ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ்
மலேசியா
றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் ஒப்பீட்டு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான மலேசியா பற்றி அடுத்து நோக்குவோம். மலேசியாவின் சமஷ்டி பற்றி இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறைப் பேராசிரியர் M.O.A. டி சில்வா அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அவரது கட்டுரை ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் (2011) சேர்க்கப்பட்டுள்ளது. மலேசியாவின் சமஷ்டி பற்றிய எமது விபரிப்பு, றொனால்ட்.எல். வாட்ஸ், M.O.A. டி சில்வா ஆகிய இருவரதும் ஆக்கங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. இச் சமஷ்டியின் பிரதான இயல்புகள் பின்வருமாறு.
1. சமஷ்டிக் கட்டமைப்பு
மலாயா தீபகற்பம், பேர்ணியோ தீவின் சரவாக், சபா என்னும் இரு பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக மலேசியாவின் சமஷ்டி (Malaysian Federation) உருவாக்கப்பட்டது. மலாயா தீபகற்பம் மேற்கு மலேசியா எனவும், போர்ணியோ தீவின் பகுதிகள் கிழக்கு மலேசியா எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு பகுதிகளையும் தென் சீனக் கடல் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மலாயா தீபகற்பத்தில் 11 அரசுகளும் கிழக்கு மலேசியாவில் 2 அரசுகளும் உள்ளன. சுல்தான்கள் என அழைக்கப்படும் மன்னர்களின் ஆட்சிப்பரப்புகள் அடங்கியுள்ள பகுதிகளை ஒன்றிணைப்பதன் மூலம் பிரித்தானியர்களால் 1948 இல் மலேசியாவின் சமஷ்டி (Federation of Malaysia) அமைக்கப்பட்டது. பிரித்தானியரின் காலனிகளாக இருந்த மலாக்கா, பெனாங் ஆகிய பகுதிகளின் இணைப்பாக இது அமைந்தது. 1957 இல் மலேசியா சுதந்திரமடைந்தது. 1963 இல் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. 9 அரசுகளுடன் சிங்கப்பூர், சரவாக், சபா என்பனவும் இணைக்கப்பட்டன. இரு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூர் தனி நாடாகியது. இன்று மலேசியா 13 அரசுகளைக் கொண்ட சமஷ்டியாக விளங்குகிறது.
2. பல்லினச் சமூகம்
மலேயர்கள், சீனர்கள், இந்தியர், ஐரோப்பியர், யுறேசியன்கள், சுதேசிய இனக்குழுக்கள் எனப் பல்லினச் சமூகங்களைக் கொண்ட சமஷ்டியாக மலேசியா விளங்குகிறது. இனம், மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் வேறுபட்ட பன்மைத்துவப் பண்பு (Diversity) மலேசியாவின் சிறப்பு இயல்பாகும். மலாயாவின் ஆட்சிப் பகுதிகளின் வரலாறும், அப்பகுதிகளின் தனித்துவப் பண்புகளை தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. ஏறத்தாள 28 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவின் முக்கிய இனங்களின் சனத்தொகை வீதாசாரம் பின்வருமாறு அமைந்துள்ளது:
- மலேயர் – 54%
- சீனர்கள் – 25%
- இந்தியர்கள் – 7.5%
- ஏனையோர் – 13.5%
மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களை ஒன்றிணைக்கும், அரசுக் கட்டமைப்பை சமஷ்டிமுறை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இன ஐக்கியத்தைப் பேணுதல், பொருளாதார வளர்ச்சி, அரசியல் உறுதிநிலை ஆகிய மூன்று அளவு கோல்களின்படி மலேசியா இலங்கையை விடப் பல படிகள் முன்னேறிய நிலையில் உள்ளதெனலாம்.
