ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட
அரசு உருவாக்கச் செயல்முறையின் குறித்தவகைப் போக்கு ஒன்றாகவும், தனித்துவமான வரலாற்று அனுபவமாகவும் முன்னாள் சோவியத் யூனியனும் முன்னாள் யுகோசிலாவியாவும் விளங்குகின்றன. அங்கு முன்பு இருந்து வந்த அரசு முறை வீழ்ச்சியுற்றுப் புதிய அரசு உருவாக்கங்கள் மேற்கிளர்ந்தன. இவ்விரு நாடுகளும் புரட்சிக்குப் பிந்திய சமூகங்களாகவும் விசேடமான அரசு வடிவத்தைக் கொண்டனவாகவும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் உருவாக்கம் பெற்றன. இவ்வகையில் இந்நாடுகளின் அரசு உருவாக்க வரலாறு மேற்கு ஐரோப்பாவின் நவீன தேசிய அரசுகளின் தோற்ற வரலாற்றில் இருந்து வேறுபட்டது. மேற்கு ஐரோப்பாவின் நவீன தேசிய அரசுகள் 18ஆம் நூற்றாண்டு முதலாக குறிப்பிட்ட பிரதேச எல்லைகளுக்குள் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவால் உருவானவை. பின்னர் இந்தக் குறிப்பிட்ட பிரதேசங்கள் தேசியங்கள் (Nations) அல்லது தேசங்கள் என்ற நிலையை அடைந்தன.
இருபதாம் நூற்றாண்டில் உருவான சோஷலிச அரசுகளில் பல்தேசிய சமஷ்டி ஆட்சி, ஒற்றையாட்சி என்ற இருவேறு வகையான அரசு வடிவங்கள் இருந்தன. சோவியத் யூனியனும் யுகோசிலாவியாவும் இந்த அரசு வடிவங்களில் ஒன்றான பல்தேசிய சமஷ்டி அரசு மாதிரியில் தமது அரசுகளை உருவாக்கிக் கொண்டன. முதலில் இவ்விரு அரசு மாதிரிகள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.
1. பல்தேசிய சமஷ்டி அரசு மாதிரி (Multi National Federation): இம்மாதிரியான சமஷ்டி ஆட்சி முறை சமஷ்டித் தத்துவங்களின்படி உருவாக்கப்பட்டது. சோவியத் யூனியனும் யுகோசிலோவியாவும் இந்த மாதிரியில் அமைந்தவை.
2. தீவிர மத்தியப்படுத்தலைக் கொண்டவையான ஒற்றையாட்சி அரசுகள் (Highly Centralized Unitary States): கியூபா, வடகொரியா, போலந்து, ஹங்கேரி, ரோமானியா, சீனா ஆகிய புரட்சிக்குப் பிந்திய சமூகங்கள் இத்தகைய ஒற்றையாட்சி மாதிரியைக் கொண்டிருந்தன. ஒரு அரசுமாதிரி என்ற வகையில் இதனைப் புரட்சிக்கு பிந்திய சமூகங்கள் தனித்து தாமே உருவாக்கிய மாதிரிகள் என்று கூற முடியாது. ஏனெனில் இந்த ஒற்றையாட்சி மாதிரி, அரசு உருவாக்கம் பற்றிய மேற்கு ஐரோப்பிய வரலாற்று அனுபவத்தில் இருந்து தோன்றிய மாதிரியாகும்.
