மைத்துவத்தை (Diversity) ஏற்றுப் போற்றுவதோடு அதனைப் பாதுகாக்கின்றது.
    3. தேசிய மட்டத்தில் ‘தோல்வி அடைபவர்களாக’ (Losers at the National Level) இருந்து வரும் சிறுபான்மைத் தேசியங்களுக்குப் பிராந்திய மட்டத்தில் (Regional Level) ‘வெற்றியாளர்கள்’ ஆகும் வாய்ப்பை சமஷ்டி வழங்குகிறது.
    4. சமஷ்டி முறைமை, அரசியல் பங்கேற்பை (Political Participation) அதிகரிக்கிறது. மக்களுக்கு நீதியையும், நிவாரணத்தையும் பெறுவதற்கான பல நுழைவழிகளை அது திறந்து விடுகிறது. மக்களுக்கான தெரிவுகள் (Choices) பலவற்றை வழங்குகிறது.
    5. சமஷ்டிமுறை பல்வகையான புதிய பரிசோதனைகளுக்கு வாய்ப்பை வழங்குகிறது.
    6. அரசாங்கத்தை மக்களுக்குக் கிட்டியதாகக் கொண்டு வருகிறது. மக்களின் தேவைகளுக்கு விரைந்து உதவக் கூடியதாக நிர்வாகத்தை ஆக்குகிறது.

    நெருக்கடியிலுள்ள நாடுகளுக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சமஷ்டிவாதம் ‘மிகக் குறைந்த தீமைகள் உடைய தெரிவு’ (The Least Bad Option) எனலாம். இது வேறு எந்த மாற்று வழிகளையும் விடச் சிறந்த தெரிவாகும்.

    இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள கட்டுரைகள் சமஷ்டிவாதத்தின் மீது நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்ட அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டவை. அவற்றை ஒரு சேரத் தொகுத்துத் தமிழாக்கம் செய்து வழங்குவதில் நாம் மன நிறைவும் பெருமகிழ்வும் அடைகிறோம்.

    அடிக்குறிப்புகள்

    1. WATTS.RONALD.L, COMPARING FEDERAL SYSTEMS, QUEEN UNIVERSITY (2008) MONTREAL. 8 ஆம் பக்கத்தினைப் பார்க்க.
    2. மேலது  : 9 ஆம் பக்கத்தில் வாட்ஸ் சமஷ்டியின் பொது இயல்புகளை விபரித்துள்ளார்.
    3. மேலது : 19 ஆம் பக்கத்தில் சமஷ்டிகளுக்கிடையிலான வேறுபாடுகள் விபரிக்கப்பட்டுள்ளன.
    4. THE FEDERAL IDEA – READING MATERIALS PRESENTED BY THE CENTRE FOR POLICY ANALYSIS AND THE FORUM OF FEDERATIONS (பிரசுர ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்நூலின் 10 ஆவது பக்கத்தைப் பார்க்க.

    ஒலிவடிவில் கேட்க

    2691 பார்வைகள்

    About the Author

    கந்தையா சண்முகலிங்கம்

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

    அண்மைய பதிவுகள்
    எழுத்தாளர்கள்
    தலைப்புக்கள்
    தொடர்கள்
  1. September 2024 (11)
  2. August 2024 (21)
  3. July 2024 (23)
  4. June 2024 (24)
  5. May 2024 (24)
  6. April 2024 (22)
  7. March 2024 (25)
  8. February 2024 (26)
  9. January 2024 (20)
  10. December 2023 (22)
  11. November 2023 (15)
  12. October 2023 (20)
  13. September 2023 (18)
  14. August 2023 (23)