தொடக்கக் குறிப்புகள்
சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் இன முரண்பாட்டின் கதையாடலில் சில முக்கியமான வரலாற்றுப் புள்ளிகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறுபட்ட விளைவுகளையும் உரையாடல்களையும் ஏற்படுத்தின. அவ்வாறான ஒரு வரலாற்றுப் புள்ளியே சுதந்திரத்துக்கு பிந்தைய இலங்கையில் தேசத்தின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்கவினால் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள். இவை அபிவிருத்தியின் பெயரால் முன்னெடுக்கப்பட்டன. நெற்பயிர்ச் செய்கையை அதிகரிப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவது, நிலமற்ற மக்களுக்கு நிலத்தை வழங்குவது, உலர் வலயத்தை விவசாயத்துக்குரியதாக மாற்றுவது போன்ற நோக்கங்களை முன்னிறுத்தியே இந்த குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் முதன்மையானது, கல்ஓயா திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் விவசாயம் சார்ந்தவை எனக் கூறப்பட்ட போதும் இத் திட்டத்தின் கீழ் காடுகள் அழிக்கப்பட்டு வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு உருவான பகுதிகளில் சிங்களவர்களே பெரும்பாலும் குடியமர்த்தப்பட்டார்கள். இது இந்தக் குடியேற்றத் திட்டத்தின் நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கியது. இன்று வரை கல்லோயா திட்டம் உட்பட்ட குடியேற்றத் திட்டங்கள் நாட்டின் வடக்குக் கிழக்கில் தமிழரின் குடிப்பரம்பல் செறிவை மாற்றியமைக்கும் நோக்குடையவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக அரசாங்கங்களின் தொடர்ச்சியான நடத்தை இருந்து வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தப் பின்புலத்தில் மூன்று கேள்விகளை இக்கட்டுரை ஆராய விழைகிறது. (1) இந்தத் திட்டங்களினூடு நடந்த பௌதீகவியல் மாற்றங்கள் என்ன? (2) இவற்றின் சூழலியல் பாதிப்புகள் என்ன? (3) இத் திட்டங்கள் எதிர்பார்த்த பொருளாதார, சமூகப் பலனைக் கொடுத்தா? இம் மூன்றையும் ஆராய்வதன் ஊடு இத்திட்டங்களின் உண்மையான நோக்கம் என்ன? என்ற வினாவை மீண்டும் எழுப்ப முனைகிறது. அரசாங்கங்கள் உண்மையிலேயே அபிவிருத்தி நோக்கங்களுக்காக இக் குடியேற்றங்களை உருவாக்கியதா அல்லது இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டதா? என்ற கேள்வியை இன்னொரு பரிமாணத்தில் ஆராய இக்கட்டுரை முயல்கிறது.
வரலாற்று வழி நின்று உலர் வலயத்தை மீளாய்தல்
குறித்த குடியேற்றத் திட்டங்கள் நாட்டின் உலர் வலயத்தையே மையப்படுத்தின. உலர் வலயத்தின் வரலாறு இரண்டு விடயங்களுக்கு முக்கியமானது. முதலாவது, அங்கு வாழ்ந்த சனத்தொகை தொடர்பான விடயங்களை தெரிந்து கொள்ளல். இரண்டாவது அப்பகுதியில் எவ்வகையான வாழ்வாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிதல். இலங்கை குறித்த பல வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளரான பட்ரிக் பீப்பிள்ஸ் “உலர் வலயத்தின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் நவீன மாற்றம் ஒரு கண்கவர் வரலாற்று நாடகமாகும். சிங்களவர்களும் தமிழ் உயரடுக்கினரும் பயன்படுத்தும் தொன்ம மயமாக்கப்பட்ட வரலாற்று வாதங்கள் அண்மைக்கால அரசியலின் விஷயமாகும். ஆனால் அவை வரலாற்றுடன் சிறிதும் சம்பந்தப்படவில்லை” என்று உலர் வலயத்தின் அரசியல் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார்.
பருவமழைகள் போதுமான மழைவீழ்ச்சியைத் தருவதோடு 83 சிறிய ஆறுகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. பழங்கால இலங்கையர்கள் இந்த நீரோட்டத்தை புத்திசாலித்தனமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களில் சேமித்தனர். அதேவேளை கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தொடங்கி நெல்லைப் பரவலாக பயிரிட்டனர். மலைகள் மற்றும் தென்மேற்குப் பகுதிகளை நோக்கிய மக்களின் இடம்பெயர்வு மிகவும் மெதுவாக நடந்தது. அந்தப் பகுதிகளை நோக்கிய நகர்வு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே நிகழ்ந்தது. அவ்வாறு அப்பகுதிகளில் குடியேறியோர், தாம் வாழ்ந்த மேட்டுப் பகுதிகளிலோ அல்லது அதிக மழை பெய்யும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளிலோ நிலத்தைப் பயன்படுத்தும் நுட்பத்தை உருவாக்கவில்லை. உலர் வலயத்திலேயே விவசாயம் செழிப்புற்று இருந்தது.
அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட ஒரு அரசு பல நூற்றாண்டுகளாக இந்த நீர்ப்பாசன முறையைப் பராமரித்து வந்தது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பு தலைநகரை பொலனறுவைக்கு மாற்றும் வரை உலர் வலயப் பிரதேசமான அனுராதபுரமே தலைநகராக இருந்தது. பொலனறுவையும் உலர்வலயப் பிரதேசமே என்பதும் கவனிப்புக்குரியது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தலைநகர் உலர்வலயத்தை விட்டு இடம்பெயர்ந்தது. நிர்வாகச் சீர்கேடுகள், புதிய படையெடுப்புகள், மலேரியா என்பன இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இங்கு கவனிக்கப்படாத அம்சம் யாதெனில் உலர்வலயத்தில் இருந்து நகர்வதற்கு காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்க முடியும். ஆனால் அது தொடர்பான குறிப்புகளோ ஆய்வுகளோ மிகக்குறைவு.
அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட பிரதேசமானது அடர்த்தியாக சனத்தொகை கொண்ட பிரதேசமாக இருந்திருக்க வேண்டும். அப்பகுதியின் பாரிய நீர்ப்பாசன கட்டுமானங்களும் வரன்முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட நீர்ப்பாசன ஒழுங்கமைப்புகளும் இதை உறுதி செய்கின்றன. பொலனறுவை இராசதானி அனுராதபுரம் போல் பெரிய சனத் தொகை கொண்டதாக இருந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு. அனுராதபுரம் போல பொலனறுவையிலும் நீர்ப்பாசனக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அளவும் ஒழுங்கமைப்பும் இயங்கியலும் அனுராதபுரத்தை விட சனத்தொகை குறைந்த பகுதியாகவே பொலனறுவையைச் சுட்டுகிறது.
பத்தாம் நூற்றாண்டில் 4 ஆவது கஸ்ஸப்ப மன்னன் நோய்களிலிருந்து காப்பாற்ற மருத்துவமனையைக் கட்டினான் என்ற குறிப்பும் 5 ஆவது கஸ்ஸப்ப மன்னன் மதுரை நோக்கிப் படையெடுத்த தனது படைகளை நோய்த்தொற்றின் காரணமாக திருப்பி அழைத்ததான குறிப்பும் கிடைக்கின்றன. இந்நோய் பற்றிய குறிப்புகள் இல்லை. ஒருவேளை இது மலேரியாவாக இருந்திருக்கக் கூடும். அதன் காரணமாகவே தலைநகரைக் கைவிட நேர்ந்திருக்கலாம். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் விரிவான நீரேந்து பகுதிகள் மலேரியா நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்பானவை. நிர்வாகச் சீரழிவு காரணமாகப் பேணப்படாத நீர்நிலைகள் மலேரியா நுளம்புகளின் நிரந்தர வாழ்விடமாகி மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கக் கூடும்.
இவ்வாறு தொடங்கிய மலேரியா நோய்த் தொற்று சில நூற்றாண்டுகள் தொடர்ந்து உலர்வலயத்தின் சனத்தொகை படிப்படியாகக் குறைவதற்கு வழிவகுத்தது. இதே காலப்பகுதியில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குக் கரைகளிலும் ஈரவலயத்திலும் சனத்தொகை மெதுமெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. பருவமழையின் விளைவால் ஈரவலயத்தில் மலேரியா நுளம்புகளுக்குத் தேவையான அசுத்தமான நீர் தேங்குமிடங்கள் மிகக்குறைவாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுண்துளை சுண்ணாம்புக் கற்கள் தேங்கி நிற்கும் குளங்களை உருவாக்க அனுமதிக்காது. இதனால், குறைந்த அளவில் மலேரியா பரவும் இடங்களில் மக்கள்தொகை மையங்கள் எழுந்தன. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தரைத்தோற்ற இயல்பினடிப்படையிலான நிலத்தடி நீரின் காரணமாக வரம்பற்ற நீர் வழங்கல், கிணற்றுப் பாசனம் மற்றும் சுழற்சிப் பயிர்ச்செய்கை முறையின் வளர்ச்சி ஆகியன தீவிர விவசாயத்தை சாத்தியமாக்கியது.
இதைத் தொடர்ந்த காலப்பகுதியில் கொலனியாதிக்கங்களின் வருகை உலர்வலயத்தை மக்கள் முழுமையாகக் கைவிட்டு ஈரவலயத்திற்கும் கரையோரங்களுக்கும் செல்வதற்கு வழிவகுத்தது. 1818 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் மக்கள் சிறிது சிறிதாக உலர் வலயங்களுக்கு நகரத் தொடங்கினர். 1815 இல் முழு இலங்கையும் பிரித்தானியர் வசமானதன் பின்னர் இலங்கையின் நிர்வாக அலகுகளை மீள வரையறுத்து நிர்வாக மாற்றங்களை கொலனிய நிர்வாகம் மேற்கொண்டது (படம்:1). குறிப்பாக கண்டிய இராச்சியத்தின் எல்லைகளை மீள ஒழுங்கமைத்து சிறிய மத்திய மாகாணத்தையும் நான்கு கரையோர மாகாணங்களையும் உருவாக்கினர். தமன்கடுவ பலாடாவின் கண்டிப் பகுதி (இப்போது பொலன்னறுவை மாவட்டம்) கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் நுவர கலவிய (இப்போது அனுராதபுரம் மாவட்டம்) வடக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. கண்டியின் உயரடுக்கினரை வலுவிழக்கச் செய்து அனைத்தையும் நேரடியாக மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உள்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க கொலனிய நிர்வாகம் விரும்பியது.