மேற்குறித்த இரு வடிவங்களை அடையாளம் காணமுடியுமாயினும், சோஷலிச அரசு மாதிரி இரு விசேட இயல்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. முதலாவதாக சோஷலிச அரசு ‘முதலாளித்துவ’ அரசில் இருந்து எவ்வகையில் வேறுபட்டது என்ற விடயம் அமைகிறது. இங்கே கவனிப்புக்குரியது அரசு முறையின் அரசியல் யாப்பு அம்சங்களோ அதன் சட்ட அம்சங்களோ அல்ல. அரசு முறையின் பொருளாதார சமூக ஒழுங்கமைப்பும் சொத்துடமை உறவுகளுமே முக்கியம் பெறுகின்றன. இந்த விடயம் தான் சோஷலிச அரசு மாதிரியின் இரண்டாவது விசேட அம்சம். அது சமஷ்டியில் இணைந்த அரசுகளிற்கு அதிக அளவு சுயாதீனத்தை (Autonomy) வழங்கியது. ஐரோப்பாவின் மரபுவழி சமஷ்டி மாதிரியில் காணப்படாத அம்சம் இது. போல்ஷெவிக் புரட்சியின் ஓராண்டு நிறைவில் 1918ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு சோவியத் ரஷ்யாவை ‘ரஷ்ய சோவியத் சமஷ்டிச் சோஷலிசக் குடியரசு’ (RSFSR) என்று குறிப்பிட்டது. மேலும் அச்சமஷ்டியில் உள்ளடங்கும்
தேசிய சிறுபான்மையினங்களிற்கு ‘தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் அதிகாரத்தையும், தேவையேற்படின் பிரிந்து செல்வதற்கான உரிமையையும்’ அரசியல் யாப்பு வழங்கியது. அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த உரிமையை சோவியத் யூனியனில் இணைந்து கொண்ட எந்தத் தேசிய இனமும் 1980க்கள் வரை பிரயோகிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது தனியாக ஆராயப்படவேண்டிய ஒரு கதை ஆகும். இது பற்றிச் சுருக்கமாக இக்கட்டுரையின் பிற்பகுதியில் குறிப்பிடுவோம். யுகோசிலாவியாவிலும் சோவியத் யூனியன் போன்றே சமஷ்டியில் இணைந்த அலகுகளிற்கு விரிவான சுயாதீன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
சமஷ்டியும் பிரிந்து போதலும்
சமஷ்டி பிரிந்துபோதலை ஊக்குவிக்கிறதா? இக்கேள்விக்குப் பதில் கூற முனையும் சமூக விஞ்ஞானிகள் இரண்டு வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளனர். சமஷ்டி அரசு முறைமை பற்றிய புலமைத்துறை ஆய்வுகள் சிலவும், கருத்தியல் நிலைப்பட்ட விமர்சனங்களும், பல் இனக்குழுமச் சமூகங்களில் (Multi – Ethnic Societies) சமஷ்டி அரசு முறை இறுதியில் சிறுபான்மை இனங்கள் பிரிவினையைக் கோரிப்பிரிந்து செல்வதான ஆபத்தைக் கொண்டுள்ளன, பிரிவினைக்கான படிக்கல்லாக சமஷ்டி அமைகிறது என்று குறிப்பிட்டன. சோவியத் யூனியனும், யுகோசிலாவியாவும், நைஜீரியாவின் முதலாவது குடியரசும் இனக்குழும பிரிவுகளின் அடிப்படையில் பிளவுபட்டபோது இந்தவகை வாதம் வலுப்பெற்றது. ‘இனக்குழும சமஷ்டி அரசு முறையின் பிரிந்தழியும் உள்ளாற்றல்’ (ETHNOFEDERALISM STATE DISSOLVING POTENTIAL) என்ற அம்சத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்குச் சமஷ்டி முறையின் விமர்சகர்களுக்குப் புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தன (Hale 2005:56) இந்தவாதத்தினை மறுத்துரைப்போரின் நோக்குமுறை சமஷ்டி முறையில் தேசிய அரசும், ஜனநாயகமும் பாதுகாக்கப்படுகின்றன என்ற கருத்தை முன்வைத்தது. இந்தியாவும் ஸ்பெயினும் சில பின்னடைவுகளை எதிர்கொண்டபோதும் அவை சமஷ்டி முறையின் வெற்றிக்கு உதாரணங்களாகும். இந்த நேர்முறை உதாரணங்களிலும் கூட பிராந்திய சுயாதீனம் (Regional Autonomy) என்ற விடயம் பிரச்சினைக்குரியதாகவே இருந்துள்ளது. இனக்குழுமங்களின் கிளர்ச்சிகள், கூடியளவு பிராந்திய சுயாதீனத்தைக்கோரும் இயக்கங்கள், பிரிவினைவாத இயக்கங்கள் என்பன இந்நாடுகளில் தோன்றின. இவ்விரு நாடுகளிலும் இன்றுவரை இனக்குழும கிளர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பல உபாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. பலவீனமான அரசியல் தீர்வுகள், கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் என்ற இரண்டு உபாயங்களின் வழியாக இவை கட்டுப்படுத்தப்பட்டன.