3. பாராளுமன்ற ஆட்சி
மலேசியாவின் அரசுமுறையை பாராளுமன்ற சமஷ்டிமுறை (Parliamentary Federalism) எனலாம். அரசின் தலைவராக (Head of the State) ‘yang Di – Pertuan Agong’ என அழைக்கப்படும் பேரரசர் (Supreme Ruler) விளங்குகிறார். பேரரசர் அரசுத் தலைவராகவும் பிரதமர் அரசாங்கத்தின் (Head of Government) தலைவராகவும் விளங்குகிறார். நிருவாக அதிகாரம் பிரதமரிடமும் மந்திரி சபையிடமுமே உள்ளது. ‘பேரரசர்’ சம்பிரதாய பூர்வமான கடமைகளை ஆற்றுபவராகவும் பெயரளவிலான தலைவராகவும் (Nominal Head) உள்ளார். இதனால் மலேசியா வரம்புக்குட்பட்ட முடியாட்சி (Constitutional Monarchy) என்ற இயல்பையும் உடையதாக உள்ளது. பேரரசர் பதவிக்கு 5 ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கு சுல்தான் ஒருவர் தெரிவு செய்யப்படுவார். சுல்தான்களின் சபையினால் (Conference) இத்தெரிவு நடத்தப்படும். மலேசியா கூட்டாட்சியில் இணைக்கப்பட்டுள்ள 13 அலகுகளும் ‘அரசுகள்’ (States) என்ற பெயரைப் பெற்றுள்ளன. இவை மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை உடையன. மலேசியாவின் ‘பெடரல் அரசாங்கம்’ அல்லது மத்திய அரசாங்கம், அதன் பிரதேச அலகுகளைவிட கூடிய அதிகாரங்களை உடையது. மலேசியா மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய சமஷ்டி (Centralised Federalism) என்னும் இயல்பை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. மலேசியாவின் சமஷ்டி அரசுகளும் பெடரல் பிரதேசங்களும்
மலேசியாவின் சமஷ்டியில் 13 அரசுகளும், மூன்று பெடரல் பிரதேசங்களும் (Federal Territories) உள்ளன. பெடரல் பிரதேசங்கள் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் உள்ளன. அரசுகள் (States) சுயாட்சியுடைய தனி அரசுகளாக சமஷ்டிக் கட்டமைப்புக்குள் இயங்குகின்றன. மத்திய அரசாங்கத்திற்கும் அரசுகளுக்குமிடையிலான அதிகாரங்களின் பகுப்பு அரசியல் யாப்பின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. அதிகாரங்கள் பெடரல் பட்டியல் (Federal List), அரசுப் பட்டியல் (State List), ஒருங்கிணை பட்டியல் (Concurrent List) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலேசியாவின் சமஷ்டிக்கான அரசியல் யாப்பு ஒன்று உள்ளது. இதனை விட அரசுகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான அரசியல் யாப்புகளும் உள்ளன. மலேசியாவின் பெடரல் நீதிமன்றம் (Federal Court), அந்நாட்டின் உச்ச நீதிமன்றமாகும். அந் நீதிமன்று இயற்றப்படும் சட்டங்களையும், நிருவாக செயல்களையும் (Executive Acts), பெடரல் அரசியல் யாப்பு, அரசுகளின் அரசியல் யாப்புகள் என்பனவற்றையும் விளக்குவதும், நீதி மீளாய்வு செய்தலுமாகிய அதிகாரத்தை உடையதாகும். மலேசியாவின் சமஷ்டி அரசுகளதும், பெடரல் பிரதேசங்களதும் இடப்பரப்பு மக்கள் தொகை, தலைநகர் ஆகிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன:
மலேசியாவின் சமஷ்டி அரசுகளும், பெடரல் பிரதேசங்களும்
பெயர் | தலைநகர் | பரப்பளவு ச.கிலோ.மீ | சனத்தொகை (ஆயிரத்தில்) | |
1 | கோலாலம்பூர் (பெடரல் பிரதேசம்) | கோலாலம்பூர் | 243 | 1627 ஆயிரம் |
2 | லபுவன் (Labuan) (பெடரல் பிரதேசம்) | விக்டோரியா | 91 | 85 ஆயிரம் |
3 | புத்திர ஜய (பெடரல் பிரதேசம்) | புத்திர ஜயா(Putrajaya) | 49 | 67 ஆயிரம் |
4 | யொகார் | யொகொர்பாறு | 19210 | 3233 ஆயிரம் |
5 | கெடா | அலூர் செடார் | 9500 | 1890 ஆயிரம் |
6 | கெலாண்டன் | கொடபாறு | 15099 | 1459 ஆயிரம் |
7 | மலாக்கா | மலாக்க ரவுண் | 1664 | 788 ஆயிரம் |
8 | நெகிரி செம்பிளான் | செரம்பான் | 6686 | 997 ஆயிரம் |
9 | பஹாங் | குனாட்டன் | 36137 | 1443 ஆயிரம் |
10 | பெராக் | ஈ.போ | 21035 | 2258 ஆயிரம் |
11 | பெர்லிஸ் | கன்கார் | 821 | 227 ஆயிரம் |
12 | பினாங் | ஜோர்ஜ்.ரவுண் | 1048 | 1520 ஆயிரம் |
13 | சபா | கொடா கினாபலு | 73631 | 3120 ஆயிரம் |
14 | சரவாக் | குச்சிங் | 124450 | 2420 ஆயிரம் |
15 | செலாங்கூர் | ஷா அலம் | 8104 | 5411 ஆயிரம் |
16 | தெரங்கானு | குலா தெரங்கானு | 13035 | 1015 ஆயிரம் |
குறிப்பு : இப் பட்டியல் M.O.A. டி சொய்சா அவர்கள் தந்துள்ள பட்டியலைத் தழுவியது. சனத்தொகை கிட்டிய ஆயிரத்தில் தரப்பட்டுள்ளது.