நுவர கலவிய மற்றும் தமங்கடுவ ஆகிய பகுதிகளிலிருந்து 1873 இல் வட மத்திய மாகாணத்தை உருவாக்குவதன் மூலம் பிரித்தானிய கொலனியவாதிகள் உலர் வலயத்தை அபிவிருத்திக்கு திறந்தனர். பண்டைய தலைநகரங்களுக்கு அருகாமையில் நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்ற வசதிக்காக 1878 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் உள்ள வவுனியாவை தனி மாவட்டமாக்கினர். நீர்ப்பாசன மேம்பாட்டில் அவர்களின் முயற்சிகள் ஒழுங்கற்றவையாக இருந்தன. இதனால் உலர்வலயத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் சிறியவையாகவும் தொடர்ச்சியாக மாறும் தன்மையுடவையாகவும் இருந்தன. நுவர கலவிய மற்றும் தமங்கடுவ பகுதிகளில் சிங்களவர்களே பெரும்பாலும் குடியேறினாலும் அது நிரந்தரமான குடியேற்றங்களாக இருக்கவில்லை. அவை பயிர்ச்செய்கைக்கான குடில்களாகவே இருந்தன. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் பல கிராமங்கள் மறைந்து மற்றவை தோன்றின. இந்த மக்கள் தொகையானது ஒவ்வொரு கணக்கெடுப்பின் போது தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தது. இப்பகுதியின் சூழலியல் தன்மைகளே இதற்குக் காரணமாகின. இங்கு குடியேறியோரின் பயிர்ச்செய்கை முறைகள் கரையோரத்திலோ, ஈரவலயத்திலோ பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரை விட வேறானதாக இருந்தது. ஆனால் இது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. இந்த மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்த பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொலனிய நிர்வாகம் நீர்ப்பாசனத்தின் மீதான கவனத்தைக் குறைக்கத் தொடங்கியது. 1905 ஆம் ஆண்டளவில் நீர்ப்பாசனத்திற்கான அரசாங்கச் செலவுகள் கணிசமாகக் குறைந்தன. உலர் வலயத்தின் மீள்குடியேற்றம் இருபதாம் நூற்றாண்டில் தீவிரமாகத் தொடங்கியது. ஏனெனில் உலர் வலயத்தை புத்துயிர் பெற வைப்பது சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அவசரமான விஷயமாக மாறியது. இது குறிப்பாக கீழ்நாட்டு சிங்கள உயரடுக்கிற்கு முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக நிலமற்றவர்களாக அடையாளம் காணப்பட்ட கண்டிய சிங்கள மக்களைக் கவரும் ஒரு வழிமுறையாக இது இருந்தது.
1927 இல் காணி ஆணைக்குழு அனைத்து அரச காணிகளும் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்த அறிவுப்புடன் விவசாயம் மற்றும் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்க உலர் வலயத்தில் காலனித்துவக் குடியேற்றங்களைத் திட்டமிட்டார். அதன்படி நிலமற்ற சிங்கள விவசாயிகள் சுதந்திரமான விவசாய உரிமையாளர்களாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டின் காணி அபிவிருத்திச் சட்டம் இக் குடியேற்றத்துக்கான வழிமுறைகளை உருவாக்கியது. மேலும் 1939 ஆம் ஆண்டு இச் சட்டத்தின் கீழ் முதலாவது மக்கள் தொகைக் குடியேற்றம் நிகழ்ந்தது. இக் குடியேற்றத்துக்கு மூன்று காரணங்கள் கூறப்பட்டன; ஈர மண்டலத்தின் வேலையின்மையை நீக்குவது, உணவு உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உலர் மண்டலத்தில் வளமான குடியேற்றங்களை நிறுவுவது.
டி.எஸ். சேனநாயக்க உட்பட்ட சிங்களத் தலைவர்கள் கொலனித்துவம் இலங்கையின் விவசாய சமூகத்தையும் அதன் வாழ்வியலையும் சிதைத்துவிட்டது என்று கருதினர். தங்கள் பழைய பெருமையை மீட்டெடுக்க உலர்வலயத்தில் மக்களைக் குடியேற்றக்கூடிய ஒரு “பொற்காலத்தைக்” கனவுகண்டனர். இதை மிகவும் விரிவாக ஆராய்ந்த மூர் பின்வருமாறு சொல்கிறார்: “டி.எஸ். சேனநாயக்காவின் உலர் வலயத்தின் குடியேற்றத் திட்டமானது, சிங்களவர்களின் பண்டைய நீர்ப்பாசன நாகரிகத்தின் மையப் பகுதிக்கு திரும்புவது என்ற தொலைநோக்குடன் சிங்கள தேசியவாதத்தை புகுத்துவதை நோக்காகக் கொண்டது.”
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் மிகப்பெரியது கல்லோயாத் திட்டமாகும். இது 1948 இற்கும் 1952 இற்கும் இடையில் 120,000 ஏக்கருக்கும் அதிகமான நீர்ப்பாசனப் பரப்பை உருவாக்கியது (படம்:2). சுதந்திர இலங்கையின் மிகப்பெரிய கொலனித்துவக் குடியேற்றங்களில் கல்ஓயா திட்டம் முதன்மையானது.
கல்லோயா திட்டம் : கேள்விக்குறியாகும் நோக்கங்கள்
அபிவிருத்தியை நோக்காகக் கொண்டதாக அறிவிக்கப்பட்டாலும் கல்லோயாத் திட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல கேள்விகள் தொடக்கம் முதலே எழுந்தன. குறிப்பாக மூன்று கேள்விகள் எழுந்தன.
- இத்திட்டம் முழுமையான திட்டமிடலும் நடைபெறுகின்றதா? அல்லது குறுகிய சில நோக்கங்களை மட்டும் கொண்டுள்ளதா?
- இத்திட்டத்தின் பொருளாதாரக் காரணிகள் (செலவினமும் வருவாயும்) ஆழமாக ஆராயப்பட்டுள்ளனவா?
- இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் சமூகப் பண்பாட்டுத் தாங்கங்களின் நீண்டகால விளைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா?
இரண்டாவது வினாவை முதலில் நோக்குவோம். இதன் பொருளாதாரக் காரணிகளைப் பொறுத்தவரையில் இத் திட்டத்திற்கு அரசாங்கம் மிக அதிகளவில் நிதியைச் செலவழித்தது. உலர்வலயத்தில் விவசாய முயற்சிகளை ஊக்குவித்தல் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவினம் நாட்டின் வருடாந்திர விவசாய பட்ஜெட்டில் 87 சதவீதமாகும். இது இந்த குடியேற்றத் திட்டங்களுக்கு அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆனால் பொருளாதார ரீதியில் இத் திட்டம் ஒரு தோல்வியடைந்த திட்டமாகும். 1966 ஆம் ஆண்டு கல்லோயாத் திட்டத்தை பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு வந்தது. முதலாவது, பொருளாதார ரீதியிலும் அரிசி உற்பத்தியின் அளவின் அடிப்படையிலும் இத் திட்டமானது தோல்வியடைந்த திட்டமாகும். இந்தத் திட்டத்தின் பிற நடவடிக்கைகளான, தொழிற்சாலைகளை அமைத்தல், அரிசியாலைகளை உருவாக்குதல், கரும்புற்பத்தி என்பன தோல்வியடைந்த பொருளாதார நட்டத்தை விளைவிக்கும் செயற்பாடுகளாகும். இரண்டாவது, இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக (தங்குமிடங்கள், பாதைகள் உள்ளிட்டவை) மிகவும் அளவுக்கதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.
பொருளாதாரக் காரணிகள் என்ற விடயத்தில் அரசாங்கம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அந்தக் குடியேற்றத் திட்டத்தை எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று யோசித்தது. அதற்காகவே பல்வேறு துணைத் திட்டங்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இது அரசாங்கத்தின் திட்டமிடலின் குறைபாடுகளா அல்லது மறைமுகமாக வேறொரு நிகழ்ச்சி நிரலை வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமா என்பது விவாதத்திற்குரியது. இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள சில வரலாற்று நிகழ்வுகளை இங்கு நினைவூட்டல் தகும்.
உலர்வலயத்தில் நீர்ப்பாசனத்திற்கான வழியை ஏற்படுத்துவதும் மக்களை குடியமர்த்துவதுமே டி.எஸ். சேனநாயக்கவின் நோக்கமாக இருந்தது. அவரது ஆலோசகர்கள் இது குறித்து இரண்டு முக்கியமான விடயங்களைச் சொன்னார்கள். முதலாவது, ஒரு நீர்த்தேக்கத்தையும் நீர்ப்பாசனத்தையும் சாத்தியமாக்கலாம். ஆனால் அதற்கான வசதிகள் எம்மிடம் இல்லை. இரண்டாவது, இத்திட்டத்தின் வழியாக 50,000 பேரைக் குடியமர்த்தலாம். இவை இரண்டும் டி.எஸ் இற்கு கவர்ச்சிகரமாக இருந்தது. இதை நடைமுறைப்படுத்த மூன்று முக்கிய விடயங்களை அவர் செய்தார்.
- இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியில் விலைமனுக் கோரப்பட்டு இரண்டாம் உலகப் போரில் யப்பானியத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக் கூடிய விமான ஓடுதளங்களை அமைத்த அமெரிக்க இராணுவ நிறுவனமான மொரிசன் குணுட்சனுக்கு கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது.
- இந்திட்டத்தை நிர்வகிக்க அவுஸ்ரேலியத் திறைசேரியில் தலைவராக இருந்த ஹக்ஸ்ஹாம் என்பவரை வரவழைத்து நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவரது மாதச் சம்பளம் 3,000 இலங்கை ரூபாய்கள். (1940 களில் 3,000 ரூபாய்கள் மிகப்பெரிய தொகை)
- சகல அதிகாரங்களையும் கொண்ட கல்ஓயா அபிவிருத்திச் சபைக்கான சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டமூலம் பல சிறப்பு அதிகாரங்களைக் கொண்டதாக இருந்தது.
இங்கு செலவழிக்கப்பட்டுள்ள பணமும் சட்டரீதியான செயற்பாடுகளும் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. ஆனால் நடைமுறையில் எதுவும் சரியானதாக இருக்கவில்லை. திட்டத்திற்குரிய உபகரணங்கள் துறைமுகத்தில் வந்திறங்கிய போது அவை சரியான முறையில் கணக்கெடுக்கப்படவோ, பாராமரிக்கப்படவோ இல்லை. இத்திட்டத்தை செயற்படுத்துவதில் அரசாங்கம் காட்டிய அவசரத்தை திட்டமிடலில் அரசாங்கம் காட்டவில்லை.