சமஷ்டி பிரிவினையைத் தூண்டுகிறது என்ற வாதத்தை பரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம் அன்று. சோவியத் யூனியனிலும் யுகோசிலாவியாவிலும் குறிப்பிட்ட வகையான அரசு – சிறுபான்மை இன உறவுகள் (State – Minority Relations) உருவாகின. இந்த உறவுகள் பின்னர் பிரச்சினைகளை உருவாக்கின. இப்பிரச்சினைகளினால் சோவியத் யூனியனின் சமூக – பொருளாதார முறைமை முற்றாகச் சிதைந்து அழிவுற்றது. யுகோசிலாவியா சிவில் யுத்தம் ஒன்றினால் சிதைவுற்றுப் பிளவுபட்டது ஆகிய விடயங்களை இக்கட்டுரையில் நான் விபரித்துக் கூறவுள்ளேன்.
தேசிய இனங்களின் பிரச்சினை: லெனினிச – சோவியத் நோக்குமுறைகள்
சோவியத் யூனியன், யுகோசிலாவியா என்ற இரண்டு தேசங்களும் அரசையும் தேசத்தையும் கட்டியெழுப்பும் பணியில் பரிசோதனைகளை நிகழ்த்தின. இப்பரிசோதனைகள் வரலாற்றுநோக்கில் புதுமையானவை. இரு தேசங்களிலும் புரட்சிக்குப்பிந்திய அரசு உருவாக்கம் நிகழ்ந்தது. இதில் மார்க்சிஸ்டுகள் கருத்தியல், அரசியல் தலைமையினை வழங்கினர். தேசிய இனப் பிரச்சினை (National Question) என்ற விடயத்தில் மார்க்சிஸ்டுகள் மிகுந்த உணர்வுபூர்வமான அக்கறை கொண்டிருந்தனர். மார்க்சிய அரசியல் பகுப்பாய்வில் தேசிய இனப் பிரச்சினை குறிப்பிட்டதொரு அர்த்தத்தை உடையதாக இருந்தது. ஐரோப்பாவிலும் எல்லா காலனித்துவ சமூகங்களிலும் தேசியம், அரசு ஆகியவற்றின் கட்டமைப்பில் முடிவுறாத, நிறைவு செய்யப்படாத செயல்முறைகளை இது குறிப்பதாக இருந்தது. ‘தேசியம்’ ஐக்கியப்படுத்தப்படாமை, தேசியத்துடன் சிறுபான்மை இனக்குழுமங்களும் பண்பாடுகளும் ஒருங்கிணைவு பெறாமை,
சிறுபான்மை இனக்குழுமங்களிற்குப் பாரபட்சம் காட்டுதலும், அவற்றை ஒடுக்குதலும் ஆகியன இம்முடிவுறாத, நிறைவு செய்யப்படாத செயல்முறைகளாகக் கருதப்பட்டன. தேசிய இனப்பிரச்சினையைத் தீர்வு செய்தல் சோஷலிசப் புரட்சியின் உடனடியான பணியென்று மார்க்சிஸ்டுகள் கருதினர். பின்தங்கிய முதலாளித்துவ சமூகங்களிலும் காலனித்துவ சமூகங்களிலும் பூஷ்வா ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிறைவு செய்யப்படாத பணி ஒன்று உள்ளது. இப்பணியை பாட்டாளி வர்க்கப் புரட்சி நிறைவேற்ற வேண்டும் என்ற வாதமொன்று இருபதாம் நூற்றாண்டில் புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில் முன்வைக்கப்பட்டது.