மக்கள்தொகை, இடப்பரப்பு என்பனவற்றில் அரசுகளிற்கிடையே பாரிய வேறுபாடுகள் இருப்பதை மேற்தரப்பட்ட பட்டியல் எடுத்துக் காட்டுகிறது. மலேயர்கள் கிராமப் புறங்களில் வாழ்பவர்களாக உள்ளனர். சீனர்கள் நகரங்களில் செறிந்து வாழ்கின்றனர். மலேயர்களுக்கும், சீனர்களுக்குமிடையிலான பொருளாதார வேற்றுமைகள், இன முரண்பாடுகளுக்குக் காரணமாக அமைந்தன. 1968 ஆம் ஆண்டில் மலேசியாவில் ஓர் இனக்கலவரம் இடம்பெற்றது. ஆயினும் அதற்குப் பிந்திய காலத்தில் மலேசியா பொருளாதார வளர்ச்சி அடைவதிலும், இன முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தி முகாமை செய்வதிலும் வெற்றி கண்டுள்ளது. மலேசியாவின் அயல் நாடுகளான தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரசியலில் இராணுவம் முக்கிய வகிபாகத்தை பெற்றுள்ளதைச் சமகால வரலாறு உணர்த்துகிறது. மலேசியாவில் அத்தகைய நிலை ஏற்படவில்லை என்பதும், அந்நாடு ஜனநாயக முறையைத் தொடர்ந்து பேணி வருகின்றது என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் வகைப்பாட்டில் இரண்டாவது வகையான வளர்முக நாடுகளின் பன்மொழிச் சமூகங்களின் சமஷ்டிகள் (Multi Lingual Federations) என்ற வகைக்குள் அடங்கும் இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டிகளின் பிரதான இயல்புகளை மேலே குறிப்பிட்டோம். அடுத்து மேற்கிளர்ந்து வரும் புதிய ஐரோப்பிய சமஷ்டிகளான பெல்ஜியம், ஸ்பானியா ஆகிய இரு நாடுகளின் சமஷ்டிகள் பற்றி நோக்குவோம்.
பெல்ஜியம்
றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டு பெல்ஜியம் சமஷ்டியின் முக்கிய இயல்புகள் கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
1. புதிய சமஷ்டி
பெல்ஜியம் ஒரு சமஷ்டி முறை அரசுக் கட்டமைப்புடைய நாடாக 1993 இல் உருவாக்கம் பெற்றது. இந்நாடு 1830 ஆம் ஆண்டில் ஒற்றையாட்சி முறை முடியாட்சி நாடாகத் (Unitary Constitutional Monarchy) தோற்றம் பெற்றது. மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய ஒற்றையாட்சி அரசு மாதிரியில் இருந்து விலகி அதிகாரப் பரவலாக்கல் உடையதாகவும், இறுதியில் சமஷ்டி முறை நாடாகவும் நான்கு படிமுறைகள் ஊடாக பெல்ஜியம் பயணித்தது. 1970, 1980, 1988, 1993 ஆகியன பெல்ஜியத்தின் அரசியல் யாப்பு மாற்றத்தின் படிநிலைகளைக் குறிப்பிடும் ஆண்டுகளாகும்.
2. அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டி
ஒற்றையாட்சியில் இருந்து, அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டியாக (Devolutionary Federalism) பெல்ஜியம் நாடு பரிணாமம் பெற்றது. அரசியலைமைப்பை மாற்றுவதற்கான முடிவை அந் நாட்டு மக்கள் எடுத்தனர். இதற்கான அடிப்படைக் காரணம் மொழி அடிப்படையிலான இனத்துவ முறுகல் நிலை தீவிரம் பெற்றதேயாகும். மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியம் ஒரு சிறிய தேசம். அதன் விஸ்தீரணம் ஏறக்குறைய இலங்கையின் அரைப் பங்கு ஆகும். அங்கு 10.25 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் சனத்தொகையின் அரைப்பங்கு அங்கு உள்ளது. இத்தகைய சிறிய தேசம், சமஷ்டி முறை மூலம் அரசியல் தீர்வைக் காண விரும்பியது. வன்முறை வழிகளை நாடாது, சமாதான வழியில் அந்நாடு இனத்துவ அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. சமஷ்டி முறைக்கான மாற்றம், தேசிய ஒருமைப்பாட்டையும், இறைமையையும் நன்கு பேணுவதற்கு உதவியுள்ளதோடு பிராந்தியங்களுக்கு பொருளாதார பண்பாட்டுச் சுயாதீனத்தை வழங்குவதற்கும் உதவியது.
3. பன்மொழிச் சமூகம்
பெல்ஜியம் நாட்டில் வாழும் மக்களில் 58% டச்சுமொழி பேசுவோராகவும் 41% பிரஞ்சு மொழி பேசுவோராகவும் உள்ளனர். ஜேர்மன் மொழியைப் பேசும் சிறுபான்மையினர் 1% இற்கும் குறைவான தொகையினராக உள்ளனர். டச்சு மொழி பேசுவோர் பிளமிஷ் மக்கள் எனவும் அவர்கள் செறிந்து வாழும் பகுதி பிளமிஷ் பிராந்தியம் (Flemish Region) எனவும் அழைக்கப்படும். பிரஞ்சு மொழி பேசுவோர் வலூன் (Waloon) பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். அவர்கள் ‘வலூன்கள்’ என அழைக்கப்படுவர். பிளமிஷ் தேசியவாதம், வலூன் தேசியவாதம் என ஒன்றோடொன்று முரண்படும் தேசியவாதங்கள் பெல்ஜியம் அரசியலில் முக்கியம் பெற்றன. வரலாற்று ரீதியாக பிரஞ்சு மொழி பேசுவோர் ஆதிக்கம் செலுத்தி வந்தமையால் பிளமிஷ் தேசியவாதிகள் பிரஞ்சு மொழியினரின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து வந்துள்ளனர். பிளமிஷ் பிராந்தியம் துரித பொருளாதார வளர்ச்சி மூலம் முன்னேறியது. அப்பகுதி பொருளாதாரச் செழிப்புமிக்கதாக ஆகியது. டச்சு மொழி பேசும் பிளமிஷ் மக்கள் அரசியல் ஆதிக்கத்தையும் பெற்றனர். இதனால் பிரஞ்சுமொழி பேசுவோரின் வலூன் தேசியவாதம் பிளமிஷ் எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. பிரஷ்ஸல்ஸ் நகரம் பிரஞ்சு மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக வாழும் நகரம் ஆகும். இந்நகரம் பொருளாதார, வர்த்தக மையமாகவும், பிரஞ்சுக்காரரின் ஆதிக்கமுள்ள பகுதியாகவும் இருப்பதால் பிளமிஷ் – வலூன் முரண்பாடுகள் தீவிரம் பெற்றன. பன்மொழிச் சமூகம் ஒன்றில் முரண்பாடுகள் சிக்கலானவையாய் அமைவதற்கு பெல்ஜியம் சிறந்த உதாரணமாக விளங்குகின்றது.