இனி மூன்றாவது வினாவுக்கு வருவோம். மக்களை இப்பகுதிகளில் குடியேற்றுவதன் சமூகப் பரிமாணம் கணிப்பிலெடுக்கப்படவில்லை. மக்களை இந்தப் பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்பதே பிரதான நோக்காகவிருந்தது. ஆனால் இம் மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதிகள் பற்றி அதிகம் அக்கறை கொள்ளப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்வது பற்றியே அக்கறை செலுத்தப்பட்டது. இம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் பல வகைப்பட்டன. இதில் முதலில் குடியேறிய மக்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட வில்பிரட் ஜெயசூரிய பின்வருமாறு எழுதுகிறார்:
“கல் ஓயா அபிவிருத்திச் சபையின் குடியேற்றத் திட்டம் 1951 இல் ஆரம்பிக்கப்பட்டது. இயந்திரங்கள் மூலம் காடு அழிக்கப்பட்ட பின்னர், முதல் இரண்டு கிராமங்கள் வாவின்ன மற்றும் பரகஹகெல்லவில் நிறுவப்பட்டன. சேனநாயக்க சமுத்திர புதிய நீர்த்தேக்கத்தினால் நீரில் மூழ்கிய பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் தற்போதுள்ள காட்டுப் பகுதிகளை நம்பி வாழ்ந்த கிராம மக்களும் குடியேற்றப்பட்டனர். இவர்கள் முதலில் குடியமர்த்தப்பட்டாலும், இந்த இரண்டு கிராம அலகுகளும் மிகவும் குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளன. அவர்கள் விவசாய முறைகளை மாற்றுவதில் தாமதம் காட்டினர். காடுகளால் சூழப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த அவர்கள் பாரம்பரியமான சேனைப் பயிர்ச்செய்கையையே நம்பியிருந்தனர். மேலும் வாழ்வாதாரத்திற்காக அல்லாமல், முக்கியமாக சந்தைக்காக முறையான நீர்ப்பாசன நெற்பயிர்ச் செய்கைக்கு பழகுவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் பிடித்தது. இவ்விரண்டு கிராமங்களிலும் குடியேறியோரில் ஏறக்குறைய 75 சதவீதம் பேரிடம் மாடுகள் இருக்கவில்லை. அதேவேளை அவர்களுக்கு சொந்தமான துப்பாக்கிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தன. இது இங்கு குடியேறியோர் பாசன நெல் வயல்களை முறையாக பயிரிடுவதை விட, வேட்டையாடுதல் மற்றும் சேனை விவசாயத்தில் கவனம் செலுத்தினர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் தங்கள் வாழ்விடத்தில் இருந்து பெயர்க்கப்பட்ட இச் சமூகங்கள் இப்புதிய சூழலில் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டன. பொருளாதார நெருக்கடியின் விளைவால் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த முதல் இரண்டு கிராமங்களில் பாலியல் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது.”
கல்லோயாத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்டவர்கள் பல்வகைப்பட்ட பொருளாதார நிலைகளை உடையோராக இருந்தனர். ஒரு சில குடியேற்றவாசிகள் அதிக வருமானம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்தனர். சேமிப்புப் பழக்கமின்மை மற்றும் வாழ்வாதார நோக்குநிலை ஆகியவை ஏழைக் குடும்பங்களின் வறுமையை அதிகப்படுத்தின. மேலதிகமாக வறட்சியும் நெல்விலை வீழ்ச்சியும் அவர்களை மிகவும் மோசமாகப் பாதித்தது. இத்தகைய பேரழிவுகள் ஏழைகள் தங்கள் நிலங்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுவதற்கு வழிவகுத்தது. இது சொல்கிற எளிய செய்தி, அரசாங்கம் இவ்வாறு குடியேறுவதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை என்பதே.
இனி முதலாவது வினாவுக்கு வருவோம். கல்லோயாத் திட்டம் இலங்கையின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமாக இன்றும் கருதப்படுகிறது. குறிப்பாக சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டம் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் அது ‘பயன்கருதித்’ திட்டமிடப்பட்ட ஒன்றா என்ற வினா முக்கியமானது. இன்றளவும் சிங்களத் தேசியவாதத்துடன் மிகவும் பின்னிப்பிணைந்த ஒன்றாக கல்லோயாத் திட்டம் இருக்கிறது. இதனால் இதனை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையில் அழைக்கப்பட்டார்கள். ஒன்றில் ‘தேசத்தின் எதிரிகள்’ அல்லது ‘அந்நியக் கைக்கூலிகள்’. இந்தத் திட்டமானது சுதந்திர இலங்கையில் இலங்கையர்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டம் என்ற கதையாடல் மெதுமெதுவாகப் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் மேற்சொன்னது போல இந்தத் திட்டத்தில் அந்நியரின் பங்களிப்பு மிக அதிகம். ஆனால் அது வசதியாக மறைக்கப்படுகிறது.
கல்லோயாத் திட்டத்தின் கோளாறுகளை பற்றித் தொடர்ச்சியாகவே பல அறிக்கைகளும் எழுத்துக்களும் வந்துள்ளன. ஆனால் அவை கவனம் பெறவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதனால் அவை சிங்களத் தேசியவாத மனோநிலைக்கு விரோதமானவை எனக் கருதப்பட்டமையால் இருட்டடிப்புக்கு உள்ளாகின. 1979 இல் முழுமையாகச் சீரழிந்த கல்லோயாத் திட்டத்தை புனரமைக்க அமெரிக்காவின் உதவி நாடப்பட்டது. அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் (USAID) அதிகாரிகள் இலங்கை வந்தனர். அதில் ஒருவரான நோமன் உப்கோவ் தனது இலங்கை அனுவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார். ‘Learning from Gal Oya: Possibilities for Participatory Development and Post-Newtonian Social Science’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் கல்லோயாத் திட்டத்தின் பிரதான பிரச்சனைகள் சிலவற்றை அவர் பட்டியலிடுகிறார்:
கல்லோயா 125,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான திட்டமாகும். USAID உதவியுடன் புனரமைக்கப்படவிருந்த அதன் இடது கரை துணை அமைப்பும் கூட இலங்கையில் உள்ள மற்ற நீர்ப்பாசன முறையை விட பெரியதாக இருந்தது. சமச்சீரற்ற நிலப்பரப்பு காரணமாக, நீர்க்கால்வாய் வலையமைப்பு நீண்டதாகவும், அடர்த்தியாகவும் இருந்தது. அதன் அளவு காரணமாக, இது இரண்டு நிர்வாக மாவட்டங்களின் எல்லைகளை இடைவெட்டியது. இது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியது.