சோவியத் அரசியல் யாப்புச் சிந்தனையின் வழிகாட்டும் கோட்பாடாகவும், கருத்தியல் கொள்கையாகவும் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்னும் தத்துவம் விளங்கியது. இத்தத்துவம் நவீன அரசியல் இனக்குழும உறவுகள் எப்படி அமைதல் வேண்டும் என்பது பற்றிய லெனினிச எண்ணக்கருவாகும். இருப்பினும் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்னும் அரசியல் எண்ணக்கரு முதலாம் உலகயுத்தத்தின் முடிவில் உருவானதொன்றாகும். ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த வூட்ரோவில்சன், புரட்சிக்குப் முந்திய ரஷ்யாவில் போல்செவிக் கட்சியின் தலைவராக விளங்கிய வி.ஐ. லெனின் என்ற இருவரும் இந்த அரசியல் எண்ணக்கருவின் பிரதான கருத்தாக்களாவர். முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் வல்லரசுகளின் நாட்டெல்லைகள் பற்றிய கோரிக்கைகளிற்கான தீர்வு முக்கிய தேவையாயிற்று. இத்தீர்வுக்குச் சுயநிர்ணய உரிமை என்ற தத்துவத்தை வூட்ரோவில்சன் முன்வைத்தார். அவரின் நோக்குமுறை வல்லரசு நாடுகளின் நோக்கு முறையில் அமைந்திருந்தது. சுயநிர்ணய உரிமை என்ற எண்ணக்கரு 19ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அக்காலத்தில் ஒட்டோமன் (துருக்கி), ஒஸ்திரியா, யேர்மனி, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களின் கீழ் வதைபட்ட சிறுபான்மை இனங்களின் எதிர்ப்புக்குரலாக சுயநிர்ணய உரிமை என்ற கருத்து உருவாகியது. அன்று அக்கருத்து தெளிவற்ற ஒன்றாகவும் இருந்தது. பின்னர் முதலாம் உலகயுத்தத்தின் முடிவில் மேற்குறித்த சாம்ராஜ்யங்களில், ஒட்டோமன், ஒஸ்திரியா, ஹங்கேரி என்ற இரண்டும் சிதைவுற்றன. இதனால் ஐரோப்பாவின் நிலவியல் வரைபடத்தை மீள் வரையும் தேவையொன்றும், அவ்வாறு மீளவரைவதற்கான எண்ணக்கரு ஆதாரம் ஒன்றும் தேவைப்பட்டன. போரில் வெற்றி பெற்ற வல்லரசு களுக்கு ஐரோப்பாவின் எல்லைகளை மீள்வரைவு செய்வதற்கு ஒரு கருவி தேவைப்பட்டது. சுயநிர்ணய உரிமை அதற்கான கருவியாக அமைந்தது என்று ஹனும் (Hannum) (1990 .27.28) கூறியிருப்பது மிகச் சரியான ஒரு மதிப்பீடாகும். 1918ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா காங்கிரஸின் முன் ஆற்றிய உரையில் வூட்ரோவில் சன் புகழ்பெற்ற பதினான்கு அம்சத்திட்டம், என்பதை முன்மொழிந்தார். நாடுகளின் எல்லைகளை வரைவதற்கான முறையொன்றாக அவர் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை உபயோகித்துத் தனது திட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். இதன்படி நாடுகளின் எல்லைகளை மீள்வரைவு செய்வதோடு ஒஸ்திரியா ஹங்கேரி, ஒட்டோமன் சாம்ராஜ்யங்களின் அழிவில் இருந்து புதிய சுதந்திர அரசுகள் உதயமாவதற்கும் வழிவகுக்கப்பட்டது. வல்லரசுகளின் இந்தத் திட்டத்தின்படி அன்று தனித்த நாடு ஒன்றை பெற்றுக்கொள்ளும் உரிமை அதனை விரும்பிக்கேட்ட அனைத்துத் தேசியங்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருந்ததென்று கூறமுடியாது. வல்லரசுகளின் விருப்பத்தின்படியே இந்த உரிமை அன்று தீர்மானிக்கப்பட்டது. எவரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன,எவரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன, வெற்றியாளர்கள் யார்,தோல்வியுற்றோர் யார் என்ற விடயங்களின் தீர்மான சக்தியாக வல்லரசுகளே விளங்கின. வல்லரசுகளின் அரசியல் லாப நட்டக் கணக்குத்தான் முக்கியம் பெற்றது. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளில் எந்த மக்களின் கோரிக்கைகள் வலுவானவை என்பது கவனத்தில் கொள்ளப்பட வில்லை. (ஹனும் 1990:28).