4. பிரதேச அடிப்படையில்லாத சமஷ்டி
பெல்ஜியம் பிரதேச அடிப்படையில்லாத சமஷ்டி (Non – Territorial Federalism) என்னும் உபாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ள நாட்டிற்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வுக்குரிய அலகுகளாகப் பிரதேசங்கள் (Territories) அமைவதுண்டு. பெல்ஜியம் பிரதேசங்கள், சமுதாயங்கள் (Communities) என்ற இரு வகையும் சேர்ந்த கலப்புமுறையான அதிகாரப் பகிர்வைச் செயற்படுத்துகின்றது. பிரஞ்சு மொழி பேசவோர், டச்சு மொழி பேசுவோர் என மொழி அடிப்படையிலான சமுதாய சபைகள் (Community Councils) பெல்ஜியத்தில் செயற்பாட்டில் உள்ளன. இச்சமுதாயச் சபைகள் கல்விசார் நடவடிக்கைகளையும், பண்பாட்டு அலுவல்களையும் நிர்வகிக்கும் அதிகாரம் உடையனவாக உள்ளன. இச்சமுதாய சபைகளுக்குச் சட்டவாக்க அதிகாரமும் உள்ளது. இச்சமுதாய சபைகள் இடப்பிரதேசம் சாராத நியாயாதிக்கத்தை (Non – Territorial Jurisdiction) உடையவை. இந் நியாயாதிக்கம் வெவ்வேறு சமூகங்களின் ஆளுமையின் அடிப்படையில் (Personality Based) அமைவதாகும். பிரதேச நியாயாதிக்கம் (Territorial Jurisdiction) உடையனவாக அமையும் மூன்று வகைப் புவியியல் பிரதேசங்கள் பெல்ஜிய சமஷ்டியின் அதிகாரப் பகிர்வு அலகுகளாக அமைந்துள்ளன. இவை வலூன், பிளான்டர்ஸ் பிராந்தியங்கள் எனவும் பிரஷ்ஸல்ஸ் நகரப் பிராந்தியம் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரதேசங்களும் சமுதாயங்களும் விரிவான சட்ட ஆக்க அதிகாரங்களைக் கொண்டிருப்பதோடு தமது நிர்வாக அலுவல்களைக் கொண்டியங்குவதற்கான நிர்வாகக் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன.
நான்கு தலைப்புகளில் பெல்ஜியம் சமஷ்டி முறையின் பிரதான இயல்புகளை மேலே விபரித்தோம். எமது இவ்விபரிப்பில் கெல்லி பிறியன் என்னும் அறிஞர் எழுதிய ‘பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி : அதன் அடிப்படைகளும் குறைநிறைகளும்’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகளும், தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கெல்லி பிறியன் அவர்களின் கூற்று கீழே மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.
“பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி ஆட்சி முறையை நெகிழ்ச்சியுடைய வளைந்து கொடுக்கக் கூடிய சிறந்த முறையாக இன்று பலர் கருதுகின்றனர். அதன் ஆதரவாளர்கள் அதனை ஒரு தனித்துவம் மிக்க முறையாகக் கருதுகின்றனர். இலங்கையிலும் இது பற்றி ஆர்வம் வெளிப்பட்டுள்ளது. எல்லா இனக் குழுமங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை நன்முறையில் வழங்குவதோடு உள்நாட்டில் தேசிய இனங்களின் முரண்பாடுகளைத் தணிப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பெல்ஜியம் வெற்றி கண்டுள்ளது. அது சமஷ்டியாக மாறுவதற்கான தீர்மானத்தை (1988 இல்) எடுத்திராவிட்டால் இன்று ஒரு தனிநாடாக ஐக்கியமாக நிலைத்து நின்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே.
ஸ்பானியா
அடுத்து ஸ்பானியா தேசத்தின் சமஷ்டிமுறை பற்றி நோக்குவாம். ஸ்பானியா பெயரளவில் ஒற்றையாட்சி (Unitary) நாடாகவும் நடைமுறையில் சமஷ்டி முறையின் பண்புகளை உடையதாகவும் உள்ளது. அந்நாட்டின் அதிகாரப் பகிர்வு முறையில் அசமத்துவ சமஷ்டி (Asymmetrical Federalism) என்னும் தத்துவம் புத்தாக்கமான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. முதலில் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் (30-31 பக்கங்கள்) சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி ஸ்பானியாவின் சமஷ்டி இயல்புகள் எவையென்பதைக் குறிப்பிடுவோம். எமது இவ்விபரிப்பை எழுதுவதற்கு பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க எழுதிய ‘Asymmetrical Devolution: Understanding the Spanish Experience’ என்னும் கட்டுரையை உசாத்துணையாகக் கொண்டுள்ளோம் (இக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு யூலை 2023 எழுநா இணைய இதழில் வெளியானது).