கட்டமைப்பு ரீதியாக இது மிகவும் மோசமடைந்தது. கால்வாய்கள் மண்ணாகி, அவற்றின் கரைகள் அரிக்கப்பட்டன. சுமார் 80 சதவீத நீர் வாயில்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் உடைந்தன அல்லது செயல்பட முடியாதவையாக இருக்கின்றன (1975 ஆம் ஆண்டு உலக உணவு ஸ்தாபனத்தின் அறிக்கை இக்குறைபாடுகளை விரிவாகப் பேசுகிறது). முழு இடது கரையிலும் ஏழு இடங்களில் மட்டுமே நீர் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு அளவிடப்பட்டது. மேலும், அதன் பெரும்பாலான மண் குறிப்பாக நீர்ப்பாசன நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாக இல்லை. இது குறைந்த விளைச்சலுக்கும் விவசாயிகளின் குறைந்த வருமானத்திற்கு பங்களிக்கிறது.
கல் ஓயாவில் பெருகிவரும் சனத்தொகைக்கு இடமளிக்கும் வகையில், பயிரிடப்பட்ட பகுதி 30 முதல் 50 சதவீதம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது முதலில் திட்டமிடப்பட்ட வடிவமைப்பு விபரக் குறிப்புகளுக்கு அப்பாற்பட்டது. 1950 களில் பெரிய குடும்பங்களை கல்லோயாவிற்கு குடியேற்றம் செய்வதே அரசாங்கக் கொள்கையாக இருந்தது. இக் கொள்கை நிலப்பற்றாக்குறை பகுதிகளைச் சேர்ந்த அதிகமான மக்களுக்கு உடனடிப் பலன்களை அளித்தது மற்றும் அரிசியை உற்பத்தி செய்வதற்கு ஒரு பெரிய தொழிலாளர் படையை அளித்தது. ஆனால் இது மக்கள் தொகை அழுத்தங்களை உருவாக்கியது. இது தண்ணீருக்கான தேவையை அதிகரித்தது. தண்ணீர் இருப்புக்கு மேலதிகமான மக்கள் தொகையால் இந்த அமைப்பை நிர்வகிப்பதும் பராமரிப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது.
நீரேந்து பகுதியில் எதிர்பார்த்ததை விட தண்ணீர் சேகரிப்பு குறைவாக இருந்ததால் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. முந்தைய இருபத்தைந்து ஆண்டுகளில் 770,000 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட பிரதான நீர்த்தேக்கம் இரண்டு முறை மட்டுமே நிரம்பியுள்ளது. வறண்ட பருவத்தின் தொடக்கத்தில் அரிதாகவே பாதிக்கு மேல் நிரம்பியது. எனவே பொதுவாக வறண்ட காலங்களில் விவசாயிகள் தங்கள் குடும்பங்களை பார்த்துக் கொள்வதற்கான விவசாயத்தைச் செய்ய வேண்டிய முழுப் பகுதிக்கும் நீர்ப்பாசனம் செய்ய போதுமான தண்ணீர் இல்லை. அமைப்பின் கீழ் மூன்றில் ஒரு பகுதி பாசன நீரை அரிதாகவே பெற்றது. நீர்த்தேக்கம் இருந்தாலும் இது மழையை முழுவதுமாக நம்பியிருந்தது.
போதிய விளைச்சலின்மை மற்றும் சீரழிந்த இயற்பியல் அமைப்பு ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட சிரமங்கள், நீர்ப்பாசனத் துறை பணியாளர்களின் நம்பகத்தன்மையற்ற நிர்வாகத்தால் அதிகரித்தது. போதுமான தண்ணீர் அல்லது அதை விநியோகிக்க போதுமான பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புகள் இல்லாத நிலையே நிலவியது. ஆனால் அவர்களின் ஒழுங்கற்ற கடமைகளின் செயல்திறன் மற்றும் அவர்களின் ஒதுங்கிய, பெரும்பாலும் விவசாயிகளுக்கு விரோதமான மனப்பான்மை ஆகியவை இந்தத் திட்டத்தின் எதிர்காலத்தை முழுவதுமாகச் சரித்தன.
தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகளிடையே ஏற்பட்ட மோதல்கள் கட்டமைப்புகள் உடைப்பு, கால்வாய் பராமரிப்பு இல்லாமை மற்றும் ஒழுங்கற்ற விநியோகம் ஆகியவற்றிற்கு பங்களித்தன. இது விவசாயிகளிடையே மேலும் மோதலை ஏற்படுத்தியது. இங்கு குடியேறியவர்கள் குறிப்பாக கட்டுக்கடங்காதவர்களாகவும் ஒத்துழைக்காதவர்களாகவும் கருதப்பட்டனர். சிலர் இந்த தொலைதூர மற்றும் அழகற்ற பகுதிக்கு மாற்றுவதற்காக கிராமத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஒரு முரண்பாட்டு வலயமாக இப் பகுதிகளை மாற்றியது.
அம்பாறை மாவட்டம் அரசாங்க ஊழியர்களால் பணியமர்த்தப்படுவதற்கு விரும்பத்தகாத இடமாக கருதப்பட்டது. சில சமயங்களில் தண்டனையாக ஒதுக்கப்பட்டது. ஒரு எல்லைப் பிரதேசமாக, இலங்கையின் பிற இடங்களில் காணப்படும் பெரும்பாலான வசதிகளை இது கொண்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள மாவட்டத் தலைமையகமாக அம்பாறை இருந்தது. அதனால் கல்லோயாவுக்கு வந்து தங்குவதற்கு நல்ல பணியாளர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது.