வல்லரசுகளின் நோக்குமுறையில் இருந்து லெனினிச நோக்கு தெளிவான வேறுபாட்டைக் கொண்டிருந்தது. ஐரோப்பாவில் அன்று சாம்ராஜ்யங்களின் கீழ் ஒடுக்கமுறைக்கு உள்ளான தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தை லெனின் ஆதரித்தார். சிறுபான்மை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய லெனினிச தந்திரோபாயத்தில் மூன்று தந்திரரோபாயக் கருத்துக்கள் உள்ளடங்கி இருந்தன. இவை வரலாற்றின் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிரயோகிக்கப்படக் கூடியவை என்றும் கருதப்பட்டது. முதலாம் உலக யுத்தம் தொடங்கிய வேளையில் லெனின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தை ஆதரித்தார். ஆனால் மார்க்சிஸ்டுகளில் பலர் இதனை எதிர்த்தனர். பல்தேசியங்களைக் கொண்ட சாம்ராஜ்யங்களைப் பிரித்து, அவற்றுள் இருந்து புதிய தேசங்களை உருவாக்குவதன் மூலம் பின்னடைவில் இருந்து நாடுகள் விடுபடலாம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான முன்நிபந்தனை என்ற கருத்தை லெனின் கூறினார். முதலாளித்துவத்திற்கான அடிப்படை ஒழுங்கு விதியைத் தேசிய அரசு வழங்குகிறது. பல்தேசிய அரசுகள் பொருளாதாரப்பின்னடைவை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவை வளர்ச்சிக்கு மாறானவை. தேசியங்களின் நோக்கில் பார்க்கும் போது தேசிய அரசு மட்டுமே முதலாளித்துவ வளர்ச்சிக்குக் தேவையான அடித்தளத்தை உருவாக்கக்கூடியது. இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. (லெனின் 1972:303) ‘தேசியங்களின் சுய நிர்ணயத்திற்கான உரிமை’ என்ற அரசியல் கண்டனப் பிரசுரத்தில் லெனின் 1914ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு வாதத்தை முன்வைத்திருப்பதைக் காணலாம்.
தேசியங்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்தல் என்ற கொள்கையின் இரண்டாவது நிலைப்பாடு தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் தந்திரோபாயத்துடன் சம்மந்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக லெனின் இதனைக் கருதினார், பொதுவான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ஒரு தேசத்தின் எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையை நிலைநிறுத்தித் தம் விடுதலையை பெற்றுக் கொள்ளலாம் என்பதே லெனின் கருத்தாகும். பாட்டாளி வர்க்கம் காலனிகளின் அரசியல் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் போராடுவதோடு ‘தமது தேசியத்தால்’ ஒடுக்கப்படும் பிறதேசியங்களுக்காகவும் போராடுதல் வேண்டும். அல்லாவிடில் பாட்டாளி வர்க்கத்தின் சர்வ தேசியம் என்ற கொள்கை வெற்று வார்த்தைகளாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் ஒடுக்கும் தேசிய இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையோ, வர்க்க ஐக்கியமோ உருவாகுதல் இயலாது. Lenin (1916) 1964: 148 -149).