1. பிராங்கோவிற்குப் பிந்திய ஜனநாயகப்படுத்தல்
1978 இல் ஸ்பானியாவில் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இவ்வரசியல் யாப்பு ஜனநாயக நிறுவன முறைகளை ஸ்பானியாவில் உருவாக்கியதோடு, அதிகாரப் பரவலாக்கலையும் நடைமுறைப்படுத்தியது. ஸ்பானியா சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்தை நோக்கித் திரும்பிய வரலாற்றுத் திருப்பம் இதுவாகும். இவ்வரலாற்று மாற்றத்தை சர்வாதிகாரி ‘பிராங்கோவிற்குப் பிந்திய ஜனநாயகப்படுத்தல்’ (Post – Franco Democratization) என்னும் தொடர் விளக்கி நிற்கிறது. பிராங்கோவின் சர்வாதிகாரம் (Authoritarianism) மத்தியப்படுத்தப்பட்டதாகவும் (Centralised) பிராந்தியங்களின் தேசிய இனங்களை ஒடுக்குவதாகவும் அமைந்திருந்தது. 1978 அரசியல் யாப்பு பாராளுமன்ற ஜனநாயக முறையை அறிமுகம் செய்ததோடு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களிற்கு ‘சுயாதீனமான சமுதாயங்கள்’ (Autonomous Communities) என்னும் அலகுகள் மூலம் தன்னாட்சியை வழங்கியது.
2. தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளம் பாதுகாக்கப்படுதல்
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையை ஸ்பானியா நடைமுறைப்படுத்த முன்வந்ததன் மூலம் அந்நாட்டின் தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளம் (Cultural Identity) பாதுகாக்கப்படுவது உத்தரவாதம் செய்யப்பட்டது. ஸ்பானியா வரலாற்று ரீதியாக பல பண்பாடுகளையுடைய தேசமாக உருவாக்கம் பெற்றிருந்தது. அந்நாட்டின் தேசிய இனங்களில் பின்வருவன குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை:
- அரகன் தேசிய இனம் (Aragonese Nation)
- பஸ்க் தேசிய இனம் (Basques)
- கற்றலோனியன்கள் (Catalonians)
- ஹலாசியன்ஸ் (Galacians)
- நவரே (Navarres)
- வலன்சியன்ஸ் (Valencians)
மேற்கூறியவற்றுள் பஸ்குகள் (Baques), கற்றலன்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் கடந்த 50 – 60 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது தொடர்ந்தன. ஸ்பானியா எதிர்கொண்ட சவால்களுக்கான தீர்வாக அந்நாட்டின் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் அமைந்துள்ளது.
3. பாராளுமன்ற முடியாட்சி
ஸ்பானியா இன்று பாராளுமன்ற முடியாட்சியாக (Parliamentary Monarchy) உள்ளது. வரம்புக்குட்பட்ட அதிகாரங்களையுடைய மன்னர் அரசுத் தலைவராவர். சட்ட ஆக்கம், நிர்வாகம் ஆகிய அதிகாரங்கள் ‘Cortes’ எனப்படும் பாராளுமன்றத்திடமும், பிரதமர், மந்திரிகள் என்போரிடமும் உள்ளன. மனித உரிமைகள் சாசனமும் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுயாட்சி அதிகாரமுடைய நிறுவனங்களான ‘சுயாட்சிச் சமூகங்கள்’ (Autonomous Communities) என்ற புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இவை ஸ்பானியாவின் பல்வேறு பிராந்தியங்களினதும், தேசிய இனங்களினதும் இருப்பையும் அவற்றின் சுயாட்சிக்கான உரிமையின் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. ஸ்பானியா பாராளுமன்ற ஜனநாயக முறையுடன் கூடியளவு அதிகாரப் பரவலாக்கத்தையும் செயற்படுத்தும் நாடாக விளங்குகிறது.
4. அசமத்துவ அதிகாரப் பகிர்வு
ஸ்பானியா அசமத்துவ அதிகாரப் பகிர்வுடைய சமஷ்டி மாதிரிக்கு (Asymmetrical Federalism Model) சிறந்த உதாரணமாக விளங்குகிறது. ஸ்பானியாவில் பின்வரும் இருவகையான தேசியங்கள் உள்ளன.