இவை அனைத்திற்கும் மேலாக, நீர் விநியோகம் ஒரு இனத்துவப் பரிமாணத்தைக் கொண்டிருந்தது. காட்டில் இருந்து மீட்கப்பட்ட மேல் நீரோடை (தலை முனை) பகுதிகளில் மத்திய மலைநாட்டில் உள்ள கிராமங்களிலிருந்தும் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரையிலிருந்தும் சிங்கள மொழி பேசும் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கிழக்குக் கடற்கரையை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் விவசாயிகளுக்கு கீழ்நிலை (வால் முனை) ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. தண்ணீர் வால்வரை எட்டாதபோது, புவியியல் காரணிகள் மட்டுமல்லாமல், மேல்நிலையில் சிங்களக் குடியேற்றக்காரர்களின் தீங்கிழைக்கும் தன்மையே இதற்குக் காரணம் என்று தமிழர்கள் சொன்னார்கள். பெரும்பான்மையான நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள் தமிழர்களாக இருந்தபோதும் சிறுபான்மையினரின் மனக்குறை நீங்கவில்லை என்பது இங்கு கவனிப்புக்குரியது.
உப்கோவ்வின் குறிப்புகள் மட்டுமன்றி பிற அறிக்கைகளும் இந்தத் திட்டமானது, எவ்வாறு திட்டமிடப்படாத ஒன்றாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. கல்லோயாத் திட்டமானது நீண்டகால பேண்தகமையை நோக்காகக் கொண்டதல்ல. இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியில் இப் பகுதியை அளவிடச் சென்ற அளவையியல் திணைக்களத்தினர் கல்லோயா திட்டத்திற்காக அழிக்கப்பட்ட பகுதியானது அடர்த்தியான இயற்கைக் காடாக இருந்தததையும் அங்கு ஏராளமான காட்டுயிர்கள் வாழ்ந்ததையும் ஆவணப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்தின் தொடக்கத்தில் அழிக்கப்பட்ட காடுகள் திட்டமிடப்படாத வகையில் அழிக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்து பல உயிரினங்கள் மறைந்தன. இன்னும் பல இடம்பெயர்ந்தன. இது உயிர்ப் பல்வகைமையில் மிகப் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. ஆனால் இவ் விடயங்கள் திட்டமிடலின் போது கணிப்பில் கொள்ளப்படவில்லை. இது குறித்த தரவுகள் எதுவும் இல்லை. இலங்கையின் காடழிப்பு குறித்த அறிக்கைகள் கூட விவசாயத்திற்கு நிலம் தேவைப்பட்டதன் விளைவால் உலர்வலயத்தில் காடுகள் அழிக்கப்பட்டன என்ற குறிப்புடன் நிறுத்திக் கொள்கின்றன. ஆனால் அதன் சூழலியல் பரிமாணம் குறித்த அக்கறை குறைவு. குறிப்பாக இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கு தொடர்ச்சியான சர்வதேச அபிவிருத்தித் திட்டங்களின் உதவிகள் கிடைத்தன. அதைப் பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் இப் பிரதேசத்தின் சூழலியல் மற்றும் உயிர்ப் பல்வகைமை ஆகியன குறைமதிப்பீட்டுக்கு உள்ளாகின.
நிறைவுக் குறிப்புகள்
சுதந்திர இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள் குறித்து நாம் ஆழமாக நோக்குகிற போது சில முக்கியமான முடிவுகளுக்கு வரமுடியும். அம் முடிவுகள் இன்றும் எம் சமூகத்தில் நிலவுகின்ற முக்கியமான சில தவறான முன்முடிவுகளை எடுத்துக் காட்டவல்லன. இத் திட்டங்கள் அனைத்தும் இன்றும் ‘இலங்கையரின் நலனுக்கு இலங்கையரால்’ மேற்கொள்ளப்பட்டவை என்ற தேசியவாதக் கதையாடலைக் கொண்டுள்ளன. ஆனால் இவை இலங்கையரால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. அதே வேளை இலங்கையின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளன்றி மேற்கத்தேய முறைகளே இங்கு பின்பற்றப்பட்டன. இது இந்தத் திட்டத்தின் தோல்விக்கு முக்கியமான காரணம் என பிரையன் பவ்வன் பேர்கர் ‘The Harsh Facts of Hydraulics: Technology and Society in Sri Lanka’s Colonization Schemes’ என்ற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இலங்கையின் குடியேற்றத் திட்டங்கள் பற்றிய தனது நீண்ட கட்டுரையை பின்வருமாறு நிறைவு செய்கிறார்:
“புவியீர்ப்பு-பாய்ச்சல் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் தொடர்பான இலங்கையின் அனுபவம், மேற்கத்திய தொழில்நுட்பத்தை மூன்றாம் உலக நாடுகளில் பிரதி செய்வதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு இன்னுமொரு உதாரணத்தை வழங்குவதாகத் தெரிகிறது. குறிப்பாக அவை ஏற்படுத்தும் சமூக அசமத்துவம் முக்கியமானது. தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தவுடன், அதனுடைய உள்ளார்ந்த தர்க்கமானது, மேற்கத்தேய பயிற்சி பெற்ற பொறியாளர்களின் சமூக மற்றும் கலாசார பரிமாணங்களின் மீதான ஆர்வமின்மையுடன் இணைந்து கொள்கிறதா? இது தொழில்நுட்ப அமைப்பின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் முதலாளித்துவ வர்க்க உறவுகளின் கட்டமைப்பை மீண்டும் உருவாக்கி நயவஞ்சகமாக செயல்படுகிறது.
பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் தொடர்பான இலங்கையின் சொந்த அனுபவம், நிலத்திற்குப் பதிலாக தண்ணீருக்கு உரிமைகள் ஒதுக்கப்பட்டால், ஈர்ப்பு-ஓட்ட அமைப்புகளில் சமத்துவம் சாத்தியமாகும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் காலனித்துவ-திட்ட நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் சமூக வடிவமைப்பு ஒரு வரலாற்று சூழலில் எழுந்தது. இது பாரம்பரிய அமைப்பின் முக்கிய அம்சமாக இருந்த மிகவும் விவேகமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக தகவமைக்கப்பட்ட நீர்ப் பங்கீட்டு முறைகளைத் தவிர்க்கும் நவீன முறைக்கு மாறியது. பல்வேறு காரணங்களுக்காக, இலங்கையின் தேசியவாத உயரடுக்கு, இந்த புதிய வடிவமைப்பு (கொலனித்துவக் குடியேற்றத் திட்டங்கள்) குறைபாடுடையதாக இருந்தாலும், அது மகத்தான அரசியல் மதிப்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தது. எனவே அவர்கள் அதன் குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்த பின்னரும் அதை ஏற்றுக்கொண்டு பராமரிக்கின்றனர்.”
பவ்வன் பேர்கர் இதன் மூலம் சொல்கின்ற செய்தி தெளிவானது. ஒருபுறம் தேசியவாதப் போதையின் வழி குடியேற்றத் திட்டங்களை அணுகுகின்ற அரசியல் அடுக்கினர் மறுபுறம் அதற்கு நேரெதிராக அந்நியச் செயன்முறைகளை நடைமுறைப்படுத்தி சுதேசிய வழிமுறைகளை மறுதலிக்கின்றனர். இதன்மூலம் அவர்களது வர்க்க நிலைப்பாடுகள் தெளிவாகின்றன.
இக் குடியேற்றத் திட்டங்களின் நோக்கங்களில் ஒன்றான விவசாயம் எதிர்பார்த்த பலனைத் தராத போது விவசாயத்தை மேம்படுத்த பூச்சிக்கொல்லிகள், புதியவகை மகசூல்கள், இரசாயன உரங்கள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இவை ஒருபுறம் பயிரிடும் நிலத்தையும், சூழலையும், உயிர்ப் பல்வகைமையையும் பாதித்தன. மறுபுறம், இவற்றின் பயன்பாட்டால் நல்ல விளைச்சலை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றின் பாவனை உடல் நலன்சார் பிரச்சனைகளை அப் பகுதி மக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய குடியேற்றத் திட்டங்களின் அனுபவமானது, அபிவிருத்தி என்பது அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படும் போது அது ஏற்படுத்தும் நீண்டகால சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. இக்குடியேற்றத் திட்டங்களை செயற்படுத்துவதில் இனத்துவ ரீதியில் தமிழராக இருந்த பலர் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். அதில் சிலர் இத் திட்டங்கள் எவ்வாறு இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களித்தது என்றும் எழுதியிருக்கிறார்கள். இவை இன்னொரு கோணத்தில் வர்க்க நலன்கள் எவ்வாறு இனத்துவ முரண்பாடுகளுக்கு வழியமைத்தன என்பதைக் காட்டுகிறது. தேசியவாத புகை மூட்டத்துக்குள் இருந்து வெளியேறாமல் அறிவுப்புல ரீதியில் அரசியலையும் அபிவிருத்தியையும் நோக்க முடியாது.
- Peebles, P. 1990. Colonization and Ethnic Conflict in the Dry Zone of Sri Lanka. The Journal of Asian Studies, 41(1): 30-55.
- Arumugam, S. 1969. Water Resources of Ceylon: Its Utilisation and Development. Colombo: Water Resources Board.
- de Silva, I. M. 1958. The Gal Oya scheme. Paper for Center on Principles and Policies of Land Settlement for Asia and the Far East, November 21, 1958. Colombo: Gal Oya Development Board.
- மேலதிக தகவல்களுக்கு பார்க்க: Denham, E. B. 1912. Ceylon at the Census of 1911. Being the Review of the Results of the Census of 1911. Colombo: Government Printer.
- Moore, M. 1985. The State and Peasant Politics in Sri Lanka. Cambridge: Cambridge University Press.
- Report of the Gal Oya Project Evaluation Committee. Sessional Paper No. I – 1970. Ceylon: Department of Government Printing.
- Jayasuriya, W. 1963. Some Aspects of Colonization in Gal Oya Valley. The Ceylon Journal of Historical and Social Studies, 6(2): 181- 186.
- Uphoff, N. 1996. Learning from Gal Oya: Possibilities for participatory development and post-Newtonian social science. New York: Cornell University Press.
- FAO, 1975. Water management for irrigated agriculture (Gal Oya irrigation scheme), Sri Lanka: Project findings and recommendations. Rome: Food and Agriculture Organization of the United Nations.
- Chanmugam, J. C. 1976. Gal Oya odyssey. Journal of the Ceylon Survey, 34 (2):48-54.
- Pfaffenberger, B. 1990. The Harsh Facts of Hydraulics: Technology and Society in Sri Lanka’s Colonization Schemes. Technology and Culture, 31(3):361-397.
தொடரும்.