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்பதன் மூன்றாவது அம்சமாக, 1917 ஆம் ஆண்டில் புரட்சிக்குப் பின்னர் போல்ஷெலிக் கட்சி ஏற்றுக் கொண்ட சமரசக் கொள்கை அமைகிறது. சமத்துவத்தின் அடிப்படையிலான சமஷ்டிக் கொள்கைக்கு அமைவாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கும் அரசு முறையை உருவாக்குவதே இச்சமரச முடிவாகும். சமஷ்டி அரசு தேசிய இனங்களின் சுயமான கூட்டிணைவு என்று கூறப்பட்டது. அவை பிரிந்து போவதற்கான உரிமையைக் கொண்டவை என்றும் கூறப்பட்டது. இருந்தபோதும் இந்த உரிமையைச் சோவியத் சமஷ்டியின் எந்த அலகும் பிரயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இது பற்றி நாம் இக்கட்டுரையில் பின்னர் விபரிப்போம்.
அரசு: லெனினிச சோவியத் நோக்குமுறைகள்
சமஷ்டியில் இணைந்துள்ள அலகுகளிற்கு ஆகக் கூடிய சுயாதீனத்தை வழங்குவதாக லெனினுடைய அரசுக்கொள்கை அமைந்தது. 1919இல் லெனின் சமஷ்டி, சுயநிர்ணய உரிமை என்ற இரண்டிற்கும் இடையிலான சமரசத்தைச் செய்து கொண்ட போது, அலகுகளின் சுயாதீனம் என்பது அவரது கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. இருப்பினும் புரட்சிக்குப் பிந்திய காலத்தில் லெனின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. தேசியங்கள், தேசிய சிறுபான்மை இனங்கள் சிறுபான்மை இனக்குழுமங்கள் என்பனவற்றின் சுயநிர்ணய உரிமையை புரட்சிக்குப் பிந்திய அரசு நிராகரிக்கலாம் என்ற கருத்து உட்கிடையாக அவருடைய நிலைப்பாட்டில் அமைந்திருந்ததைக் காணமுடியம். அரசியல் யாப்பு பற்றிய லெனினிச விளக்கம் இரு அம்சங்களைக்கொண்டது. சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில் அரசை மறுசீரமைப்புச் செய்தல், தேசிய இனங்கள் சுயாதீனமாகத் தன் விருப்பப்படி சமஷ்டியில் இணைதலும், சுயாதீனமாகப் பிரிந்து போதலும் என்பனவே இவ்விரு அம்சங்கள். இக்கொள்கை அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டிருந்த போதும் இதற்கு மாறான மத்தியப்படுத்திய கட்டுப்பாட்டை வலுப்படுத்தலுக்கான உந்துதல் ஒன்றும் செயற்பட ஆரம்பித்தது. இதன் காரணமாக சமஷ்டியில் இருந்து எந்த ஒரு தேசியமும் பிரிந்து போவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, கோட்பாடும் கருத்தியலும், சூழ்நிலைக் காரணிகள் என்ற விடயங்களால் தீர்மானிக்கப்பட்டது.
சோஷலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கருவியாக அரசு நோக்கப்பட்டது. அரசு பற்றிய இந்நோக்கு மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கான கருத்தியல் உந்தலாக விளங்கியது. 1917 ஆம் ஆண்டில் லெனின் ‘அரசும் புரட்சியும்’ என்ற தலைப்பிலான பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரம் சோஷலிசத்திற்கான மாற்றத்தில் அரசின் பங்கு என்பதன் அர்த்தம் யாது என்பதை விளக்குவதாக இருந்தது. அரசு பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கான கருவி, பாட்டாளி வர்க்கம் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றிய பின்னர் முன்பு இருந்த அரசு யந்திரத்தை உடைத்து நொருக்கி அதனிடத்தில் புதிய ‘அரசு யந்திரத்தை’ நிறுவுகிறது. உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுதல், பாட்டாளி வர்க்கப் புரட்சியைப் பாதுகாத்தலும் அதனைப் பலப்படுத்தலும், தனியார் உடைமையாக இருந்து வரும் உற்பத்திச் சாதனங்களை சமூகப் பொதுவானதாக ஆக்கி, காலப்போக்கில் வர்க்க வேறுபாடுகளை ஒழித்தலும் என்பன புதிய அரசின் மிக முக்கியமான பணிகள் என்று கருதப்பட்டன. இந்த விளக்கத்தின்படி பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பயனாக ‘அரசுதானாகவே ஒழிந்து போகும்’ என்ற கருத்து ஏற்புடையதல்ல, மாறாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பின்னர் ஏற்படுத்தப்படும் சோஷலிசம் முதலாளித்துவத்திற்கும். கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலைமாற்ற கட்டமே என்றும், இந்நிலைமாற்ற கட்டத்தில் சோஷலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மிகப் பலம் மிக்கதும், தலையீடு செய்வதுமான அரசு (Interventionist State) அவசியம் என்றும் கூறப்பட்டது.
புரட்சிக்குப் பிந்திய ரஷ்யா எதிர் நோக்கிய வரலாற்றுச் சூழ்நிலை (Context) மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை நியாயப்படுத்திய இரண்டாவது காரணியாக விளங்கியது. புரட்சிக்கு பிந்திய ரஷ்யாவின் சோஷலிச அரசு உள்ளிருந்தும், நாட்டிற்கு வெளியில் இருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. இதனை விட அரசு புரட்சியைப் பலப்படுத்துவதற்குச் செய்ய வேண்டிய பல அவசர பணிகள் இருந்தன. புரட்சியின் பிந்திய கட்டத்தில் சோவியத் யூனியன் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. இதனால் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) என்னும் திட்டம் அரசினால் அமுல்படுத்தப்பட்டது நாட்டில் சிவில் யுத்தம் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து கூட்டு பண்ணைகளை அமைக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது இவ்வாறான வரலாற்றுப் பின்புலத்தில் சோவியத் சமூகத்தின் மிகப் பெரிய சர்வாதிகார நிறுவனமாக அரசு உருவாக்கம் பெற்றது சோஷலிச அரசுக்கட்டமைப்பில் ஆளும் கட்சியும் அரசும் ஒன்றிணையும் போக்கு வெளிப்பட்டது. இக்காலத்தில் போல்ஷெவிக் கட்சி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (CPSU) என்று பெயர் மாற்றம் பெற்றது. ஆளும்கட்சியும் அரசும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டன. சோவியத் அரசு. முறையின் பிரத்தியேக இயல்பாக இப்பிணைப்பு அமைந்தது. ஸ்டாலின் காலத்தில் கட்சியினதும் அரசினதும் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான தந்திரோபாயமாக பயங்கரவாத முறைகள் உபயோகிக்கப்பட்டன. சோவியத் யூனியன் வரலாற்றில் இக்கட்டம் சர்வாதிகார அரசு முறையின் உருவாக்க காலம் ஆகும். கட்சி – அரசு பிணைப்பு வலுப்பட்ட இக்காலத்தில் இனக்குழுமங்களுடனான உறவுகளும் மாற்றமடைந்தன. இது பற்றிப் பின்னர் இக்கட்டுரையில் எடுத்துக் கூறுவோம்.
தொடரும்.