அ) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள தேசிய இனங்கள் (Historical Nations)
ஆ) வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தேசிய இனங்களும் இனக்குழுமங்களும்.
இத்தேசியங்களில் வரலாற்றுத் தேசிய இனங்கள் கூடியளவு சுயாட்சி அதிகாரத்தைப் (Higher Degree of Autonomy) பெறும் தகுதியுடையவை. ஸ்பானியாவின் அதிகாரப் பரவலாக்கலின் அசமத்துவப் பண்பின் தன்மையை இது விளக்குவதாக அமைகிறது.
அடுத்து சமஷ்டி முறை தோல்வியடைந்த நாடுகளான பாகிஸ்தான், செக்கோசிலாவாக்கியா ஆகிய இரு நாடுகள் பற்றி ஒப்பீட்டு நோக்கில் பரிசீலனை செய்யவுள்ளோம். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்து சென்றது. செக்கோசிலாவாக்கியா சமஷ்டி பிளவடைந்து செக் குடியரசு, சிலோவாக்கிய குடியரசு என இரு குடியரசுகள் தோன்றின. இவை சமஷ்டி குறித்த எதிர்மறை உதாரணங்களாகும். இவ் எதிர்மறை உதாரணங்களில் இருந்து சிறந்த படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.
சமஷ்டிகளின் நோயியல்
றொனால்ட்.எல். வாட்ஸ் எழுதிய ‘Comparing Federal Systems’ என்னும் நூலின் 11 ஆவது அத்தியாயம் ‘சமஷ்டிகளின் நோயியல்’ (Pathology of Federations) என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. பாகிஸ்தான், செக்கோசிலாவாக்கியா போன்று சில தேசங்களில் சமஷ்டிமுறை தோல்வியுற்றதைப் பற்றியும், அவை தோல்வியுற்றமைக்கான காரணங்களும் மேற்குறித்த அத்தியாயத்தில் விபரிக்கப்பட்டுள்ளன. அவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்துகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.
தோல்வியுற்ற சமஷ்டிகளுக்கு சில உதாரணங்கள்
- 1962 இல் மேற்கிந்திய தீவுகளின் (West Indies) சமஷ்டி முறிவடைந்தது.
- 1963 இல் ‘றொடிசியாவும் நயாசலாந்தும்’ என்னும் சமஷ்டி முறிவடைந்து சாம்பியா, றொடிசியா என்னும் இரு நாடுகள் உருவாகின (இவற்றுள் றொடிசியா என்ற நாட்டின் இன்றைய பெயர் ‘சிம்பாவே’ ஆகும்).
- ஐக்கிய சோஷலிஸ்ட் சோவியத் ரஷ்யா (U.S.S.R) என்னும் சமஷ்டி 1991 இல் குலைவுற்று தனி அரசுகள் பல தோன்றின.
- 1991 இல் யுகோசிலாவிய சமஷ்டியும் குலைவுற்றது. அங்கு உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது.
- 1965 இல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விலக்கப்பட்டது. சிங்கப்பூர் அதன் விருப்பத்திற்கு மாறாக சமஷ்டியில் இருந்து விலக்கப்பட்டது.
- நைஜிரீய சமஷ்டியில் இருந்து பிரிந்து ‘பியாபரா’ என்னும் தனிநாடு அமைப்பதற்கான யுத்தம் (1960 – 70) காலத்தில் இடம்பெற்றது. பியாபராவின் பிரிந்து போகும் முயற்சி தோல்வியுற்றது. நைஜீரியாவில் இராணுவ சர்வாதிகாரமும், சிவிலியன் ஆட்சியும் மாறி மாறிக் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்தன.
மேற்கூறிய உதாரணங்கள் சமஷ்டிகளின் தோல்விக்கு எடுத்துக் காட்டுகளாகும். இத் தோல்விகள் சமஷ்டிமுறையின் அடிப்படையான குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டனவா அல்லது மேற்குறித்த நாடுகளில் சமஷ்டிமுறை புகுத்தப்பட்ட விசேட சூழ்நிலைகள் அவற்றின் தோல்விக்கு காரணமாக அமைந்தனவா என்பது ஆராயப்பட வேண்டும்.
சமஷ்டி நாடுகளுக்குள் நெருக்கடிகள் தோன்றுவதற்கான மூலங்களாக (Source of Stress) நான்கைக் குறிப்பிடலாம்.
அ) உள்நாட்டில் தோன்றியுள்ள ஆழமான சமூகப் பிரிவினைகள் (Sharp Internal Social Divisions).
ஆ) குறித்த நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்பியல் ஒழுங்குகளின் தன்மை.
இ) சமஷ்டியின் சிதைவைத் தடுப்பதற்கான தந்திரோபாயங்களின் தன்மை.
ஈ) நாட்டின் அரசியல் செயல்முறைகளின் விளைவாக உள்ளகப் பிரிவினைகள் மோசமடைந்து துருவமயப்படுதல் (Political Processes that have Polarized Internal Divisions).
பாகிஸ்தானில் இருந்து ஏன் பங்களாதேஷ் பிரிந்தது? பாகிஸ்தான் வெளித்தோற்றத்தில் சமஷ்டியாகவே இருந்தது. ஆனால் அந்நாடு சமஷ்டிக்கு அடிப்படையான ஜனநாயகப் பண்பைக் கொண்டிருக்கவில்லை. அதன் சர்வாதிகார முறையின் கீழ் கிழக்குப் பாகிஸ்தான் அடிமைக் காலனியின் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. பங்களாதேஷ் பிரிந்து விடுதலை பெற்ற தனிநாடாக ஆகியமைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையான குறைபாடுகள் காரணமல்ல என்பது கவனிக்கத்தக்கது. இதே போன்றே செக்கோசிலாவாக்கியாவின் பிரத்தியேக வரலாற்றுச் சூழமைவு அந்நாடு பிரிவடைவதற்கு காரணமாயிற்று. 1992 இல் சமாதானமான முறையில் இரு பகுதியினரதும் சம்மதத்துடன் செக்கோசிலாவாக்கியா குலைவுற்றது. செக் குடியரசு, சிலாவாக்கிய குடியரசு என இரு நாடுகள் தோற்றம் பெற்றன.
இவ்விரு நாடுகளும் கைத்தொழில் வளர்ச்சியிலும் பொருளாதார, சமூக வளர்ச்சியிலும் முன்னணியில் விளங்கும் ஐரோப்பிய நாடுகளாக விளங்குகின்றன. 1948 இற்கும் 1971 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கு பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்னும் இரு பகுதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் எவ்வாறு பங்களாதேஷ் பிரிந்து செல்வதற்கு காரணமாக அமைந்தன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியது. தென் ஆசியா நாடுகளான பாகிஸ்தான் – பங்களாதேஷ் வரலாற்று அனுபவம் இலங்கைக்கு பயனுள்ள அரசியல் பாடங்களை வழங்கக் கூடியது.
உசாத்துணை
- சமஷ்டி முறைகளின் ஒப்பீடு பற்றிய இக்கட்டுரைக்கு றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் ‘Comparing Federal Systems’ என்னும் நூல் பிரதான உசாத்துணையாக அமைந்தது.
- இந்தியாவின் சமஷ்டி பற்றிய விரிவான குறிப்புகள் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ‘Towards Democratic Governance in Sri Lanka’ எனும் நூலின் 29 – 33 வரையான 4 பக்கங்களில் கூறியிருப்பனவற்றைத் தழுவி எழுதப்பட்டன.
- மலேசியாவின் சமஷ்டி பற்றிய விரிவான தகவல்கள் ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ள M.O.A டி சில்வா அவர்களின் கட்டுரை ‘Malaysia : Formal Federal Structure with Informal Power Sharing’ என்னும் கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை.
- ஸ்பானியாவின் சமஷ்டி பற்றிய தகவல்கள் ‘Power Sharing the International Experience’ என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ள ரஞ்சித் அமரசிங்க அவர்களின் ‘Understanding the Spanish Experience’ என்னும் கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை.
References
- Amarasinghe, Ranjith. Wickramaratne, Jayampathy. ‘Power Sharing the International Experience’ (2011), Institute for Constitutional Studies, Rajagiriya, Sri Lanka.
- Ronald. L.Watts (1999), ‘Comparing Federal Systems’. 2nd Edition, Queen’s University, Kingston, Ontario.
- Wickremaratne, Jayampathy. (2014), ‘Towards Democratic Governance in Sri Lanka: A Constitutional Miscellany’, Institute for Constitutional Studies, Rajagriya, Sri Lanka.